“I am a mirror set before your eyes,
And all who come before My splendour see
Themselves,
their own unique reality;
You came as thirty birds and therefore saw
These selfsame thirty birds, not less not more.””
— Farid Ud-Din Attar
இலக்கிய வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் மெளலானா ரூமி. சூஃபிசம் என்றாலே ரூமிதான் என்கிற அளவிற்கு அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான பதிவுகள் உள்ளன. எனினும் தமிழில் ஒமர்கய்யாம் தான் முதலில் பரவலாக அறியப்பட்ட சூஃபி கவிஞர். கவிஞராகத்தான் அறிமுகம் ஞானியாக அல்ல. சூஃபிசம் சார்ந்த படைப்புகள் தமிழில் நீண்டகாலமாக பலராலும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தத்துவ விசாரங்கள் எனப் பலவகையிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை – ஒமர்கய்யாம் பாடல்கள் என்ற தலைப்பில் ருபாயியத்தை மொழிபெயர்த்து உள்ளார். பேராசிரியர் அ.சீநிவாசராகவன், சாமி சிதம்பரனார், நாகூர் ரூமி,கவிஞர் ஆசை என இன்னும் பலரும் ருபாயியத்தை மொழிபெயர்த்து உள்ளனர். நாகூர் ரூமி, ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து பல பகுதிகளை மொழிபெயர்த்துள்ளார். சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம், சூஃபி வழி இதயத்தின் மார்க்கம், இந்திய சூஃபிகள் வரிசை என அவரது பலபடைப்புகள் சூஃபிசத்தை அறிந்து கொள்ள ஒரு திறவுகோலாக அமைகின்றன. கவிஞர் நிஷாமன்சூர் முக்கியமான சூஃபி கோட்பாடுகளை விடுதல்களும் தேடுதல்களும் என்ற நூலில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.சமீபத்தில் சத்தியமூர்த்தி மொழிபெயர்ப்பில் வெளிவந்த தாகங் கொண்ட மீனொன்று-ரூமி கவிதைகள் தொகுப்பும், கவிஞர் மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் வந்த ரூமி இதயங்களின் உதவியாளர் தொகுப்பும் பரவலான வாசகர்களை சென்றடைந்த தொகுப்புகள் எனலாம். “பாரசீக மகாகவிகள்”என்ற நூலில் முக்கியமான சூஃபி ஞானிகள் பற்றி குளச்சல் யூசூஃப் விரிவான தகவல்களை தந்துள்ளார்.
சூஃபி என்ற அரபிச் சொல் அக்கால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்திருந்த கம்பளி ஆடைகள்(சூஃப்- கம்பளி) என்பதிலிருந்து வந்திருக்கலாம் என சூஃபிசத்தின் துவக்கத்தை ஆராய்ந்திருக்கும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். சூஃபி என்பவர் கம்பளி ஆடை அணிந்த தூய்மையான உள்ளத்தைக் கொண்ட ஆன்மீக ஞானி என்றும் கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இரு முக்கிய பிரிவுகளான சன்னி, ஷியா இரண்டிலிருந்தும் சூஃபி ஞானிகள் தோன்றியுள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் வேறுபட்ட தரீக்கா (அ) வழிமுறைகளை பின்பற்றுபவர்களாக உள்ளனர். பெரும்பாலும் அனைத்து சூஃபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அடிச்சுவட்டிலிருந்து அவரது மருகனார் அலி(றழி) ஊடாக ஆரம்பிக்கின்றன. இவ்வழிமுறைகள் சன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பையும், சன்னி அகீதாவையும் பின்பற்றுகின்றன. அதேசமயம் நக்ஷ்பந்தி வழிமுறை முதலாம் ராஷூதின் கலீஃபாவான அபூபக்கர் (றழி) ஊடாக ஆரம்பமாகின்றது.எனினும் இஸ்லாத்தின் பல பிரிவுகள் சூஃபிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
சூஃபிசம் இறைவனை அடையும் வழிமுறையைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணத்தை, ஒரு செழிப்பான அறிவுசார் கலாச்சாரத்தின் மூலம் உருவாக்கியது. அறிவொளியை அறிவையும்,நற்சிந்தனையையும் ஒன்றோடொன்று தொடர்புடைய குணங்களாகக் கொண்டது எனக் கருதினர். இமாம் அல் புகாரி, இபின் அல் அரபி, ஹக்கீம் அத் தர்மஸி, ஹஸ்ரத் ராபியா பஸ்ரி, ஃபிர்தவ்ஸி,ஒமர் கய்யாம், ஹக்கீம் ஸனாயி, ஹக்கீம் ஜாமி, ஃபரீதுத்தீன் அத்தார், ஜலாலுதீன் ரூமி, ஸஅதி ஸீராஸி, அமீர் குஸ்ரு, அல் கஸாலீ, பஹாவுதீன் நக்ஷ்பந்த் போன்ற ஞானிகள் மனிதர்களின் மெய்ஞ்ஞானத் தேடலுக்கும், மனிதர்கள் தன் மன உள்ளொளியின் மேன்மையை கண்டறியவும் ஒப்பற்ற பங்களிப்பை அளித்து உள்ளனர்.
தரீக்கா (அ) வழிமுறைகளைச் சார்ந்து ஒரு ஆன்மீகத் தலைவரைக் கொண்டு சூஃபி சபைகள் உருவாயின. ஆன்மீக அமர்வுகளுக்கான கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கீயா என்றழைக்கப்படுகின்றன. சிஷ்டி, காத்ரி, சுராவார்தி மற்றும் நக்ஷ்பந்தி முக்கியமான நான்கு சூஃபி சபைகள்.
சிஷ்டி சபை பத்தாம் நூற்றாண்டில் சிரியாவில் பிறந்த ஜா அபு இஸ்க் சிஷ்டியை பின்பற்றுபவர்களைக் கொண்டது. கோராஸானில் உள்ள சிஷ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். தாங்கள் செல்லும் ஊர்கள் எங்கும் புல்லாங்குழலை இசைத்தும் நகாராவில் ஒலி எழுப்பியும் மக்களை ஒன்று திரட்டி இறைத்தூதரின் அருமைகளை, இறைநிலையின் முக்கியத்துவத்தை கதைகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் எடுத்துரைப்பர். இந்தியாவில் இவர்களின் தாக்கம் அதிகமிருந்தது.
தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலானின் நீவ் பகுதியில் பிறந்தவர் ஹசரத் அப்துல் காதிர். சிறுவயதிலேயே சித்து வேலைகளில் தேர்ந்தவராக விளங்கியவர். ஆன்மீக நிலையைத் தூண்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது ஆன்மீக வழிமுறைகள் பின்பற்றுவதற்கு கடினமானவை எனப்படுகிறது. இவரது வழியைப் பின்பற்றியவர்கள் காதிரிசபையில் அடங்குவர்.
சூஃபி ஞானியான ஜூனைத்தின் சீடர் ஷேக் ஜீயாவூதீன் ஜாபிப் சுராவர்தி தோற்றுவித்த சபை சுராவர்தி என்றழைக்கப்படுகிறது. இந்தியா, பெர்சியா, வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய இறைநிலையில் இவர்களது கருத்துக்கள் அதிகம் விரவியிருந்தன.
துருக்கியில் காஜாகன் என்ற பகுதியில் இருந்த இஸ்லாமிய துறவிகளுக்கான பள்ளி மத்திய ஆசிய மன்னர்கள், இந்திய இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் துருக்கி மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்று இருந்தது. காஜா பாஹீதீன் நக்ஷ்பந்தி இப்பள்ளியின் முக்கிய ஆளுமை. தனித்த அடையாளங்கள் இல்லாத நக்ஷ்பந்தி வழி வந்தவர்கள் பிற சபைகளிலும் பரவி இருந்தனர்.
முகம்மது பின் துக்ளக் காலத்தில் ஐந்து முக்கிய சூஃபி மையங்களில் ஒன்றாக இந்தியா விளங்கியது. மற்றவை பெர்சியா, பாக்தாத், சிரியா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகும்.
அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா மற்றும் டெல்லியில் உள்ள நிஜாமூத்தீன் அவ்லியாவின் தர்காவும் புகழ் பெற்ற சூஃபி மையங்களாகும்.
இந்தப் பின்னணியில் இங்கு அதிகம் அறியப்படாத சூஃபி ஞானி நிஸாப்பூர் ஃபரீதுத்தீன் அத்தார் பற்றி கவனப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.
ஷேக் ஃபரீதுத்தீன் அல்-தின் முஹம்மது அபுபக்கர் இப்னு இப்ராஹிம் அத்தார். சுருக்கமாக நிஸாப்பூர் ஃபரீதுத்தீன் அத்தார்.பெர்சியாவின்(இன்றைய ஈரான்) வடகிழக்குப் பகுதியில் சூஃபி ஞானி உமர்கய்யாம் பிறந்த ஊரான நிஸாப்பூரில் பிறந்தார். இவரது தந்தை வைத்தியர் மற்றும் வாசனைத் திரவ விற்பனையாளர்.
ஆரம்பகால இறையியல் கல்வியை மஷாத் என்ற இடத்திலிருந்த சிறந்த கல்விமானான இமாம் ரோஷனின் பள்ளியில் பயின்றார். சிறுவயதிலேயே சிறந்த சமய கல்வியறிவு அவருக்குக் கிட்டியது. இளமைக் காலத்தில் தந்தையிடம் வைத்திய சாஸ்திரத்தை கற்ற அத்தார் தந்தையின் மறைவிற்குப் பின் நோயாளிகளுக்கு நாடி வைத்தியம் பார்த்ததுடன் அவர்களுக்கு ஔஷதம் மற்றும் குளிகைகளை தயாரித்து வழங்கியுள்ளார். விதவிதமான வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதில் ஆர்வமுடைய அத்தார், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதிலும் நிபுணர். வாசனைத் திரவிய விற்பனை நிலையமும் அத்தார் நடத்தி வந்துள்ளார். ஒருநாள் அவரது வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பேசிய ஃபக்கீர் ஒருவரின் வார்த்தைகளும்,செய்கையும் அவருள் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. அதன்பின் இலெளகீக வாழ்வின் மீதான உற்சாகத்தை இழந்த அத்தார் ஆன்மீக சிந்தனைகளில் மூழ்கத் தொடங்கினார். சூஃபி ஞானி ஷேக் மஜ்தூதின் வழிகாட்டுதலில் சூஃபிச கோட்பாடுகளிலும், ஆன்மீக தரிசனங்களிலும் ஆழ்ந்த புலமையைப் பெற்றார். பின்னர் அக்கால வழக்கப்படி நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டார். அக்காலத்தில் பயணம் செய்து அறிஞர்களை சந்தித்து உரையாடுவது, அதன்மூலம் தங்களுக்கு ஏற்படும் தத்துவ சந்தேகங்களுக்கான தீர்வைக் கண்டடைவது என்பது கவிஞர்கள்,அறிஞர்களின் பொதுப்பண்பாக இருந்தது. தங்கள் கருத்துக்களை பரப்பவும் பிற கருத்துக்களை அறியவும்,சேகரிக்கவும் ,விவாதிக்கவும் இப்பயணங்கள் உதவின.
மெய்ஞ்ஞானத்தை தேடி எகிப்திலிருந்து இந்தியாவரை பலநாடுகளுக்கும் பயணம் செய்து மார்க்க அறிஞர்களையும், சூஃபி ஞானிகளையும் சந்தித்து உரையாடினார். அவர்களைப் பற்றிய செய்திகளையும், கவிதைகளையும், கதைகளையும் அவர்கள் உரைத்த கருத்துக்களையும் சேகரித்தார். இதன் பயனாக தக்கிரதுல் அவ்லியா என்னும் முக்கியமான ஆன்மீக நூலை படைத்தார்.
அத்தாரின் நூற்றுக்கணக்கான படைப்புகளில் அஸ்ரார் நாமா, புல்புல்நாமா, பந்த் நாமா, ஸூஷ்தூர் நாமா அன்றைய இஸ்லாமிய உலகில் பெரும் விவாதங்களை உருவாக்கியவை. அவரது போதனைகள் அதிகமும் சுயசரிதைகள், விலங்குகள்,பறவைகளை பாத்திரங்களாக கொண்ட நீதிக்கதைகள் மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.
அத்தாரின் மிகவும் பிரபலமான மிக முக்கியமான மஸ்னவி “மன்டிக்-உத்- தாயர் (பறவைகளின் உரையாடல்) கதைக்குள் கதையாக பலநூறு சிறுகதைகள் கவிதைவடிவில் காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. 1177ல் எழுதப்பட்டது பறவைகளின் உரையாடல். பறவைகளின் உரையாடல்கள் வழியாக ஆன்மீக எண்ணங்களை, ஞான போதனைகளை அத்தார் வெளிப்படுத்தியுள்ளார்.
13 இனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பறவைகள் ஓரிடத்தில் ஒன்று கூடுகின்றன. பறவைகளின் மாநாடு ஒவ்வொரு பறவையின் தோற்றம், அதைப்பற்றின புராணக் கதைகள், அவற்றின் நடத்தை பற்றின அவதானிப்புகள், ஆளுமைத்திறன் என அறியத் தருகிறது. ஹூத்ஹூத் சத்தியத்தின் தூதுவராகவும், புறா இசை மற்றும் ஞானத்தின் சொந்தக்காராகவும், கிளி பெருந்தன்மையின் அடையாளமாகவும், கொளதாரி அறிவிற்கும், பருந்து கோபத்தின் அடையாளமாகவும், பெருஞ்செம்போத்து காமத்தின் அடையாளமாகவும், இராப்பாடி காதல் உணர்விற்கும் மயில் வஞ்சகத்திற்கான அடையாளமாகவும் என ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு மனிதனின் உளவியல் சின்னமாக. பிரதிநிதிப்படுத்தப்படுகிறது.
மாநாட்டில் “ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக ராஜா இருக்கிறார். நம் நகரத்திற்கு ராஜா இல்லை. ஒரு நகரை, நகர மக்களை வழி நடத்த, பரிபாலனம் செய்ய ஒரு ராஜா தேவை. எனவே நம் நகரத்திற்கான ராஜாவை தேடிக் கண்டறிந்து அழைத்து வர நாம் ஒருவொருக்கொருவர் உதவி செய்து தேடுவோம் “என முடிவு செய்கின்றன. பறவைகளின் வழிகாட்டியாக ஹூத்ஹூத்தை தேர்வு செய்கின்றன. முன்பொருமுறை சுலைமான் நபியிடமிருந்து முக்கிய தகவலை பல்கீஸ் அரசிக்கு கொண்டு சென்ற பறவை ஹூத்ஹூத். ஹூத்ஹூத்தின் மொழியை சுலைமான் நபியும், சுலைமான் நபியின் மனதை ஹூத்ஹூத்தும் அறிந்திருந்தனர். ஹூத்ஹூத் சுலைமான் நபியின் நம்பிக்கைக்கு உரியது என்பதாலும், பறவைகளின் ராஜா ஸீமுர்க் இருக்குமிடம் அதற்கு மட்டுமே தெரியும் என்பதாலும் அதனை வழிகாட்டியாக பறவைகள் ஏற்றுக் கொள்கின்றன.
பறவைகளிடம் உரையாற்றும் ஹூத்ஹூத்
“ஸீமுர்க் நம்மில் வாழ்கிறார். ஆனால் நாம் அவரிடமிருந்து வெகு தொலைவில் வாழ்கிறோம்.பிரகாசமான ஒளிமிக்க அவரது விழிகளை யாராலும் ஊடுருவ இயலாது. எந்தவொரு ஞானியாலும் அவரது அற்புதத் தன்மையை அறிந்துக் கொள்ள முடியாது. அவரை சென்றடைய வேண்டிய பாதை மிகவும் நீண்டது. பெருங்கடல்களையும், நீண்ட பாலைவனங்களையும் தன்முன்னே கொண்டது. கடப்பதற்கு கடினமானது. ஆத்மபலமிக்கவர் மட்டுமே அங்கே சென்றடைய முடியும். இந்தத் தேடலை விரும்பினால் உங்கள் ஆன்மாவை விட்டு விலகுங்கள்.இறையாண்மையின் உறைவிடத்தை உங்கள் ஒரே இலக்காகக் கொள்ளுங்கள்.
“நமது இறையாண்மையை நோக்கிய இந்த வழிப்பயணத்தில் நாம் ஒரு யாத்தீரிகர் மட்டுமே எனக் கருதுங்கள், முதலில் உங்கள் அகத்தை தூய்மையாக்கிக் கொள்ளுங்கள் ;அன்பிற்காக உங்கள் ஆன்மாவைத் துறந்துவிடுங்கள்;நீங்கள் பின் தொடரும் “அவர்” உங்களுக்காக தனது ஆன்மாவை தியாகம் செய்வார்”என அறிவுறுத்துகிறது.
பறவைகளிடம் ஒளியின் உறைவிடமான ஸீமுர்க்கைக் காண ஆர்வம் அதிகரிக்கிறது. ஆர்வமுடன் பறக்கத் துவங்குகின்றன. அதேவேளையில் பூங்குயில், கிளி, மயில், வாத்து, காட்டுக் கோழி, நீர்க்கோழி, பருந்து, வாலாட்டிக் குருவி, ராஜாளி பறவைகள் வெவ்வேறு காரணங்களைக் கூறி பயணத்தில் பங்கேற்பதிலிருந்து தவிர்த்துவிடுகின்றன. மனித மனம் ஆன்மிகப் பாதையில் நிற்பதிலிருந்து விலகிச் செல்ல விரும்புவதையே இது காட்டுகிறது. மேலும் பறவைகள் பறந்து செல்லும் ஏழு பள்ளத்தாக்குகள் இறைநிலையின் உண்மையான இயல்பை உணர்த்தும் சூஃபி நிலைகளை குறிக்கிறது.
1. தேடலின் பள்ளத்தாக்கு
2. அன்பின் பள்ளத்தாக்கு
3. அறிவின் பள்ளத்தாக்கு
4. பற்றின்மையின் பள்ளத்தாக்கு
5. ஒற்றுமையின் பள்ளத்தாக்கு
6. அதிசயத்தின் பள்ளத்தாக்கு
7. வறுமை மற்றும் அழிவின் பள்ளத்தாக்கு. இவையே அந்நிலைகள் ஆகும்.
ஹூத்ஹூத் பறவைகளின் கேள்விகளுக்கு அறம், அறிவு, ஞானம், நற்சிந்தனையின் அவசியம் பற்றின கதைகள், பாடல்கள் மூலம் விளக்கமளிக்கிறது. இறைநிலைக்கான தேடலில் சுயம் நம்மை தடுக்கிறது. அதை ஆழ்ந்த அன்பினால் மட்டுமே வீழ்த்த முடியும். ஆழ்ந்த அன்பு என்பது இறைவனுடன் முழுமையாக ஒன்றிணைவதற்கான அடிப்படையாகும். பரிபூரணமான அகதரிசனத்தைக் கண்டறிவதற்கான முதல்நிலை அதுவேயாகும்.
பயணத்தின் வழியில் பல பறவைகள் உயிர் துறக்கின்றன. இறுதியில் 30 பறவைகள் ஸீமுர்க்கை அடைகின்றன. உண்மையில் தாங்கள்தான் அந்த ஸீமுர்க் என்பதை உணர்கின்றன. மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருக்கும் இறைநிலை அவர்களின் இதயங்களில் தான் உள்ளது. அதை கண்டடைவதே ஒவ்வொருவரின் நோக்கமாக அமைய வேண்டும் என்பதே பறவைகளின் மொழியின் வாயிலாக அத்தார் விவரிக்கிறார். ராஜா எனும் உருவகம் இறைநிலையே. பயணம் (அ) தேடல் எனும் கருத்தாக்கம் பரிபூரணத்தை தேடும் ஆன்மாவின் தொடர்ச்சியான நிலைகளையே பிரதிநிதிப்படுத்துகிறது.
ரூமியுடன் மெக்காவை நோக்கி பயணம் மேற்கோள்ளும் ரூமியின் தந்தை வழியில் நிஸாப்பூரில் அத்தாரை சந்தித்து உரையாடி உள்ளார். அச்சந்திப்பி்ன் போது அவருக்கு அஸ்ரார் நாமாவை அத்தார் அளித்து தங்கள் மகன்(ரூமி) உலகில் உள்ள மக்களின் இதயங்களில் விரைவில் ஞானத் தீ மூட்டுவார் “என கணித்துக் கூறியதாக ரூமி தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார்.
அஸ்ரார் நாமா மனதின் வெவ்வேறு நிலைகளை விளக்குகிறது. முதல்நிலை காமம் -அறியாமையின் நிலை. இரண்டாவது நிலை செயல், சக்தி -அறிவைப் பெறுவதற்கான நிலை.மூன்றாவது நிலை இல்லாத நிலையில் இருப்பது-. அறிதலற்ற நிலை.நான்காவது நிலை இல்லாததின் போதை- இண்மை மற்றும் நடைமுறையின் இணக்கமான நிலை.
பயனற்ற மனித அறிவு மெழுகுவர்த்தியை வைத்திருக்கும் முட்டாளைப் போன்றது எனக் கூறும் அத்தார்,அது தனது மெழுகுவர்த்தியால்தான் சூரியன் வானத்தில் உதித்ததாக நினைக்கும் முட்டாளின் நிலைக்கு ஒப்பானதாகும் என்கிறார். அத்தாரின் பார்வையில் அறிவு அறிவொளியின் அடிப்படை. அறிவு ஒருவரின் அடையாளம், இடம் மற்றும் வாழ்க்கையின் நோக்கம் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொள்வதில் தொடங்குகிறது. இதை அறிந்து கொள்ளாதவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அவன் அறிவாளியாகக் கருதப்பட மாட்டான். ஞானத்தின் ஆரம்பம் எல்லாம் வல்ல இறைவனின் இருப்பைக் கவனிப்பதில் தொடங்குகிறது.
பந்த்நாமா கல்வி மற்றும் நற்சிந்தனையுடன் தொடர்புடையது. ஞானம் பெற்ற நபர்கள் காமத்தை, கண்களை, இதயத்தை கட்டுப்படுத்துபவர். உள்ளத் தூய்மையானவர். ஞானமுள்ளவர் தகாத செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். தீமையை தவிர்க்க வேண்டும். தாராள மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். வாக்கு அளித்ததை மறுக்கக் கூடாது என்கிறது.
புல்புல்நாமா இராப்பாடி மீதான குற்றச்சாட்டாக இருப்பினும் அதன்மூலம் அறிவொளியை விளக்குகிறது. அறிவொளி மூலம் ஒரு நபர் புத்திசாலியாகவும்,விவேகமுள்ளவராகவும்,தெளிவான பார்வை கொண்டவராகவும் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறியக் கூடிய ஞானியாகவும் இருப்பார் என வலியுறுத்துகிறது.
ஸூஷ்தூர் நாமா ஞானம் பற்றின சிந்தனைகளைக் கொண்டது. படைப்பில் ஞானம் என்ற சொல் தீர்க்கதரிசிகளின்
பண்புகளுடன் ஒப்பிடப்படுகிறது.
“ஞானம் இல்லையென்றால் ஆதாமுக்கு தெளிவான மனம் இருக்காது.
ஞானம் இல்லையென்றால் இப்ராஹிம் கலீல் முழுமையின் தன்மையைக் கண்டிருக்கமாட்டார்.
ஞானம் இல்லாவிட்டால் மோசே நேரான பாதையின் ஒளியைக் கண்டிருக்க மாட்டார்.
ஞானம் இல்லையென்றால் இயேசு பரலோகத்தை அடைந்திருக்க மாட்டார்
ஞானம் இல்லாவிட்டால் தூய்மையின் ஒளியான முஸ்தாபா இல்லை. “”
அத்தாரின் படைப்புகளில் ஆன்மீக வளர்ச்சி, உள்ளத்தை தூய்மையாக்குதல், மனிதனை மதிக்கும் நற்சிந்தனைகளையும் குறிப்பாக மெய்ஞ்ஞானத் தேடல் மற்றும் உள்ளொளியை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். உள்ளொளி என்பதன் வரையறை,மனித வாழ்வில் அதன் பங்கு , ஆன்மீகத்துடன் அதன் இணக்கம் பற்றிய அவரது கருத்துக்கள் மனித மனதை இறைநிலை நோக்கி திருப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன. மனித உணர்வின் தனிப்பட்ட தருணங்களை வரையறை செய்துள்ள அவரது கருத்துக்கள் வெவ்வேறு நபர்களுக்கானதாக இருப்பினும் முழுசமூகத்தின் அகமன பிரதிபலிப்பாகவும் அமைகின்றன. அத்தாரின் படைப்புகள் முழுவதும் வெளிப்படுவது ஞானம் மற்றும் ஆன்மீகத்தின் இணக்கம்.
“அத்தார் எனது ஆன்மா. ஸனாயி எனது கண்கள். நான் இவ்விருவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன்’’ என ரூமி குறிப்பிடுவதன் மூலம் சூஃபிசத்தின் இறைநிலையில் அத்தாரின் முக்கியத்துவத்தை உணரலாம். ரூமியின் படைப்புகளில் குறிப்பாக “மஸ்னவி”யில் அத்தாரின் உள்ளொளிக் காட்சிகள் பலமுறை குறிப்பிடப்படுகிறது.
அத்தாரின் இறுதிக்காலம் மிகவும் துயர்மிக்கது. நிஸாப்பூர் மீதான மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் படையெடுப்பின் போது மங்கோலிய வீரனிடம் பிடிபடும் அத்தார் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.
“Drink the wine of mystic knowledge,
But don’t then forget to keep your lips closed.
It’s never a good time
To sell the Divine Secret!
Should you face any troubles,
Don’t babble and gush
Like the mountain spring.
If you remain silent,
You will then become the sea.”””
.– .Attar of Nishapur
Tr from Persian by David and sabrineh fideler
குறிப்பு:-கட்டுரைக்கு பயன்பட்ட நூல்கள்
1. The way of the Sufi -Idriesh Shah
2. The conference of the Birds-Attar -tr by Afkham Darbandi and Dick Davis
3. In the bazaar of love -Amir khusrow
4. Rumi -Peter Washington
5. Love’s Alchemy – David and Sabrineth Fideler
6. பாரசீக மகாகவிகள்- குளச்சல்யூசூஃப்
7தாகங்கொண்டமீனொன்று- சத்தியமூர்த்தி
8. ரூமி கவிதைகள்- க. மோகனரங்கன்
அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.