எதையோ தேடுகையில்
கல்லூரிநாட்களில்
முன்னால் காதலுக்கு
மனைவியெழுதிய கடிதம்
கிடைத்துத்தொலைந்தது.
செய்வதறியாது நெடுநேரம்
அமர்ந்திருந்தேன்.
உள்ளுக்குள்
வஞ்சச்செடியொன்று
நொடிப்பொழுதில் மரமாகிவிட்டது.
கிளைகளெல்லாம் சந்தேகநச்சு
பூத்துநின்றது.
பெருமையோடு அவளிடம் முன்னால் காதலிகளைப்பற்றி
பேசியதொருபுறம் நெஞ்சைச்சுட்டது.
உனக்கொரு நியாயம்
அவளுக்கொரு நியாயமாவென
கேள்வி எழுந்தது.
கேட்பதா மறைப்பதா
யோசனைப்பந்து உள்ளுக்குள் உருண்டது.
முகமாற்றம் கண்டவள்
நெற்றியை கழுத்தைத்தொட்டுப்பார்த்தாள்.
உடம்புக்கு முடியலயாவென
கரிசனத்தோடு கேட்டவளின் முகத்தையே பார்த்தேன்.
இவள் அவளல்ல.
அவள் இவளல்ல.
கசியும் கண்ணீரோடு கட்டிக்கொண்டேன்.
பட்டுத்தெறித்த கண்ணீர்பட்டு
சந்தேகமரம் பட்டுப்போனது.
–
++
யாமத்தின்வாசனையில்
சஞ்சாரித்தபடி
அத்தரைத்தெளிக்கிறார்
அப்துல்கரீம்.
யானையின் வயிற்றை
கிழித்துக்கொண்டிருக்கிறார்
டாக்டர்.கே.
“கோழி தின்னு பிள்ளேச்சா”
தலையில் தட்டுகிறார்
பெத்தேல் சாகிப்.
சீரங்கக்கோயில் மணியோசை
கேட்டு கண்மூடுகிறான்
திப்புசுல்தான்.
காக்காவிரிச்சியை ஒரேவீச்சில்
இரண்டு துண்டாக்குகிறான்
வேள்பாரி.
என் பின்னால் வாவென
கையைப்பிடிக்கிறார் மாவோ.
மிக்ஸியை கையில்பிடித்தபடி
தாமிரபரணியில் மல்லாந்து
மிதக்கிறான் குமார்.
அக்னிப்பிரவேசம் செய்தவளுக்கு
நீராபிசேகம் செய்கிறாள் தாயொருத்தி.
கிணறுவெட்ட வைத்த வெடியில்
கருகிக்கிடக்கும் பேத்தியைக்கண்டு
விக்கித்துநிற்கிறார் பேயத்தேவர்.
மருத்துவமனையில்
இறக்கிவிட்ட மம்மூட்டி கையில்
இரண்டு ரூபாயை திணிக்கிறார்
ஏழைமுதியவர்.
வெள்ளக்காடாய் மிதக்கின்ற
ஏதோவொரு கிராமத்தில்
அதுவரை சேமித்த
மூன்று லட்சத்தை கரைக்கிறார்
நஜீப்குற்றிப்புரம்.
மகன் சிறையிலிருக்க
துண்டுப்பிரசுரங்களை
வினியோகிக்கையில்
கொல்லப்படுகிறாள் ரஷ்ய
தாயொருத்தி.
புத்தகங்களால் ஆவதென்ன
என்ற கேள்விக்கு இத்தனைபேரை
துணைக்கழைக்கிறேன் நான்.
++
பாமியான் மலைமுகட்டில்
பரந்துவிரிந்திருக்கும்
புத்தனின் நெஞ்சில்
முதல்தோட்டா பாய்கிறது.
ஐந்தாம்நூற்றாண்டிலிருந்து
அருள்பாலித்தவர்
அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
சற்றைக்கெல்லாம்
சல்லடையாக்கும் நோக்கில்
சகட்டுமேனிக்கு புத்தனின்
மேனியெங்கும் தோட்டாக்கள்
துளையிடுகின்றன.
அவ்வளவுபெரியஉடலில்
இருக்கிறஇடைவெளியில்
ஜெலட்டின்குச்சிகளையும்
வெடிமருந்துகளையும்
திணித்துபெயர்த்துவிட்டு
புன்னகைக்கிறார் ஓமர்.
இப்படித்தான்ஓர்நாள்
காந்தியையும்
அவர்சிலையையும்
துளையிட்டார்கள்.
மதவாதத்திற்கு ஒரேமுகம்தான்.
பெயர்மட்டும்ஆளாளுக்கு
வைத்துக்கொள்கிறார்கள்.
++
பரிசாகவந்தபுத்தரை
சாமியறைக்குள்
சேர்த்துவைத்தாள்இல்லாள்.
சூலமும்வேலுமேந்திய
தெய்வங்களைப்பார்த்துவிட்டு
இறுகக்கண்களைமூடிக்கொண்டார்
புத்தர்.
கந்தசாமியும்கருப்பச்சாமியும்
நமட்டுச்சிரிப்போடுஅருள்பாலித்தார்கள்.
பூவும்பொட்டும்வைத்து
எல்லாகடவுளையும்வழிபட்டவள்
புத்தருக்குஎன்னசெய்வதென
குழம்பிஅவர்கைகளில்
பூவொன்றைவைத்துவிட்டுப்போனாள்.
குனிந்ததலைநிமிராமல்
பூவையேபார்த்துக்கொண்டிருந்தார்.
வீடுதுறந்தகடைசிஇரவில்
பூச்சூடிஉறங்கிக்கிடந்த
யசோதரை நினைவில்
வந்திருக்கக்கூடும்.
++
சலூன்கடை முருகன்
வீட்டில் ஒருவேளை
உண்டதற்காக
வெளியிலேயே நிற்கவைத்து
தண்ணீருற்றினாள் அத்தை.
சிலநாட்கள் கழித்து
வீட்டில் பஜனை வைக்கையில்
கன்னிச்சாமியாக
முருகன்சாமி வந்தது.
கால்களை நீருற்றி அலம்பி
சந்தனம் குங்குமம் வைத்து
தொட்டுக்கும்பிட்டு
வீட்டுக்குள் அழைத்துப்போனாள்
அதே அத்தை.
சிலநேரங்களில் ராமசாமி
சொன்னதைச்செய்ய
அய்யப்பசாமியின்
துணைவேண்டியிருக்கிறது.
++
அந்த நாட்களில்
அத்தனை அயற்சியாகிவிடுவாள்..
கடவுளர் படங்களிருக்கும்
அலமாரியை திரைச்சீலையால்
மூடிவிடுவாள்.
தீட்டாகிவிடுமென்று திருநீறு
பூசிவிடமாட்டாள்.
உதடுகடித்தபடி சமையல்
செய்துவிட்டு இடுப்புவலி
தாங்காமல் சமயங்களில்
அவள் அழும்போது
கட்டியணைப்பது தவிர
வேறோன்றும் தோன்றியதில்லை.
சிலநாட்களில் ரொம்ப போகுது பா
என்றுசொல்லி ரயில்பூச்சியாய்
சுருண்டு கிடப்பதைப்பார்த்துவிட்டு
உடல்வலியென்று சொல்லி
மதுப்புட்டி திறக்கையில்
உள்ளிருக்கும் திரவம்
கசிகின்ற அவள் ரத்தத்துளிகளை
ஒத்திருந்தது.
++
இல்லறக்கடலில்
இனி ஒன்றாய் பயணிப்பது
இயலாதென்று
எங்கள் படகுகளை
திசை திருப்பிக்கொண்டோம்.
இணைந்து வாழ்வதென்பது
ஆகதென்றதும்
இணங்கிப்பிரிந்தோம்.
பிரிவின் வெக்கை
தாளாத நேரங்களில்
பரிவு காட்டுவது நீ விட்டுச்சென்ற
மிச்சங்கள் தான்.
மழையில் தலைநனைந்த மரம்
மழை நின்றபின்பும்
சொட்டுச்சொட்டாய் ஈரத்தை
உதிர்ப்பதைப்போல.
தனிமை இருட்டுக்குப்பயந்து
இசை மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்.
காற்றில் கசிகிறார் பாடும்நிலா.
“சில நாழிகை நீ வந்துபோனது.
என் மாளிகை அது வெந்துபோனது”
அங்கே உன்னறையில்
நாமெப்போதும் இணைந்து கேட்குமொரு
பாடலின் கடைசிப்பல்லவியை
நீ கேட்டிக்கொண்டிருக்கிறாயா?
“உடனே வந்தால் உயிர்வாழும்.
வருவேன் அந்நாள் வரக்கூடும்”
என் அலைபேசி அழைக்கிறது.
++
கௌ.ஆனந்தபிரபு
திருப்பூர்
சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
படைப்பு குழுமத்தின் கல்வெட்டு, தகவு, ஆனந்தவிகடன் ,கொலுசு , சந்தனவேங்கை, புன்னகை, பட்டாம்பூச்சி குழுமத்தின் சிறகுமுளைத்த கவிதை, கவிக்கோ நினைவு தின கவிதை போட்டி போன்றவற்றில் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன