“சிராத்தத்திற்கு இலையில் மசாலா தோசை போடலாமா?”

“என்னது?” சாஸ்திரிகள் கண் சிவந்தார்.

“சிராத்தத்திற்கு இலையில் மசாலா தோசை போடலாமா?”

“என்னண்ணா இது விதண்டாவாதம்?”

“இல்லை.. அக்காக்கு மசாலா தோசன்னா ரொம்பப் பிடிக்கும். அதான் கேட்டேன்..”

அக்கா இறந்து போய் இன்றைக்கு நான்காவது நாள். ஏதோ ஒரு பெயருடன் வந்த உபாதை நான்கு மாதங்களில் உடல் உருக்கி உயிர் கவர்ந்து போனது.

மற்ற காரியங்களைப் பற்றிப் பேசத்தான் சாஸ்திரிகள் வந்திருந்தார்..

“அண்ணா.. இது ஒரு அகால மரணம். உங்க துக்கம் புரியறது. எல்லாருக்கும் நல்லதே நினைச்ச நல்லதே செஞ்ச அக்காவுக்கு ஏன் இப்படின்னு உங்களுக்கு கோவம்… என்னவா இருந்தாலூம், செய்ய வேண்டிய கர்மாக்களை முறையா செஞ்சு தானே ஆகணும்?”

இறந்து போனவரின் ஆத்மா புண்யலோகத்தை அடைய புத்ரன் செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்களைப் பற்றியும் தானங்களின் பலன்களைப் பற்றியும் உருக்கமாய் விளக்கினார். அக்காவின் பையன் மையமாய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.

அறிவியலில் ஆழங்கால் பட்ட விஞ்ஞானிகளுக்கும் ஆறாம் க்ளாஸ் படித்துவிட்டு  ஆடு மேய்ப்பவர்களுக்கும் இந்த மாதிரியான விஷயங்களில் முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கேள்வி கேட்பதில்லை.

மத்யமர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் கூட நடுவே கிடந்து அல்லாடுகிறார்கள்.

சாஸ்திரிகள் காதில் ஏர்பாட் செருக்கிக்கொண்டு நேற்றைய முன் தினம் சந்தையில் இறங்கியிருந்த மோட்டர் பைக் உதைத்து எட்டிப் பார்ப்பதற்குள் தெருமுனை திரும்பினார்..

அக்கா பிறந்தபோது கூட்டுக்குடும்பம்.  பெரியப்பா, அப்பா, அத்தை, சித்தப்பா என கல்யாணவீடு போல் இருக்கும்.

அத்தை மணமான இரண்டாண்டுகளில் இரண்டு குழந்தைகளுடன் பிறந்த வீடு திரும்பினார். அத்தையின் கணவருக்கு முன்பே தாலி கட்டாத ஒரு பந்தம் இருந்தது.

அத்தையை யாரும் எதுவும் சொல்லக்கூடாது. அனுதாபம் ஆட்சிப் பொறுப்பு கொடுத்தது. நிர்வாகம் எல்லாம் அத்தைதான்.

அம்மாவுக்கு சமையல் இலாகா.

கூட்டுக்குடும்பத்தில் அத்தையின் இரண்டு குழந்தைகளும் எல்லோராலும் சீராட்டப்பட்டன.  தந்தையில்லாமல் வளரும் அவர்களை என் சித்தப்பா ரொம்பவே தாங்கினார்.

சித்தப்பாவுக்கு சிம்ப்ஸனில் வேலை. ஓவர் டைம் அது இது என நல்ல வருமானம்.

அத்தைக்கும் அவள் குழந்தைகளுக்கும் வாரம் தப்பாமல் எல்லா சனி ஞாயிறும் ஹோட்டல், சினிமா.  சித்தப்பாவின் அன்பின் மொழி அது. அவர்களின் இழப்பைப் பற்றி யோசிக்க வைக்காமல் இருக்கும் வழி இதுவென நினைத்திருக்கலாம்.

அப்பாவுக்கு மத்திய அரசு வேலை.  சம்பளம் சொல்லிக் கொள்ளும் படியாக இருக்காது.  பாட்டி அப்பாவை அஜாதசத்ரு என்பாள். உங்களுக்குக் கோவம் வரவைக்கும் அளவுக்கு அப்பாவி. புத்தகங்கள், ரேடியோ உபகரணங்கள்தாம் அவர் சொத்து. சர்க்யூட் போர்ட், உதிரி பாகங்கள் சால்டரிங்க் அயர்ன், உருகும் ஈயம். இத்தனைக்குப் பிறகும் ரேடியோ கமறியதே தவிர பாடியதில்லை. திருமணமான புதிதில் கூட்டுக்குடும்பத்தில் கிடைக்கும் அபூர்வமான தனிமையில் கூட ரேடியோவைத்தான் கொஞ்சிக் கொண்டிருந்தார் என பின்னாளில் அம்மா கிண்டல் செய்வாள்.

அம்மா வடார்க்காடு ஜில்லாவின் கடைக்கோடியில் ஒரு கிராமம். கல்யாணத்திற்குப் பின்னர்தான் மதராஸ் டவுனையே பார்த்தாள். அவ்வளவாகப் படிப்பில்லை.. ஆனாலும் தைரியசாலி. கையில் விலாசம் கொடுத்தால் கல்கத்தாவுக்குத்  தனியாய்ப் போய் வருவாள்.

சித்தப்பாவுக்கு இன்னும் கல்யாணமாகியிருக்கவில்லை..

ஒரு விடுமுறை நாளில் வெளியே போய்விட்டு வந்த சித்தப்பா அந்தப் பையன்களுடன் தன் அறைக்குப் போய்த் தாளிட்டுக் கொண்டார்.

திடீரென்று உருளை வெங்காய மசாலின் மணம் பரவியது..

என் அக்காவுக்கு அப்போது பத்து வயதிருக்கும். ஓடிப்போய்க் கதவின் இடுக்கில் பார்த்தாள்..

‘அம்மா.. அவா மட்டும் மசாலா தோசை சாப்ட்றாம்மா.’

அம்மாவிற்கு அழுகை வந்தது.. ‘உனக்கு நான் அப்றமா வாங்கித் தரேன்..என்ன..’

அக்கா அழவில்லை.. கையில் ஸ்கேல் வைத்துக் கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாட ஆரம்பித்தாள். நடுவே ஒரு முறை போய்க் கதவிடுக்கில் பார்த்து விட்டு வந்தாள்..

எதுவும் கேட்கவில்லை..

கூட்டுக்குடும்பம் ஒரு கானகம். தேனும் இருக்கும் தேளும் இருக்கும். பக்குவமாய் புகுந்து புறப்படவேண்டும். மான்களின் கதையும் புலிகளின் கானமும் வேறாய்த்தான் இருக்கும்.

ஒருநாள் எங்கோ ஏதோ ஒரு தெய்வம் கண் திறந்தது.. அக்காவுக்குஅந்த ஊரில் ஸ்கூலில் இடம் கிடைக்கவில்லை.. கூட்டுக் குடும்பத்தை விட்டு புலம் பெயர்ந்து மாம்பலம் வந்தோம்.

அம்மா இந்தக் கதைகளையெல்லாம் சிரித்துக் கொண்டே சொல்லுவாள்..  மே மாத இரவுகளில் மொட்டை மாடியில் வானம் பார்த்துப் படுத்துக் கொண்டிருக்கும் போது.. இந்த மாதிரி நிறைய கதைகள். ஆனால் ஒருபோதும் அவர்களைச் சபித்தோ அப்பாவின் இயலாமையைக் கண்டித்தோ ஒரு வார்த்தை சொன்னதில்லை

அக்கா குணத்தில் அம்மாவைக் கொண்டிருந்தாள்..

உலகம் எவ்வளவு தந்திரம் நிறைந்தது.. நாம் இப்படி இருக்கலாமா?

‘இதோ பாரேன்.. ஒரு முனிவர் நதியில் குளிக்க வந்தார்.. ஒரு தேள் நீரோட்டத்தில் போச்சு.. கரையில் விட உள்ளங்கையில் எடுத்தார்.. தேள் கொட்டிடுத்து.. கையை உதற தேள் தண்ணில விழுந்தது..மறுபடி கையில் எடுக்க மறுபடியும் தேள் கொட்ட..  இதைப் பாத்துண்டிருந்தவர் அதுதான் கொட்டுதே.. எதுக்கு மறுபடி மறுபடி எடுக்கணும்னார்..  சிரித்துக் கொண்டே முனிவர் சொன்னார்.. ‘கொட்டுவது அதன் இயல்வு.. காப்பாற்றுவது என் இயல்பு’

அவா எப்படி வேணும்னா இருக்கட்டும்.. நாம நாமா இருப்போம்.. இதுதான் அக்கா.

அக்கா சந்தித்தவர்கள் எல்லாம் தேள்களாகவே இருந்தது விதி. புன்சிரிப்புடன் அவர்களைக் கடந்து போனாள்..

காலம் என்ன செய்யும்.. உருண்டோ புரண்டோ ஓடியது..

அக்காவுக்கு வங்கியில் வேலை கிடைத்தது. கணவர் வெளிநாடு போனார். ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒவ்வொன்று.

படிகளில் ஏறினாள் அக்கா.. வீடு, கார், நகைகள், பட்டாடைகள்..

குழந்தைகள் நன்றாய்ப் படித்தன.

அக்கா பையன் வெளிநாட்டில் படிக்கப் போகிற அன்றைக்கு எல்லோரும் ஹோட்டல் போனோம். அது ஒரு இத்தாலிய உணவகம். நாசோஸ், காசடில்லா, லசாக்னா.. என்னன்னவோ வந்தன.. குழந்தைகள் தங்களை, மாறும் உலகத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டதைப் பார்த்து பெரியவர்கள் பெருமிதப்பட்டனர்..

அக்கா சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ‘அம்மா.. நீ சாப்டலியா.. உனக்கு என்ன வேணும்.. சொல்லு..’

‘ஒரு மசால் தோசை கிடைக்குமாடா..’

அவளின் உருவம் மறைந்து ஒரு சிறுமி சீட்டிப்பாவாடையில் கையில் ஸ்கேலுடன் நிற்பது போலிருந்தது..

அந்த அக்காதான் நான்கு நாட்களுக்கு முன் செத்துப் போனாள்..

——– 0 ——-

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *