ஆரியபாளையத்துக்கு பதினான்காம் நெம்பர் பஸ் பிடித்தும் வரலாம் அல்லது ஏத்தாப்பூர் வழியாக வருகிற ஊர்க்காரர்களிடம் கைகாட்டி பைக்கிலும் தொற்றிக் கொள்ளலாம். பதினான்காம் நெம்பர் பஸ் வாழப்பாடியில் புறப்பட்டால் புதிதாக குரங்கு பெடல் பழகும் சிறுவனைப் போல வளைந்து வளைந்து ஊர் வந்துசேர நேரமாகும். இப்போதைய இளவட்டங்கள் அவ்வழியைத் தேர்ந்தெடுக்காமல் பைக்கில் பயணித்து வந்துவிடுகிறார்கள்.

நல்லு தலையைத் தூக்கி நல்ல வெயிலுக்கு பயந்து நெற்றி சுருக்கிப் பார்த்தார். தென்மேற்கில் இருபத்தியொண்ணாம் நெம்பர் பஸ் ஆத்தூரை நோக்கி புளியமரங்களுக்கு நடுவில் ஒடிந்து ஒடிந்து சென்றுகொண்டிருந்தது. பதினான்கு போல இருபத்தியொண்ணும் இன்னொரு பஸ். ஒன்று ஆத்தூரில் கிளம்புகிற அதே நேரம் இன்னொன்று வாழப்பாடியிலிருந்து புறப்பட்டால் இரண்டும் ஒன்றையொன்று ஆரியபாளையத்து ரேஷன் கடை மைதானத்தில் நாத்தனாரைக் கண்ட நங்கையாளைப் போல ஓரம் வாங்கும்.

எது நாத்தனார் எது நங்கையாள் என்பதை ஒருமுறை யோசித்து நல்லு இருபத்தியொண்ணாம் நெம்பரை நாத்தனார் என அடித்துச் சொன்னார். புளியமரக்கடையில் குளிர்பானம் வாங்கித் தந்தால் தீர்மானமாக சொல்வதன் பொருளைத் தருவதாக தன் ஈட்டுப் பெருசுகளோடு பந்தயம் வைத்தார். புளியமரத்துக்கடையில் பன்னீர் சோடா பிரமாதமாயிருக்கும். இரண்டை வாங்கி மடக் மடக்கென குடித்தார். இருபத்தியொண்ணு தான் நாத்தனா… எப்படின்னா…. என இடைவெளி விட்டு எல்லோரையும் கவனிக்க வைத்தார்.

‘மத்தியானத்து ஸிப்டுல பாருங்கய்யா.. இருபத்தியொண்ணுல எந்நேரமும் நாலஞ்சு மல்லிக் கூடை போவுது. பதினாலுல ஒண்ணு கூட இல்லையே..’

கூடியிருந்தவர்களில் முதலில் புரிந்து கொண்டது சின்னு தான். அர்த்தமாகச் சிரித்தபடி ‘ஆமாமா.. என் தங்கச்சி கூட ஊருக்கு வந்தா எம் பொண்டாட்டி அசந்த நேரம் பாத்து எதையாவது அள்ளிக்கிட்டுப் போறதுக்கு தான் பாக்கும்..ஒண்ணும் குடுத்தது இல்ல. விசேஷ வூட்டுல பாத்தீங்கன்னா நாத்தனாருக்கும் நங்கையாளுக்கும் இந்த மல்லிப்பூவுல தான் சண்டையே ஆரம்பிக்கும்’

இப்போது எல்லோரும் சிரித்தார்கள். ‘அதானே.. இத்தனை மல்லிக்கூடைய தூக்கிட்டு போற நாத்தனாரு நங்கையாளுக்கு ஒரே ஒரு கூடைய தரலாம்ல…’’

ஆத்தூரில் மல்லி மண்டி இருப்பதால் அங்கு செல்கிற இருபத்தியொண்ணில் பூக்கூடைகள் இருக்கும் என்பது கிராமவாசிகளுக்குத் தெரியும். பஸ்ஸுக்கு நிற்கிற வெளியூர்வாசிகள் பேசிக்கொள்வது புரியாமல் முழிப்பார்கள்.

நல்லு மீண்டும் குனிந்து மக்காச்சோளத் தட்டைகள் ஒடிந்து விடாமல் புற்களை பிடுங்கத் தொடங்கினார். ‘’நம்மளை யாரு பாக்க வரப் போறாங்க… புள்ள இருந்தாலாச்சும் அப்பன பாக்கலாம்னு வாரத்துக்கு ஒருக்கா ஓடியாறும். எனக்கு முன்ன போய் சேரணும்னு எழுதியிருக்கு’

குட்டானாக குவித்த புற்களை எடுத்து வந்திருந்த ஈரநாரால் இழுத்துக் கட்டினார். வடக்கா.. ஓடைக் கரையோரமா எதன் வழியில் வெளியேறலாம் என யோசித்தபோது தன் மரிச்சிப் புற்கள் மிதிபடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். பின்னாடி சூரியனிருந்ததால் முகம் தெரியவில்லை. ஆனால் வருவது தன் ஈட்டு ஆளில் ஒருத்தரும் நடுத்தர வயதில் ஒருத்தருமென முடிவு செய்துகொண்டார்.

‘’ஏய் மாப்ள… இன்னும் சாவலியாட்டங்குது… பரவாயில்லையே’

குரல் கேட்டுத் தெளிந்து கொண்டார். சதாசிவம்.

‘ஏம்மச்சான்… நீ இருக்கும் போது நான் முன்ன போய்டுவனா? உன்ன தூக்கிப் போட்டுட்டுத் தான் போவணும்’

‘டேய் யப்பா… தூக்கிப் போடுற கட்டையப் பாருப்பா… பாக்கலாம் நீ முன்னையா நான் முன்னையான்னு’

‘ஏம் மாப்ள.. உங்குடும்பத்துல பொணம் தூக்க ஆளில்லாத கொடுமைக்கி தான எங்க குடும்பத்துல பொண்ணு எடுத்துச்சு.. அசராம படு மாப்ள.. அலுங்காம கொண்டுட்டு போய் குழியில வைப்போம்..’

‘ஆமாமா… வந்து பாத்து மெனக்கெட்டது தான் மிச்சம். புல்லுக்கட்டு தூக்க சத்தில்லாம சோளக்காட்டுல கெடக்குறன்னு தந்தி வந்துச்சு. அதான் தூக்கி வுடலாம்னு கோயமுத்தூர்ல இருந்து ஓடியாந்தன்’

சதாசிவம் நெருங்கி வந்து நுணா மரத்தடியில் மேலே ஏறிவரட்டுமென நின்று கொண்டார்.

கூட வந்தவர் வயக்காட்டை பராக்கு பார்த்தபடியிருந்தார். நல்லு புல்லுக்கட்டை முழங்காலுக்கு வைத்து எத்தி தலைக்குத் தூக்கிக் கொண்டு முன்னேறினார்.

‘ஏ சாமி..  இதுக்கோசரம் இம்புட்டு தூரம் ஓடியாந்துருக்க பாரு… இப்ப செத்துக் காட்டுனின்னா நானும் தூக்கி காட்டுறன்டியேய்’

‘அந்தக் கவலலாம் உனக்கில்ல. நான் வண்டியிலயே போய்க்கிறேன். நீ மறக்காம தின்ன சீருலாம் கொண்டாந்துடணும்’

‘அதெல்லாம் கச்சிதமா. வண்டி பின்னாடியாச்சும் மாலைய பிச்சி போட்டுகிட்டு வர்றன்யா… உத்தரவு குடுக்கணும்’

‘ஆமா.. குடுக்குறாங்க உத்தரவு… முதல்ல மரிச்சில பாத்து ஏறு’ என கை நீட்டினார். நல்லு கைபிடித்த வேகத்தில் ஒரு எக்கு எக்கி மரிச்சிக்கு வந்தார்.  கூட நின்றிருந்தவரை ‘வாங்க …’ என இவ்வளவு நேரம் பேசாத கூச்சத்தோடு அழைத்தார்.

அவரைப் பின்தொடர்ந்து இருவரும் வரப்பில் நண்டுப் பொடையில் கால் வைக்காத கவனத்தோடு நடந்தார்கள்.

‘என்ன திடீர்னு அய்யாரு வந்திருக்கீங்க? கூட யாரு?’

‘தாண்டானூர்ல நம்ம பெரியசாமி மவன் இருக்காப்டில..’

‘ரெண்டு மவனுங்க. பெரியவன் ஈபில இருக்கான்’

‘இல்லல்ல.. இது சின்னவன். அவன் தான் அம்மாபேட்டைக்கு வேலை கிடைச்சதுமே போய்டானே.. சின்னவனோட மவளுக்கு எங்க பெரிய தாத்தன் பேரன பேசியிருக்கு. நிச்சயதார்த்தம் முடிச்ச கையோட இங்க வந்துட்டன் ‘’

‘எங்களுக்குலாம் தகவல் வரல.. கல்யாணத்துக்கு சொல்வாங்களாயிருக்கும்’

‘சொல்வாங்க சொல்வாங்க.. பையன் மவன் முறைதான். சித்தப்பன் வீட்டு சொந்தம் ‘’

‘ஓஹோ.. நம்ம ஊர சுத்திக் காட்டலாம்னு கூட்டியாந்தியாக்கும்’

‘’இல்லல்ல.. எங்க பொண்ண கட்டிட்டு போலாம்னு வந்துருக்கம்.. ‘’

‘அந்த தம்பிய வேற ஏன்யா கூத்துல இறக்குற? நல்ல பையனா தெரியுறாப்டி..’

‘எப்படி ஆபிஸருக்கணக்கா கண்டுபுடிச்சீங்க நல்லவருன்னு?’

‘உங்க குடும்பத்து ஜாடையவே காணோமே…’

அவர்கள் மரிச்சியைக் கடந்து ஓடைக்கரையில் ஏறி கரையோரமாகவே நடந்தார்கள்.

‘அதுக்கு தான்யா உம்பேத்திய பொண்ணு எடுக்க வந்துருக்கம்..’

‘அது உம் மருமவனத் தான் கேட்கணும் ஏன்டா ரெண்டும் பையனா பெத்தன்னு..’

‘எங்களுக்கு பொண்ணு குடுக்க பயந்துகிட்டே பையனா பெத்து வச்சிக்குறீங்கய்யா உங்க வம்சத்துல’

‘வெங்க ராசா சண்டைக்கி வந்தப்ப வெள்ளக் கோவணத்த அவுத்துக் காட்டி கும்பிட்டுட்டு ஊருக்கு வந்து சேர்ந்தானாமே உன் நாப்பாட்டன்… ஊரே சிரிக்குது கம்முனு வா’

‘ஆமாமா.. இப்படி பேசிப்பேசித்தான் பொழப்ப ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்ட… கொக்கி முள்ளு வருது பாரு’

என சதாசிவம் சொல்லி நிறுத்தியதும் அவர்கள் தப்படிச் சத்தம் கேட்குமளவு அமைதி கட்டிக் கொண்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு சன்னமாக நல்லு வாய் திறந்தார்.

‘இப்ப என்ன பண்ணிட்டு இருக்காப்ல?’

‘என்ன பண்றான்? அவ தான் அத்துகிட்டுப் போனதுல இருந்து சாமியார்கணக்கா வடநாடு சுத்துறான். ஒரு புள்ளைய அவ கையோட கூட்டிட்டு போய்ட்டா. இன்னொண்ணு இங்க தான் வளருது. சின்னவன் தான் பாத்துக்கிறான் ‘’

‘சின்னவர் வீட்லலாம்…. எதுவும் சொல்றதில்லல்ல?…’’

‘இந்த மருமவலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. இருந்தாலும் புள்ள மனசுல அப்பன் ஆத்தா ஏக்கம் இருக்கும்ல. ரெண்டும் ரெண்டு திக்குல… என்னவோ பொறப்பு…’’ அழிஞ்சிப் புதர்களின் கிளையை விலக்கிக் கொண்டு நடந்தவர் தயங்கியபடி கேட்டார்.

‘பவுனாம்பா செத்து எத்தன வருசம் இருக்கும்?’

‘ஆச்சு பதினஞ்சு வருசம். குடிகாரத் தாயாளிக்கு கட்டிக்குடுத்து…’ அதற்கு மேல் ஒப்பிக்கத் தயங்கி தொண்டையை இறுக்கிக் கொண்டார்.

‘அதுக்கு புள்ளைங்க?’

‘பேத்தி இருக்குதே.. ப்ளஸ்டூ படிக்குது. அந்தளவுக்கு ஒட்டு இல்ல’

அதன்பிறகு ஒரு நீண்ட மௌனம் ஓடைக்கு நிகராக தளும்பிக்கொண்டிக்க வேலிச் செடிகளை விலக்கிக் கொண்டே வந்து ஓடைக்குக் குறுக்காகச் செல்லும் மண்பாதையில் மேடேறினார்கள். போன வாரம் பெய்த மழைக்கு திரண்ட சேற்றில் ஏறியிறங்கிய வண்டி வாகனங்கள் டயரைப் பதித்து அச்சை இறுகலாக்கியிருந்தன. அவற்றை மீறி இன்னும் காயாமலிருந்த சேற்றைத் தாண்டி நடந்தார்கள்.

யார் முதலில் இயல்புக்குத் திரும்புவதென யோசிப்பதாக உடன் வந்த பையனுக்குப் பட்டது. சதாசிவம் முதலில் களைந்தார். பையனைப் பார்த்துச் சொன்னார்.

‘நானும் இவனும் இந்த ஓடையில ஊத்து பறிக்காத எடம் கிடையாது. கடைசியா எப்ப தண்ணி வந்துச்சு?’

‘எந்தத் தண்ணி வந்துச்சு? தேரு நெருப்பு புடிச்ச வருசம் நீ வந்துருந்தியா?’

‘வந்தனே.. அப்ப வந்தது தானா?’

‘ஆமா.. அந்த ஆவணில வந்த தண்ணி தான். இப்பயோட பன்னெண்டு வருசமாச்சி’

‘போன வருசம் நல்ல மழையாமே’

‘நல்ல மழையா இருந்தாலும் ஏரி கோடி புடுங்குற அளவுக்கு இல்ல’

மண்சாலை தெருக்களை இணைக்கும் சிமெண்ட் சாலையில் தேங்கி நிற்க அதன்மீதேறி அவர்கள் தெற்கு வீதி நோக்கித் திரும்பினார்கள். நல்லு புற்கட்டை இடது தோளுக்கு மாற்றிக் கொண்டு கேட்டார்.

‘நாட்டுக்கோழிலாம் சாப்டுறது தானே?’

‘ஏன் சாப்டாம என்ன நோக்காடு வந்துச்சு?’

‘இல்லப்பா.. டவுனுக்கு போய்ட்டாலே அது சேராது இது சேராதும்பீங்களே… அதான் கேட்டேன்’

‘சேராம என்ன பண்ணுது? அதெல்லாம் திங்கலாம். இங்கலாம் நாட்டுக்கோழி எவ்வளவு வெல போகுது?’

‘கிலோ முந்நூத்தியெம்பது. டவுன்ல போனா நானூறுக்கே எடுத்துக்குறான். நம்ம வீட்டு செலவுக்கோட சரி. சாப்புடுவீங்க தானே?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இருந்தாலும் சூடுனு ரெண்டு மாசமா நிறுத்தியாச்சு’

‘அடேங்கப்பா.. ரொம்ப பண்ணாதீங்க மாப்ள.. வராதவரு வந்துருக்கீங்க.. அடிக்கிறேன்.. சூடுனா சும்மா… கொஞ்சூண்டு ஒண்ணரை கிலோ மட்டும் சாப்டுவீங்களாம்’

சதாசிவம் கூட வந்த மருமகன் நடக்கிறபோக்கில் சிரித்துக் கொண்டான்.

‘ஐயா.. நல்லா லொள்ளு பேசுவாராட்டம் இருக்குது’

‘அதெல்லாம் காத திருகி கக்கத்துல ஒளிச்சி வச்சிக்கலாமானு இருக்கும்.. அந்த கிண்டலு கீவட்டு பேசுவான்’

அவர்கள் சிவலிங்கம் டீக்கடைக்கு எதிர்ச்சாரியில் நடந்தார்கள். சதாசிவம் ஒரு நொடி நின்று பார்த்தார்.

‘டீக்கடைலாம் இன்னும் ஓடுதாட்டங்குது? ‘

‘பின்ன? அதெல்லாம் நல்ல ஓட்டம். இட்லி போடுறத மட்டும் நிறுத்திப்புட்டாங்க’

‘ஆமாமா.. கெழவி அப்பவே கரண்டி மாவ எடுத்து அடுப்புல ஊத்துனுச்சு.. வயசாச்சுனா உட்டுற வேண்டியது தான்’

இடதுப்புற திருப்பத்தில் மூன்றாவதாக வீட்டுக்கு பதில் பெரிய வேப்பமரமிருந்தது. அதன் முதுகில் வில்லையின் மீது எப்போதும் வேம்பின் நிழல் போர்த்தி சூடு தணியுமாறு அமைப்பாக வீட்டைக் கட்டியிருப்பதாக அடிக்கடி சதாசிவம் சொல்வார். முன்புறம் மரத்தின் வேர்முடிச்சைத் தாண்டிய பரந்த வாசல். வேப்பமரத்துக்கு வலதில் வீட்டையொட்டி மாட்டுக் கொட்டாய். வைக்கோல்களும் மாடுகளின் சாண மூத்திர நாற்றமும் அசலான கிராமத்துக்கு உண்மையாக  இருந்தன.

நல்லு புற்கட்டை சகதியில் படாதவாறு மூலையில் வைத்தார். பின்புறம் பொடக்காலியிலிருந்து அவரது மருமகள் வந்துக் கும்பிட்டது. சேலைத் தலைப்பால் சொம்பின் அடியைத் துடைத்து சருவத்திலிருந்து தண்ணீர் மொண்டு வந்தது. தளும்பியதைக் கொஞ்சம் கீழே ஊற்றிக் குடித்துவிட்டு மருமகனிடம் கொடுத்தார். ரேஷன் கடைக்குப் போயிருந்த பேரன் ஓடிவந்து யாரெனப் பார்த்தான்.

பொடக்காலியைச் சுற்றி மூங்கில் வேலி அடைத்திருந்தார்கள். உள்புறத்தில் ஐந்தாறு குஞ்சுவான்களும் கோழிகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் நான்கு பொட்டைகளும் மூன்று சேவல்களும் அடிக்கத் தோதானவையாக இருந்தன. மாட்டுக் கொட்டாயின் உள்தடுப்பில் ஒரு கோழி அவையத்தில் படுத்திருந்தது.

கோழிகளை நல்லு நோட்டம் பார்த்து கழிக்கத் தொடங்கினார். குஞ்சுகள் இரசத்துக்கும் தேறாதவை. பொட்டைகளில் இரண்டு அவையம் வைக்கிற நிலைக்குத் தயார் என்பதால் அவற்றையும் கழித்தார். ஒரு செஞ்சாந்து பேரனும் பேத்தியும் முட்டை அவித்துத் தின்று முடித்ததில் மூக்கில் இறகு குத்திக் கொண்டு சாணத் தண்ணியில் தினமும் முங்கான் போடுகிறது. ஒரு பொட்டை நோஞ்சான்.

பெருஞ்சேவலைக் கருப்பனாருக்கு விட்டிருக்கிறார். மிச்சமிருக்கிற இரண்டைப் பேரனுக்கு அடையாளம் காட்டினார். ஒன்று அவசரக் கொண்டை. சிவப்புப் பொறி. மற்றது கொக்குவாட்டக் கழுத்து. கருஞ்சிவப்பு. இரண்டில் ஒன்றைத் துரத்திப் பிடிக்க அனைவரையும் உசுப்பி விட்டார். கோழி பிடிக்கிறார்கள் என்றதும் எதிர்த்த வீட்டுச் சிறுமி வந்து தன் பங்குக்கு அத்துபிரித்து நின்று கொண்டாள்.

ஆளரவம் கண்டு குளுவான்கள் பதறியடித்துக் கொண்டு வேலிச்சந்தில் புகுந்து வெளியேறின.

சாலையில் போகிற யாரோ ‘’என்ன இந்நேரத்துக்கு கோழி புடிக்கிறீங்க?’ என்றார்கள். ‘தீடீர் ஒரம்பரை.. சாயங்காலம் வந்து சொல்றேன்’ என பேச்சைக் கத்தரித்துக் கொண்டு நல்லு முசுவாக இறங்கினார்.

பெரிய ஜீவன்கள் வேலிக்குள் புகுந்து பார்த்து நுழைய முடியாமல் தடுமாறித் திரும்பின. பறக்க யோசித்து கிளை பரப்பியிருக்கும் வேம்பின் தடை கண்டுக் குழம்பின. காலுக்குக் குறுக்கே புகுந்து ஓடும் பொட்டைகளை நழுவவிட்டு சேவல்களுக்கு அணைகட்டி நின்று கொண்டார்கள். பேரன் நீண்ட கழியை எடுத்துக் கொண்டு சுவரோரமாக ஒதுக்கி விட்டான். அவசரக் கொண்டை உரலின் மீது ஏறி வீட்டு ஓட்டுக்குத் தாவி தப்பித்தது கண்டு உச் கொட்டினார்கள். இருக்கும் இன்னொன்றை பிடித்தேயாக வேண்டுமென்ற பதட்டம் தொற்றிக் கொண்டது. ஆள் வளையம் சுருங்கிக் கொண்டே வர கருஞ்சிவப்பு அங்குமிங்கும் அலையாடிப் பறக்க எத்தனித்து மரக்கிளைக்குத் தாவி பற்ற முடியாமல் கீழே விழுந்தது. எதிர்த்த வீட்டுச் சிறுமி ஓடிப்போய் சட்டென கால்களைப் பற்றிக் கொண்டாள். ஏதோ விபரீதமென அவ்வளவு நேரம் முனகிக் கொண்டிருந்தது சிறகடித்தபடி பெருங்குரலில் அரற்றத் தொடங்கியது. மருமகள் தொட்டிக்கு ஓடி குண்டானில் தண்ணீர் எடுத்து வந்து வைத்து அடுப்பைப் பற்ற வைத்தது. சேவலை கவனமாக நல்லு கைப்பற்றிக் கொண்டு ‘’இது ரெண்டரை மூணு கிலோ இருக்குமாட்டங்குதே…’என்றதும் மருமகள் ‘’இருக்கட்டும். அவரு விடிகாலைலயே வண்டில இருந்து இறங்குறாராம்” என்றது.

‘அப்படினா சரி..‘’ மற்ற கோழிகள் ஆதரவுக் குரலெழுப்பி ஓய்ந்து விட்டிருக்க  கையை விட்டகலும் போக்கில் துள்ளும் சேவலின் பெருஞ்சத்தம் கண்டு அவையத்திலிருந்த பொட்டை குரலெடுத்து அலறத் தொடங்கியது. சதாசிவம் ஆச்சரியமாகப் பார்த்தார்.

‘என்னா உள்ள இருக்குறவங்க இந்த சத்தம் போடுறாங்க?’

நல்லு அசட்டையாகச் சிரித்தார்.

‘ஆமாமா.. இவரு ஜோடி அவுங்க. முட்டை இடப் போறப்ப நெல்லு சாக்கு ஓரத்துல எடம் பாத்துத் தந்து அம்மாளு முட்டை போடுற வரைக்கும் ஐயா கூடவே நிக்கிற அழக பாக்கணுமே’ என்றதும் சிறுபிள்ளைகள் ஆமோதித்துச் சிரித்தார்கள்.

‘ந்தா.. ஒரு நிமிசத்துல சத்தம் நின்னுடும்’

சதாசிவத்தின் கையில் கோழியை இடம்மாற்றிவிட்டு நல்லு கத்தி தீட்டப் போனார். தலைகீழாகத் தொங்குகிற சேவலை சதாசிவம் உற்றுப் பார்த்தார். கீழே இறங்குகிற கண் ரப்பைகளை கஷ்டப்பட்டு இழுத்து கண்களை மூடிக் கொள்கிற சேவல் அலைந்த களைப்பில் துடிக்கவில்லை. உள்ளறையிலிருப்பவளின் அலறலுக்கு மட்டும் அவ்வப்போது விழித்துக்கொண்டு இறக்கைகளை லேசாக அசைத்தது. அவையத்திலிருந்தவள் காரைத்தட்டை விட்டு வெளியேறுகையில் முட்டைகள் இடறும் சத்தம் கேட்டு நல்லு பதறினார். ‘’டேய்… வெளிய வர பாக்குறா பாரு… கூடைய போட்டு கமுறு’ என்றதும் பேரன் சுவரோரம் சாய்ந்திருந்த கூடையை எடுக்க ஓடினான். ஆனால் அதற்குள் வெளியேறிவிட்டிருந்தவள் அடைப்பைத் தாண்டி வர முடியாமல் பறந்து அங்குமிங்கும் அல்லாடுகிற, இறக்கைகள் உதிர்கிற காட்சி சதாசிவத்தின் கண்களில் அடித்தது. அலறல் சத்தம் காதுகளில் அடைக்க நின்ற இடத்திலிருந்து வீட்டின் உள்ளறையைப் பார்த்தார். பவுனாம்பாளின் படத்தினடியில் மின்விளக்கு மினுங்கிக் கொண்டிருந்தது.

‘அட என்னய்யா நீயி?…’

கையிலிருந்து நழுவி ஓடிய சேவலைப் பிடிக்க நல்லு குனிந்தோடி முயன்றார். அது சாணி வாசலை ஒரே மூச்சில் தாண்டி தூரமாய் பறந்துவிட்டிருந்தது.

‘என்ன மாப்ள நீ… இப்படி பண்ணிப்புட்ட?’

‘அட கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். விரலு நழுவிடுச்சு’

பேரன் சத்தம் குறைந்து அட்டாலில் அமர்ந்திருந்த கோழியைப் பிடித்து மீண்டும் அவையத்திலிட்டுக் கூடையைப் போர்த்திவிட்டு வந்தான்.

‘அறியா கொழந்தையா நீயி? செத்த நேரம் இறுக்கிப் புடிச்சிருக்கத் தெரியாது? கோழியாக்கி போட்டு மாப்ள சொத்த எழுதி வாங்கலாம்னு பாத்தன். தப்பிச்சிட்டியே… ம்ம்…சரி உக்காந்திரு.. ஓடிப்போய் பண்ணக்கோழி தான் எடுத்திட்டு வர்றன்’

‘அதெல்லாம் ஒண்ணும் வேணா… இன்னொரு தடவ வரும்போது பாத்துக்கலாம்.. பாப்பா தான் தண்ணி வேற காய வச்சிடுச்சு’’

மருமகள் ‘’அதல்லாம் ஒண்ணுமில்லீங்கண்ணா. மேலுக்கு ஊத்திக்கிறதுக்கு ஆவுது. நான் டீயாவது வைக்கிறேன் இருங்க..’ என்றது.

சதாசிவம் பையனை எழுப்பிக் கொண்டு தயாரானார். ‘அதெல்லாம் வேணாம்மா.. சிவலிங்கம் கடையில குடிச்சிட்டு நான் இருபத்தியொண்ணுல ஏறிக்கிறேன். இன்னொரு தடவ சாவகாசமா வந்து சாப்டுட்டு போறன்’

நல்லு உரிமையோடு தோளில் அடித்தார். அவசரமாக மாட்டிக்கொண்ட சட்டைப்பையில் காசு இருப்பதை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

‘ஆமா.. இன்னொரு தடவ நீ வந்து கிழிச்சிடுவ.. வா போலாம்’

‘’வராம எங்க போறேன் மாப்ள.. கண்டிப்பா இன்னொரு நாள் வர்றேன்’

சதாசிவம் சாணத்தரையில் சேவலின் நகக்கிறுக்கலைப் பார்த்தபடியே நடந்தார். வேலிப்படலுக்குள் மீண்டும் வந்திருந்த கோழிகள் இயல்புக்குத் திரும்பி மேயத் தொடங்கியிருந்தன.

++

ந.சிவநேசன்


ஊர் சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். கவிதைகள் காலச்சுவடு, நீலம், நுட்பம், கணையாழி, குமுதம், தீராநதி, ஆனந்தவிகடன், தி இந்து உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை இவரது நூல்கள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *