“தயிர் தயிர்”னு விடிஞ்சதும் தயிர்க்காரர் சைக்கிள்ல தயிர வித்துக்கிட்டு நடுத்தெரு வழியா நடந்து வந்தாரு. அவர் சைக்கிள்ல பெரிய தூக்குச் சட்டிய தொங்க விட்டிருந்தார்
“அய்யா தயிர்காரே அறநூறு தயிர் ஊத்துங்க. இன்னைக்கு நேரமாச்சு காட்டுக்கு வேலைக்கு போகணும். இல்லன்னா அந்த நாய்க்கர் அய்யா வந்து வையப் போறாரு”னு கையில சின்ன தூக்குச்சட்டி எடுத்துக்கிட்டு தயிர்க்காரர்கிட்ட வந்தா செவத்தி. செவப்பு நேறத்துல பாலிஸ்டர் சேல. கருப்பு நேறத்துல ஜாக்கெட் போட்டு இருந்தா. முடிய நல்ல முடிஞ்சு கொண்ட போட்டுயிருந்தா. அது முண்ட கண்ணு துரத்திகிட்டுயிருப்பது போல வெளியில துரத்திகிட்டுயிருந்துச்சு.
“இந்தா அறநூறு தயிர். அஞ்சு ரூவா குடு”னு சட்டியில இருந்த தயிர சின்ன நாழி மூலியமா எடுத்து ஊத்துனாரு. முந்தானையிலருந்து பத்து ரூவா தாள எடுத்து தயிர்காரர்டா குடுத்தா செவத்தி. அத வாங்குன தயிர்காரர் “சில்ற ரெண்டு ரூவாயில்ல. நாளைக்கு சேத்து தயிர் வாங்கிக்கே”னு வடக்கு தெரு பக்கமா நடக்க சைக்கிள ஓட்டிட்டு வந்தார்
“இவருக்கு ஒரே வேலயில்ல. எப்பபாரு சில்றயில்ல”னு சொல்லிட்டு வீட்டு பக்கமா நடந்தா. வெயிலு கைக்கொழந்த தோற்றத்துலருந்து பத்து வயது கொழந்த தோற்றமா கீழருந்து மேல எந்திரிச்சு வர்றான். தெரு வெயிலு வெளிச்சத்துக்கு வருது. பொம்பளைங்க தண்ணி எடுக்க வாராளிக. ஆம்பளைங்க கம்மாக்கி வெளிக்கு போக சின்னப்பெயலுக மேடையில ஒக்காந்து பேசிக்கிட்டுயிருக்க திருகொழாய்லருந்து ‘வீர்’னு சத்தத்தோட தண்ணி வருது. பொழுது எல்லாத்தையும் இயக்குது.
வீட்டு பக்கம் நடந்த செவத்திய “ஏத்தா செவத்தி; ஏத்தா”னு மடத்துல ஒக்காந்துகிட்டுயிருந்த பாலு நாயக்கர் கூப்பிட்டுக்கிட்டே நடந்து வந்தார். கதர் சட்ட காவி வேட்டி கட்டியிருந்தார். தலையில முடியில்ல. ரெண்டு மூணு வெள்ள முடி அங்கயிங்க இருக்கு.
“ஏம்மா துட்டுதா. நா பணியாரம் வாங்கி திங்கணும்”னு செவத்தி மகெ மூக்காண்டி வீட்டவிட்டு வெளியில வர்றான். அவெ முடி தின்ன பனம் பழம் நாறு எப்பிடி நீட்டிக்கிட்டு இருக்குமோ அது போல இருந்துச்சு. ஒடம்புல சட்ட இல்ல. கருத்த ஒடம்பு. பள்ளிக்கொடத்துல குடுத்த காக்கி டவுசர் போட்டுயிருந்தான்.
“என்னையா இங்க வந்துட்டீங்களாக்கும். நதா காட்டுக்கு வந்துறேன்னு சொன்னல்லையா”னு ரெண்டு எட்டு எடுத்து பாலு நாயக்கருக்கு நேரா நடந்து வந்துகிட்டே சொன்னா
“ஏத்தா பொழுது எங்க வந்துருச்சு. இன்னும் வீட்டவிட்டு கௌம்பாம நா வந்துக்கிறேனு கத சொல்லிகிட்டுயிருக்க. சீக்கிரமா வாத்தா வேல கெடக்கு”
“சரி போங்கய்யா. இந்தா வந்துறேன்”னு மகெனப் பாத்து “காசு இல்ல. ஒங்க அய்யாகிட்ட வாங்கிக்கோ. நா வேலைக்கு போகணும்”
செவத்தி மகெ பன்னண்டாம் வகுப்பு படிக்கிறான். பன்னண்டு படிச்சாலும் காலையில எந்திரிச்சு கீறுறு பொண்டாட்டிகிட்ட பணியாரம் வாங்கி திங்காமயிருக்க மாட்டா. சின்ன வயசுலருந்து இது பழக்கம். சின்னப் பெயலுகெல்லா கீறுறு பொண்டாட்டி சுடுற பணியாரத்த காலையில எந்திரிச்சது வாங்கி திம்பானுக.
“ஏம்மா என்ன அந்த ஆளு ஒன்ன ஏத்தானு சொல்லுறா. அவனுக்கு என்ன அவ்வளவு திமிரு”னு மூக்காண்டி கேட்டதுக்கு
“ஏலே அவரு வயசு என்ன ஒ வயசு என்ன. அவெ இவெனு மரியாத இல்லாம பேசுற”னு மகென தட்டிக் குடுத்தா
“ஏம்மா அவெ ஒன்ன ஏத்தானு சொல்லுற. அது ஒனக்கு மரியாத கொறைச்சலா தெரியல. நா அவென அவெ இவெனு சொன்னது ஒனக்கு மரியாத கொறச்சலாக்கும். இனிமே அவெ எ முன்னாடி ஒன்ன ஏத்தானு கூப்டா கன்னத்துல அற வாங்குவான்”.
எவ்வளவு பெரியாள ‘அடிப்பேன்னு’ சொல்லுறத நெனச்சு அவென தட்டிக் குடுக்கவா. இல்ல மகெ முன்னாடி தாய அடுத்தவன் ஏத்தா போத்தானு சொல்லுறத ஏத்துக்க முடியாமயிருக்கீறத நெனச்சு பூரிப்பாகிறதானு “இப்பிடிப் பேசிட்டு இரு. நா வேலைக்கு போறேன். ஒ அப்பன்ட காசு வாங்கிக்கோ”னு தயிர வீட்டுல வச்சுட்டு பழைய சோத்த தூக்கு சட்டியில அள்ளிப்போட்டு ரெண்டு மௌகாய் ஈராங்காய் எடுத்து சீல மடியில போட்டுக்கிட்டு சின்ன மம்முட்டிய எடுத்து வேலைக்கு நடந்து போனா செவத்தி
ரெண்டு பால் மாடுகள பத்திகிட்டு அந்தோணி அவெ தென்னந்தோப்புக்கு போனான். இவெ போறதுக்கு மொதயே அவெ பொண்டாட்டி பரலோகம் தோப்புல காத்துக்கு விழுந்து கெடந்த தேங்காய்கள பொறுக்கிட்டுயிருந்தா
சகாயம் ஏழு மாடுகள பத்திகிட்டு மாடு மேய்க்க போய்கிட்டுயிருந்தான். இவெ ஆர்.சி தெருக்காரன். இவனுக்கு வயசு பதினாலு இருக்கும். இவெ மாடுகள தனியாத்தான் மேப்பா. ஆனா இவெ கூட நாய்க்கமாரு தெருகார சந்துரு சேர்ந்துகிட்டு மாடு மேப்பா. இவெ பெரிய அடாவடிக்காரன். பறப்பெயலுகள பாத்தா அடிச்சு போடுவான். வைவா. வேல ஏவுவான். இவெ மாடுகள பத்திகிட்டு அந்தோணி காட்டு பக்கத்துலேயே மேய விட்டுகிட்டுயிருந்தா. எப்ப பாத்தாலும் இவெ சகாயத்த வேல வாங்கிக்கிட்டேயிருப்பான். இவெ மாடு மேயாம எங்கிட்டாவது போன அவெ மாட்ட பாத்துக்கிறது சகாயம்தா. இவெனுக்கு தண்ணி தாகம் எடுத்தாலும் எந்த காட்டுலயிருந்தாலும் சகாயம் தண்ணிக்கொண்டு வந்து குடுக்கணும். சந்துரு நல்ல வாட்டசாட்டமான ஆளு. மெரட்டுத்தனமாதா எதனாலும் செய்யுவான்.
அந்தோணி தோப்புக்கு ரெட்ட பம்புன்னு பேரு. ஒரு கெணறு. ஆனா ரெண்டு தொட்டி ஒரே எடத்துல கட்டியிருந்ததால. அதனால ரெட்ட பம்புன்னு பேரு. ரெண்டு தொட்டிலையும் தண்ணி விழும். நாயக்கமாரு வீடுக தெக்க கொஞ்சம் தள்ளியிருக்கு. அங்கிருந்துதா மாடுகள மேய்க்க கெழக்கயிருக்கிற தோப்புக்கு பத்திட்டு வருவா சந்துரு. வெயிலுக்கு வயசு பதினென்னாகுது. வெயிலு வெதுவெதுப்பான வெப்பத்த அனுப்புது. மாட்டத் தனிய மேய விட்டு சந்துரு புளிய மரத்து நெனழ்ல ஒக்காந்துக்கிட்டான். மேஞ்சிக்கிட்டுயிருந்த மாடு அந்தோணி தோப்புக்குள்ள போயிருச்சு. இதப் பாத்த பரலோகம் “ஏலேகளா யாரு மாடு. தோப்புக்குள்ள மேயுது. வந்து பத்துங்கடா. ஏலேகளா”னு கத்திக்கிட்டு கூப்புடுறா.
“ஏத்தா நதா. ஏ மாடுகதா. இப்ப வந்துரும்”னு தோப்பு பக்கத்துலயிருந்த புளிய மரத்தடியில ஒக்காந்துகிட்டே பதில் சொல்லிட்டுயிருந்தான். “அய்யா நீங்களா”னு சொல்லிட்டு புல்லு புடுங்கிட்டுயிருந்த பரலோகம். மாட்ட தென்ன மரத்தடியில கட்டிட்டு தண்ணி வெலக்கிட்டுயிருந்த அந்தோணி “யாரு மாடு இது. தோப்புக்குள்ள மேயுது” னு பரலோகத்துட்ட கேட்டான்
“அந்த நாய்க்கர் அய்யா மாடுகதா. அதா வந்து பத்துங்கனு சொன்னே. அவரு இப்ப வந்துரும்னு மாட்ட பத்தாம புளிய மரத்தடியில ஒக்காந்துகிட்டுயிருக்காரு”னு சொல்லிட்டு புல்ல அறுத்துக்கிட்டே இருந்தா பரலோகம்
“ஏய் மாட்ட வந்து பத்த சொல்லு. அவென போய் அய்யா நொய்யான்னு. மாட்ட பத்த சொல்றியா இல்ல நா அடிச்சு வெரட்டனுமா”னு சொல்லிட்டு தண்ணி வெலக்கி விட்டுகிட்டுயிருந்தான். மாடு மேயுதுங்குற கோவத்துல சொல்லல. அவென இவா அய்யானு சொன்னதால கோவப்பட்டு சொன்னேன்
“இங்க வந்து மாட்ட பத்துங்க. எம்புட்டு நேரமா மேய விடுவீங்க. வாங்க வந்து பத்துங்க”னு திரும்பவும் பரலோகம் சந்துரு நாயக்கர பாத்து கைய அசச்சு கூப்டா.
வேகமா எந்திரிச்சு நடந்து வந்த சந்துரு “ஏத்தா செத்த நேரம் மேஞ்சா என்ன. ஒ சொத்தா அழிஞ்சிடும். இதுக்கு போய் கத்துற”னு கையில கம்ப எடுத்துக்கிட்டு தோப்புக்குள்ள மேஞ்ச மாடுகள பத்த வந்தான்.
வந்தவர்ட “யார ஏத்தா போத்தானு சொல்றீங்க. இனிமே அப்பிடி பேசாதீங்க”னு குரல தடுச்சு மூஞ்சிய வெறுப்பாக்கீகிட்டு அந்தோணி சொன்னா.
“ஏலே இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி கத்துற. ஏத்தானுதான சொன்னே. அதுக்கு போய்”னு சந்துரு சொல்லவும் “அவா என்ன ஒ பொண்டாட்டியா. ஏ பொண்டாட்டி. நானே அவள ஏத்தானு கூப்டதில்ல. நீ என்ன. இன்னொரு தடவ கூப்ட நடக்குறதே வேற”னு மம்முட்டி கணைய இருக்கல புடிச்சுகிட்டுயிருந்தா. அந்தோணி இருக்கல புடிச்ச மம்முட்டி கண எதுக்குன்னா சந்துரு மண்டைய ஒடைக்கணும்னு புரியாமயிருந்தா சந்துரு.
“இவள போய் ஏ பொண்டாட்டினு சொல்லுவனாடா. அதும் பறப் பொம்பளைய. என்னத்தா ஒ புருச இப்பிடி பேசுறா”னு சொல்லிக்கிட்டுயிருக்கும்போது மறுபடியும் ஏத்தானு சொன்னதுனால வந்ததே சரின்னு மம்முட்டிய எடுத்து பக்கத்துல கெடந்த கல்லுல தட்டி மம்முட்டி வேற கண வேறன்னு ஆக்கிக்கிட்டு அந்த கணைய புடிச்சு சந்துரு தலையில ஓங்கி அடிச்சா அந்தோணி.
“ஏலே”னு வலி தாங்காம கத்திக்கிட்டு நின்னவன் கீழ விழுந்தா. என்ன சத்தம்னு சகாயம் தோப்புக்கு வெளியிலருந்து பாக்கா. சந்துரு கீழ கெடக்கான்.
“யாரடா ஏத்தாங்கிர”னு மறுபடியும் மம்முட்டி கணைய சந்துரு தலையில அடிச்சா. ரெண்டாவது தடவ அடிச்சதுல மண்ட ஒடஞ்சு ரெத்தம் அவெ மேல் முழுக்க வடிஞ்சது
“ஏலே இனிமே சொல்ல மாட்டேன். ஏலே இனிமே சொல்ல மாட்டேன். என்ன கொன்னுராதடா”னு கையெடுத்துக் கும்பிடுற சந்துரு
மாடுகளுக்கு புல்ல அறுத்துக்கிட்டு இருந்த பரலோகம் பண்னருவாள சீலயோடு கட்டியிருந்த இடுப்புல சொருகிட்டு “ஏய் இந்த கொன்னுராத. அவர விட்டுரு. இதோட” னு படபடத்துப் போய் அந்தோணிய புடிச்சிகிட்டா. பின்னாடியிருந்து அந்தோணி நெஞ்சோட கை ரெண்டையும் சேத்து இறுக்கிப் பிடிச்சுகிட்டா. “இவெ என்ன பெரிய இவனா. ஏத்தா போத்தங்கீரா. பறப் பொம்பளையாம்ல அந்த அருவாள எடு வெட்டி சாச்சுர்றே”னு ஆத்தரம் தாங்காம மம்முட்டி கணைய இன்னும் இறுக்கி பிடிச்சுகிட்டு கத்துனா அந்தோணி.
இத பாத்துகிட்டுயிருந்த சகாயம் மொகத்துல சிரிப்பு. சந்துரு தலையிலருந்து ரெத்தம் வருதேனு. வெயில் நடு உச்சிக்கு வந்தது. வெயில் சூடு அதிகமாச்சு. மரங்க கூடாரமா இருந்ததால சூட்ட அதிகமா தள்ள முடியல. வெயில தாங்குகிற தைரியம் மரத்துக்கு இருந்தது. ஆனா சந்துரு ‘ஏத்தானு’ பரலோகத்த சொன்னத அந்தோணியால தாங்க முடியல. இதப் பாத்துகிட்டுயிருந்த அந்தோணியோட மாடுக தோப்புல மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அந்தோணி செஞ்சது சரிதானு
++
அ. பிரகாஷ்
நான் “கிணத்து மேட்டுப் பனமரம்” சிறுகதை. தொகுப்பு ஒன்று எழுதி இருக்கிறேன்.