பும்லா பாஸ் செல்கிற வழி நெடுகிலும் ராணுவ வீரர்களையும் அவர்தம் வாகனங்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தென்பட்ட நீர் நிலைகள் எல்லாம் முற்றிலும் பனியால் உறைந்து கிடந்தன. உறையாத சிறு பரப்பு மட்டும் இளநீல நிறத்தில் தெரிவதைக் கொண்டுதான் அதனை நீர்நிலை என்றே அடையாளம் காண முடிந்தது. பும்லா பாஸை நெருங்கும்போதே பனிப்பொழிய ஆரம்பித்து விட்டது. வாடிக்கையாக வருகிற பாதையென்பதால் அனுபவ முதிர்ச்சியோடு எந்தப் பிசகும் இல்லாமல் ஓட்டுநர் ஸ்கார்பியோவை இயக்கிச் சென்றார். பும்லா பாஸை அடைந்த போது அங்கே சுமோ, ஸ்கார்பியோ வகை வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் அணிசேர்ந்து நின்றிருந்தன. பைக்கர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சாகசங்கள்தான். அவர்கள் விரும்பும் பயணம் என்பது சவால்கள் நிறைந்த, கடினமான பாதைகளில் நிகழ்த்தப்படுவதுதான். எனவேதான் இமயமலை எப்போதும் அவர்களது இலக்காக இருக்கிறது. ராணுவத்தினரால் நடத்தப்படும் தேநீர் விடுதி மற்றும் ராணுவ முகாம்கள் என சில கட்டடங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அந்த வெளி முழுவதையும் வெண்மை வியாபித்திருந்தது.

ஸ்கார்பியோவில் இருந்து இறங்கியதுமே நேரே தேநீர் விடுதியை நோக்கிதான் சென்றோம். இக்கடுங்குளிருக்கு ஒரு கோப்பைத் தேநீர் அருந்துவதை விடவா அர்த்தப்பூர்வமான செயல் இருந்து விடப்போகிறது! ஒரு கோப்பைத் தேநீரின் விலை 80 ரூபாய் என்று சொன்னதும் மெல்லதிர்ச்சி எனக்குள் பரவியது. இந்த விடுதியில் எல்லாமே சராசரி விலையைக் காட்டிலும் அதிகம்தான். வெண்டிங் மெஷினில் பிடித்துத் தரப்பட்ட தேநீரில் சூடு குறைவாக இருந்தது. போக அது தேநீர் அல்ல தேநீர் போலச் செய்யப்பட்டது. சீன எல்லையில் நின்று கொண்டு ஒரு தேநீரின் சுவைக்காகவெல்லாம் அதிருப்தி அடைய விரும்பவில்லை.  ஆகாஷ் சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் வெளியே வந்தேன். இந்திய – சீன எல்லையில் ராணுவத் தடுப்புக்கு முன்பாக பயணிகள் குழுமியிருந்ததைப் பார்த்து அங்கே சென்றேன். ராணுவ அதிகாரி ஒருவர் இந்தியில் அவர்களிடம் பெரும் தீவிரத்துடன் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை என்றாலும் அதன் சாரத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது. சீனா, திபெத்தினை ஆக்கிரமித்ததற்குப் பிறகு சீனாவிடமிருந்து இந்த பும்லா பாஸ் எல்லையைப் பாதுகாத்த இந்திய ராணுவத்தின் வரலாற்றை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். பயணிகள் பெரும் நெகிழ்ச்சியோடு அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இடையிடையே கைதட்டினர். இந்தி புரியாவிட்டாலும் நானும் அவர்களுடன் கலந்து அந்த உரையைக் கேட்டேன். அரை மணி நேரத்துக்குப் பிறகு அவரது உரையை முடித்துக் கொண்டார். தடுப்புக்கு அப்பால் விரிந்திருந்த பனிக்காடுதான் சீனா. முதல் முறையாக ஒரு அந்நிய நிலத்தைக் கண்ட சாகச உணர்வு மேலோங்க கொஞ்ச நேரம் பனிப்பரப்பில் நடந்து திரிந்தேன். எல்லைகள் நம்மால் உருவாக்கப்பட்டதுதானே என்று சொல்லலாம்தான். மனித குல வரலாற்றின் பெரும்பகுதி அந்த எல்லைகளை விரிப்பதும், காப்பதுமாகவே கிடக்கிறது. கடல் மட்டத்திலிருந்து பும்லா பாஸ் 15200 அடி உயரத்தில் இருப்பதைக் குறிக்கும் கல் முன்பாக நின்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். என்னைப் புகைப்படம் எடுத்துத் தரும்படி ஆகாஷிடம் சொன்னேன். அவனையும் படமெடுத்துக் கொடுத்தேன்.

தேநீர் விடுதிக்குப் பின்புறத்தில் கழிப்பறை அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் பனிப்பரப்பின் மேல் சிறுநீர் கழிக்கவே மனம் உந்தியது. வேண்டாத ஆசைகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கழிப்பறையையே பயன்படுத்தினேன். இன்னொரு விபரீத ஆசையினையும் நிறைவேற்றிக் கொள்ளத் துணிந்தேன். கொஞ்ச தொலைவு நடந்து மனிதத் தடம் பதியாத பகுதியிலிருந்து பனியை அள்ளி கண்ணாடி டம்ளரில் இட்டு அதில் ரம்மை ஊற்றினேன். ஒரு மிடறுதான் அருந்தினேன். பல்லே தனியாகக் கழன்று விடுமளவு கிரகிக்க முடியாத குளிர்ச்சி நரம்புகளில் பாய அதை கீழே உமிழ்ந்து விட்டேன். எல்லாம் இந்த இன்ஸ்டா ரீல்ஸால் வந்த விபரீத ஆசை. நண்பகல் 1 மணிக்கெல்லாம் ராணுவ அதிகாரிகள் வந்து பயணிகளைக் கிளம்பச் சொன்னார்கள். ஓட்டுநர்கள் பயணிகளை சீக்கிரத்தில் வரும்படி துரிதப்படுத்தினர். ஒவ்வொரு வாகனமாக அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. நாம் இறுதியில் செல்வோம் என இன்னும் கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொண்டேன். கண் கூசும் பனிப்பரப்பில் நடந்து கொண்டிருந்தேன்.

எல்லா வாகனங்களும் சென்ற பிறகு இறுதியாக எங்களது ஸ்கார்பியோ கிளம்பியது. ஒப்பந்தப்படி ஆகாஷ் இப்போது முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். இதற்கு மேல் போனால் பனி சாலையை மூடி விடும் விளைவு இருப்பதால்தான் இவ்வளவு துரிதப்படுத்துகின்றனர் என ஓட்டுநர் சொன்னார். ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய அந்தப் பாதையில் பின்னால் வருகிற வாகனத்தால் முந்திச் செல்ல முடியாது. இதனாலேயே வாகனத்தை இடையில் எங்கேயும் நிறுத்தாமல் ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார். பனி மூடி விடும் அபாயத்தையும் அவர் உணர்ந்தே செயல்பட்டார். ஏரி ஒன்றைக் கடக்கையில் அங்கே நிறுத்தும்படி சொன்னேன். நாங்கள் இறுதியாகக் கிளம்பியதால் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்கிற காரணத்தால் அவர் 2 நிமிடங்கள் அவகாசம் தந்து நிறுத்தினார். அங்கே நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். முக்கால்வாசி பனியால் சூழப்பட்டிருந்த அந்த ஏரியைப் பார்த்தபடியே ஆவி மேலெழ தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. என்னிடமிருந்த ரம்மை ஆறிய தேநீராக நினைத்து நான்கு மிடறு அருந்தினேன். திரும்பும் வழியில் ஆகாஷிடம் கொஞ்சம் பேச முடிந்தது. அவன் பட்டய மேற்படிப்புக்கு சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருப்பதாகச் சொன்னான். சென்னை வந்தால் அவசியம் அழைக்கும்படி சொன்ன பிறகு இருவரும் அவரவர் எண்களைப் பரிமாறிக் கொண்டோம். ஓட்டுநரிடம் தவாங்கில் தங்கும் இடம் பற்றி விசாரித்தேன். இணைப்புக் கழிவறையுடன் குறைந்த வாடகையில் ஓர் அறை வேண்டும் என்பதே நோக்கம். தவாங்கில் அரசால் நடத்தப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதியில் 400 ரூபாய்க்கே அறை இருக்கிறதென அவர் சொன்னார். நிச்சயமாக இது ஒரு நற்செய்திதான். அடுத்த நாளே அந்த விடுதிக்கு மாறி விடும் முடிவினை எடுத்து விட்டேன். 

தவாங்கை அடைந்த போது மாளாத பசி. கண்மணிகளின் உணவகத்துக்குப் போய் ‘தாளி’ தரும்படி சொன்னேன். என்னைக் கவர்ந்த அந்த மோன்பா பெண்ணிடம் தவாங் அரசு விடுதி குறித்துக் கேட்டதற்கு அவள் அது பற்றி எதுவும் தெரியாது என்றாள். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் உணவருந்திக் கொண்டிருந்தவர் அவ்விடுதி நன்றாக இருக்கும் என்று சொன்னதோடு ஹீட்டரும் இருக்கும் என்றார். இப்போது தங்கியிருக்கும் விடுதி அறையைக் காட்டிலும் நூறு ரூபாய்தான் அதிகம். அடுத்த நாளே அவ்விடுதிக்குச் சென்று விட்டேன். பெரும்பாலான அறைகள் விருந்தினர்கள் இன்றிக் கிடந்தன. எனக்குத் தரப்பட்ட அறையில் உள் நுழைந்ததுமே வலப்புறத்தில் கழிவறையுடன் இணைந்த குளியலறை இருந்தது. அதில் ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. படுக்கையை ஒட்டியிருந்த ஜன்னலைத் திறக்கையில் பனிமூட்டம் விடுதியைச் சூழ்ந்திருந்தது.

***

இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது பெரும் சவாலாக முன் நின்றது பணம்தான். நான் ஒரு பத்திரிகையாளன் என்பதால், ஓர் ஊருக்குச் சென்றால் அங்கே சுற்றித் திரிவது போக மீதமுள்ள நேரத்தில்  ஃப்ரீலான்சராக கட்டுரைகள் எழுதி சம்பாதிக்கும் திட்டத்தோடுதான் இப்பயணத்தையே தொடங்கினேன். பும்லா பாஸ் பயணத்தை முடித்து விட்டு வந்த பிறகு இரண்டு நாள்கள் கட்டுரை எழுதும் பணியில் ஈடுபட்டேன். தவாங்கில் நிலவிய கடுங்குளிரின் விளைவே கைகள் விரைத்துப் போவதால் தட்டச்சு செய்ய மிகவும் கடினமாக இருந்தது. நான்கு வரிகளுக்கு ஒரு முறை கைகளைத் தேய்த்தும், உதறியும் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக சரளமாக எழுத முடியவில்லை. வெப்ப மண்டலப் பகுதியில் வளர்ந்த என்னால் கடுங்குளிரை பரவசத்தோடு அணுகத் தெரிந்திருந்ததே தவிர அதனுடன் இயல்பாக உறவாட இயலவில்லை. அதிகப்படியான நேரத்தை கனமான போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தபடியே கழித்தேன். விடுதியில் இருந்த உணவகத்திலேயே சாப்பிட்டேன். மிகக் குறைவான விருந்தினர்களே விடுதியில் தங்கியிருந்தனர். ஆகையால், அந்த விடுதியில் பெரும் நிசப்தம் நிலவியது. ஆர்ப்பரிப்புகள் அற்ற அமைதியான சூழல் மலைப்பிரதேசங்களுக்கே உரித்தானது. விடுதியின் முகப்பில் இருந்து பின்புறத்தில் பேருருவாய் எழுந்திருக்கும் ஷக்யமுனி புத்தரைக் காண முடிந்தது. சில வேளைகளில் பனி முற்றிலும் புத்தர் சிலையை மூடி விடும். இரவானதும் ஜெர்க்கினை அணிந்து கொண்டு நகருலா சென்று வருவேன். இப்படியாக காலம் நகர்வது சற்று அலுப்பூட்டக்கூடியதாக இருந்தது. செயலின்மைக்குள் சென்று விட்டதைப் போன்ற உணர்வு மேலெழுந்ததுமே தவாங்கிலிருந்து விரைவில் கிளம்ப வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருந்தேன். என்னைக் கூட்டிச் செல்வதற்காகவே அனுப்பப்பட்டவனைப் போல அப்போது என் அறைக்கு வந்தான் ஆகாஷ்.

என்னுடன் பும்லா பாஸுக்கு வந்த ஆகாஷ் இல்லை. இவன் பெங்களூருவைச் சேர்ந்த பைக்கர் ஆகாஷ். கருப்பு நிறத்திலான லெதர் ஜாக்கெட், பேண்ட் மற்றும் கையுறை அணிந்து ஹெல்மெட்டை கையில் வைத்தபடி அவன் எனது அறைக்குள் வந்தான். பைக்கர்களுக்கான மிடுக்கான அத்தோற்றத்தில் வந்தாலும் மழலைத்தனமான சிரிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது. “ஹாய்… நீங்க தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கிறீங்கன்னு ரிசப்ஷன்ல சொன்னாங்க… நான் பெங்களூர்தான்” என்றான். அவனை வரவேற்று சில வார்த்தைகள் பேசினேன். அவன் இருபத்தைந்து நாள்கள் பயணத்தைத் திட்டமிட்டு பெங்களூருவில் இருந்து கிளம்பியிருக்கிறான். தவாங் வந்ததன் நோக்கமே பும்லா பாஸ் செல்வதற்காகத்தான். அடுத்த நாள் அவன் தனது ராயல் என்ஃபீல்டிலேயே பும்லா பாஸ் செல்லவிருப்பதாகச் சொன்னான். எனது பும்லா பாஸ் பயண அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்தான். எனக்குப் பக்கத்து அறை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேரில் ஒரு மனிதனுடன் தமிழில் உரையாடியது ஓர் உன்னதத் தருணமாக அமைந்தது.

இச்சந்திப்புக்குப் பிறகு அடுத்த நாள் மாலை தவாங்கின் கடைத்தெருவில் அவனைப் பார்த்தேன். பும்லா பாஸ் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தான். சற்றே வதங்கிப் போய் வந்திருந்தான். தவாங்கிலிருந்து திரும்புகையில் பனிப்பொழிவு மிகுந்து விட்டதால் பைக் பயணம் மிகக்கடினமாக இருந்தது என்றான். அந்த முரட்டுப்பாதையில் பயணித்ததில் அவனது பைக் பழுதாகி விட்டது. நானும் அவனுடன் சென்று பழுது நீக்கும் கடையைத் தேடியடைந்து, சரி செய்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம். மறுநாள் அவன் தவாங்கிலிருந்து கிளம்புவதாகச் சொன்னான். சிக்கிம் மாநிலம் கேங்டாக் அல்லது இன்னொரு நகரம் (நினைவில் இல்லை) இரண்டில் எங்கு செல்வதென இன்னும் தீர்மானிக்கவில்லை என்றான். எப்படியாயினும் அவன் தேஸ்பூரை கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் நான் தேஸ்பூர் வரை அவனுடன் இணைந்து கொள்வதாகச் சொன்னேன். தவாங் மலைப்பாதையில் சுமோவிலும், பேருந்திலும் பயணித்து விட்டேன் என்பதால் பைக்கில் பயணிக்கும் அனுபவமும் தேவையெனப்பட்டது.

மறுநாள் காலை எங்கள் இருவரது பேக் பேக்குகளையும் ட்ராவல் ஏஜென்சி மூலம் தேஸ்பூருக்கு அனுப்பி விட்டு, ஷோல்டர் பேக்கில் தேஸ்பூர் வரைக்கும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஆகாஷ் தவாங்கிலேயே பெட்ரோல் நிரப்பிக் கொண்டான். நாங்கள் தவாங்கில் இருந்து கிளம்பியபோது மென் தூறலாய் மழை பெய்தது. பும்லாபாஸ் பயணத்தை மேற்கொண்டு விட்ட நிறைவுடனும், 8 நாள்கள் தவாங்கில் வாழ்ந்த நிறைவுடனும் அந்நகருக்கு விடை கொடுத்தேன். ஷக்யமுனி புத்தரை வெண்முகில் தழுவிச்சென்ற காட்சியும், அந்த விடுதி நிர்வாகியான மோன்பா பெண்ணின் வதனமும் மறக்க முடியாதது.

ஆகாஷ் இன்ஸ்டா 360 கேமிராவை பைக் ஹேண்டில்பாரில் பொருத்தினான். இந்த மாடல் அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள நண்பர் அவனுக்கு அனுப்பினார் எனவும் இதன் விலை அறுபதாயிரம் என்றும் சொன்னான். அவனது ரைடிங் ஜாக்கெட், பேண்ட் தொடங்கி தொலைதூரப் பயணத்துக்கென அவன் பைக்கில் கூடுதலாகப் பொருத்தியிருக்கும் உபகரணங்கள் வரை ஒவ்வொன்றின் விலையையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். எனது யூகங்களுக்கு அப்பாற்பட்டு அவற்றின் விலை இருந்தது. பைக்கர்களின் வாழ்வியல் என்னைப் பொன்ற தனிப்பயணிக்கு முழுவதுமாக அப்பாற்பட்டது என அப்போது அழுத்தமாகப் புரிந்தது.

சில தொலைவு சென்றதற்குப் பிறகு மழை வேகமெடுத்தது. ஏற்ற இறக்கங்களும், வளைவுகளும் மிகுந்த அந்தப் பாதையில், ஈரமான சாலையில் பைக் ஓட்டிச் செல்வது சவால் மிகுந்ததுதான். எங்கு வேண்டுமானாலும் வழுக்கும் அபாயத்தை உணர்ந்தே செல்ல வேண்டியிருந்தது. “தனியாக வந்திருந்தால் வேகமாகச் சென்றிருப்பேன். நீ உடன் வருவதாலேயே அதிக கவனத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது” என்று ஆகாஷ் சொன்னான். உண்மைதான். எப்படிப்பட்ட  சவாலையும் தனியாக நாம் எதிர்கொள்ளலாம். என்னவாயினும் அது நம்மை மட்டுமே சாரும். உடன் வருகிறவரை அதற்குள் தள்ளி விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வு ஆகாஷின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. தோராயமாக 40 கிலோமீட்டர் கடந்திருப்போம். சாலை மிக மோசமான நிலையில் இருந்தது. மழையால் சேறாகிக் கிடந்தது. மிக மெதுவாகச் சென்றாலே வழுக்கி விடும் நிலையில்தான் பைக்கை ஓட்டிச் சென்றான் ஆகாஷ். ஏற்றங்களில் பைக்கை பெரும் விசையோடு செலுத்த முடியாததால் நான் இறங்கிக் கொள்ள அவன் காலால் உந்தி உந்தி மெதுவாகச் செலுத்திக் கொண்டு போனான். ஒரு கட்டத்தில் இது எங்களை பெரும் சோர்வுக்குள் தள்ளியது. நான் உடன் வராவிட்டால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது என்று நினைக்கையில் எனக்கு குற்ற உணர்ச்சி மோலோங்கியது.

வழியில் ஒரு சாலையோர உணவகத்தில் நிறுத்தி சாப்பிடச் சென்றோம். எனக்கு முன்பே சாப்பிட்டு முடித்த ஆகாஷ் உணவகத்துக்கு வெளியே யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவர் பொலிரோ பிக் அப் ஓட்டுநர். ஆகாஷ் தவாங்குக்கு வருகிற போதே இவரைச் சந்தித்திருக்கிறான். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை. பிறகு ஆகாஷ் என்னிடம் சொன்னான். “சீலா பாஸ் தாண்டுகிற வரையிலும் சாலை இது போன்று கடும் மோசமான நிலையில் இருப்பதால் பைக்கில் இருவர் செல்வது கடினம். ஆகவே, இவர் உங்களை சீலா பாஸ் தாண்டுகிற வரையில் தனது பொலிரோவில் கூட்டிச் செல்வதாகச் சொல்கிறார்” என்றான். நானும் அதையே எதிர்பார்த்திருந்தேன் என்பதால் பொலிரோவில் கிளம்பினேன். அதன் ஓட்டுநர் என்னிடம் இந்தியில் பேச தலைப்பட்ட போது எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்திலேயே பேசினேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களுக்குள் உரையாடல் நிகழாமலேயே போனது. அந்தச் சூழலை இலகுவாக்குவதைப் போல ஸ்டீரியோ சிஸ்டத்தில் இருந்து இந்திப் பாடல்கள் ப்ளே ஆகிக்கொண்டிருந்தது. அவை மெல்லிசைப் பாடல்கள். 80களில் வெளியான திரைப்படப் பாடல்கள் என்பது எனது கணிப்பு. சீலா பாஸை நெருங்கும் முன்பே பனிப்பொழிய ஆரம்பித்து விட்டது. சோன்பப்டி துகளைப் போல் பனி உதிர்ந்து கொண்டிருக்க, பின்னணியில் ஒலிக்கும் இந்திப்பாடல் அந்தச் சூழலையே ரம்மியமாக்கியது. சீலா பாஸைத் தாண்டிய பிறகு பொலிரோ ஓட்டுநர் என்னை தேநீர் விடுதி ஒன்றில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். வீடுதான் அது. வீட்டின் ஒரு பகுதியை தேநீர் விடுதியாக்கியிருந்தனர். நான் வாசலிலேயே நின்று ஆகாஷ் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஆகாஷை நான் தடுக்கவில்லையெனில் அவன் இந்த இடத்தைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பதால் வழி பார்த்தே நின்றிருந்தேன். நினைத்ததைப் போலவே ஆகாஷ் என்னைக் கடந்து சென்று விட்டான். அவன் சென்ற வேகத்தில் எனது அழைப்புக் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. அவனது செல்போனுக்கு அழைக்கலாம் என்றல எனது போனில் சிக்னல் இல்லை. இப்படியும் ஒரு பிரச்னை. அந்தக் கடையில் உள்ளவரிடம் போன் வாங்கி அழைத்து அவனை திரும்ப வர சொன்னேன்.

அந்த வீடே கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. கடையை ஒட்டியிருந்த அறையில் பலூன்களைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்தனர். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் புத்தாடை அணிந்த படி நின்றிருந்தான். அவனுக்குதான் பிறந்த நாள். அவன் இக்கடை உரிமையாளரின் மகனாக இருக்கலாம். ஆகாஷ் அந்தக் கடையிலே மூன்று டைரி மில்க் சாக்லேட்கள் வாங்கினான். அவனும் நானும் உள்ளே சென்று அந்தக் கொண்டாட்டத்தில் அவர்களுள் ஒருவராகக் கலந்தோம். கொஞ்ச நேரத்தில் அச்சிறுவன் கேக் வெட்டிய பிறகு ஆகாஷ் அவனுக்கு டைரி மில்க் சாக்லேட்டைக் கொடுத்து வாழ்த்தினான். மேலும் அங்கிருந்த இரு சிறுவர்களுக்கும் சாக்லேட் கொடுத்தான். ஆகாஷ் எந்தச் சூழலிலும் எல்லா விதமான மனிதர்களோடும் இயல்பாகக் கலந்து விடுகிறான். நான் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவன். அவனளவுக்கு என்னால் மிக எளிதாகக் கலந்து விட முடியாது. ஆளுக்கொரு தேநீர் அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

சிறிது தொலைவு சென்ற பிறகு அடுத்ததொரு சவாலுக்கு நாங்கள் தயாராக வேண்டியிருந்து. பனி மூட்டம் சாலையினை முற்றிலுமாக மூடியிருந்தது. எதிரில் வரும் வாகனங்கள் எதுவும் தெரியாத நிலை. பனிமூட்டத்தை கிழித்துக்கொண்டு வரும் விளக்கொளியினை வைத்து மட்டுமே எதிரில் வாகனம் வருவதை தோராயமாக கணிக்க முடியும். ஆகாஷ் அவனது வண்டியில் பொருத்தியிருந்த ப்ளிங்க் லைட்டை ஒளிர விட்டான். எதிரில் வருகிற வாகன ஓட்டிக்கு இந்த சிமிட்டும் ஒலி நல்ல எச்சரிக்கையாக இருக்கும். பத்து கிலோ மீட்டரைக் கடந்தும் பனிமூட்டம் விலகவே இல்லை. ஒரு கட்டத்தில் பைக் ஓட்ட முடியாமல் எதிர்பட்ட டீக்கடையில் ஓரம் கட்டி விட்டான் ஆகாஷ். ஆளுக்கொரு ப்ளாக் டீ சொன்னோம். பனி விலகுவதாய் இல்லை.

அன்றைய தினமே தேஸ்பூரை அடந்து விட வேண்டும் என்பது ஆகாஷின் எண்ணமாக இருந்தது. அவனுக்கு பயணம் செய்வதற்கான நாள்கள் மிகக்குறைவாகவே இருந்தது. ஆகவே, ஒரு நாளைக்கூட அவன் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. அன்றைய தினமே தேஸ்பூரை அடைவது சாத்தியமற்றது. ஏனெனில் தேஸ்பூர் இருநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தது. நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்த டிராங் எனும் குறுநகரில் தங்கி விட்டு அடுத்த நாள் கிளம்புவது ஒன்றே நல்ல திட்டமாக இருக்க முடியும் என்று சொன்னேன். ஆகாஷும் அதனை ஏற்றுக் கொண்டான். பனி மூட்டம் விலகுவதற்காக அதற்கும் மேல் காத்திருக்க நேரமில்லை. ப்ளாக் டீ குடித்து முடித்ததும் ப்ளிங்க் லைட்டை ஒளிர விட்டுக் கிளம்பினோம். பயணக்களைப்பு உடலை அழுத்தியிருக்க, டிராங் நகரின் மையத்தில் உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுத்தோம். இந்நகரில் பனிப்பொழிவில்லை, கிரகிக்கவியலாத குளிர் இல்லை. குன்னூர் அளவுக்கான குளிரே நிலவியது. நல்ல உறக்கத்துக்குப் பிறகு மறுநாள் காலை எழுந்ததும் டிராங் பௌத்த மடாலயத்துக்குச் செல்லலாம் என்று ஆகாஷை அழைத்தேன். தேஸ்பூர் செல்வது மட்டுமே அவனது முதன்மை நோக்கமாக இருந்ததால் பௌத்த மடாலயத்துக்குப் போவதில் அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. நான் முன்பே சொன்னது போல பைக்கர்களின் பயணம் என்பது சாலையில் மட்டுமே நிகழ்வது. எனது விருப்பத்துக்காக மட்டுமே அவன் திராங் மடாலயத்துக்கு என்னை அழைத்துச் சென்றான். வாயிலில் என்னை இறக்கி விட்டவன்  “நீ போய்ப் பார்த்துட்டு வா… நான் இங்கயே நிற்குறேன்” என்று என்னை அனுப்பி வைத்தான்.

-உலவித் திரிவோம்.

கி.ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுப்வங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *