பாவப்பட்டதுப்பாக்கியின்கடைசி வேண்டுதல்

அன்புள்ள குழந்தையே; ஆம் நீயும் எனக்கு குழந்தைதான். உன் பிஞ்சு கைகளின் இளஞ்சூடு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

உன்னை இந்தப் பாவத்தில் தள்ளிய என்னை மன்னித்து விடு. உன் கைகளில் இரேகைகள் வளர்வதற்கு முன்னமே அதில் இரத்ததுளிகளை பரவவிட்டதற்கும் என்னை மன்னித்துவிடு. உன் சூழ்நிலையை எனக்குச் சாதகமாக பயன்படுத்தி உன் வாழ்வில் பல ஆண்டுகளை நான் இருட்டாக்கி விட்டேன்; அதற்கும் என்னை மன்னித்துவிடு.

 ஒன்றும் அறியா வயதில் நீ என்னிடம் அடைக்கலம் வந்தாய். நான் உனக்குப் பாதுகாப்பாய் இருப்பேன் என நினைத்தாய். உள்நாட்டு போரில்  உனது குடும்பத்தை இழந்து யாருமில்லாமல் வேறு வழியில்லாமல், நின்ற போது என் தலைவர், என்னை உன்னிடம் ஒப்படைத்து, உனக்குத் துணையாக இருக்க சொன்னார். நீயும் விளையாட்டு பொருள் போல என்னை உன்னிடம் சேர்த்து கொண்டாய்.

இந்த விளையாட்டு பொருளை வைத்து நீயும் நானும் விளையாடியதில் எத்தனியோ பேரை நாம் பழிவாங்கியுள்ளோம். அப்போது உனக்கு 13 வயதுதான்.

போர்க் கைதிகளைக் கொல்லும் பொறுப்பு உனக்கு வழங்கப்பட்டது. நீ ஹீரோவாகிப் போனாய். குடும்பத்தை இழந்த வலியும், பயமும் துடுக்குத்தனும் உன்னையும் என்னைப்போல ஏவலாளியாக மாற்றியது. யார் அழுத்தினாலும் சுட்டேன். யார் ஏவினாலும் கொன்றாய்.

நல்ல வேளை, உன்னை போன்ற குழந்தை வீரர்களை இது போன்ற அவலத்தில் இருந்து காப்பாற்ற ஐ.நாவில் இருந்து யாரோ என்னமோ செய்தார்கள். சில குழுக்கள் முன்வந்து நம்மை காப்பாற்றி அரவணைத்தார்கள்.

உன் வயதுக்கு மீறிய கொலைகளை நீ செய்வதற்கும் நானுமே ஒரு காரணம். உன் மீது படிந்திருக்கும் இரத்தத்துளிகளின் வீச்சத்திற்கு நானேதான் முழு காரணம். நீ என்னை அழுத்தும் போது நான் என் இறுக்கத்தை விட்டிருக்கக் கூடாது. முரண்டு பிடித்திருக்க வேண்டும். ஆனால் நான் உன் தொடுதலில் நெகிழ்ந்து உனக்கு அடிபணிந்துவிட்டேன்; என்னை நீ மன்னித்துவிடு.

 கொலை உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்த அனுபவம் கொண்ட சிறுவனான உன்னை கையாள்வது யாருக்கும் அத்தனை எளிதாக இருக்கவில்லை. நீ மிகவும் உக்கிரமாக இருந்தாய்.

மெல்ல மெல்ல உன் நாட்கள் மாறின. இரத்தம் தோய்ந்த நாட்கள் குறித்த குற்றவுணர்வால் நீ உன்னையே வருத்திக் கொண்டாய். உனது நல்ல நேரம், அரும்பாடு பட்டு உன்னை நல்வழிபடுத்த இங்கு பலர் முயல்கிறார்கள்.

குழந்தையே இந்த மடல் உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்பதாக நினைத்துக் கொள். இனி எப்போதும் என்னை நீ, மீண்டும் நினைக்காதே. உன் தொடுதலை எனக்கு கொடுக்காதே.

 என்னை மன்னிப்பதோடு; மறந்துவிடு. நீயாவது பிழைத்துக்கொள். நிம்மதியாய் வாழ்.

++

அகிப்ரியா

மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்களில் புதிய வரவு. வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில் மேற்கல்வி கற்கின்றார். அவ்வப்போது குறுங்கதைகளையும் சிறுகதைகளையும்  எழுதிவருகின்றார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *