குயில் ஏன் காக்கைக் கூட்டில் முட்டையிடுகிறது?

பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. அப்போது காடுகள் உண்டாகி நன்கு வளர்ச்சியடைந்து செழித்துக் கிடந்த காலத்தில் நிகழ்ந்த கதை இது.

           அப்படியான ஒரு பச்சை வண்ணம் மலைபோலக் கொட்டிக் குவிக்கப்பட்டதைப்போல இருந்த காட்டில் நிறைய பறவைகள் இருந்தன. அவற்றில் ஒன்றாகத்தான் குயில்களும் இருந்து வந்தன. இவற்றுக்கு அரசத் தலைமையாகக் கழுகினங்கள் பதவி வகித்து வந்தன.

          எல்லாமும் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த காலக் கட்டத்தில்தான் கண்பட்டதுபோல அந்தக் காட்டிற்குள் ஒரு பெரிய பிரச்சினை எழுந்தது.

           பௌர்ணமி காலத்தின் பின்னிரவில் உயரமான மரத்தின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்திருந்த அரசக் கழுகின் கூட்டில் அந்தப் பிரச்சினை எழுந்தது.

           பிரச்சினையை எழுப்பியது அரசக் கழுகின் அரசியான கழுகு.

           பிரச்சனைக்குக் காரணம் குயில்கள்.

           குயில்கள் பாடும் பாட்டுகள்.

           நடந்தது இதுதான்.

           ஒவ்வொரு நாளும் பறவைகள் காலையில் போய் மாலையில் கூடு திரும்பித் தன் குஞ்சுகளுக்கு  இரையூட்டியபின் அவை உறங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த சம்பவம் தான் இப்பிரச்சினைக்குக் காரணம்.

           குயில்களும் காலையில் போய் மாலையில் தங்கள் கூட்டிற்கு வந்தபின்பு எல்லாம் முடித்தபின்பு கூவ ஆரம்பிக்கும். அமைதியான இரவு நேரத்தில் குயில்களின் அந்த கூவல் எல்லாப் பறவைகளையும் தாலாட்டுவதுபோல இருக்கவும் அப்படியே குஞ்சுகள் மெய்மறந்து தூங்கிப்போகும். பின்னர் தாய்ப்பறவைகளும் தூங்கிவிடும். இப்படித் தொடங்கிய இந்தப் பழக்கம் எல்லாப் பறவைகளின் குஞ்சுகளும் உறங்குவதற்குக் குயில்கள் கூவினால்தான் தூங்குவோம் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தன. இரைகூட வேண்டாம் இசை மட்டும் போதும் என்று சொல்லுமளவுக்கு அடம்பித்தன. ஆகவே எல்லாப் பறவைகளும் குயில்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ளக் குயில்களும் என் குழந்தைகள் போலவே உங்கள் குழந்தைகளும் ஆகவே பாடுகிறோம் என்று உறுதியளித்து அன்றிலிருந்து பாடத்தொடங்கின.

           இதிலென்ன கழுகிற்குப் பிரச்சினை?

           உயரமான மரத்தில் கூடு இருப்பதால் அதைவிடத் தாழ்ந்த மரக்கிளையில் அமர்ந்து குயில்கள் பாடுவது கழுகின் குஞ்சுகளுக்கு அரைகுறையாக கேட்க ஆரம்பித்ததுதான் பிரச்சினை.

           ஒருமுறை குயில்கள் பாடும்போது கூட்டைவிட்டு இறங்கிப் பறந்து வந்த கழுகரசியார் பாட்டைக் கேட்டுவிட்டு அப்படியே கிறங்கிப்போய்விட்டது. தன் பிள்ளைகளுக்கும் குயிலின் பாட்டு அவசியம் என்று உணர ஆரம்பித்ததுதான் பிரச்சினைக்குக் காரணம். அதைவிட முக்கிய காரணம் குயில்கள் கட்டும் கூடுகள்.

           குயில்களுக்குக் கூடு கட்டத் தெரியுமா?

           காடுகள் தோன்றிய காலத்தில் காட்டின் அற்புதக் கூடுகளை வடிவமைப்பதில் குயில்களே அலகுதேர்ந்த சிற்பிகளாக இருந்தன. ஊசிபோல வடிவில் உள்ள மூங்கில் குருத்துகளையும் இலைகளையும் கொண்டு வந்து விதவிதமான வடிவங்களில் கூடுகளை அமைப்பதில் அலகு தேர்ந்தவையாகக் குயில்கள் இருந்தன. ஒவ்வொரு குயிலும் ஒவ்வொரு வடிவத்தில் கூடமைப்பதில் தேர்ந்தவையாக இருந்தன. தாமரை இலை வடிவத்தில், பெரிய பூ வடிவத்தில், நட்சத்திர வடிவத்தில், நிலா வடிவத்தில், சூரியன் சுடர் வடிவத்தில் என மூங்கில் குருத்துகளில் அற்புதங்களை நிகழ்த்திக் கூடுகளை வடிவமைத்தன குயில்கள். எனவே அந்தக் காட்டைப் பொருத்தளவில் குயில்களை மிஞ்சும் கூடமைக்கும் பறவைகள் எதுவுமில்லை என்றாகிப்போனதும் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

       ராஜான்னுதான் பேரு.. உயரமான மரத்துல முள்ளுக்குச்சிகள வச்சிருக்கிற இதெல்லாம் கூடா.. பிள்ளைகள் அதிகம் புழங்க முடியல்ல.. உங்களைவிட சின்ன பறவை.. உங்களுக்கு அடிமைப் பறவை அந்தக் குயிலுங்க எப்படி விதவிதமாக் கூடு கட்டுதுன்னு காடு முழுக்கப் பேசிக்குதுங்க மத்த பறவைங்க.. இதுல நான்தான் பலம்.. என்ன யாரும் ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு பெருமை வேற.. தினமும் கழுகரசியார் கழுகரசனைச் சொற்களால் பேசிக் கொத்தியெடுக்க கழுகரசனுக்குள் பொறாமையும் கோபமும் காட்டுத்தீ போலப் பரவி எரிந்தது.

      குயில்களை ஏதாவது செய்யவேண்டும்? என்ன செய்யலாம்? வெளிப்படையாக எதுவும் செய்யமுடியாது. எல்லாப் பறவைகளுக்கும் பிடித்த பறவையாகக் குயில்கள் இருக்கின்றன. மேலும் கழுகுக் கூட்டத்தைவிட மற்ற பறவைகள் பத்துமடங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஏதாவது ஒன்றுகூடிவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று கழுகரசன் யோசித்தது. உடனே அது ரகசியமாகத் தன் இனக் கழுகுகளை மட்டும் அழைத்தது.

           கூட்டம் தொடங்கியதும் கழுகரசன் பேச ஆரம்பித்தது.

           வணக்கம். உங்கள் எல்லோருக்கும் என்ன பிரச்சினைன்னு தெரியும். இப்படியே போனால் நாளைக்கு நம்மினம் மதிப்பிழந்து போகும். சின்னப் பறவைகளின் அதிகாரம் கைஓங்கிவிடும். பொழுது போகாமல் இரவில் தூக்கத்தைக் கெடுப்பதுபோலக் குயில்கள் கத்துவதைத் தடுக்க வேண்டும். ஆனால் எல்லாப் பறவைகளும் அதைப் பாடல் என்று கொண்டாடுகின்றன..  நன்றாகக் கூடுகள் கட்டத் தெரிகிறது என்பதால் குயில்களை அரசத் தலைமையாக்கிவிடமுடியுமா? வலிமையும் பெரிய உருவமும்தான் இக்காட்டை ஆளுவதற்குத் தகுதியானவை. ஆகவே நம் கழுகினம் இருக்கும் வரை நாம்தான் அரசத் தலைமையேற்றுக் காட்டை ஆளமுடியும். ஆளவேண்டும். இப்போது உங்கள் யோசனைகளைக் கூறுங்கள்.. என்று சொல்லிப் பேச்சை நிறுத்தியது கழுகரசன்.

            ஆளுக்கொரு ஆலோசனைகள் கூற ஆரம்பித்தன.

            -அரசே.. நீங்கள் உத்தரவிட்டு இனிமேல் குயில்களைப் பாடக் கூடாது என்று சொல்லிவிட்டால் போதும்.

           -பாட்டைப் பாடமுடியாமல் நிறுத்திவிடலாம் கூட்டை? என்றது கழுகரசன்.

           -கூட்டைக் கட்டமுடியாது என்று சொல்லமுடியாது. அது உயிர் வாழ அமைப்பது.

           -எல்லோருக்கும் குயிலே கூடுகட்டிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடலாம் அரசே.

           -இது அசிங்கம். நம் தன்மானத்திற்கு இழுக்கு. ஒவ்வொருத் தருக்கும் கூடு கட்டும் திறமை உண்டு. ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக் கூடாது என்றது வயதான கழுகொன்று.

           -சரி அரசராகிய உங்களுக்கு மட்டும் கூடமைத்துத் தரச் சொல்லலாம் அரசே..

           -இது நல்ல யோசனைதான்.

           -வேண்டாம்.. இது அவமானம். நாம்தாம் எல்லோருக்கும் வழிகாட்டி. அரசருக்கே கூடுகட்டத் தெரியாது. குயில்கள்தாம் கூடுகட்டிக் கொடுத்தன என்றால் நாளைக்கு காடு முழுக்கத் தெரிந்து மரியாதையும் பயமும் இல்லாமல்போய்விடும். எல்லாவற்றுக்கும் அரசக்குடும்பம்தான் முன் மாதிரியாக இருக்கவேண்டும். என்றது கழுகரசி.

           -அரசியாரே நீங்களே இதற்கு நல்ல வழி சொல்லுங்கள்.. என்றன மற்ற கழுகுகள்.

           -ஒரே வழிதான். குயில்கள் எப்போதும் கூடுகட்டக்கூடாது..

           -அது எப்படி முடியும்? அப்போ குயில்கள் எங்கே இருக்கும்?

           -ஏன் எத்தனை மரங்கள் இந்த காடு முழுக்க உள்ளன.  அவற்றில் ஏதாவது ஒன்றில் இருக்கவேண்டியதுதான்.. வேறு வழியில்லை என்றது கழுகரசி. சரியென்பது போல தலையை அசைத்தது கழுகரசன்.

           -அவை முட்டைகளை எங்கே இடும்? எப்படி இனப்பெருக்கம் செய்யும்?

           -இது நம் பிரச்சினையில்லை. குயில்களின் பிரச்சினை. அவைதாம் பார்த்துக்கொள்ளவேண்டும், என்றது மீண்டும் கழுகரசி.

           -இதை எப்படிச் செயல்படுத்துவது என்று கேட்டன.

           -குயில்களைத் தாமே கூடுகட்டாமல் செய்யவேண்டும்.

           -எப்படி அது சாத்தியம்?

           -அச்சம். அச்சத்தை உருவாக்கவேண்டும். அச்சம் எல்லாவற்றையும் மாற்ற வைக்கும்! என்றது கழுகரசி.

           -எப்படி அச்சத்தை ஏற்படுத்துவது?

           -எந்தப் பறவையிடமும் சொல்லவேண்டியதில்லை. ஒவ்வொரு நள்ளிரவிலும் நாம் எல்லோரும் ஆளுக்கொருவராகக் குயில்கள் கூட்டைத் தாக்கிச் சிதைக்கவேண்டும். யாரென்று உணருமுன்னரே கொன்றுவிடவும் வேண்டும், என்றது கழுகரசி.

           -கொன்றுவிட்டால்? என்றன கழுகுகள்.

           -தப்பிப் பிழைத்த குயில்கள் யோசிக்கும். அச்சம் வரும். ஏதேனும் ஒரு முடிவை எடுக்கும் என்றது கழுகரசி. தலையாட்டியது கழுகரசன்.

          மறுநாள் நள்ளிரவில் எதிர்பாராத் தாக்குதலில் என்ன நடக்கிறதென்றே குயில்களுக்குப் புரியவில்லை. அறியுமுன்னரே அவை உயிர் நீத்தன. குஞ்சுகள் கூட்டிலிருந்து சிதறிப் பறந்து காட்டில் விழுந்து மடிந்தன. குயில்கள் அழுது கூவின.. எல்லாப் பறவைகளும் பறந்து வந்தன.

           என்ன நடக்கிறது என்று அவற்றுக்கும் புரியவில்லை.

           எப்படியோ பறவைகள் விடிந்ததும் எல்லாமும் தெரிந்து கொண்டன. இனி குயில்களைப் பாடக்கூடாது கூடு கட்டக்கூடாது என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தன. மிச்சமிருந்த குயில்களின் கூடுகளை மற்ற பறவைகளே அழித்து ஒழித்தன. அவற்றிலிருந்த குயிற்குஞ்சுகளைத் தங்கள் கூடுகளுக்கு இடம் மாற்றிக்கொண்டன. குயில்களுக்கு ஆறுதல் சொல்லி கலங்கி நின்றன மற்ற பறவைகள்.

           இனி நாங்கள் எப்படி வாழ்வோம் கூடில்லாமல். எங்கள் முட்டைகளை எங்கே இட்டு எங்கள் வம்சத்தை வளர்ப்போம் என்று கவலையுடன் சொல்லிப் புலம்பின குயில்கள்.

           பச்சைக் கிளியொன்று பேசியது

           -கவலைப்பட வேண்டாம். உங்கள் முட்டைகளை எங்கள் கூடுகளில் யாருடைய கூட்டில் வேண்டுமானாலும் இட்டு வையுங்கள். நாங்கள் அடைகாத்து உருவாக்கித் தருகிறோம்.

           எல்லாப் பறவைகளும், ஆமாம்.. ஆமாம்.. நாங்கள் பாது காக்கிறோம்! என்றபோது காகம் ஒன்று முன்வந்து சொன்னது.

           யாரும் வேண்டாம். நான் அடைகாக்கிறேன். நாளைக்கு உங்கள் கூடுகளில் குயில்கள் முட்டை இட்டால் அவற்றைத் தெரிந்து அவற்றையும் அழிக்கலாம் கழுகுகள். உருவத்தில் வேறுபாடு இருந்தாலும் நிறத்தில் நாங்களும் குயில்களும் ஒன்றுதான். ஆகவே எங்கள் கூட்டில் முட்டைகள் இட்டால் அவற்றை எங்கள் முட்டைகள் என்றே நம்பிவிடக்கூடும். நாங்கள் உளப்பூர்வமாக அடைகாத்துத் தருகிறோம். உங்கள் சந்ததியும் பிழைக்கும்.

           காகத்தின் யோசனை எல்லாப் பறவைகளுக்கும் சரியென்று பட்டது. குயில்களும் அப்படியே செய்கிறோம் என்று ஒத்துக்கொண்டன.

           அன்றிலிருந்துதான் குயில்கள் காக்கைக் கூட்டில் முட்டைகளை இட ஆரம்பித்தன. ஏனோ தெரியவில்லை. அதற்குப் பின்னர் கழுகுகளும் குயில்களைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. எந்தத் தொல்லையும் தரவில்லை.

0000

இயற்பெயர்  பேரா.முனைவர். க.அன்பழகன் (ஹரணி) (1961)

தமிழ்ப்பேராசிரியர் (பநி)

1979 முதல் படைப்புலகில்.  1000க்கு மேற்பட்ட சிறுகதைகள்.. கொஞ்சம் கவிதைகள்.. குறுநாவல்கள், நாவல்கள், 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்றவை. கொஞ்சம் பரிசுகள். விருதுகள். பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. படைப்புகளில் எம்பில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பார்வை நூலாக என் நல்கள் வைப்பட்டுள்ளன. இதுவரை 70 நூல்கள் ஆய்வியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், மொழியியல், இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், நாடகங்கள், கதைப்பாடல்கள் என 45 ஆண்டுகாலம் படைப்புலகில். கற்றது கடுகளவு. இன்னும் கல்லாதது உலகளவு. நன்றி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *