அஃதிற்கு அப்பால்.
இப் பயணத்தில்
நமக்குள்ளான
இடைவெளி
நூலிலைதான் என்றாலும்
நெருங்கிக் கிடக்கிறது
சந்தர்ப்பங்கள்
ஆச்சரியமொன்றை
நிகழ்த்த
தருணம் பார்த்து.
,
ஊடக அரிப்புகள்
இருவர்
கையிலும்
இடைவிடாது
நிமிட்டிக் கொண்டிருந்தது
அசௌகரியப் போக்கில்
கோடுகளை களைந்து
அற்ப சுகம் காண.
,
பார தூர
மடியாசையை
கடக்கவியலாது
நமக்குள்ளிருந்து
தடுத்த
விதைகள்போதும்
வாழ்க்கை
அகமியத்தில் மூழ்கி
சுயமெய்ய.
,
இருள் உண்ண
ஏதுவாகும் பொழுதெல்லாம்
ஒளி வீசும்
பளிச்சிட்டு
அத் தருணங்கள்
தடுமாறாமல்
பயணிக்க
எப்பொழுதும்
சுயாதீன
சுடர் வீசி
யாவும் சாத்தியமென வாழ்வின் முழுமைக்கும்.
***
தருணச் சறுக்கல்.
கோதலின் லயிப்பில்
கண் மூடியபொழுது
சடை பின்னிக்கிடந்தது
சிக்கலற்ற பாந்தமாக.
கனவென விழித்தபோது
யாவும்
நிசமென தைக்கிறது
அறம்.
துயரெனவாவதும்
துய்க்கும்
வாழ்வு
நிகர் செய்ய முடியாத மகிழ்வெனவாவதும்
உன்
ஒற்றைச் சொல்லில்
இருக்கிறது
இரவுக்கும்
கண்களுண்டென்பதை
மெய்பிக்க.
***
காணலின் விரயம்.
எனக்குள்
எழுந்தடங்கும்
எதுவும்
சித்திரமாக இல்லை
ரசிக்க
முறையற்ற கலவையானதால்.
அது
எவர்பற்றியதாகவும்
ஏதோவொன்றிற்காகவும்
இடையறாது கால்கொள்கிறது
கடும் பிரயத்தனத்தில்
வெளிச் சூழல் மறந்து.
ஒரு
சிறு அசைவோ
கூற்றோ
கலைத்துவிடும்
அதனைத்தான்
நெடு நேரமாக
விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறேன்
உணர்வைத் தூண்டும்
உதவாக்கரை
அதுவென
அறியாமல்.
***
ஏழாம் அறிவின் ஆறாவது மெய்.
உன்னை
நேசிக்க
எனக்கு
அற்ப காரணம்போதும்
அஃதொரு
பொருட்டில்லையென்றாலும்.
,
விலங்கிலிருந்து
வேறுபடுத்திக் காட்டுவதற்கு
அதுவே
ஆகச்சிறந்ததாகவும்
இருக்கிறது
பொழியும்
காத்திரமான கருணையில்
யாவும்
இங்கு
யாவருக்குமானதென
புரிந்த பொழுது.
***
***