“Shaayad isii kaa naam mohabbat hai ‘sheftaa’
Ik aak sii hai siine ke andar lagii hu.ii.”
“Maybe it’s the thing,as Love which we attest
Something fire-like/that’s burning in my breast.”
–Mustafa KHan Sheft
உருது எனது தாய் மொழி. உருது மொழியைப் பேச மட்டுமே தெரியும். உருது மொழியின் அட்சரத்தைக் கற்றுக் கொள்ளவேயில்லை. நான் வளர்ந்த சூழலின் காரணமாக நான் பேசும் உருதுவில் 60 சதவிகிதம் தமிழ்தான் இருக்கும். உருதுக் கவிதைகளை, கதைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கையில் மனம் குற்றவுணர்ச்சிக் கொள்ளும். உருதுவை வாசிக்க கற்றுக் கொண்டிருந்தால் இன்னும் சற்று அதிகமாக அதன் இனிமையை, இலக்கிய வளமையை ரசித்து வாசித்து இருக்கலாமே எனத் தோன்றும்.
இந்திய இலக்கிய அரங்கினுள் ஒரு அசாதாரண சித்திரத்தை உருது மொழி முன்வைக்கிறது. அதாவது, மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் புனைக்கதைகள் ஆதிக்கம் செலுத்தினாலும், உருதுவில், கவிதை இன்னும் உயிர்ப்புடன் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கவிஞர்கள் எப்போதும் தங்கள் பார்வையாளர்களுடன், வாசகர்களுடன் அனுபவித்து வரும் ஆழமான உறவே இதற்குக் காரணம்.
உருது மொழியின் வேர்கள் பாரசீகம், துருக்கி, அரபி, மொழிகளிலிருந்து உருவானது. துருக்கிய மொழியில் உருது என்றால் பாசறை என்று பொருள். அக்காலத்தில் இம்மொழி அதிகமும் போர்வீரர்கள் தங்கியிருந்த பாசறைகளில் தான் புழங்கியது. உருது மொழியின் தோற்றுவாய் 13 ஆம் நூற்றாண்டாக கருதப்பட்டாலும் 17ஆம் நூற்றாண்டில் தான் இன்று நாம் அறிந்திருக்கும் உன்னத வடிவத்தை அடைந்தது. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டெல்லி முகலாய பேரரசின் மையமாக மாறிய போது, டெல்லியைச் சுற்றி வழக்கத்திலிருந்த முக்கிய மொழிகளான பிரிஜ் பாஷா மற்றும் செளரசேனி முகலாய ஆட்சி மொழியாக இருந்த பாரசீகத்துடன் பெரிதும் கலந்தன. 14ஆம் நூற்றாண்டில் துக்ளக் மற்றும் கில்ஜி மன்னர்களின் படையெடுப்பால் தக்காண பிரதேசத்தில் இம்மொழி அறிமுகமானது. பாரசீக எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. உருது மொழி எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. இது பாரசீக எழுத்துக்களின் மேம்பட்ட வடிவம், பாரசீக எழுத்துக்களே அரபி எழுத்துக்களில் இருந்து பெறப்பட்டது தான்.உருது எழுத்துக்கள் calligraphic Nastaliq வடிவில் எழுதப்படுகின்றது. அதேசமயம் அரபி பொதுவாக Nask பாணியில் எழுதப்படுகிறது. பொதுவாக உருது எழுத்துக்கள் “harf” எனவும், வார்த்தைகள் “lafz”எனவும் அழைக்கப்படுகிறது. டெல்லியைச் சுற்றி சிலகாலம் தேவநாகிரி எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதப்பட்டதால் முதல் உருது கவிஞர் அமீர் குஸ்ரு(1253-1325) என தவறாகக் கருதப்பட்டது.அமீர் குஸ்ரு அவரது காலத்தின் அரசவை மொழியான பாரசீக மொழியிலும், வெகுஜன மொழியான ஹிந்தவியிலும் எழுதினார்.(ஹிந்தவி பின்னர் உருது மற்றும் இந்தி என இரண்டு அழகான மொழிகளாக உருமாற்றமடைந்தது) ஆனால் அதற்கு முன்பாகவே வட இந்தியாவில் கபீர், மீராபாய், குருநானக், மாலிக் முகம்மது ஜெய்சி, அப்துல் ரஹிம் கான் போன்றோர் உருது மொழியில் கவிதைகளைப் படைத்திருந்தனர். முகலாய பேரரசர் ஷாஜஹான் (1627-1658) காலத்தில் இம்மொழி உர்துக் என அழைக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் உருது கவிதை பெரும் எழுச்சியை அடைந்தது.உருது மொழியின் பல சொற்கள் பாரசீகம், அரபி, துருக்கிய மொழியிலிருந்து பெறப்பட்டதால் கூடவே அம் மொழிகள் சார்ந்த கலாச்சாரத்தையும், மரபையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
18ஆம் நூற்றாண்டு தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகமும் இல்லாத காலம்.மக்களின் இன்னல்கள், சமூக, அரசியல் நிலைப்பாடுகளைப் வெளிப்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக உருது கவிதைகள் விளங்கின. அரபு கலாச்சாரத்தின் பாரம்பரிய தகவல் தொடர்பு வடிவங்களில் ஒன்றான “முஷைரா” (musha’eras -கவிதைகள் படிக்கப்படும் ஒரு சமூக நிகழ்வு. இங்கு கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை பார்வையாளர்களுக்கு வாசிக்க கூடும் நிகழ்வு. கவிதையின் பாடு பொருள் முன்பே தீர்மானிக்கபட்டதாக இருக்கும்.) இங்கும் அறிமுகமானது. முஷைராவில் சொற்களின் தேர்வு மற்றும் சிந்தனையின் உயரிய தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. கவிதை வாசிப்பில் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள், மூத்த கவிஞர்களுக்கு மரியாதை போன்றவை கடுமையாக கடைபிடிக்கப்பட்டன.
இருப்பினும், முகலாய பேரரசர்களின் அரவணைப்பில் நடைப்பெற்ற முஷைராக்களில் உருதுவைக் கவிதை மொழியாக பிரபலப்படுத்த தீவிரமாகச் செயல்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர். உருதுக் கவிதைகளை எழுதுவது என்பது ஒரு மதிப்பிற்குரிய கலாச்சாரமாக மாறியது. சிறந்த கவிஞர்களுக்கு பெரும் மரியாதை வழங்கப்பட்டது. அதேசமயம்,ஒரு கவிஞரின் படைப்புக்கள் அவர் புகழ் பெற்ற பின்னரே தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டதால், பல நல்ல கவிதைகள் கால ஓட்டத்தில் காணாமல் போயின. ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளப் படைத்த முக்கிய கவிஞரான நசீரின் கவிதைகள் அவர் மறைந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1857 ஆம்ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின் போது முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாஃபரின் ஆசிரியரான ஸாக்கின் படைப்புக்கள் அழிக்கப்பட்டன. மன்னர் நாடு கடத்தப்பட்டார் அத்துடன் அவரது படைப்புக்களும் காணாமல் போயின. ஒரு சில கவிதைகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
உருது இலக்கியம் மூன்று முக்கிய நகரங்களை மையக் கேந்திரங்களாகக் கொண்டு செயல்பட்டது. தக்காண பிரதேசம், டெல்லி மற்றும் லக்னோ. இதில் முதல் மையமாக விளங்கியது தக்காண பிரதேசமே(ஹைதராபாத்). தக்காண பிரதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல் கவிஞர் என கவிஞர் க்வாலி குதுப் ஷா(1575-1611) குறிப்பிடப்படுகிறார். அப்போது அம்மொழி உருது என அழைக்கப்படவில்லை.அதேபோல் கவிஞர். வலி தக்காணி(1635-1707),கவிஞர். சிராஜ் அவரங்கப்பாதி(1715-1763) குறிப்பிடத்தக்கவர்கள்.
உருது கவிதைகளைப் பொருத்து இரண்டு முக்கிய பாரம்பரிய மரபு வழிகள் கடைபிடிக்கப்பட்டன. ஒன்று டெல்லி மரபைக் கைக்கொண்ட கவிதைகள், மற்றொன்று லக்னோ மரபைக் மையமாகக் கொண்டது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் டெல்லி அரசியலில் நிலவிய ஸ்திரத்தன்மையற்ற நிலை அருகிலிருந்த லக்னோவிற்கு பெரும் வரப்பிரசாதமாக மாறியது. அறிவுசார் இடப்பெயர்ச்சியும்,தங்கள் இன்னல்களுக்கு, வாழ்க்கைச் சிக்கல்களுக்கு ஆறுதல் தரும் முக்கிய விடயமாக உருது கவிதைகள் இருப்பதை லக்னோவாசிகள் அடையாளங்கண்டனர். அதனால் உருது கவிதைகளை ஆரத் தழுவிக் கொண்டனர்.
இரண்டு நகரங்களின் கவிதைகளின் சித்தாந்தத்தில், வெளிப்பாட்டு முறையில் உள்ள வேறுபாடுகள் ஆரம்ப காலத்திலேயே உணரப்பட்டது. டெல்லியுடன் ஒப்பீடுகையில் லக்னோ மரபில் சொற்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிந்தனையின் அழகைக் காட்டிலும் வெளிவடிவ ஒழுங்கிலும்,அணி அலங்காரங்களிலும் ,சொல்லடுக்குகளிலும் கவனம் கொண்டது. டெல்லி மரபில் பொருள் மற்றும் சிந்தனைக்கு முக்கியத்துவம் இருந்தது.பாரசீக இலக்கிய மரபிற்கு நெருக்கமாக இருந்தது.
லக்னோ மரபிற்கு இஸ்லாத்தின் முக்கிய பிரிவான ஷியா மரபை பின்பற்றிய நாவாப்புகளின் ஆதரவு இருந்தது. இலக்கிய வரலாற்றில் புதிய பரிமாணங்களையும், கவிதை மரபில் இணையற்ற இடத்தையும் உருது மொழிக்கு உருவாக்கி கொடுத்து, வருங்கால சந்ததியினரிடமிருந்து சிறந்ததை வெளி் கொணர்வதிலும், திறமையை வளர்ப்பதிலும் லக்னோ அளப்பரிய பங்கற்றியது என்றால் அது மிகையல்ல.
இலக்கியம், இசை, நடனம் என அனைத்திலும் லக்னோ “லக்னோ கரானா”(லக்னோ பாரம்பரியம்)என்ற தனிமுத்திரையைப் பதித்தது.
டெல்லி மரபின் முக்கிய கவிஞர்களாக மிர்சா முகம்மது ரஃபீ செளதா, கவாஜா மீர் தர்த், மீர் தஹீ மீர், மிர்சா அசதுல்லா கான் காலீப், நவாப் மிர்சா கான் தாஹ் வை குறிப்பிடலாம். மூன்றாவது மையமான லக்னோவின் கவிஞர்களாக குலாம் ஹமாதனி முஸாஃபி, இன்ஸல்லா கான் இன்ஸா, கவாஜா ஹைதர் அலி அதிஷ், மிர்சா சலாமத் அலி தாஃபீஹ் வை குறிப்பிடலாம். அமீர் மீனாமீ நடையழுகுமிக்க நீண்ட காவியங்களை இயற்றியவர். தாக் எளிய நடையும், அவலச்சுவையும் பெற்று மிளிர்ந்த உணர்ச்சி பெருக்குமுறை கொண்ட இக்கால உருதுக் கவிதைக்கு வழிவகுத்தவர்
நவீன உருது கவிதையின் பிதாமகர்கள் அத்லவ் ஹூசையின் ஹலி மற்றும் முகம்மது இக்பால் ஆவர்.
முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சார்ந்த சில உருது எழுத்தாளர்கள் கைஃப் அஸ்மி, ஜான் நிசார் அக்தா், அலி சத்தார் ஜஃப்ரி. மீர்தஹ்மீர், காலிப், இக்பால் உட்பட பெரும்பாலான கவிஞர்கள் பாரசீக மொழியில் தான் கவிதைகளை எழுதினார்கள். பிற்காலத்தில் தான் உருதுமொழி வழியே எளிய மக்களை சென்றடைய முடியும் என அறிந்து உருதுவில் எழுதினார்கள்.
நவீனத்துவ கால கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஃபைஸ் அகமது ஃபைஸ். இவரின் சமகாலத்தவர்கள் கவிஞர் ரஷீத் மற்றும் கவிஞர் மிராஜ். தவிர குமார் பாஸி,மிர் அனீஸ் சுபேர் ரிஷ்வி, ஷம்சூர் ரஹ்மான்ஃபரூக்கி ,ஃபஹ்மிதா ரியாஸ் என நீண்ட பட்டியல் உண்டு.
உருது கவிதையின் அழகு சிந்தனைக்கும் வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள ஒத்திசைவில் உள்ளது.ஒரு பெண்ணின் மீதான அன்பின்,காதலின் வெளிப்பாடு தனித்துவமான பேச்சுவழக்கில் புத்துணர்ச்சியுடன் கூடியதாக உருது கவிதைகளின் மொழி அமைந்துள்ளது. போர் பாசறைகளில் புழங்கிய மொழி மெல்ல மெல்ல கவிதைக்கான மொழி என்றால் உருது மொழிதான் என்கின்ற அளவில் தன்னை வளப்படுத்திக் கொண்டது. உருதுக் கவிதை பல வடிவங்களைக் கொண்டது. அவற்றில் கஜல் மற்றும் பிரப She’r லமான இரு வடிவங்கள்.
She’r உருதுக் கவிதையின் எளிய வடிவம். இரண்டே வரிகள். ஆனால் ,ஆழமானது, வீரியமானது. காதலின் ஆன்மாவை தன்னக்கத்தே கொண்டது. ஒரு She’r ன் இருவரிகள் நாம் எண்ணுவதைவிட உயர்வான ஒன்றைத் தருவது. இரு வரிகளும் ஒரே மாத்திரையளவைக் கொண்டவை. இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் வரிக்கிடையேயான உறவு என்பது அலாதியானது.
வழக்கமாக முதல் வரி ஒரு புதிரை, ஒரு கேள்வியை, ஒரு பதற்றத்தை, ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. அடுத்து என்ன என்ற ஆவலை, ஆர்வத்தை தூண்டுகிறது. இரண்டாவது வரி நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஒரு புதிய கூற்றை முன்வைத்து திகைக்கச் செய்கிறது.
அதனால்தான் She’r களை முஷைராக்களில் வாசிக்கையில் முதல் வரியை இரு முறை கூறிய பிறகே சிறு இடைவெளிக்குப் பின் இரண்டாம் வரி வாசிக்கப்படும். அதுவரை எண்ணியிருந்தற்கு மாறான ஒரு பார்வை அங்கே வெளிப்படுகிறது.
உருதுக் கவிதைகளில் சில குறிப்பிட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்ப வெவ்வேறு அர்த்தம் தரும் வகையில் ரிதமிக்காக பயன்படுத்தப்படுகிறது.
உருதுக் கவிதைகளில் Bigrams பெரும்பாலும் ஏக்கம், இழந்தகாதல், ரொமன்டிசிசத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உமர் பர்(ஆயுள் முழுவதும்), ராத் பர்(இரவு முழுவதும்),டார்த்-இ-தில் (இதயத்தின் துக்கம்/துயரம்), மேய்- கானா(ஒயின் விடுதி),நஷ் -இ- பா(கால் தடங்கள்) போன்றவையும் நஷ்- இ -காஃப்- இ- பா(கால் பாதத்தின்அடையாளம்), தில்- இ- கானா கராப்,(மோசமான நிலையை அறிந்தேன்), தர் -இ- மேய் -கானா(ஒயின் விடுதியின் கதவு)போன்ற Trigrams அதிகமும் பயன்படுத்தப்படுகிறது.
உருது கவிதையில் அதிகம் பயன்படுத்தும் ஒற்றைச் சொல் தில்(இதயம்/மனம்),அடுத்து கம் (வருத்தம்/துக்கம்).
சஞ்சீவ் சரஃப் உருது மொழி மற்றும் கவிதை மீது கொண்ட காதலால் ரேக்தா அறக்கட்டளை நிறுவி உருது மொழியைப் பரப்புதல், உருது உரைநடையை வளப்படுத்துதல் ,உருது உரைகளைப் பாதுகாத்தல்,பதிப்பித்தல்,மொழிபெயர்ப்பு செய்தல் முஷைராக்கள் நடத்துதல் என உருது இலக்கியம் சம்பந்தமான எல்லவற்றையும் செயல்படுத்தி வருகிறார். உருது கவிதையின் தூய அழகையும்,ஆழத்தையும் கவனத்தில் கொண்டு “உருது கவிதையில் காதல், ஏக்கம், இழப்பு” என்ற உருது She’rs கொண்ட தொகுப்பை ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளார்.
மீர், காலிப், மோமின், மீர் தர்த், ஃபைஸ், ஃபனி, ஜாபர் இக்பால்,பஷீர் ஃபர், மீர் அனிஸ், ரஷீத் உட்பட நூறுக்கணக்கான கவிஞர்களின் கவிதைகளை 24 தலைப்புகளில் உருதுவிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார் .தொகுப்பு காதலை மையமாகக் கொண்டது. ஊடல், கூடல், மகிழ்ச்சி,புகழ்ச்சி, பிரிவு, வலி, எல்லாம் கொண்டது தானே காதல். அத்தகைய she’r கள் சிலவற்றைக் காண்போம்.
முதல் வரி
“எனக்குத் தெரியாது நீ எங்கிருந்து வந்தாய் என”
அடுத்தவரி
உன் புருவத்தில் படந்திருக்கும் வியர்வையைத் துடைத்துக் கொள்”
என்கிறது. இரண்டாம் வரி அவள் எதிரியின் பக்கமிருந்து வந்தவளாக இருக்கலாம் என்பதாக அறியத்தருகிறது.
மற்றொன்று
“இருளின் ஆழத்திலிருந்து தூய ஒளியைப் பெற்றுள்ளது காதல்
காதல் இல்லையென்றால் பார்வையே இருந்திருக்காது”
(மீர் தாஹி மீர்)
….
சில she’r கள் நேரடிப் பொருள் தருபவை.
“ரோஜாவின் வெல்வெட் இதழ்களுக்கு நெருக்கமானது
அவள் உதடுகளின் மென்மை.”
…
காதலர்கள் அருகருகே அமர்ந்திருக்கையில் பார்வையில் உரையாடுவது தானே அதிகம். அதுபற்றி நிறைய she’r கள் உள்ளன.
“நீ சொன்னவற்றை நான் கேட்கவில்லை
என் மனம் உன் கண்களிலிருந்தது”
(மன்சூர் ஆரிப்)
….
“நீ என் முன்னும், அருகிலுமிருக்கையில் -நான்
பேச வேண்டுமா அல்லது உன்னைப் பார்க்க வேண்டுமா?”
(ஃபரீக் கோரக்பூரி)
…
காதலியின் முகம் என்றாலே நிலவுதானே உவமை.
“அமாவாசையன்று விண்மீன்களைக் காண வெளியேச் செல்லாதே
ஈத் பெருநாளினை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது”
(ஜலீல் நிஸாமி)
….
“ஈத் பெருநாளின் மூன்றாம் பிறையை நீ காண்கையில்
நிலவிற்கு அன்று ஈத் பெருநாளானது”
…
“பெளர்ணமி இரவு எங்கும் ஓரே சர்ச்சை
உன் முகத்தின் ஒளியை
நிலவின் ஒளியென யாரோ கூறிட்டார்கள் என.”
(இபின் இ இன்ஸா)
…..
காதலில் பிரிவும் , வலிமிகுந்த கடந்த கால நினைவுகளும் தவிர்க்க இயலாதது அல்லவா.
“என் இதயத்தின் ஆசைக் கல்லறைகளில்
நினைவுகளை மெழுகுவர்த்தியாய் எரிய விடுகிறேன்”
(அக்தர் அன்சாரி)
…
“இன்னும் ஒரு கோப்பை விஷம், மற்றுமொரு சிலுவை
சாக்கரடீஸ் மற்றும் கிருத்துவின் தலைவிதி மீண்டும் மேலோங்கட்டும் “
(அஸீஸ் ஹமீத் மதனி)
…
பிற நூல்களிலிருந்து சிலவற்றைக் காண்போம்
“எனை விடுங்கள்
கடந்தகால வாழ்வின்
குருதியை அருந்த.
குளிர்ந்த பார்வையின் ஒரே ஒரு தடவலில்
என் இதயத்தை கட்டுக்குள் வைக்கும்
அந்த நடனக்காரியை
அழைத்து வாருங்கள்
நான் உறங்க விழைகிறேன்
அவளின் சூடான பெருமூச்சினடியில். “….
(மிராஜ்)
..
அன்பின் மீது ஒருவருக்கும் அதிகாரமில்லை
அது ஒரு சுடர்
ஒரு முறை ஏற்றிவிட்டால்
அணைக்கவோ,அழிக்கவோ இயலாது.
(காலிஃப்)….
…
“மெளனமாக மெளனமாக
ஒரு தேவியின் சிலை உயிர் பெற்றது போல்
அவளின் நடனம்
தம்புராவின் ரீங்காரம் விட்டுக் கொடுக்க
கொலுசு மணியோசை எங்கும் நிறைந்தது”
…
“பிரார்த்தனைக்காக
தலைகுனிந்த போது
தரையிலிருந்து எழுந்தது ஒரு குரல்-அன்பை நோக்கி
உங்கள் இதயம் சாய்ந்தபின்
பிரார்த்தனையில் என்ன கிடைக்கும்”.
…
“ஃபிர்தொளஸ், அலிகாரை நீ ரயிலில் கடக்கையில்
நீ இங்கு வாழ்ந்தது போல் உணர்வாய்
தனிச்சையாக எனதன்பை நினைவு கொள்வாய்.”
(நிஸார் அக்தர்)
…
அவளின் பொலிவான முகம்
போதை மணம் கூடிய மூச்சு
கனத்த கண் இமைகள்
இரத்தம் உறைந்த இதழ்கள்
யார் வந்திருக்கிறார்கள்? யார்?
(நதீம் கஸ்மி)
…
ஓ ஜாஃபர்..நீ ஏன் அழுகிறாய் என்று எனக்குத் தெரியும்
உனது கண்ணீர் நிறைந்த விழிகளின்
கதையை என்னிடம் கேள்.
(பகதூர் ஷா ஜாஃபர்)
…
ஓ..ஜாஃபர் ..எவ்வளவு துரதிர்ஷ்டசாலி நீ
அடக்கம் செய்ய
உனது காதலியின் பாதையில்
இரண்டு அடி நிலம்கூட
உன்னால் பெற முடியவில்லையே.
(பகதூர் ஷா ஜாஃபர்)
…….
விசுவாசமுள்ள மனிதனின் அடையாளங்களை
என்னிடம் கேட்கிறீர்கள்
மரணம் வரும்போது அவன்
உதடுகளில் புன்னகை இருக்கும்-
(இக்பால்)
வளைந்து நெளிந்து பற்றியெரியும்
தீயைத் தவிர எதையும் பார்க்கவில்லை
கடைசியாக பார்த்தது
தீக்குள் அந்துப்பூச்சி நகர்ந்ததை…
(மீர் தஹ் மீர்)
உருது மொழியில் அன்பை பல வார்த்தைகளால் வெளிப்படுத்தலாம். இஷ்க், பியார், மொஹபத், உல்பாத் என்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.பொதுவாக “இஷ்க்” காதலர்களுக்கிடையேயான அன்பை வெளிப்படுத்தவும், “பியார்” இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
பிறரை எப்போதும் மரியாதையுடன் விளிக்கும் மொழி உருது. மிகவும் கவித்துவமானது.
இத்தகைய வளமை வாய்ந்த உருது மொழி தற்போது மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. உருதுவைத் தாய் மொழியாக கொள்ளாதோர் உருதுமொழியை கற்பது என்பது தற்போது இல்லையென்றே கூறலாம் . அதேபோல் உருதுவை தாய்மொழியாகக் கொண்டோர் கூட அம்மொழியை கற்கும் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வருகிறது. அதற்கான சமூக பொருளாதார காரணிகள் ஒருபுறம் என்றால் இன்றைய அரசியல் சூழல் முக்கிய காரணியாகும். புகழ் பெற்ற உருது கவிஞர் ரஷீத்
ஒரு கவிதையில் அல்லாவிடம் இப்படி வேண்டுகோளை வைக்கிறார்
“அல்லாவே உன்னிடம் யாசிப்பதெல்லாம்
ஒரு சிறிய வெகுமதியைத்தான்
நான் உயிலை உருது மொழியில் எழுதினால்
என் மகனால் அதை வாசிக்க முடிய வேண்டும் அல்லாவே”
உவமைகள், உருவகங்கள் , உணர்வுகள், எண்ணங்கள், கனவுகள் ஆகியவை பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் நுணுக்கங்களுடன் இணைந்து she’rன் மனநிலையை உருவாக்குகின்றன. இது மொழிபெயர்ப்பில் இழக்கப்படுகிறது. எண்ணங்களை, சிந்தனையை, கலாச்சாரம் மற்றும் மொழியின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில் போதாமை ஏற்படுகிறது. .. மொழிபெயர்ப்பில் வாசிக்கையில் கிட்டத்தட்ட வசன கவிதைக்கு நெருக்கமாக இருப்பது போல் தோன்றினாலும் அதன் இனிமை குறைவதில்லை.
உருதுமொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட ஆங்கிலம் அறிந்த உருது மொழி விற்பனர்களால் மொழிபெயர்க்கப்பட்ட உருது கவிதைகளின் குறிப்பிடத்தக்க தொகுப்புகள் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.
நவீன உருது கவிதைகளின் தொகுப்பு
பைதார் பக்த் மற்றும் கேத்லீன் கிராண்ட் ஜெகர் (டெல்லி: எஜுகேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ்),
நவீன உருது கவிதையின் பென்குயின் புத்தகம்
மஹ்மூத் ஜமால் (Harmondsworth,U.K.: Penguin).
The journey of Urdu poetry through ages-Shaheer A Misra
The Lucknow observer article by Anisur Rahaman
Many summers apart-Khalil Ur Rahaman Azmi.
“bose apne ariz-e-gulfam ke
laa mujhe de de tire kis kaam ke”
— Muztar KHairabadi
++
அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.