வெளிவாசல் பக்கம் யாரோ கதவருகே நின்றுக்கொண்டிருக்கும் நிழலலசைவை மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கவனித்த செல்லதுரை ஹால் பக்கம் இறங்கி வந்தான். அங்கே தனது உம்மா மெகருன்னிசா இருக்கிறாளா என்று சுற்றுமுற்றும் பார்த்தான் காணவில்லை. சமையற்கட்டிலும் இருப்பது போன்று தெரியவில்லை. அவள் கொல்லைப்பக்கம் எங்கேயும் நிற்கலாம் என எண்ணிக் கொண்டபடி தலைவாசற் கதவை திறந்து கொண்டு காம்பவுண்டு சுவருக்கு போடப்பட்டிருந்த வெளிக்கதவுப் பக்கம் வந்தான்.
அறுபது அறுத்தைந்து வயது மதிக்கத்தக்க, வெள்ளை வெள்ளேரென ஒரு பெரியவர் இவனுக்கு வலிந்து புன்னகைத்தபடி கனிவோடு ஸலாம் சொன்னார். இவனும் பதில் சொன்னான். என்ன ஏது என்றுக் கேட்டு, அவராக விவரிக்க ஒன்றுமில்லை. யாசகம் வேண்டிதான் வந்திருக்கிறார் என்பதை அவர் கொண்டிருந்த குறிப்புகளிலேயே விளங்கிக் கொண்டான். அவருடைய மங்கி நைந்த உடையில் கொஞ்சம் வறுமை தெரிந்தாலும், பேரித்தை மர உயரத்திற்கும் பிரகாசமான முகப்பொலிவிற்கும் அது கொஞ்சமும் பொருந்தவில்லை.
யாசகம் கேட்டு வருபவர்களென்றால் இப்படித்தானே இருக்க வேண்டும் என்று பொதுப்புத்தியில் படிந்துப் போன கீழ்மை அழுக்கை வரைமுறை என்பதா? நடைமுறை என்பதா? இருப்பினும் உதவி கோருபவர்கள் எவ்வளவு நலிந்தவர்களாக இருந்தாலும் தெரிந்தாலும் இரக்கம் காட்டுபவர்கள் எத்தனை பேர்?
தளர்ந்த உடலோடும், கிழிந்த உடுப்போடும், அழுதாலும் கெஞ்சினாலும் வீட்டில் ஆளில்லை என்று அடுப்படியிலிருந்தே விரட்டும் ஆட்களே இங்கே அதிகம். ஆனால் செல்லதுரை அப்படிப்பட்டவன் அல்ல.
வாய்விட்டு கேட்பவர் என்றில்லை எதேச்சையாக இவன் காணும், சந்திக்கும் சாதாரண மக்களில் கூட யாரும் கஷ்டப்படுவது போல் தோன்றினாலும், நொடியில் இவன் மனம் வாடிவிடும். அதிலிருந்து மீண்டு வரவே மணி பிடிக்கும்.
“நா.. சம்பை தம்பி.. இங்க மரைக்கா தெரு, காதரு வூட்டுக்கு வந்தேன்.. எங்க உம்மாவோட சாச்சி பேரன். வூட்ல யாருமில்ல போல. ரெண்டு மூணு முற தம்பி… தம்பின்னு கூப்ட்டு பாத்தேன். யாரும் வர்ற மாரி தெரியல. கொஞ்ச நேரம் நின்னுப் பாத்துட்டு கெளம்பி வந்துட்டேன்”
அவரைப் பார்க்க ஒரு வெகுளி அல்லது அவ்வளவு விபரம் இல்லாதவர் போல் தெரிந்தார். ஆனால் அவர், அவர் சொல்வது போல் அங்கே வெறுமினேப் பார்க்க சென்றிருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட தம்பியிடம் ஏதோ உதவியை எதிர்பார்த்து வந்த மாதிரிதான் செல்லதுரைக்கு விளங்கியது.
சரி, காண வந்தவர் வீட்டில் இல்லை என்றால் பஸ் ஏறி ஊரைப் பார்த்து போக வேண்டியதுதானே என்று யோசிக்கவோ, தேடி வந்தவரை சத்தம் போட்டு வெளியேற்றவோ முன்பு சொன்ன மாதிரி அவன் சாதாரண ஆளில்லையே! மண்ணை வெட்டினால் ஊற்றெடுக்குமோ இல்லையோ, இவனுடைய இளகிய மனதை தட்டுவது போல் எதுவும் கண்ணிற்கு பட்டுவிட்டால் போதும் அப்படியே ஈரம் சுரந்துவிடும்!
“தண்ணி.. தண்ணி..” என்று அவர் கொஞ்சம் நா வறண்டதுபோல் தடுமாறி கேட்டபோதுதான், வெய்யிலின் உக்கிரமும் அவன் பிடரிக்கு உரைத்தது.
“உள்ள வாங்க!” என்று போர்டிகோ பக்கம் அழைத்தபோதுதான் கவனித்தான் அவர் கொஞ்சம் ஊன்றி ஊன்றி நடந்து வந்ததை. ஒரு காலில் ஏதோ கட்டு வேறு போடப்பட்டிருந்தது. சரியாக நடக்க கூட முடியாதவரை இவ்வளவு நேரம் நிற்க வைத்துவிட்டோமே என்று அவனுக்கு சங்கடமாக இருந்தது.
நிழல் விழுந்துக்கொண்டிருந்த புறத்தில் பிளாஸ்டிக் நாற்காலியொன்றை இழுத்துப்போட்டு, அமருமாறு கனிவைக் காட்டினான். மேலும் அங்கிருந்த சீலிங் ஃபேனையும் சுழலவிட்டான்.
“ம்மா.. ம்மா!” என்று குரல் கொடுக்கவும் என்ன ஏதென்று அப்போதுதான் மெகருன்னிசாவும் வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள்.
“கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்களேன்!”
இவனுடைய இந்த இளகிய மனமும், தயாள குணமும் பெற்றவளுக்கு புதிதில்லை என்றாலும், அந்த பெரியவருக்கு மிகவும் வியப்பாகயிருந்தது. தான் தேடி வந்த ஒன்றுவிட்ட தம்பி கூட இப்படி அவரை கண்டதும் அரவணைத்திருப்பானா, உட்கார வைத்து நாலு வார்த்தை பேசியிருப்பானா என்று அவனுடைய வீட்டு கதவை தட்டி தட்டி களைத்துப் போனவருக்குள் கேள்விகள் எழும்பின.
தண்ணீரை நிதானமாகவே குடித்தார் என்றாலும் கொஞ்சம் அங்குமிங்கும் தாடை ஓரங்களில் சிந்தவேச் செய்தது. பூரிப்பான சிரிப்போடு தோளில் தொங்கிக்கொண்டிருந்த துண்டால் துடைத்துக்கொண்டார்.
“நா.. மரைக்கா தெரு, காதரு வூட்டுக்கு வந்தேன்.. காதரு எங்க உம்மாவோட சாச்சி பேரன். வூட்ல ஆளு இல்ல போல. தம்பி.. தங்கச்சின்னு தட்டி, தட்டி கூப்ட்டு பாத்தேன். யாரும் வந்து கதவு தெறக்குற மாதிரி தெரியல. கொஞ்ச நேரம் நின்னுப் பாத்துட்டு கெளம்பி வந்துட்டேன்” என்று முதலில் சொன்னதையே திரும்பவும் சொல்லி, பிறகு எதையோ பேச வாயெடுத்தது போல கொஞ்சம் வெட்கத்தோடு முறுவலித்தார்.
“சின்னம்மா இருந்த காலத்தில அப்பப்ப வருவேன். மூத்த புள்ள மூத்த புள்ளன்னு வாய்க்கு ருசியா எல்லாம் பாத்து பாத்து செஞ்சித் தரும்!” சொல்லும்போதே குரல் உடைந்து, மேலும் எதுவும் சொல்ல முடியாத இயலாமையில் கண்ணீர் பொங்கியது. மீண்டும் துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டார்.
செல்லதுரைக்கு அவருடைய உணர்வின் ஆழத்தையும், அதில் உருவெடுத்து அடங்கும் சீற்றத்தையும் நன்றாகவே உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இதுபோன்ற நபர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டுமென்று அவன் கேட்டு செய்ததில்லை. இவர் நல்லபடியாக ஊர் போய் சேர்ந்துவிட்டால் போதும் என்று நினைத்தவனாக சட்டையிலிருந்த இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் திணித்தான். அவனால் அவருக்கு உடனே செய்துவிட முடிந்த உதவி அதுதான்.
அவர் கொஞ்சம் கூச்சப்பட்டுக்கொண்டே, “நா.. மரைக்கா தெரு காதரு வூட்டுக்கு வந்தேன்.. எங்க உம்மாவோட சாச்சி பேரன். வூட்ல யாருமில்ல போல. ரெண்டு மூணு முற தம்பி தம்பின்னு கூப்ட்டு பாத்தேன். யாரும் வர்ற மாரி தெரியல. கொஞ்ச நேரம் நின்னுப் பாத்துட்டு கெளம்பி வந்துட்டேன்..” அதே பல்லவியை மறுபடியும் ஆரம்பித்தாலும் அதோடு இப்போது கொஞ்சம் கூடுதலாக “பிறத்தியில எங்கேயும் போய் கை நீட்டி நிண்டதில்ல. நாங்க நல்லா வாழ்ந்த குடும்பம் தம்பி..!” குரல் தழுதழுக்க குறுகினார். அவர் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தயடுத்து, மனதளவிலும் அவர் ஏதோ பாதிக்கப்பட்டிருந்ததையும் அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அவர் கொண்டு வந்திருந்த மஞ்சப்பையிலிருந்து ஓரங்கள் மடிந்திருந்த மருந்துச் சிட்டைகள், அட்டைகள், பரிசோதனைச் சீட்டு என இவனிடம் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி அவருக்கு வயிற்றில் பிரச்சனை இருப்பதாகவும், மருத்துவர் அதற்காக வேண்டி ஸ்கேன் செய்து வரும்படி குறிப்பெழுதி தந்ததாகவும், அதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லை என்பதையும் அதற்காகத்தான் தனது ஒன்றுவிட்ட தம்பியைப் பார்க்க வந்ததாகவும், காரிய காரணங்கள் அனைத்தையும் இடையிடையே எச்சிலை விழுங்கிய வண்ணம் சொல்லி முடித்தார். செல்லதுரை கையும் மனமும் மறுபடியும் அவருக்கு உதவி செய்ய பரபரக்கவே மீண்டும் சட்டைப்பையைத் துழாவி மிச்சமிருந்த ஐநூறு சில்லறையை அவரிடம் நீட்டினான்.
ஆனால் அதைப் பெற்றுக்கொண்டு வெளிப்படுத்திய, அவருடைய அந்த சிரிப்பு விசித்திரமாக இருந்தது. அதுவரை அவரிடம் தோய்ந்திருந்த சோர்வு, வெளிப்பட்ட குரல் நடுக்கமெல்லாம் போய்,”ஆயிரத்து அறுநூறு வருமாம் தம்பி..!” என்று உரிமையான தோரணையில் சொன்னதையடுத்து, கொஞ்சம் குழம்பினாலும், ஒரு வேளை தன்னை அவர் ஏமாற்றினாலும், அவரின் வயதை கருத்தில் கொண்டுபடி தன்னால் அவருக்கு பிரயோஜமா ஏதும் நடந்தால் சரிதான் என்று நினைத்துக்கொண்டே ‘கொஞ்சம் இருங்க!’ என்று வீட்டிற்குள் ஓடினான். அறையிலிருந்த மணிபர்சில் இன்னும் இரண்டு ஐநூறு தாள்களை உருவிக்கொண்டு, அது தனது தாய்க்கு ஏதும் தெரிந்திடாத வண்ணம் திருட்டுப் பூனை போல் வந்து இரகசியமாக கொடுப்பது போல கொடுத்தான். அவரும் குறிப்பறிந்து வாங்கியவுடன், படக்கென சட்டைப்பையில் திணித்துக்கொண்டார்.
ஆனால் அவளுக்கும் ஏதோ மனதிற்குப் பட்டிருக்க வேண்டும். என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது என வந்து எட்டிப்பார்க்கவும் தொழுகைக்காக பாங்கு சொல்லவும் சரியாக இருந்தது. மேல் துண்டால் தலையில் முக்காடு போட்ட வண்ணம் தொழுகைக்கான அழைப்போசை முடியும்வரையில் அமைதிக் காத்தவள், முடிந்ததும் என்ன நடக்கிறது என்பது போல வந்து விசாரித்தாள்.
ஆனால் அவளுக்கு கேள்விகளை காதாத்தாமல், “இவ்வொளுக்கு சாப்பாடு குடுத்துரும்மா!” என்க அவளும் மகிழ்வோடு தலையாட்டினாள். ஏனென்றால் இவனுடைய இந்த ஈகை குணமெல்லாம் அவளிடமிருந்து வந்ததுதானே! அதுவும் யாரும் சாப்பாடு என்று கேட்டு வந்தால் மற்ற வீடுகள் போலில்லாமல், இல்லை என்று சொல்லாமல் வீட்டிலுள்ளவர்கள் உண்பது போல் நல்ல உணவைதான் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது எப்போதும் கடைப்பிடித்து வரும் இவனுடைய கூடுதல் கட்டளையும் கூட.
“இப்பதானே ளுஹருக்கு பாங்கு சொல்லியிருக்காங்க நான் கொஞ்ச நேரஜெண்டு வரேந்த்தா!” என்று அவர் கிளம்ப எத்தனிக்க, “எங்க போறீங்க, இங்கேயே இருங்க உங்களாலதான் சரியா நடக்க முடியலல்ல! நான் தொழுதுட்டு வந்தததும் சாப்புடலாம். அப்றம் நானே வந்து உங்கள பஸ்ஸேத்தி விட்றேன்” என்று அவரை இருக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கினாலும் அவர் கேட்பது போலில்லை.
“நா.. இங்கிருக்கிருக்கிற மரைக்கா தெரு காதரு வூட்டுக்கு வந்தேன்.. எங்க உம்மாவோட சாச்சி பேரன் எனக்கும் அவ்வொ உம்மா சாச்சிதான். வூட்ல யாருமில்ல போல. ரெண்டு மூணு முற தம்பி தம்பின்னு கூப்ட்டு பாத்தேன். நா கூப்ட்ட சத்தம் ஏதும் கேக்கல. கொஞ்ச நேரம் நின்னுப் பாத்துட்டு கெளம்பி வந்துட்டேன்..” என்று மீண்டும் அதே மாதிரி பேசத் தொடங்கினார்.
அவனுக்கு குபுக்கென்று கண்ணீர் கோர்த்துக்கொண்டது! ஏதோ யோசனை தோன்றவே, குரலை சற்று செறுமிக்கொண்டு, “சரி வாங்க உங்கள காதர் அண்ண வீட்டுக்கிட்ட விட்டுட்டு போறேன். பள்ளியிருந்து வரும்போது ஏத்திக்கிறேன் என்று சொன்னதையும் மறுத்தபடி வீட்டிலிருந்து வெளியேறினார்.
‘அவர்தான் போறேன்னு சொல்றாரே விடுவேன்..!’ என்று அவனது தாயும் கொஞ்சம் முறைக்க ஆரம்பித்தாள். தொழுகைக்கும் நேரமாகிவிட்டதால், அவர் போக்கிற்கே அவரை விட்டுவிட்டு எல்லாவற்றிற்கும் படைத்தவன் இருக்கிறான் என்று பைக்கை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு விரசாக் கிளம்பினான். இருப்பினும் அவனுடைய கவனமெல்லாம் அவர் நடந்து செல்லும் பாதையையே கொஞ்ச தூரம் வரை மையம் கொண்டிருந்தது.
பள்ளிவாசலை எட்டும் வரை அவனையறியாமல் கண்ணீர் சுரந்துக் கொண்டேயிருந்தது. பொதுவாக இதுமாதிரி ஆட்களுக்கு உதவிகள் ஏதும் செய்துவிட்டால் கண்ணீர் பெருகும்தான், அதையொட்டி மனதில் பெருமை ஏதும் கசடாகப் படிந்துவிட கூடாது என்று சட்டென இறைவனிடம் முறையிட்டுவிட்டு அதிலிருந்து மீண்டுவர எண்ணங்களை திசைத் திருப்ப முயற்சிப்பான். ஆனால் இன்று அவனுடைய உதடுகள் விம்மும் அளவிற்கு அழுகை பெருக்கெடுப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அவனுக்கு அம்மாப்பொண்ணு மாமியின் ஞாபகம் வந்துவிட்டது!
அவள் இவனுடைய தாய்க்கு ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி. அவளும் இப்படித்தான் பல வருடங்கள் கழித்து, பொழுதொட்டு ஒருநாள் வாசல் கதவை திடீரெனத் தட்டினாள். அவளைக் கண்ட இவனும் இவனுடைய தாய் மெகருன்னிசாவும் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்!
ஏனென்றால் அவளை அதற்குமுன் வாய் நிறைய சிரிப்போடும், கைநிறைய வளையல்களோடும், சட்டையையும் கழுத்தையும் இணைப்பது போல பட்டை பட்டையாய் நகைகளோடும், ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அவளை ஒரு செல்வ சீமாட்டியை போலத்தான் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் அன்று உடம்பெல்லாம் ஒட்டிப்போய், கறுத்து, வயதுக்கு மீறிய வயோதிகத்தோடு கண்களில் ஒரு வித தேடுதலோடு வந்திருந்தாள். கழுத்தில் ஒரே ஒரு தடித்த சங்கிலியோடு அந்த சிரிப்பு மட்டும் மிச்சமிருந்தது. அவளை எப்போதும் போல வரவேற்கும் அளவிற்கு மனமும் அவள் மீதான பிரியமும் மலை உச்சி குவிந்து கிடந்தாலும், அவளை வைத்து உபசரிக்கும் அளவிற்கு அன்றைய நிலையில் போதுமான வசதிகள் இல்லை. மேலும் வரவேற்பை மீறிய ஏதோ ஒரு சொல்லமுடியாத தயக்கமும் இருவருக்குள்ளும் குடி கொண்டது.
“வழி நெடுக எங்க மச்சி வூடு எங்க? எங்க மச்சி வூடு எங்கன்னு கேட்டுக்கிட்டே வந்தேன்டீ.. யாருக்கும் என்னை வெளங்கல! இந்த ஊருல எல்லார்ட்டையும் எப்படி ஒறவாடியிருப்பேன்! ஒருத்திக்கு கூடவா என்னை இன்னாருன்னு தெரியல!” என்று மூக்கில் விரலை வைத்தபடி இடுப்பை வளைத்துக்கொண்டு இன்னொரு கையை அதன்மீது தாங்கிக்கொண்டாள்.
“வா மச்சி.. வா..! ஏன் வாசல்லயே நிண்டுக்கிட்டு இருக்கா!” என்று மெகருன்னிஸா அவளை வீட்டிற்குள் அழைத்தாலும், உள்ளே நுழைந்தவள் முற்றத்திலேயே நின்றுக்கொண்டாள். அந்தி வேறு கறுத்துக்கொண்டிருந்தது.
திரும்பவும் “வர்ற வழியெல்லாம் எங்க மச்சி வூடு எங்க? எங்க மச்சி வூடு எங்கன்னு கேட்டா… இந்த ஊருல ஒருத்திக்கும் என்ன வெளங்கலயே.!” அங்கலாயித்தபடி மறுபடியும் அதை போல் மூக்கில் விரலை வைத்துக்கொண்டாள்.
இயல்பிற்கு மீறிய அவளுடைய அது போன்ற அசாதாரண செய்கைகளும் பேச்சுகளும் இருவருக்கும் கொஞ்ச நேரம் எதுவும் புரிபடாமலே இருந்தன என்று சொல்லிவிட முடியாது. அவள் மனநிலையில் ஏதோ கோளாறு உள்ளதை மட்டும் விளங்கிக்கொண்டனர்.
“சரி மச்சி அதெல்லாம் இருக்கட்டும். எங்கிருந்து வர்றா?” என்று மெகருன்னிசா கேட்க, “ஏர்வாடிக்கு போயி படுத்துக்கெடந்துட்டு வரலாம்னு கெளம்புனேடீ நேத்து.. வழில ராவுத்தரப்பா பள்ளியிலேயே எறங்கிட்டேன். அப்புறம் அங்குனேயே ஒரு ராவு தங்கிட்டு ஊருக்கு போவலாம்னு ஏறி உக்காந்தா.. ஓ நெனப்பு வந்துருச்சி! அதான் மணாக்குடில எறங்காம நேரா இங்க வந்துட்டேன்!” அவள் ஒரு சின்னப்பிள்ளையை போல சொல்லச் சொல்ல சிரிப்பும் லேசான கவலையும் இருவரையும் பற்றிக்கொள்ளத் தொடங்கிற்று.
“துப்பட்டிய கொடியில போட்டுட்டு, வூட்டுக்குள்ள வந்து செத்த உக்காரு வா! ஏன் வந்ததுலேர்ந்து நிண்டுக்கிட்டே இருக்கா?” மெகருன்னிஸா சற்று குரலை உயர்த்தி உரிமையோடு அதட்டினாலும் அவள் காதில் வாங்கிக் கொள்வதாகவே தெரியவில்லை.
“எங்க மச்சி வூடு எங்க? எங்க மச்சி வூடு எங்க..ன்னு கேட்டேனே எவளும் சொன்னாளா..!”
“சரி மச்சி அதான் வந்துட்டியே.. இருந்துட்டு காலைல போ. தம்பி வந்து பஸ்ஸேத்தி வுடுவான்” என்று லாவகமா தனது தாய் அவளின் குறிப்புகளை அறிந்து, சீக்கிரமே அனுப்பி வைக்க திட்டமிடுவதை செல்லதுரை உணர்ந்தாலும், அது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அம்மாப்பொண்ணு மாமி அங்கே குறைந்தது இரண்டு மூன்று நாளாவது தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது அவனது விருப்பம் என்பதை விட பல நாள் ஏக்கம்! ஏனென்றால் நல்லா இருந்த காலத்தில், அவள் வீட்டிற்கு இவர்கள் சென்று வந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் செல்லதுரையை அப்படி தாங்கி தாங்கி கவனிருத்திருக்கிறாள். அதையெல்லாம் அவனால் எளிதில் மறந்துவிட முடியுமா? அல்லது அம்மாப்பொண்ணை இந்த நிலைமையில் கண்டப்பிறகும் அவளை, வந்தது போல் அப்படியே திருப்பி அனுப்பி வைத்திட மனம்தான் அவ்வளவு எளிதில் இடம் கொடுக்குமா!
அவளை நினைவு கூற எத்தனையோ சம்பவங்கள் இருந்தாலும். அவளை சார்ந்த ஞாபகங்களின் ஆரம்பப்புள்ளி ஒரு குறிப்பிட்ட நிகழ்விலிருந்தே அல்லது பயணத்திருந்திலிருந்தே தொடங்கும்.
அப்போது அவனுக்கு ஐந்தாறு வயது இருக்கும். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அம்மாப்பொண்ணு வீட்டிற்கு செல்வது மெகருன்னிசாவிற்கு வழக்கமாக இருந்து வந்தது. மூத்த மகன்கள் இருவரையும் சம்பாதிக்க கடைகளுக்கு அனுப்பிவிட்டதால், இவனை மட்டும் கூட்டிக்கொண்டு தான் போகும் இடங்களுக்கெல்லாம் திரிய வேண்டிய நிர்பந்தம்.
வெள்ளாற்றுப் பாலம் நெருங்க நெருங்க செல்லதுரைக்கு எழுந்த பரவசங்களுக்கு கால்கொள்ளவில்லை. தண்ணீருக்கு மேல் பஸ் போவது போல் இருந்தது. எப்போதும்போல மணமேல்குடி சந்தைப்பேட்டையில் இறங்கி நடக்கத் தொடங்க, “ம்மா.. மங்கா.. மங்கா..!” என்று மாம்பழங்கள் குவிக்கப்பட்டிருந்த வண்டியைக் கண்டுக்கொண்டுவிட்டு வாங்கிக்கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
“ஏண்டா கழிச்சல்ல போவா பஸ்ஸ வுட்டு எறங்கின ஒடனே என் உசுர வாங்குறா!” என்று அலுத்துக்கொண்டாலும், வாங்கிக் கொடுக்கும் நோக்கத்தோடு அந்த தள்ளுவண்டியை நோக்கி கூட்டிச் சென்றாள். கூறு எவ்வளவு விசாரித்துவிட்டு வேர்வை ஊறிய மணி பர்ஸிலிருந்து பத்து ரூபாய் நோட்டை கொடுத்து, நான்கு நான்கு பழங்களாக கட்டப்பட்ட கூறு இரண்டை தனது வலைக்கூடையில் வாங்கிப் போட்டுக்கொண்டாள்.
“ம்மா.. ம்மா.. எனக்கு வாங்கிக் குடும்மா!”
“கொள்ளையில போறவனே ஏண்டா இப்புடி புடிச்சிக்கிட்டு தொங்குறா!” சத்தம் போட்டவளாய், வண்டிக்காரனிடம் அம்பது காசுக்கு அனுங்காத ஒரு சின்ன பழத்தை காட்டி, கொடுக்கச் சொன்னாள். வண்டிக்காரன் இவள் முகத்தைக் கூட பார்க்காமல் தரையை வெறித்தபடி ஒரு பழத்தை எடுத்து விருப்பம் இல்லாதவன் போல நீட்டினான்.
ஊரு வடக்கு அம்மாப்பட்டினம் என்றாலும், பாதை என்னவோ பஸ் ஸ்டாப்பிலிருந்து கிழக்கே நோக்கித்தான் போகும்.
கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். வழி நெடுக ஏதாவது ஒரு கதையையோ சம்பவத்தையோ சொல்லிக்கொண்டும், கேள்விக்கேட்டுக்கொண்டும், பதில் சொல்லிக்கொண்டும் இப்படி வரும் நேரங்களில் எப்படியோ அலுப்பு தெரியாமல் இவனை நடக்க வைத்துவிடுவாள்.
அன்று அவ்வாறு சென்றுக் கொண்டிருந்தபோது அவன் கைகளிருந்தும் வாயிலிருந்தும் மாம்பழச்சாறு வழிந்ததில், கன்னங்கள், கழுத்து, சட்டையெல்லாம் நாரும் கறையும் படிந்து பாழாகிவிட்டன. மறுபடியும் திட்டு. இத்தனைக்கும் பாதி தூரம்தான் நடந்திருப்பார்கள். அழ ஆரம்பித்துவிட்டான். அதற்கும் திட்டு கிடைத்தது.
சைக்கிளிலோ, மோட்டாரிலோ ஆம்பிளை யாரும் வருவதாகவும் தெரியவில்லை. அப்படி யாரும் செல்லும்பட்சத்தில், இவனை மட்டும் ஏற்றிவிட்டு இன்னார் வீட்டில் விடுமாறு சொன்னால் போதும் விட்டுவிடுவார்கள். அன்று பாதையிலிருந்த ஒரு வேலியோரம் செம்பருத்திப்பூச்செடியில் இங்கும் அங்குமாய் நிறைய பூத்துக் குலுங்கின. சமயோஜிதமாய் அதைக் காட்டி ‘அங்க பாருவேன்!’ என்றதுதான் கொஞ்சம் அடங்கினான்.
ஆனால் பறித்துக் கேட்டான். அவள் உயரத்திற்கு அது இன்னும் உயரம். ‘இப்ப எப்டி பறிக்கிறது?’ என்று கோபப்பட்டவள் அவனை மறுபடியும் திட்ட நினைத்தாலும், மீண்டும் வீம்புக்கு அழுதாலோ மண்ணில் உருண்டாலோ, புரள ஆரம்பித்தாலோ என்ன செய்வதென்று பயந்தவளாக சுற்றும் முற்றும் தேட, நல்ல வேளையாக வேலியோரமாவே ஒரு நல்ல சுள்ளிக்கம்பும் கிடந்தது.
அதைக் கொண்டு தட்டுத் தடுமாறி ஒரு பூவை வளைத்து பறித்துக் கொடுத்தபின்தான், அதை பிடித்து, காம்பை விரல்களால் சுற்றிச் சுற்றி ரசித்தபடி சத்தமில்லாமல் நடக்கலானான்.
வடக்கம்மாப்பட்டினம் பள்ளிவாசல் குளம் நெருங்க நெருங்கதான் இவளுக்கும் கொஞ்சம் உயிர் வந்தது. அதை அடுத்து கொஞ்ச தூரம் போனால் தெரு வந்துவிடும், அம்மாப்பொண்ணு வீடும் வந்துவிடும் என மனதிற்குள் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
பள்ளிவாசல் சுற்றுத்திண்ணையில் அங்குமிங்கும் ஆம்பிளைகள் அமர்ந்து கொண்டு மீன்பிடி வலைகளிலிருந்து சிக்கிக்கொண்டிருந்த பாசியிலைகளையும், சின்ன சின்ன முள்சங்குகளையும் பிரித்தெடுக்கிக்கொண்டும், பிய்ந்த வலைகளை தைத்துக்கொண்டுமிருந்தார்கள்.
அதையொட்டியே கிடத்தப்பட்டிருந்த உடைந்த வத்தையின் பக்கம் ஓடிச்சென்று, ஏறி விளையாட செல்லதுரை விரையவே, மெகருன்னிசாவால் அவனை பிடித்து நிறுத்த முடியவில்லை.
சத்தம் போட்டு அவனை கூப்பிடவும், அங்கே ஆம்பிள்ளைகள் வேறு இருக்கிறார்களே என்று வெட்கினாள். நல்லவேளை இவர்களை இனம் கண்டுக்கொண்டுவிட்டு, எதார்த்தமாக அங்கே அமர்ந்திருந்த அம்மா பொண்ணுவோட கணவன் ராஜா முகமது எழுந்து வந்து, செல்ல துரையை வாரிக் கொண்டு, “வாடா மாப்ள!” என்று பாசம் பொங்க முத்தம் கொஞ்சி தோளில் ஏற்றிக்கொண்டான்.
“தங்கச்சி, நீ வூட்டுக்கு போம்மா! நான் மாப்ளயோட வாரேன்” சிரித்துக்கொண்டே ராஜா முகமது சொல்ல, “சரிண்ணே.. அவன் சட்டையெல்லாம் பாருங்க மாம்பழத்த அப்பிக்கிட்டு நிக்கிறான், நீங்க போட்டு பிரட்டிகாதீய!” என்றவளாய் விரசாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
காலையில் துலக்கியும் துலக்காமல் விட்ட பாத்திர பண்டங்களை பசியாறல் எல்லாம் முடிந்த கையோடு மீண்டும் உட்கார்ந்து துலக்கிக் கொண்டிருந்த அம்மா பொண்ணைக் கண்ட ஆனந்தப் பெருக்கில்,
“மச்சி.. நல்லாருக்கியா!” என்று மெகருன்னிசா குரல் கொடுத்தாள்.
ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அம்மாப்பொண்ணு, இவர்களை கண்டா பூரிப்பில் அண்ணாந்துப் பார்த்துக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள்.
“மெகரு..! வா வா நல்லாருக்கியா? புள்ள எங்க? தனியாதான் வந்தியோ? அண்ணேல்லாம் நல்லாருக்காகளா?” என்றபடி அருகே வந்தவள், இரு முழங்கைகளையும் பற்றிக்கொண்டு, மீண்டும் எல்லாரும் நல்லாருக்கியல்ல? அவளது தலையை வளைத்து நெற்றியில் முத்தம் வைத்தாள்.
அம்மாப்பொண்ணுவின் இந்த அதீத பாசமெல்லாம் மெகருக்கு புதிதில்லை.
“எல்லாரும் நல்லாருக்கோம் மச்சி.. நீ, அண்ணே, பயலுவோ, பானு எல்லாம் நல்லா இருக்கீயளா?”
“எல்லாரும் நல்லாருக்கோம். ஆமா சின்னவன் எங்கேடி?”
“அதை ஏங் கேக்குறா.. பள்ளியாச பக்கம் வந்துக்கிட்டு இருந்தோமா.. இவன் பாட்டுக்கு அங்கன இருந்த வத்தையில போய் ஏறிக்கிட்டான். நல்லவேளை அண்ண அங்கேதான் இருந்திச்சி போல, எங்கள கண்டுக்கிட்டு ஓடி வந்து, போம்மா நான் இவனை கூட்டிக்கிட்டு வர்றேன் சொன்ன அப்புறம்தான் எனக்கு் ‘அல்லாஹ்’ன்னு இருந்திச்சி! இல்லேன்னா நானா இவங்கூட அந்த ஆம்பிள கூட்டத்துல மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க முடியிம்!” என்று அவள் தான்பட்ட பிரயாசைகளை சொன்னாலும், அதெல்லாம் அம்மாப்பொண்ணுவுடைய காதுகளுக்கு எட்டவேயில்லை! செல்லதுரை வந்திருக்கிறான் என்பதே அவளது காதுகளையும் மனதையும் முற்றிலும் நிறைந்துவிட்டது!
ஐந்து விரல்களிலும் அப்பளப்பொறிக் குழல்களை மாட்டிக்கொண்டும் இன்னொரு கையில் அவித்த மரவல்லிக் கிழங்குத் துண்டொன்றைப் பற்றிக்கொண்டும் ராஜாமுது மாமாவோடு செல்லதுரை படலைத் திறந்துக் கொண்டு முற்றத்திற்குள் நுழைய, “என் ஈரகுலையே..!” என்று வேலையாக அடுப்படியில் இருந்த அம்மாப்பொண்ணு, அவனை ஓடிப்போய் வாரி இடுப்பில் இடிக்கிக்கொண்டு, உச்சியை இழுத்து முகர்ந்து, உச்சி, கன்னமென எல்லா இடங்களிலும் பேய் போல முத்தமழைப் பொழிந்தாள்.
“என் தங்க வாப்பா மாமிய பாக்க வந்தியாளோ!” என்று மனசெல்லாம் றெக்கையடித்துக் கொண்டு மறுபடியும் இறுக்கமாய் தோளுக்கும் கழுத்திற்கும் இடையில் இடைவெளியே இல்லாமல் முத்தங்கள் பதித்தாள். இன்று நினைத்தாலும் கூட செல்லதுரைக்கு அந்த ஈரமும் வெப்பமும் அந்த இடங்களில் எழுந்து எழுந்து மறையும்!
சொல்லப்போனால் அங்கு செல்லும் வேளைகளில் செல்லதுரைக்கு தனது உம்மா விட அம்மாபொண்ணு மாமியே அவன் மீது பிரியமாக நடந்து கொள்வது போன்று தோன்றும். அவளுடைய மகள் பானுவையும் இவனுக்கு பிடிக்கும். மெகருக்கு போல, அம்மாப் பொண்ணுடைய மூத்த ஆண் மக்களும் பிழைப்பிற்கு கடைகளுக்கு சென்றுவிட்டதால் மாமி மகளான பானு மட்டும்தான் இவன் அங்கு செல்லும் நேரங்களில் முழு நேரக்கூட்டு.
அன்று ஒரு நாள் மட்டும் தங்கிவிட்டு வரும் திட்டத்தோடுதான் மெகருன்னிசா அங்கு சென்றிருந்தாள். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்த்தபோதுதான் தெரிந்தது செல்லதுரைக்கு அம்மை போட்டிருந்தது. மெகருன்னிசாவிற்கு அங்கு தங்கவெல்லாம் நாட்டமில்லை. பயம் ஒரு புறம் இருந்தாலும், பிள்ளையைக் கூட்டிக்கொண்டு ஊருக்கு வந்துவிடவே நினைத்தாள்.
ஆனால் அம்மாப்பொண்ணு விடவில்லை. ‘அம்மா போட்டப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு எப்படி நீ போவா? எனக்கு பயமாக இருக்கு, வேணாம். நீ வேணும்னா போ, நான் புள்ளைய பாத்துக்குறேன், தலைக்கு தண்ணீ ஊத்துனப்புறம் வந்து கூட்டிக்கிட்டு போ!’ என அவள் அதட்டல் போட, மெகருன்னிசாவிற்கு வேறு வழி இருக்கவில்லை.
கவுரவம் பார்த்து பிள்ளையை வெளியே கூட்டிக்கிட்டு வந்தால் நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிவிட்டால் என்ன செய்வதென்று அரை மனசோடு, அந்த அன்னைக்கு சாயங்காலம் மட்டும் இருந்துவிட்டு, அவனை அம்மாப்பொண்ணுவுடைய பொறுப்பிலேயே விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அம்மாப்பொண்ணு, தனியா அவனுக்கென படுக்கையை தயார் செய்தாள். அதில் வேப்பிலைகளைக் கொட்டி மெத்தை போல் பறத்தி, வாசலிலும் ஒரு கொத்தை பறித்துத் தொங்கவிட்டாள். முதல் ஓரிரு நாட்கள் அவ்வளவு சிரமமில்லை என்றாலும் அப்புறம் அவனுக்கு தோல் எரிவு, வாந்தி என கொஞ்சம் கொஞ்சமாக அவஸ்தைகள் தொடங்க ஆரம்பித்தன.
ஆனால் அவளளவில் எந்த சிரமமும் பாராது அவனுக்கு தேவையான அத்தனை பக்குவங்களையும் செய்தாள். அதிலொரு நாள் மடியில் வைத்துக்கொண்டு கஞ்சி தீத்திவிடும்போது, சடாரென வாந்தி எடுத்துவிட்டான். அவள் நெஞ்சிலிருந்து மடிவரை ஆங்காங்கே சோறும் சளியுமா வாந்தி அப்பி எல்லாவற்றையும் நாற்றமாக்கிவிட்டது.
அப்போதும் கூட ‘புள்ள, புள்ள!’ என்று தாங்கலுக்கு, இவன் நெற்றியில் கை வைத்து ‘எடு வாப்பா, எடு வாப்பா!” என்று வந்த வாந்தியை முழுசா எடுக்க வைத்தாள்.
ஒரு தாய் போல அவன் சிரமப்படும் ஒவ்வொரு நொடியிலும் ஏந்திப்பிடித்தாள். அந்த நேரத்தில் அதுவே மெகருன்னிசா வாக இருந்திருந்தால் துணிமணி, மடி என்று எல்லாவற்றிலும் வாந்தி எடுத்து வைத்தற்கும் அதற்கும் கொஞ்சமாவது இவன் இயலாமையை சொல்லி அலுத்து சலித்துக்கொண்டிருப்பாள்.
ஆனாலும் பெற்றவளாச்சே, அவளும் தன்னுடைய பிள்ளையை கவலைப்பட்டுக்கொண்டு இரண்டு நாளைக்கு ஒருமுறை மனசு கேட்காமல் வந்து வந்துப் பார்த்துக்கொண்டுதான் சென்றுக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் அந்த நாட்களில் செல்லத்துரையின் மனதில் அம்மாப்பொண்ணு மாமியே அதிகம் பதிந்துபோனாள்.
எழுந்ததிலிருந்து உறங்கும் வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தாள். அவளும் அவனை போல வெறும் சுடு கஞ்சியைத்தான் குடித்தாள். ‘புள்ள இப்புடி தெம்பில்லாம கிடக்குறானே!’ என்று பதறி அப்பப்ப பால் காய்ச்சியும் கொடுப்பாள். ஆனால் இவனுக்கு வெல்லாது, வாய்ப்பக்கம் குவளையைக் கொண்டு சென்றாலே குமட்டிக்கொண்டுதான் வரும். எப்படியோ இவனை வைத்து இரு வாரங்கள் சமாளித்து ஒரு வழியாக தெம்பாக்கி விட்டாள்.
அம்மை முழுதாக இறங்கியவுடன் வேப்பிலையையும் கொஞ்சம் மஞ்சலையும் நன்றாக மை போல அரைத்து, உடம்பெல்லாம் சீராகத் தேய்த்து தேய்த்துக் குளிப்பாட்டி விட்டாள். அன்னைக்கு அருகில் மெகருன்னிசாவும் இருந்திருந்தாலும், அவன் மனதிலும் கண்களிலும் முழுக்க அம்மாப் பொண்ணே முழுதாக நிறைந்திருந்தாள். மருந்து கூட மெகருன்னிசாவை தொட விடவில்லை. இத்தனைக்கும் இரு குடும்பங்களும் ஒன்றுவிட்ட சொந்தம்தான்.
அன்றைய தினம் மத்தியானமே பிள்ளையை வீட்டிற்கு கூட்டி வர நினைத்தவள், வேப்பிலைக் குளியலுக்கு அதற்கும் அவனுக்கு நன்றாக நித்திரை வரவே, கிளம்ப சாயங்காலம் ஆகிவிட்டது. முடியாம கிடந்தப் பிள்ளையென்று அன்று வண்டி பிடித்துத்தான் இருவரையும் பேருந்து ஏற மணமேல்குடி வரை அனுப்பி வைத்தாள்.
அதற்கு அப்புறம் அம்மாப்பொண்ணு வீட்டிற்கு எத்தனையோ போக்குவரத்து! அவனைப் பொறுத்த வரை உறவுகளில் அம்மாப் பொண்ணு மாமியை விட பாசத்தில் அடித்துக்கொள்ள அன்றைய தினம் அவனுக்கு வேறு அமையவில்லை.
இவனுடைய அண்ணன்களைக் காட்டிலும் இவனுக்கு பத்து, பதினைந்து வருடங்கள் என வயது மிகவும் குறைவு. அவர்களைப் போல இவனையும் சிறுவயதிலேயே கடை கண்ணிக்கு அனுப்பவில்லை. ஊரில் அதிகமான பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகத் தொடங்கவே இவனையும் படிக்க வைக்க நினைத்தாள் மெகருன்னிஸா.
ஆரம்பத்தில் அந்த முடிவு அண்ணன்மார்களுக்கு சந்தோசமாகவே இருந்தாலும். அவர்களுக்கு கல்யாணம், குடும்பம் என்று ஆகிவிட்டப்பிறகு அதுவே, வீட்டில் உள்ளூரப் புகையும் பிரச்சனையும் வர காரணமாகவும் அமைந்துப்போனது.
நகையை அடகு வைத்து இவனை கல்லூரியில் சேர்த்ததெல்லாம் மேலும் பிரச்சனைகளை பூதகரமாக்கவே, இரண்டு அண்ணன்மார்களும் ஒரு கட்டத்தில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். அதை புத்திசாலித்தனம் என கொள்வதா இல்லை பொறாமை என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் அதையெல்லாம் உந்துதலாக வைத்துக்கொண்டு செல்லத்துரை கவனம் முழுவதையும் படிப்பில் காட்டி வந்தான்.
இங்கேதான் ஒன்று சொல்ல வேண்டும், கல்லூரிக்கட்டணத்திற்காக மெகருன்னிஸா அங்குமிங்கும் அலைந்த போது, அம்மாபொண்ணுவிடமும் ஒரு உரிமையில் உதவிக் கேட்டுச் சென்றாள். அது தனது மகன் ஒருவனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க அவர்களும் ஏற்பாடு செய்துக்கொண்டிருந்த சமயம்.
வந்த மருமகளை வெறுங்கையோடும் கழுத்தோடும் பார்க்க அவளுக்கு விருப்பமில்லாத காரணத்தினால் ஏஜெண்டிடம் பணம் கட்ட வேண்டி தன்னிடமிருந்த ஒன்றிரெண்டு நகைகள் நீங்கலாக மற்றவைகளை அவளும் அடகில் வைக்க வேண்டிய கட்டாயம். கொஞ்சம் நிர்பந்த்திருந்தால் இருந்ததையும் இவளுக்காக கொடுத்திருப்பாள்தான்.
ஆனால் அன்று அவளுடைய கணவன் ராஜமுது என்ன மனநிலைமையில் இருந்தானோ, பட்டென ‘ஏன் வளந்த பயலை கடை கண்ணிக்கு அனுப்பாம, இப்புடி படிக்க வக்கிறேனு அங்க இங்க அலைஞ்சிக்கிட்டு, பக்கிரிசா வேசம் போட்டுக்கிட்டு இருக்கா!’ என்று கேட்டது சட்டென முகம் சுருங்கி, மெகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எப்போதும் அங்கே சென்றால் ஒருவேளை சோறு உண்டுவிட்டு வருபவள், அன்று மனசு தாளாமல் உடனே கிளம்பிவிட்டாள்.
அதற்கப்புறம் அம்மாப்பொண்ணு மச்சி, ராஜமுது அண்ணன் என்று அந்த வீட்டுப்பக்கமே மெகருன்னிசா தலை வைத்துப் படுக்கவில்லை. சொந்தபந்தங்களின் கல்யாண, மவுத்து வீடுகளில் அவர்களை எங்காவது காண நேர்ந்தாலும், ஆரம்ப காலங்களில் அம்மாபொண்ணிடம் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் முகம் கொடுத்து பேசி வந்தவள். அதையும் ஏனோ போக போக குறைத்துக் கொண்டாள்.
அவளுடைய மகள் பானுவின் கல்யாணத்திற்கு கூட அவர்கள் கூப்பிட்டு வந்தும், மெகருன்னிசா போகவில்லை.
தனது படிப்பிற்காக உதவிக்கெட்டு அம்மாப்பொண்ணு மாமி வீட்டிற்கு தனது தாய் சென்றது தெரிந்தாலும், மெகருன்னிசா அவர்களிடம் பேசாமல் இருந்ததெல்லாம் செல்ல துரைக்கு தெரியாது. கல்லூரியில் சேர்ந்துவிட்டப்பிறகு அவனுடைய வட்டமும் ஊர், உறவிலிருந்து வேறுபட தொடங்கியிருந்தது. ஏதாவது நல்லநாள் பெரியநாளில் மட்டும் ஊர்ப்பக்கம் எட்டிப்பார்த்தால்தான் உண்டு.
அத்தனை கஷ்டங்களிலும் படிப்பை எப்படியோ முடித்துவிட்டு ஓரிரு மாதங்கள் ஊரில் தந்திருந்த நாளொன்றில்தான் அம்மாப்பொண்ணு மெகருன்னிசாவையும் இவனையும் தேடிக்கொண்டு வந்தது. ஆத்திர அவசரத்திற்கு கூட பத்து ரூபா கையிலில்லாத சமயமது. அவளுக்கென சிறப்பாக செய்ய எதுவும் இருந்திருக்கவில்லை என்றாலும், அவர்களது நிலைமை அவளை இருந்து போகச் சொல்லும் அளவிற்கும் இல்லை. அப்போது இருந்த வீடு கூட அவ்வளவு வசதியில்லை.
செல்லதுரைக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. செல்லும் நேரங்களில் இவனை எப்படியெல்லாம் உறவு பாராட்டி, சீராட்டி, விருந்தளித்து மகிழ்ந்திருப்பாள்! இப்படி தடி மாடு போல வளர்ந்தும் அவளை இரண்டு நாட்கள் இருக்கச் சொல்ல இங்கே யார் நிலைமையும் சரியில்லையே என்று அன்றிரவு நீண்ட நேரம் மனஉளைச்சலுக்கு ஆளானான்.
மெகருன்னிசாவிடம் பேசியதையே பேசிக்கொண்டும், கேட்டதையே கேட்டுக்கொண்டும் முற்றத்தில் விரித்திருந்த பாயில் அங்குமிங்கும் புரண்டுக்கொண்டிருந்தவள் எத்தனை மணிக்கு அன்று நித்திரை கொண்டாள் எனத் தெரியவில்லை. ஆனால் இடைக்கிடை “பேசாம தூங்கு மச்சி.. தூங்கு மச்சி!” என்று மெகருன்னிசா அவளை உரிமையோடு அதட்டிக்கொண்டிருந்தது மட்டும் இவன் உறங்கும் வரை கேட்டுக்கொண்டேயிருந்தது.
அவளது கணவனுடைய மறைவிற்கு பிறகுதான் அவள் அப்படி ஆயிருக்க வேண்டும். அவ்வளவு விபரம் போதாதவளாக இருந்தததாலும் நில புலன்களையெல்லாம் கல்யாணமாகிவிட்ட பிள்ளைகளுக்கு கேட்ட மாதிரி எழுதிக் கொடுத்துவிட்டதும், இவள் மட்டும்தான் அந்த பூர்வீக வீட்டில் கவனிக்க ஆளில்லாமல் தனியொருத்தியாக இருந்துவருவதும், அவ்வப்போது அவளது சற்று சோர்வுக் குடிக்கொண்டிருந்த அவளது பேச்சில் விளங்கியது.
மகளைப் பற்றி மெகருன்னிஸா விசாரிக்க, “அவ்வொளுக்கு என்ன நல்லாதான் இருப்பாக!” என்று பெருமூச்சோடு சொன்னபோதே புரிந்தது, பிள்ளைகளின் ஆதரவு எல்லாம் கிட்டத்தட்ட குறைந்துப்போய்விட்டதென. இவனுக்கும் அவளை அதாவது பானுவை மண முடித்துக்கொள்ள ஒரு ரகசிய ஆசை இருந்து வந்தது. ஆனால் இங்குதான் வயதுக்கு வந்துவிட்டாலே பெண்மக்களை எங்காவது கட்டிக்கொடுத்துவிட்டு கடமை முடிந்ததென விரட்டிவிட்டிட நினைக்கிறார்களே. அதுதானே வழக்கம் என்று சப்பைக்கட்டு வேறு.
அன்று அவனுடைய சிந்தனைகள் எங்கெங்கோ சென்று எதையெதையோ புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளுடைய மகன்கள் செலவுக்கு காசு கொடுப்பது மட்டும் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. ஆனாலும் காசு பணம் கொடுத்துவிட்டால் மட்டும் கடமை முடிந்துவிடுமா தான் வசிக்கும் வீட்டில் பெற்றோர்களை வைத்து அழகுப் பார்ப்பது போன்று எதுவும் ஈடாகுமா?
“புள்ளைளுவோ தனியா உட்டுட்டதால அதுக்கு மனசு பேதலிச்ச மாதிரி இப்படி தெரியுது போல! எப்படி இருந்த மகராசி.!” என்று காலையில் மெகருன்னிஸா மகனிடம் அம்மாப்பொண்ணுக்காக அனுதாபப்பட்டு பேசினாலும், செல்லதுரையின் இரண்டு மூன்று நாள் தங்க வைக்கும் கோரிக்கை மட்டும் மெகருன்னிஸாவால் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை.
காலையிலேயே பஸ் ஏத்தி விட நினைத்தவள், இவனுடைய வற்புறுத்தலுக்காக மத்தியானம் வரை இருந்து சாப்பிட்டுப் போக சொன்னாள். இதில் இன்னொரு விசயமும் அடங்கியிருந்தது. அம்மாப்பொண்ணுக்கும் அங்கிருக்க விருப்பமில்லை.
சின்னப் பிள்ளையை போல ஒரு தர்காவின் பெயரைச் சொல்லி இன்றிரவு அங்கு சென்று, தான் படுத்து எந்திரிச்சாதான் எல்லாம் சரியாகும் என அவளாகவே ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்தவள் போல காலையில் எழுந்ததிலிருந்து மணிக்கு ஒரு முறை திரும்ப திரும்ப ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு ஆதரவு தேவைப்பட்டிருந்திருக்கிறது. அந்த ஆதரவு பெற்ற மக்களிடமோ, மற்ற மனிதர்களிடமோ சரியாக கிடைக்காத காரணத்தினால் இப்படி அவளுக்கு அவுலியாக்களை தேடி அலைவது ஒரு பழக்கமாகி, வழக்கமும் ஆகிவிட்டிருந்தது போல அவனுக்குப் புலப்பட்டது. யார் தடுத்தாலும், புத்தி சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அன்று அவளும் கூட இல்லை!
ஒரு வழியாக அவளை பஸ் ஏற்றிவிட்டு வந்துவிட்டாலும், அவள் பத்திரமாக தான் சேர வேண்டிய இடத்திற்கு சென்றுவிடுவாளா? நேரத்திற்கு சாப்பிடுவாளா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான், பாக்கெட்டைத் தடவியபடி, “ச்சே காசேதும் கொடுத்திருக்கலாமோ!” சட்டைப்பையை துழாவிப் பார்த்தான். அவனிடம் மூன்று நூறு ரூபாய் தாளும் ஐந்து பத்து ரூபாய் தாள்களும் இருந்தன.
அடுத்த நாள் அவன் வேலைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டி புரட்டி வைத்திருந்தாலும், அதைக் கொடுத்திருக்கவே நினைத்தான். அப்படி கொடுத்திருந்தாவது அதை வைத்து இரண்டு மூன்று நாட்கள் ஏதாவது வாங்கி சாப்பிட்டிருப்பாளே! கொடுக்க மறந்துவிட்டோமே! என்று தன்பிழையை நொந்துக்கொண்டான். இவளுக்கு ஏன் இந்த நிலைமை! நல்லா இருந்தவர்கள் கடைசி வரை நல்லாகவே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! என்று வீடு வரை அவளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்தான்.
“ம்மா அவ்வொளுக்கு காசு எதும் கொடுத்தியாம்மா?” வந்தவன், அவசர அவசரமாக ஒரு வித தவிப்போடும் ஏக்கத்தோடும் கேட்க, “செலவுக்கே காசில்லை.. நா எங்கிருந்துர்றா குடுக்குறது?” பெற்றவள் எதிர்கேள்விப் கேட்டதில் எல்லா பொறுப்பையும் இறைவனிடமே சாட்டிவிட்டு ஒரு சில நாட்கள் தனது அம்மாப்பொண்ணு மாமி ஞாபகமாகவே உழன்றான்.
அதற்கு பிறகு, இவனும் இந்தியாவில் அங்கு இங்கு கொஞ்ச காலம் வேலைப்பார்த்துவிட்டு வெளிநாட்டிற்கு வந்துவிட்டாலும், அவளைக் காணும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவேயில்லை. திருமணத்திற்காக அவளை அழைக்க சென்ற போதும் கூட அவள் வருவதற்கான எந்த முகாந்திரமும் தென்படவில்லை, வராமல் இருப்பதும் அன்று அவளிருந்த நிலைமைக்கு நல்லதாகவேப் பட்டது. ஏனென்றால் யாரையும் இன்னாரென்று சரியாக அவதானித்து பேசும் அளவிற்கு அவளது ஞாபகத்திறனோ, வல்லமையோ இல்லை.
அவளின் நிலைக்காக சில நொடிகளே அந்த அவசர கணத்தில் ஒதுக்கி வருந்தத்தான் அவனால் முடிந்தது. அதனால் தான் அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த ஏக்கமும் கவலையும் கூட எல்லாம் வெறும் மாயைதானா என்பது போல் அவனுக்குப் பட்டது. அன்று அவன் கண்ட ஒரே ஒரு ஆறுதலான விசயம், அவள் தனது மகளின் பராமரிப்பில் இருந்துவந்ததுதான்.
அதற்கப்புறம் எப்போதாவது அவளைப்பற்றிய சிந்தனைகள் வந்தாலும். ஒரு இயலாமையோடு அந்த நினைவைக் கடந்துவிடுவான். இதோ இன்று இந்த பெரியவரின் உடல்மொழிகளைக் கண்ட பிறகுதான் அவளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை மீண்டும் மேலோங்குகிறது.
தொழுதுவிட்டு வழியெல்லாம் அந்த பெரியவரை தேடிக்கொண்டு சற்று கவலையோடு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு, அவர் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சி, கொண்டிருந்த பெரும் சோர்வை பனிபோல் நீக்கியது.
அவர் முகத்தில் குடிக்கொண்டிருந்த மகிழ்ச்சியை தனது முகத்திலும் பளிச்சிடுவதைக் கண்டான். அவனுடைய கடந்த பயணங்களில் வராத சிந்தனை, ஞானோதயம் இதோ இன்று இவன் மனதில் முளைத்திருக்கிறது! இப்போது இன்னும் சற்று நேரத்தில் அவன் தனது அம்மாப்பொண்ணு மாமியை காணப்போகும் துடிப்பில் உள்ளான். சாப்பிட அழைக்கும் தனது தாயின் வார்த்தைகள் கூட அவன் காதில் விழவில்லை!
இந்த ஆவலும் வேகமும் மாறும் முன்னரே அம்மாப்பொண்ணு மாமியை சென்றுப் பார்த்து விட வேண்டுமென்ற முனைப்பில் அந்த பெரியவர் சாப்பிட்டு முடிக்கும் வரை காலில் றெக்கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்தான் செல்லதுரை.
***
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.
அருமையான கதை.
சிறப்பு.
வாழ்த்துகள் இத்ரீஷ்