கிரேக்க நாட்டில் அரக்கிணி என்ற ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். மிகவும் அழகான பெண் அவள். கன்னிப் பெண். கிரேக்க நாட்டிலேயே எல்லாரையும் விடத் திறமையாக நூல் நூற்கக் கூடியவள். கை வேலைப்பாட்டுடன் கூடிய பூ வேலைகளை மிகவும் திறமையாக நூற்பாள். அவள் மிகவும் அகந்தைக்காரி.
அவள் பூவேலை செய்யப்பட்ட துணிகளை ஒரு சிறுமியிடம் கொடுத்து, “சிறுமியே! இந்தப் பூ வேலைப்பாடு அமைந்த இந்தத் துணியைப் பக்கத்திலுள்ள அரண்மனைக்குச் சென்று ராணியாரிடம் விற்று விட்டு வா!” என்றாள்.
“நான் சிறுமி, நான் போய் ராணியாரைச் சந்தித்தால் ராணியார் கோபித்துக் கொள்ள மாட்டாரா!” என்றாள் சிறுமி.
“எதற்குக் கோபப்படப் போகிறார்?” என்றாள் அரக்கிணி.
“சிறுமியிடம் கொடுத்து அனுப்புவது மரியாதைக்குறைவு அல்லவா!” என்றாள் சிறுமி.
ஏளனமாகச் சிரித்த அரக்கிணி, “உனக்குக் கூட மரியாதை எது? மரியாதை இல்லாதது எது என்று தெரிகிறதா? சரியான சிறுமிதான். நீ இப்படிக் கேட்பதே புத்திசாலித்தனம் தான். நீ ஒரு புத்திசாலி தான். அதனால் உன்னை அனுப்புவதில் தவறு ஒன்றுமில்லை!”
“புத்தி இருந்தால் அகந்தையோடு இருக்க வேண்டுமா?”
“அதனால் நாட்டை ஆளும் அரசனை அவமதிக்க வேண்டுமா!” என்றாள் சிறுமி.
“நன்றாகப் பேசுகிறாய்! கடவுள் வந்தாலும் என் திறமைக்கு ஈடு நிகர் எவரும் இல்லை. அதனால் நான் அகந்தையோடு இருப்பதில் தவறு ஒன்றுமில்லை” என்றாள் திமிராக அரக்கிணி.
“உங்களிடம் பேசிப் புண்ணியமில்லை. தாங்கள் சொல்லியபடி ராணியாரிடம் இந்தப் பூ வேலைப் பாடு செய்த துணியைக் கொண்டு போய்த் தருகிறேன்” என்று கூறிய சிறுமி அந்த அழகிய பூ
வேலைப்பாடு செய்த துணியை ராணியாரிடம் கொடுக்கச் சென்றாள் சிறுமி.
அரண்மனை வீரர்கள் சிறுமியைத் தடுத்து நிறுத்தினார்கள்.
“யார் நீ!” என்றான் வீரன் ஒருவன்.
“பூவேலைப்பாடு செய்யும் அரக்கிணி என்னை அனுப்பினார்கள். ராணியாரைச் சந்திக்க வேண்டும்.” என்றாள் சிறுமி. ஏளனமாக சிரித்த வீரன், “என்ன விஷயம்?” என்றான்.
“பூ வேலைப்பாடு செய்த துணியை ராணி யாரிடம் கொடுத்து வரும்படி சொன்னார் அரக்கிணி” என்றாள் சிறுமி.
“ஓ! அந்த ஆணவக்காரி அனுப்பினாளா? போ! போ!! அவள் ஆணவத்திற்கு ராணியார் கூடப் பயப்பட வேண்டியதாகி விட்டது” என்று கூறி வீரன் சிறுமியை அரண்மனைக்குள் அனுமதித்தான்.
சிறுமி ராணியாரைச் சந்தித்து அரக்கிணி கொடுத்த பூ வேலை செய்த துணியைக் கொடுத்தாள்.
“அரக்கிணி வரவில்லையா?” என்று கேட்டாள் ராணியார்.
“நான் திறமைசாலி, புத்திசாலி, முட்டாளைச் சென்று பார்ப்பதற்கு நான் செல்ல மாட்டேன் என்று சொல்கிறாள் அவள்” என்றாள் சிறுமி.
அரக்கிணியின் ஆணவத்தை ஒழிப்பதற்காக இவ்வாறு வேண்டுமென்றே சொன்னாள் சிறுமி.
“நாட்டை ஆளும் அரசனை விட ஒரு சாதாரணக் குடிமகள் எம்மாத்திரம் என்பதை அவள் அறியவில்லை. அவள் ஆணவத்தை என்னால் ஒடுக்க முடியும்’ என்று கூறினாள் ராணியார்.
உடனே அரசனிடம் திமிர் பிடித்த அரக்கிணியைப் பற்றிச் சொன்னாள்.
உடனே அரசன் தன் காவலாளிகளை விட்டு அரக்கிணியைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார்.
சிறிது நேரத்தில் அரக்கிணியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள் வீரர்கள்.
அரசன் ஒருமுறை அரக்கிணியை மேலும் கீழும் பார்த்தான்.
“ஏ பெண்ணே! பூ வேலையில் சிறந்தவள்; திறமையானவள் என்பதற்காக ஆணவத்துடன் இருக்கலாமா?” என்றான் அரசன்.
“எனக்கு இணையாக யார் பூ வேலை செய்வார்கள்? அப்படி எவராவது எனக்கு இணையாகப் பூ வேலை செய்தால் நான் என் ஆணவத்தை விட்டுவிடுகிறேன். அதுவரையில் எனக்கு ஆணவம் இருக்கத்தான் செய்யும்” என்றாள் திமிராக அரக்கிணி.
“உன்னைச் சிறையில் தள்ளினாலே போதும் பெண்ணே. உன்ஆணவம் அடங்கிவிடும்” என்றான் அரசன்.
“என்னைச் சிறையில் தள்ளினாலும் ஆணவம் அடங்காது. அது உங்களுக்குத்தான் பெரிய நஷ்டம்!”
“எப்படிப் பெண்ணே!” என்றான் அரசன்.
“உங்கள் ராணியாரின் துணிகளுக்கு எவருமே பூ வேலைப்பாடு செய்ய முடியாமல் போய்விடுமே!
“உன்னை எதற்காகச் சிறை வைக்கின்றேன்.”
“சிறை வைத்து என்னிடம் வேலை வாங்க முடியாது. அது ஒருகாலும் முடியாத காரியம். பலவந்தம் திறமைசாலிகளை அறிவாளிகளை ஒன்றும் செய்யாது” என்றாள் அரக்கிணி.
“அப்படியா! சரி நாளைக்கு ஒரு போட்டி வைப்போம். உனக்கு நிகராகக் கிரேக்கத்தில் பூ வேலைப்பாடு செய்யும் மனிதர் இருந்து விட்டால் உன் தோல்வியை ஒப்புக் கொள்கின்றாயா?” என்றான் அரசன்.
“சரி, ஏற்பாடு செய்யுங்கள்’” என்றாள் அரக்கிணி திமிராக.
மறுநாள் நாடெங்கும் ஓர் செய்தி பரவியது. பூ வேலையில் அரக்கிணியை விட யார் மிகவும் சிறந்தவர்கள்? அவர்கள் அரக்கிணியுடன் போட்டிக்கு வரலாம் என்று அரசன் நாடெங்கும் செய்தி வெளியிட்டான்.
அன்று நாட்டின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
அரக்கிணியின் பூ வேலைச் சித்தரிப்புக்கு ஈடாக எவரது பூ வேலையின் சித்தரிப்பும் சிறப்பாக இல்லை.
அரக்கிணியிடம் தோல்வி கண்ட பெண்கள் அவமானத்தால் தலை குனிந்து சென்றனர்.
போட்டி முடியும் தருவாயில்…
திடீரென்று ஆத்தீனாத் தெய்வம் அங்குத் தோன்றியது. பளீரென்று தங்க ஒளி மிளிரத் தோன்றிய ஆத்தீனாத் தெய்வத்தை அரசன் உள்பட அனைவரும் பணிவுடன் வணங்கினார்கள்.
ஆனால் அரக்கிணி திமிராக ஏளனமாக ஆத்தினாவைப் பார்த்துச் சிரித்தாள்.
ஆத்தீனாத் தெய்வம் புன்னகையுடன் அரக்கிணியிடம் வந்து, “பெண்ணே! நான் உன்னுடன் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். நீ தயாரா?” என்றாள்.
“ஆத்தீனாத் தெய்வமே! போட்டி எல்லோருக்கும் தான் நீங்கள்கூட என்னுடன் போட்டியிட முடியாது. நான் தான் வெற்றியடைவேன். மக்கள் முன்னால் தெய்வம் தோல்வியடைந்தால் அவமானமாகி விடப் போகிறது. எதையும் சிந்தித்துச் செயல்படுங்கள்” – என்று எள்ளி நகையாடிச் சிரித்தாள் அரக்கிணி.
“பரவாயில்லை. தெய்வங்கள் என்றும் தோற்றதில்லை என்று உனக்குத் தெரியாது போலிருக்கிறது” என்றது ஆத்தீனா.
“அப்படியா! முதலில் நீங்களே போட்டியைத் தொடங்குங்கள்” என்றாள் அரக்கிணி.
அரசன் மிகவும் பயந்து போயிருந்தான். ஆத்தீனாத் தெய்வத்தை எதிர்க்கும் அரக்கிணி மீது அரசனுக்குக் கோபம் இருந்தாலும் போட்டியில் ஒன்றும் அவனால் செய்ய முடியவில்லை.
“ஆத்தீனா, மீண்டும் சொல்கிறேன். என்னுடன் போட்டிக்கு வா! என்று நானே அறை கூவியழைக்கிறேன்…” என்று ஆணவத்துடன் கூறிய அரக்கிணியைப் பார்த்துப் புன்னகை புரிந்த ஆத்தீனா பூவேலைப்பாட்டைத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் பூ வேலை செய்த அந்தத் அரக்கிணியிடமும் அரசனிடமும் துணியை ஆத்தீனாத் தெய்வம் காட்டினாள்.
அந்தத் துணியில் இருக்கும் பூ வேலைப் பாடானது, அரக்கிணியை எச்சரிக்கும் பொருட்டுச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அழியக்கூடிய உயிர்கள் தற்பெருமை பேசிக் கடவுள்களை மிஞ்சிவிட முயன்றதால் அடைந்த தண்டனையைப் பற்றிய கதையைப் பூவேலையில் ஆத்தினா சித்தரித்திருந்தாள்.
அதாவது அந்த பூ வேலைப்பாட்டின் இறுதியில் ஒரு புதிய பூச் சின்னத்தைச் சித்தரித்து இருந்தாள். அதுதான் பின்னர் சிலந்தியாகப் போகும் என்று எவரும் நினைக்கவில்லை. அதை ஒரு புதிய ஜந்தாகவே நினைத்தனர்.
இதைக் கண்ட அரக்கிணி ஏளனமாகச் சிரித்து விட்டுத் தன்னுடைய பூ வேலையைத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் பூ வேலை செய்த அந்தத் துணியை அரசனிடமும் ஆத்தீனாவிடம் காட்டினாள் அரக்கிணி.
அந்தத் துணியில் இருக்கும் பூ வேலைப் பாடானது, ஆத்தீனாவை எச்சரிக்கை செய்யும் பொருட்டுச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
கடவுள்கள் கூடச் சில நேரங்களில் தவறு செய்கின்றனர் என்று காட்டும் கதைகளைப் பூ வேலைப்பாட்டில் சித்தரித்திருந்தாள்.
இதைக்கண்ட அனைவரும் அரக்கிணியின் மித மிஞ்சிய அகந்தையைத் தெரிந்து கொண்டனர்.
‘அரக்கிணி! பூ வேலைப்பாட்டில் சிறந்த நீ மிகுந்த அகந்தையாக இருக்கிறாய். உன்னைப் போல் அகந்தையான மனிதர் உலகில் வாழ்வது மனிதன் இனத்துக்கே ஆபத்து” என்றாள் ஆத்தீனாத் தெய்வம்.
“என்றென்றும் நூற்றுக் கொண்டே இருக்கும் என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் தெய்வமே! ஆணவம் என் உடன் பிறந்த சொத்து. உனக்கு இது தெரியாதா?- என்று கூறிக் கலகலவென்று சிரித்தாள் அரக்கிணி.
ஆனால் ஆத்தீனாத் தெய்வத்தின் பூ வேலைப்பாட்டை மிஞ்சும் அளவுக்கு அரக்கணியின் பூ வேலைப்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை ஏகமனதாக முடிவு செய்தனர் நீதிபதிகள்.
“அரக்கிணி, உன் அகந்தை இன்றோடு ஒழியட்டும். என்றென்றும் நீ நூற்றுக் கொண்டும் கட்டிக்கொண்டும் இருக்கும் ஒரு பூச்சியாக மாறிடுவாய். அதுவே மக்களால் சிலந்தி எனப் பெயரிட்டு அழைக்கப்படும்” என்று கூறி ஆத்தினா அரக்கிணிக்குச் சாபம் இட்டது.
உடனே அரக்கிணி சிலந்தியாக மாறிவிட்டாள். அன்றிலிருந்து சிலந்தி இனம் உலகில் தோன்றியது என்று சொல்கிறார்கள்.
ஆணவகாரர்களுக்கு என்றும் அழிவு உண்டு என்பதைச் சித்தரிக்கும் கதை இது.
000
மானோஸ்
கிரேக்க நாடோடி கதைகள்