ட்ரிங் ..ட்ரிங் (செல்போன் ரிங் டோனை கேட்டு அழைப்பை எடுக்கிறாள் )
“அஸ்ஸலாமு அலைக்கும் ராபியத்து”
“எப்படி இருக்கே-மா”
“வலைக்கும் ஸலாம்”
“அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன் மச்சான்”
“கும்பகோணம் வந்து ரொம்ப நாள் ஆச்சு மச்சான் .டைம் கிடைச்சா பிள்ளைகளை எல்லாம் அழைச்சிட்டு வாங்க. .அடிக்கடி வந்து போனா தானே சொந்தம்ன்னா பிள்ளைகளுக்கு தெரியும் .வராமலே போனா சொந்தம் ,பந்தம் அறுந்திடும்.”
“நீ சொல்லுறதும் கரெக்ட்டு தான் புள்ள, உன் அக்கா நம்மளை விட்டும் , இந்த உலகத்தை விட்டும் போனதும் இந்த பிள்ளைகளே கதின்னு வாழ்ந்திட்டேன். பிள்ளைங்க படிப்பு,வேலை,அதுங்க கல்யாணம்ன்னு அவங்க வாழ்க்கை பின்னாடியே போனதால் காலம் போனதும் தெரியலை, வயசு போனதும் தெரியலை.
பிள்ளைங்க படிச்சு வேலை வாய்ப்பு ,வீடு வாசல் வசதின்னு நல்லா இருந்தும், உடம்புக்கு ஒண்ணுன்னா பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போய் மருந்து மாத்திரைன்னு வாங்கி கொடுத்தாலும் ஏதோ தனிமையா தான் உணருறேன்.
ஏசி போட்ட தனி ரூம் ,டைம் அடிச்சா டயட் சாப்பாடுன்னு எல்லாம் கிடைச்சும் மனசுல நிம்மதி இல்லை புள்ள. உங்க அக்கா கூட வாழ்ந்தப்ப பணம்,காசுன்னு பெருசா எதுவும் இருக்காது. சாப்பாடு கூட அரைகுறையா சாப்பிட்டாலும், நாலு பிள்ளைகளை அந்த கஷ்டத்திலும் வச்சுக்கிட்டு சந்தோஷமா தான் வாழ்ந்தோம் .
இப்ப எல்லாம் இருக்கு ஆனா உங்க அக்கா இல்லாதது என் வாழ்க்கைல சந்தோஷமே இல்லாதது மாதிரி இருக்கு.
இப்ப கூட இவ்வளவு ஏன் பொலம்புறேன் தெரியுமா ?
உங்க அக்காவ நான் கல்யாணம் பண்ணும் போது நீ கைப்புள்ள, காலம் போன பிறகு கடைசியா தான் உங்க வாப்பா உன்னை பெத்தாரு, கூச்சப்பட்டுக்கிட்டு உன்னை அவரு மகள்ன்னு சொல்லுறதுக்கே ரொம்ப சங்கோஜம் படுவாரு, எங்களுக்கும் கல்யாணமாகி ஒரு நாலு, அஞ்சு வருஷத்துக்கு குழந்தை இல்லை உன்னை தான் எங்க குழந்தை மாதிரி எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போவோம். நீ உறவு முறைல தான் எனக்கு மச்சினிச்சி ஆனா நானும், உங்க அக்காவும் பெற்றெடுக்காத எங்க மூத்த மவ-மா.
உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டி தீர்த்தா தான் என் மனசுல உள்ள பாரமே குறையுது. நீயும் சின்ன வயசுல புருஷனை பறிகொடுத்திட்டு பெத்த ஒரு மகனையும் வாழ்வாதாரத்துக்காக பாழாய் போன அந்த அரபுநாட்டுக்கு அனுப்பி வச்சிட்ட.
உன் கஷ்டத்தை ஒப்பீடு பண்ணி பார்க்கும் போது என் கஷ்டம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லைம்மா”.
”மச்சான் உங்களை விட்டா அழுது பொலம்பிக்கிட்டே இருப்பீங்க .எதை நினைச்சும் கவலைப்படாதீங்க எல்லாம் வல்ல ரப் நம்மளை காப்பான். இந்த உலகத்துல தனிமை மட்டும் தான் நிரந்தரம், நமக்கு பிடிச்ச ஒண்ணு எப்போதும் நம்ம கூடயே இருக்க விதி விடாது. எல்லாத்தையும் அந்த ஓடும் நதி போல கடந்து தான் வரணும்.
அதே சமயம் நேரம் கிடைக்கும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா பேசிக்கிடறது மனசுக்கும், நம்ம ஆயுளுக்கும் நல்லது மச்சான்”.
”உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் புது தெம்பே வந்தது போல இருக்கு புள்ள.”
”சரி,சரி பொய்யா ஆரோக்கியமா இருக்கிறது மாதிரி பீத்துனது போதும். உங்க சக்கரை, கொலஸ்ட்ரால் எல்லாம் அளவா இருக்கா. அல்லது அல்வா, நாணகத்தா, தம்ரொட்டு, இஞ்சிகொத்து, அதிரசம், முறுக்கு, வாடா-ன்னு சாப்பிட்டு எக்கு தப்பா ஏத்தி வச்சு இருக்கீங்களா”.
”அட நீ வேற புள்ள என்னை வெறுப்பு ஏத்தாதே .காலைல மூணு இட்லி, ஒரு சுலைமானி மதியம் வாய்க்கு விளங்காத ஒரு கீரைல ஒரு வெள்ளை சாப்பாடு, நைட்ல ரெண்டு சப்பாத்தி, புதினா சட்டினின்னு பெத்த ஆம்பள-பொம்பள புள்ளைங்க பேதம் இல்லாம பெத்த வாப்பாவயே டயட் என்கிற பெயர்ல கொடுமை படுத்திடுங்க”.
ஒரு ஜும்மா நாளு கூட எனக்கு நான்-வெஜ் இல்லை என அவர் சொல்லவும் ராபியத்து தன்னை மறந்து கல,கலவென வாய் விட்டு சிரித்தாள். (அவள் சிரிப்பு சத்தம் இவர் ரிசீவர் வரை அவ்வளவு சத்தமாக கேட்டது)
”என் கஷ்டம் உனக்கு அவ்வளவு சிரிப்பா இருக்கா புள்ள?”
”அப்படி எல்லாம் இல்லை மச்சான்..ரைமிங்கா பேசுனீங்க அதான் டைம்மீங்ல சிரிச்சிட்டேன்”.
”நக்கலு???”
”இல்லை மச்சான் கொஞ்சம் விக்கல் வர்ற மாதிரி இருக்கு”
(ஏனங்குடி மச்சானும் தன்னையும் அறியாமல் சிரித்தார் )
’எப்படி பேசுனவன் இப்ப பாரு எப்படி கலகலன்னு ஆயிட்டேன்’ என்றார் .
”கவலை படாதீங்க மச்சான் நீங்க இங்கே வந்தாலும் இல்லை நான் அங்கே வந்தாலும் முந்திரி, பாதாம், தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளை மிளகு போட்ட மட்டன் வெள்ளை குர்மா ஆனம்,தால் சோறோடு கொண்டு வர்றேன். செரிமானத்துக்கு சீனி தொவையலும் செஞ்சி எடுத்திட்டு வர்றேன்” என்றாள்.
”என் மச்சினிச்சி சொல்லும் போதே வாயிலே எச்சி ஊறுதே!” என்றார்.
”சரிங்க மச்சான் வேளா வேளைக்கு ஒழுங்கா மருந்து சாப்பிடுங்க, உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லி போனை வைத்தாள்.
வெள்ளிக்கிழமை கடா கறி அறுப்பார்கள் என்பதால் காலையிலேயே மன்சூர் பாய் கறிக்கடையில் ரெண்டு கிலோ ஆட்டுக்கறி வாங்கினாள். ஜும்மா நாள் வெளியூர் செல்லக்கூடாது என்பதால் வாங்கிய கறியை பிரிட்ஜில் வைத்தாள். மறுநாள் சனிக்கிழமை பஜர் நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பஜர் தொழுகையை தொழுத கையோடு மச்சானுக்கு பிடித்த தால் சோறு, வெள்ள குர்மா ஆனம், சீனி தொவையல் ஆகியவற்றை ருசியாக சமைத்து, அழகாக பேக் செய்து ஏனங்குடி செல்ல கும்பகோணம் பஸ்ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருந்தாள் ராபியத்து.
ட்ரிங் ..ட்ரிங் (ராபியத்தின் டெலிபோன் ஒலிக்கிறது )
ஏனங்குடி மச்சானின் நம்பரில் இருந்து வந்த அழைப்பை எடுத்தவுடன் ’அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்’ என்றாள்.
பதில் வரவில்லை சிறிது நிமிடங்களுக்கு பிறகு (அழுகை சப்தத்துடன் )
”ஆச்சி நான் ஜாஹிர் பேசுறேன். வாப்பா காலைல நல்லா தான் இருந்தாரு ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு இருக்கும் போதே நெஞ்சுல கை வச்சுக்கிட்டே கீழே சாய்ஞ்சுட்டாரு. என்ன,ஏதுன்னு பார்த்து டாக்டர் வர்றதுக்குள்ள எல்லாம் ரப் அவரோட ரூஹை எடுத்துக்கிட்டான்” என்று சொல்லி தழு,தழுத்த குரலோடு போனை வைத்தான்.
அவளையும் அறியாமல் கையிலிருந்த பை கீழே விழுந்து டிபன் பாக்ஸ் கழன்று வெள்ளை குர்மா ஆனம் பூமியில் ஓடியது. அதை சட்டையே செய்யாமல் ஏனங்குடி பஸ்ஸை பிடிக்க அழுத கண்களோடு ஓடினாள் ராபியத்து .
000
லி .நௌஷாத் அலி (புனைப்பெயர் லி .நௌஷாத் கான் )
என்கிற நான் முது நிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன். கவிதை -கதை என இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளை மணிமேலை பிரசுரம் 11 புத்தகங்களையும் , காகிதம் பதிப்பகம் மூன்று புத்தகங்களையும் , ஓவியா பதிப்பகம் ஒரு புத்தகத்தையும் – PGK ஆர்ட்ஸ் ஒரு புத்தகத்தையும் , நண்பர்கள் பதிப்பகம் நான்கு புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளது.