சட்டம் தன் கடமையை செய்யும்

     அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய்ப் போடப்பட்ட திட்டம். அந்த அலாரம் அலறத்தொடங்கியதற்கும் காவல் துறையினர் வருவதற்குமான நிமிடங்கள் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு; இன்னும் ஐந்து நிமிடங்களும் முப்பத்தாறு வினாடிகளும் ஆகும்.

    ஆளுக்கு ஆள், கட்டியிருக்கும் கைகடிகாரத்தில் ஒரு கண் வைத்துக்கொண்டே துப்பாக்கியில் வாடிக்கையாளர்களைக் குறிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒருமாத கால கண்காணிப்பிற்கு முன்னமே வங்கி கொள்ளை பற்றிய தமிழ் ஆங்கில மற்ற மொழி தெரியாத குறும்படம் முதல் பெரும்படம் வரை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

இன்னும் சரியாக ஒரு நிமிடம் இருக்கிறது. வினாடி முள் முப்பதைக் காட்டியவுடன் வெளியேறிட வேண்டும். எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு போதும். முக்கியம் மாட்டிக்கொள்ளக்கூடாது.

காவல் நிலையத்தினரை குழப்புவதற்கு புதிய திட்டம் போட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே வண்டியை வங்கிக்கு எதிரில் நிறுத்திவிட வேண்டும். காலையில் ஆளுக்கு ஒரு வழியில் வங்கியிருக்கும் வட்டார கடைகளில் வந்துவிட வேண்டும். எல்லா தகவல்களும் புலனத்தில் நொடிக்கு நொடி பகிர்ப்பட்டுக்கொண்டே இருந்தன.

    உணவு நேரம் முடிந்ததும் வங்கிக்குள் நுழைய வேண்டும். அதுவும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர வேண்டும்.

    உண்ட களைப்பில் சிலருக்கு மண்டை ஓடியிருக்கும். ஆக அவர்கள் நிலைமையை புரிந்துக்கொள்வதற்கு முன்னமாக நாம்  தப்பிக்கலாம்.

    நால்வரும் திட்டமிட்டபடி ஒவ்வொன்றாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். காரில் பதற்றத்துடன் யாரும் உட்கார விரும்பவில்லை. துளியும் சந்தேகம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னமே; கார் தகுந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. ஓடி வந்த வேகத்தில் காரில் ஏற வேண்டும், சாவியைத் திருக வேண்டும், கார் காற்றாக பறக்க வேண்டும்.

    என்ன ஓர் அறிவுப்பூர்வமான யோசனை. தமிழ்ப்படங்களில் கூட இப்படியான அறிவாளி திருடன்கள் இருக்கவில்லை.

    முப்பதாவது வினாடியை காட்டியது கைகடிகாரம். பணத்துடன் ஓடினார்கள். வாசலை தாண்டினார்கள்.

அதிர்ச்சி…

நின்றார்கள்.

    நேற்றே நிறுத்தி வைத்த வாகனத்தில் பார்க்கிங் டிக்கட் இல்லாததால் சக்கரத்தை ஒருவர் பூட்டி முடித்து எழுந்தார்.

நேர்வழி

     ஒப்புக்கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். எத்தனை தடங்கல்கள் எத்தனை தடை கற்கள் வந்தாலும் மனம் சோர்ந்துவிடக் கூடாது. பின் வாங்கிவிடவும் கூடாது.

      இரண்டாவது காதலாவது நிலைக்கட்டுமே என போட்டு வைத்த பிரார்த்தனை அது. பெரிதாக ஒன்றுமில்லை. மலை மேல் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கேற்ற வேண்டும். அவ்வளவுதான்.

      பாதை செங்குத்தாக போகும். கொஞ்சம் கால் இடறினாலும் காதலியை அடைவதற்கு பதில் கடவுளை அடைந்துவிடலாம். ஆனால் வேண்டுதல் வைத்தாயிற்றே. முதல் காதல் கொடுத்த வலியை விட மறுகாதல் நிலைக்காதோ என்கிற பயத்தை விடவும், உயிரை பணயம் வைத்து மலையேறி வேண்டுதலை முடிப்பது சிரமமில்லை.

       நான்கு மணி நேரம். கொண்டு போயிருந்த பாட்டில் நீரும் கூட தீர்ந்தது. இன்னும் கோவில் அல்ல கோவில் அறிவிப்பு பலகை கூட தென்படவில்லை. ‘இங்குள்ள சாமி சக்தியுள்ளது’ என யாரோ முக நூல் பதிவு போட அந்த நொடியில் போட்டுவிட்ட வேண்டுதல் இது. ஒரு முறை கோவிலுக்கு செல்லும் வழியை ‘ஜீ.பி.எஸ்’லாவது பார்த்திருக்கலாம்.

      ‘சாமி குத்தமாச்சின்னா சகலமும் குத்தமாகிடும்’னு சொல்லி வளர்க்கப்பட்டவன். முடிவை மாற்ற மனம் வரவில்லை. கடவுள் காதலியை மாற்றிவிட்டால் என்னாவது?

       ஆறு மணி நேரம் ஆனது. ஏறும்போதே இப்படியென்றால் இறங்கும் போது!. மலையில் இருந்து நடந்தெல்லாம் இறங்க முடியாது உருண்டுதான் கீழே போகவேண்டும். நாக்கு வரண்டது. வியர்வையை நக்கி ஈரமாக்கிக்கொள்ளலாம் என்றால் அதெல்லாம் காற்று ஜிலுஜிலுப்பைக் கொடுத்து வியர்வையை முன்னமே வழிந்து மறைந்துவிட்டது.

     அப்போதுதான் நடந்தது அது. அந்த அதிசயம்.

 குழந்தையொன்று கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இவனை பார்த்து கையசைத்தது. ஆள் நடமாட்டமே இல்லாத மலைக்காட்டு கோவிலில் இப்படி ஓர் ஆச்சர்யமும் ஆசீர்வாதமும் யாருக்கு கிடைக்கும். கடவுள் உடனே வருவதற்கான கடப்பிதழே குழந்தைகள்தானே. அந்த வடிவத்தில்தான் இப்போதும் கடவுள் காட்சி கொடுத்தது.

      அப்போது யாரோ ஒருவர்,  வந்து குழந்தையை தூக்கிவிட்டு இவனை ஒரு மாதிரியாக பார்த்தார்.

“ஏம்ப்பா எதுக்கு பின் பக்கமா மலைய சுத்திட்டு வர.. அதான் இந்த பக்கம் ரோடு போட்டிருக்காங்களே பத்து நிமிசத்துல வந்திருக்கலாம்ல..”

நீதி

      நிச்சயம் இந்த மரணத்திற்கு நீதி வேண்டும். வாசகங்கள் பொருந்திய பதாகைகள். கூச்சல். குறைந்தது இருபது பேராவது இருக்கும். சாலையை மறைத்திருந்தார்கள்.


மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பாலனுக்கு நியாயம் வேண்டுமாம்.

       கொலையை மறைக்க சிலர் போலி நாடகம் போடுகிறார்கள் எனவும் ஆளுக்கு ஆள் முகநூலில் முழங்கிக்கொண்டிருந்தார்கள். சிறைச்சாலை மரணங்கள் கண்டிக்கத்தக்கவை என்கிற சுலோகங்கள் சாலையெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு பக்கம் பத்திரிகைகள் இறந்தவர் தொடர்பாக செய்திகளை சேகரிக்கிறார்கள். “என்னதான் பொறுக்கியா இருந்தாலும் தண்டனை கொடு, சாவடிக்க நீ யாரு….”  என எங்கோ மூலையில் யாரோ யாரிடமோ ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

     பாலன் குற்றவாளி என்கிற அடையாளத்தில் இருந்து ‘கொலை செய்யப்பட்டவன்’ என்கிற அடைமொழிக்கு வரவைக்கப்பட்டான்.

     சூழல் பரபரப்பானது, நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்தும் கூடியும் விளையாட்டு காட்டியது.

    பாக்கியத்திற்கு வெளிவர முடியவில்லை. ரொம்பவும் சோர்ந்து போயிருந்தார். படுத்தவாறே அழுதுக்கொண்டிருந்தார். வாய்க்கு வந்த தெய்வங்களுக்கு எல்லாம் “நன்றி…. நன்றி… நன்றி…”என  முனகிக்கொண்டிருந்தார்.

     அவர் கையில், மனிதர்களால் நீதி கிடைக்காத தன் ஒரே மகளின் புகைப்படமும் அருகில் அவளது உதிரம் பட்ட பாவாடையும் இருந்தது.

++

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *