ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ?

,

“என்னடா கேள்வி இது..?”

“அதான் பாரேன். என்னமோ நமக்கு வேற வேலை வெட்டி இல்லாம ‘ஃபுல் டைமா’ கற்பழிச்சிகிட்டு இருக்கற மாதிரி இந்த பொண்ணு கேள்வி கேட்டு இண்டெர்வியூ செய்யுது..”

முழு நிகழ்ச்சியை விடவும் அடிக்கடி காட்டப்பட்ட அந்நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில்தான் அப்படியான கேள்வி இருந்தது. யாரோ ஒருவர் இக்கேள்வியை ஒட்டி முகநூலில் தன் அதிருப்தியை தெரிவித்ததால் அது, பலரின் பேசு பொருளானது.

 குமாரும் ரவியும் ஒரே நாளில் நான்காவது முறையாக அது பற்றி பேசி கொந்தளித்து கொண்டிருந்தார்கள். கேள்வி கேட்ட பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசினார்கள் அவ்வப்போது ஏசினார்கள்.

 கொஞ்ச நேரத்தில் அந்நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அறிவிப்பாளரும் ஒருவர் பின் ஒருவராக தொலைக்காட்சியில் தோன்றினார்கள். தத்தம் கவனக்குறைவிற்கு மன்னிப்பு கேட்டனர். அறிவிப்பாளரின் முகம் பொலிவு இழந்து, பார்ப்பதற்கே என்னமோ போல வெளுத்து இருந்தது. ஒரு மணி நேர உரையாடல் நிகழ்ச்சியில் ஆண்கள் தரப்பை நோக்கி ஏன் கற்பழிப்பு நடக்கிறது என கேட்பதற்கு பதிலாக நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்காக ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க? என கேட்டுவிட்டதாய் அறிவிப்புகள் வழியும் மன்னிப்பை கேட்டார்கள்.

 “பார்த்தியா மச்சான்.. நாம போட்ட போடுல ஒரு கூட்டமே மன்னிப்பு கேட்குது…” என்றார் குமார்.

“ஆனாலும்… ஆம்பளைங்க எல்லோரும் ஏன் கற்பழிக்கறீங்கன்ற கேள்விய அந்த அறிவிப்பாளர் கேட்டிருக்கவே கூடாதுடா… நம்மளையெல்லாம் பார்த்தா எப்படி தெரியுது…”. என புலம்பிக் கொண்டே கோவத்துடன் கிளம்பினார்.

 இரவு.

 படுத்தும் ரவிக்கு தூக்கம் வரவில்லை. மனம் அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைத்தபடியே இருந்தது. ‘என்ன கேள்வி அது.. ச்சே…’ என முணுமுணுத்துக் கொண்டே காலை தூக்கி மனைவி மீது போட்டார்.

 “இன்னிக்கு வேணாம்ங்க… ரொம்ப வேலையா போச்சி.. அசதியா இருக்கு…” என்ற மனைவியிடம், “புருஷன் கூப்டா… வரனும்.. காரணம் சொல்லக் கூடாது.. அதுக்கு பேருதான் பொண்டாட்டி…” என்றவாறே கையையும் போடலானார்.

 ஆனாலும் அவர் மனதில் அந்த வார்த்தை உறுத்திக்கொண்டே…

000

கடவுளின் குரல்

,

 “இன்று பலி கொடுத்துவிடுவேன்” என உறுதியாகச் சொன்னார் அம்மா.

 “ஆம். இன்றுதான் அதற்கான நாள். இனி நீ கேட்டது எல்லாம் உனக்கு கிடைக்கப் போகிறது. இனி நீதான் ஆள்வாய். நீதான் பேரழகியாய் திகழ்வாய்.. நீதான் நிரந்தரமானவள்… தயாராகு… தயாராகு… பலி கொடுக்கத் தயாராகு…” அந்த அசரீரி அடங்கியது.

 அம்மா கண்ணாடியைப் பார்த்து சிரிக்கலானார். இனி அவர் நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது. கடவுளே பேசி விட்டதால் அவளால் எதையும் மறுக்க முடியவில்லை. அதற்காக பெற்ற பிள்ளையை என்ன, தான் பெறாத எத்தனைப் பிள்ளைகளையும் பலி கொடுக்கலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.

 முதல் அசசீரி, கேட்கும் போது அம்மா பயந்துதான் போனார். நாளாக நாளாக கடவுளே தன்னிடம் பேசுவதை கண்டறிந்தார். கணவன் இல்லாமல், ஒரு மகளுடன் வாழ்வை கழித்தவளுக்கு நிச்சயம் இது வரம்தான்.

 அதற்காக மகளையா பலி கொடுப்பார்கள். கேட்டது கடவுளாச்சே மறுக்க முடியுமா என்ன? அந்த அசரீரி அம்மாவின் மனதை தன் வசம் இழுத்திருந்தது. அம்மா தன் நிலை மறந்து ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்.

 இன்றோடு மகளுக்கு 10 வயது பூர்த்தியாகிறது. பலி கொடுக்க சரியான நாள். எல்லாம் தயார். அறை முழுக்க சாம்பராணி புகையும் புதுவித நறுமணமும் சூழ்ந்திருந்தன. ஆள் உயர நிலைக்கண்ணாடி முன்பு அம்மா தன் மகளை அமர வைத்தார். மகளும் ஏதோ மயக்கத்திற்கு ஆட்பட்டவள் போல கண்களில் பாதி மயக்கத்தில் இருந்தாள். அப்படியே கண்களை மூடினாள்.

 அந்த அசசீரி மீண்டும் ஒலித்தது. அம்மா கையில் கத்தியை எடுத்தார். மகளின் கழுத்தில் ஒரு முறை வைத்து சரி பார்த்துக்கொண்டார். குரல்வளையில் குறி சரியாக இருக்கிறது.

 பலி கொடுப்பதற்கு முன், அம்மா கண்களை மூடி அசரீரியின் ஒப்புதலைக் கேட்கலானார்.

 கண்களை திறந்த மகள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அம்மாவில் வயிற்றில் குத்திக்கிழித்தாள். அம்மா அதிர்ச்சியில் அப்படியே சரிந்தார்.

 “ஏன்மா.. கடவுள் உன் கிட்ட மட்டும்தான் பேசுவாறா…? என்கிட்டயும்தான் பேசுவார்…” என்று மகள் சிரிக்கலானாள்….

000

பேயாவது பிசாசாவது….

,

     முதலில் பயம் இருந்தது. இப்போது இல்லை. முழு வீடியோ காட்சியையும் பார்த்துவிட்டாள். பிறகு எதற்கு பயப்பட வேண்டும்.

 ராஜ் வாங்கி கொடுத்த கரடி பொம்மை அவ்வப்போது நகர்ந்து அமர்ந்து மாயாவிற்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்த்தால், ஒரு வாக்கிலும், ஒன்னொரு முறை பார்த்தால் இன்னொரு வாக்கிலும் நகர்ந்திருக்கிறது. அது பற்றி சொன்னாள், ராஜ் நம்பவில்லை. “பேயாவது பிசாசாவது..” என சிரிக்கவும் செய்தான்.

 நகர்ந்து அமரும் கரடியை நிரூபிக்க ஒரு ஏற்பாடு செய்தாள். கரடி பொம்மையைப் பார்த்த வாக்கில் கைபேசி கேமராவை மறைவாக வைத்தாள். குளித்தாள். வெளியில் வந்து பார்த்தாள். கரடி பொம்மையின் கை வேறு பக்கமாக இருந்தது. பயந்தவாக்கிலேயே கைபேசியை எடுத்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள்.

 அவள் குளித்துக் கொண்டிருந்த சமயம், ராஜ் மெல்ல உள்ளே வந்து கரடியின் கையை வேறு பக்கம் வைக்கிறான். எல்லாமே கைப்பேசி கேமராவில் பதிவாகியிருந்தது.

மாயாவிற்கு பயம் மறைந்து ராஜ் மீது கோவம் வந்தது. காதலியுடன் இப்படியா பயம் காட்டி விளையாடுவது. அதனால்தான் ஏனோ அவள் சொல்வதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கே மறைந்திருக்கிறான் என வீட்டின் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தாள்.

 யாரோ வாசல் கதவை பலமாக தட்டுகிறார்கள். யாராக இருக்கும் என கதவை பாதி திறந்து பார்க்கிறாள்.

“வீட்டு சாவியை மறந்துட்டேன்… உனக்கு போன் பண்ண கிடைக்கல… கதவை திற…” என்றபடி காதலன் ராஜ் நின்றுக்கொண்டிருந்தான்.

 அவள் கதவை முழுதாகத் திறப்பதற்கு முன் ஏனோ திரும்பி பார்க்கிறாள். அவளது அறையில் இருந்த அந்தக் கரடி பொம்மை, சுவரில் மறைந்து பாதி முகத்தில் அவளைப் பார்த்து கொண்டுருக்கிறது.

000

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *