உதிராத புன்னகை
++
சற்று முன் உதிர்ந்த பூ ஒன்றை
குழந்தை மிதித்து சென்றதும்
புன்னகைக்கத் தொடங்கியது மலர்
அம்மாவிடம் முத்தம் பெற்ற
மழலை போல
++
காற்றுக்கும் உன் மீது காதல்
++
மழை நின்றபின்
நனைய வேண்டுமென்று
சொன்ன உன்னை
மரத்தினடியில் நிற்கச் சொல்கிறேன்
என்னை முந்திக்கொண்டு
கிளைகளை அசைத்து விடுகிறது
நான் சொன்னதை எப்படியோ
காதில் வாங்கிய காற்று
++
கையசைத்தல்
++
கோடை விடுமுறைக்கு
ஊருக்குச் சென்றிருக்கும்
இந்த வேளையில்
காற்றிலசையும் செடியின் கிளைகளை
பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வருகிறது
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது
கையசைத்து வழியனுப்பி வைக்கும்
குழந்தையின் மலர்முகம்
++
அம்மா அம்மாதான்
++
அன்னையர் தினம் பற்றி
அறியாத அம்மாவுக்கு
அன்னையர் தின வாழ்த்துகள் சொன்னேன்
அதெல்லாம் இருக்கட்டும்
நேரமாச்சு வந்து சாப்பிடு என்றாள்
++
துயிலெழுப்புதல்
++
தூங்கியெழுந்த குழந்தை
எழுப்புகிறது
தூங்கிக் கொண்டிருக்கும்
எல்லா பொம்மைகளையும்
++
அன்புப் பரிசு
++
தத்ரூபமாக செடியை
வரைந்த சிறுமிக்கு
மலரொன்றை புதிதாய் பூக்கச்செய்து பரிசளிக்கிறது காகிதம்
++
சீ.பாஸ்கர்
செங்கல்பட்டு மாவட்டத்துக்காரர்.