மனக்குழப்ப மனிதர்கள்.

கண நேர

மௌனம்

நினைக்க வைத்துவிடுகிறது

எல்லாவகையான

எதிர் மறை

சிந்தனைகளையும்

ஒரு முறையாவது

நினைத்திருக்கலாம்

அவருக்கும்

வேலைகள்

இருக்குமென.

******

நாய் வளர்க்கும்,

மனிதர்கள்.

வீதியில் செல்லும்

நாயும் மனிதரும்

பற்றியிருப்பது

யாரென

அறிய தோன்றும்.

எப்பொழுதாவது

நழுவிய

பிடிக்கயிறு

சொல்லிவிடுகிறது

துரத்தி ஓடும்

மனிதர்களை

பார்க்கச்சொல்லி.

****

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இந்த

மௌனம் சொல்கிறதொரு

செய்தியை

அவரவர்கள்

மொழி பெயர்க்கிறார்கள்

அவரவர்களின்

செய்தியாக.

++

அவராகவே வாழ்ந்தார். எவருக்கும் பிடிக்காதபடி.   

பொய்ய சொல்லவில்லை.

புறம் பேசவில்லை.

வெறுப்பு வார்த்தையில்லை.

வேதனைப்பட வைத்ததில்லை.

சிரித்தும் மகிழவில்லை.

சிந்தனை தூண்டும்படி பேசவுமில்லை.

போட்டியாக இருக்கவில்லை.

போட்டி போட்டும் இருந்ததில்லை.

பொறுமையாகவே வாழ்ந்தார்.

போதுமென இருந்தார்.

,

பொசுக்கென

இறந்தவரைப்பற்றி

வெள்ளையாக

உடுத்தி

வேதனை கொள்ள வைத்தவர்கள்

நல்லவனாக

இருந்தென்ன லாபமென

சொன்னார்கள்

நல்லவராக

இருப்பதன்

சிரமம்

அறியாமல்.

***

என்ன செய்யலாம்.

பிச்சையெடுப்பது

தொழிலாக இருக்கலாம்.

கை குழந்தையைக்காட்டி

காசு கேட்பதொரு

யுக்தியாகவும்

இருக்கலாம்.

காசைப் போட்டுவிட்டு

நகராமல்

குழந்தையைப் பார்த்தது

மாபெறும்

தவறாகிவிட்டது.

ஏறியமர்ந்த

குழந்தை

இறங்க மறுக்கிறது

வெகு தூரம்

வந்த பிறகும்.

***

கட்டில் ஆசை.

அந்நியமாகிப்

போனது

கடைகளாக

மாறிப்போன

தெருவை

பார்க்கும்பொழுது

வீடுகளை விடாத

சில

பூர்வகுடிகளுக்கு.

,

வாகனங்கள்

நின்றபாடில்லை.

பின்னிரவு வரை

வியாபார நிமித்த

வேலைகளின் பொருட்டால்

இரைச்சலென

எப்பொழுதும்.

,

நினைவுக்குள்

சிக்கிக் கிடக்கிறது.

நிறைவேறாத

ஆசையாக.

பழைய தெருவாக

பார்க்கும் ஆவல்

மேவி

பலருக்கும்.

,

தேடும்படியாக

ஒளிந்து கிடக்கிறார்கள்.

பேப்பர்க் கடை

பன்னீர்.

மருந்து கடை

சலீம்.

பழ வண்டி

சின்னான்.

வெத்தலைக்கடை பாய்.

(பெயர் அநேகமாக யாருக்கும் தெரியாது.)

மல்டி ஸ்பெஷாலிட்டி 

இல்லாத

ரத்தினம் டாக்டரும்.

கால மாறுதல்கள்

கடந்தும் வாழ்ந்து.

,

மரணம்

நிகழலாம்

மறுவினாடி கூட

தனிமையில்.

மாறிடாத பழைய

ஓட்டு வீட்டில்

கால் வெட்டி

கட்டிலில்

கிடக்கும்

இனிப்பு நீர்க்காரர்

மாத்திரைகள்

எடுக்க

மறந்துபோனால்.

,

காலத்தின்

கருணையில்

கடைகளற்ற

பழைய தெருவாக

மாறினால்.

அன்னக்கிளி

அப்பொழுதாவது

பதில் கடிதம்

கொடுத்தால்

தாளி அறுத்து

தண்டமாக

முதிர்ந்து

உதிராமல் போகலாம்.

இனிப்பு நீர்க்காரரோடு

இன்பமாக வாழ்ந்து.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *