சண்முகம் என்ற பெயர் கொண்ட இளநீர் கடையை தாண்டியதுமே,இருபதடி தூரத்தில் நகராட்சி பொதுக்கழிப்பறை ஒன்றிருந்தது- அந்தக் கழிப்பறையில் சிறுநீர் மட்டுமே கழிக்கக்கூடிய வசதியிருந்தது. ஆனால் அதில் ஆத்திர அவசரத்திற்கு மலம் கழித்து வைப்பவர்களும் உண்டு.
அந்த கழிப்பறையிலிருந்து வந்த சிறுநீரின் கெட்ட வாசனையயை தாங்கமுடியாமல் மூக்கைப் பொத்திக்கொண்டு போனவர்கள் மத்தியில் கண்ணப்பன் மட்டும் மூக்கைப் பொத்தாமல் தன் மரக்கால்களால் கழிப்பறை வாசலில் நின்று இளைப்பாறினான்.
அந்த பொதுக்கழிப்பறையின் வாசலில் சிதறிக்கிடந்த வெண்மை நிற கிருமி நாசிப்பொடி ஈரம்பட்டு ..பட்டு நசநசத்து கொஞ்சம் பழுப்பு நிறமாக மாறிக்கிடந்தது. கழிப்பறையிலிருந்து ஒருவன் புகைபிடித்துக்கொண்டே வெளியேறினான். அது சின்னக்கழிப்பறை. உள்ளே மூன்றுபேருதான் போகமுடியும். உள்ளே காலி இடமிருக்கிறதா, என்று வெளியே இருந்து எட்டிப்பார்த்தான் கண்ணப்பன் . இடமிருந்ததால் சிறுநீர் படிந்த அந்த வாசலின் வழியே, தன் மரக்கட்டை கால்களால் மெல்ல மெல்ல எட்டு வைத்து உள்ளே நுழைந்தான். உள்ளே மூக்கைப்பொத்திக்கொண்டே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த இருவர், அவனின் செயற்கை மரக்கால்களைப் பார்த்து பாவப்பட்டனர் .
கழிப்பறை சுவர்களில், வரையப்பட்டிருந்த பாலியியல் சார்ந்த சின்ன படங்களை-‘இது ஐட்டம் நம்பர்’ என்று எழுதி வைக்கப்பட்ட நம்பர்களை கண்ணப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்த்தது. அந்த நொடியிலே அவனின் உடம்பில் ஒரு வித காமக்கிளர்ச்சி அரும்பியது. அந்த நொடியில் பழைய பேருந்து நிலையத்தின் வடக்குப்பறம் நின்றிருக்கும் விலைமாதர்கள் அவனுக்கு ஞாபகம் வந்தார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு…
அன்று பங்குனிப்பொங்கல் ஆரம்ப நாள் என்பதால், மாரியம்மன் கோவிலில் கூட்டம் எக்குத்தப்பாயிருந்தது. வாசலில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு நல்ல வருமானம். ஒவ்வொருவரின் தட்டிலும் அஞ்சு, இரண்டு, பத்து என்று துட்டு மும்மாரி மழைபோல் பெய்துகொண்டிருந்தது. பிச்சைக்காரர்கள் மனதெங்கும் அவ்வளவு வளமானமகிழ்ச்சி. ஒவ்வொரு பிச்சைக்காரனும் “அம்மா, அப்பா தர்மம் போடுங்கம்மா” என்று வழக்கமான தேஞ்சுபோன சொற்களில் உற்சாகமாக பிச்சை எடுத்தனர் போதையில். மற்ற தட்டுக்களை விட கண்ணப்பனின் தட்டுக்களில் பிச்சை அதிகம் விழுந்தது. அதற்கு மரக்கட்டையால் ஆன அவனின் செயற்கைகால்களும் அப்புராணி போன்ற முகபாவனையும்தான் காரணம்.
பங்குனிப்பொங்கல் பதினாறாம் நாளில் செலவழித்தது போக கண்ணப்பனின் கையிருப்பு எழுநுத்தி சொச்ச ருபாய் இருந்தது.
அதை வச்சு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சுவற்றில் ஒட்டப்பட்ருந்த ஒரு நீலப்படத்தின் போஸ்டர் அவனுக்கு ஞாபகம் வந்தது. அதற்குப்பிறகுதான் பழைய பஸ்டாண்டு ஓரத்தில் நிற்கின்ற விலைமாதர்கள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தனர் அவனின் மனதுக்கு. மினுமினுப்பான அவர்களின் அலங்காரத்தை நினைக்கும்போதே, கண்ணப்பனின் மனது காமப்புழுதியில் புரள ஆரம்பித்தது.
நாளைக்கு விலைமாதர்களை சந்தித்து, சந்தித்து.. என்று அவன் நினைக்கும்போது அவன் கட்டியிருந்த அழுக்குப்படிந்த கைலியில் பசைபோல பிசுபிசுப்புன்மை படரத்தொடங்கியது. இதெல்லாம் நடக்குமா என்று தனது தன் தலைக்கு தலையணையாக அண்டக்கொடுத்திருந்த மரக்கால்களை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.
இரவானதும், கோவில் முன்னாடி எப்போதும் படுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டே -அந்த விஷயத்தைப்பறறி குருசாமியிடம் பேச ஆரம்பித்தான் கண்ணப்பன். அவனின் ஆசையை கேட்ட குருசாமிக்கு தூக்கி வாரிபோட்டது. “எடேய், நீ என்னடா லூசா” என்றான் குருசாமி.
“……………”
“இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சிச்சு… உனக்கு பிச்ச போட்டவங்கே உன்ன வெரட்டி, வெரட்டி அடிப்பாங்கே”. .
“இதுக்கு எதுக்கு அடிக்கிறாங்கே” . “பிறகு கொஞ்சுவாங்களா.. “
“நான் நாளைக்கு கண்டிப்பா பொம்பளங்கிட்ட போறேன்.”
“நாம ஏற்கனவே என்ன பாவம் பண்ணுனம்மோ, இப்படி பிச்சைக்காரனா அலையுறோம்.” என்ற குருசாமி அப்போது குரல் தளதளத்தது.
“பாவத்தோட, பாவமா இது இருந்திட்டு போட்டும்” என்றான் கண்ணப்பன்.
“ஏன்டா, இப்படி பொம்பள சொகத்துக்கு அலையுற?”
“நானும் சராசரி மனுஷன்தான..”
“பொம்பளைகிட்டு போயி நோய் வந்து செத்துப்போவாத” என்றான் குருசாமி.
“இந்த மரகக்கால்களை வச்சுக்கிட்டு வாழ்றத விட செத்துப்போகலாம்”
“அப்ப நாளைக்கு போற”
“ஆமா”
“காமம் பாவமானது”
“அந்த காமாத்தாலதான் உன் உயிர் வந்துச்சு. காமம் இன்னொரு உயிர படைக்கிற சக்தி. அது புனிதமானது.
“காமம் புனிதம் ஆனதுனா.. கண்டவகூட போயி ஏன் காமத்த களங்கப்படுத்துற “
“எனக்கு யாரு பொண்ணு தருவா.. ”
“….. ……………”
“என்ன பதில் சொல்லு”என்றான் கண்ணப்பன்
“நல்ல வழியில போகப்பாரு அதைத்தான் எல்லா மதமும்-சாமியும் சொல்லுது” என்றான் குருசாமி
“.இனிமே காமம்தான் என் மதம். காமம் தான் என் சாமி.” என்றான் கண்ணப்பன்.
“லூசு மாதிரி பேசுற- இனி ஓங்கிட்டே பேசி பிரோயஜனமில்லை” என்றான் குருசாமி.
“அப்ப கடைசிவரை காமத்தை அனுபவிக்காம போணுங்கிற” என்றான் கண்ணப்பன்.
“ஆமா. அப்பதான் சொர்க்கத்துல இடம் கிடைக்கும்” என்றான் குருசாமி.
“காமத்தை விட பெரிய சொர்ககம் இல்லை” என்றான் கண்ணப்பன்.
“ஓங்கிட்டே பேசி வேஸ்டு” என்ற குருசாமி முகத்தை வேறபக்கம் திருப்பிக்கொண்டான் எரிச்சலில். .
குருசாமி தூங்கியபிறகும் விழித்தே இருந்தான் கண்ணப்பன். நாளைக்கு சந்திக்கபோகும்போகும் பெண் இப்படி இருப்பா, அப்படி இருப்பா என்று மனதில் வழியே கற்பனைசெய்ய தொடங்கினான் கண்ணப்பன் .அப்போது அவன் உடல் புது திசையை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
பழைய பேருந்து நிலையம் வடக்குப்பக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் கண்ணப்பன் பிச்சை எடுக்கும் சமயத்தில் பலதடவை விலைமாதர்களை பார்த்திருக்கிறான்.
கலர்கலரான சேலை, கைநிறைய வளையல், ஆடுகளுக்கு கயிற்றில் கொளை கட்றாப்ல தலைநிறைய பூ, நகம் மினுமினுக்கும் நெயில்பாலிஷ், கையில் ஆடம்பரமான மணிப்பர்ஷ், மொபைல் இப்படியாக நிற்பார்கள். பெரும்பாலும் அவர்கள் கையில் ஏதாவது வேலைக்கு வந்தது மாதிரி காட்டிக்கொள்வதற்காக, ஏதாவது வயர்கூடை, கட்டப்பை ஏதாவது வைத்திருப்பார்கள். போலீஸ் வரும்போது ஏதாவது வேலைக்கு வந்தது மாதிரி பையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பார்கள். போலீஸ்க்கு இதெல்லாம் தெரிந்தாலும் தெரியாமல் இருந்துவிடுவார்கள், சில போலீஸ்தான் கோபத்தில் “எடத்தவிட்டு காலிபண்ணுங்கடி தேவ்டியா முண்டைகளா” என்று வைவார்கள்.
அப்போது இருக்க இடம் தெரியாமல் சிட்டாய் பறந்துவிடுவார்கள் விலைமாதர்கள்.
ஏதாவதொரு நாளில் சில விலைமாதர்களுக்கு ஆட்கள் அமையாம தொழில் டல்லாகிப்போகும்- அதுபோன்ற நாட்களில் விலைமாதர்கள் பேருந்தின் மேற்குப்புறத்தில் உள்ள டீக்கடைகளில் பாத்திரம், டீக்கிளாஸ் கழுவும் வேலைகள் செய்து, டீக்கடைக்காரர் கொடுக்கும் சொற்ப காசுகளை கைச்செலவுக்கு வாங்கிச்செல்வார்கள்.
சில டீக்கடைக்காரர்கள் விலைமாதர்கள்தானே என்று வெறுத்து வேலை தராமலெல்லாம் இருக்கமாட்டார்கள். அவர்களுக்குத் தேவை வேலை செஞ்சா போதும் அவ்வளவுதான். டீக்கடைக்கு வரும் கஸ்டமர்களையே சில நேரம் விலைமாதர்கள் கண்ணசைவில் கரெக்ட் பண்ணிவிடுவார்கள்.
இதையெல்லாம் கண்ணப்பன் பலதடவை கவனித்திருக்கிறான். தன் வாழ்க்கை வரலாறைக்கூட மறந்திருப்பான்- ஆனால் விலைமாதர்களின் வரலாறை மறந்திருக்க வாய்ப்பேயில்லை. அவர்கள் எந்தெந்த இடத்தில் நிற்பார்கள்.. எப்படி எப்படி சாலையில் போவோரை கண்ணசைவில் வளைப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் -இதெல்லாம் இப்போது கண்ணப்பன் மனதிலோடியது.
பொழுது விடிவதற்கு முன்னே மாரியங்கோவில் தெப்பத்து சுவரோரம் உள்ள தண்ணீர்க்குழாயில் குளித்துவிட்டு, இருப்பதிலேயே நல்ல சட்டை, வேட்டியை அணிந்துகொண்டு, மரக்கால்களை எடுத்து மாட்டிக்கொண்டு வைத்திருந்த பணத்தினை எடுத்துக்கொண்டு, பக்கத்திலிருந்த தன் சகாக்களிடம் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் கோவிலின் கோபுர வாசலிருந்து கிளம்பி விலைமாதர்கள் நிற்குமிடத்தை நோக்கி ஆர்வமாக நடையைக் கட்டினான்.
இத்தனை நாள் மற்றவர்கள் கண்ணப்பனின் மரக்கால்களைப் பார்த்து பரிதாபமாக இரக்கத்தை கண்வழியோ அல்லது அவனுக்கு தர்மம் என்ற பெயரில் காசு போடுவதில் மூலமோ வெளிப்படுத்தினார்கள். இதுவரை அந்த மனிதர்கள் காட்டிய அத்தகைய இரக்கத்தையும், பரிதாபத்தையும் தனது மூலதனமாக கருதிய கண்ணப்பன் -இன்று சுத்தமாகவே அதனை வெறுத்தான்.
நடந்து வரும் வழியில் யாரும் தன்னை வெறுக்கக்கூட செய்யட்டும்-தயவு செய்து பரிதாபமாக பார்க்க வேண்டாம் என்ற நினைப்போடியது கண்ணப்பன் மனதுக்குள். அப்பைக்கப்ப தனது மரக்கால்களை வேண்டாவெறுப்பாக பார்த்துக்கொண்டான்.
பழைய பேருந்து நிலையம் மேற்குப்பக்கத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் வந்து நின்றான் கண்ணப்பன். முடிந்தளவு கட்டியிருக்கிற வேட்டியை இறக்கிவிட்டு தனது மரக்கால்களை மறைக்கப் பார்த்தான். பையில் வைத்திருந்த பணத்தை மீண்டும் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.
எதிர்த்திசையிலிருக்கிற விலைமாதர்களை பார்த்தவுடனே கண்ணப்பனுக்கு இதயம் வேகமாக துடித்தது. முடிந்தளவு தனது மரக்கால்களை இயல்பாக வைத்து அவனால் நடக்கமுடியாததால் ஒரே இடத்திலே நின்றான். மூசாம தக்கிமுக்கி நடந்துபோய் நாமலே நிக்கிறவகிட்ட வெல எம்புட்டுனு கேட்டுவிடலாமா என்ற யோசனை அவன் மனதில் எழாமலில்லை. ஆனால் ஏதோ கூச்சம் தடுத்தது. சாலையில் வருவோர் போவோரை கண்ணசைவில் அழைத்துக்கொண்டிருந்தார்கள் விலைமாதர்கள். கண்ணப்பனை சீந்துவாரில்லை. நேரமாக நேரமாக அவனுக்குமேலே அவனுக்கே வெறுப்பு வந்தது. இதெல்லாம் தேவையா நமக்கு என்ற கேள்வி அவனுக்குள் எழாமலில்லை. நம்ம கால்கள் ஊனமானதுபோல நமது உணர்ச்சியும் ஊனமாகியிருந்தால் இங்கு வந்து நின்றிருப்பமா..? இந்த எழவுகெட்ட கடவுளுக்கு கால்கள ஊனமாக்கத்தெரிஞ்சளவுக்கு உணர்ச்சியை ஊனமாக்கத் தெரியலயே..” என்று கடவுளை மனதுக்குள்ளே திட்டினான்.
இன்னியாரம் பிச்சையெடுத்திருந்தாலும் நாலுகாசு பார்த்திருக்கலாம். தேவையில்லாம இங்கு வந்து ச்சீ என்ற நினைப்போடியது கண்ணப்பனுக்குள்.
அந்த சாலையில் டூவீலரில் இரண்டு போலீஸ் போனதைப் பார்த்ததும் ஒருவித அச்சம் தோன்றி தனது மரக்கால்களை பார்த்துக்கொண்டான் கண்ணப்பன்.
வந்துட்டு சும்மா போனம்னு குருசாமி மாதிரி ஆளுங்க நம்மள கேலி பண்ணுவாங்கே… முடிஞ்சளவு வந்த காரியத்த முடிக்கப்பார்க்கணும் என்று யோசித்துக்கொண்டே எதிர்த்திசையில் புளுகலர் புடவைகட்டி, வாய்நிறைய வெத்தலைபோட்டு ஆட்டோக்காரனிடம் பேசிக்கொண்டே சாலையில் வருவோர் போவோரை நோட்டமிட்டுக்கொண்டிருந்த விலைமாதரை வச்சு கண்ணு வாங்காமல் பார்த்தான் கண்ணப்பன். அவளும் பார்த்தாள் கண்ணப்பனை.
கொஞ்சம் நம்பிக்கை வந்து இருந்த இடத்தைவிட்டு கொஞ்சகொஞ்சமாக மரக்கால்களால் எட்டு வைத்தான். சாலையில் போவோர் வருவோர் அவனை பரிதாபமாக பார்த்தனர். நெருங்கிப் போகபோக அதேமாதிரியான பரிதாபப் பார்வையுடன்தான் பார்க்கத்தொடங்கினாள் கண்ணப்பனை விலைமாதர். அந்தப்பார்வை எரிச்சலூட்டியது. சாலையில் போவோரை, வருவோரை ஒரு மாதிரியான பார்வைபார்த்து கண்ணசைத்து கூப்பிடுவதுமாதிரி, நம்மலயும் விலைமாதர் அழைக்க மாட்றாங்களே என்ற ஏக்கம் தனக்குள் ஓடத்தொடங்கியதும் தன் மரக்கால்களைப் பார்த்து எல்லாம் இதனால்தான் என்ற ஒருவித பெருந்தவிப்பு வந்தது கண்ணப்பனுக்கு.
தூரத்திலிருந்த துணிவு விலைமாதர் அருகில்போனதும் சுத்தமாக இல்லை. அதுவுமில்லாமல் பக்கத்திலிருந்த ஆட்டோக்காரனால் கண்ணப்பனுக்கு விலைமாதரை ரேட் பேச நாக்கு உளறியது.
கண்ணப்பனின் மரக்கால்களைப் பார்த்ததும் விலைமாதருக்கும், ஆட்டோக்காரனுக்கும் பாவமாகயிருந்து. என்ன பேசுவதென்று தெரியாமல் கண்ணப்பன் திக்கினான். பரிதாபமாக பார்த்து பர்ஸை திறந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினாள் விலைமாதர். என்னசெய்வதென்று தெரியாமல் டக்கென்று வாங்கிக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்தான் .
ரெம்ப தூரம் வந்ததும் தனது ஆற்றாமையை நினைத்து வெறுப்பு வந்தது கண்ணப்பனுக்கு. என்னன்னமோ நினைத்துப்போயி கடைசியில்… ! என்று கண்ணப்பன் மனதுக்குள் ஓடியது
எல்லாம் இந்த மரக்கால்களால்தான். இதை என் கால்களில் மாட்டியதிலிருந்து என்னை இதுவரை ஒரு சாதாரண பார்வையில் யாரும் பார்க்கவேயில்லை..! எல்லாரும் என்னை பரிதாபமாக பார்க்கிறார்கள் ..ச்சே என்று நினைத்தான் கண்ணப்பன்.
தன் இருப்பிடம் வந்ததுமே மரக்கால்களை பிடுங்கி வெறுப்பில் எரிந்தான். மற்ற பிச்சைக்காரர்கள் அவன் அப்படி செய்வதை பார்த்துவிட்டு “ஓனக்கென்ன பைத்தியமடா ” என்று போதையில் திட்டினார்கள். எதுவும் சொல்லாமல் உம்மென்று இருந்த கண்ணப்பன்- அப்படியே ஏதேதோ நினைப்பிடையே தூங்கிப்போனான்.
காலையில் விடிந்ததும், எப்போதும்போல தலைக்கு தலையணையாக அண்டக்கொடுத்திருக்கும் மரக்கால்களை எதார்த்தமாக தொட்டுப்பார்த்தான்-அப்போதுதான் மரக்கால்களை இரவில் தூக்கியெறிந்தது ஞாபகம் வந்தது. எழுந்து தவழ்ந்துகொண்டேபோய் கால்களில் மாட்டுவதற்கு எடுத்தான்.
வழியில் சென்றவர் யாரோ வெத்தல எச்சியை வலது மரக்காலில் உள்ள விரல்நகப்புகுதியில் துப்பிச்சென்றிருந்தார்.
விரல்நகப்பகுதியல் பட்டிருந்த -அந்த செந்நிற வெற்றிலை எச்சியை பார்த்தவுடனே கண்ணப்பனுக்கு பழைய ஞாபகம் ஒன்று மனக்கிளையில் பறவையாய் வந்து அமர்ந்துகொண்டது.அதை நினைத்தவுடனே கண்ணீர் வந்தது.
சாலை விபத்தில் காலொடிந்து ஆஸ்பத்திரியில் மரக்கால்கள் மாற்றப்பட்டு வீடு வந்த சமயம் -அம்மா இல்லாததால் தன் மூத்த அக்கா பஞ்சவர்ணம் வீட்டில்தான் இருந்தான் கண்ணப்பன். மரக்கால்களை மாட்டிக்கொண்டு வெளிய போகவே எப்படியோயிருந்தது-அந்த துயர நாட்களில் மன வேதனையில் உட்கார்ந்த இடத்திலயே உட்காந்திருந்தான்.
அக்காதான் அவனுக்கு எல்லா பணிவிடையும் முகம் சுழிக்காமல் செய்தாள். அவளது மூன்று மகள்களும் கண்ணப்பன் மீது தன் அம்மாவைப்போலவே பாசமாகவே இருந்தார்கள்.
அன்று இரவு பஞ்சவர்ணத்தின் மூத்த மகள் மகாலட்சுமி மருதாணி அரைத்தாள். மருதாணியோடு புறாப்பீயி, கொட்டப்பாக்கு, கூரைச்செத்த, புளி சேர்த்து அரைத்தால்தான் நன்றாக சிவீருன கலர் பிடிக்குமென்று அவளுக்குத்தெரியும் . அதனால அதையெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்திருந்தாள்.
சாப்பிட்டு முடித்ததும், பஞ்சவர்ணத்தின் மூன்று மகள்களும் அரைத்த மருதாணியை ஆர்வமாக வைக்கத்துவங்கினர். பஞ்சவர்ணத்தின் கடைசி மகளான மூன்று வயது அமிர்தா-தன் அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் விரல் நகங்களிலும், கால் நகங்களிலும் ஆர்வமாக மருதாணி வைத்துவிட்டாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் கண்ணப்பன் . .
அமிர்தா திடீரென்று மருதாணியுடன் கண்ணப்பன் அருகில் சென்று -அவனின் கைவிரல்களுக்கு மருதாணி வைக்கத்தொடங்கினாள்.
“தம்பி நாளைக்கு காலையில ஓங்கைவெரலு நகத்தப்பாரு சீவீருனு கலரு அப்பியிருக்கும். ஏன்னா எம்மக ஓம்மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கா” என்றாள் பஞ்சவர்ணம்.
அதற்கு கண்ணப்பன் உதடுபிரியாமல் சிரித்துக்கொணடாள்.
கைவிரல்களுக்கு மருதாணி வைத்த அமிர்தா திடீரெனு கண்ணப்பனின் கால்களுக்கு மருதாணி வைக்கத்தொடங்கினாள். அந்தக் குழந்தை மரக்கால்கள் என்று பார்க்காமல் மருதாணி வைக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து கண்ணப்பன் கலங்கவும், பஞ்சவர்ணம் அழுதுவிட்டாள்.
பெரியவர்கள் பார்ப்பதுபோல பார்க்கவில்லை அந்த மரக்கால்களை குழந்தை அமிர்தா. -அதை வெறும் கால்களாத்தான் பார்த்தாள். அதனால் என்னவோ பரிதாபத்தை அந்த குழந்தைக்கு காட்டத்தெரியவில்லை. அதைத்தான் கண்ணப்பனும் எதிர்பார்த்தான்.
பஞ்சவர்ணம் சொன்னதுபோல அன்று காலையில் கண்ணப்பனின் கைவிரல்களில், மரக்கால் விரல்களில் மருதாணி சீவிருனு நிறமாய் அப்பியிருந்தது. அதைப் பார்த்ததும் கண்ணப்பனுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
அதை இப்போது நினைத்து ஏங்கினான். நீண்ட வருடங்களுக்குப்பிறகு அமிர்தா குழந்தையின் ஞாபகம் கண்ணீல் நீர் வரவைத்தது கண்ணப்பனுக்கு. மரக்கால்களைப் பார்த்து எந்தவித இரக்கமோ, பரிதாபப்பார்வையோ பார்க்காமல்-எல்லோரையும் பார்ப்பதுபோல கண்ணப்பனை பார்த்த அந்த குழந்தையின் கண்கள் இன்னும் நெஞ்சுக்குள்ளேயிருந்தது.
எத்தனையோ வருடங்கள் ஆகியிருந்தாலும் -எத்தனையோ கண்களை சந்தித்திருந்தாலும்-அந்த குழந்தையின் கண்களைப்போல இதுவரை எந்த கண்களையும் சந்தித்ததில்லை கண்ணப்பன்.
செந்நிற வெற்றிலை எச்சில் படிந்துகிடந்த அந்த மரக்கால்களை எடுத்து, தன் இடுப்பில் கட்டியிருந்த அண்ணாக்கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த ஊக்கினை அவிழ்த்து-மரக்கால்களில் ‘அமிர்தா ‘என்று கீறி கீறி எழுதி முடித்தான் கண்ணப்பன்.
மரக்கால்களில் எழுதியிருந்த ‘அமிர்தா’ என்ற பெயரையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இத்தனை நாள்வரை தலைக்கு தலையணையாக மட்டுமிருந்த மரக்கால்களை, முதன்முதலாக நெஞ்சோடு நெஞ்சாக அழுத்தமாக இறுக்கி தன்னுள் உயிராக புதைத்தான் கண்ணப்பன்.
கொஞ்சநேரத்திற்கு பிறகு மரக்கால்களை மாட்டிக்கொண்டு அருகிலிருந்த தேநீர் கடைக்குச் சென்றான். தேநீர் அருந்திகொண்டிருந்தவன் கண்களுக்கு வசந்த மாளிகை பட போஸ்டர் தென்பட்டது. போஸ்டரின் மேலே ‘அப்சரா தியேட்டர்’ என்ற துண்டுச்சீட்டு ஒட்டப்பட்டிருந்தது. அந்த தியேட்டரில் எப்போதுமே பழைய படங்களை எடுப்பதுதான் பழக்கம்.
வசந்த மாளிகை போஸ்டரை பார்த்ததுமே தன் அம்மா ஞாபம்தான் வந்தது கண்ணப்பனுக்கு. அம்மா சிவாஜி தீவிர இரசிகை. அருப்புக்கோட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு ஏதோ ஒரு பொங்கலுக்கு போனப்ப சித்தப்பா வசந்தமாளிகை படத்துக்கு தியேட்டருக்கு கூப்பிட்டுப் போனார் எல்லோரையும்.
வசந்தமாளிகை போஸ்டர் ஏதேதோ பழைய ஞாபகங்களை கீறிவிட்டு கண்ணப்பனுக்கு கண்ணீர் வரவைத்தது .
என்ன நினைத்தனோ ஏது நினைத்தானோ கண்ணப்பன் ,திடீரென்று மரக்கால்களால் எட்டு வைத்து அப்சரா தியேட்டரை நோக்கி நடையைக் கட்டினான்.
கண்ணப்பன் காலை 10:30 காட்சிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைகையில் ஒரே மையிருட்டாகயிருந்தது. அந்த இருட்டுக்குள் திரை மட்டும் கொஞ்சம் மங்கலாக வெண்ணிறமாகயிருந்தது. கொஞ்சநேரம் கழித்துதான், கண்ணப்பன் கண்ணுக்கு பார்வையே வர ஆரம்பித்தது. அந்தளவு இருட்டாகயிருந்தது. வசந்தமாளிகை பாட்டு ஓடிக்கொண்டிருந்து தியேட்டருக்குள். சுவர்களில் சின்ன அலங்கார ஒளிவிளக்குகள் எரிந்தாலும் இருட்டுதான் பெரும்பகுதியை பிடித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சீட்டுகளில் மனிதத்தலைகள் அந்த இருட்டுக்குள் ஏதோ பூச்சிபோல கருமையாகத் தெரிந்தன.
படம் போடும் நேரம் வந்ததால் எல்லா கதவையும் அடைத்தார்கள் தியேட்டர் ஊழியர்கள். தியேட்டர் ஓரே இருளானதும் படம் ஓட ஆரம்பித்தது. சிவாஜி வரும் சீன் வந்ததும் தியேட்டரில் ஆங்காங்கே விசில் சத்தம் பறந்தது.
பாதிப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது தியேட்டரின் வலதுபுறம் சுவற்றின் கதவொன்று திறந்ததும், வந்த வெளிச்சத்தோடு சேர்த்து இரண்டு பெண்கள் உள்ளே பராக்கு பார்த்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைந்தார்கள். கதவடைத்ததும் மீண்டும் இருளானதும்.
பாதிப்படம் ஓடியபிறகு டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தால், அவர்கள் பெரும்பாலும் விலைமாதர்களகாத்தான் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான் கண்ணப்பன்.
விலைமாதர்கள் டிக்கெட் எடுத்துக்கொண்டு சிலநேரம் தியேட்டருக்குள் ஆள்பிடிக்க வருவார்கள். அவர்கள் முழுபடம் முடியும்வரையெல்லாம் இருக்கமாட்டார்கள் . அவர்களுக்கு தேவை ஏதாவது ஒரு ஆளை கரெக்ட் பண்ணி முடிந்தளவு தியேட்டருக்குள்ளே சோலி பார்த்துவிட்டு சீக்கிரமாக கிளம்ப வேண்டும் அவ்வளவுதான்..!
ஆண் உட்காரும் சீட்டுக்கும், பெண் உட்காரும் சீட்டுக்கும் இடையில் உள்ள பார்டர் சீட்டில் அந்த இரு பெண்கள் உட்காருவதை அந்த அடர் இருட்டில் கூர்மையாக பார்த்துக்கொண்டேயிருந்தான் கண்ணப்பன்.
அந்த இருட்டில் எல்லாமே ஓரே மாதிரி பூச்சியாக கர்ரேருனு தெரிந்தார்கள். யார் அழகு.. யார் அழகில்லை.. யார் ஊனம்.. யார் ஊனமில்லை என்று எதுவும் அடையாளமில்லாமல், பேதமில்லாமல் ஒரே இருளாகத்தான் காட்சியளித்தார்கள். வெளிச்சம்தான் எல்லாத்தையும் பிரிச்சுக்காட்டும்- ஆனால் இருள் எல்லாத்தையும் ஒரே மாதிரியாகத்தான் காட்டும்..!
கண்ணப்பனின் மரக்கால்கள் வெறும் இருளாகவே தெரிந்தது. அந்த இருட்டுக்குள் அவனுக்கு மரக்கால்கள் இருப்பதை யார் அறிவார்..?
உட்காந்திருந்த சீட்டிலிருந்து எழுந்து மெல்ல மெல்ல எட்டு வைத்து அந்தப் பெண்கள் இருக்கும் சீட்டருகே போய் அமர்ந்த பதட்டத்துடன் கண்ணப்பனை, மெல்ல திரும்பிப்பார்த்து வைத்து கண்ணை வாங்காமல் இருட்டுக்குள் இருட்டாய் பார்த்தார்கள் அந்தப் பெண்கள்.
இருட்டில் கிடைத்த அந்த பார்வை நீண்ட நாட்களுக்குப்பிறகு கண்ணப்பனுக்கு சந்தோஷத்தை தந்தது.
இருட்டில் மறைந்திருக்கிற தன் மரக்கால்களை, வெளிச்சத்தில் பார்த்தால் -இதே மாதிரிப் பார்ப்பகளா.. இல்லை இவன் மரக்கால்கள் மாட்டிய ஊனமென்று பரிதாபப்படுவார்களா.. அப்படி பரிதாபப்படுவார்களென்றால் எனக்கும் வெளிச்சம் வேண்டாம். இந்த இருள் போதும்..! இந்த இருளே போதும்..!
எல்லாத்தையும் மறைக்கின்ற.. எல்லாத்தையும் ஓரே மாதிரியாக காட்டுகின்ற இந்த இருள் நமக்கு பெருந்துணைதான்..! .
எல்லோர் வாழ்க்கைக்கு வெளிச்சம்தேவையென்றாலும். என்னைப்போன்ற சிலர் வாழ்க்கைக்கு இருள்தான் தேவையாய் இருக்கிறது.. இருளே அருள் ..! இருளே அருள்வாயாக! என்று மனதில் வேண்டிக்கொண்டே -அந்த இருளுக்குள் விலைமாதரை நோக்கிப்போனான் இருளாய் கண்ணப்பன்.
000
க. செல்லப்பாண்டி
செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.