எப்போதும் ஓடுங்க என்ற சத்தம் கேட்டாலும் அனைவரும் கிழக்குப்பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். கிழக்கு பக்கத்தில் வெள்ளை நிறச் சேலையோடு வேகமாக பொன்னம்மாள் வந்து கொண்டிருப்பார். பொன்னம்மாள் தான் தாஜ்மஹால் மண்டபத்தின் உரிமையாளர்.

அவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த வழியாக ஏதோ ஒரு வேலைக்காகப் போவார். அப்படிப் போகும் போது யாராவது மண்டபத்தின் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உடனே சத்தம் போட்டு திட்ட ஆரம்பித்து விடுவார். மற்றும் அப்படித்தான் அவர் கண்ணில் தென்பட்டதும் அனைவரும் சிட்டாகப் பறந்து ஓடிவிட்டார்கள்.

ஆனாலும் மண்டபத்தின் முன்பு வந்து நின்று கொண்டு “இனிமேல் தாராச்சி இங்க வெளையாடுறதப் பாத்தே கையக் கால முறிச்சுப் போடுவேன். ஆள் இல்லைன்னா என்ன கசுமாலம் பண்ணி வச்சிருக்குதுக.  திண்ண மேல பூரா கல்லு மண்ணு. என்னதான் பண்றதோ தெரியல.  கதவைப் பூரா ஒடைச்சு வச்சிருக்குதுக” என்று சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரம் திட்டுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்தார். “காசு போட்டுக் கட்டி வெச்சா இடிச்சுப் போட்டு போயிடுறுதுகா கருமாந்திரம்.  காசு என்ன சும்மா வருதா? ராத்திரி பகல்னு அந்த மனுஷன் சம்பாதிச்சது இப்படிப் போகுதே. அந்த மனுஷன் போய் சேர்ந்தாலும் எங்களை வாழ வச்சுட்டு இருக்கிறாரு” என்று பெருங்குரல் எடுத்து திட்டிவிட்டு தன் கணவரை நினைத்து அழுகையோடு மூக்கில் வழிந்த சளியைச் சிந்தித்து எரிந்துவிட்டு, முந்தானையால் மூக்கைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

இதை எல்லாம் இந்து இடுக்கு சந்து பொந்தில் மறைந்திருந்தவர்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். பொன்னம்மாள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே வந்தார்கள். எப்பொழுதுமே யார் திட்டினாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு அடுத்த நொடியே விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். அன்றும் அப்படித்தான் மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது.

இளவரசிக்கு பறப்பது மிகவும் பிடிக்கும். ஒரு துண்டை எடுத்து பின் கழுத்தில் கட்டிக் கொண்டு திண்ணையின் மீது அல்லது மரத்தின் கிளைகளின் மீது நின்று கொண்டு கைகளை விரித்து பறப்பது போல் வைத்துக் கொண்டு குதிப்பாள். சில நேரங்கல் விழுந்து முட்டியில் கை கால்களில் சீராய்ப்பிலிருந்து பெரிய அடி கூட ஏற்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் அவளுக்குக் கவலை இல்லை. ஏதாவது ஒரு நாள் பறந்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

எப்பொழுது ஏரோபிளேன் மேலே பறந்து சென்றாலும் அதை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருப்பாள். பெரியம்மா கூறிய கதைகளில் வரும் மாயாஜாலம் போல் தானும் பறக்க முடியுமா என்று எண்ணுவாள். நானும் ஒரு நாள் அந்த கதையில் வரும் தேவதை போல் பறப்பேன் என்று அடிக்கடி கூறுவாள். பள்ளி விட்டு வந்ததும் வெளக்காங்காட்டை நோக்கி ஓடுவாள். அங்கு தான் சுப்பாத்தா பெரியம்மா ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார்.

திருமணம் ஆகிய சில வருடங்களிலேயே பெரியப்பா இருந்து விட தனியாக வசித்து வருகிறார். அவருக்கு அவருடைய 10 ஆடுகள் தான் துணை. அவ்வப்போது இளவரசியும்.  

இளவரசியின் அப்பாவோடு பிறந்தவர்கள் மொத்தமே ஏழு பேர். ஆறு ஆண்கள் ஒரு பெண். பிறந்தவுடன் இரண்டு ஆண் குழந்தைகள் இறந்து விடடன. மீதி  நாலு ஆண்கள் ஒரு பெண்.

சுப்பாத்தா பெரியம்மாவை பெரியப்பாவுக்கு திருமணம் வைத்த போதே பெரியப்பாவின் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்தது என்று அம்மா கூறியிருக்கிறார். என்னை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று பெரியம்மாவும் அடிக்கடி கூறுவார். ஆனாலும் பெரியப்பாவை அன்போடு கவனித்ததையும் கூறியிருக்கிறார். அவரின் அன்பைப் பற்றியும். அவரைப் போல் யாரும் இருக்க மாட்டார் என்றும் கூறுவர்.

ஒருநாள் பைத்தியம் முற்றி தென்னை மரத்தில் ஏறி மரத்திலிருந்து நெல்லு வயலுக்குள் விழுந்து விட்டார். யாரும் ஒரு நாள் இரவு முழுவதும் பார்க்கவில்லை. மறுநாள் விடிந்து தான் பார்த்தார்கள். ஆனால் பெரியப்பாவின் உயிர் பிரிந்திருந்தது என்று பெரியம்மா பெரியப்பாவின் இறப்பு பற்றி இளவரசியிடம் கூறியிருக்கிறார். இளவரசியின் அப்பா தான் கடைசிப் பையன். எல்லோரையும் விட இளவரசியின் அப்பா மீது சுப்பாத்தாவிற்கு பாசம் அதிகம்.

அவர் திருமணம் முடித்து வரும் பொழுது 12 வயது பையனாக சந்தானம் இருந்தார். திருமணமான சில மாதங்களிலேயே மாமியார் இறந்துவிட்டார். தாயில்லா பிள்ளை சந்தானத்தின் மீது சுப்பாத்தாவுக்கு பாசம் அதிகமானது. சந்தானம் என் குழந்தை மாதிரி என்று அடிக்கடி கூறுவார். இளவரசியின் அம்மா உட்பட அங்கு எந்தப் பெண்ணுக்கும் படிப்பு வாசனை கிடையாது. ஆனால் அந்தக் காலத்திலேயே சுப்பார்த்த பெரியம்மா மட்டும் ஐந்தாவது வரை படித்திருந்தார். ஏனோ தெரியவில்லை சுப்பாத்தா பெரியம்மாவிடம் ஊருக்குள்ளும் சரி சொந்தத்திலும் சரி யாரும் அதிகமாகப் பேச மாட்டார்கள்.

ஆனால் இளவரசி அவருடன் சென்று பேசுவதை அதிகம் விரும்புவாள்.  எப்போது பள்ளி விடும் பெரியம்மாவை எப்போது பார்க்கலாம் என்று இளவரசியும், இளவரசியை எப்போது பார்க்கலாம் என்று சுப்பாத்தாவும் காத்திருப்பார். இளவரசிக்கு சுப்பாத்தா பெரியம்மாவின் மீது பேரன்பு வர காரணம் அவர் இவள் மீது கொண்ட பாசம் அன்பு மட்டும் அல்ல. அவர் கூறும் கதையும் தான். கதை என்றால் இளவரசிக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களோடே கதை கேட்ட நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பாள். பெரும்பாலும் பெரியம்மா கூறுவது தேவதை கதைகள் தான் எப்போதுமே தன்னை தேவதையாக நினைத்துக் கொள்வாள் இளவரசி.

பெரியம்மா எத்தனை தேவதை கதைகள் கூறினாலும் ஒவ்வொரு நாளும் பெரியார் தாத்தாவைப் பற்றிக் கூறாமல் இருக்க மாட்டார். பெரியாரின் வாழ்க்கை பற்றியும் அவருடைய கருத்துக்களையும் கூறுவார். இளவரசிக்கு சிலது புரியும் சிலது புரியாது.

ஒவ்வொரு நாளும் கதை கூறும் பொழுது அந்த கதையை அந்த நாளில் முடித்து விட மாட்டார். அப்படியே முடிந்தாலும் மற்றொரு கதையை ஆரம்பித்து வைத்துவிடுவார். “ஏன் பெரியம்மா நீங்க கதையை முடிக்கவே மாட்டேங்கிறீங்க. கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வச்சிருக்கீங்க. எனக்கு அடுத்த நாள் வந்து கேட்கிற வரைக்கும் என்ன ஆகும்னு யோசிச்சுட்டே இருப்பேன். அடுத்த நாள் வந்து கேக்குறதுக்குள்ள என் மண்டையே வெடிச்சற மாதிரி ஆயிரும். என்னென்னமோ ரோசிப்பேன். அப்படி ஆகுமா இப்படியாகுமா அப்படின்னு” என்று கூறினாள் இளவரசி.

“இப்படி எல்லாம் யோசிக்கணும்னு தான் கதைய முடிக்கிறது இல்ல. அது மட்டும் இல்லாம முடிச்சிட்டா அப்பவே சுவாரசியம் போயிடும். நீ அத ஒரு நாள் முழுசு யோசிப்பியா? என்ன நடக்கும் என்ன நடக்கும்னு புதுசு புதுசா ரோசன பண்ணவே இல்லையா அதுக்குத்தான்” என்பாள். ஆனால் அதைத் தாண்டி ஒரு காரணமும் இருந்தது.

கதையை சுவாரசியமாக நிறுத்தும் போது அடுத்த நாள் அந்தக் கதையைக் கேட்க ஓடி வருவாள். ஏனென்றால் இளவரசியோடு தினமும் இருப்பது  சுப்பாத்தாவுக்கு அவ்வளவு ஆசுவாசத்தை கொடுக்கும். எனக்கு சாமி கொடுத்த வரம் தான் பெரியம்மா என்று நினைப்பாள் இளவரசி.

தனக்கு எல்லாமே இளவரசி தான் என்று நினைப்பார் சுப்பாத்தா. “அந்தக் கிழவன் சொல்றது சரிதான். நீதான் எட்டு ஜில்லாவுக்கே எளவரசி” என்று அடிக்கடி சுப்பாத்தாவும் கூறுவார். அந்த கிழவன் என்று சுப்பாத்தா  கூறியது தன் மாமனாரை.

சனி ஞாயிறு  நண்பர்களோடு விளையாடி முடித்து வெளக்காங்காட்டைத் தாண்டி இருக்கும் கிராமத்திற்குச் செல்வாள். அங்கு தான் சுப்பாத்தாவின் வீடு இருக்கிறது. வீட்டு வாசலில் ஒரு கோணப் புளியங்கா மரம் இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டில் அதுதான் சண்டைக்கான காரணமாகவும் இருந்தது. கிளைகள் பரப்பி அக்கம் பக்கத்தினர் வீட்டு சுவற்றிலும் ஓடுகளிலும் இடித்துக் கொண்டிருந்தது. அதை வெட்டச் சொல்லி எவ்வளவோ சண்டையிடுவார்கள். சுப்பாத்தா அந்த மரத்தை வெட்டவில்லை.

அதற்கும் இளவரசி தான் காரணம். ஆடு மேய்க்கும் போது கதைகளின் வழியாக இளவரசியை தன்னுள் ஈர்த்து வைத்திருந்த சுப்பாத்தாவிற்கு ஊரார் திட்டினாலும் இளவரசி ஓடோடி காடுகளைக் கடந்து தன் வீட்டுக்கு வர காரணம் இந்தக் கோண புளியங்கா மரம்தான் என்பது தெரியும்.  அதனாலயே அந்த மரத்தை வெட்டாமல் வைத்திருந்தார். அவளுக்கு கோணப்புளியங்கா என்றால் கொள்ளைப் பிரியம். மரத்தின் மேல் ஏறி கோணப்புளிங்காவைப் பறித்து சாப்பிடுவதோடு பெரியம்மாவைச் செல்லம் கொஞ்சி விளையாடுவாள்.

தனக்கு மட்டுமல்ல தன் தோழமைகளுக்கும் கோணப் புளியங்காவைக் கொண்டு சென்று கொடுப்பாள். பெரிம்மா கூறும் கதைகளையும் கூறுவாள். அவள் தோழர்களிடம் அந்த கதைகள் அவ்வளவு பிரபலம்.

பெரியம்மா சொன்ன கதைகளை பகிராமல் அவளால் இருக்க முடியாது. பகிர்ந்தால் தான் அவளுக்கு தூக்கமே வரும். பகிரும் போது இவள் கொஞ்சம் இட்டு கட்டிக் கூறுவாள். அந்தக் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும். இவள் கதை கூறும் அழகே தனி. யாரும் இவளைப் போல் கதையை கூறி விட முடியாது. அப்படி அழகாகக் கதை கூறுவதற்கு பெரியம்மா தான் காரணம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.  பெரியம்மா கதைகள் கூறும்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். கோழி என்றால் கோழி போல் கத்துவார். யானை என்றால் தன் கைகளை தூக்கிக்கொண்டு யானை போல் பிளிருவார். இளவரசியும் அதேபோல கதைகளைச் சொல்லுவாள்.

பெரியம்மா பாடல்கள் அதிகம் கேட்பார். பெரியம்மா வீட்டில் தான் முதன் முதலில் ரேடியோப் பெட்டியை பார்த்தாள் இளவரசி. சினிமாப் படங்களும் அதிகம் பார்ப்பார். இளவரசியின் அப்பாவிக்கோ எம். ஜி. ஆர் என்றால் கொள்ளைப் பிரியம். சுப்பாத்தா பெரியம்மாளுக்கு சிவாஜி என்றால் கொள்ளை பிரியம். இருவரும் ஏதாவது விசேஷ நாட்களில் கூடும்போது அவரவர்களுக்கு பிடித்த ஆதர்ஷ நடிகர்களைப் பற்றிப் பேசி விளையாட்டாகச் சண்டையிட்டும் கொள்வார்கள். சிவாஜியின் வசனங்களை சொல்லி சொல்லி மகிழ்வார்.

“பெரியம்மா நீங்க பிறந்த ஊர் எங்க இருக்கு?” என்று கேட்டாள் இளவரசி.

“மேக்கால கரையாம் புதூர்”

“ஏன் பெரியம்மா எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்ன கண்ணு?”

“கண்ணாலம் முடிச்சுட்டா பொம்பளைங்க ஆம்பளைங்க வூட்டுக்குப் போயிர்றாங்களே அது ஏ?”

“காலங்காலமா அப்படித்தே இருக்குது”

“அதே ஆம்பளைங்க பொம்பளைங்க வூட்டுக்கு வர்றதில்லை?”

”அதெப்புடி அப்பனாத்தால வுட்டுட்டு வருவாங்க. அவிங்கள தாரு பாத்துக்குவாங்க. காடுகரைய  வுட்டுட்டு வருவாங்க. அதையாரு பாத்துக்குறது?”

“பொம்பளைங்க மட்டும் வரணுமா? காடு கரைய எல்லாம் வுட்டுட்டு போகணுமா?”

“அதுதான் காலம் காலமா இருக்குது. என்ன செய்ய?”

“நான் எல்லாம் போக மாட்டேன். என்னையக் கண்ணாலம் பண்றவன் என்ற கூட எங்க வூட்ல தான் வந்து இருக்கோணும்னு சொல்லி போடுவேன்” என்றாள்.

“அடேயப்பா நீ செஞ்சாலும் செய்வாடி ராணி செங்கமலம். நீ செஞ்சாலும் செய்வே. நீதான் எட்டு ஜில்லாவுக்கே இளவரசியாச்சே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் சுப்பாத்தா. 

“அவங்க மட்டும் அப்பனாத்தால வுட்டுட்டு வர மாட்டாங்க. நான் மட்டும் எப்படி போவ. நான் மட்டும் இந்த காடுகரைய வுட்டுட்டு எப்படிப் போவேன்”

“அப்போ என்னைய வுட்டுட்டு போயிடுவே அப்படித்தானே?”

“உங்களையும் சேர்த்து தான். உங்க கதையை கோண புளியங்கா மரத்தை விட்டுட்டு நான் எப்படிப் போறது?” என்று கன்னத்தை செல்லம் கொஞ்சினாள் இளவரசி.

“பொம்பளைங்க என்னைக்குமே சொந்த கால்ல நிக்கணும் அதுக்கு தான் படிக்கணும். படிச்சு வேலைக்கு போகணும்”

“ஏன் பெரியம்மா நீங்களும் படிச்சிருக்கீங்கில ஏதாவது ஆபீஸ்ல வேலைக்கு போய் இருக்கலாமே?”

“அதுக்கு இன்னும் படிச்சிருக்கணும். பொட்டப் புள்ள படிச்சு என்ன பண்ணப் போறேன்னு நிறுத்திட்டாங்க”

“ஆனாலும் விடக்கூடாது அப்படின்னு நீங்க ஆடு மேச்சுட்டு சம்பாதிச்சுக்கிட்டு இருக்கீங்க அப்படித்தானே”

“ஆமாங்கன்னு! உங்க பெரியப்பா இறந்த பின்னாடி எங்க அப்பனும் ஆத்தாளும் அங்கேயே வந்து அவங்களோடவே இருக்கச் சொன்னாங்க. சோறு போடறோம் அப்படின்னாங்க. உங்களை நம்பி நான் வரமாட்டேன். நான் இங்கேயே இருந்துக்குறேன். எம்பட ஜீவனத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்னு சொல்லிப்புட்டேன்”

“பெரியம்மா உங்களப் பாத்தா எனக்கு அவ்ளோ பிடிக்கும் தெரியுமா? ஏன்னே தெரியல நீங்க பேசறது எல்லாமே புதுசா இருக்குது” என்று கட்டியணைத்தாள் இளவரசி.

“பெரியார் தாத்தாவைப் பத்தி உன்றகிட்ட சொல்லி இருக்கேன்ல. அவர்  பெண்கள் கையில இருக்கிற கரண்டியப் புடுங்கிட்டு புஸ்தகம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். நீ ஒரு நாளும் கரண்டியை தூக்காதே. பொஸ்தவத்தை விட்டுடாத” என்றார்.

“அப்ப நான் சோறாக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?”

“ஆமா நீ எதுக்கு சோறு ஆக்கிட்டு இருக்கே. நீ ஆபீஸ் வேலைக்கு போ”

“அப்புறம் யாரு சோறாக்குவாங்க?”

”உன்னக் கட்டிக்கப் போறவன ஆக்கச் சொல்லு”

“அப்ப அவன் ஆபீஸ் வேலைக்குப் போக மாட்டானா?”

“தாரு கண்டது காலம் மாறுனாலும் மாறும். ஆப்பளைங்க சோறு ஆக்குற காலம் வந்தாலும் வரும். இல்லைனா ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்குங்க. சரியா?”

“எங்கம்மா என்றானா.. போற வூட்டுல சோறு தண்ணி ஆக்க தெரியலன்னு என்னைய பேசுவாங்க ஒழுங்கா சோறு ஆக்கிப் பழவு பழவுனு சொல்லுது. நீங்க என்னடான்னா சோறாக்கி பழகாதேனு சொல்லறீங்க. தாரு சொல்றதக் கேக்குறது?” என்று கேட்டாள் இளவரசி.

ஒரு வாரம் கடந்த நிலையில் எதிர் வீட்டில் அதிகாலை நேரத்தில் ’ஐயோ ஐயோ விஜயா! என் தலையில் கல்லைத் தூக்கி போட்டுட்டு போயிட்டியே!’ என்ற சத்தம் கேட்டது…

-வளரும்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *