துவாரகாவின் குள்ளர்கள் உலகம்

துவாரகா குள்ளர்களை பலவாறு கறபனை செய்து பார்த்தாள். அவளும் குள்ளராகும் முயற்சி செய்து பார்த்தாள். குள்ளர்கள் என்பது குள்ளர்களைப் பற்றி மட்டுமானதல்ல.

குள்ளம் என்றாலே நம் மனதில் சிறியவை, இழிவானவை, கீழானவை என்றுதான் வரும் இல்லையா? என அவள் கேட்டாள்.

குள்ளர்களை நான் சந்தித்தேன். அவர்கள் ரோட்டில் அழகான பாடலொன்றை பாடிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடுத்தெருவில் சாக்கடை அடைத்துக் கொண்டு ஓடியது யாருமே தெருவில் உள்ளவர்கள் அதை சுத்தம் செய்ய முன் வரவில்லை.

ஆனால் அவர்கள் பாடலை நிறுத்தி விட்டு அனைவரும் சேர்ந்து முகம் சுழிக்காமல் அவற்றை சுத்தம் செய்தார்கள். நான் எட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு நானும் அவர்களுக்கு உதவ போனேன். என்னை அவர்கள் நீ சிறியவள் அதனால் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்று துவாரகா அவளது அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்படித்தான் எப்போதும் குள்ளர்கள் பற்றி சொல்லிக் கொண்டிருப்பாள். அதனால் அவளின் மனதை வேறு கோணத்தில் மாற்ற ஜாதவ்  பயேங் பற்றியும், அவர் ஒருவர் தனியாளாக இருந்து முப்பது வருடங்களாக 1360 ஏக்கர் காட்டை உருவாக்கியவரைப் பற்றியும். அவர் ஆற்றுப் படுகையில் மரம் வளர்க்க எறும்புகளை பிடித்துப் போய் மண்ணில் விட்டு அம்மண்ணை வளப்படுத்த எறும்புகள் உதவியது பற்றியும் சொன்னார் அவளுடைய அப்பா. 

அன்றிலிருந்து அவளுக்கு எறும்பை பற்றி அறிந்து கொள்ள ஆசை வந்தது அதனால் எறும்புகள் கூடவே சென்று அது பொந்தில் என்ன செய்கின்றன என்று பார்க்க ஆசைக் கொண்டாள்.

அன்று இரவு அதற்கான ஏற்பாட்டில் அவளுடைய அப்பா ஒரு மருந்தை அவள் மீது தெளித்தார். அவளும் குள்ளமாகிய விட்டாள்.

உடனே போய் ஒரு எறும்பை பின் தொடர்ந்தாள்.

அது ஒரு குகைக்குள் சென்றது. அங்கு பார்த்தால். நிறைய குள்ள மனிதர்கள். அவர்கள் எல்லோரும் கூட்டாக கூட்டாஞ்ச்சோறு செய்து சாப்பிட்டார்கள்.

அவர்களில் சிலர் மிக அழகான ஓவியத்தை மலைகளின் பகுதிகளில் வரைந்து வைத்திருந்தனர்.

பெண்களை அவ்வளவு மதித்தார்கள் குள்ளர்கள். பெண்கள்தான் அங்கே வழிகாட்டிகளாக இருந்தார்கள். அங்கே பெண்கள் யாருமே விதவைகள் இல்லை. ஆச்சர்யம்.

அவர்களின் பத்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எல்லோரும் தனியாக ஒரு ஆல மரத்தடியில் கட்டப்பட்ட இடத்தில் கல்வி கற்க சென்று விட்டார்கள். யாருமே வீட்டில் இல்லை.

அந்த பள்ளியில் ஒருத்தருக்கு விதை எப்படி வளர்கிறது என அவர்களே குழு அமைத்து கற்கும் அளவுக்கு சுதந்திரமும் நேரமும் கொடுக்கப்பட்டன. எல்லோரும் அதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து அவற்றை ஆவணப்படுத்தினார்கள்.

துவாரகா தனது ஸ்கூல் டீச்சர் பிரம்புடன் நிற்பதை நினைத்துப் பார்த்தாள். அவள் பள்ளியில் பூச்செடிகளை பார்க்கக் கூட அனுமதி கிடையாது.

ஆனால் இங்கோ ஒரு குழந்தைகள் குழு பூக்கள் எப்படி மலர்கின்றன என்று ஆராய்ச்சி செய்து அதை அடுத்த குழுவிடம் சொல்ல அந்த குழு மலரிலிருந்து காய்கனிகள் எப்படி உருவாகுகின்றன என்றெல்லாம் படித்தார்கள்.

‘ச்சே’… நெட்டையர்கள் உலகம் மிகவும் மோசம் என்று நினைத்துக் கொண்டாள் துவாரகா.

அப்போது, இவள் நின்றதை பார்த்த சிவப்பு எறும்புகள் படை ஒன்று இவளை சூழ்ந்து கொண்டு அவளை இராணியிடம் கொண்டு சென்றன. அங்கு எல்லாமே ராணிதான்.

துவாரகாவை அவர்கள் நீதி மேடையில் நிறுத்தி முறையான விசாரணை தொடங்கியது. துவாரகாவின் தரப்பிற்கு அங்கேயே சில எறும்புகள் நியமிக்கப் பட்டன. குள்ள மனிதர்கள் நியாயத்தை கேட்டாராய வந்திருந்தனர்.

அப்போது அனுமதியின்றி குகைக்குள் நுழைந்தது மிகப்பெரிய குற்றம். அதனால் அவளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஒரு எறும்பு சொன்னது.

மேலும் அவள் குள்ளமாக இங்கு பிரவேசித்ததும் குற்றம் என எறும்புகள் வாதிட்டன.

அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என ராணி எறும்பு யோசித்து கொண்டிருக்கையில்.

ஒரு எறும்பு வந்து துவாரகாவை தனக்கு முன்னேமே தெரியும் ஒரு நாள் என்னை ஆற்றில் உயிருக்காக போராடிய போது அங்கிருந்த அரச இலையை மிதக்க விட்டு என்னை காப்பாற்றியவள் இவள்தான் என்று சொன்னது அந்த சின்ன எறும்பு.

அதெல்லாம் அவளை காப்பாற்ற முடியாது அவள் ஏன் குள்ளமாக வந்தாள் அது குற்றமே அதற்கு முன் அவளை இந்த மருந்தை தெளித்து நெட்டை மனிதராக்க வேண்டும் என்று அந்த மருந்தை அவள் மேல் தெளிக்க வந்தன எறும்புகள்.

நிறுத்துங்க…நிறுத்துங்க…என சின்ன எறும்பு சத்தம் போட்டதை கண்டு கொள்ளாமல் அவைகள் ஊற்றி விட்டன.

ஆ என சத்தமிட்டு தூக்கத்திலிருந்து விழித்தவள் மேல் அவனது தம்பி உச்சா போயிருந்தான்.

அவளின் அம்மா “என்னடி ஆச்சு” என்று கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் பயத்திலும் குள்ளர்கள் உலகத்தை பார்த்த ஆனந்தத்திலும் திரும்ப தூங்கி விட்டாள் துவாரகா.

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *