1
திசை திறந்து
வனம் புகு
இசை திறக்கும்
அமுதக்கடல்
தசை விரியும்
அவள் பதம்
சூடு போதம்
இடை நிரப்பு
சங்காத்தம் கொள்
காமம் அவிழ்
மகுடம் புனை
ஒன்று வைத்து
ஒன்று பெறு
நிலை த் தலம் பற்று
சரண் அடை
புண்ணியத் தரு
உற்றது எல்லாம் அவளுக்கு
2
அடர்ந்தக் காட்டுக்குள்
ஒரு மரத்திலிருந்து
ஒரு இலை பிணையில் வருகிறது
கவனித்த பட்டாம் பூச்சி
அதனோடு பறக்கிறது இணையாக
ஒரு கழியுடலை பின் தொடர்வதைப்போல
இலை தரைத் தொட்டு
நிஜமும் நிழலும் ஒன்றாகி அடங்கும் வரை
இருட்டும் ஒளியும் கலந்த வனத்தின்
உள்ளங்கைக்குள் பட்டாம் பூச்சி
கொஞ்சம் நேரம் அங்கேயே சுற்றித் திரிந்தது.
3
நீ வருவதற்கு முன் காற்று வந்தது
நீ காற்றாய் வந்தாய்
நீ வருவதற்கு முன் வெயில் வந்தது
நீ வெய்யிலாய் வந்தாய்
நீ வருவதற்கு முன் பசி வந்தது
நீ பசியாக வந்தாய்
நீ வருவதற்கு முன் பறவை வந்தது
நீ பறவையாக வந்தாய்
நீ வருவதற்கு முன் ஒரு துயரம் வந்தது
நீ துயரமாக வந்தாய்
நீ வருவதற்கு முன் ஒரு பூச்சி வந்தது
நீ பூச்சியாக வந்தாய்
நீ வருவதற்கு முன் சலிப்பு வந்தது
நீ சலிப்பாக வந்தாய்
நீ வருவதற்கு முன் ஒரு சொல் வந்தது
நீ சொல்லாக வந்தாய்
நீ வருவதற்கு முன் கவிதை வந்தது
நீ கவிதையாக வந்தாய்
நீ வருவதற்கு முன் ஒரு காதல் வந்தது
நீ காதலாக வந்தாய்
நீ வருவதற்கு முன் உன் நிழல் வந்தது
நீ நிழலாக வந்தாய்
நீ வருவதற்கு முன் நீ வந்தாய்
நீயாக வந்தாய்
4
கண்களில் காதல் இல்லை
சொல்லில் மறைவிடம் இல்லை
பொது வெளியிலே பேசுகின்றோம்
சந்தேகிக்கிறார்கள்
பின் தொடர்ந்து வருகிறார்கள்
விட்டுச் சென்ற தடயங்களை
சோதனைக்கு அனுப்புகிறார்கள்
,
பூமியில் வெய்யில்
விழுவதை போல சாதரணமாக இருக்கின்றோம்
மழைக்கு ஒதுங்கு வது போல
நிழலுக்கு ஒதுங்குகின்றோம்
உன் சொல்லிலிருந்து உன்னையும்
என் சொல்லிலிருந்து என்னையும்
அறிமுகப்படுத்துகின்றோம்
,
ஆனால் உளவாளியாக மாறுகிறார்கள்
சற்றுத் தொலைவில்
தேர்ந்தெடுத்த இடத்தில் கூடிக் கூடி பேசுகிறார்கள்
,
இன்னும் ஒரு நட்பு கூட
நம்மோடு இணைக்கப்படவில்லை
ஒரு கோப்பைத் தேநீர் நம்மிடையே வரவில்லை
உன் சொல்லை நானும்
என் சொல்லை நீயும்
அளந்துக்கொண்டிருக்கின்றோம்
உன் எளிமை அமைதியை கொண்டு வருகிறது
சொல்லில் உள்ள அரசியலை சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
மெல்லிய காற்றில் இலைகள்
அசைவதைப்போல நீ அசைகிறாய்
,
கசாப்புக் கடையில்
இலைகளை தின்னும் ஆடுகளைப்போல
பொருந்தாத சொற்களைத்
தின்றுக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
நூற்றாண்டுகள் கடந்து போயின
இன்னும் அது வந்துக்கொண்டு இருக்கிறது
எல்லாவற்றையும் மாற்ற முடியவில்லை
மாற்ற முடியாத ஒன்றாகவும்
மாறிய ஒன்றாகவும் காதல் இருக்கிறது
அவர்கள் எந்தப்பக்கம் நிற்கிறர்கள்
எந்தப்பக்கம் நின்றாலும்
வேட்டையின் குறி நம்மை நோக்கி இருக்கிறது
எதைச் செய்தாலும்
தவறுதலாக நடந்து விட்டதென்று
அவர்கள் கடந்து விடலாம்
நமக்கு அது உயிரின் வாதை
00
கோசின்ரா
கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:”புது எழுத்து வெளியீடு