“அவளுடைய உடல் ஒரு பெண்ணாய் விழிப்படைந்திருந்தது.
மனமற்ற ஒரு பெண்ணின் உடம்பாய் இருந்தாள் அவள்”
–யசுனாரி கவாபட்டா
சிறுவயதில் எங்கள் வீட்டீல் உயர்தர தாளில் அச்சிடப்பட்ட காலண்டர் ஒன்று எனது தந்தையின் அறையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஜப்பான் நாட்டின் பிரபலமான ஃபூஜி எரிமலை, பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்கள், ஆஷ்ஸி ஏரி, நரா பார்க், தோட்டத்தின் நடுவே வீற்றிருக்கும் தேநீர் விடுதி என மிக அழகான இயற்கை காட்சிகள் கொண்ட காலண்டர் அது.காலண்டர் எனச் சொல்வது ஒரு வசதிக்காகதான் . ஏனெனில் அதில் ஆண்டோ, மாதமோ, தேதிகளோ குறிப்பிட்டு இருக்காது . ஒவ்வொரு தாளிலும் ஒரு படம் . அதன்கீழ் அப்படத்தைப் பற்றிய சிறு விவரமும், ஜப்பானில் அச்சிடப்பட்டது என்ற குறிப்பும் ஆங்கிலத்தில் இருக்கும். அவ்வளவுதான். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இக்காட்சிகளை காண்டபோது மனம் குதுகலித்தது. கிமோனே உடையணிந்து குடைபிடித்து செல்லும் பெண்கள், குட்டி குட்டி தேநீர் கோப்பைகள். அழகான புத்த சிலைகள், புத்த பேராலாயங்களின் தூய்மையும், அமைதியும் , கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தரும் முக்கியத்துவம் என எல்லாம் சேர்ந்து சிறுவயது தோழனைப் போல் மனதிற்கு நெருக்கமாகிட்டது ஜப்பான். . இந்நாட்டைப்பற்றி எந்த ஒரு விஷயம் என்றாலும் உடனே கவனிக்க ஆரம்பித்து விடுவது வழக்கமானது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் செயல்களைப்பற்றி படித்த பின்னரும் அந்நாட்டின் மீதான அபிப்பிராயம் மாறவே இல்லை.தீவிரமான வாசிப்பு பழக்கம் ஆரம்பித்த பின் எல்லோரையும் போல் ஜப்பானிய கவிதைகளில் முதலில் வாசித்தது ஹைக்கூ கவிதைகள். முதலில் ஈர்த்தது அதன் எளிமை தான். தொடர் வாசிப்பிற்குப் பின் ஹைக்கூவின் உண்மையான அர்த்தமும் , எளிய வடிவின் பின்னிருந்த ஆழமும் பிடிபட ஆரம்பித்தது. சிற்றிதழ்கள் மூலம் அந்நாட்டின் இலக்கிய பாரம்பரியம், முக்கிய இலக்கிய படைப்பாளிகள், திரைப்பட மேதைகள் , இசை வல்லுநர்கள் ,கெய்ஷா பெண்கள், ஜென் தத்துவ ஞானிகள் என தெரிய ஆரம்பித்தது. அப்படி முதலில் தெரிய வந்த பெயர்தான் யசுனாரி கவாபட்டா.
ஜப்பானின் முக்கிய நகரமான ஒசாகவில் 1899ல் பிறந்த யசுனாரி கவாபட்டா, நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய படைப்பாளி. 1927ல் அவரது முதல் சிறுகதை IZU வின் நடனப் பெண்மணி வெளிவந்தது. 1937 ல் வெளியான பனி தேசம் அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அவரது நோபல் பரிசு விவரணையில் குறிப்பிட்டுள்ள மூன்று நாவல்களில் முதன்மையானது ஆயிரம் கொக்குகள். மற்ற இரண்டு பனி தேசம் மற்றும் பழைய தலைநகரம். அவரது மிகவும் புகழ் பெற்ற நூலான தூங்கும் அழகிகள் இல்லம் அதன் கருப் பொருளுக்காக கடும் விமர்சனத்தை எதிர் கொண்ட நூல். அதேசமயம் அதன் கலை அழகியலுக்காக பெரிதும் போற்றப்பட்ட நூலும் அதுவே. ஜப்பானிய இலக்கியத்தில் அந்நூலிற்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
கொக்குகள் நீண்ட ஆயுள், நல் அதிர்ஷ்டத்தின் ஜப்பானிய சின்னமாகும். பேப்பரைக் கொண்டு ஓரிகமி கலைவடிவில் ஆயிரம் கொக்குகளை செய்தால் தான் நினைக்கும் காரியம் நிறைவேறும் என்பது ஜப்பானியர்களின் ஆழமான நம்பிக்கை.
ஆயிரம் கொக்குகள் நாவல் ஜப்பானியர்களின் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் முக்கிய அங்கமான தேநீர் விருந்து நிகழ்வினை பின்புலமாகக் கொண்டு விவரிக்கப்படும் அழகான கதை.
நான்கு முக்கிய கதாப்பாத்திரங்கள் கிகுஜி, ஃபுமிகோ, சிககோ, திருமதி.ஒடா. துணைப்பாத்திரங்களாக கிகுஜியின் காலமான தந்தை மற்றும் இனமுராஸ். கிகுஜியின் வாயிலாக சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. தேநீர் விருந்தில் துவங்கி பிரிதொரு தேநீர் விருந்தில் நிறைவடைகிறது.
கிகுஜியின் தந்தையால் காதலிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட சிககோ கிகுஜியின் தந்தையின் நினைவாக ஓர் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறாள்.அந்த விருந்தில் கிகுஜிக்கு திருமணபந்தத்தை ஏற்படுத்த ஒரு பெண்ணை அறிமுகம் செய்வதே முக்கிய நோக்கம். பெற்றோரை இழந்த அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியும் கூட அதில் ஒன்று.
அந்த தேநீர் விருந்திற்குச் செல்லும் வழியில் தன் முன்னே ஓரிகமி கலைவடிவில் செய்யப்பட்ட ஆயிரம் கொக்குகளை கொண்ட ஃபுரோஷிகியை கைகுட்டைப் போல் நளினமாக எடுத்துச் செல்லும் அழகான பெண்ணைக் காண்கிறான். அப்பெண்ணின் அமைதியான அழகு அவனை வசியமாக்கிவிடுகிறது. ஓர் ஆழகான புகைப்படம் போல் மனதில் படிந்து விடுகிறாள்.
தேநீர் விருந்து நடத்துவதற்கு என்பதற்காகவே சிறந்த கலைவடிவம் கொண்ட மூங்கிலால் செய்யப்பட்ட அறை பராமரிக்கப்பட்டு வருவது ஜப்பானிய பண்பாட்டின் ஒரு அங்கம்.
அவ்விருந்தில் சிககோ அப்பெண்ணை கிகுஜிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அப்பெண் இனமுராஸ் நல்ல குடும்ப பின்னணி கொண்டவள் என்றும் கிகுஜிக்கு மிகவும் பொருத்தமானவள் எனவும் கூறுகிறாள். அதேநீர் விருந்திற்கு அழையா விருந்தாளியாக திருமதி. ஒடாவும் அவரது மகள் ஃபுமிகோவும் பங்கு கொள்ள வருகிறார்கள்.
அவன் தந்தையின் மறைந்த நண்பர் ஒடாவின் மனைவிதான் திருமதி ஒடா. தந்தையின் நெருங்கிய காதலியும் கூட. திருமதி. ஒடாவின் தொடர்பிற்குப் பின்தான் சிககோவை கிகுஜியின் தந்தை அவளை கைவிடுகிறார். அதனால் திருமதி. ஒடாவின் மீது சிககோவிற்கு வன்மமும்,பொறாமையும் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் கொண்டிருப்பவள். ஆனால் அதை நேரில் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டாள்.
எதிர்பாராத சந்திப்பு திட்டமிடப்படாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. திருமதி. ஒடா தேநீர் விருந்தில் கிகுஜியுடன் உரையாடுவதும் ஃபுமிகோவை முன்னிலைப் படுத்துவதையும் விரும்புவதில்லை. அதனால் இனமுராஸ் கிகுஜிக்கு இடையே காதல் உணர்வு, திருமண பந்தம் ஏற்படுவது தடைபடும் என அஞ்சுகிறாள். எனவே விருந்து முழுவதும் அந்நிகழ்வே இனமுராஸுக்கும் கிகுஜிக்கும் இடையே உறவை மேம்படுத்தவே என்பதையும், அதில் திருமதி. ஒடா தலையீடு செய்யக் கூடாது என்பதையும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறாள்.
விருந்து முடிந்து திரும்புகையில் தேநீர் விடுதி வாயிலில் திருமதி. ஒடா கிகுஜிக்காக காத்திருந்து அவன் வந்தவுடன் உரையாடியபடியே செல்கிறார். திருமதி. ஒடா கிகுஜியிடம் அவனது தந்தையை காண்கிறார். உணர்வுகளால் சூழப்பட்ட அந்த உரையாடல் ஒரு கட்டத்தில் அவ்விருவருக்கிடையேயான அந்தரங்கமான உணர்ச்சி மிக்க உரையாடலாக மாறுகிறது. விடுதிக்கு செல்லும் அவர்களுக்கிடையே அந்தரங்க உறவும் நிகழ்கிறது. கிகுஜிக்கும் திருமதி.ஒடாவிற்கும் அந்த அனுபவம் மறக்க முடியாததாகிறது.
இதையறிந்து கொள்ளும் ஃபுமிகோ தன் தாயை எச்சரிக்கிறார். வீட்டைவிட்டு செல்லாதவாறு தடை செய்கிறார். மீண்டும் அவ்விருவரும் சந்திக்கா வண்ணம் மிக கவனமாக இருக்கிறார். எனினும் ஒரு மழைக்கால மதியப் பொழுதில் தன் மகளுக்கு தெரியாமல் கிகுஜியின் வீட்டிற்கு வருகிறார் திருமதி. ஒடா.
மழை நீராலும் கண்ணீராலும் நனைந்திருக்கும் முகத்தையும், பிரிவின் ஏக்கத்தால் உருகுலைந்து போன திருமதி. ஒடாவின் உடலையும் கண்டு துணுக்குற்று போகிறான் கிகுஜி. அவன் தந்தைமேல் அவனுக்கிருந்த வெறுப்பும், பலவீனமான மன அமைப்பும் அவனை அவளை நோக்கி நகர்த்துகிறது. அது ஒரு பொருந்தா காதல். தன் மகளுக்கு கணவனாக வர வேண்டியவனிடம் தான் கொண்ட உறவை எண்ணி குற்ற உணர்வு கொள்ளும் திருமதி. ஒடா அவனிடம் மன்னிப்பு கோரவே விரும்புகிறாள். ஆனால் மீள் உணர்ச்சிகளும், காதலும் அவர்களிடையே மீண்டும் ஓர் அந்தரங்க உறவையே நிகழ்த்துகிறது.
உணர்வின் கொந்தளிப்பில் வீடு திரும்பும் திருமதி. ஒடா அன்றிரவே மரணமுறுகிறாள். அவளது இறப்பு இயற்கையானதா? கிகுஜியுடனான அவளது உறவில் அல்லல்படும், வேதனையில், சுயபச்சாபத்தில் உழலும் குற்ற உணர்ச்சி கொண்ட அவளது மனம் சுயமரணத்தை நோக்கி அவளை நகர்த்தியிருக்குமா? என்பது புரியாத ஒன்று.
திருமதி. ஒடாவின் மறைவிற்குப்பின் ஃபுமிகோவை சந்திக்க அவளது இல்லத்திற்கு செல்லும் கிகுஜியிடம் தன் தாயை மன்னித்துவிடுமாறு மன்றாடுகிறாள் ஃபுமிகோ. அதற்கு கிகுஜி..
”என்ன சொல்கிறாய். நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதற்கான சரியான வார்த்தைகளை தேடுகிறேன். ஆனால் இயலவில்லை. உன்னுடன் இருக்கவே வெட்கப்படுகிறேன்” என அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது கண்ணீருடன் தன் தாய் பயன்படுத்திய பழமைவாய்ந்த தேநீர் கிண்ணத்தை அளிக்கிறாள் ஃபுமிகோ. அதில் திருமதி. ஒடாவின் உதட்டுச்சாயம் அழிக்க இயலாமல் பதிந்துள்ளது. அக்கிண்ணம் கிகுஜியின் தந்தையால் திரு. ஒடாவிற்கு வழங்கப்பட்டு அவரிடமிருந்து திருமதி. ஒடாவிற்கு வழங்கப்பட்டு இருக்கலாம். அதில் திருமதி. ஒடாவினையே காண்கிறான் கிகுஜி.
கிகுஜிக்கு ஃபுமிகோவிடம் காதலில்லை. அவன் மனம் முழுவதும் புகைப்படமாக இனமுராஸே உள்ளாள். அவள் அணிந்திருந்த உடை, அவள் சுமந்து சென்ற ஆயிரம் கொக்குகள் கொண்ட ஃபுரோஷிகி அவன் கண்களிலிருந்து அகல்வதில்லை. ஆனால் திருமதி.ஒடாவின் மறைவும், அதற்குப்பின்னான ஃபுமிகோவுடனான சந்திப்பும் அவனுள் பெரும் மாற்றத்தை நிகழ்த்துகிறது. இனமுராஸை மணமுடிக்க கட்டாயப்படுத்தும் சிககோவிடம் தன் மறுப்பை தெரிவித்து விடுகிறான்.
தேநீர் கோப்பையை பார்க்கும் தோறும் கடும் உளைச்சாலாலும் தீராத குழப்பத்திலும் சிக்கித் தவிக்கும் கிகுஜி வெளியூரில் இருக்கும் நண்பன் வீட்டுக்கு சென்று தங்குகிறான்.
சிலமாதங்கள் கழித்து ஊர் திரும்பும் கிகுஜியிடம் இனமுராஸிற்கும், ஃபுமிகோவிற்கும் திருமணமாகிவிட்டதாக கூறுகிறார் சிககோ. அது அவனுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக ஃபுமிகோவின் திருமணம்.
சிககோ கிகுஜியின் தந்தையின் 5 ஆம் ஆண்டு நினைவுநாள் வருவதால் தேநீர் விருந்து அறையை சுத்தம் செய்ய வேண்டும் என்கிறாள். கிகுஜிக்கு அதில் விருப்பமில்லை. அவன் அங்கிருக்கும் பொருட்களை விற்றுவிடவே விரும்புகிறான்.
ஓர் நாள் மதியப் பொழுதில் எதிர்பாராவிதமாக ஃபுமிகோவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வருகிறது. அவனை சந்திக்க விரும்புவதாக கூறுகிறாள். அவனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் தேநீர் அறையில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அங்கு விரைகிறான். சிககோ அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது எனக் கூறியது பொய் என்பது அறிகிறான். அதன்பின் தொடரும் அவர்களது சந்திப்புகள் அவர்களுக்கிடையே ஒரு இணைப்பை உருவாக்குகிறது. சிககோவின் பழிவங்கலையும் மீறி அன்பு துளிர்க்கிறது.
ஃபுமிகோ தான் முன்பு அளித்த தேநீர் கோப்பை உண்மையானதல்ல எனவே அதை தூக்கி எறிந்திடச் சொல்கிறாள். அவன் மறுக்கையில் அது தூய்மையானது அல்ல. தூய்மையான மாசுமறுவற்ற ஒன்றையே அவனுக்கு அளிக்க விரும்புவதாக கூறுகிறாள். தாயின் நினைவை துடைத்தெறியவே விரும்புகிறாள் என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறாள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதைச் செய்வதைவிட உங்கள் இதயம் விரும்புவதைப் பின்பற்றுவது மரியாதைக்குரியது என்ற உணர்வு அவர்களுக்கிடையே மேலோங்குகிறது.
அவன் தன் தந்தையின் பெட்டியிலிருந்து அவர் பயன்படுத்திய தேநீர் கிண்ணத்தை எடுத்து திருமதி. ஒடாவின் தேநீர் கோப்பை அருகே வைக்கிறான். அக்கோப்பைகள் ஆண் பெண்உருவமாக வெளிப்படுகிறது.
இறுதியாக அதில் ஒருமுறை தேநீர் அருந்த விரும்பும் ஃபுமிகோ தேநீர் தயாரிக்க தொடங்குகிறாள். அன்றிரவு அவனுடன் தன்னை பகிர்ந்து கொள்கிறாள். காலை எழுந்து தோட்டத்திற்கு செல்லும் கிகுஜி அங்கு திருமதி. ஒடாவின் கோப்பை உடைக்கப்பட்டு இருப்பதை காண்கிறான். கண்ணீருடன் அந்த கோப்பையின் சில்லுகளை பத்திரப்படுத்துகிறான். இரு தினங்களுக்குப்பின் ஃபுமிகோவை தொடர்பு கொள்ள முயல, தங்கியிருந்த விடுதியிலிருந்து அவள் வெளியேறி விட்டதை அறிகிறான். எங்கே சென்றிருப்பாள்? தன் தாயைப் போல் எங்கே செல்லவேண்டும் எனும் திசை தெரியாமல் சுயமரணத்தை நோக்கி சென்றிருப்பாளா? என்ற கேள்வியுடன் நிறைவடைகிறது நாவல்.
இரண்டு தேநீர் கோப்பைகளை மையமாகக் கொண்ட உருவகம், உணர்ச்சிக் கலவையும் கொண்ட நாவல். உளவியல் ரீதியாக மிகவும் சிக்கலமான கதைக்களம். கிகுஜி தனது பலவீனமான உணர்வுகளாலும் இரண்டு பெண்களின் சுயமோதல்கிடையேயும் இயக்கப்படுகிறான்.அவனது உள் மனமோதல், குற்ற உணர்வு, வளர்ந்து வரும் அன்பு ஒவ்வொன்றும் குறியீடுகள் மற்றும் மறைக்கப்பட்ட அர்த்தங்களால் சுட்டி காண்பிக்கப்படுகிறது.
கதையில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிக்கலானவை. முடிவிலாத அன்பும் அழகும் கொண்டவர்கள். உண்மையான உணர்வுகளும் குறைபாடுகளும் கொண்ட இரத்தமும் சதையுமான மனிதர்கள். அதன் சரியான உதாரணம் சிககோ மற்றும் திருமதி.ஒடா. சிககோ பல ஆண்டுகளாக சுமந்துவரும் பொறாமை மற்றும் கிகுஜியின் விவகாரங்களில் தலையிடுவதும், திருமதி. ஒடா மற்றும் ஃபுமிகோவின் வாழ்வில் அமைதியை அழித்து தன்னை பயன்படுத்தி தூக்கி எறிந்திட்ட ஆண் மகனின் வாழ்க்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொறாமையும் கொண்டவளாக இருக்கிறாள்
அதேசமயம் திருமதி. ஒடாவால், கிகுஜி தன் மறைந்த காதலனின் மகன் என்றறிந்தும் அவன்மேலான காதலை உதறமுடியவில்லை. தன் மகளுக்கு அவன் மேல் பிரியமுள்ளது என்பதும் அவளுக்குத் தெரியும். கிகுஜியின் நினைவால் மகளின் கண்டிப்பையைம் மீறி அவனை சந்திக்க செல்கிறாள். இளம் காதலர்கள் சந்திக்க இயலாமல் துயர் கொண்டு துடிப்பது போல் உள்ளது அவளது நிலை. அவள் அவனுடைய தாய் இல்லை என்றாலும் அவர்களுக்கிடையேயான உறவு ஓடிபஸ் உறவு எனலாம். கிகுஜி அவளை விரும்பும் விதத்தில், திருமதி. ஒடா கிகுஜியை விரும்பும் விதத்தில் இதனை அறியலாம்.
சிககோ ,ஃபுமிகோ மனங்களுக்கிடையேயான வேறுபாட்டை “Rats were scurrying about in the hollow celling.A peach tree was in bloom near the veranda”என்ற வரிகள் அழகாக வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு காட்சியின் விளக்கமும், உரைநடையின் குறை ந்தபட்ச விவரமும் துல்லியமும், பருவங்கள், வானிலை மற்றும் பூக்களின் மூலம் சூழலின் தன்மை உணர்த்தப்படுவதும், கவிதையென விரியும்தன்மை கொண்டதாக நாவல் இருப்பது கவாபட்டாவின் தனித்தன்மை.
நாவலை முடிந்தபின் நம்முன் நிற்கும் கேள்வி திருமதி. ஒடா மற்றும் ஃபுமிகோவை கொன்றது அன்பா? குற்ற உணர்ச்சியா?
கவாபட்டாவின் முக்கியமான படைப்பு ’தூங்கும் அழகிகள் இல்லம்’. பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுமான இந்நாவல் இலக்கியப் பொக்கிஷம். நாவலின் தலைப்பே அந்தாவல் எந்த மையத்தைப் பற்றிச் சுழல்கிறது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறது.
67 வயதான எகுச்சி அவரது நண்பர் கிகாவிடமிருந்து அழகான தூய்மையான இளம் பெண்களுடன் இரவைக் கழிக்க வயதான ஆண்கள் பணம் செலுத்தி செல்லும் ரகசிய விடுதி பற்றி கேள்விப்படுகிறார். முதியவரான எகுச்சி பலவீனமானவர், பாலுறவில் இயலாமை கொண்டவர். ஆனால் இன்னும் தன் ஆண்மையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறவர். அதனால் தன் மனச் சோர்வை தனித்துக் கொள்ள நண்பர் கிகா கூறும் விடுதிக்கு செல்கிறார்.
விடுதியின் காப்பாளாரான 40 வயதுடைய பெண் அவரை வரவேற்கிறார். விடுதியின் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அவருக்கு எடுத்துரைக்கிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள், தங்கியுள்ள விருந்தினர்கள், அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அழகிகளின் பெயர்களையோ, விவரங்களையோ தெரிந்துக் கொள்ள முயற்சிக்க கூடாது. முக்கியமாக நிர்வாணமாக அருகில் உறங்கும் அழகிகளுடன் உடலுறவு கொள்ள முயலக் கூடாது. விடுதியின் கண்ணியத்தையையும், அமைதியையும் காக்க வேண்டும் என விரிவாக எடுத்துரைக்கிறார்.
விடுதியின் மாடியறைக்கு எகுச்சியை அழைத்துச் செல்கிறார். அங்கு உடைகள் ஏதுமற்ற ஓர் அழகி அமைதியான சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். காப்பாளர் உங்களுக்கான பெண் இவர்தான் எனக் கூறி அறையின் சாவியை அவரிடம் அளிக்கிறார். மேலும் அவர் காலையில் புறப்பட்டுச் செல்லும் வரை அப்பெண் விழித்தெழ மாட்டாள் அதற்கேற்ப அப்பெண்ணிற்கு உறக்க மருந்து அளிக்கப்பட்டிருக்கிறது என உறுதியளிக்கிறாள்.
எகுச்சி தன் உடைகளை களைந்து அப்பெண்ணின் அருகே படுக்கிறார். மெல்ல மென்மையாக அப்பெண்ணின் மார்பகங்களை, உடலை வருடிய வண்ணம் ஸ்பரிஷத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார். அப்பெண்ணின் உடலிருந்து வரும் மணம் அவர் கடந்த காலத்தில் சுகித்த பெண்களைப்பற்றிய நினைவுகளையும், குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய எண்ணங்களையும் தூண்டி விடுகிறது. அந்த நினைவுகளுடன் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்.
அதன்பின் அங்கு செல்வது தொடர்கதையாகிறது. ஒவ்வொரு முறையும் புதுப்புது பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்களுக்கு உள்ளாகிறார். ஒருமுறை விடுதிக்கு செல்கையில் விருந்தினர்களில் ஒருவர் இறந்து விட்டதை அறியும் எகுச்சி தன் மனதில் “இறப்பதற்கு மிகவும் விரும்பத்தக்கதாக அவ்விடம் இருக்காதா
என்ற கேள்வியையும், வாழ்வின் இறுதியாண்டுகளில் இரண்டு இளம் பெண்களுக்கு இடையே தூக்கத்தில் இறப்பது ஓர் ஆணின் இறுதி விருப்பமாக இருக்கக் கூடாதா? என்ற கேள்வியையும் மீண்டும் மீண்டும் எதிர் கொள்கிறார்.
இளம்பெண்களுக்கு உறக்க மருந்து கொடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என உணரும் எகுச்சி. அவரும் பிற முதியவர்களும் விடுதிக்கு செல்லும்போது அனுபவிக்கும் மன நிறைவு ”இந்த உலகத்தின் மகிழ்ச்சி அல்ல” என்பதை புரிந்துக் கொள்கிறார். “உறங்கும் அழகான பெண்னைப் பார்த்து தன் எல்லா பாதுகாப்புகளையும் உதறிவிட்ட இவள் ஒரு பொம்மையா அல்லது தியாகியா?” என்று கேள்விக்குள் மூழ்கும் எகுச்சி, தூங்கும் அழகிக்கும் ஒரு சடலத்திற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் அவளது ரத்தம் சூடாக இருப்பதும் அவள் சுவாசித்துக் கொண்டு இருப்பது மட்டுமே என அவளின் துயரநிலைக்காக வருந்துகிறார்.
அவரின் தொடர் வருகை, விடுதியின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் விதத்திற்காக ஓரிரவு இரு அழகிகளுக்கிடையே உறங்கும் வாய்ப்புகிட்டுகிறது. உறக்கத்திற்கு இடையில் விழிப்புதட்டுகிறது. அப்போது அருகே உறங்கும் பெண்களில் ஒருத்தி இறந்து கிடப்பதை காண்கிறார். உடன் விடுதி காப்பாளரான பெண்ணை அழைக்கிறார். காப்பாளர் எவ்வித பதட்டமுமின்றி எகுச்சியிடம் கவலைப்பட வேண்டாம் நீங்கள் உறங்கச் செல்லுங்கள். இதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறி அறைக்கு திருப்பி அவரை அனுப்புகிறார். அங்கே ஒளிரும் அழகில் நிர்வாணமாக உறங்கும் அழகிய பெண்ணின் வெண்மேனி கிடப்பதை காண்கிறார்.
தூங்கும் அழகிகள் அழகான இளம் பெண்கள். ஆண்களின் சிற்றின்ப தாகத்தை உடல் அழகால் தணிக்கமட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் அழகு அதற்காகவே மதிக்கப்படுகிறது. விற்பனை பண்டமாகவே அவர்களது அழகு பார்க்கப்படுகிறது. எகுச்சி போன்ற ஆண்களுக்கு அருகே உறங்கும் விளையாட்டுப் பொம்மையாகவே கருதப்படுகிறார்கள். அவர்களின் வேலைத்தன்மை மிகவும் சிக்கலானது. விடுதியின் சிறிய அறைகளில் இருக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. வாடிக்கையாளர் எளிதில் அவர்களை கையாளும் வகையில் உறக்க மருந்து கொடுப்பதன் மூலம் தன்னை மறந்து உறங்கச் செய்யப்படுகிறார்கள். வாழ்வாதாரத்திற்காக தங்களின் முழுநேரத்தையும் விற்க வேண்டியிருப்பதால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு விடுகிறார்கள்.
நகரின் சில பணக்காரர்கள், முதியவர்கள் தங்கள் காமத்தை தணிக்கவும் தங்கள் ஆண்மையை உறுதிபடுத்தவும் வருபவர்களுக்கு தங்கள் உடலை அளிப்பவர்கள்.
இறப்பின் பின்னும் அவர்கள் உடலுக்கு எவ்வித மனிதநேயமும் காட்டப்படுவதில்லை. அழகிய பெண் இறந்தவுடன் காப்பாளர் தன் பொருள் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், ஓர் அழகிய பொருளின் இழப்பாக மட்டுமே கருதுகிறார்.
உறங்கும் அழகிகளுடான எகுச்சியின் உறவு மிகவும் தளர்ச்சியானது. தன் செயல்களுக்காக எவ்வித குற்ற உணர்வுக்கும் ஆட்படுவதில்லை. தன் மகளின் வயதைவிட சிறிய வயதுடைய பெண்ணுடன் உறங்கும் போதும் குற்ற உணர்ச்சி கொள்வதில்லை. ஒரு பெண்ணின் உடலிருந்து எழும் தாய்ப்பாலின் மணமும் அவரை பாதிப்பதில்லை. மாறாக இளம் பெண்களுடான அரவணைப்பு மனச்சோர்விற்கான ஆறுதல் என்றும், முடிவடையாத கனவுக்கான ஏக்கத்தையும், மீண்டும் வராத தொலைந்து போன நாட்களின் வருத்தத்தையும் சிந்தித்து சோகத்தில் மூழ்கும் முதியவர்களின் நிலை தனக்கு வரவில்லை எனவும் பெருமிதம் கொள்கிறவர். அவர் கொள்ளும் பெருமிதம் என்பது அவரது வயது, வலிமை அல்லது பாலுணர்வில் இல்லை. மாறாக ஒரு ஆணாக சலுகை பெற்றிருப்பதிலும், அழகிகளுக்கு பணம் செலவழிக்கும் திறனிலும் உள்ளது. அவர் பாலியல் செயல்பாடுகளுக்கு மிகவும் வயதானவராக இருந்தாலும் அவரது நடத்தை ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் மீதான ஆண்களின் அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது
முதலாளித்துவ சமூகத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களே பெண்களை சுரண்டுபவர்களக மாற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை விடுதி காப்பாளராக வரும் பெண்பாத்திரம் வெளிப்படுத்துகிறது. உறங்கும் அழகிகளின் சுதந்திரம், உணர்வுகள், உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், ஆணாதிக்கத்துக்காக பிற பெண்களை சுரண்டுபவராகவும், ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு ஆண்களுக்கு சேவை செய்ய அழகிகளை தயார்படுத்துவதன் மூலமும், பணியமர்த்தப்படுவதன் மூலமும் பெண் காப்பாளர் சில சலுகைகளை அனுபவிக்க முடிகிறது. விருந்தினர்கள் மேல் சிறிய அதிகாரத்தை செலுத்தவும் முடிகிறது. எந்தச் சூழலிலும் பெண்காப்பாளரின் மெய்யான மனநிலை வெளிப்படுவதில்லை. இரும்பு மனுஷியாகவே செயல்படுகிறார்.
ஓர் அழகிய பெண்ணின் இறப்பிற்குப் பின் எகுச்சிக்கும் பெண்காப்பாளருக்கும் இடையேயான உரையாடல் இதை உறுதிப்படுத்துகிறது.
“அவளுக்கு என்ன கொடுத்தாய்?அவளுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.?
”கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு எந்த பிரச்சனையும் செய்ய மாட்டோம். உங்கள் பெயரைச் சொல்லமாட்டோம். அவள் இறந்து விட்டாள்”.
”இல்லை என நினைக்கிறேன்”.
”தற்போது மணி என்ன?”
”நான்கு மணிக்கு மேலாகி விட்டது”.
இருட்டில் அவ்வழகியின் நிர்வாண உடலை தூக்க முயல்கையில்பெண்காப்பாளர் சற்றே தடுமாறினாள்.
”நான் உங்களுக்கு உதவுகிறேன்”
”தொந்திரவு செய்யாதே. உதவ மாடிப்படி அருகில் உதவியாளன் உள்ளான்.
அவள் கனமாக இருக்கிறாள். தயவுசெய்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உறங்கச் செல்லுங்கள். அங்கு உங்களுக்காக அந்த இன்னொரு பெண் இருக்கிறாள்.“
ஒரு சிறு உணர்வு வெளிப்பாடும் இல்லை. பெண் காப்பாளரைப் பொருத்தவரை அவ்வழகி ஒரு விற்பனைப் பொருள் மட்டுமே. எந்தவித மனித நேயத்திற்கும் அங்கு இடமில்லை. மாறாக பெண் காப்பாளர் எகுச்சிக்கான சேவையில் எவ்வித குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். விருந்தினர்களின் மகிழ்ச்சியே பிராதானம்.
யசுனாரி கவாபட்டாவின் படைப்புகள் முழுவதும் மைய இழையாக பெண்களின் அழகு, கடந்த காலத்திற்கான ஏக்கம், மாய மகிழ்ச்சிக்கான தேடல், காதலின் இழப்பு, மற்றும் மரணம் இருப்பதை அனுமானிக்க முடியும். சிறுசிறு நுணுக்கமான விவரணைகள், நதியைப்போல் வழுவிச் செல்லும் கவிதை நடை, புதிர்தன்மை கொண்ட வாக்கிய அமைப்புமூலம் சொல்லாமல் விட்ட விஷயங்களை, சமூக வாழ்வின் மீதான மதிப்பீடுகளை, தனிமனிதன் தன் அகமனதில் எதிர்க் கொள்ளும் நெருக்கடிகளை வாசக மனதில் உருக் கொள்ளச் செய்கிறார். ஆயிரம் கொக்குகள் நாவலில் கதை நடக்கும் காலத்தில் கிகுஜியின் தந்தை உயிருடன் இல்லை. ஆனால் அவரைப்பற்றிய நினைவுகள், எண்ணங்கள், சில அரிய தருணங்கள் மூலம் அவர் மீட்டெடுக்கப்படுகிறார் . கவாபட்டாவின் உயிருள்ள கதாபாத்திரங்களும் சரி, உயிரற்ற ஜாடிகளும் , தேநீர் கோப்பைகளும், கிமோனோ உடைகளும் சரி ஒன்றுக்கொன்று எண்ணங்களாலும் உணர்வுகளாலும் சூழப்பட்டவை. திருமதி. ஒடாவின் கோப்பை வெறும் ஜடமான கோப்பையை குறிப்பதல்ல. அது ஒரு வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் கிகுஜியின் தந்தை மற்றும் திருமதி. ஒடாவின் உணர்வுகள் நிரம்பியுள்ளது. அந்த உணர்வுகளை தவிர்த்து அதில் தேநீர் அருந்த இயலாது. தூங்கும் அழகிகள் இல்லத்திலும் இதைக் காணலாம். ஒரு ஜடப் பொருளைப் போல் கையாளப்படும் அழகிகளின் உணர்வுகள் எகுச்சியின் எண்ணங்கள் வழியாகவும், அவரது வாழ்வில் நிகழ்ந்த தருணங்களை அவர் நினைவு கொள்வதன் வழியாகவும் உயிருட்டப்படுகிறது .
தனது இலக்கிய பாணியை “உள்ளங்கையில் உள்ள கதைகள் “என கூறும் கவாபட்டா சிறிய சம்பவங்கள் தான் ஆனால் அதன் தோற்றத்தைவிட பெரிதாக நிற்பவை என்கிறார். கவாபாட்டாவின் சிறப்பியல்பு கதாபாத்திரங்களின் மீதான அவரது இறுக்கமான கட்டுப்பாடு.
துக்கம், ஏக்கம்,வருத்தம், நினைவேக்கத்தின் தன்மை ஆகியவற்றை தனித்துவமான ஒன்றுடன் உறுதியாக இணைப்பதன் மூலம், கதையை வாசிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட அதிக நேரம் மனதில் பிரமிக்கும் வகையில் நிலைத்து நிற்கும்படி உருவாக்குவதும், எதைச் சேர்க்க வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பதை சரியாக பயன்படுத்தும் விதமும் கதைகளின் இடைவெளியாக அவர் விட்டுச் செல்வதை வாசகன் தன் கற்பனை வழியே சென்றடைய வழிகாட்டுகின்றன. வாசித்து முடித்தபின் வாசகனை தன் சுய உணர்வை இழக்கச் செய்வதும்,சுய பரிசீலனைக்கு உட்படுத்துவதும் அவரது வெற்றியாகும்.
ஜப்பானிய இலக்கியம் பாலின அடையாளச் சிக்கல் பற்றி அதிகமும் உரையாடியிருக்கிறது. ஓரினச் சேர்க்கை பற்றிய யுகியோ மிஷிமாவின் “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்“ நாவல் முக்கியமான ஒன்று. மிஷிமா கவாபட்டாவின் நெருங்கிய நண்பர். மிஷிமாவின் தற்கொலை கவாபட்டாவை மனரீதியாக பெரிதும் பாதித்தது. அதிலிருந்து அவர் மீளவே இல்லை.
யசுனாரி கவாபட்டா சிறுவயதிலேயே பெற்றொரை இழந்தவர். தாய் அன்பின் இழப்பும், ஏக்கமும், அவரின் தனிப்பட்ட பாலியல் வாழ்க்கையும், அவரது இலக்கிய படைப்புகளில் முக்கிய பங்களிக்கிறது.
எகுச்சி தூங்கும் அழகிகள் இல்லத்திற்கு செல்வதும், திருமதி. ஒடா கிகுஜியை காண வருவதற்குமான ஒற்றுமையை கவனத்தில் கொண்டால் தூங்கும் அழகிகள் இல்லமும், ஆயிரம் கொக்குகள் நாவலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் தாக்கம் அதிகம் கொண்ட நாவல்கள் எனலாம்.
“ஒருவர் என்னதான் உலகிலிருந்து அந்நியப் பட்டிருப்பினும் தற்கொலை அறிவு விளக்கத்தின் வடிவமில்லை என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட கவாபட்டா தற்கொலை செய்துக் கொண்டு மாண்டது “மரணத்திற்கு மேலான கலை இல்லை, மடிவது வாழ்தல் என்றாகும்“ என்ற அவரின் பிரிதொரு கூற்றுக்கு நியாயம் செய்வதாகவே உள்ளது.
குறிப்பு: தூங்கும் அழகிகள் இல்லம் – லதா ராமகிருஷணன் மொழிபொயர்ப்பில் உன்னதம் வெளியீடாக வந்தது. வேறு மொழிபெயர்ப்பு உள்ளதா எனத் தெரியவில்லை.
ஆயிரம் கொக்குகள் – மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்- மிஷிமா. கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.