*
வரிசையாகவும், நேராகவும்,
வைக்கப் பட்டிருந்தது
சிலுவைகள் அனைத்தும்
ஆனால் என்ன
குறுக்காவும், நெடுக்காகவும்
அவர்கள்
ஏற்கனவே
வாழ்ந்து முடிந்திருந்தார்கள்…
*
உங்கள் உள்ளங்கைகளும்
ஒருநாள்
உலகமாக வேண்டுமெனில்
விடுவித்து விடுங்கள்
சிட்டுக் குருவிகளை
சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டக்
குருவிகள்
வாழ்நாள் முழுவதும்
பெருமையுடன் பேசப் போவது
தன்னைப் பற்றியல்ல
தான் பெற்ற சுதந்திர உலகத்தைப்
பற்றி தான்…
*
பலூனில் ஊதப் படுவது
வெறும் காற்றல்ல
குழந்தைகளின் கனவுகள்
*
*
உணவகத்தின் முன்பு நின்று
கொடியதைத்துக் கொண்டிருக்கும் பெரியவர்
பசியின் நிறம் தெரிகிறது
*
பேருந்து நிலையம் அருகில்
சுற்றுசூழல் பாதுகாக்க ஒற்றுமையாய்
சுவரில் சர்வ சமயக் கடவுள்கள்
*
காலையிலேயே எதைச்
சொல்ல வருகிறாய்?
மின் கம்பத்தின் உச்சியில்
மரக்கொத்திப் பறவை…
நீ குத்திக் காட்டுவதுக்
கொஞ்சம் புரிகிறது
உன் அலகால்
மீண்டும்
எங்கள் மனதைக்
கொத்தாதே
நாங்களும்
மரம் வளர்ப்போம்….
இரா. மதிராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத் தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .