1
குஞ்சத்தில் மிதந்த தொப்பியும்
பஞ்சடைத்த தொப்பையும்
வண்ணப்பூச்சுகளுக்குள் மின்னும் கன்னமும்
மூக்கின் நுனி கண்ட உருண்டையும்
ஆளடைத்தாலும் நிர்ம்பாத ஆடையும்
வானமே தலையில் வீழ்ந்தாலும்
விலகிப் போகாத புன்னகையும்
அணிவகுத்துக் கொண்டு
உங்களை ஆசுவாசப்படுத்தும்
கோமாளியை நீங்கள்
ஓய்வில் சென்று பாருங்கள்
ஒட்டிப் போன வயிறும்
உருண்டு விளையாடும் வறுமையும்
அந்தரத்தில் அவனைத் தொங்கவிடுவதில்
கைதட்டியா சிரிப்பதென
கவலைப்பட வாய்க்கலாம்
நமக்குள்ளும் ஒரு கோமாளித்தனம்.
2
என்ன செய்துவிடப் போகிறது
ஒற்றை வரி
எழுத்தில் எரிமலையா வெடிக்கும்
கழுத்தை நெறிக்கும்
கயிறாக மாறிவிடுமா
சுழலும் உலகின் அச்சை
சற்றேனும் அசைத்துப் பார்க்குமா
வறுமையின் கோட்டைக்குள்
வளமையைப் புகுத்தி
வாழ்வை மீட்டித்தருமா
உழைப்பின் ரேகைகளை
ஊருக்குக் காட்டி
ஓர் இரவில் விடியலை
உருவாக்கிவிடுமா
ஒன்றுமே செய்யாமல்
கரைந்துகூடப் போகட்டும்
வாசிக்கும் உனக்குள்
யோசிப்பையாவது தராமலா
போய்விடும் எழுத்து.
3
அறிமுகமற்றவர்களின்
சந்திப்பு சமயங்களில்
எளிதில் இணைகின்றன
மழலைகளின் இதயங்கள்
நோய்களின் தீண்டலில்
ஆறுதலைத் தேடியும்
அழுது தீர்க்கும்
மருத்துவமனைகளிலும்
ஆடிடும் ஊஞ்சலின்
பொழுது போக்கிலும்
எழுத்தின் வழியே.எதிர்காலத்தை
எண்ணும் கல்வியிலும்
நீளும் உணர்வுகளுக்குள்
ஒட்டிக்கொண்ட நேசத்தில்
கவலைகள் இடைநுழைவதில்லை
கடவுளும் நழுவிப் போவதில்லை.
4
ஆடும் கால ஊஞ்சலில்
வாழ்வின் தேடல்களும் அலைகின்றன
நெருக்கும் இறுக்கத்தின் பிடியில்
நிம்மதியும் நிலைகுலைய
கூடுகளும் குதறப்படலாம்.
காற்றின் விசையில் கண்ணீர் உதிர
போக்கிடத்தைத் துறப்பதில்
இறக்கையும் அதிரலாம்
சந்ததியின் நீட்சிக்கென
சந்திக்கும் துன்பங்களுக்குள்
காலத்தின் ஆட்டம் நீள்கிறது
மடியென விரிந்திருக்கும்
இயற்கையின் மேனியில்
எண்ணங்களைக் கூர்தீட்டி
அமரும் பறவையின் தேடலில்
அன்பும் கருணையும் பெருகி நிற்க
கயிற்றின் தாலாட்டில்
நிம்மதியும் நிலைபெறட்டும்.
00
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.