1.

முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது. ராஜவனத்தில் எப்போதும் பசுமைதான். வனத்தினுள் வாழும் மான்கள், முயல்கள், குரங்குகள், மயில்கள், கீரிப்பிள்ளைகள், உடும்புகள், தவளைகள், பறவைகள் யாவுமே மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன. ஒன்றுக்கொன்று உதவும் மனப்பான்மையும் அவைகளிடம் இயல்பாகவே இருந்தன.

ராஜவனம் என்கிற பெயருக்கு ஏற்றாற்போல் சிங்கம்  தான் வனராஜாவாக இரண்டு வருடம் முன்பாக வனத்தின் ஏனைய விலங்குகள் முன்பாக முடிசூட்டிக்கொண்டது. ”சிங்கமாகிய நான்! இந்த வனத்தின் ராஜாவாக பதவியேற்கும் இச்சமயத்தில்.. வனத்தில் வாழும் ஏனைய விலங்குகளின் குறைகளை நேரடியாகக்கேட்டு, அவைகளின் குறைகளை தீர்த்து வைப்பேன். வனவளத்தை அந்நியர்கள் உள்நுழைந்து தீண்டாவண்ணம் காப்பேன்! இது ராஜவனத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன்!’’ என்று கரடியார் முன்மொழிய அதை அப்படியே திருப்பிச்சொல்லி முடிசூட்டிக்கொண்ட சிங்கத்தின் பெயர் சிவநேசன்.

சிவநேசன் வனத்தில் கம்பீரமான விலங்கு. அது தன் குடும்பத்தாரை விட்டுப்பிரிந்து சுந்தரவனத்திலிருந்து இங்கு வந்து ஒருவருடம் தான் ஆகிற்று. வனத்தில் நுழைந்தநாள் முதலே அதன் கம்பீரம் ராஜவனத்திலுள்ள விலங்கினங்களை பீதியுறச்செய்தது. ராஜவன விலங்குகள் அப்போது யாரையும் வனராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கவில்லை. நெடுங்காலம் முன்பாக கொம்பன் யானை தான் ராஜவனத்தில் நல்லாட்சி செய்ததாக தகவல் ஒன்றுண்டு. அது உறுதியான தகவல்தானா? என்பதை எந்த விலங்கும் அறிந்ததில்லை. எல்லாமே பழைய தகவல்களஞ்சிய பேச்சால் வந்த விசயமே. இருந்தும் ராஜவன விலங்குகளுக்கு தலைமை என்கிற தேவை என்பதில்லாமல்தான் இருந்துவந்தது.

ஆனால் சுந்தரவனத்தில் தன் தந்தையார்தான் வனராஜாவாக பொறுப்பேற்று நிர்வகித்துவருகிறார் என்பது விரட்டியடிக்கப்பட்ட சிவநேசனுக்கு நன்கு தெரியும். ராஜவனத்திற்குள் வந்த ஒரு வருடகாலத்தில் சிவநேசன் சிங்கம் சில நட்புறவுகளை பெற்றிருந்தது. ’தலைமையில்லா வனம் சீக்கிரம் ஏனைய ஆக்கிரமிப்பாளர்களால் அழிந்துவிடும் அபாயத்தில்தான் எப்போதும் இருக்கும்!’ என்று சிவநேசன் சிங்கம் சொல்லிக்கொண்டேயிருந்தது அதன் நண்பர்களான கரடியாரிடமும், நரியாரிடமும்.

அடிக்கடி நண்பன் அந்த வார்த்தையை சொல்லுவதால் அவைகளும் ஒருநாள் ‘அப்படி என்னதான் இந்த வனத்தில் அழிவு ஏற்பட்டுவிடும்?’ என்று கேட்டன. அன்று மூன்று நண்பர்களுக்குமே நல்ல வேட்டை தான் கிட்டியிருந்தது. உணவை முடித்துவிட்டு ஓய்வாக ஆலமரத்தினடியில் சாய்ந்திருந்தபோது சிவநேசனிடம் கேட்டன.

“அழிவு எந்த ரூபத்திலும் வனத்துக்குள் வந்துவிடும் நண்பர்களே! மனிதர்கள் என்கிற இரண்டுகால் நடையாளர்கள் வனத்தினுள் நுழைந்துவிட்டார்கள் என்றால் அழிவானது துவங்கிவிடும்! முதலாக மான்களை வேட்டையாடுவார்கள் அவர்கள்.”

“மனித விலங்குகளுக்கு அவ்ளோ சக்தி இருக்கிறதா சிவநேசா?” என்று கரடியார் கேட்டார்.

“அவர்களுக்கு நம்மைப்போல சக்தி இல்லைதான். ஆனால் மண்டையில் இருக்கும் மூளையானது நம் மண்டையினுள் இருக்கும் மூளையை விட அதிக சக்திவாய்ந்தது. அவர்கள் நம்மோடு நேருக்கு நேராய் மோதமாட்டார்கள். மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுவார்கள். ஒரு துப்பாக்கிச்சூட்டுக்கு ஒரு மான் இரையாகும். அவர்களே யானைகளையும் வேட்டையாடுவார்கள். யானையின் தந்தங்களை வெட்டியெடுத்துப்போய்விடுவார்கள். அவர்கள் இந்த வனத்தினுள் காலடி வைத்துப்பழகிவிட்டால் அடுத்ததாக மரங்களை வெட்டியெடுத்துப்போவார்கள். வனத்தினுள் சாலைபோட்டு வாகனங்கள் மூலமாக அவர்கள் பெரும் பெரும் மரங்களை சாய்த்து அதை துண்டாக்கி எடுத்துப்போவார்கள்!”

“ஐயோ! நீ சொல்லும் மனிதன் பயங்கரமான விலங்காய் இருப்பான் போலிருக்கே சிவநேசா! ஆமாம் இந்தத்தகவல் எல்லாம் உனக்கெப்படித் தெரியும்? எங்களுக்கு காது குத்துகிறாயா?”

“காதுகுத்துறது என் வேலையல்ல நண்பர்களே! நான் சுந்தரவனத்திலிருந்து வந்தவன். அதையடுத்து பூவனம் இருக்கிறது. அங்கே நானும் என் கூட்டத்தாரும் மனித விலங்குகளை பார்த்திருக்கிறோம். நான் சொன்ன அத்தனை விசயங்களையும் அவர்கள் அங்கே செய்தார்கள். பூவனம் முந்தையகாலங்களில் இந்த ராஜவனத்தைப்போன்றே அமைதியாய் அழகாய் இருந்தது என்று என் தாத்தா இறக்கும் தருவாயில் சொல்லியிருக்கிறாராம் என் தந்தையிடம். எனக்கு மனிதர்களைக்கண்டால் பயம் ஏதுமில்லை. ஆனால் அவர்கள் பயப்படுவார்கள். பயப்பட்டால் சீக்கிரமாய் நம்மை முடித்துக்கட்ட துப்பாக்கிகளோடு வந்துவிடுவார்கள் குழுவாக!”

“சரி, நீ சொல்லும் விசயமெல்லாம் எங்களுக்கு திகிலூட்டுகிறது நண்பா! நம் ராஜவனத்துக்கும் மனித விலங்குகள் நுழைந்துவிடும்கள் என்று பயமாய் இருக்கிறது” என்று நரியார் இப்போது நடுக்கமாய் சொன்னார்.

“சீக்கிரமாய் அது நடந்தேறிவிடலாம். அதை தடுப்பதற்குத்தான் நாம் செயல்பட வேண்டும். யாரோ எக்கேடோ கெட்டால் நமக்கென்ன! என்று இந்த வனத்தில் யாரும் தங்களை மட்டுமே யோசித்துக்கொண்டு இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் அவர்களின் நுழைவை தடுக்க வேண்டும்!”

“அதுகள் சுடும்கள் என்று நீ சொன்னாயே நண்பா! சுட்டால் நாம் தான் சுருண்டுவிழுந்து இறந்துவிடுவோமே!”

“அவர்கள் மறைவாய்த்தான் அமர்ந்து தாக்குதல் நடத்துவார்கள். நாமும் அப்படியேதான் அவர்களை மறைவாய் இருந்து தாக்கிக்கொல்ல வேண்டும்! இதற்கு என்று சில வீரர்களை நாம் நியமிக்க வேண்டும். அந்தக் கண்காணிப்புப்படை வனத்தின் எல்லாப்பக்கங்களிலும் கவனமாய் பார்வையிட்டபடி இருக்க வேண்டும். மனிதனின் தலை தெரிந்தால் வனம் முழுக்க சமிக்கைகளால் எச்சரிக்க வேண்டும். நாம் பின்பாக திட்டம் தீட்டி மனிதனைக்கொன்று வெல்ல வேண்டும்! ராஜவனத்தை காப்பாற்றவேண்டும்”

“வாயில வடை சுடுறதுங்கறது இதான் போல!” என்று நரியார் முனகினார்.

இப்படியான பேச்சுகளை இவைகள் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட ஏனைய தாவர உண்ணி விலங்குகள் தகவலை வனம் முழுக்க பறப்பிவிட்டன. ஒருவாரகாலத்தில் ராஜவனத்தினுள் எல்லா விலங்குகளுமே மனிதவிலங்கு பற்றியான பயத்துடனேயே ‘விருக் விருக்’கென பயத்துடன் இரைதேடிச் சென்றன.

நேரம் நெருங்குவதையுணர்ந்த சிவநேசன் மெதுவாய் காய் நகர்த்தத்துவங்கியது. ராஜவனத்துக்கு வரும் அழிவிலிருந்து காக்க ஒரு தலைவன் வேண்டுமென அது சொல்லிற்று. இவ்வளவு அறிவார்த்தமாய் பேசும் சிவநேசனையே வனராஜாவாக இருக்கச் செய்துவிடுவோம் என வன விலங்குகள் ஆங்காங்கே பேச்சாய் பேசத்துவங்கிவிட்டன. நாளும் நெருங்கியது.

சொன்னதுபோலவே சிவநேசன் ஏகமனதாய் வனராஜாவாக நியமிக்கப்பட்டான். வனராஜா என்பதால் தனக்கான இருப்பிடத்தை பாறைகள் நிறைந்த பகுதிக்கு சிவநேசன் சிங்கம் மாற்றிக்கொண்டது. தொடர்ந்து ஆறுமாதகாலம் வனத்தைக் காக்கும் திட்டங்களைப்பற்றி முக்கியமான விலங்குகளோடு ஆலோசித்து அதற்கான குழு அமைத்து நடவடிக்கையை துரிதப்படுத்திற்று.

போகப்போக ராஜவனத்தினுள் மனிதவிலங்கு எதுவும் நுழையவில்லை என்பதால் திட்டத்தில் சோர்வு ஏற்பட்டுவிட்டது. அப்படியான விலங்கு இப்பூவுலகில் இல்லையென்றே பல விலங்குகள் பேசத்துவங்கின. ஆனாலும் அவைகளுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.

திட்டமானது தொய்வானதுபற்றி சிவநேசனுக்குத் தெரியவந்தது. வரும் முன் காப்போம்! என்பதே அந்தத்திட்டம். ராஜவனத்தில் மனித விலங்கு ஒன்றுகூட வரவுமில்லை, வரவும் வாய்ப்பில்லை என்பது குழுக்களின் சுறுசுறுப்பைக் குறைத்துவிட்டது. அது வனராஜாவான சிங்கத்துக்குமே நடந்துவிட்டதால் அது தன் நடமாட்டத்தை வனத்தினுள் குறைத்துக்கொண்டது. சோம்பேறித்தனமாய் தன் பாறைக்குகையில் படுத்துக்கிடப்பதையே வழக்கமாக்கிக்கொண்டது.

தனக்கு அமைச்சராக தன் நண்பனான நரியாரையே அப்போது நியமித்திருந்தது. அந்த நரியோ எப்போதும் சிவநேசன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டு ‘ஆமாஞ்சாமி’ நரியாய் மாறிவிட்டது. வனத்தின் மந்திரியாக கரடியார் இருந்தார். இது ராஜவன விலங்குகள் அனைத்துக்குமே தெரியும். அவ்வப்போது விலங்குகளின் குறைகளைக்கேட்டு நிவர்த்தி செய்து வந்த சிவநேசன் சிங்கம் தன் சோம்பேறித்தனத்தால் வனத்தினுள் சுற்றுலா சென்று ஏனைய விலங்குகளை சந்திப்பதை விட்டொழித்துவிட்டது.

மந்திரியாக பதவி பெற்று நெஞ்சை நிமிர்ந்த்திக்கொண்டு வனத்தில் நடையிட்ட கரடியாரும் நாளடைவில் தன் பணிகளைப்பற்றிய ஞாபகத்தையே மறந்து அவர்பாட்டுக்கு முன்னைப்போல தன் உணவுக்காக வனத்தில் அலைந்துகொண்டிருந்தார். ஆனால் அமைச்சரான ஆமாஞ்சாமி நரியார் அப்படி இருக்கவில்லை. வனராஜா சிவநேசனின் சோம்பேறித்தனத்தை பயன்படுத்திக்கொள்ள மூளையைக் கசக்க ஆரம்பித்தார். ‘என்ன செய்யலாம்? வேட்டையாடி உணவு உண்பது போரடிக்கிறது. போக வேட்டையாடும் உணவில் முக்கால் பங்கை ராஜாவுக்கு கொடுக்க வேண்டு வருகிறது.

வனராஜா வேட்டை நிகழ்த்திய காலங்களில் உணவுக்கு பிரச்சனையே இல்லாமல் இருந்தது. ராஜா மிச்சம் வைக்கும் உணவே நரியாருக்கு போதுமானதாய் இருந்தது. ஆனால் இந்த ஆறுமாதங்களாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே! அமைச்சரே ராஜாவுக்கும் உணவை ஏற்பாடு செய்யவேண்டிய நிலையாகிவிட்டது. இது எந்த வனச்சட்டங்களிலும் இல்லையே! ஆனாலும் அவர் ராஜாவல்லவா! அவருக்கு பணி செய்து கிடப்பதே நம் கடமையல்லவா! என்றெல்லாம் யோசித்து மண்டையை உடைத்து ஒரு வழியைக் கண்டறிந்துவிட்டது அமைச்சர் ஆமாஞ்சாமி நரி.

அதை செயல்படுத்துவதற்காக அது தன் கூட்டத்தாரை அன்றைய இரவில் சந்திக்க கிளம்பியது. அது ராஜாவிற்கு அமைச்சராய் அமர்ந்த காலத்திலிருந்து தன் கூட்டத்தாரோடு கலந்துகொள்ளவே இல்லை. இது செல்கையில் கூட்டம் தனித்தனியாக வேட்டையை முடித்து உணவு உண்ணும் நேரமாக இருந்தது. நிலாவெளிச்சம் இல்லாத கும்மிருட்டான நாள்தான் அது. அவைகள் உண்ணும் உணவை நிறுத்திவிட்டு எழுந்து நின்று வாலை ஆட்டிக்கொண்டே ‘வாங்க அமைச்சரே!’ என்றன. அமைச்சர் ’ஆமாஞ்சாமி’ நரியாருக்கு பெருமையாய் இருந்தது.

“ஏது இந்தப்பக்கம்? வனராஜா எதாவது தகவல் சொல்லி அனுப்பினாரா?”

“இல்லையப்பா!”

“ரொம்ப சலித்துக்கொண்டு சொல்கிறாயே! என்னதான் நடந்தது?” என்று உணவை மென்றுகொண்டே ஒரு இளவயது நரி கேட்டது.

“நம் ராஜா இப்போதெல்லாம் வேட்டைக்கு என்று இரவில் கிளம்புவதேயில்லை. அவருக்கான உணவை நானே சம்பாதித்துக்கொண்டுபோய் குகையில் கொடுக்கவேண்டி இருக்கிறது. எத்தனை நாட்களுக்கு அப்படி என்னால் முடியும்?”

“அடப்பாவமே! எதோ நம்முடைய இனத்தில் எங்கள் கண்களால் பார்க்கும் காலத்தில் ஒருவன் வனத்துக்கு அமைச்சராக ஆகியிருக்கிறானே என்று நாங்கள் தினமும் உன்னைப்பற்றி பெருமையாய் பேசிக்கொண்டு இருக்கிறோமே!”

“வெட்டிப்பெருமையை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் நான். வனராஜாவும் ஒரு நாள் உணவு கிட்டவில்லை என்று நான் சொன்னால் என்மீது கோபமே படுவதில்லை. சரி நாளைக்கு பார்! என்றே சொல்லிவிடுகிறார்.”

“அது அப்படித்தான் அமைச்சரே! உண்ட உணவு செரிமானம் ஆக ஓடியோடி விலங்குகளை வேட்டையாடணும். ஒரே கிடையில் படுத்துக்கொண்டிருந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்பாட்டை மறந்துவிடும். காலம் போகப்போக இதனால் வீணாக உடல் உபாதைகள் தான் வரும். பிறகு நாம் நம் வன வைத்தியரான ’கைராசிக்கரடி’யாரை தேடி ஓடணும்! உணமைதான் நீ சொல்வதும் கூட! நம் ராஜாவை நான் வனத்தினுள் பார்த்து ஆறேழு மாதங்களாயிற்று. சரி இன்றைய வேட்டை உணவு எங்களுக்கெல்லாம் அதிகம் தான். நீங்கள் வேண்டுமானால் இதிலிருந்து கொண்டுபோய் ராஜாவுக்கு கொடுத்து அவரின் பசியை போக்குங்களேன் அமைச்சரே!”

“அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம். இன்னமும் விடிவதற்கு நேரம் இருக்கிறது. நாம் ஒரு திட்டத்தை இங்கே கூடி அமர்ந்து விவாதித்து அதை செயல்படுத்தலாமே!”

“செயல்படுத்தலாம்! ஆனால் திட்டம் சரியான திட்டமாய் இருக்க வேண்டுமே!”

“நான் உங்களுக்குச் சொல்கிறேன் அதை. நல்லதா கெட்டதா? என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் இறுதியில்!” என்று சொன்ன அமைச்சர் ’ஆமாஞ்சாமி’ நரி தன் திட்டத்தை தன் இனத்தின் இளைஞர்களான அந்த ஏழுபேரிடம் விளக்கமாய் சொல்லிற்று! அதைக்கேட்ட அவைகள் அனைத்தும் திறந்த வாயை மூடாமல் ஆச்சரியமாய் கேட்டன! ’அதனாலதான் நம்மாள ராஜாவோட பழகமுடியல! செரியான மூளைக்காரன் தான் இந்த அமைச்சர்..’ என்றே நினைத்தன.

2.

ராஜவனம் அடுத்துவந்த இரண்டுமாத காலங்களில் பெரும் பிரச்சனையை சந்திக்கத்துவங்கிற்று. கழுதைப்புலியிலிருந்து ஓநாய்க்கூட்டம், ஹெய்னாக்கூட்டம் வரை ஒரே புலம்பல் சப்தமாகவே வனத்தினுள் கேட்டுக்கொண்டிருந்தது.

எந்த விலங்குகளும் பாதுகாப்பாய் தங்களுக்கான உணவுகளை சேகரம் செய்து வைத்திருக்க முடியவில்லை. அவைகளின் சேகரிப்பு உணவுகள் பட்டப்பகலில் களவு போயின. விலங்குகள் பல இரவு வேட்டையை நிகழ்த்திவிட்டு பகலில் உறக்கும் கொள்ளும் வழக்கத்தை வைத்திருப்பதால் அந்தச்சமயத்தில் அவைகளின் சேமிப்பு கிடங்குகளில் இருக்கும் உணவுகள் களவாடப்பட்டன.

வனவிலங்குகளின் புலம்பல் குரல்களைக்கேட்ட நரிகள் சந்தோசம் மிகுதியில் வாலை நிலத்தில் ’பட்டுப்பட்’டென அடித்துக்கொண்டு சந்தோசமாய்க் கிடந்தன. வனவிலங்குகளில் சிறிய விலங்குகளான முயல்களின் வளைகளைக்கூட நரிகள் விட்டு வைக்கவில்லை. வனம் முழுவதும் திருட்டுப்பயம் தலைவிரித்தாடியது. வனராஜாவுக்கு ராஜவனத்தில் நடைபெறும் இந்த திருட்டுத்தகவல்கள் காதில் விழவேயில்லை. விழாதவாறு ‘ஆமாஞ்சாமி’ நரியாரும் பார்த்துக்கொண்டார்.

நரித்திருடர்களின் கைவரிசை வனத்தினுள் உச்சத்தை அடைந்தபோது பாதிக்கப்பட்ட விலங்குகள் வனராஜனை அவரது இருப்பிடத்திலேயே சந்தித்து முறையிடலாமெனவும், அவரே இதற்கான வழிவகைகளைச் செய்வாரெனவும் நம்பி பாறைக்குகைக்கே வந்துசேர்ந்தன.

விலங்குகள் கூட்டமாய் வருவதை கண்ணுற்ற ’ஆமாஞ்சாமி’ நரியார் மனதினுள் ’நானே இந்த வனத்துக்கான காவலன்! ரட்சகன்!’ என்றெல்லாம் மனதில் நினைத்து பெருமைப்பட்டு அவைகளை எதிர்நோக்கி நின்றிருந்தது.

கூட்டத்தில், தன் இனத்தைச்சேர்ந்த வயதான நரிகளையும் ‘ஆமாஞ்சாமி’ நரியார் கண்டார். ‘பசக நம்ம கூட்டத்தாரையும் விட்டுவைக்கல போல! கில்லாடிகள் தான் அவர்கள்!’ என்று பெருமைப்பட்டது. அப்போதுதான் குகையினுள் வயிறார உண்டுமுடித்திருந்த சிவநேசன் சிங்கம் குறட்டை போட்டபடி தூக்கத்தில் கிடந்ததது. முன்பைவிட ஒரு சுத்து பெருத்துப்போன உடலை வனராஜா வைத்திருந்தார். அதேபோல ‘ஆமாஞ்சாமி’ நரியாரும் பளபளப்பாய் மாறியிருந்தார். ஓசித்தீனி உடலை மின்னுறச் செய்யும்தானே!

வந்திருந்த வனவிலங்குகள் வனராஜாவைச் சந்தித்து தங்களின் குறையை சொல்லிப்போகவே ஆசைப்பட்டன. ஆனால் ‘ஆமாஞ்சாமி’ நரியார் அதற்கு விடுவாரா என்ன! வந்திருந்த எல்லா விலங்குகளுமே நரிக்கூட்டத்தின் திருட்டு வேலையை குற்றம் சாட்டின. ‘அது எப்படி நரிக்கூட்டம் தான் திருட்டு வேலையை செய்கிறதென உறுதியாய் சொல்கிறீர்கள்?’ என்று ‘ஆமாஞ்சாமி’ நரியாரும் விசாரித்தார், தனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாதே விலங்குகளே!’ என்பது போல.

‘இந்த வங்குவால் பயல்களுக்கு ஒரு காரியத்தை அடுத்த விலங்குகள் அறியாவண்ணம் நிகழ்த்திமுடிக்க அறிவில்லாமல் போயிற்றா? வந்திருக்கும் எல்லா விலங்குகளுமே மிகச்சரியாய் நரிக்கூட்டத்தை குற்றம் சொல்கின்றனவே!’ என்று ‘ஆமாஞ்சாமி’ நரியார் வனத்தினுள் தான் ஏற்பாடு செய்திருந்த நரிக்கூட்டத்தை மனதால் திட்டித்தீர்த்தார். வெளங்காத பயல்கள்!

பின்பாக, வனராஜா அவசர அலுவல் நிமித்தமாக பூவனம் நோக்கிச் சென்று நாட்கள் மூன்றாகிவிட்டது என்றும், அவர் இன்றோ நாளையோ அல்லது நாளை மறுநாளோ ராஜவனத்துக்கு விஜயம் செய்கையில் உங்களின் இந்த தலையாய பிரச்சனையை அவரிடத்தில் எடுத்துச்சொல்வேன் என்றும், உங்களுக்கு நான் என்றுமே நம்பிக்கையான அமைச்சராய் செயல்படுவேன் என்றும் நீட்டிமுழக்கி ‘ஆமாஞ்சாமி’ நரியார் நிகழ்த்திய சிற்றுரையை வந்திருந்த விலங்குகள் அனைத்துமே நம்பின. சீக்கிரமாய் இதற்கொரு தீர்வு கிட்டிவிடும் என்பதே அவைகளின் நம்பிக்கையாய் இருந்தது.

இந்தவிசயம் ’கிணற்றினுள் போட்ட பாறாங்கல்’ நிலையைத்தான் அடையும் என்பதையறியாத அந்த திருட்டுக்கொடுத்த அப்பாவி விலங்குகள் அங்கிருந்து வனராஜனை சந்திக்க முடியாமலே கிளம்பின.

வனராஜனின் பாறைக்குகைக்கு அருகிலேயே உடும்புக்கூட்டமொன்று வாழ்ந்து வந்தது. அதில் ஒன்று பாறையிடுக்கில் படுத்துக்கொண்டு ‘இங்கு என்னதான் நடக்கிறது?’ என பார்த்தபடியிருந்தது. அதற்கு இந்த ‘ஆமாஞ்சாமி’ நரியாரின் வண்டவாளங்கள் எல்லாமும் தெரியுமென்பதால் அங்கே வனராஜனை சந்திக்க வந்த விலங்கினங்கள் மீது கவலைகொண்டது. இருந்தும் விலங்குகள் தங்கள் குறையை சொல்லிமுடித்துச் சென்றபின் ‘ஆமாஞ்சாமி’ நரியார் பெருத்த யோசனையில் அங்குமிங்குமாய் நடப்பதைக்கண்டு, ‘வன அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!’ என்றே முனகிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிற்று.

3.

ராஜவனத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனபொழுது திருடன் மணியன் என்கிற குரங்கு அவதாரம் ஒன்று கிளம்பியது. அந்தசமயத்தில் சில விலங்கினங்கள் இந்தவனத்தில் இனிபிழைக்க முடியாதென்ற நினைப்பில் அடையாள அட்டை எடுத்துக்கொண்டு பக்கத்து வனமான சுந்தரவனத்துக்குள் சென்றுவிட்டன.

திருடன் மணியன் இளவயதுக்குரங்கு. அது தன் திருட்டு வேலையை முதலாக நிகழ்த்தியது ராஜவனத்தின் திருட்டுக்கூட்டமான நரிக்கூட்டத்தின் இருப்பிடத்தில் தான். அங்கே மிதமிஞ்சிய உணவு வகைகள் இருக்கவே அது ஆச்சரியப்பட்டு அங்கேயே தொடர்ந்து கைவைத்தது. முதலாக தன் வயிற்றுப்பாட்டை மட்டும் பார்த்த திருடன் மணியன் பின்பாக தன்னோடு இணைத்து ஒரு சிறிய குழுவை உருவாக்கிக்கொண்டது. அந்தக்குழுவுக்கு ‘அட்றா அபேஸ் குழு’ என்று பெயரிடப்பட்டது. குழுவில் பத்து குரங்குகள் இருந்தன. ஒன்பது குரங்குகளுக்கும் திருட்டின் நுணுக்கங்களை திருடன் மணியன் கற்றுக்கொடுத்தான். அவைகளும் ‘கப்’பென மணியனின் சொற்களை மனதில் ஏற்றிக்கொண்டு அதன்படி நடக்கத்துவங்கின.

‘அட்றா அபேஸ் குழு’வுக்கு திருடுவதற்கு நேரம் காலம் என்றெல்லாம் இல்லை. அதன் முழுநேரப்பணியே திருட்டுதான். அதுவும் ஒரே இடத்தில் திருடுவது என்பதே குழுவின் குறி. போக அதிகம் அவைகளால் திருடப்பட்ட உணவு வகைகளை வனத்திலுள்ள மற்ற ஏனைய விலங்குகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவதை வழக்கமாய் வைத்திருந்தன.

இதனால் ராஜவனத்தின் விலங்குகள் பலவும் ‘அட்றா அபேஸ் குழு’ மீது பற்றுதலையும், கண்ணியப்பார்வையையும் ஒருசேர வைத்திருந்தன. சில விலங்குகள் மத்தியில் திருடன் மணியன் ‘காக்க வந்த கடவுளாக’ மதிக்கப்பட்டான். கேட்போர்க்கு இல்லையென்று சொல்லாமல் அள்ளி நீட்டும் வள்ளலாக மாறியிருந்தான்.

பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளை நரிக்கூட்டம் திருடிக்கொண்டு போய்விடுவதால் கவலைப்பட்டிருந்த விலங்குகளுக்கு அவைகளின் சொந்த உணவே ‘அட்றா அபேஸ் குழு’ மூலமாக திரும்பக்கிடைத்து விடுவதால், வனத்தைவிட்டு வயிற்றுப்பாட்டுக்காக புலம்பெயரும் திட்டத்தையும் அவைகள்  தள்ளி வைத்துவிட்டன.

தங்கள் கூட்டத்திலிருந்து இப்படி பெயர்பெறும் அளவு திருட்டுப்பயல்கள் இந்த வனத்தில் தோன்றிவிடுவார்கள் என்று கனவிலும் நினைக்காத ஏனைய குரங்குக்கூட்டம் கவலையில் திரிந்தன. இந்த விசயங்களெல்லாம் வனராஜாவின் காதுக்குச் சென்றால் கட்டிவைத்து தோலை உரித்துவிடுவாரே அவர்! என்றும் கவலைப்பட்டன.

‘அட்றா அபேஸ் குழு’ வனத்தில் களமிறங்கி இந்தப்பணியைச் செய்யத்துவங்கி மாதங்கள் இரண்டு ஓடியபிறகு வருத்தத்திலிருந்த திருட்டுநரிகள் கூட்டத்துக்கு ஒருவேளை உணவுக்கே பஞ்சம் வந்துவிட்டது. இதனால் அவைகள் கவலைகொண்டு தன் இன அமைச்சரான ‘ஆமாஞ்சாமி’ நரியாரிடம் சென்று முறையிட்டன. ’திருடங்க கிட்டயே திருடீட்டு போற திருட்டுக்கொரங்கா மணியன் இருக்கான் அமைச்சரே! நீங்கதான் எங்க திருட்டு வாழ்க்கையை காப்பாத்தனும்!’ என்று புலம்பின அவைகள். இதுவெல்லாம் தெரியாத ‘ஆமாஞ்சாமி’ நரியார் மணியனின் சாமார்த்தியமான விசயத்தை நரிக்கூட்டத்தின் வாயிலாக அறிந்ததும், ‘இதற்கென்ன செய்வது?’ என்றே குழம்பிப்போனார்.

எந்தக் களையையும் முளையிலேயே கிள்ளி வீசிடனுமே! பிற்பாடு விருட்சமாகிவிட்டால் சிரமம்தானே! இருந்தும் நேரில்வந்து முறையிட்ட நரிக்கூட்டத்திடம், ‘முன்பைவிட அதிக கவனமாய் நீங்கள் தொழிலை நிகழ்த்த வேண்டும். திருடிச்சேகரித்த உணவை அதிக பாதுகாப்புடன் பதுக்கி அதற்கு காவல் வைக்க வேண்டும். நம் அளவுக்கு அந்த குரங்குக்கூட்டம் மூளை வளர்ச்சி பெற்றதல்ல! நாம் எப்போதும் ஒருபடி மேலேதான் இருக்க வேண்டும். நம்மால் முடியாத விசயம் என்று எதுவும் இல்லை. நீங்கள் கவனமாய் செயல்பட வேண்டும்! தடைக்கற்களென தடைகள் வந்தாலும் தட்டி லேப்பிவிட்டு காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்!’ என்றெல்லாம் வீரம் பாடி திருட்டு நரிக்கூட்டத்தின் மனதில் விதைத்தபிறகு அங்கிருந்து அனுப்பிவிட்டது.

ஆனாலும் அது இந்த விசயத்தை வனராஜாவின் காதில் போட்டுவைத்து விடவேண்டுமென நினைத்தது. அதுதான் சரியும் கூட என்றும் நினைத்தது. அவர்தான் இந்த குரங்குகளின் அட்டகாசத்தை ஒழித்துவிட ஏதேனும் திட்டத்தை வகுத்துத் தருவார் என்று நம்பியது.

இந்த விசயத்தையும் பாறையிடுக்கில் படுத்துக்கொண்டு காதுகொடுத்து கேட்டபடியிருந்த உடும்பு, ‘அட்றா அபேஸ் குழு வாழ்க! இனி சிக்கீட்டு சீக்கி அடிப்பானுங்க இந்த நரிக்கூட்டம்! நோகாம நோம்பி கும்புடறது எத்தனை நாளைக்கி நிலைக்கும்?’ என்று முனகிக்கொண்டே கிளம்பிற்று.

4.

வனராஜாவின் அவசரச்சட்டத்தை வனம் முழுக்க அறிவிக்க ‘ஆமாஞ்சாமி’ நரியாரே ஏற்பாடு செய்யவேண்டிய நிலை வந்தது. வனம் முழுவதும் தண்டோரா போடும் வேலையை அமைச்சர் நரியாரே சென்று செய்தால் மற்ற விலங்குகள் என்ன நினைக்கும்? தனக்கென்று இருக்கும் மானம் மற்றும் மரியாதை மற்றும் எட்சட்ரா.. எட்சட்ரா.. கடற்பயணம் மேற்கொள்ள கடற்கரை சென்று கப்பலில் பயணித்து அண்டார்டிகாவோ அட்லாண்டிசோ போய்விடுமே!

அதற்காகவும் ‘ஆமாஞ்சாமி’ நரியார் தன் திருட்டுக்குழுவையே வரவழைத்தார். அதன்படி திருட்டு நரிக்கூட்டம் வனம் முழுவதும் தண்டோரா போட்டது. ஏற்கனவே வாழ்ந்த அழகான வாழ்க்கையை இழந்து என்ன மாதிரியான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்? என்று அவைகளும் அடிக்கடி விவாதம் செய்துகொண்டன.

”இதனால் சகல வனவிலங்குகளுக்கும் தெரிவிக்கும் விசயம் என்னவென்றால்.. திருடன் மணியனின் இருப்பிடத்தை காட்டிக்கொடுப்பவருக்கு நம் வனராஜா ஏராளமான பரிசுகளை கொடுக்கப்போகிறார். திருடன் மணியனைப்பற்றியான தகவலை தரும் எந்தப்பறவைக்கும் ராஜாவின் பாறைக்குகையில் ஒருவாரகாலம் ராஜ உபச்சாரம் கிட்டும். போக திருடன் மணியனை உயிரோடோ அல்லது பிணமாகவோ வனராஜாவின் இருப்பிடத்துக்கு கொண்டுவரும் வீரதீர விலங்கு எதுவாக இருந்தாலும் தகுந்த பதவி கொடுக்கப்பட்டு அந்த விலங்கு சீரும் சிறப்புமாக காலம் முழுதும் வாழலாம்! டும் டும் டும்!” என்று பறையொலியை தட்டிக்கொண்டே திருட்டு நரிக்கூட்டம் வனமெங்கும் சென்று அறிவித்தது.

இதைக்காதில் கேட்ட ஏனைய விலங்குகள் அந்த விசயத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வனராஜாவுக்கு புத்தி மழுங்கிவிட்டதாக பேசிக்கொண்டன. வனமிருகங்களை காக்கும் ரட்சகனான திருடன் மணியனை யாரேனும் காட்டிக்கொடுப்பார்களா என்ன! திருட்டு நரிகள் தப்பட்டை தட்டிக்கொண்டு வந்ததைப்பார்த்து ஏளனமாய் சிரித்தன பல மிருகங்கள்.

தண்டோரா போடப்பட்டு ஒருவார காலம் ஆனபிறகும் கூட திருடன் மணியனைப் பற்றி ஒரு விலங்கும் துப்புச்சொல்ல பாறைக்குகைப்பக்கமாக வராதது கண்டு ‘ஆமாஞ்சாமி’ நரியார் மீண்டும் தனக்கு உதித்த திட்டத்தை வனராஜன் அறிவித்ததாக சொல்லி காரியத்தில் இறக்கினார் தன் திருட்டுக்கூட்டத்தை.

அதன்படி அப்பாவிக்குரங்குகள் வனத்திலிருந்து கைது செய்யப்பட்டு பாறைக்குகைக்கு கொண்டுவரப்பட்டன. ‘ஆமாஞ்சாமி’ நரியார் அவைகளிடம் திருடன் மணியனைப்பற்றி அதட்டிக்கேட்டும் அந்தக்குரங்குகள் வாய்திறக்க மறுத்துவிட்டன. இதனால் அவைகளை பாறைக்குகைகளில் தள்ளி அதன் வாயிலை பெரிய கற்கள் கொண்டு அடைத்தன நரிகள்.

அப்படியும் திருடன் மணியனைப்பற்றியான தகவல் எதுவும் ‘ஆமாஞ்சாமி’ நரியாருக்கு கிட்டவேயில்லை. திருட்டு நரிக்கூட்டமும் வனமெங்கும் திருடன் மணியனைத்தேடி அலைந்தன. அவைகளின் கண்ணுக்குக்கூட மணியனின் ‘அட்றா அபேஸ் குழு’ படவேயில்லை.

இறுதிக்கட்டமாக தன் யோசனையை ‘ஆமாஞ்சாமி’ நரியார் வனராஜன் சிவநேசனிடமே சொல்லி ஆலோசனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். வனராஜனோ, தன்மீது பயமில்லாமல் ஒரு குரங்குத்திருடன் வனத்தில் கைவரிசையைக் காட்டிக்கொண்டு அலைவது பிடிக்காமல் நரியார் சொன்ன திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவரும்படி சொல்லிவிட்டு கொட்டாவி போட்டார். அவருக்கு இந்தப்பிரச்சனை கடுப்பையும், எரிச்சலையும் கொடுத்தது.

அதன்படி புதிதாய் பிடித்து வரப்பட்ட அப்பாவிக்குரங்குகள் இரண்டுக்கு தண்டனை என்று  உச்சிப்பாறையில் வைத்து சிரச்சேதம் செய்தன நரிக்கூட்டம். விசயம் வனம் முழுக்கவும் தீயாய் பறந்தது. வனராஜனின் இந்த கொடூரத்தண்டனையைப்பற்றி பறவைகளும் பேச்சாய்ப்பேசின. இறந்துபோன இரண்டு குரங்குகளுக்கும் வனவிலங்குகள் அஞ்சலி செய்தன.

இப்படியான இக்கட்டான நேரத்தில் ‘அட்றா அபேஸ் குழு’ விலிருந்து திருடன் மணியன் மட்டுமே வனராஜாவிடம் சரணடைவதற்காக தனித்து வந்தான். அவனது தைரியத்தை உள்ளூர மெச்சிக்கொண்டது ‘ஆமாஞ்சாமி’ நரி. அதனுடைய திட்டமே அதுதானே! அப்பாவிகளை கொன்றால் மணியன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்துவிடுவான் என்றே கணக்குப்போட்டது நரியாரின் மூளை. அதன்படியே திருடன் மணியன் இதோ.. வனராஜனின் முன்னால் இரண்டு காலில் நின்றபடி முன்னங்காலால் கும்பிட்டபடி நிற்கிறானே!

“நீதான் திருடன் மணியன் குரங்கா? பொடிப்பயலான உனக்கு எதற்கு இந்த வனத்தில் திருட்டுவேலை?” என்று வனராஜன் சிவநேசன் பாறையின் மீதமர்ந்துகொண்டு மணியனைப் பார்த்துக்கேட்டார். அவர் பல மாதங்கள் கழித்து தன் பாறைக்குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அவரின் பிடறியில் மயிர்கள் கொத்தாய் வளர்ந்து பளபளப்பாய் இருந்தது. குரலில் முன்பைவிட கணம் கூடியிருந்தது.

“வனராஜாவுக்கு என் வணக்கம்! நான் தான் மணியன். நானாகத்தான் உங்களிடம் சரணடைய வந்திருக்கிறேன். என் இன விலங்குகளை நீங்கள் தேவையில்லாமல் கைதுசெய்து வந்து பாறைக்குகையில் அடைத்திருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே அப்பாவிகள். நாலு மரம் தாவி இயற்கை தரும் கனிகளை உண்டு வாழ்கிறவர்கள். போக உச்சமாய் நீங்கள் என் இன விலங்குகள் இரண்டை சிரச்சேதம் செய்து கொன்றிருக்கிறீர்கள். உங்களின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து விலங்குகள் எதுவும் செய்யாது என்று வீணாக கற்பனை செய்துகொண்டு உங்கள் குகையில் காலை ஆட்டிக்கொண்டு படுத்திருக்கிறீர்கள். இங்கே விலங்குகளுக்கு நீங்கள் எந்தவிதமான துரோகத்தையும் செய்ய முடியாது! ஒருநாள் நீங்கள் அவைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!”

“உன் பேச்சே பலமாய் இருக்கிறதே மணியா! எங்கேனும் குருகுலக்கல்வி பயின்றிருக்கிறாயா? என் வனத்தில் புதிதாய் உற்பத்தியான புரட்சிக்காரனைப் போலவே நீயும் உன் பேச்சும் இருக்கிறது. உலகமெங்கும் புரட்சிகள் ஒடுக்கப்பட்ட வரலாறு இருக்கிறது தெரிந்துகொள்”

“புரட்சி பற்றியெல்லாம் அப்பாவித்திருடனான என்னைப்பார்த்து நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது வனராஜா! விலங்குகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை துவங்கினால் அதை புரட்சி என்று நீங்கள் பெயர்சூட்டி.. அதை ஒடுக்க காரியம் பார்க்கத்துவங்கி விடுவீர்கள் போல! இதோ உங்கள் அருகில் நிற்கும் இந்த ‘ஆமாஞ்சாமி’ நரியாரின் தகிடுதத்தங்கள் தெரியாமல் அருகிலேயே இருந்திருக்கிறீர்கள். என்ன கேவலமான விசயம் இது. ஒரு முட்டாளை வனவிலங்குகள் தன் தலைவனாக தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றன!”

“வனத்தின் மகாமன்னனை முட்டாள் என்று சொல்லிக்கொண்டு நின்றாயென்றால் உன் தலையும் சீக்கிரம் சிரச்சேதம் செய்யப்படும்!” என்று அப்போதுதான் அவசரமாய் வந்துகொண்டிருந்த மந்திரி கரடியார் எச்சரித்தார்.

“ஓ மந்திரியாரா? இத்தனை மாதங்களாக நீர் சுந்தரவனத்தில் வாழ்ந்தது எனக்குத்தெரியாது என்றா நினைக்கிறீர்? வனராஜனுக்கு நண்பர் என்பதால் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு இங்கே ராஜவன விலங்களுக்கு உதவி புரியாமல் பக்கத்து வனத்திற்கு ஓடிப்போய் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீரெல்லாம் பேசவே கூடாது இங்கே! வனராஜனுக்கு இந்த விசயமெல்லாம் தெரியாது. இங்கே அமைச்சர் நரியார் தானாக ஒரு குழுவை தன் இனத்தில் உருவாக்கி விலங்குகளின் உணவையே திருட வைத்து அட்டூழியம் செய்ததும் வனராஜனுக்கு தெரியாது. நரிக்கு நாட்டமை கொடுத்தால் அது வனத்தையே தன்வசத்துக்கு கொண்டுவரத்தான் துடிக்கும்! இப்படியான வெட்டி வனராஜன் நமக்குத் தேவையா? நமக்குத் தேவையா?’’ என்று பெருத்த குரலில் சப்தமிடவே, ‘வேண்டாம்! அவர் வேண்டாம்! நம் வனத்துக்கு யாரும் தலைவனாக இருக்க வேண்டாம்!’ என்று வனவிலங்குகள் கரகோசமிட்டன.

என்ன?!!

ஆம்! சரணடைவதற்காக வனத்தின் ரட்சகரான மணியன் பாறைக்குகைக்கு செல்கிறான் என்கிற தகவலை அறிந்ததுமே பல விலங்குகள் அங்கே படையெடுத்து வந்துவிட்டன. உண்ட உணவுக்கான விசுவாசம் தான் அது! இல்லையென்றால் அவைகள் எப்போதோ இந்த வனத்தைவிட்டு சென்றிருக்குமே!

வனராஜன் சிவநேசனுக்கு அப்போதுதான் தன் தவறு என்னவென்று புரிந்தது. காட்டின் ராஜா என்று அறிவித்துக்கொண்டு காட்டினுள்ளே செல்லாமல் குகையில் சொகுசாய் கால்நீட்டிக்கொண்டு படுத்துக்கிடந்ததால் வந்த வினைகள் இவைகள் என்று புரிந்தது. ஒன்றுமில்லாத ஒரு விசயம் பூதாகரமாய் மாறியிருக்கிறது.

இந்த அமைச்சன் என் சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி வனத்தினுள் திருட்டு வேலையை துவங்கியிருக்கிறான். நரியானுக்கு பன்னாட்டை வழங்கினால் அவன் தன் இனம், தன் கூட்டத்தின் வளர்ச்சி பற்றி மட்டுமே யோசித்திருக்கிறான்! வனராஜனாக இருக்க தனக்கு கிஞ்சித்தும்கூட தகுதி இல்லையென்றே சிவநேசனுக்கு தோன்றியது. இந்த மந்திரியார் கரடியானையை கண்ணில் பார்த்து வருடமாகிவிட்டதே! வனத்தை விட்டு வனம் போய் வாழ்ந்திருக்கிறான். இதைக்கூட குரங்கு சொல்கிறது!

“சரி இவ்வளவு பேசுகிறாயே.. நீயே இந்த வனத்தின் தலைவனாக இருந்து விடுகிறாயா குரங்கே! அதற்காகத்தானே இத்தனை காரியங்களை நீ செய்தாய்?” என்று சிவநேசன் சிங்கம் கேட்டது மணியனைப்பார்த்து.

“தலைவனாகும் தகுதியெல்லாம் என்னிடமில்லை வனராஜனே! அது என் பணியுமல்ல! எனக்கு என் இன விலங்குகள் சுதந்திரமாக இருந்தால் போதும் என்றுதான் முதலில் நினைத்தேன். இங்கே பாதுகாக்கப்படும் சிறிய உணவும் களவுபோகும் வேலையைச் செய்வோர்மீது தோன்றிய எரிச்சலால் தான் நான் திருட்டுவேலையைத் துவங்கினேன். இந்த அமைச்சரின் திருட்டுப்படை ஏராளமான திருட்டைச்செய்து தங்களின் பதுங்குகுழியினுள் பதுக்கி வைத்திருப்பதை கண்ணுற்று நான் என்னுடன் ஆட்களை சேர்த்திக்கொண்டேன். திருட்டு உணவையே திருடி, திருட்டுக்கொடுத்த விலங்குகளுக்கு திரும்பக்கொடுத்தேன். இதை நான் காலம் முழுக்கவும் செய்துகொண்டிருக்க முடியாது. எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. நான் அதையும்கூட இழந்தாலும் கவலையில்லை. ஆனால் இந்த வனத்தில் அடுத்தவர் உணவை யாரும் திருடக்கூடாது. அப்படியான அமைதியான வனமாக இந்த ராஜவனத்தை  நீங்கள் உருவாக்கினால் நான் என்வழியில் போய்விடுவேன். திருடுவது தவறு என்பது திருடும் எனக்கும் தெரியும். வேறுவழியில்லாமல் செய்வதற்கு பெயர் திருட்டல்ல! அதுவொரு பாடம்!”

அப்போதே பாறைக்குகைகளில் சிறைவைக்கப்பட்ட குரங்குகளை விடுதலை செய்ய வனராஜன் சிவநேசன் உத்தரவிட்டார். போக அமைச்சர் ‘ஆமாஞ்சாமி’ நரியாரும் அவரது திருட்டுக்கும்பலும் கைதுசெய்யப்பட்டு பாறைக்குகையில் அடைக்கப்பட்டனர். இவ்வளவு மதியூகம் பெற்ற மணியன் குரங்கார் வனராஜனின் அமைச்சராக பதவி பெற்றார். பின்பாக தொடர்ந்து ராஜவனத்தில் சிவநேசன் சிங்கராஜா நல்லாட்சி புரிந்தார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ!

***

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே  12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத் துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *