நேர்காணல் : மு.குலசேகரன்
சந்திப்பு : சிவபிரசாத்
0
தன் எழுத்துக்களைத் தாண்டி, எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் எழுத்தாளர் மு.குலசேகரன். இயற்பெயர் மு.குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாபனபள்ளி இவர் பிறந்து வளர்ந்த ஊர். தற்போது வாணியம்பாடி அருகிலுள்ள புதூர் நகரில் வசிக்கிறார். வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ”அட்ஆர்ட்டிகா” என்ற பெயரில் திரை, ஆப்செட் அச்சக தொழில் புரிகிறார். இவர் எழுதிய “ஒரு பிடி மண்”, “ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி” (உயிர்மை பதிப்பகம்) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் “அருகில் வந்த கடல்”, புலி உலவும் தடம்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் (காலச் சுவடு பதிப்பகம்) வெளியாகியுள்ளன. ஓவியரும் கூட. சமீபத்தில் முதல் கட்டுரைத் தொகுப்பு “உற்ற சொல்லைத் தேடி” (காலச் சுவடு பதிப்பகம்) வெளிவந்துள்ளது. கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக எழுதி வந்த முதல் நாவல் “தங்க நகைப் பாதை” வெளியாகவுள்ளது. அவரிடம் “நடுகல்” இணைய இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது.
கேள்வி : புதிதாக வெளி வந்திருக்கும் உங்கள் கட்டுரைத் தொகுப்புக்கு “நடுகல்” இணைய இதழ் சார்பாக வாழ்த்துகள். இந்த தொகுப்புக் குறித்து எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
பதில் : இலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கி வரும் “நடுகல்” இதழின் வாழ்த்துகளுக்கு நன்றி. என் கட்டுரைத் தொகுப்பு வரும் சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியாகியுள்ளது. புத்தகத் திருவிழா உண்மையில் ஓர் இலக்கிய விழா. எழுத்தாளர்களின் நம்பிக்கைக் கொண்டாட்டம். அச்சமயம் அனைவரும் தங்கள் புத்தகங்களை வெளியிட விரும்புவார்கள். அது எழுத்துகளைப் பற்றி பேசவும் எழுதவும் உகந்த சந்தர்ப்பம். ஊடகங்களும் பரவலாக புத்தக செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. இத்தருணத்தில் என் நூல் வருவதில் மகிழ்ச்சியே. இது நான் பல்லாண்டுகளாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அபி, தேவிபாரதி, பா,வெங்கடேசன், பெருமாள் முருகன், யவனிகா ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், ராணிதிலக், கே.என்.செந்தில், சபரிநாதன் போன்றோரது படைப்புகளைப் பற்றிய பார்வைகளை முன்வைக்கும் நூல். உற்ற நண்பர் மறைந்த நஞ்சுண்டனின் ஆளுமைச் சித்திரக் கட்டுரையின் தலைப்பான “உற்ற சொல்லைத் தேடி” என்பதுதான் புத்தகப் பெயரும். “தேடி” என்பது நஞ்சுண்டனுக்கு ஒரு பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் ஒருங்கே அமைந்திருக்கிறது. ஆச்சரியகரமாக இத்தொகுப்பில் நிறைய கவிதைத்தொகுப்புகளைக் குறித்தே எழுதியிருக்கிறேன். மேலும் சில நாவல்கள், சில ஆளுமைகள் பற்றியும். நான் ஆழ்ந்து வாசித்ததின் வெளிப்பாடு இக்கட்டுரைகள். பெரும்பாலும் படைப்புகளை அந்தரங்கமாக அர்த்தப்படுத்திக் கொள்ளுதலின் அடிப்படையில் உருவானவை.
0
கேள்வி: உங்கள் நாவலின் ஓரிரு அத்தியாயங்களை கல்குதிரை, மணல் வீடு, கனலி முதலான இதழ்களில் வாசித்திருக்கிறேன். இந்த நாவல் எப்போது வெளியாகிறது. முதல் நாவலை எழுதிய அனுபவம், நாவல் மையப்படுத்தும் விஷயங்கள் குறித்துச் சொல்லுங்கள்.
பதில் : சில மாதங்களில் என் “தங்க நகைப்பாதை” என்னும் நாவல் வெளியாகலாம். அதில் அறுபதாண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளுள்ளன. அவற்றையொட்டிய மனப்போராட்டங்கள். ஏறக்குறைய மூன்று தலைமுறைகள். இதைக் கடந்த மூன்று, நான்காண்டுகளாக எழுதி வருகிறேன். அதற்கும் முன்பாக உள்ளத்தில் உறைந்திருந்தது. இது என் முதல் நாவல். இரு கவிதைத் தொகுப்புகளையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறேன். மற்றொரு தொகுப்பு வெளியாகவுள்ளது. ஆனால் இந்நாவலில் பெரும் சுதந்தரத்தை அனுபவித்தேன், வெட்டவெளியில் நிற்பதைபோல். என் சுபாவப்படி நானாக விதித்துக்கொண்ட சில தளைகளைத் தவிர்த்து முழு நிர்வாணத்தை அடைந்தேன். நாவல் வடிவம் பெரும் இடத்தையும் காலத்தையும் கொண்டது. ஆகவே அது தனக்குள் அனைத்தையும் அனுமதித்துக்கொள்கிறது. இப்போதைய பின் நவீனத்துவ சூழலில் நாற்காலி செய்முறைப் பயிற்சிக் கையேட்டைக் கூட நாவலில் பொருத்தலாம். ஆனால், அதில் படியும் பார்வை முக்கியம். அசோகமித்திரன் நாவலில் டால்ஸ்டாய் பற்றிய கட்டுரை முழுதாக வரும். தேவிபாரதியின் “நொய்யல்” நாவலில் கிணறு வெட்டுவது பல பக்கங்களுக்கு நீளும். கி.ராஜநாராயணனில் ஆடுகளின் நீண்ட வகைப்பட்டியலும் செயல்பாடுகளும் விவரிக்கப்படுகின்றன. நம் பெரும் எழுத்தாளர்கள் பல புதிய வடிவங்களில எழுதிவிட்டிருக்கிறார்கள். என் நாவல் நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் நிலம் இழக்கும் சந்தர்ப்பத்தை முன்வைத்து ஒர் ஐம்பது, அறுபது பேரின் எண்ணங்களை, நடவடிக்கைகளை தொடர்ந்து பார்க்க முயலுகிறது. சுதந்திரமான தன்னிச்சையான வடிவைக் கொண்டது. எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிப் படிக்கலாம். இதன் சிறு பகுதியை ஒரு சிறுகதையாக நீண்ட நாட்களுக்கு முன் எழுதினேன். அப்போது நாவல் எழுதுவேன் எனத் தெரியாது.
0
கேள்வி: இது வழக்கமானக் கேள்வி தான். ஆனால் தவிர்க்க முடியாதது. இலக்கிய உலகுக்கு எப்படி வந்தீர்கள்?
பதில்: இங்கு பெரும்பாலோனருக்கும்போல் என் இலக்கிய அறிமுகமும் தற்செயலானது. அனைத்தும் எதேச்சைகளின் தொடர் நிகழ்வுகளாகதான் காணப்படுகின்றன. அவை முன்கூட்டி யாரோலோ துல்லியமாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தோன்றுகின்றன. அப்படி அர்த்தப்படுத்திக்கொண்டால்தான் வாழ்க்கை பொருள் பொதிந்ததாகும். என் நினைவு தெரிந்த வயதில் வீட்டிலுள்ளோர் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். சாப்பிடும்போது கூட கையில் புத்தகங்களிருந்தன. கீழே வைத்தால் மற்றவர்கள் பிடுங்கிக்கொள்வார்கள். அது அனைவருக்கும் கல்வி கிடைத்த புதிது. கற்றோர் எதையாவது படித்துக் கொண்டாடினார்கள். வணிக இதழ்களுக்கும் நாளிதழ்களுக்கும் அமோக விற்பனை.
என் அப்பா சில கிராமங்களுக்கு மணியக்காரராயிருந்தார். பக்கத்திலுள்ள ஊரில் சில முன்னோடிகள் காந்தியத்தை இயல்பாகக் கடைபிடித்தார்கள். அவர்களின் பழக்கத்தால் அப்பாவும் உண்மையான காந்தியரானார். மலிவான கதராடை அணிவார். புகை, வெற்றிலை, புலாலைத் தொட்டதில்லை. கடைசி வரையிலும் அவருக்கு அவற்றின் மேல் சற்றும் ஆசை எழாதிருந்தது ஆச்சரியம். மரணப் படுக்கையிலும் கூட. அப்போது தமிழகத்தில் திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் நிறைய படிப்பகங்களை நடத்தின. அவற்றால் மக்களை ஆழமாகத் தொடர்பு கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் படிப்பகம் காந்தியர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது. அதிலிருந்து அப்பா வார, மாத இதழ்களை தொடர்ந்து எடுத்து வருவார். அவரும் வீட்டுக்கு சில இதழ்களை வாங்கினார். அம்மாவும் ஓய்ந்த மதிய வேளைகளில் படித்தார். அண்ணனும் நானும் தின்பண்டங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் துப்பறியும் படக் கதைகள் வாங்கினோம். நானே படிக்க சிறு படக்கதைகளை எழுதிக்கொண்டேன். அக்காக்கள் தொடர்கதைகளை பாதுகாத்துத் தைத்த புத்தகங்களையும் படித்தேன். மூத்த சகோதரி மணிக்கணக்கில் கவிழ்ந்து ஓவியங்கள் வரைவார். அதைப்பார்த்து நானும் ஆசையுடன் வரைந்தேன். அண்ணன் எழுதிய கவிதைகள் வார இதழில் வெளியாகி பாராட்டப்பட்டார். நானும் போட்டியாகக் கவிதைகள் எழுதினேன். இப்படிதான் அவை தொடங்கின. அண்ணன் சென்னை சென்றார். அங்கு நடைபாதையில் “கறுப்பு மலர்கள்“ (நா.காமராசன் கவிதைத் தொகுப்பு) வாங்கி பரிசளித்தார். கல்லூரிக்காலத்தில் நகர நூலகத்துக்கு சென்றேன். அது முழுக்கப் புத்தகங்களால் நிரம்பியிருந்தது வியப்பூட்டியது. போர்ஹெஸ் கற்பனைத்த சொர்க்கம் போலிருந்தது. நூலகர் காசுக்காக கன புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்திருப்பார். பொன்னியின் செல்வனை எடுத்து மூன்று நாலு முறை படித்தேன். பெற்ற மனம், முள்ளும் மலரும் போன்றவற்றையும். கூடவே என்னை ஜெயராஜ்களும் சுஜாதாக்களும் அலைகழித்தார்கள்.
திடீரென புதுமைப்பித்தன் கிடைத்தார். அவர் அடுக்குகளில் பேய் போல் மறைந்திருந்தார். புத்தகங்களின் நடுவில் நின்றபடி படித்த “சேகர் கலாசாலை மாணவன், அவனுக்கு எந்தக் கவலைகளுமில்லை, தாடியில் பேன் பற்றுமா என்பதைத் தவிர” என்ற வரி என்னை எள்ளியதை மறக்க முடியாது. அந்த எழுத்தும் அர்த்தமும் கலகத்தை விளைவித்தன. இதுவரையில் என்னிலிருந்தவை உடைந்து கையில் துகள்களாயிருந்தன. தான் நிற்கும் அடித்தளத்தையும் கவிழ்த்தவரை அதுவரை சந்திக்கவில்லை. அந்த ஈர்ப்பு கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், பிற்பாடு மௌனி, சுந்தரராமசாமியை நாட வைத்தது. பெரிய நூலக படிப்பு மேசைக் குவியலில் தனித்திருந்த “கணையாழி” இலக்கியப் பத்திரிக்கை கண்ணில்பட்டு படித்தேன். அடிக் கூழாங்கற்களை போல் தெளிந்த “இன்று” எழுதுவார் அசோகமித்திரன். அதுவே நான் பற்றிய சிலுவை. இவற்றை ஆழ்ந்து வாசித்தால் ஒருவர் எழுதியாக வேண்டும். அதற்கான பொறிகள் அவ்விலக்கியங்களில் கிடைக்கின்றன. அந்த விதியை மாற்றவியலாது. ஆனால், வணிக எழுத்துகளில் மூழ்கிக் கிடந்தால் யாரும் எழுத்தாளாராக முடியாது. அவை மூளைக்குள் மயக்க ஊசிகளை செலுத்தும். காலமெல்லாம் வாசகக் குஞ்சாயிருந்து சாக வேண்டும். அது வெறும் பொருள் நுகர்வுதான், ஒரு கட்டத்தில் சோர்ந்து முழுதாக படிப்பிலிருந்தும் வெளியேற நேரிடும். உண்மையான எழுத்தார்வமுள்ளவர்கள் இணைந்தால் எதையாவது செய்ய விரும்புவார்கள்.
நண்பர்கள் ராமலிங்கமும் விஜயகுமாரும் நானும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். கவி அபியின் முதல் கவிதைத் தொகுப்பு “மௌனத்தின் நாவுகள்” என்பதிலுள்ள “நாவுகள்”தான் பெயர். அது சீட்டு குலுக்கிப் போட்டு எடுத்த பெயர்களில் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தது. இரண்டு வருடங்கள், ஒவ்வொரு மாதமும் ஓவியங்களுடன் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதியதை நினைக்கையில் கை வலிக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையில் அடித்தல் திருத்தல்கள் இருக்கக் கூடாது என்பது பொறுமையை சோதிப்பது. சில வருடங்கள் கழித்து, ராமலிங்கமும் நானும் “ஒரு பிடி மண்” என்ற கவிதைத் தொகுப்பை எழுதி கைக்காசை செலவழித்து வெளியிட்டோம். அதுவும் அக்கால வழக்கம். அப்புத்தகம் ராமலிங்கம் திருமணத்தின் நினைவுச் சின்னம். என் அம்மா தன் சொத்து விற்றுக் கிடைத்த பங்கு பணத்திலிருந்து ரகசியமாகத் தந்து உதவினார்.
0
கேள்வி: உங்களின் முதல் தொகுப்பான “ஒரு பிடி மண்” கவிதைகள் எளிமையும் உணர்ச்சிகள் கூடியதாகவும், இரண்டாவது தொகுப்பு “ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி” கவிதைகள் மிகைக் கற்பனைகளைக் கொண்டதாகவும் விளங்குகின்றன. பொதுவாக உங்கள் கவிதைகள் காட்சி சித்தரிப்புகளாகவுமிருக்கின்றன. அவை புனைவுகளிலும் தொடர்கின்றன. எந்தப் போதாமையில் கவிதையிலிருந்து உரைநடைக்கு வந்தீர்கள்?
பதில் : கவிதையே இலக்கியத்தின் உயர்ந்த வடிவம். எல்லா வடிவங்களும் கவித்துவ உச்ச நிலையை அடைய விரும்புகின்றன. நான் புனைவும் எழுதுவதால் அவ்வாறு கூறலாம். கவிதையின் அலகாக சொல் மட்டுமிருக்கிறது. அது அனுபவ சாரத்தை தருவது. நிகழ் கணத்தைக் காட்டுவது. ஆனால் புனைவுகள் இயங்குவது மனிதர்கள், நிகழ்வுகள், நினைவுகளால். அவை சேர்ந்து அனுபவங்களை உருவாக்குகின்றன. அதற்கு முக்காலமும் தேவை. கவிதை, புனைவு இரண்டிலும் குறியீடுகளும் படிமங்களுமிருந்தாலும், கவிதையில் அவை தூய அனுபவங்கள். பலவாறாக விரித்துக்கொள்ளலாம். கவிதையை அடையாளப்படுத்துவது கடினம். அது எழுதுகிறவரையும் ஏமாற்றக்கூடியது. அதனாலேயே போலிகள் தோன்றுகின்றன. கவிதைகளை எழுத, வாசிக்க ஏற்ற மனோநிலைக்குக் காத்திருக்க வேண்டும். எனக்கு காட்சிகள் முக்கியமானவை. அவற்றைக் கற்பனையாகவும் காட்ட விரும்புகிறேன். மற்றது, சொற்களின் மீது மோகம். வார்த்தைகள் அதிகம் பயன்படுவது கதைகளில். கவிதையில் சொற்களை தவிர்க்க வேண்டும். மிகக் குறைந்தளவு போதும். எனக்கு கவிதையிலிருந்து கதைக்கு மாற திட்டவட்டக் காரணங்களில்லை. மாறிக்கொண்டிருப்பது இயல்பு. இன்னொரு வடிவம் கிடைத்தால் அதிலும் நுழையும் ஆசை உண்டு. ஆனால் இப்போது திரும்பவும் முயன்றும் என்னால் கவிதைகள் எழுத முடிவதில்லை. ஆனால் எதை எழுதினாலும் கவிதைத் தன்மையை உருவாக்க மனம் விரும்புகிறது. அது சொல்ல முடியாதவொன்று.
என் முதல் கவிதைத் தொகுப்பு “ஒரு பிடி மண்” நண்பர் ராமலிங்கமும் நானும் இணைந்து எழுதி வெளியிட்டது. அப்போது நிலவிய இறுகிய மொழியிலிருந்து தளர்ந்த நடையில் எழுதப்பட்டது. என் கவிதைகளில் குறீயீடு, படிமங்களில்லை. உள்ளுணர்வுகள் நேரடியாக வெளிப்பட்டன. விரக்தி, அவநம்பிக்கை, சூழல் சீர்கேடு, எதிர்காலம் குறித்த அச்சம், பொதுவான துக்கம், குழப்பம் போன்றவை பொருட்களாயிருந்தன. அவை முழுக்க தனிநபருடையவை. அருகிலுள்ளவரிடம் பேசும் மெல்லிய குரலோடிருந்தன. “நள்ளிரவில் சென்று கேள் / நினைத்தவுடன் கேட்டுவிடு”, “இங்கேதான் நெல்லைப் போட்டோம் / பக்கத்தில் பஞ்சை நட்டோம் / தூரத்தில் அவரை துவரை முதலியன விதைத்தோம்” போன்ற வரிகளெல்லாம் தூய ஆழ் மனதினுடையவை. அநிச்சயம் கொண்டவை. அனுபவ மாசு படாதவை.
இரண்டாம் கவிதைத் தொகுப்பு “ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி.” உயிர்மை வெளியீடு. அனைத்தும் இதழ்களில் பிரசுரமானவை. சமூக வயக் கவிதைகளாயிருந்தன. அதனால் சிறு நம்பிக்கைக் கீற்றுகளோடிருந்தன. அதை குறுங் காவியம் எனலாம். ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என தொடர்ச்சியோடிருந்தன. அப்பா, அம்மா, குடும்பம், மனைவி, குழந்தை, அயலார் போன்றோரின் உணர்வுகளைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தன. குழந்தைமையை, இளமையை, நோய்மையை, முதுமையை காட்டியிருந்தன. வழக்கம்போல் உறவுச் சிக்கல்களையும் பேசின. காட்சிகளை தலைகீழாக்கல், சிதைத்தல், துல்லியமாக்கல் போன்றவற்றை செய்தன. மிகைக் கற்பனைகளையும் மாயத் தோற்றங்களையும் கொண்டிருந்தன. அகத்தின் ஆழத்தை தெரிவிக்க விரும்பின. “அப்பாவின் கைத் தடியில் வேர்கள் பற்றுகின்றன” “குகைக்கு வெளியில் உட்கார்ந்து / தந்தை தொடர்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்தான் / உள்ளே மகன் தூக்கத்திலேயே உம் கொட்டிக்கொண்டிருந்தான்.“ “பாழடைந்த கோயில் / காலி பீடத்தின் மேல் / கடவுளாகக் காட்சியளிக்கிறது” என்ற வரிகளெல்லாம் மொழிக் கூறுகளால் விளைந்தவை. சில மொழிப் பரிசோதனைகளும் செய்யப்பட்டிருந்தன. ஒரு கச்சிதத்தன்மையை அடைய முயன்றன. இப்போது கவிதைகள் எழுதிய காலத்தை நினைக்கையில் உள்ளம் பொங்குகிறது. சிறு வடிவத்தில் வாழ்க்கை முழுவதையும் அளப்பது! ஒவ்வொரு சொல்லாக கவிதை தோன்றும். எதிரில் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும். அதன் கீழ் நான் தாழ்ந்திருப்பேன்.
0
கேள்வி: ”அருகில் வந்த கடல்”, “புலி உலவு தடம்” இந்த இரு சிறுகதைத் தொகுப்புகளிலுமே நெருக்கடி வேளைகள் அதிகம் வருகின்றன. கடற்கோள் (சுனாமி), நோய்த் தருவாய், முதலிரவு வேளையில் எழும் சாதியம், மேம்பாலம் திறக்கும் பொழுது, புலி வருதல், மரணச் சமயம், இப்படி. இதற்கு பிரத்யேக காரணங்கள் ஏதேனும் உண்டா?
பதில்: இந்த இடர்ப்பாடான கணங்களிலேயே மனித மனம் கூர்மையாக செயல்படுகிறது. அதனால் அடிப்படையான இச்சைகள் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுகின்றன. அன்பு, காதல், காமம், குரோதம், வெறுப்பு, ஏன் போராட்ட குணம் கூட தீவிர கதியை அடைகின்றன. இதுகாறும் மூடி வைத்த முகத் திரைகள் கிழிந்து கோரைப் பற்களும் காயங்களும் புன்னகைகளும் தெரிகின்றன. அது தன்னிச்சையாக உணர்வுகள் பொங்கும் பொழுது. அவற்றை எழுதுவது ஒருபுறம், புனைவுகளில் அந்த முக்கிய நெருக்கடிக் காலத்தை வேண்டுமென்றே உருவாக்குவது மறுபுறம். ஆதி விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு அமைகிறது. அப்போது அவை நிறைவேறியும் விடலாம். அடையவே முடியாத உச்சிக்கு எளிதாக ஏறிப்போகலாம். நமது சுரப்பிகள் அதிகம் வேலை செய்யும். அக்கணம் என்பது திட்டமிட்டு விளக்கை அணைப்பது. பிறகு அடர் இருளில் உயர்ந்த பொருளை திருடிச் செல்வதுதான். அத்தகைய உச்சபட்ச உணர்வுகளின் வெளிப்பாட்டில் வாழக்கையையும் மனிதர்களையும் வைத்துப் பார்த்தால் பல வண்ணங்கள் கிடைக்கலாம். அது ஒரு துளி மாதிரி. ஒரு சோற்றுப் பதத்தால் மொத்தத்தையும் அளப்பது. அது வரையிலான கதை சாதாரணமானதென்றால் பிறகு நிகழ்வதே முக்கியமானது. நமக்கு அசல் வாழ்க்கையைக் காட்டக் கூடியது.
