எப்படித்தான் சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழும்போதெல்லாம்
பருந்தை விரட்டிய கோழியின் கதையை காதில் போடுகிறார்கள்
சோர்ந்து கிடந்தால் ஆமை முயல் கதை
ஊரில் கதைகளுக்கா பஞ்சம்
நானும் ஒரு கதையைச் சொல்லத்தான் வந்திருக்கிறேன்
வேப்ப மரத்தின் அடியில் வீசப்பட்டிருக்கும்
வாழைப்பழத் தொலியை மொய்க்கும் எறும்புகளின் கதை இது
சுவாரஸ்யமான கதைதான்
எறும்புகள் பயங்கர சுறுசுறுப்பாக இயங்குவதால்
அவற்றின் சூட்டிப்பைக் குறைத்துவிட்டு கதைக்குள் வரலாமென்று
எண்ணுகிறேன்
நான் ஆரம்பித்த கணம்
தொலியை
பெருக்குமாறு ஒன்று
கூட்டி குப்பையில் வீசியது
சிதறிய சுறுசுறுப்புகளில் சிலது இல்லாத ஒன்றை மொய்த்தன
இதற்குமேலும் இந்தக் கதையை நான் தொடர விரும்பவில்லை நண்பர்களே
***
யாரும் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை
எல்லோரும் அங்குதான் இருந்தார்கள்
பம்பரத்தை லாவகமாக மண்ணில் செலுத்தி
சுழன்று கொண்டிருக்கும்போதே
விரலை விரித்து அலேக்காக தூக்கினேன்
உள்ளங்கையில் பூமி சுற்றுவதாய்
கத்தி ஆர்ப்பரித்தேன்
எவருமே அலட்டிக்கொள்ளவில்லை
ஒருவர் ஓடி வந்து கைக்கொடுத்தார்
சட்டென உருவி
உங்கள் சோலியை மட்டும் பார்க்கவும் என்றுவிட்டு
கூட்டத்தை நோக்கி மீண்டும் கத்தினேன்
***
தம் கட்டி அப்பா ஊத
எல்லோரிடமும்
இது என்னுடையது
மற்றதை காட்டிலும் பெரியது
என்று தம்பட்டம் அடித்தேன்
வில்லெடுத்தபோது
கூடவே அம்பையும்
எடுப்பார்களென்றுதான் எண்ணியிருந்தேன்
அவர்களுக்கோ குண்டூசியே போதுமானதாகயிருந்தது
மேலும்
அன்று வெடித்துச் சிதறியது
பலூன் மட்டுமல்ல.
***
கடிக்க வாட்டமாய்
இருந்ததாலேயே
மனப்பூர்வமாக செய்தேன்
விதவிதமாய் தரிசித்த என்னிடம்
எப்படி மலையுச்சியை
சென்றடைந்தீர்கள் என்கிறாய்
அது கிடக்கட்டும்
முதலில் குனி.
***
அக்காக்களை அதிகம் விரும்பும் அவனுக்கு
எல்லா சமாச்சாரங்களிலும்
அவர்கள் அனுபவமானவர்கள் என்பது திண்ணம்
அதனால்தான் அவளிடம் படித்துப் படித்துச் சொல்கிறான்
எனதருமை செம்முளரியே
உன்னை அக்கா என்றழைக்கும்
அந்த தம்பிக்கு நான்கு வயதைக் கூட்டி அண்ணனாக்கு
முடிந்தால் முப்பது வயதைக் கூட்டி அப்பாவாக்கு
எனக்காக ஐம்பது வயதைக் கூட்டி
தாத்தாவாக்கிக் கூட பாரேன்.
தமிழ்மணி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். தற்போது நீலம் பதிப்பகத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.