காபிப்பொடிக்கு
எங்கள் வீட்டு நடப்பையும்
சீனிக்கு உறவினர் கதைகளையும்
கலந்து அடர்த்தியாகக் குடித்தபடியே
வந்திருந்த உறவினப் பெண்மணி கேட்டார்:
‘அந்தப் பசுமாடு இன்னமும் செனையே ஆவுல?’
கசப்பை விழுங்கியபடியே சொன்னேன்:
‘கொழந்தயா வந்தது
கொழந்தயாவே வளத்துறம்
இன்னொரு குழந்தையாக
இருந்து விட்டுப் போகட்டுமே?’
++
காலையில் எடுத்ததில்
கலங்கிய படமொன்றும்
கலந்திருந்தது
ஒரு நொடி யோசித்துப் பின்னர்
பதிவேற்றி விட்டேன்
குழந்தையின் அறையில்
காலொடிந்த குதிரையும்
காண்பதற்கு அழகு தானே?
++
பொறியுருண்டை வாங்கியவுடன் ஒரு சிறு நடனம் ஆடும் சிறுமியின் சந்தோஷத்தையும்
கர்ப்பிணி மனைவியை கைப்பிடித்து மெதுவாக படிகளில் நடக்கும் கணவனின் கருணையையும்
எப்போதும் ஒரு நொங்கைக் கொசுறாகக் கொடுக்கும் அந்த பணக்கார மனசையும் தவிர
உன்னிடம்
வேறென்ன
கேட்கப் போகிறேன்
கைலாசநாதனே!
+++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.