அசாதாரணத் தருணங்கள் ஒரு சுழிபோல. நம்முடைய பல எண்ணங்கள் பீறிட்டெழும் நிலை. இக்கதைகள் ஒன்றில், ஒரு நகரை கடற்கோள் திடுமென தாக்குகையில், உயிர் போகும் அச்சத்தில், உள்ளூர விரும்பியிருந்த ஆண், பெண் இருவரின் இடைவெளிகள் மறைகின்றன. வெகு தூரத்திலுள்ள கடல் அருகில் உள்ளே வர முடியாது. ஆனால், அவர்கள் தங்கள் எண்ணங்களால் நெருங்குவதற்கான வாய்ப்பாக பேரபாயத்தையே உருவாக்கிவிடுகிறார்கள். மற்றொரு கதையில், தன் ஒதுக்குப் புறமான நகலகக் கடைக்கு வாடிக்கையாளர் குறைந்து வருகையில், எரிகிற தீ எண்ணெயைப்போல் மேலே ஒரு பாலத்தையும் கட்டிவிடுகிறார்கள். அவன் கீழே புதைந்து கிடக்கையில் படு அபத்தமென்றாலும் தன் எதிர்ப்பைக் காட்ட ஒரு வழி கண்டுபிடித்து சிறிது ஆசுவாசம் கொள்கிறான். “மறைந்து தோன்றும் கதவு” கதையில் மகள் விருப்புக்கும் வெறுப்புக்கும் மானசீகமாக தப்பிப் போகிறாள். அவை நடந்ததும் தானாகத் திரும்பி வருகிறாள். இன்னொரு கதையில், புலியைக் கண்டு காதர்பாட்சா அச்சமுறுகிறான். ஏற்கெனவே இனம் புரியா பீதியில் வாழும் அவனைச் சார்ந்தோர் அனைவரும் அல்லலுறுகிறார்கள். அதுவே அவர்களைக் கோர்க்கும் சரடாகிறது. அதை உணரும் மற்றவனும் பயப்படுகிறான். இருவரும் புலிப் பீதியை தைரியமாக எதிர்கொள்ளத் தயாராகுகிறார்கள். “முடிவற்ற தேடல்” கதையில் தன் தொலைந்த பணப்பையால் கடும் அவஸ்தைக்குள்ளாகிறான் ஒருவன். ஆனால் அப்போதே அவனுடைய அறவுணர்வு தலையெடுக்கிறது. நட்ஹாம்சனின் “பசி” நாவலில் வருபவன், உணவே அற்ற ஏழ்மையில் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித் தந்துவிடுகிறான் என்பதைப்போல. “அழிக்கவியலாத கறை” கதையில் அவன் திருமண முதலிரவுப் படுக்கையில் காத்திருக்கையில் தான் சாதி ரீதியாக அவமானப்பட்டதை நினைத்து, காதலித்து கரம் பற்றிய பெண் மீது அசூசையை காண்பிக்கிறான். இன்னும் சரியாகச் சொன்னால் இருவரும் முயங்கும் வேளையில். அதேபோல், அருகில் மரணம் நிகழ்கையில் மையல் கொள்வதும், அல்லது அது பற்றிய பேச்சுகள் எழுவதும் இயல்பு. அவற்றை நம் முன்னோடிகள் எழுதியும் காட்டியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நன்கு திட்டமிட்டு எழுதியதாக சொல்ல முடியாது. அவை பெரும்பாலும் தாமாக உருவாகின.
0
கேள்வி : கற்பனைக் காட்சிகள், திறந்த முடிவுகள், அடையாளங்களற்ற இடங்கள், துல்லியமில்லாத காலம், வெட்டிய உரையாடல்கள் போன்றவை உங்கள் கதைகளிலும், வெளியான சில நாவல் அத்தியாயங்களிலும் கூட பொதுத் தன்மையாக இருப்பதைப் பார்க்கிறேன். இதற்கான காரணங்கள் என்ன?
பதில் : நானும் இவற்றுக்கான பதில்களை சேர்ந்து தேடுகிறேன். இவை முன்கூட்டி தீர்மானித்து உருவாக்கப்படுபவை அல்ல. அவ்வாறு எழுத முடியாது. என் எண்ணவோட்டம் காரணமாயிருக்கலாம். நான் முதலில் ஆழ்ந்து படித்த புதுமைப்பித்தனில் பெரும்பாலும் இட அடையாளங்கள் இல்லை. நாகரீக யட்சன் டிராம் ஓடும் தலைநகரம் என்று புரிந்துகொள்ளலாம். அவராக “இதுதானய்யா பொன்னகரம்” என்றும் காட்டினார். பாத்திரப் பெயர்கள் வைப்பதில் பொதுத்தன்மையிருக்க வேண்டும் என்பார் மௌனி. அவர் தன் மிக வசீகரமான பெண்களுக்குப் பெயர் சூட்டவில்லை. அதனால் நமக்கு இன்னும் நெருக்கமாகிறார்கள். அவரிடம் இடங்களின் பெயர்களும் அனேகமாக இல்லை. குபராவிலும் இதே நிலைதான். நவீனத்துவ எழுத்தாளர்களின் காலத்தில் தன்னிலையில் கதை எழுதுவதும் குறைந்தது. அவன், இவன் என்று மட்டும் சுட்டினார்கள். (இப்போது தன்னிலையில் கூறல் மீண்டும் அதிகமாயிருக்கிறது.) பெரும்பாலானோர் உண்மையான இடப்பெயரை எழுதாதவர்கள். அவற்றை பல காரணங்களால் மறைத்தார்கள். மார்க்வெஸின் பிரம்மாண்ட மக்கந்தோ முழுக்க கற்பனை ஊர். யுவன்சந்திரசேகரின் பகடையாட்டம் நாவலின் “ஸோமிட்சு” புனைவு நிலம். ஆனால் உண்மைத் தன்மையைக் கொண்டது. காஃப்காவின் ஒரு நாவலில் பெயர்கள் முதலெழுத்துகளை மட்டும் கொண்டிருந்தன. அது நடப்பது உண்மைப் பிரதேசத்தின் மேலில்லை. அம்பையின் கதைகளுக்கு குறிப்பிட்ட நிலப்பகுதியின் தேவையில்லை. கவிதைகளுக்கு வெளிப்படையான அடையாளங்கள் தடையாகிவிடும். சிலர் கவிதைகளில் சுசீலாவும் சசியும் தொடர்ந்து வந்து படிமமாகிறார்கள். ஆனால் புனைவுகள் சூழலையும் காலத்தையும் துல்லியமாகக் காட்டித் தீர வேண்டும். அவை சம்பவங்களின் பகுதிகள். அதற்கு மேலும் புறவயப்படுத்தல் தேவையில்லை. இடப் பெயர்களும் துல்லிய நேரங்களுமில்லாது எழுதுகையில் ஒரு சிக்கலும் நேரவில்லை. இவை கோணங்கியின் அதிகற்பனைப் புனைவுகளில் பொருட்டேயில்லை. பின்புலங்களின் அடையாளங்களை குறிப்பிடாததன் மூலம் அவை பொது நிகழ்வாகி வாசிப்பவரை பங்கேற்க வைக்கிறதென கவி சுகுமாரன் என் புத்தக முன்னுரையில் குறிப்பிடுவார்.
என் வடாற்காடுப் பகுதியில் பல மொழிகள் பேசப்படும். அவை கலந்து கிட்டதட்ட பொதுத்தன்மையை அடைந்துவிட்டன. எதிர்காலத்தில் உண்மையான வட்டார வழக்கு அழிந்துவிடுமெனப்படுகிறது. (ஆனால் இலக்கியம் உள்ளளவும் வட்டார இலக்கியம் இருக்கும்.) அதன் ஊற்றுக் கண்களை ஆங்கிலம் அடைத்துக்கொண்டது. நம் பெரும் எழுத்தாளர்கள் படைப்புகளில் பேச்சு மொழியை அவர்களாக உருவாக்கியவை. அப்போதுதான் உயிர்ப்புள்ளதாயிருக்கின்றன. என்னளவில் வட்டார வழக்கின் ஆழத்தையும் சகஜத்தையும் மொழியில் படிய வைக்க முயலுகிறேன். அவ்வாறுதான் காலமும். அந்த இயக்கம் துல்லியமாகத் தெரிவதில்லை. அதை தோராயமாகவே அனுமானிக்க முடிகிறது. எங்களூரில் பேருந்து வர வெகு நேரமிருந்தாலும் “இதோ வரும்” என்பார்கள். என் பாத்திரங்கள் பல நிழலை வைத்து காலத்தை குத்துமதிப்பாக அளக்கிறவர்கள்.
பொதுவாக சம்பவத்துடன் நேரும் உப நிகழ்வுகள் கதையை பூரணமாக விளக்கிவிடுகின்றன, உதிரிகளே சாரமாகத் தோன்றுகின்றன. எனவே அவற்றைக் கற்பனையாகவும் தொடர நேர்கிறது. அவை என்னால் தெரிந்தோ தெரியாமலோ உருவான மாயைகள் என்றார், கற்பனை செய்ய முடியாதளவு வாசித்து விமரிசிக்கும் சரவணன் மாணிக்கவாசகம். நான் படிமங்களைப் பயன்படுத்தி குறிப்புணர்த்துவது சிறப்பான சிறுகதை உத்தி என்று எழுத்தாளர் ஷாதீர் யாசீன் கூறினார்.
திறந்த முடிவுகளோவெனில் அவை முன்பிருந்திருக்கின்றன. அதுவும் எதிர், நேர் என இரு உச்சங்களுடையவை. திருக்குறள்கள் திறந்த முனைகளுடையவை என்பார்கள். ஓஹென்றியில் திடீர் முடிவுகள் கதையை புரட்டிப்போடுபவை. அசோகமித்திரன் கதைகளின் இறுதிகள் மௌனமடைய வைப்பவை. வண்ணநிலவன் கதைகளில் இயற்கையின் அசைவுகளைக் காட்டி முடியாது முடியும் பல கதைகளிருக்கின்றன. நீர் வழிப்படூஉம் பெரு நாவல், பகடையை உருட்டுவதோடு முடிகிறது. தேவைப்பட்டது விழலாம், விழாமலும் போகலாம். மாபெரும் “விஷ்ணுபுரம்” நாவலில் பிரளய முடிவில் பழங்குடி நீலி பெருந் தெய்வங்களுக்கு மாற்றாக மலையுச்சியில் சிறு அன்னைத் தெய்வமெனத் தோன்றுகிறாள். பாத்திரங்கள் செயலற்றுப் போகையில் கதை முற்றுப் பெறுகிறது. அதை மேற்கொண்டு வாசிப்பால்தான் விரிக்க வேண்டும். அதுவே வாசக பங்கேற்பு. எனக்கு மேலும் எழுதத் தோன்றாதபோது முற்றுப்புள்ளியை வைக்கிறேன். என் ஒரு கதையில் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கிளம்பிய முதியவர் பேருந்து நிலையத்துக்கு வந்து வழி தெரியாமல் திகைக்கிறார். அவருடன் நானும் கையறு நிலையில் நிற்கிறேன்.
0
கேள்வி : உங்களின் நிறையக் கதைகள் சமூகச் சிக்கல்களைப் பேசுபவையாக இருக்கிறது. உதாரணமாக நாலு வழிச்சாலை விரிவாக்கல், அணை கட்டுதல், பாலம் அமைத்தல், பெருந்தொற்று காலத்தில் தடைகள் போடுதல் போன்றவை. அரசுக்கு எதிரான தனிமனிதனின் விமரிசனமாக இத்தகைய கதையெழுதுதலைக் கருதலாமா?
