எண்ணங்களாலான சிறகுகளை
அணிந்துகொண்டு
பறந்து மேலே ஏறும்
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்
நெய்தல் சரிவின் மணலை
இறுகப் பற்றி
இன்னும் அசைகின்றது
வண்ணங்கள் கலந்து நெய்யப்பட்ட
சிறகுகளின் வாசனை
மூச்சை அடக்கும் போதெல்லாம்
அலைகள் சாயத்தை
தானம் பெற்று
அமிழ்த்தி கடக்கிறது
ஆதிரையிட்ட
மென்மையான சிறகுகளின்
சாம்பல் வண்ணங்கள்
சாயம் தளராமல்
கடலினுள்ளே
வெளிறி ஓடுகிறது
கரையிலிருந்து.
**********
தலையை வாரிக்கொள்ள
பிடிக்கவில்லை
தாடியைத் திருத்திக் கொள்ள
பிடிக்கவில்லை
மனம் விட்டு சிரிக்க
முடிவதில்லை
தனியாக நின்று பேசுகிறேன்
நாய் ஒன்று மட்டும்
காலருகே வந்தமர்ந்து
அவ்வப்போது தலைதூக்கிப்
பார்க்கிறது
அது பார்க்கும் போதெல்லாம்
கேள்வி கேட்கிறது
என் பேச்சுக்கிடையில்
புலம்பலுக்கிடையில்
அதற்கும் பதில் சொல்கிறேன்
நீ முன்பு பார்த்தவன்
புலம்பிக் கொண்டிருந்தவன்
நானில்லை
அவனது அடையாளங்கள்
என் இடதுபக்க தாடியில்
செம்பட்டை பூத்த
ஒரு மயிருக்குள் இருக்கலாம்.
நன்றாக உற்றுப் பார்..
நீ பார்த்தவனைப் போன்ற
மற்றொருவன் நான்
இன்னும் பலரைப் பார்க்கும்
வாய்ப்பு உனக்கு உண்டு
அப்போது அடையாளம் பார்க்காது
வந்தமர்பவனிடம் ஆறுதல் சொல்
இப்போது போய்விடு
நான் தனியே பேச வேண்டும்…
**********
திறக்கப்பட்ட கூண்டினுள்
அடைந்து கிடக்கும் குருவிக்கு
மூச்சு முட்டுகிறது
இதயம் வலிக்கிறது
குருவியின் இதயம்
மரத்தினுள் ஒட்டிய நாளில்
இரண்டு வால்வுகளை
வாங்காமல் வந்ததாம்
குடல்கள் கொதித்து
ரத்தமாகும் குழம்பில்
கரையாத இரண்டு தசைகள்
இதயத்தை மூடிய வலியில்
வீச்சம் கொப்பளித்து
மூச்சு முட்டுகிறது.
திறந்து விட்டும் சுற்றி திரிய
தன்னை அறிய
சாய்ந்து உட்கார முடியாது
வீச்சத்தில் உழலும் குருவியின்
ரோமங்கள் மொத்தமாக உதிரும்
அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.