எழுத்தாளர் இளங்கோவின் வீட்டிற்கு அருகில் குடியிருப்பதை பெருமையாகக் கருதினான் மதி என்ற மதியழகன். பனிரெண்டு வயதுச் சிறுவன் அவன். எழுத்தாளர் அங்கிள் என்று தான் இளங்கோ அவர்களை அழைப்பான்.
எழுத்தாளர் இளங்கோவின் வீடு புத்தகங்களால் நிறைந்து இருந்தது. வண்ண வண்ண சித்திரங்கள் வரையப்பட்ட புத்தகங்களைத் தொட்டுப் பார்த்து மகிழ்வான் மதி. சில சமயம் அவனுடைய அவசரத்தாலும் ஆர்வத்தாலும் அலமாரியில் இருந்து புத்தகங்கள் சரிந்து தரையில் விழுந்துவிடும். அப்பொழுது எல்லாம் நடுக்கத்துடன் ஓரக்கண்ணால் எழுத்தாளர் அங்கிளைப் பார்ப்பான் மதி.
அப்படித்தான் ஒரு நாள் கனத்த புத்தகம் ஒன்று கீழே விழுந்ததில் அதன் அட்டை சேதமாகிவிட்டது. பயமும், பதட்டமும் கலந்த முகத்துடன் எழுத்தாளர் அங்கிளைப் பார்த்தான் மதி.
“நான் அடுக்கிக் கொள்கிறேன். நீ வேறு புத்தகங்களை எடுத்துப் படி” என்று சிறிதும் கோபமோ, பதட்டமோ இல்லாமல் மதியைப் பார்த்துச் சொன்னார் எழுத்தாளர் இளங்கோ.
அன்று முதல் அவர் மீது மேலும் மதிப்பு கூடியது சிறுவன் மதிக்கு. அதற்கு அடுத்த நாட்களில் இருந்து அலமாரியின் கை எட்டும் உயரத்தில் இருந்த புத்தகங்களை மட்டும் எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.
“எத்தனை விதமான புத்தகங்கள்!”
வண்ண வண்ண அட்டைப் படங்கள் கொண்ட சித்திரக் கதைப் புத்தகங்களைப் பார்த்து மனதுக்குள் வியந்து போனான் மதி.
ஒரு ஞாற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுத்தாளர் அங்கிளைப் பார்க்க வந்துவிட்டான் மதி. அவனுடைய குழப்பமான முகத்தைப் பார்த்தார் இளங்கோ.
“என்ன மதி! எதுவும் பிரச்சினையா? ஏன் முகம் கூட கழுவாமல் இப்படி வந்து நிற்கிறாய்?” அன்பாகக் கேட்டார் இளங்கோ.
“இல்லை அங்கிள். தூங்கி எழுந்ததில் இருந்து ஏதோ பயமாக இருக்கிறது” தயக்கத்துடன் சொன்னான் மதி. சொல்லும் போதே அவன் முகம் மேலும் கருத்தது.
“ஏன், எதுவும் கெட்ட கனவு கண்டாயா?
“ஆமாம் அங்கிள். நேற்று இரவு முழுக்க ஒரு மாதிரியான கனவுகள் தோன்றி என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டன. எப்போது தூங்கினேன் என்றே தெரியாது,” குழப்பத்துடன் சொன்னான் மதி.
இளங்கோவிற்கு புரிந்துவிட்டது.
“இதில் பயப்பட எதுவும் இல்லை. பெரியவன் ஆகும் போது இப்படி எல்லாம் கனவுகள் தோன்றுவது இயற்கை. நம்முடைய மூளையில் ஹைபோதல்மாஸ் என்று ஒரு பகுதி உள்ளது. இது சுரக்கும் ஹார்மோன்களின் காரணமாகத் தான் இப்படியான கனவுகள் தோன்றுகின்றன.”
“எனக்கு பெண் பிள்ளைகளை பார்க்க வேண்டும், தொட வேண்டும் போல் இருக்கிறது”
ஒரு வெடிச் சிரிப்பு கிளம்பியது இளங்கோவிடம் இருந்து.
‘எதுவும் தவறாகச் சொல்லிவிட்டோமோ’ என்று குழம்பிப் போன மதி, பரிதாபமாக இளங்கோ அங்கிளைப் பார்த்தான்.
“இதுவும் இயற்கை தான். அண்ட்ரோஜன்னு ஒரு ஹார்மோன் செய்யுற வேலை தான் இது. விளையாட்டு, படிப்பு இவைகளில் உன் கவனத்தை செலுத்து. இன்னும் சில வருடங்களில் உனக்கே எல்லாம் புரிந்துவிடும்.”
இளங்கோ அங்கிள் சொன்னதை கேட்டு, புரிந்தும் புரியாமலும் அவரிடம் இருந்து விடை பெற்றான் மதி.
“பயப்படத் தேவையில்லை” என்று அங்கிள் சொன்ன வார்த்தைகள் மட்டும் மதிக்கு நிம்மதியைக் கொடுத்தன.
மதி வளர வளர பல புதிய புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசிக்கத் தொடங்கினான். கதை நூல்கள் மட்டுமில்லாமல் சரித்திர நூல்களும், புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் அவனுடைய வீட்டை நிறைத்தன. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாலியல் சார்ந்த அறிவியல் புத்தகங்களையும் வாசித்தான் மதி. அவனுடைய பார்வை விசாலமாகியது.
மதி வாசித்த புத்தகங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை தூய்மைப்படுத்தின; மனதையும் சிந்தனையையும் மேம்படுத்தின. உடல் மாற்றங்கள் குறித்த அறிவியல் விளக்கங்களை அவன் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொண்டான்; சக மாணவிகளை மதித்துப் பழகும் பண்பும் அவனிடம் வளர்ந்திருந்தது. இவை எல்லாவற்றிற்கும் இளங்கோ அங்கிளுக்குத் தான் நன்றி சொன்னான் மதி.
பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான் மதி. இப்போது அவன் பார்வை மேலும் ஆழம் அடைந்திருந்தது.
“இந்த உலகத்தில் முக்கியமானவைகளை இதயத்தால் மட்டுமே பார்க்க முடியும்” என்று ஒரு ஃபிரெஞ்சு எழுத்தாளர் சொன்னதை முன்பு ஒரு முறை மதி படித்து இருந்தான்; அதன் உண்மை அர்த்தம் இப்போது அவனுக்கு புரிப்படத் தொடங்கி இருந்தது.
மதியின் தங்கை சித்ராவுக்கு இப்போது பதினான்கு வயது நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் மதியின் அம்மா அவனிடம் புலம்பினாள்:
“பாருடா உன்னோட தங்கையை! வளர்ந்து விட்டாளே தவிர கொஞ்சமும் பொறுப்பில்லை. வயிறு முட்ட சாப்பிட வேண்டியது… இழுத்துப் போர்த்தி தூங்க வேண்டியது”
மதி அமைதியாக அம்மாவைப் பார்த்துச் சொன்னான்:
“அம்மா! இந்த வயதில் எல்லா சிறுமிகளும் இப்படித்தான் இருப்பார்கள்; நானும் கூட அவள் வயதில் இப்படித்தான் இருந்தேன். நல்ல தூக்கத்தில் தான் உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்கின்றன என்று படித்திருக்கிறேன்; நன்றாக பசியும் எடுக்குமாம்….”
மதி சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டாள் அவனுடைய அம்மா.
“என்னென்னமோ புத்தகங்களை படிக்கிற…. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்; ம்ம்ம்! இப்பத்தான் என் மர மண்டைக்குப் புரிகிறது. நானும் அவள் வயதில் இப்படித்தான் இருந்தேன்!”
கண்களை விரித்துக் கொண்டு அம்மா சொன்னதைக் கேட்டு புன்னகை புரிந்தான் மதி.
“சரி! சரி! கை வேலை எல்லாம் அப்படியே இருக்கு. உன் அருமை தங்கையோட உடையெல்லாம் ஒரே கறையா இருக்கு. வெந்நீரில் தான் கழுவ வேண்டும் போல…!” நெட்டி முறித்தபடி சொன்னாள் மதியின் அம்மா.
“ஐயோ அம்மா! உன் அறிவே அறிவு! வெந்நீரில் கழுவினால் கறை அப்படியே துணியில் படிந்துவிடும். குளிர்ந்த நீரில்தான் கறைபட்ட துணிகளைக் கழுவ வேண்டும்”
மதி சொன்னதைக் கேட்டு புருவத்தை உயர்த்தினாள் அவனுடைய அம்மா.
“இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்”
*
கல்லூரி இறுதி ஆண்டில் மதிக்குள் விசித்திர உணர்வுகள் தோன்றின; அவனுக்குள் காதல் பூக்கத் தொடங்கியது. நிர்மலாவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் இனம் புரியாத பரவச உணர்ச்சி தோன்றியது. இந்த விஷயத்தில் அவன் படித்த புத்தகங்கள் எல்லாம் அவனுக்குத் துணை வரவில்லை.
மதிக்கு படிப்பில் கவனம் குறையத் தொடங்கியது; நேரம் தவறி சாப்பிடத் தொடங்கினான்; சில நாட்களில் சாப்பிடாமலேயே தூங்கப் போனான்.
மதியின் நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டாள் நிர்மலா. இருபத்திநாலு மணி நேரமும் அவளுடனேயே இருக்க வேண்டும் என அவன் மனம் விரும்பியது. புத்தகத்தில் கண் இருந்தாலும் அவனது மனம் வேறு எங்கோ அலை பாய்ந்தபடியே இருந்தது.
அந்த ஆண்டு செமஸ்டர் தேர்வில் இரண்டு பாடங்களில் அரியர் எடுத்தான் மதி.
மதியின் அம்மாவை கவலை சூழத் தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக எழுத்தாளர் இளங்கோவை, மதியின் அம்மா சந்திக்கச் சென்றார்.
சில நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. புயல் வேகத்தில் மதியும் அம்மாவைப் பின் தொடர்ந்து இளங்கோ அங்கிள் வீட்டுக்குள் நுழைந்தான்.
மதியினுடைய அம்மாவின் திடீர் வரவால் திகைத்துப் போனார் இளங்கோ. அவரைத் தொடர்ந்து பரபரப்பாக நுழைந்த மதியைப் பார்த்தவுடன் இளங்கோவின் திகைப்பு அதிகமாகியது.
“என்ன…என்ன… எதுவும் அவசர செய்தியா….” பதட்டமாகக் கேட்டார் இளங்கோ.
“உங்கள் கண் முன்னால் வளர்ந்த பிள்ளை இவன். சமீபகாலமாக இவனுடைய போக்கு ஒன்றும் சரியாக இல்லை…! எதையோ பறி கொடுத்தவன் மாதிரியே வளைய வருகிறான்; எது கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேன் என்கிறான்; எப்போதும் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவன் இந்த ஆண்டு அரியர் வாங்கியுள்ளான்; எனக்கு பயமா இருக்கு.. நீங்க தான் அவனை விசாரிக்க வேணும்”
மதியின் முகத்தை ஊடுருவிப் பார்த்தார் இளங்கோ. அவரது பார்வையைத் தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொண்டான் மதி.
“என்ன மதி! என்ன விஷயம்!” கனிவான குரலில் கேட்டார் இளங்கோ.
“இல்லை அங்கிள்! என்னுடன் கல்லூரியில் படிக்கும் நிர்மலா கொஞ்ச நாளாகவே முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறாள்; காரணம் எதுவும் எனக்குப் புரியவில்லை; அதுதான் ஒரே குழப்பமா இருக்கு”
துண்டு துண்டாக தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் மதி சொன்னதைக் கேட்டவுடன் எல்லாமும் புரிந்து போனது இளங்கோவிற்கு. “இது காதல் படுத்தும் பாடு” மனதுக்குள் நினைத்துக் கொண்ட இளங்கோ, மதியை உற்றுப் பார்த்துவிட்டு பேசத் தொடங்கினார்:
“மதி! இனம் புரியாத பரவசமும், பதட்டத்தில் முடிவெடுக்கும் தன்மையும் ஏற்படுகிற வயதை நீ கடந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்! எதிர் பாலினர் மேல் ஏற்படும் ஈர்ப்பையும், காமம் கலந்த உணர்வையும் இன்னும் நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.”
இளங்கோ அவர்கள் பேசியதை தலை குனிந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த மதி, “அப்படியானால் ஆண், பெண் நடத்தைகளுக்குக் காரணம் ஹார்மோன்கள் தான் என்றா சொல்ல வருகிறீர்கள்?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“நான் அப்படிச் சொல்லவில்லை. நடத்தைகள் உருவாவது சிறு வயதில் இருந்தே பெற்றோர்களின் முறைப்படுத்தலால் ஏற்படுவது. நிர்மலா உடனடி உணர்ச்சிக்கு ஆட்படுபவளாகவும், பயமும், பாதுகாப்பு உணர்வும் மிகுந்தவளாகவும் இருக்க வேண்டும். அதுதான் அவளை குழப்பி, உன்னை விட்டு விலகிப் போகச் செய்திருக்க வேண்டும்….”
அந்த நேரத்தில், இளங்கோவின் மனைவி காப்பி தம்ளர்களுடன் ஹாலுக்குள் நுழைந்தார்.
“இதோ என்னுடைய காதல் மனைவியைப் பார் மதி. இவளை நான் திருமணத்திற்குப் பிறகு தான் காதலிக்கத் தொடங்கினேன். பள்ளி நாட்களில் ஒருத்தியையும், பிறகு கல்லூரி நாட்களில் ஒருத்தியையும் காதலித்தேன். எல்லாம் கடந்து போகும் மேகம் போல என் வாழ்வில் வந்து போனவைகள்….”
தொடர்ந்து பேசிக் கொண்டே போனார் இளங்கோ. அவரை ஆச்சரியமாகப் பார்த்தபடியே இருந்தார்கள் மதியும் அவன் அம்மாவும்.
இப்போது மதியைப் பார்த்து இளங்கோ கேட்டார்:
“உன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன?” சிறிதும் தயங்காமல் உடனடியாக பதில் சொன்னான் மதி:
“நல்ல வேலையில் அமர்ந்து உயர்ந்த பதவியை அடைவது; நிர்மலாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவது.”
“சபாஷ் உன்னுடைய லட்சியங்கள் உயர்வானவை. இப்போது சொல்! இரண்டில் எது உனது உடனடி லட்சியம்? எது தொலைதூர லட்சியம்?”
இளங்கோ கேட்ட கேள்வி மதியை சிறிது தடுமாறச் செய்தது.
மெல்லிய புன்னகையுடன் இளங்கோ அவர்களே தொடர்ந்து பேசினார்…
“மதி! உடனடியாக சாதிக்க வேண்டிய லட்சியத்தை உன்னுடைய மனதில் குறித்துக் கொள். உன் சிந்தனை முழுக்க அதை அடைவதிலேயே முழுமையாக ஈடுபட வேண்டும். முதலில் நல்ல மதிப்பெண்களுடன் படிப்பை முடி; அடுத்து ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்; பிறகு உன் மனம் நிர்மலாவைத் தேடினால் அவளை வாழ்கைத் துணையாக அமைத்துக் கொள்….”
இளங்கோ பேசப் பேச மேகங்கள் விலகியது போல் இருந்தது மதிக்கு. நிலவின் அழகும் தெளிவும் அவன் மனதை ஆக்கிரமித்தன.
வாழ்க்கையை தெளிவாக உணர்த்தி, வெற்றிப் பாதைக்கான திறவுகோலாக எழுத்தாளர் இளங்கோ அவர்கள் மதியின் கண்களுக்குத் தென்பட்டார்.
மதியின் முகம் அடைந்த மாற்றங்களைப் பார்த்து அவனுடைய அம்மா மகிழ்ச்சி அடைந்தார்.
எழுத்தாளர் இளங்கோவின் வீட்டில் இருந்து மன நிறைவுடன் வெளியேறினார்கள் மதியும் அவன் அம்மாவும்.
வானத்தில் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கினான்.
மனதில் சில தீர்மானங்கள் செய்து கொண்டான் மதி; அந்தத் தீர்மானங்கள் அவன் மனதை தெளிவாக்கி மகிழ்ச்சிப்படுத்தின. மதியின் அருகில் நடந்த அவன் அம்மாவையும் மகிழ்ச்சிப்படுத்தியது. இந்த உலகமே தெளிவாகவும் அழகாகவும் மாறிவிட்டது மதியின் மன உலகில்.
*
துரை. அறிவழகன்
கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் பதிப்பாசிரிராக செயல்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது ‘மகி எழுதிய முதல் கதை’ மற்றும் ‘தலைவர் உருவாகிறார்’ ஆகிய சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. இவரது “எலுமிச்சை மரப் பட்டாம்பூச்சி” சிறார் மனமலர்ச்சி நாவல் உலக மொழிகளில் மொழியாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தற்போதைய இருப்பு காரைக்குடி.