இன்று நானும்,என்னவரும் சதுரகிரிதரிசனத்திற்காக, தாணிப்பாறை வழியாக நடக்க ஆரம்பித்திருந்தோம்.

               நேற்று முழுமதி நாள் ஆனதால் மக்கள் நெருக்கம்அதிகமாய் இருந்திருக்கும். ஆகவேதான் இன்று பயணம். அதிகாலையில் நடக்க ஆரம்பித்தால் காலை ஒன்பது மணிக்கெல்லாம் மலை உச்சியை அடையலாம், என்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில்இருந்து தகவல்.

               நான் எனது வேலையின் நிமித்தம் நிறையவே இந்த மலைக்கு வந்திருக்கிறேன். காவலர்கள் துணையுடன். ஏணிகள் உறுதியான காம்பு கயிறுகள் சகிதம் உதவியாள்களுடன். தண்ணிர் குடுவை உணவு பொட்டலங்கள் சுமக்க ஆள்கள் கூடவே வருவார்கள். மலை உச்சியில் இருக்கும் சுந்தர மகாலிங்கம் சங்கரலிங்கம் தரிசனம் செய்ததில்லை. எப்போதும் என் வேலைகள் ஒரு தற்கொலை மற்றும் கொலை சம்பந்தமாக இருந்ததால், கோயில் தரிசனம் செய்ய என் மனம் இடம் கொடுக்காது. இம்முறை நான் பதினைந்து நாட்கள் விரதமிருந்து ஆடி முழு நிலவுக்கு மறுநாள் இறை தரிசனத்திற்காக வந்துள்ளேன். பல்வேறு ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கும் அந்த இடம்; ரமணீயமாக இருந்தது. சித்தர்கள் அந்த மலையில் நடமாடுவதாக சொல்கிறார்கள். இரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு சித்தர்கள் வந்து சிவ பூஜை செய்யும் நேரம் ஆலயமணியின் நாவு தானே இயங்க; ஆலயமணியின் நாதம் தாணிப்பாறை அவுட் போஸ்ட் வரை கேட்கும் என்று, இன்ஸ்பெக்டர் உலகப்பன் என்னிடம் சொல்லியிருந்தார். இப்போதும் என் வரவை முன்னிட்டு எனக்காக காவலர்கள் நேற்றே மலைக்கு சென்றுவிட்டிருந்தனர்.

            ஒரு நீர் குடுவையும் பிரட் பொட்டலமும் இத்தனை கனமாகவா இருக்கும்! என்னால் தூக்க முடியாமல் அவரிடம் கொடுத்தேன். சற்று நேரம் கழித்து அவராலும் தூக்க இயலாது போக, என்ன செய்வது என்று யோசிக்க, என்னவர்,”வித்யா! இப்போதே காலை உணவை முடித்துக் கொள்ளலாம். கையில் பளு இல்லாமல் நடக்கலாம்” என்றார். கோயில் தரிசனம் ஆவதற்குள் உணவு அருந்த என் மனம் இடம் கொடுக்கவில்லை. மலையிலிருந்து முழுநிலவு தரிசனத்திற்கு வந்திருந்தவர்கள், கீழே இறங்கத் துவங்கியிருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு காலை உணவையும் நீர் குழுவையும் கொடுத்துவிடலாம் என்று நினைத்து தாய்- தந்தையுடன் வந்து கொண்டிருந்த சிறுவனிடம் ப்ரெட் பொட்டலத்தைக் கொடுத்து விட்டு, எங்கள் நீர் குடுவையில் இருந்த நீரை அவர்கள் குடுவையில் மாற்றி விட்டு திரும்ப; எவரோ, ஒரு காவியுடை அணிந்த பரதேசி “உதற முடியாதவர்கள் உயரத்துக்கு போக முடியாது” என்று சொன்னது; எனக்கே சொன்னமாதிரி இருந்தது. என் செயலை எண்ணி வெட்கமடைந்தேன். அவர் ஒரு சித்தராய் இருப்பாரோ; என்று ஒரு நினைப்பு, மின்னல் போல் வெட்டியது. திரும்பிப்பார்க்க; அந்த சிறு குடும்பம் கீழே போய் விட்டு இருந்தது. அவர் கூட்டத்தில் காணமல் போயிருந்தார். அடுத்து வந்த ஒரு இளம் பெண்ணிடம் நீர் குடுவையை கொடுத்துவிட்டு மேலே ஏறினோம். மனம் சற்று நிம்மதி அடைந்தது.

                   மணி எட்டாகி விட்டது.வழுக்கும் பாறைகளில் மேலே காலை இழுத்து ஏறி நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் அயர்வாகவும், ஆயாசமாகவும் இருந்தது. நீர் தாகம் மேலிட்டது. ஒரு பாறையின் மேல் அப்படியே உட்கார்ந்தேன். இந்தக்காலத்தில் எவரையும் தண்ணீர் கேட்பது நாகரிகம் இல்லை. எல்லோரும் பணம் கொடுத்து நீர் வாங்கும் நிலைமை. எப்படி கேட்பது?

             மேலேயிருந்து ஒரு வயதானவரிடம் “தாகத்திற்கு நீர் கிடைக்குமா” என்று தயக்கமுடன் கேட்க; ” தாராளமாய்” என்றார். அவரது நீர் குடுவையில் ஒரு விழுங்கு நீர் மட்டுமே இருந்தது‌. அதுவே எங்களுக்கு அமிர்தம் போல இருந்தது.”கொடுப்பவன் அளந்தே தான் கொடுப்பான்‌ கிடைத்தது நற்பலன். மேலே மேலே கேட்பதினால் ஒன்றும் கிடைக்காது. கிடைத்ததில் மன திருப்தியடை” என்று எவரோ அவருக்கோ சொல்லியவர், வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்; அவர் முதுகு மட்டும் தெரிந்தது. எங்களுக்கு சொன்ன வார்த்தைகள் போல் இருந்தது.

                 மெது மெதுவாக ஏறி மலை உச்சியை அடைய மணி பதினொன்று ஆகியது. காத்திருந்த காவலர்கள் நீர் குடுவையுடன் காத்திருந்தார்கள். நாங்கள் சுனையில் குளிக்க உதவி செய்ய,சங்கர மகாலிங்கம் சந்நிதியில் உச்சிகால பூஜைக்கு சித்தமாய் இருந்தார்கள்‌. ஒவ்வொன்றாக பால் இளநீர் தேன் விபூதி மஞ்சள் சந்தனம் பஞ்சாமிர்த அபிஷேகம் எல்லாவற்றையும் கண்ணும் மனதும் குளிர பார்த்தோம். நல்ல தரிசனம். மகா தீபாராதனை முடிந்து கற்பூர தரிசனமும் ஆன சமயம், பக்கத்தில் இருந்த சின்னஞ்சிறிய சிறுமி, ஒருத்தி, மகாலிங்கத்திற்கு படைத்த மூங்கில் தட்டிலிருந்து வாழைப் பழத்தை எடுத்து ” இந்தா! தின்னு! பாட்டி! தின்னு” என்று கொடுக்க நான் விதிர்த்து விட்டேன். கலக்கத்தில் அதை வாங்கி திரும்ப தட்டில் வைக்க முயல, தலைமை பூசாரி, “பரவாயில்லை ! பூஜை முடிந்து விட்டது.சாப்பிடுங்க” என்றவாறு பஞ்சாமிர்தத்தையும் ஒரு தொன்னையில் வைத்துக் கொடுத்தார். அந்த பஞ்சாமிர்தத்தின் ருசி அதற்கு முன்பு நான் என்றும் அறியேன்‌. அத்தனை சுவையாக இருந்தது. அந்த வாழைப் பழமும் கூட. இங்கேயே மலையில் விளைந்த பழம் என்றார் பூசாரி.

                     காவலர்கள் ” அம்மா வாங்க உணவு ஏற்பாடாயிருக்கு. சாப்பிட்டு கீழே இறங்கலாம் என்றார்கள். எங்களுக்கு பஞ்சாமிர்தம் உண்டதில்; பசி முற்றிலுமாக அடங்கி விட்டது. உணவை மறுத்துவிட்டு காவலர்கள் உதவியுடன் கீழே இறங்கலானோம். இறங்கும் சமயம் ஒரு பரதேசி,எங்களிடம் பேசிக் கொண்டு வந்தார். தான் சென்னை ஐ. ஐ.டியில் பௌதிக பேராசிரியராக இருந்தார் என்றும், இறைமகாலிங்கத்தின் ஈர்ப்பில் இங்கேயே தன் இறுதிவரை தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும் சொன்னார்.

                    நான் அவரிடம் கேட்டேன் ” ஐயா இந்த மலையில் சித்தர்கள் இருக்கிறார்களா மே! நீங்கள் சித்தர் எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?” அவர் என்னை கூர்ந்து ஒரு கணம் பார்த்துவிட்டு சொன்னார்,” நான் ஒரு சித்தன் என்று சொன்னால் நீ நம்பு வாயா?”

                நான் எதும் புரியாமல் அவரைப் பார்த்து ” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!” என்றேன். ’தற்போது நான் சித்தன் இல்லை என்றாலும்; நீ நம்பப் போவதில்லை; இல்லையா? சித்தர்கள் தம்மை; தம் இருப்பை, வெளிக்காட்டி கொள்வதே இல்லை‌’. நான் இருக்குமிடம் வந்து விட்டது; என்று சொல்லி ஒரு சாரை பாம்பு போல்; பக்கத்தில் இருக்கும் புதரில் இறங்கியதை மட்டும் பார்த்தேன்‌. அடுத்த நொடி, சற்று தூரத்தில் இருந்த அரச மரத்தின் பின், அவருடைய சிவப்பு நிற ஜோல்னா பையின் குஞ்சம் மட்டும் தெரிந்து; பின் அதுவும் மறைந்தது

                      நான் யோசனையில் இருந்தேன்‌ “ஆம்! அவர் சொன்னது அனைத்தும் உண்மை” என்று புரிந்தது. சதுரகிரி சித்தர்கள் வாழும் பூமி என்று நான் திடமாக நம்புகிறேன். அவரவர் உணர்வது அவரவர் மனதிற்கு சத்தியம்.

000

சசிகலா விஸ்வநாதன்

நான் தடய அறிவியல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற  உதவி இயக்குநர்.  இரண்டு வருடங்களாக சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறேன். மின் பத்திரிகைகளிலும்  மற்றும் மாதாந்திர பத்திரிகைகளிலும் தொடர்ந்து பிரசுரமாகியுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *