ங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.

அவள் சொல்லி விட்டுப் போகவும் கட்டிலில் கையை ஊன்றி எழுந்து, சேலையைச் சரியாகக் கட்டிக் கொண்டு, வாசலுக்கு வந்தவள் வெளியே வேப்ப மரத்தூரில் அமர்ந்திருந்த ராமஜெயத்தைப் பார்த்தாள்.

அவரும் அவளை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாய் லேசாகச் சிரித்தபடி, ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தித் தலையை ஆட்டி அவருக்குப் புரியும் பாவனையில் கேட்டாள்.

‘ஒண்ணுமில்ல… போ… போய் பார்த்துட்டு வா’ என்பதாய் அவரும் தலையசைத்தார்.

அதற்கும் லேசாகச் சிரித்தபடித் தலையசைத்து விட்டு இடது காலை மெல்ல இழுத்து இழுத்து நடந்தபடி அலுவலகத்தை நோக்கிப் போனாள்.

எல்லாருக்கும் ரங்கியான அவளின் முழுப்பெயர் ரங்கநாயகி.

பிறவியிலேயே இடது காலை மெல்ல இழுத்துத்தான் நடப்பாள். அம்மா வழிச் சொந்தமான மச்சான் முறைக்காரனான பூசைத்துரைக்கு மனைவியான போது அவளுக்கு வயசு பதினெட்டு. பெரும் விவசாயக் குடும்பத்தின் முதல் மருமகள் என்பதாலும், மாமியாக்காரி சீக்கிரமே இறந்து விட்டதாலும் எல்லாப் பொறுப்புக்களும் இவள் தலையில்தான் விழுந்தது. கொழுந்தன்கள், நாத்தனார்கள் கல்யாணம், நல்லது கெட்டது என எல்லாவற்றையும் இவளும் பூசைத்துரையும்தான் நின்று செய்து வைத்தார்கள். அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை ரங்கநாயகி எது சொன்னாலும், எது செய்தாலும் அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்பமே தன் பேச்சைக் கேட்டதால் தலைக்கனம் கொள்ளாது எல்லாரையும் அரவணைத்து நடந்து கொண்டாள். ஊருக்குள்ளும் ரங்கநாயகியின் பேச்சுக்கு மரியாதை இருந்தது. எல்லார் மனதிலும் அவள் இருந்தாள்.

பங்கு பாகம் பிரிக்கும் போது கூட அண்ணனும் அத்தாச்சியும் என்ன சொல்றாங்களோ அதுதான் இங்க எங்களோட முடிவும்… அவங்க இஷ்டப்படி பிரிங்க எனக் கொழுந்தன்கள் இருவரும்  சொல்லிய போதும், மூவருக்கும் பின்னாட்களில் பிரச்சினை வராத வண்ணம் சரி சமமாய் பங்கு பிரிக்கப்பட்டது. மூவரும் தனித்தனியே இருந்தாலும் கடைசி வரை அண்ணன் தம்பிகளுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மூவரும் அடுத்தடுத்துப் போய்ச் சேர, மகன்களை அண்டிப் பிழைக்கும் வாழ்க்கையில் சின்னவளுக ரெண்டு பேரையும் பிள்ளைகள் வைத்துப் பார்த்துக் கொள்ள, பார்த்துப் பார்த்துச் செல்லமாய் வளர்த்த ஒரே மகன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டான்.

இது மதுரைக்கு அருகில் இருக்கும் ‘எம்.கே.ஆர் அன்பாலயம்’ . இங்கு பணிப்பெண்கள், நர்ஸ், காப்பக மேனேஜர், வாட்ஸ்மேன் எனப் பலர் பணியில் இருந்தார்கள். உடல் நலமில்லாமல் போனால் மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர். செந்தில் வந்து பார்த்துச் செல்வார். அதற்காக அவர் எதையும் வாங்கிக் கொள்வதில்லை. தன்னாலான உதவி என இந்தச் சேவையில் அவரும் இணைந்து கொண்டுள்ளார். எல்லாருமே நல்ல குணம் கொண்டவர்களாய், கடிந்து பேசாதவர்களாய் இருந்ததுதான் இந்த முதியோர் இல்லத்தின் சிறப்பு.

என்னுடன் கூட்டிப் போய் வச்சுக்கிறேன்னு மருது சொன்னதும் அதுக்கு அங்கயெல்லாம் சரி வராது. நீங்க ரெண்டு பேரும்  வேலைக்குப் போறிங்க , இங்க தாயபுள்ளயன்னு ஒட்டிக்கிட்டு இருக்க மனுசி அங்க பேச்சுத் தொணைக்குக் கூட ஆளில்லாம  வெறுமையா உணரும். இங்கயே இருக்கட்டும் நாங்க பார்த்துக்கிறோம். நீ லீவு நாளுல வந்து பாத்துட்டுப்போ… அப்பப்ப ஒரு வாரம் பத்து நாள் கூட்டிக்கிட்டுப் போய் வச்சிக்க எனச் சித்தப்பாக்களின் குடும்பத்தினர் சொன்னபோது நான் நல்லா, வசதியா இருக்கும்போது அது எதுக்கு இங்க தனியா இருக்கணும் என மறுத்து, மதுரை ஒத்தக்கடையில் இருக்கும் தனது வீட்டுக்கு கூட்டிவந்தான்.

வந்த சில நாட்களிலேயே கை பட்டா குத்தம் கால்பட்டாக் குத்தம்ன்னு சண்டையை ஆரம்பித்தாள் மருமகள் ராகவி. கொஞ்ச நாளில் இவங்க இங்க இருந்தா நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன் எனப் போர்க்கொடி தூக்கி முத்துவை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விடுமுறை நாளில் ‘அம்மா வா நாம ஒரு இடத்துக்குப் பொயிட்டு வருவோம்’ எனச் சொல்லித்தான் காரில் கூட்டி வந்தான் மருது. இங்கு வந்ததும் ‘அம்மா இங்க இருந்துக்க… இவங்க உன்னைய ரொம்ப நல்லாப் பாத்துப்பாங்க. அப்பப்ப நான் வந்து உனக்கு வேணுங்கிறதெல்லாம் வாங்கித் தந்து  பாத்துக்கிறேன். எனக்கு என்னோட குடும்பம் சண்டையில்லாம, சுமூகமாப் போய்க்கிட்டு இருக்கணும்ன்னா இதைவிட வேற வழி தெரியலைம்மா’ எனக் கண் கலங்கச்  சொன்னதும்அவன் கையை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள்.

 ‘ஏம்ப்பா நா பாட்டுக்கு ஊரிலேயே இருந்திருப்பேனே… நானும் அதைத்தான் சொன்னேன்… உன்னோட சின்னாத்தாளுகளும் அதைத்தானே சொன்னாளுக. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. என்னைய ஊர்லயே கொண்டு போயி விட்டுடேன்… அங்கதான் ஆத்தா அக்கான்னு பாத்துக்கப் புள்ளைங்க இருக்குதுகளே’ என்றவளிடம் ‘அங்க இருக்கதைவிட இங்க இருக்கதுதான் நல்லது. இனி அங்க கொண்டு போய் உன்னைய விட்டா மருமகள் பாக்கலைன்னு வீணாவுல அவளைத் திட்டுவாங்க… கூடவே என்னையும். நல்லது கெட்டதுக்குப் போனாலும் ஏதாவது மனசு வருந்துற மாதிரி நடக்கும். உனக்கிட்டயும் இல்லாத்தையும் பொல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து நமக்குள்ள பிரச்சினை ஆக்கி விட்டுருவாங்க. இங்க அதுக்கெல்லாம் வேலையில்லை. என்ன வேணுமின்னாலும் நான் வாங்கியாந்து தந்துருவேன்… இங்கயும் நல்லாப் பாத்துப்பாங்க. அப்புறம் இனிமே நீ தனியா சமைச்செல்லாம் சாப்பிடமுடியாது. மத்தவங்கள எதிர்பார்த்து இருந்தா அவங்க மனசு வருந்துற மாதிரி எதாவது சொல்வாங்க. அதெல்லாம் வேண்டான்னுதான் இந்த முடிவு.’ என்று அவன் சொன்னதும் ஆறுதலாய் பற்றியிருந்த கையை அவசரமாக விடுவித்துக் கொண்டாள்.

சில விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, மேலாளரிடம் விபரங்கள் பேசி, சொல்லி அவளை விட்டு விட்டுப் போனான். அவன் சொல்லிச் சென்ற போது அவனைச் சுமந்த வயிறு தகித்துக் கொண்டிருந்தது.

ஒரு குடும்பத்தின் ராணியாக இருந்தவள் அநாதையாக வாழப் போற வாழ்வின் முதல் நாள் இரவை அழுதே கழித்தாள்.

யாரோடும் ஒட்டவில்லை… எல்லாருமே ஏதோ ஒரு சோகத்தைச் சுமந்து திரிவதாய் அவளுக்குப் பட்டாலும் சில நேரங்களில் மகிழ்வாய்த்தான் இருந்தார்கள். பலர் பல்லாங்குழி, தாயம் எனப் பொழுதைக் கழித்தார்கள். இவளையும் கூப்பிட்ட போது மறுத்துவிட்டாள்.

தன் மகன் இப்படிப் பண்ணுவான் என நினைக்காத அவளின் மனது அவனின் செய்கையைத் தாங்காமல் பல நாட்களுக்கு அழுது தீர்த்தது. பூசைத்துரை உயிரோடு இருக்கும் போதே ‘எனக்கு முன்னால நீ போயிட்டா நான் எப்படியும் ஓட்டிப்பேன், ஆனா நான் போயி நீ இருந்தா உன்னைய உன்னோட மகன் பார்க்கமாட்டான்னு தோணுது’ எனச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம்  ‘என்னோட வளர்ப்பு அப்படியில்லை, அவன் என்னைய வச்சித் தாங்குவான்’ என்று அவள் சொன்ன போது ‘அவனுக்கு வந்திருக்கவ உன்னோட வளர்ப்பு இல்லைங்கிறதை மனசுல வச்சிக்கோ’ என்று சிரித்தார். அவர் சொன்னது எத்தனை சரியாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

வந்து நாட்கள் ஆனபோதும் அவள் சுருண்டு சுருண்டு படுப்பதைப் பார்த்து அருகில் வந்து ‘இப்ப என்னாச்சு… இதெல்லாம் சகஜந்தான். இங்கே கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கோம். நூறு பேர்ல என்னயப் போல சில பேருக்கு பிள்ளைங்க இல்லை. கட்டுன துணையில்லை. கடைசி காலத்துல தனியா இருக்க வேண்டாமேன்னு இருக்க சொத்துக்களை எல்லாம் அநாதை இல்லங்களுக்கோ இல்ல சொந்தபந்தத்துக்கோ எழுதிக் கொடுத்துட்டு இங்க வந்தவங்க. நானும் அதில் ஒருத்தன்தான். இங்க வந்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு. ரொம்ப நல்லாயிருக்கேன். உடம்பு முடியலைன்னா சொல்லு எங்கிட்ட மருந்து மாத்திரை இருக்கு… அதுபோக இங்க இருக்க நர்ஸ் ரொம்ப நல்லவ… நல்லாப் பாத்துப்பா. அதுபோக ரொம்ப முடியலைன்னு சொன்னா உடனே சிவக்குமார் சார் வருவாரு… இல்லைன்னா வேற டாக்டரை அனுப்பி வைப்பாரு… உறவுகளோட இருக்கதைவிட இங்க மகிழ்ச்சியா இருக்கலாம்’ என்றபடித்தான் அறிமுகமானார் ராமஜெயம்.

அவரின் அணுசரனையான பேச்சு ரெங்கநாயகிக்குப் பிடித்துப் போக, அதன் பின்னான நாட்களில் அவருடன் தனது நட்பை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டதுடன் மற்றவர்களுடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். எல்லாருடனும் விளையாட, டிவி பார்க்க என சகஜமான நிலைக்கு மாறிப் போயிருந்தாள். இப்போதெல்லாம் ரங்கி இல்லேன்னா அந்த இடம் நல்லாயில்லைன்னு சொல்ற அளவுக்கு பெரும்பாலானோர் மனதில் இடம் பிடித்து விட்டாள்.

ராமஜெயத்துக்கு ஏனோ அவள் மீது பிரியம் அதிகமாக இருந்தது. அவளுக்கும் அது பிடித்திருந்தது. அந்த அன்பில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. சிறு குழந்தைகளைப் போல் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் அதென்ன ராமஜெயத்துகிட்ட மட்டும் பேசுறே என ரெங்கநாயகியிடமோ, எங்களைவிட உனக்கு ரெங்கநாயகியை ரொம்பப் பிடிச்சிருக்குல்ல என ராமஜெயத்திடமோ கேட்டால் எங்களோட அருகாமை எங்க வலிகளை மறக்க வைக்குது. எங்களோட அன்புல எந்த நெருடலும் இல்லை… குழந்தைத்தனமான நட்பு என்னைக்குமே தூய்மையானதுதான் என்ற பதில்தான் இருவரிடமும் இருந்து வரும்.

இருவரில் இருவருக்கு உடம்பு முடியாமல் போனால் மற்றொருவர் அருகில் இருந்து பார்த்துக் கொள்வதைப் பார்த்து ‘உங்க ரெண்டு பேருக்கும் எங்களோட உதவியெல்லாம் தேவையில்லை, ரெண்டு பேரும் மாத்திமாத்திப் பார்த்துப்பீங்க… நல்ல நட்பு’ எனச் சிரித்த நர்ஸிடம் ‘நம்ம மேல அக்கறை கொண்ட, பிரதிபலன் எதிர்பார்க்காத நட்பு கிடைப்பது வரம். அது எங்க ரெண்டு பேருக்கும் இந்த வயசுல கிடைக்கணும்ன்னு இருந்திருக்கு. கிடைச்சிருச்சு. மனசால நாங்க எந்தக் களங்கமும் இல்லாம பழகுறதாலதான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணிக்க முடியுது. இதுவே வயசு காலமா இருந்தா, இப்படிப் பழகினா அதுக்கு ஒரு கதையில்லை, நூறு கதை கட்டியிருப்பாங்க. இங்கயே ஒரு சிலர் எங்க நட்பைத் தப்பாத்தான் பேசுறாங்க, பார்க்கிறாங்க ஆனா எங்க மனசு அதெல்லாம் சுமக்காம சுத்தமா இருக்கு’ என்றார் ராமஜெயம்.

மெல்ல நடந்து அலுவலகத்தை அடைந்தாள்.

மகனும் மருமகளும் உட்கார்ந்திருந்தார்கள். கூடவே பேத்தி தர்ஷிகாவும் இருந்தாள். நல்லவேளை அவனுக்கு ஆண்பிள்ளை இல்லை இருந்தால் அது நாளைக்கு அவங்களையும் இது போல ஒரு இல்லத்தில் கொண்டு வந்துதான் விடுவான்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி ஒண்ணுமே பேசாமல் அவர்கள் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“அம்மா… நல்லாயிருக்கியா..?”

“இங்க எனக்கென்னப்பா குறைச்சல். நல்லாயிருக்கேன்”

“அத்தை உடம்பெல்லாம் எப்படியிருக்கு…?”

“உடம்புக்கென்ன… அது இப்ப ரொம்ப நல்லாயிருக்கு. மனசுக்குத்தான் நோவு… அதைச் சரி பண்ண மருந்து மாத்திரை இல்லையே”

“ரெங்கிப் பாட்டி உங்களுக்கு ஒரு நல்ல செய்தி” சிரித்தபடி அந்தச் சூழலை மாற்றும் விதமாக அவளைப் பார்த்துச் சொன்னாள் மேனேஜர் ராஜலெட்சுமி.

“என்னம்மா…?”

“உங்க பையன் உங்களை மறுபடியும் வீட்டுக்குக் கூட்டிப் போறேன்னு சொல்றார்”

அவள் எதுவும் பேசவில்லை.

பேத்தி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கற்பனையாய் ஏதோ ஒரு விளையாட்டில் தீவிரமாய் இருந்தாள். கையில் வைத்திருக்கும் பொம்மையை வைத்துக் கார் ஓட்டினாள்…  சாப்பாடு ஊட்டினாள்… அதனுடன் மழலை மொழியில் ஏதோ பேசினாள்.

ரங்கநாயகி பேத்தியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். அப்பத்தான்னு கூட சொல்லலையேன்னு அவளுக்கு வருத்தம் இல்லை காரணம் பெத்தவங்க வளர்ப்பு எப்படியோ அப்படித்தான் பிள்ளைகள் இருப்பார்கள் என்று நினைத்தவளுக்கு தன்னோட வளர்ப்பு அப்படியில்லையே என்ற வருத்தம் மனசுக்குள் எழும்பிச் சுருக்கெனக் குத்தியது. மகன் பால் குடித்த மார்பைத் தடவிக் கொண்டாள்.

“என்ன ரங்கிப்பாட்டி சொன்னதுக்குப் பதிலே இல்லை. பல பேர் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்து மறுபடியும் தன்னோட வீட்டுக்குப் போகும் போது ரொம்ப மகிழ்ச்சியாப் போவாங்க” என்றாள் ராஜலெட்சுமி.

“இதுல சந்தோசப்பட என்ன இருக்கு… அன்னைக்கு நான் பொண்டாட்டியோட சந்தோசமா இருக்கணும்ன்னா நீ இங்க இருன்னு சொல்லிட்டுப் போனான். இன்னைக்குப் பொண்டாட்டியோட இங்க வந்து வாங்கன்னு சொல்றான். அவ மனசு மாறிட்டாளா…? இல்லை இவன் சந்தோசத்தோட பெத்தவ முக்கியம்ன்னு மனசு மாறிட்டானா… இதுலதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கும்மா”

“அம்மா” என்றவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும்  ராஜலெட்சுமியைப் பார்த்தாள்.

“அத்தை நாங்க செஞ்சது தப்புத்தான்…. அதெல்லாம் மறந்துருங்க. வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்”

“நம்ம வீடா… இப்ப இதுதான் என் வீடு… இங்க இருக்க மனுசங்கதான் எனக்கு உறவு… என்னால உங்க வாழ்க்கையில பாதிப்பு வரக்கூடாதுன்னு இப்பவும் நினைக்கிறேன்” என்றாள் படக்கென.

“ரங்கிப் பாட்டி அப்படியெல்லாம் பேசக்கூடாது. இந்த இடம் யாரையும் எடுத்தெறிஞ்சு பேசச் சொல்லித் தரலை. தப்புப் பண்ணாதவங்க யார் இருக்காங்க… அன்னைக்குச் சூழல்ல அந்த முடிவு சரியானதா இருந்திருக்கும். அதனால அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாங்க. இப்ப அவங்களே உங்களைக் கூட்டிப்போக வந்திருக்காங்க… போய் பேரன் பேத்தியளோட சந்தோசமா இருங்க… கடைசி காலத்துல அதைவிட சந்தோசம் வேற என்ன இருக்கு”

“நான் யாரையும் எடுத்தெறிஞ்சி பேசலம்மா… இவனோட அப்பா இருக்கும் போதே சொன்னாரு… அந்த மனுசன் தீர்க்கதரிசிம்மா… அவரு சொன்னபடிதான் நடக்குது. பேரம்பேத்திகளோட சந்தோசமாவா… அட ஏம்மா நீங்க வேற… என்னைய யாருன்னே அதுகளுக்குத் தெரியாமத்தான் வளர்ந்திருக்குக. சரி புள்ள விரும்புறானேன்னு வேணும்ன்னா போகலாமே ஒழிய, பேரம்பேத்தியளோட சந்தோசமாயிருக்கலாங்கிற மகிழ்ச்சியோடல்லாம் போ முடியாதும்மா. அப்படியான மகிழ்ச்சியெல்ல்லாம்செத்துப் போயி வருசமாயிருச்சும்மா… என்னதான் இருந்தாலும் பெத்த மனசு பித்துத்தானே.. திட்டுனாலும் வச்சாலும் நம்மளோட புள்ளங்கன்னுதானே நிக்கும்” சிரித்தாள்.

“சரி… உங்க பெட்டியெல்லாம் எடுக்கணுமில்ல… உங்க மகனைக் கூட்டிக்கிட்டுப் போய் எடுத்துக்கிட்டு வாங்க…”

“இருக்கட்டும்மா… நான் போயி எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன்… அவுக இங்கயே இருக்கட்டும். அந்த அறைக்கெல்லாம் வரவேண்டாம்… வரவே வேண்டாம். இப்பன்னு இல்லை அவனோட வயசான காலத்துலயும் அவன் இந்த மாதிரி இடத்துக்கு வரவேண்டாம்.” என்று அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தவள் “காஞ்சனா இருக்காள்ல அவளை வச்சி எடுத்துக்கிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து எல்லாரையும் பார்த்துவிட்டுக் காலை இழுத்தபடிஅறையை நோக்கி நடந்தாள்.

வேப்ப மரத்தடியில் எல்லாரும் கூடி இருந்தார்கள்.

‘உன் மகன் வந்து கூட்டிப் போறானா…?’

‘இப்பவாச்சும் மனசு மாறி வந்தானே… இனி நீ நல்லாயிருப்பே’

‘பழசெல்லாம் மனசுல வச்சிக்காதே…’

‘சந்தோசமாப் போ…’, ‘எங்களையெல்லாம் மறந்துடாதே…’ என்று ஆளாளுக்குச் சொல்ல, ரங்கநாயகி எதுவும் பேசாமல் நின்றாள். அவளின் கண்கள் ராமஜெயத்தைத் தேட, அவர் சற்றே தள்ளி மஞ்சநெத்தி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கிப் போனாள்.

அருகில் ஒரு உருவம் வந்து நிற்பதை நிழலைப் பார்த்து உணர்ந்து ஏறிட்டுப் பார்த்தார்.

அவரின் கண்கள் கலங்கியிருந்தன.

“என்னாச்சு…?” என அவரின் அருகில் அமர்ந்து தோளை ஆதரவாய்ப் பற்றினாள்.

“ஒண்ணுமில்ல… காஞ்சனா எல்லாம் சொன்னா… சந்தோசம். இனி நீ சந்தோசமா இருக்கலாம்… வலியைச் சுமக்க வேண்டியதில்லை” வறட்சியாய் சிரித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறே..?”

“இல்ல சந்தோசமா இருக்கலாம்ன்னு சொன்னியே… அப்ப நான் இங்க சந்தோசமாயில்லையா..?” அப்படியொரு கேள்வியை அவளிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை.

“அப்படிச் சொல்லல…”

“ம்… உண்மையிலேயே இங்க அதுவும் உங்களோட, குறிப்பா உன்னோட இருக்கதுல நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன். நீ எனக்குத் தோழமையா மட்டுமில்ல, சகோதரனா, தகப்பனா இருந்தே. இதைவிட எனக்கு வேற எதுவும் சந்தோசம் இல்லை.. தெரியுமா..?”

“சரி… அதுக்காக இங்கயே இருக்க முடியுமா..? நம்ம நட்பு வேற பிள்ளைங்க பாசம் வேற அதைப் புரிஞ்சிக்க. சரி நீ இப்ப எதையும் நினைக்காம கிளம்பு… இனி இருக்கப் போற நாட்களை மகிழ்ச்சியாக் கழி. பையன் வெயிட் பண்ணுவான்” என்றபடி அவர் எழுந்தார்.

“ம்… போலாம்… காத்திருக்கட்டும்…”

“காத்திருக்கட்டும்ன்னு சொல்றது குரூரமாத் தெரியுதே. என்ன அவங்கள நீ பலி வாங்குறியா…?”

“அதுக்கெல்லாம் மனசு வராதுப்பா… என்னதான் இருந்தாலும் என்னோட ரத்தமாச்சே… அவனைப் பலி வாங்கி அதுல நான் என்னத்தைச் சாதிக்கப்போறேன்”

“ம்… இப்பச் சொன்னே பாத்தியா… அதுதான் தாய்மை. புள்ளையப் பலி வாங்க மனசுதான் வருமா… என்ன”

“சரி வா உள்ள போலாம்” என்றபடி முன்னே நடந்து அறைக்குள் போய் தனது கட்டிலில் அமர்ந்தாள்.

அவள் பின்னே போன ராமஜெயம் அவளுக்கு அருகில் போய் அமர்ந்தார்.

நீண்ட அமைதிக்குப் பின் அதை உடைக்கும் விதமாக “நீயும் போயிருவே. இந்தக் கட்டில் சில நாள் வெறுமையா இருக்கும். அப்புறம் வேறொரு ஆத்மா இங்க வந்துரும்… ஆனா எனக்குள்ள இருக்க வெறுமை எப்பவும் மாறது. வெறுமை வெறுமைதான்”

அவள் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

ராமஜெயம் தரையைப் பார்த்தபடி மெல்லத் தயக்கமாய்க் கேட்டார் “கெளம்புறியா..?”.

“இல்லை” என்றாள் தயக்கமின்றி, அவரை நேராக பார்த்தபடி.

*****

பரிவை சே.குமார்.

இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும்,  திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *