எழுந்தாளர் ஆதி.இராஜகுமாரனின் ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’
மலேசிய பத்திரிகை துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில் இவர் பெயரும் அடங்கும். இங்கு புதுக்கவிதைகள் அதிகரிக்க அதற்கான களம் அமைத்து பங்காற்றியவர்களில் இவரும் முக்கியமானவர். அவரின் மறைக்கு பிறகும் இன்றுவரை பலர் கவிஞர்கள் நன்றியோடு அவரை நினைக்க தவறுவதில்லை. ஆரம்பகால தமிழ்மலர் பத்திரிகை அதனை அடுத்து ஆதி.குமணனின் வானம்பாடி, தமிழோசை பத்திரிகைகளில் இருந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தமது சொந்த இதழ்களான நயனம், நிலா போன்ற இதழல்களைச் சிறப்பாக வழி நடத்தியவர். காலச்சூழலில் நயனம் இதழ் இல்லாவிட்டாலும், பலரின் படைப்புகளுக்கு அவ்விதழ்தான் தாய்வீடு. எளிமையானவர். யாரிடமும் அதிர்ந்துப் பேசாதவர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவொன்றும் மிகப்படுத்தல் அல்ல என்று அவரை அறிந்த எல்லோர்க்கும் தெரியும்.
இச்சமயம் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது. ஆங்கிலப் புலமையும் கணினி நுட்பமும் அறிந்தவர். ‘இணையம்’ என்ற சொல்லைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியவர் இவர்தான்.
அவரின் ஆலோசனையின் பெயரில் கவிஞர் மீராவாணி, ‘மழைச்சாரல்’ எனும் புலனக்குழுவைத் தொடங்கினார். அதன் வழி பல படைப்பாளர்கள் வாசகர்கள் ஒன்றிணைந்தார்கள். அக்குழு தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர் காலமானார். இக்குழுவில் மூலம் சிறுகதை போட்டி ஒன்றை நடந்தியிருந்தார்கள் அதில் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுக்கின்ற அதே சமயத்தில் மறைந்த ஆதி. இராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகளையும் தொகுத்து மீண்டும் பிரசுரம் செய்தார்கள்.
1984-ம் ஆண்டில் ‘முகவரி தேடும் மலர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்த சிறுகதைகளை மீள் பிரசுரமாக ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ என்று தலைப்பில் வெளியிட்டார்கள்.
இனி புத்தக வாசிப்பிற்குச் செல்வோம்.
படைப்புகளை வாசிக்கையில் அது எழுதப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும் என்பது என் கருத்து. என்னதான் காலத்தையும் தாண்டிய படைப்பு என்றாலும் அது எழுதபட்ட காலக்கட்டம்தான் அந்த படைப்பை காலத்தைக் கடந்து பயணிக்க வைப்பதாக கருதுகிறேன்.
இந்த தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.
‘ஒரு தேவதை உறங்குகிறாள்’ என்னும் சிறுகதை மரம் வெட்டுபவனின் கனவை அடிப்படியாகக் கொண்டது. அது அவன் கனவு மட்டுமல்ல வாசகர்களையும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கனவாக இச்சிறுகதையை ஆசிரியர் எழுதியிருப்பார். சின்ன வயதில் இருந்தே கதைகள் கேட்டு வளர்ந்த நாயகன். காலப்போக்கில் தனக்குத்தானே கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கின்றான். தனது தாத்தா சொல்லிய கதைகள் முடிந்துவிட்டபடியால் தானே கதைகளை உருவாக்க ஆரம்பிக்கின்றான். அவன் கதைகளில் அவனே நாயகன். நிகழ்காலத்திற்கும் கனவுலகிற்குமான பயணமாக அவனது கதை தன்னை அமைத்துக் கொள்கிறது. ஓர் அழகான மாளிகையைக் கட்டிவிட நினைக்கிறான், அதற்கு முன்பாக தனக்கு ஒரு வித்தியாசமான அழகு நயமிக்க அறையொன்றை கட்டிக்கொள்ள நினைக்கிறான். தானே அதனை கட்டிக்கொள்ள முடிவு எடுக்கிறான். அப்போது அவனுக்கு துணையாக வானிலிருந்து ஒரு பஞ்சவர்ணக் குதிரை வருகிறது.
பஞ்சவர்ணக் குதிரை அவனுக்கு உதவுவதாகவும் ஆனால் அதற்கு ஓர் உறுதி மொழியையும் கேட்கிறது. அவன் வாழ்வில் காதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அப்படி எந்த பெண்ணிடமாவது இவன் மயங்கினால் அவனை அவ்விடத்துலேயே விட்டுவிட்டு பஞ்சாவர்ணக் குதிரை மறைந்துடுமாம்.
குதிரையின் மீதமர்ந்து அவனுக்கான அழகிய மாளிகையைக் கட்டத் தொடங்குகின்றான். குதிரை அவனது கட்டிடக் கலையைக் கண்டு பிரம்பிக்கிறது. ஆனால் அங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஓர் அழகிய தேவலோக மங்கையை காண்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது.
தேவலோக மங்கையின் தந்தை இதனை விரும்பவில்லை. நாயகனுக்கு அவன் காதலை நிரூபிக்க சில சவால்களை கொடுக்கின்றார். அதன் பிறகு கதை வேறு பக்கமாக பயணிக்கின்றது. அவனது கனவு கலைந்ததா அல்லது கனவு தொடர்ந்ததா என்பதுதான் மீதி கதை.
இக்கதையை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சர்யமாக இருந்தது. இன்று எழுதிய கதை போல புதிதாகவே தெரிகிறது. இக்கதையில் ‘புள்ளினங்கள்’ என்கிற சொல்லாடலை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். குறுந்தொகை பாடலில் ‘புள்ளினங்கள்’ என்று பறவைக்கூட்டத்தை சொல்லியிருப்பார்கள். ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் நா.முத்துக்குமார் ‘புள்ளினங்காள்’ என்று பாடல் வரியை ஆரம்பித்திருப்பார். பலரும் அந்த வார்த்தைகளை சிலாகித்துச் பேசியிருந்தார்கள். ஆனால் அந்த குறுந்தொகை சொல்லாடலை முன்னமே தன் சிறுகதையில் பயன்படுத்தி தன் வாசிப்பை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனக்கும் இவ்வார்த்தையை வாசித்ததும் ஓர் பூரிப்பு தொற்றிக்கொண்டது. இப்படியாக கவனிக்க வேண்டிய படைப்புகளும் படைப்பாளர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். சரியான வாசிப்பும் சரியான விவாதங்களும் இல்லாமையே நாம் காணும் இங்குள்ள வெற்றிடத்திற்கு காரணம். ஒன்று சரியானவர்க்கு இடமில்லை, இன்னொன்று தேவையற்றவர்க்கு எல்லாவகையிலும் இடம் கிடைக்கிறது.
‘திரைகள்’ அழகான காதல் கதையாகத் தொடங்குகிறது. பேருந்து நிலையத்தில் பார்க்கின்ற பெண்ணின் மீது நாயகன் காதல் கொள்கிறான். வேலை முடிந்த உடனே கிளம்பிவிடுகிறான் நாயகன். நாள் தவறாமல் அவளை பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் அவள் ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம். ஒரு முறை கூட அவள் அவனை பார்க்கவில்லை. இப்படியாக அவனது காதல் கதை ஒரு மாதம் தொடர்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறான். ஆனால் அதற்காக பணத்தை சேமிக்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும் என புலம்புகிறான். சமயங்களில் அவனது நண்பர்கள் அவ்வழியே காரில் சென்றால் அவனையும் அழைப்பார்கள். ஆனால் அவனோ அதனை தவிர்த்துவிடுவான். அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட காத்திருக்கும் நாயகன் எப்படி அந்த வாய்ப்பை நழுவ விடுவான். ஒரு நாள் ஒரு கார் வந்து நிற்கிறது. அவளுக்கு அருகில். அந்த பெண் காரில் ஏறிக்கொண்டாள். காரின் கதவை சாத்துவதற்கான ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் அவனைப் பார்க்கிறாள். அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியதாக ஆசிரியர் சொல்கிறார். வாசகர்களுக்கு இந்நேரம் பொறி தட்டியிருக்கும். ஆக, இத்தனை நாளும் அவள் அவனை பார்க்காமல் இருக்கவில்லை. அவள் எதிர்ப்பார்ப்பில் நாயகன் இல்லை என்பதே அந்த பொறியாகவும் இருக்கலாம் அல்லவா.
‘தனிமரங்கள்’ சிறுகதை. உண்மைக்கும் நேர்மைக்கும் உரத்தக் குரல் தேவையில்லை என சொல்லும் கதை. அப்பா ஓடிப்போகிறார். பிள்ளைகளுடன் அம்மா தனியாகிறாள். அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார் சுப்பையா. பல புரளிகள் பல கிசுகிசுக்களுக்கு மத்தியில் அவர் அந்த குடும்பத்திற்கு உதவுகிறார். பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர், ஊரார்களில் புரளிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆளுக்கு ஆள் வேவ்வேறு திசைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு மகன் மட்டும் அம்மாவுடன் இருக்கிறான். அவன் மனதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. அவனது சந்தேகத்திற்கு அம்மா சொல்லும் பதில் என்ன என்பதுதான் கதை. இப்போது இதனை வாசிக்க தொலைக்காட்சி சீரியலுக்கு ஏற்றார் போல இருந்தாலும் அது குறையாக தெரியவில்லை.
‘அக்கரைப் பச்சை’ வெளிநாடுகளுக்கு சென்று பல அவமானங்களைச் சுமந்து சம்பாதிப்பது எதற்காக ? என்கிற கேள்விக்கான பதில் தான் கதை. ஆனால் இதுவரை யாரும் சொல்லி விடாத காரணம் என்பதுதான் இக்கதையைக் காப்பாற்றுகிறது. இக்கதையை முக்கியமான கதையாக மாற்றுகிறது. வழக்கமாக வறுமை என்போம், கடன் என்போம். ஆனால் நாயகனுக்கு தேவை மரியாதை. ஒர் ஆசிரியர் போல ஒரு காவல் துரையினர் போல, வெளிநாட்டில் வேலை செய்பவர் என்கிற மரியாதை. அதன் ஊடே இங்கு நிலவும் சிவப்பு அடையாள அட்டை சிக்கலையும் சொல்லி இன்னும் தொடரும் அவலத்தை சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.
‘போராட்டாங்கள்’. இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. வாசித்து முடித்ததும் அன்றைய தினம் முழுக்க இக்கதையே என் நினைவுகளில் இருந்தது. மனசுக்குள் பல கேள்விகள். கதையின் கரு சிறியதுதான் ஆனால் அது எழுப்பும் கேள்வி ரொம்பவும் பெரியது. தனக்கு வரவிருக்கும் மரணத்தை எப்படி ஒரு வீரனாக நாயகன் எதிர்க்கொள்கிறான் என்பதுதான் கதை.
‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும் பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற தவறான விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவளின் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.
‘சராசரி’ என்ற கதை கணவன் மனைவியின் உரையாடலிலேயே நகர்கிறது. அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்தான் கதை.
‘வானம் பழுப்பதில்லை’ அம்மாவின் மரணத்தின் பிறகு தன் உடல் உழைக்க ஒத்துழைக்காததால் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறான் மகன். அம்மா தனக்கு பாடிய தாலாட்டு பாடல்கள்தான் அவனுக்கு மூலதனம். அது தொடர்கதையா இல்லை மாற்றம் வருகிறதா என்பது கதை.
‘சீசர்கள் குருசோக்கள் தான்’. கொள்கை பிடிப்புள்ள ஒருவர் காலமாற்றத்தால் எதிர்க்கொள்ளும் ஏமாற்றமும் புறக்கணிப்பும்தான் கதை. இன்றைய வயோதிகர்கள், குறிப்பாக தாங்கள் இளைஞர்களாக இருந்த காலக்கட்டத்தில் தாங்கள் ஈடுபட்ட கொள்கையும் நம்பிக்கையும் இன்றைய தலைமுறையினர்க்கு என்னவாக மாறியிருக்கிறது அல்லது இளைஞர்கள் அதனை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று புலம்பும் பலரை நான் நேரடியாகவே சந்தித்திருக்கிறேன்.
‘ஞானரதம்’. நாயகனுக்கு, எதிர்பாராத சந்திப்பில் தற்கொலைக்கு தயாரான ஒருவனுடனான உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தனக்குத்தானே சொல்லவேண்டியதை எதிரில் உள்ளவருக்கு நாயகன் சொல்கிறார். கதையின் முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் கதை சிறப்பாக கதையாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவுரை கேட்டவரும் சொன்னவரும் ஒருவர்தான் என்பது போன்ற முடிவைக் கொடுத்திருக்கலாம் என வாசித்து முடிக்கவும் வாசகனாய் எனக்கான முடிவை நானே புத்தகத்தில் ஒரு குறிப்பாக எழுதிகொண்டேன்.
‘எரியாத நட்சத்திரங்கள்’ சுதந்திரம் பெற்றதிலிருந்து எதிர்நோக்கும் சிக்கல், சிவப்பு அடையாள அட்டை. இக்கதை அதன் சிக்கலை சொல்கிறது. மலேசியாவில் பெரும்பாலான கதைகள் இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து எழுதப்படுகிறது. சொல்லுகின்ற விதத்தில் மட்டுமே அக்கதை கவனத்தை பெறுவதும் தோல்வியடைவதும் அமைகிறது.
‘மனக்குதிரை’. தற்கொலைக்கு தயாராகும் நாயகனின் வீட்டிற்கு நண்பனின் குடும்பத்தினர் வருகிறார்கள். பிள்ளைகளுடன் ஒரு வாரம் தங்குகிறார்கள். நாயகனுக்கு என்ன தேவை என்கிற தெளிவு கிடைக்கிறது. நாயகனின் தற்கொலை எண்ணம் மாறியதா என்பதுதான் மீதி கதை. ஆனால் அன்று குடும்பமே மன இறுக்கத்திற்கு மருந்தாக இருந்திருக்கிறது. இன்று குடும்பமே மன இறுக்கத்திற்கு காரணமாக அமைந்துவிட்ட சிறுகதைகளை நாம் வாசிக்கின்றோம்.
‘என் வாரிசுகள்’. கதை அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. தனது இறுதி காலத்தின் முன்னாள் எழுத்தாளர் தன்னைப்பற்றி நினைவுக்கூர்கிறார். யார் யாரையெல்லாம் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்பதுதான் கதை. கதையின் முடிவு வாசகர்கள் வருந்தமடைய வைக்கிறது.
‘நான் தனியாக இல்லை’. நாற்பது வயதில் பணி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நபர் அதற்கான நியாயத்தையும் அதன் தேவையையும் சொல்லிச்செல்கிறார். அவரின் வாழ்க்கை அதன் பிறகுதான் அவருக்கான வாழ்க்கையாக மாறும் என நம்புகிறார். தன் குடும்பத்தினரையும் அதற்கு பழக்குகிறார்.
‘பழைய தரையில் புதிய படுக்கைகள்’ வீட்டு வேலைக்கு வந்து சிரமப்படும் பொண்ணின் கதை. இவ்வாறான கதைகளின் முக்கியத்துவம் இன்றளவும் இருக்கிறது.
‘மனமெல்லாம் கைகள்’. தனது வீட்டில் புறக்கணிப்பை எதிர்க்கொள்ளும் நாயகன் அதற்கு மாற்றாக என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது கதை. நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.
நிறைவாக;
ஆதி. இராஜகுமாரன் குறித்தும் இந்த சிறுகதை தொகுப்பு குறித்தும் இன்னும் அதிகம் சொல்லலாம். சொல்ல வேண்டும். ஆனால் இக்கதைகளை பலரும் வாசித்து பேச வேண்டும் என்பதுதான் என் அவா. குறிப்பாக மலேசியாவில் எழுத விரும்புகின்றவர்கள் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் நம்மிடமும் நல்ல கதைகளும் நல்ல கதைசொல்லிகளும் இருக்கிறார்கள் என மேற்கொண்டு பேசலாம். மகிழ்ச்சிக் கொள்ளலாம். அக்கதைகளை விவாத பொருளாக எடுத்து அது ஏன் முக்கியமான கதையாக மாறுகிறது அல்லது ஏன் முக்கியமான கதையாக மாறவில்லை என உரையாடலாம். புத்தகமாக வாசிக்க கிடைக்காதவர்கள் இணையத்தில் தேடினாலும் இவரது சிறுகதைகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன.
மண்ணுலகில் மறைந்தாலும் மலேசிய இலக்கிய உலகத்தில் என்றுமே ஆதி.இராஜகுமாரன் பெயர் இருந்துக்கொண்டே இருக்கும்.
00
எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.