1

கதவுகளின் வழியே

நழுவும் எனது தவறுகளை

யாரும் கண்டு கொள்ளாதீர்கள்

நீங்கள் அவற்றைத்

தேடத் தொடங்கினால்

எனது சாளரங்களில் நுழையும்

வாய்ப்புகளை உணர முடியாமல்

புலம்பல் தொடங்கிலிடும்

உங்களின் பொழுதுகளும்

எனது பயணமும்.

என்னை வரையறைக்குள்

அளந்து பார்க்கும் தருணங்களில்

உங்களின் நகர்தல் நின்றுவிடுவதை

நம்ப மறுக்கிறீர்கள்.

திறந்திருக்கும் கதவில்

நீங்கள் நுழைந்தாலும்

எடுத்துப் போகலாம்

எல்லோருக்குமான வெளியை.

பூட்டுகளும் கள்ளச்சாவிகளும்

பிரிக்கவே இருக்கையில்

நீங்களும் நானும்

கைகுலுக்குவது எப்போது?

2

பறத்தலின் நிமித்தம்

வலியைச் சுமப்பதில்லை

பார்வையின் எல்லையில்

சுருக்கத்தை ஏற்பதில்லை

இரையின் தேடலில்

இளைப்பாறுதலை நாடுவதில்லை

இணையின் கவர்தலில்

கூடுகள் தொலைப்பதல்லை

இறகுகளின் சித்திரத்தில்

வண்ணங்களை இழப்பதில்லை

வானத்தின் பெருந்தடத்தில்

பறத்தலைத் துறப்பதில்லை

பரதவிப்பில் பதறும்

மனிதனுக்கும்

பாடம் சொல்ல மறப்பதில்லை பறவை.

3

எறும்புகளின் வரிசையில்

இடைநுழைக்கும் விரலுக்கு

வழிவிட்ட பின்னே

தேடத்தொடங்கும் உயிருக்குள்

ஒளிந்து கிடக்கிறது

உழைப்பின் ஒப்பந்தம்.

4

ஒளிக் கிரணத்தில்

ஊரை எரிக்க வந்த பகலவனுக்கு

மேகத்தின் தீண்டல் தூண்டிய

மோகத்தினால்

குளிரத் தொடங்கியது

வெப்பத்தின் வெட்கம்.

5

அடுக்கியிருக்கும்

பொம்மைக் கடைக்குள்

தேடத்தொடங்கும்

மகளுக்குத் தென்படவேயில்லை

அடித்தாலும் இழுத்தாலும்

விழுந்துவிடாத

அப்பாவைப் போலொரு பொம்மை.

000

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *