எழுந்துச் சென்ற பறவை நீ
கிளை கிளையாய் அலையும்
என் காதல்
,
என் இதய நாடி
அலைகள்
உன் இதயம் நாடி அலைகிறது
,
நீ கிழித்துப் போட்ட இதயத்தை
தையல் போட
ஒரு தையல் வந்தாள்
,
உன் சாயல் கொண்ட
எந்தப் பெண்ணும்
என்னைப் பார்த்துவிட்டே செல்கிறார்கள்
,
காற்று மோதி
கதவு க்றீச்
எப்போதோ பார்த்த முகம்
,
புகைபோல்
கசியும்
நீர் நீ
,
உன் நினைவே
ஒரு
வாணவேடிக்கை
,
களைப்புக்கு
முகம் காட்டுகிறாய்
களைத்துப் போகிறேன்
,
யாரும் பார்க்காத
எதுவும் என்னிடமில்லை
என் அம்மணத்தைத் தவிர
,
நிர்வாணம் எவ்வளவு பெரிய
மோசடியென்று
நீ ஆடை களைந்ததும் தெரிந்தது
,
எப்போதோ மறந்து போன உனக்கு
போன் செய்தேன்
என் நம்பர் ப்ளாக்கிலிலிருந்தது
இன்னும் நினைத்துக்கொண்டு இருக்கிறாய்
,
நீ பார்த்ததை
யாரும் பார்க்கப் போவதில்லை
உன்னிடம் காட்டாததை
யாரிடமும் காட்டப்போவதில்லை
,
உன் பேச்சைக் கேட்டிருந்தால்
இந்த இரவில்
நீயும் நானும் அருகருகே படுத்திருந்தாலும்
இந்நேரம் உறங்கியிருப்போம்
00
பி. வேல்முருகன்
தமிழ்த் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகவும் திரைக்கதையாசிரியராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார். இவருடைய சினிமா கட்டுரைகள் முன்னணி இதழ்களில் பிரசுரமாகியுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களும் ஓரிரு திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார்.