மூர்த்திக்கு விருப்பமே இல்லை என்றாலும் தம்பி சீனிகுட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனிடம் இருந்தது. கடமை என்பதினால் வலிந்து அவன் ஒன்றையும் செய்வதில்லை. காடு. அதன் முடிவில் பெரியதோர் திறந்தவெளி அதற்கும் அப்பால் அது பெரிய பாம்பென வளைந்து நெழிந்து கிடக்கிறது. கோடை முடிந்து மழைக்கால தொடக்கத்தின் மாலை கருக்கல். விசுவிசுவென மெல்லிய காற்று, அனலும் சற்றே குளிருக்கான துவக்கமும் அதில் ‘சீனிக்குட்டி வேணான்டா நோம்பிக்கு போயிட்டு வந்து மீனு புடிக்கலாம்’ என கூறியபடி ஆடியாடிச் செல்லும் அணில் குட்டியை பின்தொடர்வதைப்போல் சீனிகுட்டியின் தடம் நடந்தான் மூர்த்தி. வெடுக்கென திரும்பி நின்று ஆச்சரியங்கள் நிறைந்த உடல்மொழியூடே ‘அண்ணாவ் நா பாத்தேன் அந்த மருதமரத்து குழியில கெண்ட கெலுத்திலாம் நெறையா கெடக்கு… இடைவெளி விட்டு மீண்டும் ஆற்றல் திரட்டிக்கொண்டு ‘நேத்து கூட பழனி வெலாங்கு ஒன்னு மேஞ்சத பாத்துருக்கான்’ என ஆச்சரியத்தின் அழகினை முகத்தில் நிறுத்திக்கொண்டு அண்ணன் இதற்கு வாயடைத்து போய்விடுவான் என நினைத்துக்கொண்டான். காவேரி படுகையின் சோலைக்குள் வெகுதூரம் நடந்த களைப்பில் மூச்சிரைத்தபடி ‘சீனிக்குட்டி அந்த குழியில பூரவும் செவுட்டு பாம்பா கெடக்குது ராஜண்ணாவோட கட்டுதூண்டிய அது அத்துகிட்டு போயிருச்சு தெரியுமா. சீனிக்குட்டி வியந்தபடி ‘செவுட்டு பாம்ப நீ பாத்துருக்கியா ணா’ என வினவினான். ‘அய்யோ நா லாம் பாத்ததுல்லபா ராஜண்ணா தான் சொன்னாரு. அவரு ஒரு தடவ செவுட்டு பாம்ப புடிச்சு வெலாங்கு னு கொண்டு போய் மீனா க்கு போட்டாறாம் அது தின்னுட்டு செத்தே போயிடிச்சினு சொன்னாரு’ என்றபடி நின்ற மூர்த்தி விதமான விடுதலையுணர்வில் இருந்தான். ‘அது ரயில்லே அடிபட்டு ல்லா செத்து போச்சி’ என புதிர் போடுவதை போல் நின்றான் சீனிகுட்டி. ‘அது எல்லாரையும் ஏமாத்த பொய் சொல்லிட்டாரு’
‘அப்புடியா’
‘ஆமா வா நாம வீட்டுக்கு போயிடலாம் நோம்பி முடிஞ்சி வந்து அப்பாவோட போயி வெலாங்கு புடிக்கலாம்’ என்றான் மூர்த்தி
சீனிக்குட்டி சமத்தாக ‘அப்ப போயிடலாம்ணே என திரும்பினான். மருதமரக்குழி எங்கோ பின்புற தொலைவில் ஒழிந்தது.
கந்தசாமி வழியிலேயே புகையிலை பொட்டலத்தை வாங்கிய கையோடு மூர்த்திக்கும் சீனிகுட்டிக்கும் உண்டான இரவு உணவுகளையும் வாங்கிகொண்டு கடையின் வாசலிலிருந்த தேய்ந்து கிழிந்த காலணிகளை தேடிக்கொண்டிருந்தான். ‘என்ன கந்தா இட்லி போகுது போல’ என்றான் முனியப்பன் பரவசமான முகம் அவனிற்கு தொடர்ந்தான், ‘நீ இட்லி வாங்கிட்டு போ அங்க ஒம்பசங்க மீன் கொழம்பு வச்சிருப்பானுங்க’ என தானாக சிரித்தான். கந்தசாமி கணநேரம் திகிலடைந்து மீண்டு ‘இந்த பரதேசிங்களுக்கு இதே வேலையா இருக்கு’ என்றான். ‘மருதமரத்து குழிக்கு போயிட்டு இருந்தானுங்க’ என முடித்தான் முனியப்பன். கந்தாமியின் கருகிய முகத்தின் கங்கு ஒளிர் விட்டது. ‘இன்னைக்கு வச்சிக்குறன் அவனுகள’ என மூர்க்கமாக மாறினான். ‘நீ வேறப்ப தாயில்லாத பசங்க மெரட்டி கிரட்டி பக்குவமா நடந்துக்க நோம்பி வேற சாட்ட நாளாயிடுச்சி’ என்றபடி கடையில் புகுந்துகொண்டான் . கிழிந்த காலணி மேலும் கிழிவதற்கு தேவையான அளவு வேகமெடுத்து நடந்தான். இட்லி குருமாவின் மணம் தொடர்ந்தன இரு நாய்கள்.
கமலா இருந்திருந்தால் சட்டி நிறைய சின்னவெங்காயம் தோல் நீக்கியும் வரமிளகாய் காம்பு நீக்கியும் ஊதாங்குழலும் கையுமாக காத்திருந்திருப்பாள். பள்ளி விடுமுறை நாட்கள் என்பது காவேரி உடனானது மட்டும் தான். குஞ்சு மீன்களானாலும் கெழுத்தி கெண்டை என்றானாலும் அதை மமதையாக வீடு வரை சேர்க்கும் கரங்கள் எப்பொழுதும் சீனிக்குட்டியினுடையது. பொறுப்பாக சுள்ளிகளை கத்தையாக கொண்டு வருவது மூர்த்தி. மீன்குழம்பு மணக்காத நாட்களே அங்கு விசித்திரமானது. பொறுக்கியெடுத்து வந்த நல்ல பழம் புளிகளை காவேரியின் உதிரியில் ஊரவைத்து, பொன்நிற தாளிப்பிற்கு பின் சட்டியில் ஊற்றுவாள் அது ‘ங்கொய்ங்’ ஒலியுடன் நீராவியாக மனம் பரப்பி மேலெழும்பும், சீனிக்குட்டி அதன் ரசிகன். அன்றும் மறுநாளும் அதற்கடுத்தடுத்த நாட்களிலும் மண் சட்டியில் இருக்கும் மீன்குழம்பு காய்ச்சிய தங்க உலோகம் ஒப்பானது. விலை ஏறியபடியே இருக்கும். கந்தசாமி பெரும் குடிகாரன் இல்லையென்றாலும் எப்போதாவது குடித்தால் அது மீன் குழம்பும் வருவலுடனும் தான். சூரையாடிச்சென்ற விசக்காய்ச்சலில் அவள் மாய்ந்து இரண்டே வருடங்கள் கூட நிறைவடையவில்லை. தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் கந்தசாமிக்கு, காய் ஒன்றிற்கு ஜம்பது பைசா வரையிலும் கிடைக்கும். சங்காமல் எழநூறு காய்கள் வரையிலும் நாள் ஒன்றிற்கு மட்டையெடுக்கும் வல்லமை கொண்டவன் என்றாலும் பாதி காயின் பைசாக்கள் கடை சாப்பாட்டிற்கே காலியாகி விடும். ‘வீட்டில் ஏது சோறு’ .
திரி தூண்டாமையினால் அரிக்கன் விளக்கு மங்கி அணையும் கடைசி நிமிடங்களில் காற்றில் அதிரும் மஞ்சள் நிற மல்லிகை மொக்கு போல் எறிந்து அதிர்ந்து கொண்டிருந்தது விட்டத்தில். சீனிகுட்டிக்கு மனசு தாளவில்லை கற்பனையில் மருதமர குழி மீன்களை நீந்த விட்டிருந்தான். விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான், கண நேரத்தில் விட்டத்தில் ஊறிய பல்லிகள் மீன் குஞ்சுகளாகின அவனுக்கு. அவ்வாறே கிடந்து உறங்கியும் போனான். மூர்த்தி கந்தசாமியின் வருகையை எதிர்பார்த்தபடி வாசலிலேயே கிடந்தான். கந்தசாமியின் வருகையை தெருநாய்கள் அறிவிக்கும் அல்லது அவன் கொண்டு வரும் இட்லி குருமாவின் வீரியமான வாசனை.
வீதியின் நாய்கள் அறிவிக்க கந்தசாமி வீட்டை அடைந்தான்.
வந்ததும் வராததுமாக செம்மங்குச்சியை கையிலெடுத்தபடி மூர்த்தியை பார்த்தான். தெருவில் வெளிச்சம் இல்லாமையினால் மூர்த்தியின் முகம் சரிவர புலப்படவில்லை கந்தசாமிக்கு, செம்மங்குச்சியின் தடிமன் காண தொண்டை கவ்வியது மூர்த்திக்கு. என்ன தெய்திருப்போம் என்பதை யூகிக்க அவகாசம் கிடைப்பதற்குள் செம்மங்குச்சி மூர்த்தியின் குதியங்காலில் அதன் நகலை பதித்தது. கிடாவின் எலும்புகளை கத்தி கொண்டு வெட்டும் ஓசை. மீண்டும் வீரியமான இரண்டு அடிகள். வீரிட்டழுதபடி குதித்து குதித்து காலின் தசைகளை தேய்த்து, நிலைகொள்ளாமலானான்.. எப்படி தடுத்து விட முடியும்? எதிர்தாக்குதல் தான் இயலுமா? ‘அப்பா அப்பா’ என அடித்தொண்டையிலிருந்து ஊளையாக கேவி கேவி அழுது கெஞ்சினான். மூக்கின் சளி கோளையாக ஒழுக நிர்க்கதியாக நின்ற மூர்த்தியின் அருகாமையில் கமலா இருந்திருக்க வேண்டும்! “யேன் தங்கமே பொன்னே மயிலே” என அணைத்துகொண்டு அவளும் விழி நனைந்து நம்பிக்கை அளித்து உறங்க வைத்திருப்பாள் அதுவொன்றே குறை மேற்படி மூர்த்திக்கு அது பழகிப்போனதுதான். கண்ணீர் சளி எச்சில் என உடலின் முக்கால்வாசி ஜலங்களில் முகம் நனைந்து, மனிதன் தீண்டும் அப்போது பிறந்த பூனைக்குட்டி சுவர் மூளையில் ஒடுங்கிக்கொள்வதை போல் அமர்ந்திருந்தான்.
‘ஆத்துபக்கம் போவியடா இனி’ என மூர்க்கம் தனிந்து உணவுப்பொட்டலத்தை கையில் தந்து உள் புகுந்து கொண்டான் கந்தசாமி.
சீனிகுட்டியின் உறக்கம் அவனை காப்பாற்றியது.
***
ஊரின் டீக்கடைகள் பரபரத்தன சூடான வடைகள் கடனாகவும் உபகாரமாகவும் தீர்ந்தன. எங்கும் அதே பேச்சு தான் ‘அட வந்தா ஆள கொல்லாம போகாதாமப்பா.. நான் என்ன சொல்றன்… என்ன மருந்து மாத்தர ..அதுலாம் அந்த தெய்வத்தோட வெளையாட்டு இவனுங்க சும்மா மாத்துர மருந்துனு ஊர ஏமாத்தலாம் நம்மகிட்ட அதுலாம் செல்லுபடியாவுமா சொல்லு, என்றபடி முனியப்பன் சுந்தரத்தை பார்த்தபடியே இருந்தான். ‘இல்லபா ஏதோ கொசு கடிக்குதாம் அதனாலனு பையன் சொல்லுறான் படிச்ச பய வேற…..என்னமோபா அந்த தெய்வத்துக்கு தான் வெளிச்சம்’ என டீ தம்ளரை உதட்டில் பொருத்தி உறிந்தான். முனியப்பன் கிளர்ச்சியுடன் தொடர்ந்தான் ‘இந்த கமலா இருக்காளே அவ சங்கதி என்னேனு நெனைக்குற’ சுந்தரம் யாரென்பதைப்போல் பார்த்தான். ‘அட நம்ம கந்தசாமி பொண்டாட்டி… அவன் ஏதோ மொறடன் கூத்தியா கீத்தியா னு சுத்துறான்… வண்டி ஓடுதா இல்லையா… இவளுக்கு அது எப்புடியோ தெரிஞ்சி போச்சி… அவளும் எதேதோ பண்ணா ஒன்னு வேலைக்கு ஆவுல.. கள்ள புருசன் வச்சிகிட்டா… தெய்வம் சும்மா உடுமா’ என சுந்தரத்தை பார்த்தான். அவன் ஒருவித ஒவ்வாமையுடன் இருந்தான். கடையின் முதலாளியும் தொழிலாளியுமான மாதையன் ‘யேப்பா நீ பேசுற பேச்சு கொஞ்சமாச்சும் அடுக்குமா பா.. பாவம் அதுவும் செத்த புள்ளைய போயி.. கெடையா கெடந்து அழிஞ்சி போயில்ல அந்த பசங்கள காப்பாத்துனா மாருல பால் ஊறனுமுனே கருக்கறுவால தூக்கிட்டு அலஞ்ச புள்ளயா’ என அங்காலய்ப்புடன் கூறினார். தூரத்தில் கந்தசாமியின் தடித்த உருவம் கண்ணில் பட அனைவரும் பேசி வைத்ததைப்போல் அமைதி கொண்டார்கள். கந்தசாமியின் கையிலிருந்த கூரான தேங்காய் மட்டை எடுக்கும் அப்புதிய கடப்பாரை முனியப்பனை மேலும் சிலையென ஆக்கியது. ‘கந்தசாமி கொஞ்சம் பசங்கள பாத்துக்க மருதமரத்து குழி பக்கமே சுத்துறானுங்க… வெசக்காச்சல் வேற வருதாம்… வீட்டுல டயரு டப்பானு தண்ணீ தேங்காம பாத்துக்க… கொசு தான் பரப்புதாம்’ என்றபடி அவன் ஏதும் கூறாமலேயே சர்க்கரை குறைவான தேநீர் போட்டு தம்ளரில் விட்டுக்கொடுத்தான் மாதையன். குடித்து விட்டு பொறுப்புடன் தம்ளரை வைத்து அங்கிருந்து நகர்ந்தான்.
கந்தசாமி தென்னந்தோப்பிற்கே சென்று மட்டை எடுக்கும் வேலையொன்று கிட்டியது. பத்து நாட்கள் தங்கி மட்டையுரிக்க வேண்டும். பக்கத்து தெருவிலிருக்கும் கமலாவின் அம்மா ருக்காயம்மாளிடம் மகன்களை ஒப்படைத்து கிளம்பினான். சீனிகுட்டி மூர்த்தி இருவருக்குமே பாட்டியை பிடித்த அளவில் அவளின் வீட்டையும் அவ்வீடு அமைந்திருக்கும் தெருவையும் பிடிக்காது. பன்றி உறுமும் ஓசையும் அதைச்சுற்றிய சகதியின் நாற்றமும், தெருவெங்கும் தேங்கி நிற்கும் நாள்பட்ட சாக்கடையின் நாற்றமுமென அங்கு ஒற்றை நாள் என்பது இருவருக்கும் யுகமென நிகழும். அதற்கிடையிலும் கந்தாமி பத்து நாட்கள் இல்லாதது சீனிக்குட்டியின் மகிழ்ச்சிக்கணக்கு பட்டியலில் சேர்ந்து கொண்டது. வரவிருக்கும் இரண்டு நாட்களும் வேறு விடுமுறை.
விடிந்ததும் விடியாததுமாக சீனிக்குட்டி மூர்த்தியை உசுப்பிகொண்டிருந்தான்; இரவெல்லாம் நல்ல தூக்கமில்லை மூர்த்திக்கு! வழக்கம் தான் மருதமரத்து குழி உரையாடல்கள். வெகு நேர உரையாடல்கள் பின் கிசுகிசுத்தபடி மெல்ல பால் திருடும் பூனைகுட்டிகள் போல் அங்கிருந்து நகர்ந்தார்கள். ருக்காயம்மாள் உள்ளே சமையல் கட்டத்தில் வெங்காயம் வதக்கிக் கொண்டிருந்தாள். தக்காளியின் போது எழும்பிய மழைச்சத்தத்தில் விருட்டென வெளியேறினார்கள்.
வெங்காயத்தாமரைகள் அகற்றப்பட்டு, குழிநீரின் குழைந்தச்சேர் மீண்டும் குழைக்கப்பட்டு, தாழ்வான கிளைகள் ஒடிக்கப்பட்டு மருதமரத்துக்குழி சூரையாடப்பட்டிருந்தது. மனித கால்தடங்களும், ஒன்றுக்கும் உதவாத இறந்த புருச்சட்டி மீன்களும் கறையில் தங்கியிருந்தன. சீனிகுட்டிக்கு ஆத்திரம் திரண்டு அழுகை வராத குறைதான். மூர்த்தியை பார்த்தான். எந்த சலனமுமில்லாமல் குழியை வெறித்தபடி நின்றிருந்தான் மூர்த்தி. குழியின் மறுபக்கம் நீரில் சலசலப்பு. அரை உயிருடன் விலாங்கு ஒன்று பம்பரமாக சுழன்று சுழன்று திரிந்தது சீனிக்குட்டியின் கண்களை அடைந்தது. குழம்பிய சேற்றில் சுவாசிக்க முடியாமல். ‘அண்ணா அண்ணா ‘ வென அலறியபடி குழியின் கரையில் ஓடினான். ‘டேய்’ என்றபடி மூர்த்தி பின்தொடர்ந்தான். ஒரே வீச்சாக குழியில் குதித்த சீனிக்குட்டி விலாங்குடன் கரை ஏறினான். மூர்த்தி பதற்றம் குறைந்து விலாங்கை வாங்கி கீழே வீசினான். அது ‘சடசட’ வென்று நிலத்தை அடித்து எம்பித்துள்ளி விழுந்து செவிகளை மூடியும் திறந்தும் சில நொடிகள் பின் அடங்கியது. ஆவலாக கையில் எடுத்தான் சீனிக்குட்டி. அது குழாயில் ஒழுகும் நீர் போல் வழுக்கி நிலம் சென்றது. சீனிக்குட்டி சிரிப்பை பார்த்திருக்க வேண்டுமே சேறு தெரித்த முகத்தோடு மூர்த்தியின் கண்ணே பட்டுவிட்டிருக்கும். ‘அண்ணா எத்தான்தண்டி பாத்தியா…. பழனி பெரிய வெலாங்க பாத்தானு அப்போவே சொன்னன்லா’ என பேரின்பத்துடன் மூர்த்தியை பார்த்தன். மூர்த்தி அடுத்து என்ன செய்வது எனும் கேள்வியுடனிருந்தான். தம்பி சீனிகுட்டியின் கொள்ளையழகையும் ரசித்தபடி நின்றிருந்தான். ‘அண்ணா அம்மாயிகிட்ட கொடுத்தா கொழம்பு வச்சி தரும் அங்கயே கொண்டு போலாமா என்றான். ‘நோம்பி சாட்ட போறாங்க அம்மாயி அப்புறம் அவளோதான் அடி வெளுத்துடும்’ என்றபடி தீவிர யோசனைகளில் மூழ்கினான் மூர்த்தி. எப்படி யோசிப்பினும் குற்றத்திற்கு தண்டனை அடி தான் அல்லவா? ‘இதைய வெட்டி உப்ப தடவி கோத்து போட்டுடலாம் டா’ என்றான். சீனிகுட்டிக்கு ஏற்கமுடியவில்லை எனினும் கந்தசாமி வந்துவிட்டால் என நினைக்க பீதி வேறு மார்க்கமில்லாமல் மூர்த்தியின் திட்டத்திற்கு தற்காலிகமாக வழிமொழிந்தான். வழக்கமான முறையில் சீனிகுட்டி விலாங்கை கைகளில் தூக்கி நடந்தான். கைக்குழியில் இலைச்சருகுகளை புதைத்துக்கொண்டான். மெல்ல தூக்கி வீரமாக முதுகில் போட்டுக்கொண்டான், முதுகில் வலதும் இடதும் அசைந்தசைந்து கடிகாரத்தின் நங்கூரம் போல் வந்தது விலாங்கு. சீனிக்குட்டி முன்னே நடந்துகொண்டு தீவிரயோசனையின் முடிவில் ‘அண்ணே பழனி சொன்ன வெலாங்கு பெருசுணே… அவன் எங்கிட்ட அவன் கைய விரிச்சி அத உடயும் பெருசு னு காமிச்சான்…. ஒரு செகண்டு தான் பாத்தான மஞ்ச மஞ்சேளுனு அப்புடியே காணமா போயிடுச்சாம்’ என மூச்சிரைக்க கூறி நடந்தான். மூர்த்தி சீனிகுட்டியின் தோள்பட்டையில் நடந்தபடி கைவத்தான் அது அவனை தடுமாறச்செய்ய, விழுவதைப்போல் நடந்து பின்னே திரும்பி அண்ணனைப்பார்த்து புன்னகைத்தான். ‘இன்னோருநாளு நாமலே புடிச்சிறலாம்’ என நம்பிக்கையூட்டி நடந்தான் மூர்த்தி. காடு தாண்டி ஊரில் நுழைந்தார்கள். அப்போது வழியில் வியந்தபடி விலாங்கை பார்த்து கடந்து சென்ற மனிதர்கள் சீனிக்குட்டியையும் மூர்த்தியையும் பெருமைக்குள்ளாகியதை போல் இவர்கள் நினைத்துக்கொண்டார்கள். காலையின் சூரியன் மெல்ல எழும்பிக்கொண்டிருந்தது.
வாசலில் ருக்காயம்மாள் சாணிக்கரைசலை ‘சல்சல்’ வென தெளித்துக்கொண்டிருந்தாள். அவளின் மங்கிய பார்வையில் மூர்த்தியும் சீனிகுட்டியும் புலப்பட்டார்கள் அருகே வரவர விலாங்கும். என்ன நினைத்தாலோ கிழவிகளுக்கே உரிய தொனியில் சண்டையிட தயாரானாள். சீனிக்குட்டி மூர்த்தியின்பின் அரைபாதி ஒளிந்து கொண்டபடி ‘ ம்மாயி மீன் கொலம்பு வச்சி தாமாயி’ என வலிந்து கூறினான். கிழவிக்கு வந்ததே ஆத்திரம் ‘அட எழவெடுக்க அப்பன் ஊருல இல்லனா அவுத்து உட்ட காளைக மாதிரி என்ன… ஒரு நல்ல நாள் பெருநாள் பாக்குறது இல்ல… எல்லாம் அவள சொல்லொனும் செல்லங்கொடுத்து கொடுத்து போயி சேந்துட்டா… நோம்பி சாட்டுற நேரத்துல கூட துரைங்களுக்கு கவுச்சி கேக்குது’ என நெருப்பில் விழுந்த பட்டாசுகளாய் வெடித்து தள்ளினாள். ஆனாலும் மூர்த்திக்கு பிடித்த வெடி. சில கணம் வெடிக்கும் பின் வேடிக்கையாய் இருக்கும். முகம் சாந்தமடைந்து மறுகணமே ‘டேய் நோம்பி முடியட்டும் தான் தங்கம்’மென கெஞ்சுவைதைப்போல் பாவனை காட்டினாள். சீனிகுட்டி பொறுமையிழந்து ‘அதுலாம் முடியாது கொழம்பு வச்சிதர முடியுமா முடியாத’ வென சிடுசிடுத்தான். ‘எடு இங்க வெலக்கமாத்த’ என பாய்ந்தாள் ருக்காயம்மாள். சீனிகுட்டியும் மூர்த்தியும் ஒன்றாய் தெறித்தோடி அங்கிருந்து மறைந்தார்கள்.
செய்வதறியாமல் மீண்டும் வந்தவழி சென்றார்கள். வழியில் முனியப்பன். ‘டேய் மூர்த்தி அவன் தான் சின்னபையன் நீயாச்சும் பொறுப்பா இருக்க வேணாமா’ என அக்கறை நிறைய கேட்டான். மூர்த்தி தலை சொறிந்தபடி என்ன கூறுவதென்று தெரியாமல் வாயடைத்து நின்றான். ‘ஒன்னு நல்லதுக்குள்ள பாத்துக்க… நோம்பி வேற சாட்ட இருக்கு ஒன்னுகெடக்க ஒன்னுனா…. கந்தசாமி வர நாளு கிழமே ஆவும் சூதானமா நடந்துங்குங்க’ என்றபடி காடுகளில் மறைந்தான். உயிர் வரை வலிக்கும் கந்தசாமியின் அடிகள் அகத்தில் தோன்றி மறைந்தன மூர்த்திக்கு. ‘சீனிகுட்டி நோம்பி வேற சாட்ட போறாங்க அப்பாக்கு தெரிஞ்சா அடி பிச்சிடும் … இத இங்கயே போட்டுறலாம் டா’ என கொஞ்சல் மொழியில் கூறினான். சீனிக்குட்டி க்கு உடன்பாடில்லை உடல் தளர்ந்து நின்றான் நீரற்று வாடிய வாழைக்கன்று போல். மூர்த்தி அவனை அப்படி பார்த்துவிட்டால் கலக்கம் அடைவான். பின்பு அதை ஈடு கட்ட அனைத்து உச்சங்களுக்கும் செல்வான். ‘சரி என்ன உனக்கு மீன் கொழம்பு சாப்புடனும் அவ்ளோதானே’ என்றான். சீனிக்குட்டியை பார்க்க வேண்டுமே செழித்த வாழைக்குறுத்து கணக்காக மீண்டும் உயிர்பெற்று. மீன் குழம்பிற்கான சாமர்த்தியம் போதாததால் தோல் நீக்கிய வெற்றுடல் விலாங்கை தீயில் வாட்டி அல்ல கருக்கி சாப்பிட்டு ருக்காயம்மாள் வீடு திரும்பினார்கள்.
கோடை முடிந்தது. மழை காலம் தொடங்கினாலும் போதிய மழை இல்லை. அவ்வப்போது சொட்டிச் செல்லும் நிலத்தினை நனைத்தபடி. வேலைகளை முடித்து கந்தசாமி வீடு திரும்பினான். வீட்டை அடைவதற்குள் முனியப்பனின் கிசுகிசுப்பு. கந்தசாமியின் கருகிய முகத்தின் கங்கு மீண்டும் ஒளிர் விட்டது. தான் சொல்வதை கேட்காத பிள்ளைகள் எனும் எரிச்சல். இம்முறை ருக்காயம்மாள் இருக்கின்ற தைரியம் இருந்தபோதிலும் அடி ருக்காயம்மாளுக்கும் இணைப்பாக கிடைத்தது. சீனிக்குட்டி எப்படியாவது தப்பித்துக்கொள்வான் இயல்பாகவே. உடலில் ஆங்காங்கு அடியின் எதிர்வினைகள். அழுது அழுது வீங்கிய முகம். அழுதோய்ந்த மூர்த்தியை வீட்டிற்கு இழுத்து வந்து வெறி அடங்கிட மீண்டும் அடித்தான். மூர்த்தி விக்கலெடுத்து அழுதான். அமைதியானான். அடிவிழும் போது நினைவில் வரும் கமலாவை நினைத்துக்கொண்டு தேம்பினான். தாளமுடியாத வலியினால் மீண்டும் அழுதான். அழுகுரல் ஒசையினால் தெருவில் நாய்கள் கூட தட்டிக்கேட்க வந்து நின்றன வாசலில்.
ஒரு வாரமாக இருவரும் மருதமர குழியையும் விலாங்கையும் மறந்திருந்தார்கள். வார இறுதியில் உறக்கம் போதாத மூர்த்திக்கு அன்று உடல் தீயென ஒழுகியது. ருக்காயம்மாள் கற்று வைத்திருந்த அனைத்து வைத்தியங்களின் முயற்சியிலும் தோல்வி. சீனிகுட்டிக்கு ஏனென்று தெரியாத அழுகை. மூர்த்தியின் அருகாமையிலேயே இருப்பதை தவிர வேறு வழியும் அவனுக்கு இருக்கவில்லை. இவையனைத்தையும் அறிந்த முனியப்பனை ருக்காயம்மாள் கையுடன் கூட்டி வந்தாள். கைநிறைய வேம்பு இலைகளும் மணக்கும் திறுநீறும் கழுத்தில் உடுக்கையும். வேப்பிலையை கூரை தாழ்வாரத்தில் சொருகினான். நீரில் மஞ்சள் கரைத்து கரைசலை வீட்டைச்சுற்றிலும் தெளித்தான். அருகே அமர்ந்துகொண்டு உடுக்கை அடித்தபடி எதையெதையோ உழறிக்கொண்டு திறுநீறு அள்ளி முகத்தில் பூசினான். அரிக்கண் விளக்கில் வேஷ்டியை கிழித்து திரித்து புதிய திரியை எறியவைத்தான். உடுக்கையும், அவனின் நெற்றிப்பொட்டும் சீனிகுட்டியை பயத்தின் உச்சங்களுக்கே கூட்டிச்சென்றது. நாளாக நாளாக மூர்த்தி மிகவும் சிரமப்பட்டான். கந்தசாமி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என நினைத்துக்கொண்டு பெரிதும் கண்டும் காணமலுமிருந்தான். மழை வேறு. சிறு பிள்ளையின் விளையாட்டாக சாரல் வீசிச் செல்வது மீண்டும் வருவது என சங்கடம் செய்தது. அன்றிரவு மழை சற்று உரைத்தது. மாதையன் கந்தசாமியிடம் கவனமாக எதையதையோ பேசிவிட்டு மூர்த்தியை பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து மறைந்தார். கந்தசாமிக்கு சற்றே தொய்வு. நகரத்து மருத்துவமனைக்கு சென்றுவிடலாம் எனும் யோசனைகள். ருக்காயம்மாள் பாத்திரம் ஒன்றில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தாள். சீனிக்குட்டி அழுது அழுது சோர்வடைந்து சுவரின் ஓரத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் சற்றே உடல் குறுக்கி புழு போல். மெல்ல தன்னிலை திரும்பிய மூர்த்தி எந்தக்காரணமுமில்லாமல் ஒருவேளை இப்போது கேட்டால் இரக்கத்தின் பெயரில் கிடைக்குமென வாயசைத்தான். கந்தசாமி அருகே அமர்ந்து எண்ண வேண்டுமென்பதைப்போல் பார்த்தான். ‘அப்பா’ என்றான். அந்த விம்மிய குரல் கந்தசாமியின் காதுகளை அடைத்தது. மேலும் அருகில் நகர்ந்தான். அரிக்கண் விளக்கின் சுடர் எவ்வித இடர்பாடுகளுமில்லமால் சமநிலையில், நேரே கூரையை எட்டிபிடித்து விடும் முனைப்பில் எறிந்து கொண்டிருந்தது. அவ்விளக்கின் மங்கிய சுடர் வெளிச்சத்தில் மூர்த்தியின் முகத்தில் பொன் நிறம் ஜொலித்தது. பல்லியொன்னு இரையை தவறவிட்ட சலிப்பில் ‘ச்த்ச்த்ச்த்’ வென கூரையில் ஊறியது. கந்தசாமி மூர்த்தி உடலில் கை வைத்தான். சிறிது நேரத்திற்கு முன்பு இறக்கிய உலைபானையின் சூடு அவன் உடம்பெங்கிலும் சமபங்கில். ‘அப்பா’ வென்றான் மீண்டும். உதடுகளில் வறட்சி பிளவுகள். கண் ஓய்ந்திருந்தது. குழந்தை வியர்வையின் உப்பு வாசனை. பேச முயன்றான். தொண்டையின் வறட்சி இருமலை உண்டுசெய்ய இருமிய ஓசையில் சீனிக்குட்டி விழித்துக்கொண்டான். எழுந்தமர்ந்தான். உடல் சலிப்பு. சலிப்புடன் மூர்த்தியின் அருகே மீண்டும் வந்தமரந்துகொண்டான். கந்தசாமி அவன் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மூச்சிவிட சிரமப்பட்டு பேசினான் ‘தூண்டி முள்ளு வாங்கிதாபா’ என்றான். கந்தசாமி பிரக்ஞையற்று ஆனான். சீனிக்குட்டி நெழிந்தபடி மேலும் அவனருகில் நகர்ந்தமர்ந்தான். காலத்தை சுழற்றியபடி கடிகார முள்ளின் ‘டிப் டிப்’ ஓசை வீடெங்கிலும் எதிரொலித்தது
பொன் சக்திவேல்
சொந்த ஊர் கொடுமுடி. டிப்ளோமா படித்துவிட்டு பெருந்துறை சிப்காட் பணிபுரிகிறார்.தொடர்ந்து தான் வளர்ந்த பார்த்த வட்டார மனிதர்களின் கதைகளை பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.