பதில் : இந்தப் பெரு மாற்றங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. மக்கள் நலன் என்ற பெயரால் நிகழ்த்தப்பட்டவை. இயற்கையின் மீதான கடும் இடையீடுகள். சுற்றுச் சூழல் மேல் செலுத்தப்பட்ட வன்முறை. இதனால் மேல் நிலையிலிருப்பவர்களல்ல, அடித்தட்டிலுள்ளவர்களே பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அவற்றைக் கோரவில்லை. உண்மையில் இத்திட்டங்கள் பெரு வணிக மூளைகள் தீட்டியவை. அவற்றின் கனிகள் அனைத்தும் அவர்களுக்கே. மற்றவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் அற்பமானவை. நாலு வழிச் சாலைகள் போதாமால், ஆறாக, எட்டாக, எதிர்காலத்தில் இன்னும் எண்ணிக்கை உயரக்கூடும். மனித ஆசைக்கு அளவில்லை. மாபெரும் காட்டை அழிக்க ஒரு சிறு சாலை போதும் என்பார்கள். மேலும், நிலத்தை, வீட்டை இழந்தவர்களின் குரல்கள் மதிக்கப்படவில்லை. உதாரணமாக, இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஒரு நகருக்கு போடப்படுமென்ற எட்டு வழிச் சாலையை மறுத்து போராட்டங்கள் வெடித்தன. ஆறு வழிச்சாலையாக குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டது. நியாயமான இழப்பீடுகளுக்கு முயற்சிகள் நடந்தன. ஆனால், தொடக்கத்தில் நாடு முழுவதும் நாலு வழிச்சாலைகள் போடப்படுகையில் எதிர்ப்புகள் எழவில்லை. சிலரால் சங்கமாகத் திரண்டு சட்ட ரீதியாகப் போராடியும் குறைச்சாலான நட்ட ஈடே பெறப்பட்டது. அப்போதும் வணிக நிலையத்துக்கு அளிக்கப்பட்டதைவிட நிலத்துக்கான மதிப்பீடு சொற்பமாயிருந்தது. ஒரு நாட்டுக்காக ஒரு நபரும் தொந்தரவுக்காளாகக் கூடாதென்பதே நவீன சமூகத்தின் கருத்தாயிருக்க முடியும். அதையே இக்கதைகள் பேச முயலுகின்றன.
பெரு மாற்றங்களால் போதிய பயன் கிட்டவில்லை என்பதை அனுபவம் தெரிவிக்கிறது. அகன்ற அணைகள் பற்றிய விமரிசனங்கள் இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றின் உபயோகம் நீண்ட காலத்தில் பொருத்தினால் குறைவு என்கிறார்கள். அழித்த வளத்துடன் ஒப்பிடுகையில் தேக்கப்படும் நீர் ஒன்றுமில்லை. தூர் வார பெரும் பொருட் செலவு பிடிக்கும். அவை எப்போதும் பேரபாயம் சுமப்பன. பெரு நிறுவனங்களே நீரை விரயம் செய்வதோடு பாழ்படுத்துகின்றன. பாரம்பரிய குளம், குட்டை, ஏரி, கயம், ஆறு, காடு போன்ற நீர் நிலைகளை பாதி மீட்டாலே நீர்த் தேவைக்குப் போதும். சிறப்பான நீர் மேலாண்மைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையெனில் சிறு தேக்கங்கள் கட்டலாம்.
இத்தகைய புற விளைவுகளால் அகத்திலும் பெரு மாற்றங்கள் விளைகின்றன. அவை பொருளாதார பாதிப்பை மட்டுமின்றி மனப் பதற்றத்தையும் கொடுக்கின்றன. இத்தகைய பாரிய கட்டுமானங்கள் அளவற்ற நுகர்வை வாழ்க்கை மதிப்பீடுகளாக வைக்கின்றன. அதுவே மகிழ்ச்சி என்று நம்ப வற்புறுத்தப்படுகிறது. இக்கதைகள் ஒன்றில், மேம்பாலம் கட்டப்படுவதால் அடியில் சிக்கிக்கொள்ளும் ஒருவன் மிகுந்த தனிமையுறுகிறான். அதனால் துளி மறுப்பைக் காட்டுகிறான். தேவையில்லாமல் அணை கட்டப்படுவதை சந்தேகிக்க ஒருவன் நவீன படைப்புத் திறனை கைக்கொள்கிறான். அதன் வழியாகக் காலம் சிறந்த படிப்பினையை தரும் என்று நம்புகிறான். நாலு வழிகள் உருவாவதை மறுதலிக்க விவசாயி சாலை நடுவில் நிலக்கடலையை விதைக்கிறார். அவரால் பெரிய விளைச்சலை பெற்றதாக கற்பனை செய்ய முடிகிறது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலையில் இயந்திரம் பழுதாகி நின்றால் பொருளிழப்பையும் மீறி தொழிலாளர்கள் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கற்பனையாக எழுதுதல் பெருந்திட்டங்களுக்கான ஓர் எதிர்ப்புதான்.
0
கேள்வி : உங்கள் கதைகளில் தீவிர அரசியல் பிரக்ஞை ஊடாடி வருவதை இரண்டு தொகுப்புகளுக்கும் வழங்கியுள்ள முன்னுரைகளில் எழுத்தாளர் தேவிபாரதியும் கவிஞர் சுகுமாரனும் தெரிவிக்கிறார்கள். இந்த அரசியல் திட்டமிட்டு வருவதா அல்லது இயல்பான ஒன்றா? இது எப்போது பிரச்சாரமாகிறது?
பதில் : அனைத்துப் பிரதிகளிலும் அரசியலிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு தொலைபேசிப் புத்தகத்தில் சாதாரண சிறிய எழுத்துகளுக்கு நடுவில் தடிமனாக, பல விநோத எண்களிருப்பதும் ஒருவகை மேலாதிக்கம். அப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போகலாம். இலக்கியப் பிரதிகளில் சொல்லவே வேண்டாம். அந்த அரசியல், பாகுபாட்டைக் கற்பிக்கும், சரித்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்யும், கருத்தை திணிக்கும் செயல்பாடு. அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக தொடர்ந்துகொண்டிருக்கும் முயற்சிகள். இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான உத்திகள். அவற்றை வெளிக்காட்டுவது, மறுப்பது, எதிர்ப்பதுதான் இலக்கிய அரசியல். அது புனைவு தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பொருளிலிருந்து தொடங்குகிறது. இடம், காலம், மொழி போன்றவை வழியாக செயல்படுகிறது. பாத்திரங்களுக்கு பெயர் வைப்பதிலும் அரசியல் அடங்கியிருக்கிறது. யார் பக்கம் நின்று பேசுகிறோம் என்பதில் வெளிப்படுகிறது. அதுதான் நம்மையறியாமல் இயங்கும் அரசியல் பிரக்ஞை. பிரதியின் அழகியலே அரசியலாகிறது. ஏற்கெனவேயுள்ள, ஆசுவாசப்படுத்தும், மேலெழுந்த ஜனரஞ்சகக் கூறுகளுக்கு மாற்றாக படிப்போரை தொந்தரவுபடுத்தும் விவரணைகளைக்கொண்டது. கவனிக்காமல்விட்ட சிற்சிறு எதிர்ப்புகளையும் தோல்விகளையும் பதிவு செய்வது. நியாயமற்றதானாலும் கீழுள்ளவர்களின் குரலை ஒலிப்பது. ஆனால் திட்டவட்டமான எந்த அரசியல் கருத்துகளையும் தீர்வுகளையும் முன் வைப்பதில்லை. அது கட்சி அரசியல் அல்ல. எப்போதும் ஆள்கிற அரசியலுக்கு எதிரான அரசியல். அதைத்தான் என் பிரியத்துக்குரிய சுகுமாரனும் தேவிபாரதியும் கண்டு கூறியிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு “புலி உலவும் தடம்” கதையில் வெளிப்படையாக அரசியலுள்ளது. மதப் பிரிவினை எண்ணங்கள் சிறிய மதங்களிடம் அவநம்பிக்கையை விதைத்திருக்கிறது. சிறுபான்மையினர் ஒரு நிச்சயமின்மையை உணர்கிறார்கள். அதனால் சிறு அசைவுகளாலும் சங்கடப்படுகிறார்கள். இவற்றை நடுநிலையாளர்கள் தணிக்க முயல்கிறார்கள்தான். இக்கதையில் காதர்பாட்சா அரையிருட்டில் புலியை அல்லது புலி போன்ற ஒன்றைக் காண்கிறான். சிவந்த கண்கள், நீண்ட வால். அவன் வாழும் தர்கா நகரவாசிகளிடம் மேலும் பீதி கவிகிறது. அவனுடன் பழகிய சிவபாலனுக்குள் புலி பற்றிய சந்தேகம் எழுகிறது. கடைசிவரையில், உண்மையில் புலி இருக்கிறதா, இல்லையா என யாருக்கும் தெரியாது. அந்த பயத்தை ஏற்றுக்கொள்வது அல்லது எதிர்ப்பது என்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் எல்லாமறிந்த ஆசிரிய நோக்கு ஒன்றும் வருவதில்லை. அந்த இரண்டு பாத்திரங்களின் பார்வையாக இருவித அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன. காதர் சொல்வது கதைக்குள் ஒரு மாற்றுக் கதையாடலாக உருக்கொள்கிறது. அது பலவாறாக விமரிசிக்கவும்படுகிறது. அந்த ஐயப்பாடுகளை கொள்வதுதான் அரசியல்.
முதல் தொகுப்பின் “அழிக்கவியலாத கறை” கதையில் ஒருவன் கீழ்சாதி. உயர் சாதிப் பெண்ணை காதலித்துக் கரம் பிடிக்கிறான். அவளாலும் அவளைச் சார்ந்தவர்களாலும் அவன் நுட்பமாக அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறான். அவர்களால் இதுகாறும் இழிவெனக் கருதப்பட்ட, அழுக்கை அகற்றும், மலம் அள்ளும் காரியங்களை வேண்டுமென்றே செய்கிறான். அதற்காக பெருமை கொள்கிறான். இது சாதி மேன்மைகளுக்கு எதிரான செயல்பாடுதான். இன்னும் தொகுப்பாக வராத “நான்கிலொரு பாகம்”கதை சாதிய உரிமைகளைப் பற்றி பேசுகிறது. இதிலும் தாழ்ந்த சாதிக்காரனுக்கும் உயர் சாதிப் பெண்ணுக்கும் காதல் மணம் நடந்திருக்கிறது. அவள் வயதாகியும் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறாள். அப்போது அவளுடைய தம்பியால் சொத்தில் உரிய பாகம் தரப்படுகிறது. இடையில் நீண்ட காலம் மௌனமாகக் கழிந்திருக்கிறது. இதில் உரிமை வழங்கப்படுகிறதுதானேத் தவிர அடையப்படுவதில்லை. இது போன்ற கதைகள் சாதி அரசியலின் இறுக்கத்தை நுண்மையாகக் காட்டுபவை.
புனைவுகளில் மொழி வழியாகத்தான் அரசியல் நுட்பமாயிருக்கிறது. அதில் ஒடுக்கப்பட்டவர் அல்லது, ஒடுக்கியவர் குரல் வெளிப்பட்டாலும் உட்பொதிந்த தன்மை யாருடையது என்பது நம்மையறியாது தெரிந்துவிடும், பிரதிக்கு நேர்மாறான விளைவு உண்டாகும். இதனால், ஆசிரியரால் விவரிக்கப்படுவதைத் தவிர்த்து கதைக்கு உள்ளிருக்கும் பாத்திரங்களின் பார்வையில் காட்ட முயலுகிறேன். மீண்டும் சொல்கிறேன்.இவையெல்லாம் திட்டமிட்டு இயற்றப்படுவதில்லை. ஒருவகை அநிச்சை செயல்தான். உங்கள் சார்பு உங்களை எழுத வைக்கும்.
0
கேள்வி: உங்கள் ஊரான வாணியம்பாடியில் தொடர்ச்சியாக நிறைய இலக்கியக் குழுக்களிருந்ததாக அறிகிறேன். நீங்களும் பங்கேற்றதாக எழுதியுள்ளீர்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருந்தன?
பதில் : எனக்கு வணிகவியல் பட்டப்படிப்பில் தமிழ்ப் பாடமில்லை. வாணியம்பாடி, இசுலாமியக் கல்லூரியில் அப்துல் ரகுமான், இக்பால், அப்துல் காதர் என தமிழ்ப் பேராசிரியர்களாயிருந்தார்கள். அவர்களை நாங்கள் ஏறக்குறைய தினமும் சென்று சந்திப்போம். கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை முறை ஒன்று உண்டு. தீவிர உருவகங்களாலும் முரண்களாலும் சந்தங்களாலும் உருவானது. உடனடி அரசியல் தன்மையும் கொண்டது. பலரால் சுவீகரிக்கப்பட்டு மேடைகளில் வெற்றிகரமாக உலா வந்தது. அப்போது இக்கவியரங்க வடிவத்தை திமுக சிறப்பாக பயன்படுத்தியது. இன்றும் எளிமைப்பட்ட கவியரங்கங்கள் அபூர்வமாகத் தொடர்கின்றன. அசட்டு நகைச்சுவைப் பொடியை கூடுதலாகத் தூவுகிறார்கள். நானும் ஒரு தொகுப்பு போடுமளவு மேடைக் கவியரங்களில் கவிதைகள் வாசித்திருக்கிறேன். பிறகு கிழித்தெறிந்துவிட்டேன். அவை உரத்த குரலிலும் பத்திகளை இரு முறை படிப்பதாகவும் அமைய வேண்டும். என் சற்று அடங்கிய தொனியால் ஓரிரு கைத்தட்டல் மட்டும் விழும். நவீன கவிதைப் பக்கம் சாய்ந்தால் மயான அமைதி நிலவும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
அதிர்ஷ்டவசமாக ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய்க்கு அன்னம், அகரம், க்ரியா புத்தகங்கள் கிடைத்தன. அந்தப் புதையலில் “அந்நியன்” புத்தகம் பளபளக்கும் மாணிக்கக் கல். அதன் மொழி சுவாரசியமும் புதிதுமானது. பற்றற்ற மெர்சோ படிப்பவனின் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கக் கூடியவன். தோன்றியபோதெல்லாம் விரும்பிப் படிப்பேன். (இப்போது அதற்கு நேர்மாறாக அதேயளவு வந்துள்ள நாவல் அரசியலுக்காக மட்டும் எழுதப்பட்டது.) பேராசிரியர் இக்பால் மலையாள இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர். “நாவுகள்” கையெழுத்துப் பத்திரிகையில் வைக்கம் முகமது பஷீர், வைசாகன் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். சச்சிதானந்தன், ழாக் பிரேவர் போன்றோர் கவிதைகளை “மனஒசை”, “அன்னம்” இதழில் மொழிபெயர்த்திருக்கிறார். “பூவன் பழம்” கதையை பிறகு வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் வாசித்தேன். இக்பாலின் மொழியில் பஷீரின் கசப்புகளைத் தேக்கிய புன்னகை மலர்கிறது. அதன் நாயகன் அப்துல்காதர் தன் கதையில் ஒரு தத்துவமிருப்பதாக வற்புறுத்தி சொல்கிறான். “பொறுக்கிகள், பிச்சைக்காரர்கள், திருடர்கள், பைத்தியக்காரர்கள், கவிஞர்களுடன் சேரக் கூடாது” என காதல் கணவனிடம் பீவி சொல்லியனுப்புகிறாள். என்ன ஒரு சுய கேலி! வைசாகனின் “கம்பளிப் பூச்சி” கதை முடிவில் வேலைக்காரப் பெண் தன் ரோமங்களற்ற முலையை சிறுவனின் வாயில் அவன் பயம் போக்க திணித்து விதிர்க்கிறாள். இக்பால் ஒவ்வொரு சொல்லாக என்னுள் மிகுந்த பாதிப்பை உண்டாக்கியவர். அவரை மானசீக குருவாக வரித்துள்ளேன்.
முன்னாள் மாணவர்கள் அடங்கிய “ஏதேன்” இலக்கிய அமைப்பை தமிழ்ப் பேராசிரியர்கள் உருவாக்கினார்கள். அதில் நாங்கள் தொடர்ந்து கவிதைகள் வாசித்தோம். வீதி நாடகங்களை நடத்தினோம். அப்துல்ரகுமான் ஏற்ற இறக்க கவியரங்க பாணியை கைவிட்டிருந்தார். அவருக்கு வால்ட் விட்மனையும் உருது கசல் பாடல்களையும் மிகப் பிடிக்கும். ஹைகூ கவிதைகளில் ஆழ்ந்த வாசிப்பிருந்தது. பாரதியார் அந்த வடிவத்தை தமிழில் “ஹொக்கூ” என்று முதலில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அப்துல்ரகுமானே தமிழில் பரவலாக்கியவர். அவரின் “பால்வீதி” தொகுப்பில் அவற்றை இறுகிய வடிவத்துடன் காணலாம். அத்தொகுப்பின் “மின்னல்” போன்ற கவிதைகளில் பிரமிளின் அடுக்கடுக்குப் படிமங்களின் வெளிப்படையான சாயலுண்டு. அவர் எப்போதாவது பிரமிளையும் அபியையும் முக்கியமாகக் குறிப்பிடுவார். மாதந்தோறும் நடக்கும் “ஏதேன்” கூட்டங்களில் அடிக்கடி ஹைகூ, கசல்களைப் பற்றி விரிவாகப் பேசுவார். அவற்றைக் கற்றறிந்து பலர் நிறைய ஹைகூ தொகுப்புகள் எழுதி வெளியிட்டார்கள். இப்போது ஹைகூக்கள் ஜனரஞ்சகமாகிவிட்டன. அப்துல்ரகுமான் அதிகம் ஹைகூக்கள் எழுதவில்லை. ஆனால் உள்ளார்ந்த ஜென் மனோபாவம் கொண்டிருந்தார். அவர் வயது கூடிய காலத்தில் சூஃபித் தன்மையுடன் உபதேசிக்கும் முறையில் கிட்டத்தட்ட வசன கவிதையிலான உரைநடைச் சித்திரங்களை வெகு ஜன இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.
நீண்ட இடைவெளி விழுந்தது. அதை நிரப்புவதுபோல் கவிஞர் ஸ்ரீநேசன் “நவீனர்” குழுவை உருவாக்கினார். அது இன்றுவரை உயிர்த்திருக்கிறது. அழகான மையமாக ஏலகிரி மலைச் சூழல் அமைந்தது. ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும் நண்பர்கள் கூடுவோம். பெரும் இலக்கிய ஆளுமைகளும் கலந்துகொள்வார்கள். சில்லிட்ட இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தில் கவிதைகளைப் பற்றி உத்வேகத்துடன் பேசியிருக்கிறோம். விடியலில் தணல்கள் சாம்பல் பூக்கும். மறுநாளும் கூட்டம் தொடரும். அனைவரும் கவிதைகளும் கட்டுரைகளும் வாசிக்க வேண்டும் என நேசன் விரும்புவார். என் கண்ணெதிரில் பழைய கவிதைகளும் புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் தற்கால கவிதைகளுமென நிறம் மாறியதைப் பார்த்திருக்கிறேன். இடையறாது கவிதை தன்னை புதுப்பித்தபடியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீநேசன் கவிதைகள் அவற்றுக்கு சாட்சியங்கள். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அவர் கவிதைகள் மாறிய வண்ணமுள்ளதை பார்க்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளிலும் அவருக்கு ஆழ்ந்த ஈர்ப்பிருந்தது. அவற்றை உள் வாங்கத் தவறவில்லை. வசனத்துக்கு மிக அருகாமையில் நெருங்கியவர் ஸ்ரீநேசன். ஆனால் கவித்துவத்தை சாதித்தார். நுண்ணிய பார்வையையே வளர்த்து பெரிதாக்கி முக்கியத்துவமாக்குவது. பழைய செவ்வியல் தன்மைகளும் படிந்த நவீனக்கவிதைகள் அவை. அவர் பித்துநிலைகொண்டு எழுதுவதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு புத்தாண்டிலும் கவிதை எழுதி வாசித்தார். அப்போது திடுக்கிடும்படியாக சூழல் மாறி அமைவதை கவனித்திருக்கிறேன். இப்போது அவரின் சில கவிதைகள் நுட்பமான சிறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சைகைளைபோலாகியிருக்கின்றன. நவீனர் கூடுகைகளில் ஏறக்குறைய அனைத்து கவிஞர்களின் கவிதைகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என்பதும் மிகையாகாது. புதிய அலை போல் மிகச் சிறந்த கவிதைகளையும் கதைகளையும் கட்டுரைகளையும் மொழி பெயர்ப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டது “புது எழுத்து” இதழ். (தமிழின் கடைசி சிறுபத்திரிகை என்பார் அதன் ஆசிரியர் எழுத்தாளர் தொல்லியலாளர் மனோன்மணி). அதில் பலர் எழுத விரும்பினார்கள். தங்கள் முதல் கவிதைத் தொகுப்புகளை விரும்பி வெளியிட்டார்கள். வாழ்க்கை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அது மறுவுயிர்ப்பு போல். அந்த இதழ் தொடர்ந்து எழுத எனக்கு இடம் தந்தது. எல்லா ஊர்களிலும் புது இலக்கிய அமைப்புகள் தோன்றியும் மறைந்தபடியும்தான் உள்ளன. அது தொடர்ந்த சமூக இயக்கம். இப்போது நீங்கள், நண்பர்கள் இணைந்து நடத்தும் “சொற்சுனை” அமைப்பு போல. அவற்றால் பலர் புறப்பட்டு மேலே வருகிறார்கள். ஒருபோதும் அழிவு கிடையாது.
சமீபத்தில் எங்கள் நண்பர் ராமலிங்கம் மறைந்தார். அவர் முப்பதாண்டு காலம் இடைவிடாது எழுதிய கவிதைகளை “நவீனர்” குழுவால் வெளியிட்டோம். சுமார் இருநூறு பக்கத் தொகுப்பு. நண்பர்கள் மனமுவந்து பொருளுதவி அளித்தார்கள். ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டு அவருடைய இளைய மகளின் திருமணத்தில் வழங்கினோம். என் மனைவியும் நண்பியும் சேர்ந்து விருந்தினர்களுக்கெல்லாம் அன்புடன் நூல்களை வினியோகித்தார்கள். படிக்கத் தெரியாதவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள்.ஒருவரும் மறுக்கவில்லை. கிடைக்காதவர்கள் தேடி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வாங்கிச் சென்றார்கள். அது அனைவரும் புத்தகங்களை விரும்புவதை நேரில் கண்ட தருணம். கவனமாகப் படிப்பது, புரிந்துகொள்வது இரண்டாம் பட்சம்.புத்தகத்தை உயர்ந்த பொருளாகவும் அலங்காரமாகவும் வீட்டில் வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் காற்றைப்போல், நீரைப்போல் இலவசமாகக் கிடைக்க நினைக்கிறார்கள்.
0
கேள்வி: இன்றைய இலக்கிய உலகம் எப்படியிருக்கிறது? முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் நிறைய எழுதப்படுகின்றன. புத்தக விற்பனையும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் வாசிப்பு குறைந்தாற் போலிருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: இப்போது வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டதாகவே தோன்றுகிறது. பொது வாசிப்பு குறைந்ததாகப்படுகிறது. அது கவலைக்குரியது. ஆனால் நிறைய புத்தகங்கள் எழுதவும் விற்கவும்படுகின்றன. மக்கள் தொகை பெருக்க விகிதத்துக்கேற்ப இல்லையென்றாலும் கூட முன்பைவிட கூடுதலாக புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. இதை எப்படி புரிந்துகொள்வது? புத்தகங்கள் வீட்டு வரவேற்பறையில் அலங்காரமாகக் கருதப்படுவது நல்ல அம்சமே. அது நுகர்வு சக்தி கூடியதின் விளைவாகவுமிருக்கலாம். கணினிகளிலும் கைபேசிகளிலும் கூட நூல்கள் வாசிக்கப்படுகின்றன. பெரும்பான்மையினர் காட்சி ஊடகங்களில் மூழ்கியிருக்கிறார்கள். காமத்தைக் காட்டிலும் அபாயகரமாக வன்முறை அதிகம் விற்கப்படுகிறது. பலர் கைபேசிகளில் தலை குனிந்திருக்கிறார்கள். அவர்கள் சிறு காணொலிகளில் மகிழ்ச்சி பெற முயலுகிறார்கள். எளிய காமம், சிரிப்பு போதுமானவையாயிருக்கின்றன. இவற்றைக் கடந்தும் புதியவர்கள் படிக்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் கூட. மறுபுறம் எப்போதும்போல் எழுத்தாளர்கள் நம்பிக்கையுடன் இயங்குகிறார்கள். இலக்கியமே தேசத்தின் பண்பாட்டை அமைப்பது. இங்கு எம்மொழியிலும் உயர்வாக வைக்கத்தக்க படைப்புகள் உருவாகின்றன. தரமான இலக்கியம் வணிக மயமாக வேண்டும். அது முறையாக விநியோகிக்கப்பட வேண்டும். அது பற்றிய பேச்சுகள் எழ வேண்டும். இவை ஓரளவு நடப்பதாக கருதுகிறேன். அரசாங்கமும் சற்று துணை நிற்கிறது.
கேள்வி: இப்போது எழுதுபவர்களையும் உங்களுக்குப் பிடித்தவர்களைக் குறித்தும் கூறுங்கள். அவர்களைப் பற்றிய சிறு பார்வைகளுடனவாவது தெரிவித்தால் நன்றாயிருக்கும்.
நான் இலக்கியப்பரப்பில் குறிப்பிடப்படுகின்றவற்றை படித்துவிட விரும்புகிறேன். அனைத்தையும் படிக்க இயலாது. அவற்றைக் குறித்த சில மனப் பதிவுகளையும் ஏற்படுத்திக்கொள்வது என் இயல்பு. அவை மாறியபடியும் வந்துள்ளன. வண்ணநிலவன் நவீனத்துவத்தின் உச்ச முகம். அவர் கதைகள், குறைவாக, ஆனால் ஒவ்வொரு அம்சங்களையும் தொடுவதால் நிறைய சாத்தியங்களைக் கொண்டவை. அவருடையதைப் போன்ற சீரிய சிறுகதை வடிவம் இப்போதும் தொடரக் கூடியது. மிகுந்த கற்பனையை ஊட்டுபவை வண்ணதாசன் எழுத்துகள். அவை அன்பை போதிக்கும் எல்லைக்கும் செல்பவை. தேவிபாரதியின் கதைகள், தலைப்புகளைப்போல் வசீகரமானவை. அவரின் தீவிர யதார்த்த, பின் நவீன எழுத்துகள், நாட்டார் தன்மையுடன் கூடிய செவ்வியலை நோக்கி நகர்கின்றன. தாழ்ச்சிகளை பெருமிதத்துடனும் கொந்தளிப்புகளை மறைத்தும் முன் வைக்கின்றன. சமயவேலின் சமீபத்திய கதை ஒன்று மாயாஜாலம். அதனாலேயே அவர் புதிய வகை கவிதை, கதைகளின் முன்னோடி. ஜீ.முருகன் கச்சித உருவுடன் உண்மையான மாய யதார்த்தத்தை கலந்து எழுதுபவர். அவரின் நுட்பமான பாலியல் கதைகள் முக்கியமானவை. என்.ஸ்ரீராம் எழுத்துகள் வட்டார வழக்குகளுடன் மண் வாசம் மிக்க அபூர்வமானவை. அவற்றில் மரம், செடி, கொடிகளின் இயல்புத் தன்மைகளுடன் மனிதர்களும் வெளிப்படுகிறார்கள். எஸ்.செந்தில்குமாரின் மொழி ரத்தமும் சீழுமுடன் மனதை அடியொற்றி செல்பவை. தீவிரமாக வித்தியாசமாக இயங்கும் படைப்பாளி. தஸ்தாவெஸ்கியைப்போல் ஆழ் யதார்த்தம் கொண்ட விரிவானவை கே.என்.செந்தில் கதைகள். பாத்திரங்களினூடே உள்ளார்ந்து தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறார்.
பா.திருச்செந்தாழை உருவக மொழியும் உள்ளடக்கமும் கொண்டவற்றைப் படைப்பவர். ஆதி இச்சைகளை லௌகீக உலகின் பின்புலத்தில் பொருத்தி நுணுக்கமாக காட்டுபவர். பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கதைகள் போர்ஹெஸைப் போன்ற அறிவார்த்த மொழி, கருவுடையவை. புதிய வகையானவை. அவற்றில் வரும் பல மேற்கோள்கள் அவருடைய விரிந்த வாசிப்பைக் காட்டுபவை, அதையே வாசகனிடமும் கோருபவை.கே.ஜே.அசோக்குமார் அடங்கிய தொனியில் படைப்பவர். ஒரு சொல் மிகைப்படாத கதைகளை வாசக இடைவெளிக்கு விடுபவர். கணினித் துறை உலகின் கட்டளை நிரல் போல் கச்சிதத் தன்மையோடு எழுதுபவர் கார்த்திக் பாலசுப்பிரமணியன். மின்னனு உலகின் நாசுக்கு மனம் வெளிப்படுபவை. ஜே.பி.சாணக்யா ஒட்டுமொத்தமாக வாழ்க்கையின் பெரும் நீரோட்டத்தைக் காண்பிக்க விழைபவர். அதேபோல் குமாரநந்தன் கதைகளும் அகன்ற ஓவியச் சீலையைக் கொண்டவை. இலக்கில்லாது அனைத்தையும் தீட்டிக் காட்டுபவை. சிவபிரசாத்தின் சில கதைகள் வெளிப்படுத்தாத ஆனால் அறியக் கூடிய பிரச்சினைகளும் ஆழங்களுமுடையவை. பெண் மன அவசங்களை அதேமொழியில் திறம் பட தொடர்ந்து எழுதுபவர் லாவண்யா சுந்தர்ராஜன். அனோஜன் பாலகிருஷ்ணன் தேசப் பிரச்சினையை தனி மனித அவஸ்தைகளுடன் பிணைத்தவர். ஈழ வட்டார வழக்கு படிந்த தனி மொழி கொண்டவர்.
தன் தந்தையைப்போல் அஜிதன் நவீன செவ்வியல் தன்மை எழுத்துடையவர். அவை எப்போதும் இலட்சியவாதமும் அழகும் கொண்டவை. பேரியிற்கையின் சலனத்தை பின்னணியாக வைத்துக் காட்டுகையில் மேலும் விரிபவை. அதனால் வாசிப்பின்பம் கூடுகிறது. பலரிடமுள்ள அம்மொழி தன் பெரும் பாரம்பரிய செழுமையை மீட்டெடுக்க முயலுவதே அதன் சிறப்பு. ம.நவீன், லோகேஷ் ரகுராமன், சுஷீல்குமார் போன்றோரின் படித்த சில கதைகள் மாறுபட்ட களத்துடன், சிறந்த மொழியுடன் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மயிலன் ஜி.சின்னப்பன் கதைகள் பெரும்பாலும் இதுவரை அதிகம் எழுதப்படாத உள, பொது மருத்துவத் துறையைப் பற்றி சிறந்த கலைச்சொற்களுடன் வெளிப்படுவை. சுரேஷ் பிரதீப் திறமையுடன் தீவிரமாக இயங்குபவர். கதைகள் நாவல்களுடன் தெளிவான உரைகளையும் படைக்கிறார். அதேபோல் விஷால்ராஜா, சிறந்த சிறுகதைகளுடன் ஆழமான விமரிசனங்களையும் எழுதிவருகிறார். பெரும்பாலோருக்கு சிறந்த மொழி வாய்த்திருப்பது முக்கியமானது. எல்லாவற்றுக்கும் மேலாக எம்.எஸ்., ஆர்.சிவகுமார், ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் ஈர்க்கின்றன. வேறு உலகத்தையும் புதிய மொழி நடையையும் அறிமுகம் செய்கின்றன. அவர்களுடையது கற்க வேண்டிய தேர்ந்த மொழியென்பேன்.
இலக்கியத்துக்கு இணைய உலகம் மிகப் பெரும் வெளியை அளித்திருக்கிறது. பெரும் நதி பொங்கிப் பிரவகிப்பது போன்றிருக்கிறது. ஒருவகையில் இலக்கியத்துக்கு மட்டுமல்லாது வெகுஜன எழுத்துக்கான இடத்தையும் மின்னிதழ்களே ஜனநாயகத்துடன் வழங்குகின்றன. அதில் கட்டுப்படுத்தும் அதிகாரமும் சுரண்டலும் வணிகமும் இல்லை. அதேபோல் முறையான தேர்வுக்கும் செம்மைப்படுத்தலுக்கும் அதிக வாய்ப்பில்லை. அங்கு அனுபவமும் குறைவு. எனவே சிலருடைய மொழி மிகவும் பிழையுடனும் தட்டையாயும் படைப்பூக்கமின்றியும் அமைவது அவரவர் தவறு. பெருங் கூட்டத்தில் ஒருவர் தன்னை சுயமாகவே மேம்படுத்திக்கொண்டாக வேண்டும்.
0
கேள்வி : இலக்கியத்தின் முக்கியமான அங்கம் மொழியாக்கம். உங்களின் மொழிபெயர்ப்பு வாசிப்பனுபவங்களைப் பற்றி சொல்லுங்கள்.
பதில் : யாருக்கும் தாய் மொழி இலக்கியங்களைக் காட்டிலும் அந்நிய மொழியிலுள்ளவற்றைப் படிப்பதில் கூடுதல் ஆர்வம் என்று நினைக்கிறேன். காரணம், அவற்றினுடைய வித்தியாச மொழி, மாறுபட்ட கலாச்சாரம், வேறு நிலம். அது ஓர் அறிதல் முறை. ஆரம்ப காலத்திலிருந்து நம் மொழி இலக்கியங்கள் பிற மொழிகளால் பெரும் பாதிப்படைந்திருக்கிறது. பல முதல் படைப்புகள், தழுவல்கள் என்று கூறப்படுகிறது. எந்த மொழியைவிடவும் தமிழில்தான் மொழிபெயர்ப்புகள் அதிகம் எனவும்படுகிறது. நமக்கு அண்டையிலுள்ள மலையாளம் முதல், ரஷ்ய, ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்ற மொழிகளிலிருந்து வரை நேரடியாக மொழிபெயர்க்கபட்டுள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு, போன்ற முன்னோடிகள் தேடி மொழிபெயர்த்துள்ளார்கள். அன்றைய வார இதழ்களிலும், அவற்றின் காமச் சுவைக் கருதி போலும், மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளியாகும். இன்னும் பசுமையாயுள்ளது “கோண்டிகி,” ஒரு நிஜமான கடல் சாகசப் பயண நூல். ச.து.சு.யோகியார் மொழிபெயர்த்த “கடலும் கிழவனும்” நாவல் மகத்தான இலட்சியக் கனவை விதைப்பது. பனிப் புயலில் சிக்கியவன் இனி தப்ப முடியாதெனத் தெரிந்து கௌரவத்தோடு மரணத்தை எதிர்கொள்ளும் புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு சிறுகதையின் தாக்கம் மறக்காதது. அதேபோல் “வெண்ணிற இரவுகள்” கதையில் தஸ்தாயெவ்ஸ்கி தானே நாஸ்தென்காவைக் காதலிப்பதைபோல் அவளின் இரு காதலையும் தவிப்புடன் எழுதுகிறார். அவரின் “அசடன்” (மொழிபெயர்ப்பு : எம்.ஏ.சுசீலா) நாவல்களெல்லாம் சிறு காலத்தில் நடப்பன. எல்லையற்ற மனதின் தூய ஆழத்தை தொடுவன. பாத்திரங்களின் உணர்ச்சிகர, நீண்ட உரையாடல்கள் மிகவும் கிளர்ச்சியானவை. “சூதாடி,” “நிலவறைக் குறிப்புகள்” நமக்கு வலிப்பு வருமளவு சுயவதை போன்று புண்ணைக் கிளறி ஆற்றுவது. டால்ஸ்டாயின் “இவான் இலியிச்சின் மரணம்” இறப்பின் நேரத்தில் வாழ்க்கை நாடகத்தை முழுதாக விவரிக்கிறது. (மொழிபெயர்ப்பு : நா.தர்மராஜன்) அவரின் “அன்னா கரீனா” நாவல், பைபிளின் வாசகத்துடன், இரயில் நிலையத்தில் பேரழகி அன்னாவின் காதலுடன் தொடங்கி அங்கேயே மாய்த்துக்கொள்வதாக முடிவது மனதை உருக்கும். அவள் விரான்ஸ்கியையும் கரீனையும் ஒன்றாக சந்தித்து ஐன்னி வேகத்தில் பிதற்றுவது மாபெரும் இலக்கியத் தருணம். “போரும் அமைதியும்” ஒரு புனித நூலைப் போல் படித்தபடியிருக்கலாம். டால்ஸ்டாய் எழுத்திலும் கனவான். ஆண்டன் செகாவின் “புத்திரசோகம்” ஐயனோவ், நகரில் எண்ணற்ற மனிதர்களுடனில்லாமல் தன் மகன் இறந்த சோகத்தை குதிரையிடம்தான் தெரிவிக்க முடிகிறது. (அதை ஒரு பள்ளிக்காக மாணவர்கள் நடிக்க நாடமாக்கினேன்). க.நா.சுப்ரமணியத்தின் இயல்பான மொழியில் நிறைய கதைகள் நினைவில் நீங்காதவை. ஜார்ஜ் ஆர்வெல்லின் “1984”, “விலங்குப் பண்ணை” வரலாற்றை முழுவதுமாக புனைந்து காட்டுபவை. “விருந்தாளி” கதை சகஜ மொழியில் மனித விடுதலையை ஆக முக்கியமாக தெரிவிப்பது. ரஷ்ய இலக்கியங்கள் அத்தேசத்தைப் போலவே பன்முகப்பட்டவை. உதாரணம், அந்திரேய் பிளத்தோனவ் எழுதிய “இந்த வெறிபிடித்த அழகிய உலகிலே” சிறுகதையை எத்தனை முறையும் படிக்கலாம். அதில் கற்பனையில் நிஜத்தைக் காண்பது எழுதப்படுகிறது. அம்மண்ணின் பேரிலக்கியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன போல் தோன்றுகிறது.
“லத்தீன் அமெரிக்க சிறுகதைள்”, “மற்ற மரணம்” சிறுகதை மொழி பெயர்ப்புகள் மிகப் பெரும் திருப்பு முனை. ஆக்டோவியோ பாஸின் “நீலப் பூச்செண்டு” எத்திராஜ் அகிலன் மொழி பெயர்ப்பு கதையில் நீலமான கண்களை சிநேகிதிக்கு பரிசளிப்பதாக வருவது அசாதரணமானது. அதில்தான் மார்க்வெஸின் “செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம்” (ஆர்.சிவகுமார்), “சாவு நிலையானது காதலுக்கும் அப்பால்” (பிரம்மராஜன்) போன்ற புகழ்பெற்ற கதைகளுள்ளன. அதே கதை ச.ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் வேறு அனுபவம் நல்கியது. பிரம்மராஜனின் சிறந்த மொழிபெயர்ப்பில் போர்ஹெஸின் கதைகள், கவிதைகள், இடாலோ கால்வினோ கதைகள் இலக்கியச் சூழலில் பெரும் தாக்கத்தை விளைவித்தவை. சா.தேவதாஸ் மிக முக்கியமான ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளார். ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த காஃப்காவின் “உருமாற்றம்” குறுநாவல், வாசிப்பில் ஒரு பெருந்திருப்பம். அவரின் “மௌனப்பனி ரகசியப்பனி” மொழிபெயர்ப்பில் இளமை பனிப் பருவம் மிக மென்மையாக சிறுவனை நோக்கி நகர்வது போலிருக்கும். மற்ற மரணம் தொகுப்பில் நிறைய சிறுகதைகளிருந்தாலும் ”தாயகத்து அலன்டெலோன்” கதையை பல முறை படித்திருக்கிறேன். அதிலுள்ள விஜயகுமார் என்னும் பெயர் இன்னும் நினைவு கூரப்படுவது. கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பில் “எருது” சிறுகதை, போராட்டமான சந்தையின் மாமிச வாடையை அழுத்தமுடன் வீசும். அவர் மொழிபெயர்ப்பில் பல சிறந்த கதைகளிருந்தாலும் “வாய் நிறைய பறவைகள்” பலவாறாக விரிவது. சிறுமியின் வாய்க்குள் பறவையின் சிறகுகள் மெல்ல செல்வதெல்லாம் கற்பனை வீச்சின் மொழி. அவர் அனைத்து வார்த்தைகளையும் தமிழாக்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இளமையில் வேட்டை இலக்கியங்களைப் படித்திருந்தாலும் யுவன் சந்திரசேகரின் “எனது இந்தியா” (ஜிம் கார்ப்பெட்) வெளிநாட்டவரின் பார்வையில் வெளிப்படும் அக்கால இந்தியாவின் துல்லிய அழுத்தமான வரைபடம். “நள்ளிரவின் குழந்தைகள்”, “மகாராஜா,” பாவ்லோ கொய்லாவின் ”ரசவாதி”, டிடி.கோசாம்பியின் வரலாற்று நூல், நட்ஹாமசனின் “பசி” போன்றவை மறக்கவியலாத புத்தகங்கள். எழுத்தாளர் தேவிபாரதி தன் புகழ்பெற்ற “பிறகொரு இரவு” கதை ஞாபகமாக லூயிபிஷரின் ”காந்தி” நூலை பரிசளித்தார். வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த ழாக்பிரேவரின் கவிதைகள் தமிழில் பெரு மாற்றங்களை விளைவித்தவை. அதே போன்றது அவரின் “அந்நியன்.”
ஓர் இயக்கம்போல் நிறைய மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட “புது எழுத்து” இதழில் அசதா மொழி பெயர்த்த மார்க்வெஸின் “முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்” குறு நாவலின் கூரிய கத்தி போன்ற மொழி, ஒரு மைல்கல். மார்க்வெஸின் மொழிக் கொண்டாட்டத்தை அசலாகக் காட்டுவது. எழுத்தாளர் கோணங்கி வெளியிட்ட பல மொழிபெயர்ப்பு இதழ்கள் காலத்தால் அழியாதவை. மார்க்வெஸ், தஸ்தயெவெஸ்கி சிறப்பு மலர்கள் மறக்கவொன்னாதவை. மார்க்வெஸின் “களங்கமற்ற எரிந்திராவும் கிராதிகிப் பாட்டியும்”, “கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை” போன்ற குறுநாவல்கள் உண்டாக்கிய தாக்கம் பெரிது. அவை மிக வித்தியாச மொழியனுபம். மார்க்வெஸின் “தனிமையின் நூறாண்டுகள்” நாவலின் பிரம்மாண்டத்தை நேர்த்தியான மொழிபெயர்ப்பில் வழங்கியவர் கவிஞர் சுகுமாரன். “லயோலா என்ற பெரும் பாம்பின் கதை” போன்றவை மிகுந்த மொழி பெயர்ப்புத் திறன்கொண்டவை. சுகுமாரன் மொழிபெயர்த்த உண்ணி.ஆர். கதைகள் புதிய உலகைக் காட்டுபவை. எம்.எஸ். மொழிபெயர்ப்புகளின் தேர்வும் இயல்பும் நேர்த்தியானவை. ரேமண்ட் கார்வர், ஒரான் பாமுக், ஜான் பால்வில், அருந்ததிராய், பேர்லாகர்குவிஸ்ட் போன்ற இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளர்களை மொழிபெயர்த்தவர் ஜி.குப்புசாமி. அவரை இணை படைப்பாளர் எனலாம். விட்டேற்றி கார்வர் தனம் அற்புதமானது. (அவரிடம் டீடோட்டலாராயிருந்துகொண்டு கார்வரின் மதுக்களிப்பை எப்படி மொழிபெயர்க்கிறீர்கள் என்பேன்). அருந்ததிராயில் நிஜ சகோதரன் எஸ்தப்பனாகிவிடுவார். “உடைந்த குடை” தாக்ஸூல்ஸ்தாத் மௌனியைப்போல் மயக்கும் ஆழ்ந்த உள்முக மொழிடையது. மகத்தான, பன்முகமான இலக்கிய அனுபவம் பெறவும், சிறந்த மொழி நடையைக் கற்கவும் ஒருவர் மொழிபெயர்ப்புகளில் ஆழ்ந்திருக்கலாம்.
0
கேள்வி : உங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கருதுகிறீர்களா? இது வரை உங்களுக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை என்று தெரியும். அதற்கான காரணம் நீங்கள் இலக்கியக்குழுக்களுக்கு வெளியிலுள்ளதா? அல்லது நீங்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்று மற்றொரு குழுவினர் எண்ணுவதா? அல்லது தமிழ் சூழலுக்கே உரித்தான வழக்கமான அசட்டையா?
பதில் : இலக்கியக் குழுக்கள் மிக அவசியமானவை. சிலர் கூடி இயங்க மறைமுகமான ஒற்றுமை தேவை. அவை தோராயமான கருத்திசைவுகளின் அடிப்படையில் அமைகின்றன. இலக்கியவாதிகள் நிகழ்த்தும் சண்டைகள் தற்காலிகமானவை. அவர்கள் இயல்பாகவே உணர்வுபூர்வமானவர்கள். அதனால் சிறு கருத்து வேறுபாடுகளாலும் எழும் சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை. இலக்கியக்குழுக்களை சேர்ந்தவர்கள் அனைவரும் களத்தில் இறங்குகையில் போர் வெடிக்கிறது. விவாதங்களின் உச்சத்தில் சில தனிநபர் தாக்குதல்களும் கண்டனப் பிரயோகங்களும் நேர்கின்றன. அவை எந்தளவு இலக்கியத் தரத்துடன் நிகழ்வதென்பதே முக்கியம். மொழித்திறனும் தர்க்க வாதங்களும் கூடியிருந்தால் சுவாரசியப்படும். அதனாலேயே அவை கவனிக்கப்படுகின்றன. காலப்போக்கில் மோதல்கள் மறக்கப்படுகின்றன. சம்மந்தப்பட்ட எழுத்தாளர்கள் சமரசமாகிறார்கள். அதற்கு ஏதாவது ஓர் எழுத்தாளர் இறங்கி வர வேண்டும். அதில் தவறேதுமில்லை. அந்தரங்கமான எண்ணங்கள், அபிப்ராய பேதங்கள் வெளிப்பட குழுச் சண்டைகள் அவசியமானவை. அவை ஆரோக்கியமான இலக்கிய இயக்கத்தின் வெளிப்பாடு.
இலக்கியக் குழுக்களில் சேர தொடர்ந்த ஈடுபாடு, நீடித்த தகவல் தொடர்பு, பொது நோக்கு போன்றவை தேவை. என்னிடம் அவை போதுமான அளவில்லை. சில பெரும் எழுத்தாளர்களின் ஆழ்ந்த நட்பை பெற்றிருக்கிறேன். அன்பாலும் எழுத்தாலும் ஈட்டியது. அதையும் முறையாகப் பேணாதது என் தவறு. ஆனால் இக்கட்டான தருணங்களில் அவர்களை நாடியிருக்கிறேன். அவர்களே பெரும் ஆறுதல்கள். எந்த மனநல மருத்துவரும் அளிக்க முடியாத ஆலோசணைகளை அடைகிறேன். அவர்களுடனான நீண்ட பேச்சுகள் சோர்வைப் போக்குவன. ஏனெனில் அவர்கள் மொழி விற்பன்னர்கள். தேர்ந்த பொருத்தமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள். கோணங்கி, நஞ்சுண்டன், ஜீ.முருகன், ஸ்ரீநேசன், சுரேஷ் போன்ற இலக்கியவாதிகளுடன் எனக்கு நீண்ட பயணங்கள் வாய்த்திருக்கின்றன. அவை மறக்க முடியாத பேரனுபவங்கள். அவர்கள் வாயிலாக இயற்கை அழகான கோணத்தில் வெளிப்படுகிறது. சிறந்த நிலங்களையும் காட்சிகளையும் தேட வைப்பவர்கள். அவர்கள் உணவுச் சுவையையும் அறிந்தவர்கள். அதிலும் கண்டராதித்தன், அய்யப்ப மாதவன் போன்ற முழு கவிஞர்களுடனான நட்பு அலாதியானது. அனைத்தையும் களையச் செய்வது. கவிகளைப் போல் கொண்டாட்டமானவர்கள் உலகில் யாருமில்லை. முழுச் சுதந்திரத்தை அடையத் துடிப்பவர்கள். பெரும் நவரச வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள்.
எனக்கு ஒரு விருதும் கிடைக்காததில் வருத்தமில்லை. என்னைக் காட்டிலும் தகுதியுடையோர் பலர் அமைதியாயிருக்கிறார்கள். அதற்கு கவனிக்கப்படாமை, தகுதியின்மை, திறனின்மை காரணங்களாயிருக்கக் கூடும். எந்த விருதுகளும் திறந்த புத்தகமல்ல. அவற்றுக்கான எல்லைகள், விதிகள் உண்டு. அதை வழங்குபவர்களுக்கான விருப்பு வெறுப்புகளுமுண்டு. அடியாழத்தில் என் மனம் விருதுகளை வேண்டியிருக்கவில்லை. மரியாதைகளையும் கௌரவங்களையும் கடக்கவே விழைகிறது. அதேபோல் எந்தப் பட்டியலிலும் என் பெயரிருந்ததில்லை. விவரப் பட்டியல், விருப்பப் பட்டியல் என எவற்றிலும் நான் குறிப்பிடப்பட்டதில்லை. என் சில புத்தகங்களும் கதைகளும் வெளியாகும் காலச்சுவடு இதழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளிலும் என் பெயரிருக்காது. அதற்கு பத்திரிகை காரணமாகாதுதான். ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களே பொறுப்பு. நேர்ப்பேச்சுகளிலும் என் பெயர் மறந்தும் வந்துவிடாது. இதற்காக நான் பெரிதாக கவலைப்படவில்லை. இது கேள்விக்கான பதில். ஆனால் சில முகநூல் குறிப்புகள், கைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மிகுந்த ஊக்கமளித்திருக்கின்றன. ஓர் எழுத்தாளர் வெளிநாட்டிலிருந்து “இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சில கதைகளை நீங்கள் எழுதியுள்ளீர்கள்” என்று தெரிவிக்கும் வார்த்தைகள் வாழ்க்கை முழுவதுக்கும் உத்வேகமளிக்கக் கூடியது. அதற்குப் பாத்திரமாக விளங்க வைப்பது. சிலரின் உணர்ச்சிகரமான கண்ணீர் தூய்மையானது. முகநூல் இவ்விதத்தில் மிகவும் பயனுள்ளது. அறிமுகமற்ற சிலர் எங்கிருந்தோ தீவிரமான ஆழமான வாசிப்பனுபவங்களை எழுதுகிறார்கள். பலர் விருப்புக் குறிகளையும் காதல் குறியீடுகளையும் இடுவது அற்புதமானது. அது சமயங்களில் இறந்தோர் பட்டியலில் என் பெயரில்லாததை சரிபார்த்துக்கொள்வதைப் போன்றது.
0
கேள்வி : உங்கள் குடும்பம், உறவு, நட்பு வட்டம் குறித்துக் கூறுங்கள். அவர்கள் உங்கள் இலக்கியச் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறார்கள்.
பதில்: எந்த செயலிலும் முழுமையாக ஈடுபடுபவர்களை தடுத்துவிடமுடியாது. ஒருவர் கூக்குரல்களுக்கு நடுவிலும் எழுத முடியும். நம் சமூகம் என்றும் கலை இலக்கியங்களின் மேல் உள்ளுக்குள் மதிப்புடையது. அவற்றுக்கு நேரடிப் பயனில்லாததால் வெளிப்படையாக அசட்டையானதும்தான். அதற்கு முக்கிய அலகான குடும்பமும் விலக்கில்லை. ஆனால் கல்விச் சூழலில் வழிகாட்டலும் ஊக்கமும் தொடர்ந்து கிடைக்கிறது. பொருளாதார இலாபக் கணக்குகளில்லையெனத் தெரிந்தும் குடும்ப அங்கத்தினர்கள் கலை இலக்கிய செயல்பாடுகளை வன்மையாக ஒடுக்குவதில்லை என நம்ப விரும்புகிறேன். அவற்றுக்கு மறைமுகமாகவாவது ஆதரவளிப்பார்கள். இளமையில் இரவு பகலென்று கையெழுத்துப் பத்திரிகையை எழுதியும் ஓவியங்கள் வரைந்தும் கிடக்கையில் பின்னாலிருந்து கண்ட என் அப்பாவின் மீசையற்ற உதடுகளில் பெருமிதம் துளி ஒட்டியிருந்தது என்றே நினைக்கிறேன். அவர் கடுமையாக தடுத்திருந்தால் மேற்கொண்டு ஒரு வரி எழுதியிருக்க முடியாது. அம்மா தின்பண்டம் தருகையில் அவர் கண்களில் சிறு பாராட்டைக் கண்டிருக்கிறேன். அக்காக்கள் சற்று வியந்துதான் வேற்று கிரகவாசியைப்போல் என்னை எட்டிப் பார்த்தார்கள். என் அண்ணன் தன் முதல் ஊதியத்தில் சென்னை நடைபாதையில் கிடைத்த கவிதைத் தொகுப்பும் கடிகாரமுள்ள புதிய பேனாவும் பரிசளித்தார்.
என் மனைவி சசிகலா, மாத இதழ் ரமணிசந்திரனின் முன்னாள் வாசகி. பல பள்ளிகளுக்கு செல்லும் கௌரவ யோகா ஆசிரியை. ஒரு சன்மானம் இல்லாமலும் கதை வெளியான பத்திரிகை வந்தால் அவர் பெருமையுறுவார். கதையை சற்று ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு மிக வேகமாகப் படிப்பார். என்னைப் புகழவில்லையென்றாலும் வருவோர் போவோரிடம் பத்திரிகையைக் காட்டுவார். சிலருக்கு கைபேசியில் தகவலளிப்பார். இன்னும் கூட அச்சில் பெயர் வருவது பலருக்கு வியப்பானதுதான். என் மகனுக்கு தனக்கு பிரமிள் என்று பெருங்கவியின் பெயர் சூட்டியதில் கௌரவம். வகுப்பறையிலும் அலுவலகத்திலும் கடல் கடந்தும் அந்த நூதனப் பெயர் கம்பீரமாக ஒலிக்கிறது. அவன் பிறக்கையில் மனைவி உடல் நலிவுற்று மருத்துவமனை படுக்கையில் நினைவில்லாமல் கிடந்தார். நான் வராந்தாவில் காத்திருந்தபடி பிரமிளின் “கானகமெங்கும் அலைகிறது கரிய பறவையின் குரல்” என்ற வரியைப் படித்தபோது அப்பெயரை வைக்கத் தோன்றியது. அதை ஒரு பெரும் எழுத்தாளர் ஒப்பினார். பிரமிளின் சீடர் ஒருவர் ஆட்சேபித்தார். எண் கணித சோதிடப்படி பிரமிளின் எண்ணற்ற பெயர்களில் ஒன்றை இணைக்கச் சொன்னார். மகன் எப்போதாவது என் கதை வந்த படத்தை தோழர்களுக்கு வாட்ஸப்பில் காட்டியதாக கூறியிருக்கிறான். அவர்கள் ஆமோதித்திருக்கிறார்கள்.
நான் எழுதுவதை முதலில் இனிய இல்ல நண்பர்களிடம் முன்வைக்க விரும்புகிறேன். அவர்கள் படிக்காவிட்டாலும் வாழ்த்தத் தயங்குவதில்லை. மனம் விட்டு சிரித்துப் பாராட்டுவார்கள். நாங்கள் அவ்வப்போது சேர்ந்துண்போம். அப்போது பிடி அன்பை கூடுதலாக அளிப்பார்கள். அது மாபெரும் உந்து சக்தி. அவர்களிடம் அரட்டைகளின் நடுவில் வலிந்து நிறையக் கதைகளைக் கேட்பேன். அவை சுவாரசியமும் வித்தியாசமுமானவை. வேறு சில நண்பர்கள் கடுமையாக குறை கூறுவார்கள். புறம் பேசுதலுமுண்டு. அதைக் கடக்க மனவுளைச்சலுடன் நீண்ட நேரம் அடித்துத் திருத்தி எழுதிக்கொண்டிருப்பேன். எப்போதும் சமூகத்தில் எழுதுவதற்கு மரியாதையுண்டுதான். அது கடவுள் அருள் என்றும் கூறுவார்கள். இருப்பினும் உறவினர்களிடம் கூட மிகத் தேவைப்பட்டாலொழிய எழுத்தாளன் என்று தெரிவிக்க மாட்டேன். அவர்கள் முதலில் நம்பாமல் பார்ப்பார்கள். அல்லது தலையை திருப்பிக்கொள்வார்கள். பிறகு, தங்களுக்கு நேரமின்மையால் எழுதவியலவில்லை என ஆற்றாமை ஆவியை வெளிவிடுவார்கள். எழுத்தை சுலபத்தில் அடைய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். பெரும் ஈடுபாடும் ஆர்வமும் உழைப்பும் தியாகமும் கோருவது என்பதையும் உணர்வார்கள். அவற்றில் சில துளிகளை சிந்தியதால்தான் எனக்கும் இலக்கியம் கிடைத்திருக்கிறது. அதுவே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தருகிறது.
உயர்ந்த எழுத்துக்கு அழிவில்லை. இன்னும் வழி நடத்துவதைபோல் திருக்குறள்கள் பேருந்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருமண அழைப்பிதழ்களின் ஆரம்பத்திலும் மந்திரத்தைப் போல் தவறாது இடம் பெறுகின்றன. மேடைப் பேச்சாளர்களுக்கு குறள்களை மேற்கோள் காட்டினால்தான் திருப்தி. அவை தொல்படிமமாகவும் மாறிவிட்டன. நவீன யுகத்தில் எழுத்துக்கு கூடுதல் தேவையுண்டு. பொருளியல் வாழ்க்கை மிகவும் நெருக்குவதால் அனைவரும் வேர்களைத் தேடவும் சற்று இளைப்பாறவும் வேண்டியிருக்கிறது. தங்கள் மொழியை கூர்மையாக்கும் பொருளுள்ளதாக்கும் தேவையுமிருக்கிறது. சுய பார்வையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். கலை இலக்கியங்கள்தான் சமூகத்தின் ஆழ் மனம். அதுவே நம் ஆசாபாசங்களை வெளிப்படுத்துகிறது. நியாயங்களையும் நிர்ணயிக்கிறது.
0
சிவபிரசாத்
பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கிய சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ என்கிற புத்தகத்தின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.