நினைவில் தங்கிவிடும்

மனிதர்களைப் போல

சில இடங்கள்

சில வாசனைகள்

சில உணவுகள்

சில பொருட்கள்

சில வீடுகள்..

நம் நினைவை விட்டு அகல்வதேயில்லை…

ஞாபகங்களாய் தங்கி விடும் விடயங்களை

நாமும் கலையத்துணிவதில்லை.

இன்னும் மனதை விட்டகலாத

மறக்கவோ துறக்கவோ முடியாத

பால்யத்தின் வாசம் நிரம்பிய

கிராமத்து வீட்டையும் சேர்த்து…

இன்றையக் காலக்கட்டத்தில் எத்தனைப் பேருக்குச் சொந்த ஊரிலேயே வாழ்வதற்கு வாய்க்கிறது? படித்து பட்டம் வாங்கியவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் சொந்த ஊரில் பெற்றோர்களோடு வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.  கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் எப்போழுது வீட்டை துறப்போம்,  வெளியுலகத்தில் பறப்போம் என்ற மனநிலையில் தான் எல்லோருமே வேலை தேடுகின்றார்கள். அதிலும் பலர் சென்னை, பெங்களூர் என்ற இருப்பெரும் நகரங்களுக்கு மட்டும் தான் போக விரும்புவதும், விண்ணப்பிப்பதும். வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்கள் இடம்பெயர்ந்து விடுகிறார்கள். கிடைக்காதவர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்குமென உள்ளூரில் தங்கி விடுகிறார்கள். சிலருக்கு உள்ளூரில் இருக்க ஆசை இருந்தாலும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையப்பெறாமல் பணம் ஈட்டும் பொருட்டு வெளிநாடு, வெளியூர் என மனம் ஒன்றாமல் வாழ்கிறார்கள். மிக மிக சொற்பமானவர்கள் தான் காசு, பணம் பெரிதில்லை என மன நிம்மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மனம் போல சொந்த பூமியில் நிஜமாய் வாழ்கிறார்கள். ஆம் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள்.

சம்பாதிப்பதற்காகவும், வாழ்வில் தன்னை மேம்படுத்தி அடுத்தக் கட்டத்திற்கு நகல்வதற்காகவும், ஊரை விட்டு, உறவுகளை விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, குடும்பத்தைப் பிரிந்து வேற்றிடம் சென்று வாழப் பழகிக் கொள்கிறோம்.  நினைத்ததை வாங்கி சாப்பிடும் வசதி வாய்ப்பிருந்தாலும், பிசாவும்,பர்கரும், அறுசுவை ஹோட்டல் உணவென  சாப்பிடக் கிடைத்தாலும்  ஊருக்குச் சென்று அம்மா கையால் உண்ணும் ஒருக் கவள சோற்றுக்கு ஈடாகுமா? எங்குச் சென்றாலும் எங்கு வழ்ந்தாலும் ஊரின் நினைவுகள் வராமல் இருப்பதில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தொலைபேசியில் முகம் பார்த்து, பேசி மகிழ முடிந்தாலும் மண்ணில் கால் வைக்கும் இன்பம்  அதை அனுபவித்தால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும்.

செல்லும் இடங்களில் எல்லாம் சில உணவுவகைகளோ, சில பொருட்களோ, சில மனிதர்களோ, சில வாசனைகளோ ஊரின் எச்சமாய் நம் வாழ்க்கையை அலங்கரிக்க தவறுவதில்லை. எல்லோருக்குமே ஏதோ வகையில் ஊர் ஞாபகம் வந்தால் நினைவலைகள் நெஞ்சில் மோதத் துவங்கி விடும். மனைவி,மக்களைப் பிரிந்து நினைவுகளை மட்டும் பற்றிக்கொண்டு வெளிநாட்டில் வழியில்லாமல் இருப்போர் ஏராளம்.

***

ரஞ்சனிக்கும் அன்று அப்படித்தான் ஊர் ஞாபகம் வந்தது.  இருபத்தி மூன்று வயதில் சென்னைக்கு வேலைக்கு வந்து விடுதி ஒத்துவராதென அவளுடன் படித்த தோழியோடு தனியே வீடு எடுத்து வாழ்ந்து வந்தாள். வேண்டாம் என அம்மா சொல்லியும் கேட்காமல் எனக்கு என் கேரியர் முக்கியம் அம்மா என பிடிவாதமாய் சென்னையில் இருக்கிறாள். விடுமுறை என்றாலே ஊருக்கு பஸ்ஸா ட்ரெயினா எதில் டிக்கெட் கிடைக்குமென தேட ஆரம்பித்து விடுவாள். நெருக்கி அடித்து போவது பிடிக்காது. ட்ரெயின் என்றால் சாதரண பெட்டியில் போவதைத்தான் விரும்புவாள். அம்மா ஏசியில் புக் பண்ணிட்டு நிம்மதியா தூங்க்கிட்டு வரலாம் இல்ல என்பாள். இல்லம்மா இந்த கூபே தான் ஜனரஞ்சகமா நல்லா இருக்கும். யாரவது பேசிட்டே வருவாங்க  பொழுது போகும். அப்புறம் ஜன்னல் வழியா வேடிக்கைப் பார்த்துக்கிட்டு ஸ்டேசன்ல நிக்கும் போது அங்க காபி டீ விக்கறவங்கள வேடிக்கை பாத்துக்கிட்டு அந்த அந்த ஊர் ஸ்பெசல் பண்டம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருக்கும்மா என ரசித்துச் சொல்வாள். சமயங்களில் அவள் அறைத்தோழியோ, சென்னையிலே வேலைப்பார்க்கும் அவள் அண்ணனோ யாரேனும் உடன் வருவார்கள். கடம்பூர் போளியும், மணியாச்சியில் கிடைக்கும் பருப்பு வடையையும் அவள் தவறவிட்டதே இல்லை. சரியான சாப்பாடு ராமி அம்மா என்பான் அவள் அண்ணன். நீயும் தானேடா சாப்பிட்டே என்பாள் இவள். ஜன்னல் கிட்ட வரலனா கூட இறங்கிப் போய் வாங்க சொல்லி படுத்துவாம்மா என்பான் அவன். இவன் எத்தன டீ குடிச்சான் தெரியுமா என பதிலுக்கு பழிப்புக் காட்டுவாள் ரஞ்சனி. இப்படியாக ஊருக்கானப் பிராயாணம் கூட அவளுக்கு அதி சந்தோஷத்தைக் கொடுக்கும்.

அன்று அலுவக பஸ்ஸை விட்டு இறங்கியவள் காய் வாங்கி விட்டு போய்விடலாம் என சாலையைக் கடக்க எத்தனித்தாள். சாலையின் மறுபுரத்தில் சிறிய மேசையைப் போட்டு பளிச்சென்று காய்கள், கீரை வகைகள் என வைத்து ஒரு தம்பதியினர் விற்றுக் கொண்டு இருப்பார்கள்.  அந்தக் கடைக்குச் செல்ல சாலையை கடக்க இருக்கையில் குறுஞ்செய்தி வரும் ஓசைக்கேட்டு கைப்பையில் அலைப்பேசியை எடுக்க முயற்சித்தவாறே நடக்க ஒரு கை பிடித்து நிறுத்தியது.  சரியாக இருசக்கரவாகனம் வேகமாய் அவளைக் கடந்து சென்றது. ஒரு நிமிசம் என்ன ஆகிடப் பாத்துது பாத்தியாமா. ரோட்ல கவனமா நடக்க வேணாமா என்று அன்பொழுக பேசினாள் அந்த பாட்டி. திகைத்தவளுக்கு வெள்ளை சேலைக் கட்டிய வயதான அந்த பாட்டி அவள் அக்கறையான பேச்சு ரஞ்சனிக்கு தனது ஆச்சியை ஞாபகப்படுத்தியது. ரஞ்சனியின் ஆச்சியும் வெள்ளை சேலை தான் உடுத்துவாள். ஆச்சியை பற்றி யோசித்துக்கொண்டே காய்கறி வாங்கிவிட்டு  அப்படியே  ஊரை நினைத்தவளாய் வீட்டிற்குள் நுழைந்தாள். உடன் தங்கும் தோழி இன்னும் வந்திருக்கவில்லை. தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். தலை வலிப்பது போல இருந்தது. ஊர் நினைப்பில் கருப்பட்டி காபி போட்டு குடிக்கத் தோன்றியது. இப்படியாக ஊரைப் பற்றிய ஞாபகங்களும் ஊருக்குப் போகும் ஆசையும்  மேலெழும்பியது. 

ரஞ்சனியின் ஊர் திம்மராஜபுரம் – முன்னாடி காலத்தில் திம்மைராஜா என்ற ராஜா ஆண்ட ஊர். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் கிராமத்தின் முழு அமைப்போடு அமைந்த  ஊர்.  அமைப்பென்றால் அரசர் காலத்தில் உள்ள அமைப்பு. கோவிலும் அரண்மனையும் பிரதானமாய் அமைந்திருக்கும். கோவிலைச் சுற்றி அக்கிரகாரமும், அதனை அடுத்து கோவிலுக்கு பூ கட்டுபவர்கள் குடியிருப்பும், பால் விற்பவர்கள், குடியானவர்கள் என அப்படியே தெருக்கள் நீளும். ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய், பூனை இவர்களோடு பாசமான ஆட்கள் மற்றும் ஆறு, வாய்க்கால், குளம்,வயல் என எல்லாம் இருந்த செழிப்பான ஊர்.

பள்ளி நாட்களில்  பட்டிக்காடாய் மனதிற்குப் பட்ட ஊர் இப்போழுது சொர்க்கமாய் தோன்றியது . சென்னையில் இருந்தாலும் ஊருக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எப்பொழுதும் மேலோங்கி இருந்தது. இன்னும் இரண்டு வாரங்கள் இருந்த போதும் அங்கு இருக்கப் போகும் இரண்டு நாட்களுக்காக மனம் ஏங்கியது. இயற்கையோடு பிணைந்த வாழ்க்கை அங்கே. சென்னையிலோ இயந்திரங்களோடு இயங்கும் அதிவேக வாழ்க்கை. ஊரில் தான் அர்த்தமுடைய வாழ்க்கை இருப்பதாய் தோன்றும் ரஞ்சனிக்கு. இருந்தாலும் முழுதாய் வேலையை விட்டுவிட்டு போக மனமில்லை. தனியாக வாழும் சுதந்திரம் அவளுக்குப் பிடித்திருந்தது.

நீண்ட பயணத்தின் முடிவில் வீட்டுக்குள் போனதுமே அப்படி ஒரு நிம்மதி வரும் ரஞ்சனிக்கு. வேலைப்பளு, சென்னை வாழ்க்கை எல்லாமே தற்காலிக விடுமுறை எடுத்துக்கொண்டு மனதை விட்டு அகன்றுப் போகும். வீட்டு முன்வாசல் தூணில் சாய்ந்து புத்தகம் வாசிக்கையில் அந்த பொழுது அப்படியே நின்று விடாதா எனத் தோன்றும்.

காலையிலேயே ஆச்சி விறகடுப்பில் வெந்நீர் போட்டுக் கொடுப்பாள் குளிப்பதற்கு. குளியலில் பிரயாண அலுப்பு காணாமல் போகும். ஆச்சி போடும் கருப்பட்டி காபியும், இட்லியும் வெங்காய சட்னியும் ரசித்து, ருசித்து ஒரு பிடி பிடித்து விட்டு சாவகாசமாக ஆச்சியிடம் ஊர்க்கதைகள் பேசி அந்த தார்சாவில் எந்த விரிப்பும் இல்லாமல் அப்படியே கிடந்து தென்னைமரத்தை பார்த்துக்கொண்டும் , அதில் தாவும் அணிலையும் , குருவியையும் ரசித்துக்கொண்டும் .. என்னக் கவித்துவமான  வாழ்க்கை . ரஞ்சனிக்கு தன் வாழ்க்கையை அப்படியே வாழ ஆசையாக இருந்தது. அந்த இனிய பொழுதுகளை நினைத்தாலே மனம் முழுவதும் புதுவிதமான உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

 இப்படித்தான் ஒருநாள் திடீரென கருவாட்டு குழம்பு நியாபகம் வர அம்மாவுக்கு போன் செய்து “நல்ல கருவாடா வாங்கி வைம்மா”என்றாள்.

“ஊருக்கு கொண்டு போக வா ” என்ற அம்மாவின் கேள்விக்கு,

” இல்லம்மா அங்க வரும் போது சாப்பிடத்தான் “என்றாள். 

கொஞ்சம் வாங்கி தனியா வைக்கேன் இந்த வட்டம் கொண்டு போம்மா பொரிச்சாது சாப்டுகிடுவேல்லா எனறாள் அம்மா. அத போட்டு எங்கனமா எடுத்துட்டு வர இங்க..  என் கூட இருக்க புள்ள சைவம். பொறவு அக்கம் பக்கம் எல்லாம் கருவாட்டு வாசத்துக்கு   மூஞ்ச சுளிப்பாக. நாத்தமடிக்குன்னு ஆவலாதி சொல்லுவாக. இங்க எல்லாம் சமைக்க முடியாதுமா என்றாள்.

 “சரி சரி ஆச்சிட்ட சொல்லி வாங்கி வைக்கேன் ” என்றாள் அம்மா. 

ரஞ்சனிக்கு உடனே ஆச்சி வைக்கும் கருவாட்டுக்குழம்பின் வாசம் மனம் பூராவும் கமழ்ந்தது. ஆச்சி வைக்கும் கருவாட்டுக் குழம்புக்கு ஈடாய் ஒரு சாப்பாடும் இல்லை எனத் தோன்றியது. கருவாட்டை பொரித்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி எட்டு வீட்டுக்கு மணக்கும். வெங்காயம் நிறைய வெட்டி போட்டு, கொஞ்சம் பச்ச மிளகாய் போட்டு, உப்பு கம்மியாகப் போட்டு, ( கருவாட்டில் உப்பு  இருக்குமே)  கருவாட்டையும் போட்டு வதக்கி பழைய சாதத்துக்கு வைத்து சாப்பிட்டால்… எப்படி இருக்கும்!  நினைக்கும் போதே நாவூற அய்யோ ஊருக்குப் போக இன்னும் இத்தனை நாள் இருக்கா என்று சலிப்பாக இருந்தது.

ஆச்சி கருவாட்டை குழம்பாக வைத்தாள் என்றால் அதற்கென்று தனியாக மசாலா அரைப்பாள். வெங்காயம்,பூண்டு, தக்காளி,முருங்கை, கத்திரிக்கா எல்லாம் போட்டு, மிளகு , சீரகம், கொத்தமல்லி , மிளகாய் வத்தல் வறுத்து அம்மியில் அரைத்து எண்ணெய் மிதக்க பார்க்கும் போதே உடனே சாப்பிடத் தோன்றும். உணவென்பது முதலில் கண்களுக்குப் பிடிக்க வேண்டும் இல்லையா?ஆச்சி சமைக்கும் சாப்பாடு அப்படித்தான் பார்த்ததும் சாப்பிடத் தோன்றும். ரஞ்சனிக்கு நினைத்ததை உண்ண முடியாமல் இப்படி ஏங்கும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று இருந்தது. பேசாமல் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு போய்விடலாமா என்று கூட தோன்றியது. சீ சீ என்ன அசிங்கம் கருவாட்டு கொழம்புக்காக  வேலையை யாராது உதறுவார்களா என்று தன்னையே கடிந்துக் கொண்டாள்.

அப்படி யோசிக்கையில் ரஞ்சனிக்கு குமாரின் ஞாபகம் வந்தது.  பக்கத்து வீட்டில் இருந்த மல்லிகா அக்கா பையன் தான் குமார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சாப்பாடு பிடிக்காமல் வயிறு சரியில்லாமல் போய் ஓரே மாதத்தில் ஊர் வந்து சேர்ந்தான். தான் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டாள்.

“குமாருக்கும் அவிய அம்மா கொஞ்ச நஞ்சம் சமையல் சொல்லிக் கொடுத்து அனுப்பிருக்கலாம்லா என்பாள் தன் அம்மாவிடம். தான் தனியாக சமாளிக்கும் பெருமிதத்தோடு.

“பொம்பள பிள்ளைகளே சமைக்க மாட்டுக்குவோ இப்போ. நீ என்னத்த சமைச்சு கழட்டுதியோ அங்க.. ஒருநாளாது இங்க ஒத்த சோலி பாக்கியா ”  வெறுமனே கூறுவாளே தவிர அவளுக்கு புடித்ததை எல்லாம் பார்த்து பார்த்து அம்மையும்,ஆச்சியும் செய்வார்கள்.

ரஞ்சி வந்தா தான் வகை வகையா சாப்பாடு கிடைக்குது என்பார்கள் மாமாவும், அண்ணனும்.

அங்க என்னத்த சாபிடக்கிடைக்கும் பிள்ளைக்கு. வீட்டுக்கு வந்த நேரம் தானே சாப்பிட முடியும் என்பாள் ஆச்சி.

அவ சாப்டாத மாதிரிய இருக்காச்சி? எந்த ஹோட்டல்ல என்ன நல்லாருக்கும்னு கேளு சரியா சொல்வா என்பான் அண்ணன்.

அம்மா அப்படி சொன்னது ரஞ்சனிக்கு சகிக்கமுடியாததாய் இருந்தது. என்னம்மா பேசுத? பொம்பளை பிள்ளைகள சமைக்கன்னு தான் பெத்து விடுதாகலாக்கும். சமையல் ஒரு அடிப்படையான வேலை. எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கனும். இல்லன்னா அம்மாமாரு மவனுவ பின்னாடியே பெட்டியக் கெட்டிக்கிட்டு போவனும் சமைச்சு போட என்றாள்.

“இப்படி சட்டம் பேசிட்டே இரு நீ. நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா தன்னால சமைப்பியாம் ” அப்படினு  சிரிச்சா.

ரெண்டுபேரும் வேலைக்கு போனா ரெண்டு பேரும் வேலைய சேந்துதான் பாக்கனும். நான் என்ன வேலைக்காரியா வீட்லயும் செய்து வேலைக்கும் போக.

சேரிம்மா உனக்கு மாப்பிள்ளை பாக்கும் போது சமைக்க தெரியுமான்னு கேட்டுக்கிடுதேன்னா அம்மா.

மல்லிகா அக்காவிடம் கூட அப்படியே அதைக் கேட்டாள் ரஞ்சனி. ஏங்க்கா சமைக்க கத்துக்கொடுக்கலன்னு.  “போலா அவனுக்கு விதிச்சது அம்புட்டுத்தான்” என்றாள், தான் சமைக்க பழக்காதது ஒரு குறையே இல்லை என்பது போல. சமையல் பையனுக்கு அவசியம் இல்லை என்பது போல. எவ்வளவு படிச்சி முன்னேறினாலும் இந்த புத்தி மாற மாட்டேங்க்குது. இன்னும் பழைய பஞ்சாங்கமாத்தான் இருக்காங்கன்னு திட்டுவா ரஞ்சனி.

திம்மையின் மக்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள். ரஞ்சனியின் தெருவில் இருக்கிற அனைவருமே  உறவுக்காரர்கள் போலத்தான் பழகுவார்கள். எப்பொழுது  போய் இறங்கினாலும் ..”ஏலா எப்ப வந்த.. நல்லாருக்கியா “ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது ரஞ்சனிக்கு.. என்னமோ வேற்று கிரகத்துக்கு போய் விட்டு வந்த மாதிரி ‘பேத்தி வந்திருக்காலாமே’ என்று வீட்டுக்கு வந்து விசாரிச்சி அளவளாவிட்டு போகிறவர்களும் இருக்கிறார்கள். அதெல்லாம் ரஞ்சனிக்கு  சுகமான சுமையாக இருந்தது.சுமை ஏனென்றால் அவள்  சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் உரிமையாக உள்ளே வந்து எதிரில் உட்கார்ந்துக் கொண்டு அங்க மழையா எனத் துவங்கி ஒவ்வொரு கேள்வியாக கேட்பார்கள். மெரினா போனியா கடல் எப்படி இருந்தது எனக் கேட்பார்கள்.  நம்ம திருச்செந்தூர் கடல் மாதிரி தான்க்கா இருக்கும் என்பாள். சமயங்களில் அவளுக்கு  சாப்பிடவா பதில் சொல்லவா என்று குழம்பிப் போகும் .. “சாப்பிடும்மா சாப்பிடு சோறு உணந்து போது பாரு” இப்படியும் அக்கறையாய் சொல்வார்கள்.

இப்படியாக சாப்பாடு, அக்கம்பக்கத்தார் என நினைவுகள் வீட்டின் பக்கம் திரும்பியது. முந்தின வாரத்தில் ஒருநாள்  வழக்கமாய் எப்பொழுதும் போல சாப்பாட்டு வேளையில் அம்மாவை அழைத்திருந்தாள் ரஞ்சனி. அம்மா வீட்டை கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும் இல்லை என்றால் விற்க வேண்டும் என்று சொன்னார்கள்.  பழைய மாடலா இருக்கு வித்திடுவோம் என்ற அம்மாவின் முடிவை மாற்ற ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது ரஞ்சனிக்கு. ஆச்சிக்கு அந்த வீட்டை விட்டு போக மனமில்லை என்பது மட்டும் அல்ல காரணம். அவளுக்கும் அந்த வீட்டை மறக்க முடியாது. அவள் பால்யத்தின் சான்றல்லவா அந்த வீடு.

ரஞ்சனிக்கு அந்த கிராமத்து வீட்டின் மீது அப்படி ஒரு பிடிப்பு. என்னவெல்லாமோ சமதானம் சொல்லி சண்டை போட்டு இந்த வீடே போதும் ஆனால் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்  என சம்மதிக்க வைத்தாள் அம்மாவையும், மாமாவையும். வீட்டு வேலை ஆரம்பித்த நாள் முதலாய் சதா போனும் கையுமாக சுத்தினாள் ரஞ்சனி. சிறிது சிறிதாக வேலைகள் நடந்தவண்ணம் இருந்தது. அப்போ அப்போ போன் செய்து என்ன நடக்கு என்று கேட்பாள். 

அவளைப் பொறுத்தமட்டில் செப்பனிடுகிறார்கள் வீட்டை. புதுசாக குளியலறை,  ஒரு ரூம் கட்டுவார்கள். ஆச்சியிடம் கூட அந்த கால சுவர் சுண்ணாம்பு சுவருன்னு கொத்தி பூசுவாங்க அம்புட்டுதானே போகுது என்றுதான் கூறினாள். அதை பெரிதாக மனதினுள் போட்டுக்கொள்ளவும் இல்லை.

நேற்று மதியம் போனில் கூப்பிட்ட போது கூட அம்மா கூறினாள் ” வேலை ஜரூரா போகுதுமா .. நீ வாரதுக்குள்ள வீடு அழகா மாறிடும். மச்சில பால்கணி பின்பக்கமும் வைக்க சொல்லிருக்கு .. உனக்காகத் தான் ”  என்றாள். அதைக் கேட்டதும் ரஞ்சனிக்கு ஏக சந்தோஷம். முன்புற பால்கணி அவளுடைய விருப்பமான இடங்களில் ஒன்று. அங்கு அமர்ந்து தான் எப்பொழுதுமே படிப்பாள். படித்துக்கொண்டு இருக்கும் போதே சிறிது நேரம் பக்கத்தில் இருக்கும் நீர் நிறைந்த குளத்தை வேடிக்கைப்பார்ப்பாள். நீர்க்காக்கைகள் நிறைந்து திரியும். பாம்பு எதுவும் கண்ணில் படுகிறதா என்று பார்ப்பாள் சமயங்களில் தலையை தூக்கி கொண்டு போகும் தண்ணீர்  பாம்புகள் கண்ணில் படும். மீன் துள்ளுவதுக் கூட கண்ணில் படும். இவர்கள் வீட்டை அடுத்து இரண்டு வீடுகள் பின் குளம். மழைக்காலத்தில் அதிக மழை பெய்து குளம் நிறைந்து தண்ணீர் வீடு வரை வந்து விடும்.  மரங்களில் வந்தமரும் கிளிகளும், பெயர் தெரியாத பறவைகளும் அவளுக்கு உற்சாக மருந்து போல. இனம்புரியாத மகிழ்ச்சி அப்பிக் கொள்ளும்.மெய்மறந்து அந்த சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டிருப்பாள். பத்து முறை அம்மா குரல் கொடுத்த பின்னரே கீழே இறங்கிப் போவாள். சமயங்களில் வீட்டிற்கு உள்ளே நுழைபவர்களை முன்பக்கம் என்பதால்  நேர்காண வேண்டி இருக்கும். சில நேரங்களில் அது அவளுக்கு தொந்திரவாகவும் இருக்கும். அங்கிருந்தே பத்து நிமிஷம் பேச்சில் போகும். ஆகையால் இனி பின்பக்கம் போய் அமரலாம்,இஷ்டம் போல வரைந்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கலாம் என மனம் குதூகலித்தது. அந்த உற்சாகத்தோடு நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.

இப்படி பலவாறான நினைப்புகள் ஆக்கிரமிக்க தோழியிடம் குட்நைட் சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்தாள். குறுஞ்செய்திகளை வாசித்து பதில் அனுப்பியப் பின்  அம்மாவை போனில் கூப்பிட்டாள் ரஞ்சனி. ராத்திரி சாப்பிட்டது வரை சொல்லி முடித்தவள் வீட்டுவேலைய பக்கதுல இருந்து  கவனிங்கம்மா என்றாள்.  சரியென்றாள் அம்மா. தொந்திரவாய் உளி கொத்தும் சத்தம் போலக்  கேட்டுக்கொண்டே இருந்தது பின்னிசைப் போல.

என்னம்மா இப்படி சத்தம் எனக் கேட்ட ரஞ்சனியிடம் “அதா தரை பேத்துட்டு இருக்காக ” என்றாள் அம்மா. ரஞ்சனிக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா இத நம்மட்ட சொல்லலியே என்று நினைத்தவள் பதறிப்போய் அம்மாவிடம் உடனே கேட்டாள் “எதுக்கும்மா எந்த தரையை?” என்று.  “அதான் வீட்ட மாத்தனும்னு சொன்னேன்லா மாத்தனும்னா தரைய மட்டும் அப்படியே உட முடியுமா.. ராத்திரிக்கு இருந்து வேலை பாக்காங்க இன்னைக்கு என்று அம்மா கூறி முடிக்கும் முன்பே

அவசரமாகக் கேட்டாள் ” யம்மா நம்ம வீட்டு தார்சால தாயக்கட்டம் கிழிச்சிருக்குமே அது போயிடுமா அப்போ” என்று..

அம்மா சொன்னாள் ” ஆமா பின்ன தரையெ எடுத்துட்டு மார்பில்ஸ் போடனும்லா”.அது மட்டும் பழசா இருந்தா நல்லாவா இருக்கும் என்றாள்.

தலையில் இடி விழுந்தது போல இருந்தது ரஞ்சனிக்கு. உடனே கத்த ஆரம்பித்தாள்.. மார்பில்ஸ்சும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். அப்படியே விடுமா என்றாள்.

அம்மாவும் பதிலுக்கு திட்டினாள்..” உனக்காக தான் வீடு மாறல.. இப்போ இதுவும் வேணாம்னா என் தம்பி ஏசுவான்” என்றவளிடம் “ஆச்சிட்ட போனக்குடும்மா நீ” எனக் கோபம் மாறாமல் இரைந்தாள் ரஞ்சனி..

ஆச்சி ரஞ்சிம்மா சாப்பிட்டியா என்றாள்.

ஆச்சியின் கேள்வியை பொருட்படுத்தாமல் “என்னச்சி இது? தரையே பேக்கனுமாமே?..” எனக் கேட்டவளிடம்,

“ஆமல தரை ரொம்ப பழசா இருக்குல்லா ..” என்றாள் ஆச்சி.

“என்னச்சி நீ.  இப்படி சொல்லுத..”

“யான் அதுக்கென்ன..” என எதிர்க் கேள்வி எழுப்பினாள் ஆச்சி.

“அய்யோ தரைல தாயக்கட்டம் இருக்கேச்சி ” எனப் பதறினாள் ரஞ்சனி.

“ஆமா போலா இப்போ தாயம் ஆரு வெளாடுதா ?” என்றாள் ஆச்சி

“என்னச்சி நம்ம பெரியாச்சி சொல்லி தார்சால வரைஞ்சதாச்சே!..” மருகிப்போய் கேட்டாள்.

“ஆமா அதுக்கென்னப்பு செய்ய..அது இருந்து என்னத்துக்கு ஆவப்போது. ஆரு வெளாடுதா இப்போ. விடுலா அத . தரை மாத்தட்டும்..” எனச் சாதரணமாகக் கூறி விட்டு இன்னா அம்மா பேசுதா என்று போனை அம்மாவிடம் கொடுத்தாள் ஆச்சி.

ரஞ்சனிக்கு ஆச்சியின் பேச்சு ஒரே ஆச்சரியமாக இருந்தது.!! எல்லோரும் சுலபமாக மாறிப்போகிறார்களோ? நாமதான்  இப்படி இருக்கோமா என யோசித்தாள். அவளின் அமைதியை புரிந்தவளாய் அம்மா கேட்டாள்  “தரை மாத்த வேணாம்னு சொல்லட்டா அப்போ?” வேணாம்மா செய்யட்டும் என ஒற்றை வரியில் முடித்து வைத்து விட்டாள் போனை.

அன்று ரஞ்சனியால் உறங்கவே முடியவில்லை. தரை தானே என்று சுலபமாய் கடக்க முடியவில்லை. அந்த வீடும், சிவப்பு தரையில் தாயக்கட்டம் கிழித்த தார்சாவும் மனதுக்கு அத்தனை நெருக்கம். அந்த சிவப்பு தரையும், தாயக்கட்டமும் இல்லாத தார்சா எப்படி தார்சாவாக இருக்கும்? பெரியாச்சியோடு தன்னை தொடர்புபடுத்திக்கொள்ளும் ஒரு நினைவுச்சின்னம் அல்லவா அந்த தாயக்கட்டம்.

எத்தனை கோடை விடுமுறையில் அந்த தரை குளிர்ச்சிக்காக எதுவும் விரிக்காமல் உருண்டு தூங்கியிருப்பாள். பொங்கலுக்கு  பெயிண்ட்  கோலம் போட்டால் அத்தனை பளிச்சென்று இருக்கும். இனி அந்தக் காட்சி கண்ணில் படாது தானே? அந்த தாயக்கட்டம் எத்தனை வாட்டி பக்கத்து வீட்டு பிள்ளைகளும், ஆச்சிகளும் ஆடியிருப்பார்கள். அதனை சுற்றி அமர்ந்து எத்தனை குடும்பக் கதைகளும், புரணிகளும் பேசப்பட்டிருக்கும். அந்த தாயக்கட்டம் அங்கு வந்த கதையை நினைத்துப்பார்த்தாள் ரஞ்சனி.

பெரியாச்சி – ஆச்சியின் அம்மா அதாவது பூட்டி ஆச்சி. அவளையும் ஆச்சி என்று தான் அழைப்பாள். யாரிடமாவது கூறும் போது பெரியாச்சி என்பாள். பெரியாச்சிக்கு  தாயம் விளையாடுவது ரொம்ப பிரியம். பாளையங்கோட்டையில் பெரியாச்சி வீட்டு தெருவாசலில் சாந்து போட்டிருப்பார்கள். அதில் பெரியாச்சி வெள்ளை சுண்ணாம்பால் கோடுகட்டி அழகாக வரைவாள் அடிஸ்கேல் கொண்டு வரைந்ததைப் போல. அவ்வளவு கச்சிதமாக இருக்கும். இல்லை என்றால் அடுப்பு கரி வைத்தும் வரைவாள் .. ஆனால் தரை அழுக்காகும் என்று அதை அவ்வளவாக தொடமாட்டாள் ஆச்சி.. தாயக்கம்பியும் அவள் பிரத்யோகமாக வைத்திருந்தாள். அவளின் அம்மா கொடுத்த கம்பி அது. சமைந்த பெண்கள் வீட்டில் தாயம் ஆட ஆச்சியிடம் தாயக்கம்பி கடன் வாங்குவார்கள்.

அப்படி ஒரு மவுசான தாயக்கம்பி. ஆச்சியும் கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுப்பாள். ஆனால் திரும்ப வாங்கி விடுவாள்.. அது இல்லாத பொழுதுகளை சோவியின் மூலம் நிறை செலுத்துவாள். புளியமுத்து, சோவி வைத்து ஆடினாலும் பொதுவாய் தாயக்கம்பி வைத்து ஆடுவதைத் தான் அனைவரும் விரும்பினார்கள். ரஞ்சனியும் புளியமுத்தை பொறுக்கி எடுத்து ஒரு பக்கத்தை தரையில் உரசி வெள்ளையாக்கி வைத்திருப்பாள் தோழிகளோடு விளையாட.

 பெரியாச்சிக்கு அவள் கூட விளையாடுவதற்கென்றே ஒரு அணி இருந்தது. பக்கத்து தெரு சின்னாத்தா ஆச்சி, வண்டிமாட்டு வீட்டு ஆச்சி, புறாவீட்டு ஆச்சி என எல்லோரும் அவளுக்கு சேக்காளிகள். சமயங்களில் பெரியாச்சி பொடுசுகளையும் சேர்த்துக் கொள்வாள் ஆட்டத்தில்.

ரஞ்சனி  சின்னக் குழந்தையாய் இருந்தபோது ஆச்சி மடியில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பாள் விளையாட்டை.  பெரியாச்சி தாயக்கம்பி உருட்டும் அழகைப் பார்த்துக் கொண்டே ரஞ்சனி சமத்தாக அழாமல்  இருப்பாள். கொஞ்சம் வளர்ந்தப்பின் ரஞ்சனிக்கு அவள் ஆட்டத்தின் போது தாயக்கம்பி உருட்டத் தருவாள் ஆச்சி.  பெரியாச்சி பழம் போக கொம்பேறும் போது அவள் முகத்தில் மின்னும் பெருமிதமும், சந்தோஷமும் ரஞ்சனிக்கு இன்னமும் ஞாபகத்தில் இருந்தது. தாயம் போடுவதில் கெட்டிக்காரி பெரியாச்சி.. எப்படி தான் உருட்டுவாலோ ஒரு தாயம்…. என்று சொல்லிக்கொண்டே தாயம் போடுவாள். தாயத்தில் மட்டும் அல்ல எதிலேயும் பெரியாச்சியை ஜெயிக்கவே முடியாது. அவளுக்கு தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு எல்லாம் அறிந்தவளாய் இருந்தாள்..

பெரியாச்சி தான் அவர்களது வீடு  கட்டும் போது கொத்தனாரிடம் தனிப்படையாக சொல்லி தாயக்கட்டம் வரையச் சொன்னாள் . அதுவும் அவளே நின்று வரைய வைத்ததாகக் கூறுவாள். அதனாலயே ரஞ்சனிக்கு அந்த தாயக்கட்டம் ரொம்பப் பிடிக்கும்.

ரஞ்சனியும் பெரியாச்சியும்  அதில் பலமுறை தாயம் விளையாடியிருக்கிறார்கள். விளையாடுகையில் விளையாட்டில் கவனம் இருந்தாலும் ஆச்சி பல கதைகளை பேசுவாள். பல தெரியாத விஷயங்களைப் பற்றி கூறுவாள்.ஆச்சி அவளிடம் ஏவும் ஒரே வேலை “ ஏல கொஞ்சம் தண்ணி கொண்டா குடிக்க” என்பது தான். பெரியாச்சி பிரியம் மிகுந்து ஏல என அழைப்பாள்.  பெரியாச்சியின் மறைவிற்குப் பின் ரஞ்சனி தாயம் விளையாடவே இல்லை. அந்த தாயக்கம்பி மட்டும்  அவளிடம் பத்திரமாக இருந்தது .. ஏலா கேட்பேன் பத்திரமா வை என்று கொடுத்தவள் கேட்கவே இல்லை. பெரியாச்சியின் மறைவு ரஞ்சனியை ரொம்பவே பாதித்தது. அவள் ஞாபகம் வரும்போதெல்லாம் தாயக்கம்பியைத்தான் எடுத்து பார்ப்பாள்.

அந்த தரையை அந்த தாயக்கட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் பெரியாச்சி தான் ஞாபகத்துக்கு வருவாள் ரஞ்சனிக்கு. ரஞ்சனியின் ஆச்சிக்கு அவள் அம்மா போல தாயம் விளையாடுவதில்  நாட்டம் இல்லை. அதனால் தானோ என்னவோ அந்த தரை, தாயக்கட்டம் குறித்த அக்கறையோ, விருப்பமோ பெரிதாக இல்லை. ஆகையால் தான் சாதரணமாய் தரையை உடைப்பதைக் கடந்து விட்டாள்.

புதிதாய் வீட்டிற்கு வருபவர்கள் “அடேங்கப்பா… தாயக்கட்டம் எல்லாம் போட்ருக்கே” என கேட்கையில் ரஞ்சனி பெருமையாக சொல்வாள் “எங்க பெரியாச்சி போட வைச்சா ” என்று. அப்படிபட்ட நினைவு சின்னம் தான்  இப்போழுது காணாமல் போகப்போகிறது. உறக்கம் வருமா என சந்தேகமாய் இருந்தது அவளுக்கு. உறங்காமல் இப்படி பலவாறாக யோசித்து படுக்கையில் இருந்து எழுந்து வந்து அறை விளக்கைப் போட்டாள்.

 துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு சென்றாள். தன் கையோட கொண்டு வந்து தன்னோடு வைத்திருந்த  சின்ன துணி முடிப்பை துணிகளின் இடையே இருந்து எடுத்து பிரித்துப் பார்த்தாள். அதில் தாயக்கம்பி தங்க நிறத்தில் ஜொலித்தது. பெரியாச்சியை காண்பது போன்றதொரு பிம்பம் தோன்ற கண்களில் நீர் நிறைந்தது. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அதனைக் கையோடு கொண்டு வந்து கைகளுக்குள் பொதிந்துப்  படுத்துக்கொண்டாள். விளக்கை கூட அணைக்காமல் அப்படியே பெரியாச்சியின் நினைவுகளோடு தூங்கியும் போனாள். வீடு, பெரியாச்சி, தாயக்கட்டம், தாயக்கம்பி, சோவி, தென்னைமரம், அணில், கிளிகள் ஆச்சியின் சமையல் என என்னவெல்லாமோ யோசித்து உறங்கியும் போனாள். நினைத்துக்கொண்டே படுத்ததாலோ என்னவோ பெரியாச்சி கனவில் வந்தாள் அதே பொக்கைவாய்ச் சிரிப்போடு…

“ஏம்லா வருத்தப்படுத.. கட்டம் போனா போவுது. உனக்கா வரைய தெரியாது,.. வா தாயம் விளையாடுவோம்” என்றாள்.

கலீரென ஒரு சத்தம்…

பதறி எழுந்தாள் ரஞ்சனி. தாயக்கம்பி ரெண்டும் தரையில் கிடந்து சிரித்தது..

அட தரையில் ஒரு தாயம்!

ராணி கணேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *