காலம்…..!!!!
அப்பாவின் பழைய
நினைவு ஒன்றை
அசைபோட வைக்கிறது
அதிகாலை நேர
காகங்கள் கரையும்
என் தனிமைக்கான பிரிவு
நானும் தனிமையும் நீண்ட கால
பங்காளிகளாகிவிட்ட துயரத்தின் நீட்சி ,
துயர் துடைத்து
கண்ணீர் விட்டு அழுகிறது
பள்ளிக்கு நேரமாகிவிட்டதென்று
தன் தோல் தூக்கி
மூச்சிரைக்க ஓடிய
கொடிய பழைய காலம் ,
காலம் கரைந்தோடி
கரைமேல் அமர்ந்த பின்பும்
இன்னுமும் டிக் டிக் டிக்கென்றே
துடித்துக் கொண்டிருக்கிறது எனக்குள்ளிருக்கும்
என் அப்பாவின் இதயம் ,
–
நிழல் ….!!!!
–
வானுயர்ந்த மலை
மீதேறி நின்று
பூமி பார்க்கிறேன்
சின்ன சிறு பட்சியாக காட்சியளிக்கின்றன மரங்கள்
ஒவ்வொரு மரங்களிலும்
வெவ்வேறான நிழல்கள்,
வெவ்வேறான நிழல்களும்
ஒவ்வொரு நிறங்கள்
கருத்த என் நிறத்தை
தூக்கிகொண்டு கீழ் ஓடிவரும்
இரண்டு கால்களுக்குமான
இடையில் மடியில்
ஆகாசமாய் பூத்திருக்கிறது உனக்குள்ளும் எனக்குள்ளுமாய்
ஓர் பூங்கன்று
அதன் பெயரோ உன் அழகு ,
–
வரைதல்…!!!!!
–
அலைகளை
வரைந்து கொண்டிருக்கும்
குழந்தைகளின் பிஞ்சு
விரல்களுக்கு இடையில்
ததும்பி ததும்பி கரை சேர்கிறது
நீண்ட நாட்களாக
பார்க்க நினைத்த
ஓர் ஆழ்கடலின் பிம்பம் ,
–
கனவு நிலா ….
–
நிலா
வந்ததென்று
விளக்கனைத்தேன்
என் அறைக்கு வெளியே
மீண்டும் ஒரு நிலா
அது யாராக இருக்ககூடும்
கனவில் வருபவளா ..!
கல்லூரியில் பார்த்தவளா..!!
காதலா காமமா …!!!நீளும்
இரவுக்கான கவிதையில்
யார் அவள் விரித்த பாயில்
நானோ உயிரற்றவனாய்
அவள் யாரென்று பெரும் யோசனை,
++
ச.சக்தி
புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது.