காளான் ஏன் கறிச் சுவையோடு இருக்கிறது?
(தமிழ்நாடு – கொங்கு நாட்டுப்புறக் கதை)
கோடை மழைக் காலத் துவக்கத்தில் மெல்லிய இடிகளுடன் மழை பெய்யும். மறு நாள் மண்ணில் காளான்கள் முளைக்கும். அதே போல, முதல் மழை பெய்த மறு நாள், கரையான் புற்றிலிருந்து ஈசல் கூட்டம் உருவாகி வெளிவரும். கரையான்கள்தாம் இறக்கை முளைத்து ஈசல்களாக மாறுகின்றன.
காளான்களில் பல வகைகள் உள்ளன. சமைக்கத் தக்க காளான்களை நல்ல காளான் என்றும், விஷக் காளான்களை மசைக் காளான் என்றும் கொங்கு மண்டலத்தில் சொல்வார்கள்.
காளான்களைப் பொதுவாக கிராமியர்கள் எல்லோரும் விரும்பி உண்பார்கள். அசைவம் உண்ணாத முன்னோர்களில் சிலர், காளானும் அசைவத்தில் சேர்ந்தது என்று உண்ண மாட்டார்கள். அது தவறான கருத்து. ஆனால், அந்தக் கருத்து உண்டானதற்கு ஒரு காரணம் உண்டு. அது இந்தக் கதையில் தெரியும்.
கிராமங்களில் மிகச் சிலர் மட்டும் ஈசல்களை உண்பார்கள். ஈசல்களைப் பிடித்து பொரியுடன் வறுத்து உண்பது வழக்கம்.
காளான் குழம்பு சற்றே கோழி இறைச்சிக் குழம்பு போல சுவைக்கும். இது ஏன் என்பதற்கும், புற்றில் ஈசல்கள் உருவாவது எப்படி என்பதற்கும் காரணமாக கொங்கு மண்டலத்தில் சொல்லப்படுகிற நாட்டுப்புறக் கதை இது.
*******
ஒரு கிராமிய இளைஞிக்குத் திருமணம் ஆகி, புகுந்த வீடு வந்தாள். பிறந்த வீட்டில் விரும்பிய உணவுகளை சாப்பிட்டு செல்லமாக வளர்ந்தவள். குறிப்பாக அசைவம் என்றால் அவளுக்கு மிகப் பிடிக்கும். அதனால் அவளது வீட்டில் வாரந்தோறும் ஆட்டிறைச்சி, கோழிக் கறி, மீன், கருவாடு, முட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமைப்பார்கள். அவளும் சப்புக் கொட்டியபடி நொப்பமாக சாப்பிட்டு, ஏழு ஊர் கேட்க எட்டு ஏப்பம் விடுவாள்.
புகுந்த வீட்டிலோ, மாமியார்க்காரி கொடுமைக்காரி. அது என்னவோ, பெண்களின் மாமியார்கள் பெரும்பாலும் கொடுமைக்காரிகளாகவே இருக்கிறார்கள்! இயல்பாக அவர்கள் நல்லவர்களாகவும், தனது மக்களுக்கு பாசம் மிகுந்த தாயாகவும் இருந்தாலும் கூட, மருமகள்களிடம் அன்பற்றவர்களாகவும், ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும், கொடுமைப்படுத்துகிறவர்களாகவும் மாறிவிடுகின்றனர். அப்படித்தான் அந்தப் பெண்ணின் மாமியாரும்.
அந்த வீட்டில் உணவுப் பழக்கம் வேறு மாதிரியாக இருந்தது. கணவனும் மாமியாரும் தாவர பட்சிணிகள். அதாவது, சைவ உணவுகளை உண்பவர்கள். ஏதாவது நோன்பு, திருவிழா, விருந்தினர் வருகை சமயங்களில் மட்டும்தான் அந்த வீட்டில் அசைவம் சமைக்கப்படும். மருமகளோ வாரந்தோறும் வகை வகையான ஜீவராசிகளை விழுங்கும் சாக பட்சிணி. சைவ உணவுகளை மூன்று வேளை சாப்பிடக் கூடிய அவள், அசைவம் என்றால் ஐந்து வேளை சாப்பிடுவாள். அப்படிப்பட்ட மகராசிக்கு இங்கே வாய்க்கு ருசியாக ஒரு ஆம்லெட்டுக்குக் கூட வழியில்லாமல் போய்விட்டது.
பிறந்த வீட்டில் விரும்பியதைக் கேட்கவும், சொல்லவும் முடியும். அதிகார மாமியாரிடம் அது முடியுமா? அவள் வைத்ததுதான் இங்கே சட்டம். அவளது விருப்பங்கள் மட்டுமே இங்கு நடைமுறை. அதை மீறி எதுவும் செய்ய இயலாமல், சைவ உணவுகளையே தின்று தின்று, மருமகளுக்கு நாக்கு செத்தேவிட்டது. பிறந்தவீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து அசைவ வகையறாக்களை ஒரு பிடி பிடித்துவிட்டு வரலாம் என்றால் மாமியார் அதற்கும் அனுமதிக்கவில்லை. நமது நிலைமை இப்படி மோசமாகிவிட்டதே என்ற வருத்தத்தில் நாட்கள் உருண்டுகொண்டிருந்தன.
ஒரு நாள் மாமியார், “நான் வாரச் சந்தைக்குப் போயிட்டு வாறன். அதுக்குள்ள நீயி வீட்டு வேலையெல்லாம் செஞ்சு, தண்ணி நெறைச்சு வெச்சிரு” என்றுவிட்டு சந்தைக்குக் கிளம்பினாள்.
கிராமப்புறங்களில் சுற்று வட்டார கிராமங்கள், குக்கிராமங்களுக்கும் சேர்த்து மையமாக ஒரு ஊரில் வாராந்திர சந்தை கூடும். இவர்களின் ஊரிலிருந்து சந்தைக்குச் செல்ல இரண்டு ஊர்கள் கடந்து மூன்றாவது ஊருக்குச் சென்றாக வேண்டும். நடந்துதான் போய் வர வேண்டும். அதனால் மாமியார் போய் வருவதற்கு வெகு நேரம் ஆகும். அதற்குள் நாம் ஏதாவது அசைவம் சமைத்துச் சாப்பிடலாமே என்று மருமகளுக்கு ஆசை பொங்கியது.
கிராமத்துக்கு வெளியே அத்துவானக் காட்டில் தனியாக அவர்களின் குடிசை. அக்கம் பக்கத்தில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை.
வீட்டில் வளர்க்கப்படுகிற கோழிகளில் ஒன்றைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டினாள். கோழியைக் காணோமே என மாமியார் கேட்டால், மேயச் சென்ற இடத்தில் நரி பிடித்திருக்கும் என்று சொல்லிவிடலாம் எனவும் தீர்மானித்தாள்.
நினைத்ததுமே நாக்கில் எச்சில் ஊறியது.
வளர்ப்புக் கோழிகளுக்குத் தீவனம் போட்டு, அவை கொத்தித் தின்றுகொண்டிருக்கையில், கொழுத்த கோழி ஒன்றைக் கொக்கொரக்கோவென ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்தாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கோழி அடுப்பில் வேகத் தொடங்கியது. ஓவடுப்பில் நெய்ச் சோறுக்கு அரிசி உலையும் வைத்தாள்.
வீட்டு வேலைகள் செய்தபடியே சமையலையும் கவனித்துக்கொண்டாள்.
வீட்டு வேலைகள் முடிந்தன. நெய்ச் சோறும் ஆகிவிட்டது. ஆனால், கோழிக் குழம்பு மட்டும் தயாராகவில்லை. இறைச்சி வேகாமல் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது.
‘கொழுத்த கோழியாப் புடிக்க நெனைச்சு, முத்துன கோழியாப் புடிச்சுட்டமாட்ட இருக்குதே…! அதனாலதான் சீக்கரம் வேகாம இப்புடி இழுத்தடிக்குது’ என எண்ணிக்கொண்டாள்.
வயது மூத்த பிராணிகள், பறவைகளின் இறைச்சி வேகத் தாமதமானால் பப்பாளி இலைகளின் தண்டை நறுக்கி உடன் இடுவார்கள். பிறகு இறைச்சி சீக்கிரத்தில் வெந்துவிடும். அதன் பின்னர் அந்தத் தண்டுகளை எடுத்து வெளியே வீசிவிடலாம். கொல்லையில் உள்ள பப்பாளி மரத்திலிருந்து அதன் இலைகளைப் பறித்து, தண்டுகளை நறுக்கி குழம்பில் இட்டாள். கோழிக் கறி அப்போதும் அவ்வளவு சீக்கிரமாக வேகாமல், சற்று நிதானமாகவே வேகலாயிற்று.
“சீக்கிரமா வெந்துரு கோழி! என் மாமியார் வந்தறப்போகுது!” குழம்புச் சட்டியைப் பார்த்து வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.
இந் நேரம் மாமியார் அடுத்த ஊர் கடந்திருப்பாள், இப்போது இரண்டாவது ஊரும் தாண்டியிருப்பாள், இப்போது சந்தையை அடைந்திருப்பாள் என்று எண்ணியவாறே, வெந்துவிட்டதா வெந்துவிட்டதா என கோழிக் கறியை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘தீவனம் போட்டு ஏமாத்தி என்னைப் புடிச்சுக் கொன்னுட்டயில்ல! உன்னைப் பழி வாங்கறன் பாரு!’ என்று சொல்வது போல கோழி இறைச்சி மெது மெதுவே வெந்துகொண்டிருந்தது. மாமியார் வருகிறாளா, வருகிறாளா என்று அடிக்கொரு தரம் வாசல் வரை சென்று வழி பார்த்து, இன்னும் வரவில்லை என்பதில் சமாதானப்பட்டுக்கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக கோழிக் குழம்பும் வெந்துவிட்டது. அப்பாடா எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, பப்பாளிக் குழல் துண்டுகளை வெளியே எடுத்துப் போட்டாள்.
பொழுதைப் பார்த்தபோது மாமியார் வரக் கூடிய நேரம் என்பது புலப்பட்டது. அவள் வருவதற்குள் கோழிக் குழம்பு வைத்து சாப்பிட்ட தடயம் எதுவும் இன்றி, சாப்பிட்டு முடித்து சட்டி, வட்டல் யாவற்றையும் கழுவி வைத்துவிட வேண்டும். தண்ணீர் நிறைத்து வைக்கும்படி வேறு சொல்லிவிட்டுப் போனாளே,… அதையும் செய்ய வேண்டும். மாமியார் வருவதற்குள் இரண்டையும் செய்ய நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை. இரண்டில் ஒன்று தவறினாலும் வாங்கிக் கட்ட வேண்டியிருக்கும். என்ன செய்யலாம்?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரு யோசனை மின்னியது. மண் குடத்துக்குள் நெய்ச் சோற்றைப் போட்டு, கோழிக் குழம்பு முழுதையும் அதில் ஊற்றினாள். இரண்டும் சேர்ந்து அரைக் குடம் அளவுக்கு ஆயிற்று. குழம்புச் சட்டியை வாசம் தெரியாதபடி சவர்க்காரம் போட்டு சுத்தமாகக் கழுவிக் கவிழ்த்தினாள். கோழி இறகுகளை முன்பே எரித்துவிட்டதால் அந்தத் தடயங்களும் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. இனி மாமியாரோ, கணவரோ, எவர் வந்தாலும் தான் செய்ததைக் கண்டுபிடிக்க இயலாது என்பது திருப்தியளித்தது.
நெய்ச் சோறும், கோழிக் குழம்பும் போடப்பட்ட மண் குடத்தை எடுத்து இக்கத்தில் வைத்துக்கொண்டு, தண்ணீர் எடுக்கச் செல்லும் தூரத்து ஓடையை நோக்கி நடந்தாள். நடந்தபடியே குடத்தில் உள்ள, கோழிக் குழம்பில் ஊறிய நெய்ச் சோற்றையும், கோழிக் கறியையும் எடுத்து அவுதி அவுதியாகத் தின்றபடியே சென்றாள்.
நீண்ட நாட்களாக கவுச்சி தின்னாமல் இருந்ததால் இப்போது அந்த வெகாறி ஒரு புறம். மாமியார் வந்துவிடுவாளோ என்கிற அவசரம் மறு புறம். இரண்டும் சேர்ந்து வேக வேகமாக அள்ளி அள்ளித் தின்றாள்.
நெய்ச்சோறும் நாட்டுக்கோழிக் குழம்பும் வெகுவாக ருசித்தன. ஆனால், அதை வீட்டில், வட்டலில் போட்டு, ஆற அமர இருந்து சாப்பிடாமல், திருட்டுத்தனமாக சமைத்து, குடத்தில் போட்டு, வழியில் நடந்தபடியே அவுதி அவுதியாகத் தின்ன வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தபோது அவளுக்கு வேதனையாகவும், தன் மீதே கழிவிரக்கமாகவும் இருந்தது.
எப்படியோ, இப்படியாவது சாப்பிட முடிந்ததே என்று சமாதானப்படுத்திக்கொண்டு, சாப்பிட்டபடியே நடந்துகொண்டிருந்தாள்.
ஓடைக்குச் செல்லும் அதே வழிதான் சந்தைக்குப் போகிற வழியும். அதில் பாதி தூரம் சென்றிருக்கும்போதே, அரைக் காதத்துக்கு அப்பால் மாமியார் வந்துகொண்டிருப்பது தென்பட்டுவிட்டது. இங்கிருந்து பார்த்தால் இன்னார் என்று முக அடையாளம் எதுவும் தெரியாது. அவள் அணிந்துள்ள சேலை நிறத்தை வைத்து அவள்தான் எனக் கண்டுகொண்டாள்.
“ஐயய்யோ…! மாமியார் ராச்சசி வர்றாளே…! அவகிட்ட வாயும் கோழிக் கொழம்புமா மாட்டுனா அதோ கதிதான்!” என மனம் பதறி நடுங்கியது.
என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம் என யோசித்தபடியே சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள். அருகே ஒரு புற்றுக் கண் தென்பட்டது. குடத்தில் உள்ள கோழிக் குழம்பு, நெய்ச்சோறு கலவை முழுதையும் அந்தப் புற்றுக்குள் கொட்டிவிட்டாள். குடம் காலியாயிற்று. நிம்மதியோடு ஓடைக்குச் சென்று, வாசனை அடிக்காதபடி குடத்தை சுத்தமாகக் கழுவி, நீர் எடுத்துக்கொண்டு திரும்பினாள்.
அந்திப் பொழுதில் மற்ற கோழிகள் யாவும் கூடடைய வந்தன.
“செவலை வெடை மட்டும் வல்லியே…!” மாமியார் விசனப்பட்டாள்.
“மேயப் போன எடத்துல நரியோ, கீரியோ புடிச்சுட்டுப் போயிருக்குமோ என்னுமோ…” என்றாள் மருமகள்.
மாமியார் அக்கம் பக்கம் எங்கும் சென்று தேடிப் பார்த்துவிட்டு, “கொழுத்த கோழியாச்சே…! ரெண்டரைக் கிலோ இருக்குமே…! அநியாயமாப் போயிருச்சே…!” என அங்கலாய்த்தபடியே வந்தாள்.
மருமகள் செய்த காரியங்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை.
*******
சில மாதங்களுக்குப் பிறகு கோடை மழைக் காலம் துவங்கியது. மெல்லிய இடிகளோடு முதல் மழை பெய்தது. மருமகள் புற்றில் போட்டிருந்த கோழிக் கறித் துண்டுகள் யாவும் காளான்களாக ஆகி பூமியில் முளைத்தன. அதனால்தான் காளான் குழம்பில் கோழிக் கறிச் சுவையின் சாயல் அடிக்கிறது. அவள் புற்றில் போட்டிருந்த நெய்ச் சோற்றுப் பருக்கைகள் யாவும் ஈசல்களாகி வெளிவந்தன. ஈசல்களை வறுக்கும்போது அதிலிருந்து நெய் போன்ற திரவம் வருவது அதனால்தான்.
பாடும் தவளைச் சிறுமி
(ஸ்லாவிக் நாட்டுப்புறக் கதை)
முற்காலத்தில், ஒரு ஏழைத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஒவ்வொரு நாளும் மனைவி பெருமூச்சு விட்டுக்கொண்டு, “நமக்கு மட்டும் ஒரு குழந்தை இருந்தால்…” என ஏங்குவாள்.
உடனே கணவனும் பெருமூச்சு விட்டு, “அதுவும் நமக்கு ஒரு சிறு மகள் இருந்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகள்தான் வீட்டுக்கு அழகு, ஐஸ்வர்யம்” என்பான்.
முடிவில் அவர்கள் குழந்தை வரம் வேண்டி புனித யாத்திரை மேற்கொண்டு ஒரு புனிதத் தலத்தில் கடவுளிடம் வேண்டினர்.
“எங்களுக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்தால் நன்றியுடையவர்களாக இருப்போம். எந்த விதமான குழந்தையாக இருந்தாலும் சரி – ஒரு தவளையாக இருந்தாலும் கூட.”
கடவுள் அவர்களின் வேண்டுதலைச் செவிமடுத்து ஒரு குழந்தையை அவர்களுக்கு அருளினார். மனிதப் பெண் குழந்தை அல்ல; ஒரு சிறிய பெண் தவளைக் குழந்தை!
அவர்கள் அந்தச் சிறு தவளைக் குழந்தையை மிக நேசித்தனர். அவளைக் கொஞ்சியும், அவளோடு விளையாடியும், அவளைச் சிரிக்க வைத்தும் மகிழ்ந்தனர். அவள் அறையெங்கும் குதிக்கும்போது கைதட்டிப் பாராட்டினர். ஆனால், அவர்களின் குழந்தை ஒரு தவளை என்பது பற்றி அயலவர்கள் பரிகசிக்கும்போது அவர்களுக்கு அவமானமும் வேதனையுமாக இருக்கும். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குழந்தையை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லவோ, அவளை வெளியில் விளையாட விடவோ செய்யாமல், வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்த வேண்டியதாயிற்று. அப்போது கூட அந்நியர்கள் யாரேனும் வந்தால் அவளை எங்கேனும் மூடி மறைத்துவிடுவார்கள்.
அதனால் தவளைச் சிறுமி அவள் வயதை ஒத்த விளையாட்டுத் தோழமை இன்றியும், பெற்றோரை மட்டுமே பார்த்தும் வளர்ந்தாள். அவள் அவளது தந்தை பணி புரியும் இடத்தில் விளையாடிப் பொழுதுபோக்குவாள். அவளது தந்தை ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்தின் பணியாளர். திராட்சைக் கொடிகளுக்கிடையே தவளை மகள் குதித்தும், பாடியும் விளையாடிக்கொண்டிருப்பதை அவர் வேடிக்கையாகவும், வேதனையோடும் பார்த்துக்கொண்டிருப்பார்.
தினந்தோறும் மனைவி ஒரு கூடையில் அவருக்கு மதிய உணவு கொண்டு வருவாள். வயதாக ஆக அவளுக்கு உடல் தளர்ச்சி ஏற்பட்டு, அவ்வளவு தூரம் நடந்து வருவது சிரமமாக இருந்தது. தவளைச் சிறுமி இப்போது குமரி வயதை அடைந்துவிட்டாள். அவள் தன் தாயிடம், “அம்மா,… நீ வீட்டில் இருந்து ஓய்வெடு. அப்பாவுக்கு மதிய உணவை நான் கொண்டு செல்கிறேன்” என்றாள்.
அதிலிருந்து அவள்தான் திராட்சைத் தோட்டத்துக்கு கூடையில் மதிய உணவு கொண்டு வந்தாள். வயோதிகத் தந்தை உணவருந்திக்கொண்டிருக்கும்போது அவள் மரக் கிளையில் குதித்து அமர்ந்துகொண்டு இனிமையாகப் பாடுவாள். இதனால் தந்தை அவளைப் பாடும் தவளைக் குட்டி என்று அழைப்பார்.
ஒரு நாள் அவள் அவ்வாறு பாடிக்கொண்டிருக்கும்போது அவ் வழியே சென்ற அரசனின் இளைய மகன் காதில் விழுந்தது. குதிரையை நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த இனிய கானம் எங்கிருந்து வருகிறது, யார் பாடுகிறார்கள் என்பதைப் பார்க்க இயலவில்லை.
அங்கே தென்பட்ட திராட்சைத் தோட்டத் தொழிலாளியான முதியவரிடம், “யார் பாடுகிறார்கள்?” என்று கேட்டான்.
தனது தவளை மகள் குறித்து அவமானப்பட்டுக்கொண்டிருப்பவரான அவர், அவனிடம் உண்மையைச் சொல்ல விரும்பாமல், “யாரும் பாடவில்லையே!” என்றார்.
மறு நாளும் அதே நேரத்தில் அங்கு வந்த இளவரசன் மீண்டும் அதே இனிய குரலில் பாடலைக் கேட்டு மயங்கி நின்றான்.
“வயோதிகரே,… உங்களுக்குக் காது மந்தமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நிச்சயமாக யாரோ பாடுகிறார்கள். அது ஒரு அருமையான பெண் குரல். அற்புதமாகப் பாடுகிறாள்! நான் அவளை மணந்துகொண்டு, அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்” என்றான்.
“கண்மூடித்தனமாக முடிவெடுக்கக் கூடாது இளவரசே! கண்டதும் காதல் வரலாம்; காணாமல் காதல் கொள்வது சரியல்ல. அதுவும் நீங்கள் ஒரு இளவரசர் என்பதை மறந்துவிடாதீர்கள்!”
“நான் யார் என்பதை மறக்கவில்லை. என்ன சொல்கிறேன் என்பது தெரிந்துதான் சொல்கிறேன். அவளை ஒரே நிமிடத்தில் நான் மணந்துகொள்வேன்!”
“நிச்சயமாகவா?”
“நிச்சயமாக!”
“அப்படியானால் சரி; பார்க்கலாம்.”
வயோதிகர் மரத்தை அண்ணாந்து நோக்கி, “பாடும் குட்டித் தவளையே,… இறங்கி வா! இளவரசர் உன்னை மணந்துகொள்ள விரும்புகிறார்!” என்றார்.
குட்டித் தவளைச் சிறுமி மரக் கிளைகளினூடேயிருந்து குதித்து இறங்கி, இளவரசன் முன்பு நின்றாள்.
“இவள் என் சொந்த மகள் – தவளையைப் போல இருந்தாலும் கூட” என்றார் திராட்சைத் தோட்டப் பணியாளர்.
“அவள் எப்படி இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை” என்றான் இளவரசன். “நான் அவளது பாடலையும், அவளையும் நேசிக்கிறேன். நான் சொல்வதன் அர்த்தத்தை உணர்ந்தே சொல்கிறேன். அவளுக்கும் என்னை மணந்துகொள்ள விருப்பமெனில் நான் அவளை மணந்துகொள்கிறேன். அரசரான எனது தந்தை, எனது இரு அண்ணன்கள் மற்றும் எனக்கு, அவரவரின் மணப்பெண்களை நாளை அவரிடம் காண்பிக்கும்படி ஆணையிட்டுள்ளார். அனைத்து மணப்பெண்களும் அவருக்கு ஒரு மலரைக் கொண்டுவரவேண்டும் என்றும், யாரின் மணப்பெண் மிக விரும்பத்தக்க மலரைக் கொண்டுவருகிறாளோ, அவருக்குத்தான் அரசாட்சி என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். பாடும் குட்டித் தவளையே,… நீ என் மணப்பெண்ணாக, நாளை அரசவைக்கு ஒரு சிறந்த மலரோடு வருவாயா?”
“சரி, இளவரசே” தவளைச் சிறுமி சொன்னாள். “நான் வருகிறேன். ஆனால், நான் குதித்துக் குதித்து அரசவைக்கு வந்து உங்களை அவமானப்படவைக்க விரும்பவில்லை. நான் சவாரி செய்து வரவேண்டும். எனவே, நீங்கள் எனக்கு ஒரு பனிவெள்ளைச் சேவலை அனுப்பி வைப்பீர்களா?”
“அனுப்பி வைக்கிறேன்.” இளவரசன் வாக்களித்தான்.
அன்று இரவே ஒரு பனிவெள்ளைச் சேவல், திராட்சைத் தோட்டத் தொழிலாளியின் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது.
மறுநாள் அதிகாலையில் தவளைச் சிறுமி சூரியனை நோக்கி வேண்டினாள். “ஓ, தங்கச் சூரியனே! எனக்கு உனது உதவி தேவை. நான் எனது இளவரசரை அரசவையில் அவமானப்பட வைத்துவிடக் கூடாது. எனவே, உனது தங்கக் கிரணங்களால் எனக்கு அழகிய ஆடைகளை நெய்து தருவாயாக!”
சூரியன் அவளது பிரார்த்தனையைக் கேட்டு இரங்கி, அவளுக்கு ஜொலிக்கும் தங்க ஆடையைக் கொடுத்தது.
மலருக்கு பதிலாக அவள் ஒரு கோதுமை உருண்டையை எடுத்துக்கொண்டு, வெள்ளைச் சேவலில் சவாரித்து அரண்மனையை அடைந்தாள்.
அரண்மனை வாயிலில் இருந்த வாயிற்காவலர்கள் அவளை முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. “இது தவளைகளுக்கான இடமல்ல. நீ குளம் – குட்டைகளை நாடிச் செல்!”
ஆனால், தான் இளம் இளவரசனின் மணப்பெண் என்று அவள் சொன்னதும் அவர்கள் அவளை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
“விசித்திரம்!” அவர்கள் ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக்கொண்டனர். “இளம் இளவரசனின் மணப்பெண்! அவள் பார்ப்பதற்கு தவளை மாதிரித்தானே இருக்கிறாள்? அதுவும், சேவலில் சவாரி செய்து வந்திருக்கிறாளே…!”
அவர்கள் வாயிற்கதவின் உட்பகுதிக்கு நகர்ந்து, அவள் செல்வதைப் பார்த்தனர். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வெள்ளைச் சேவல் மீது அமர்ந்திருந்த தவளைச் சிறுமி தனது தங்க அங்கியை உருவிக் கீழே போட்டாள். மறுகணம் அங்கே சேவலும் தவளையும் இருக்கவில்லை; மாறாக, பனிவெள்ளைக் குதிரை மீது ஓர் அழகிய குமரிப் பெண் அமர்ந்திருந்தாள்.
இப்போது அவள் தவளை உருவில் இல்லை. எனினும், நாம் அவளைத் தவளைக் குமரி என்றே அழைக்கவேண்டியுள்ளது. ஏனெனில், அவளுக்கு வேறு பெயர் எதுவும் இல்லை.
தவளைக் குமரி, மூத்த இரு இளவரசர்களின் மணப்பெண்களான மற்ற இரு குமரிகளோடு அரசவைக்குள் பிரவேசித்தாள். அவ்விரு பெண்களும் சாதாரணமானவர்கள். கவனித்துப் பார்க்கும்படியாக அவர்களிடம் எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லை. ஆனால், அவர்களின் பக்கவாட்டில் இருந்த, இளம் இளவரசனின் மணப்பெண் மிகுந்த அசாதாரணமானவளாகத் தோன்றினாள்.
முதல் குமரி தன் கையில் ரோஜாவை வைத்திருந்தாள். அரசர் அதை வாங்கி, லேசாக முகர்ந்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
இரண்டாவது குமரி செவ்வந்திப் பூவை வைத்திருந்தாள். அரசர் அதையும் பார்த்து அதிருப்திப்பட்டார்.
பிறகு இளம் இளவரசனுடைய மணப்பெண்ணின் அன்பளிப்பைப் பார்த்த அவரது கண்கள் மினுங்கின: “ஆஹா, இதுதான் விரும்பத்தக்கது!”
அவள் அவரிடம் கோதுமை உருண்டையைக் கொடுக்க, அவர் அதை ஒரு கையால் உயர்த்திப் பிடித்துக்கொண்டார். மறு கையால் அவளைப் பற்றி, தன் அருகே நிறுத்திக்கொண்டவர், தனது மகன்கள் மற்றும் அவையோரைப் பார்த்து சொன்னார்:
“இவளைத்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன். இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதைப் பாருங்கள்! அது மட்டுமல்ல; அழகாக இருப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அதனால்தான், நான் மலர் கொண்டு வரக் கட்டளையிட்டிருந்தும் கூட, அதற்கு பதிலாக இந்த கோதுமை உருண்டையை எனக்காகக் கொண்டு வந்திருக்கிறாள். வயதில் இளையவளாக இருந்தாலும், அவளது இந்த அறிவார்ந்த செய்கையால் நம்மை விட சிறந்த சிந்தனையும், மதி நுட்பமும் கொண்டவள் அவள் என்பதை நிரூபித்துவிட்டாள். உண்மையிலேயே, இது எனக்கும் ஒரு படிப்பினை என்பதை ஒத்துக்கொள்கிறேன். இவளை மனைவியாக அடைய எனது இளைய மகன் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இவளை மருமகளாக அடைவதில் நானும் பெருமைப்படுகிறேன். அரசாள்பவர்களுக்கு இத்தகைய ஆக்கபூர்வ சிந்தனைகளும், மதி நுட்பமும் அவசியம். அப்போதுதான் அவர்களால் நல்லாட்சி செலுத்த முடியும். எனக்குப் பிறகு இளைய மகனுக்கே அரசுப் பொறுப்பு அளிக்கப்படும். இவள், அவனுக்கு உறுதுணையாக இருந்து, அவன் நல்லாட்சி புரிய உதவுவாள்!”
மக்கள் ஆரவாரம் செய்து, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
ஒரு தவளையாக இருந்து, பெற்றோரின் அவமானத்துக்குக் காரணமாக இருந்த அவள், இப்படியாக ஒரு அழகிய மானுடப் பெண்ணாகி, பிறகு அந்த நாட்டின் இளவரசியாகவும் முடிசூட்டப்பட்டாள்.
*******
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.