தங்கராஜா

ராஜ சேகரன்!

ராஜ வம்சத்தில் பிறந்து ராஜசுகபோகத்தில் வளர்ந்த இளவரசனான ராஜசேகரனுக்கு திடீரென்று ராஜ வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

மித்திராபுரி என்பது சகல செல்வங்களும் நிறைந்த செழிப்பான நாடு. அந்த நாட்டை சுந்தர சேகரன் என்ற மன்னல் நீதி நேர்மையுடன் ஆண்டு வந்தான். குடி மக்களும் அவனிடம் அளவற்ற பற்றையும் பாசத்தையும் வைத்திருந்தனர்.

அவனுக்கு இரண்டு புத்திரர்கள். ஒருவன் பெயர் ராஜசேகரன், மற்றொருவன் பெயர் ரத்ன சேகரன்.

சுந்தரசேகரனுக்குப் பிறகு அவனது பிள்ளைகளான இந்த இருவரில் யார் மூத்தவரோ அவர்தான் ஆட்சிக்கு வரமுடியும். அதன்படி சுந்தரசேகரன் வயது முதிர்ச்சியின் காரணமாக திடீரென்று மரணப் படுக்கையில் ஒரு நாள் அவர் விழுந்த போது, தன் பிள்ளைகளில் யாரை மன்னராக்குவது என்ற பிரச்சினை அவருக்கு வந்து விட்டது.

மூத்தவனை மன்னனாக்க வேண்டியது தானே! இதில் என்ன பிரச்சினை என்று கேட்கலாம்.

இரண்டு பிள்ளைகளில் யார் மூத்தவன் என்று அறிந்து கொள்ள முடியாதது தான் பெரிய பிரச்சினையாகவும் சிக்கலாகவும் உருவெடுத்து விட்டது.

காரணம் ராஜ சேகரனும், ரத்ன சேகரனும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள். இருவரில் ஒருவர் கூட இருவருக்கு ஒருவர் ஒரு நொடி கூட முன்னாலோ. பின்னாலோ பிறக்கவில்லை. ஒரே நேரத்தில் பிறந்து

விட்டார்கள்.

அதனால் தான் மரணப்படுக்கையில் இருந்த மன்னனுக்கு பெரும் தலைவலி உண்டாகி விட்டது.

ஒருவருக்கொருவர் அறிவிலும் வீரத்திலும் உயர்ந்தவன் யார் என்பதை அறிய போட்டி வைத்து, தேர்த்தெடுத்து சிறந்தவனை மன்னனாக்கி விடலாம் என்றும் நினைத்தார்.

ஆனால் அந்த போட்டியானது இருவருக்கும் இடையே பகையை உண்டாக்கி விட்டால் தனது குலப் பெருமைக்கே பாதகமாகிவிடுமே என்று அஞ்சினார் மன்னர் சுந்தர சேகரன்.

இப்படி எண்ணி எண்ணிக் கலங்கிய அவர் இறுதியாக இந்தப் பிரச்சினையை தனது பிள்ளைகளிடமே விட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஏனென்றால் எந்த நேரத்திலும் தான் இறந்து விடலாம் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் வந்திருந்ததுதான் காரணம்.

ஆகவே அவர் அமைச்சரை விட்டு தன் இரண்டு மகன்களையும் அழைத்தார்.

பதினெட்டு வயது நிரம்பி பலம் பொருந்திய வாலிபர்களாக் காட்சி அளிக்கும் இளவரசர்கள் இரண்டு பேருமே உருவத்தில் ஒரே சாயலில் இருப்பார்கள்.

பல முறை பார்த்தவர்களால்கூட இருவரில் யார் ராஜ சேகரன் – யார் ரத்ன சேகரன் என்று கண்டு கொள்ள முடியாது.

இந்த குழப்பம் தனக்கும் வந்து விடக்கூடாதே என்று அஞ்சிய மன்னர் சுந்திரசேகரர், குழந்தைகள் பிறத்த போதே இருவர் நெற்றியிலும் ஆளுக்கொரு அடையாளத்தை பச்சை குத்தி விட்டார்.

ராஜசேகரன் நெற்றியில் வேல் பச்சை குத்தப்பட்டிருக்கும். ரத்ன சேகரனின் நெற்றியில் வாள் பச்சை இருக்கும். இந்த அடையாளத்தைப் பார்த்துத்தான் யார் ராஜசேகரன் யார் ரத்னசேகரன் என்று அறியமுடியும்.

தந்தை அழைப்பதை அறிந்து இருவருமே தந்தை இருக்கும் அறைக்கு வத்தனர்

மன்னன் சுந்தரசேகரன் அவர்கள் இருவரையும் அருகே அமர வைத்து, அமைச்சரையும் மற்றவர்களையும் வெளியே அனுப்பி விட்டார். பின்பு அவர் இரண்டு புத்திரர்களையும் பார்த்து,”எனது கண்கள்போல் விளங்கும் செல்வர்களே! எனக்குப் பின் உங்கள் இருவரில் யாரை மன்னனாக்குவது என்று புரியாமல் நான் திகைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த சிக்கலுக்கு சரியான தீர்வு காணாமல் நிம்மதியாக சாகவும் முடியாது. அதே நேரத்தில் சுருக்கமான முறையில் உங்கள் இருவரில் யாரை மன்னனாக்குவது என்று எனக்கு புரியவும் இல்லை. ஆகவே அதற்கொரு வழியை நீங்களே தேர்ந்தெடுத்து, நான் சாகும் முன் ஒரு நல்ல முடிவை எனக்குத்தெரிவிக்க வேண்டும்” என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.

ராஜசேகரனும் ரத்னசேகரனும் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ராஜசேகரன் தன் தந்தையைப் பார்த்து ‘தந்தையே! எங்கள் இருவரில் யார் இந்த நாட்டை ஆண்டால் என்ன? நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதுதானே முக்கியம். ஆகவே ரத்ன சேகரனே உங்களுக்குப் பின் மன்னனாக ஆட்சி பீடத்தில் அமரட்டும்’ என்றான்.

மன்னன் ஒருவித நிம்மதியுடன் ரத்னசேகரனைப் பார்த்தார். ரத்னசேகரன் தன் தந்தையை நோக்கி, ‘தந்தையே! ராஜசேகரன் கருத்துதான் என்னுடைய கருத்தும். மன்னன் பதவி யாருக்கு என்பது முக்கியமல்ல, மக்கள் சுகமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஆகவே, ராஜசேகரனே உங்களுக்குப் பின்னால் மன்னனாக ஆகட்டும்’ என்றான்.

மன்னர் சுந்தரசேகரன் இருவரது ஒற்றுமையான கருத்துக்களை கேட்டு மனம் நெகிழ்ந்து நெக்குருகிப் போனார். ஆனத்தக் கண்ணீர் வடிய இருவரையும் கட்டிப் பிடித்து, என் கண்மணிகளே! நீங்கள் பிறந்து வளர்ந்து வந்த இந்த பதினெட்டு ஆண்டு காலத்தில், நீங்கள் இருவரும் என் பெருமையை காப்பாற்றும் செல்வங்கள் என்பதை இப்போதுதான் கண்டு பிடித்தேன். ஒருவர் ஒருவருக்காக விட்டுக்கொடுக்கும் தியாகம் குணம் கொண்ட உங்களை பிள்ளைகளாக நான் பெற்றதனால் நான் பாக்கியசாலியானேன். இனி உங்களில் நான் யாரை மனனாக்குவது என்று கவலைப்பட மாட்டேன். நீங்களே ஒருவருக்கொருவர் போட்டி பொறாமையின்றி உங்களில் ஒருவனை மன்னனாக்கி நல்லாட்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. இனி நான் நிம்மதியுடன் சாவேன்’ என்றார். -அந்தக்கணமே

அவர் தலை மஞ்சத்தில் சாய்ந்து விட்டது. ஆம்! மன்னர் சுந்தர சேகரன் மடிந்து விட்டார்.

இருவரும் தந்தையைக் கட்டிபிடித்து கதறி அழுதார்கள். மன்னரின் மரணச் செய்தி கேட்டு நாடே அழுதது. ஒரு வழியாக மன்னரின் இறுதிச் சடங்கும் முடிந்தது.

அன்று இரவு ராஜசேகரனும், ரத்னசேகரனும் ஒரே அறையில் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

ராஜசேகரன் ரத்ன சேகரனை நோக்கி ‘ரத்னசேகரா! நம் தந்தைக்கு பின் நம்மில் யாராவது ஒருவர் மன்னனாக வேண்டும். இதில் நம் இருவரில் யாருக்கும் போட்டி வேண்டாம். நாளை முதல் நீயே மன்னனாக அமர்ந்து கொள். உனக்கு உதவியாக இருக்கிறேன். அப்போதுதான் இறந்த நம் தந்தையின் ஆன்மாவும் சாந்தி அடையும் என்றான்.

அதைக் கேட்ட ரத்ன சேகரன், ராஜசேகரனின் தோளைப் பிடித்து, ‘ராஜசேகரா! நாளைமுதல் நீயே மன்னனாக இருந்து கொள். நான் உனக்கு உதவியாக இருக்கிறேன்’ என்றான்.

ராஜசேகரன் மறுத்துவிட்டான். அதுபோல் ராஜசேகரனின் சொல்லை ரத்னசேகரனும் மறுத்துவிட்டான்.

இறுதியாக தங்கள் இருவரில் யார் மன்னனாவது என்று புரியாது இருவரும் குழப்பத்துடன் படுத்துவிட்டனர்.

பஞ்சணையில் படுத்திருந்த போதிலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ராஜசேகரன் திடீரென்று ஓர் முடிவுக்கு வந்தான்.

தன் மீது அபரிமிதமான பாசம் வைத்துள்ள ரத்ன சேகரன் தான் என்ன கூறினாலும் மன்னனாக சம்மதிக்க மாட்டான். ஆகவே அவன் மன்னனாக வேண்டுமானால்.. நான் இந்த நாட்டை விட்டே போய்விட வேண்டியதுதான்! என்ற முடிவை எடுத்தான்.

இந்த முடிவை எடுத்தவுடனே அதற்கு மேல் அங்கே தாமதிக்க விரும்பவில்லை. உடனே எழுந்தான். தனது உடையை மாற்றிக்கொண்டான். இடையில் வாளை எடுத்து செருகிக் கொண்டான். ஒரு குதிரையில் ஏறி அந்த நாட்டை விட்டே புறப்பட்டு விட்டான்.

குதிரையில் சென்று கொண்டிருந்த ராஜசேகரன் மறுநாள் தன் சகோதரன் மன்னனாக மகுடம் சூட்டுவதை கற்பனையில் கண்டு திளைத்தபடி சென்று கொண்டிருந்தான்.

சரியாக விடியும் வேளையில் ஒரு நாட்டை அடைந்தான். அந்த நாட்டின் பெயர் சொப்பனபுரம்.

அந்த நாட்டை அடைந்ததும் அவனுக்கு ஒரு எண்ணம் உதயமானது. சும்மா வெட்டியாக ஊர் சுற்றுவதை விட, எங்காவது ஒரு அரண்மனையில் வேலைக்கு சேரலாம் என்பது தான் அந்த எண்ணம்.

அந்த முடிவுடன் வழிப்போக்கன் ஒருவனை நிறுத்திய ராஜசேகரன் ‘ஐயா! இந்த நாட்டு அரண்மனை எங்கே இருக்கிறது? அரண்மனையில் எனக்கொரு வேலை வேண்டும் அதற்காக மன்னனை பார்க்கவேண்டும்’ என்றான் ராஜசேகரன்.

‘என்ன மன்னனையா? இங்கே அப்படி யாரும் இல்லையே’ என்று கூறினான் வழிப்போக்கன்.

ராஜசேகரனுக்கு ஒரே வியப்பாகி விட்டது “ஐயா, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இந்த நாட்டில் மன்னனே இல்லையா? அப்படியானால் ஆட்சி எப்படி நடைபெறுகிறது?’ என்று கேட்டான்.

”ஆச்சியாவது பூச்சியாவது. இந்த நாட்டில் அரண்மனை இருக்கிறது, ஆனால் ஆட்சியும் கிடையாது ஆட்சி செய்ய மன்னனும் கிடையாது”. என்றான் வழிப்போககன்.

அவன் பேச்சு ராஜசேகரனுக்குப் புதிராகப்பட்டது. ‘ஐயா! நீங்கள் கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது விளக்கமாகக் கூறினால் நல்லது’ என்றான்.

‘தம்பி! நீ இந்த ஊருக்கு புதிது என்று நினைக்கிறேன். ஆகவே உனக்கு விளக்கமாக கூறுகிறேன் வா?’ என்று அங்கேயிருக்கும் மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். கீழே அமர்ந்ததும் வழிப் போக்கன் கூறத் துவங்கினான்.

”தம்பி! ஆறு மாதத்திற்கு முன் இந்த நாட்டின் மன்னனாக இருந்த திலகவர்மன் இறந்து போனான். அவனுக்கு பின் புதிய மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பிரச்சனை.

மன்னனைத் தேர்ந்தெடுக்க எங்கள் நாட்டில் ஒரு வழி உண்டு. ஒரு மன்னன் இறந்து போனால் அவனது வாரிசை மன்னாக்கும் வழக்கம் எங்கள் நாட்டில் கிடையாது. எங்கள் நாட்டை ஓட்டி கடலுக்கு ஒரு தீவு இருக்கிறது. எங்கள் நாட்டில் ஒரு மன்னன் இறந்தபின் புதிதாக மன்னனாக விரும்புபவர்கள் அந்தத் தீவுக்குச் செல்ல வேண்டும்.

அந்தத் தீவில் ஒரே ஒரு கிழவன் மட்டும் வாழ்ந்து வருகிறான். அவன் ஒரு மாயக் கிழவன். அவன் அந்த தீவில் எப்போதும் இருக்கமாட்டான். இங்கே ஒரு மன்னன் இறந்தால் அங்கே அந்தக் கிழவன் தோன்றுவான்.

புதிய மன்னனை அவனே தேர்தெடுத்து அனுப்புவான். அப்படி அவனால் அனுப்பப்பட்ட மன்னன் இங்கே அரியணையில் அமர்ந்ததும் அவன் அத்தீவில் இருந்து மறைந்து போவான்.

அதற்குப்பின் அந்தத் தீவுக்குச் செல்பவர்கள் அந்தக் கிழவனை எங்கு தேடினாலும் காண முடியாது. அந்தக் கிழவன் யார்? எதற்காக இந்த நாட்டு மன்னனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறான்? என்பதையெல்லாம் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது!

ஆனாலும் அவன் தேர்ந்தெடுத்து அனுப்பாத எவரையும் இந்த நாட்டின் அரச சபையில் இருப்பவர்கள் மன்னனாக்க மாட்டார்கள். இந்த நாட்டின் கட்டுப்பாடு இது” என்று வழிப்போக்கன் கூறிக் கொண்டிருந்தபோது, ராஜசேகரன் இடை மறித்தான்.

‘ஐயா! நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது. ஒரு மன்னன் இறந்தால் பல பேர் மன்னன் தகுதிக்கு போட்டி போடக்கூடும். அப்படி பல பேர் அந்தக் கிழவனைச் சந்தித்தால் அவர்களில் ஒருவனை அவன் எப்படித் தேர்ந்தெடுப்பான்? என்று கேட்டான்.

மன்னன் பதவிக்கு ஆசைப்பட்டு பலபேர் சென்றால் அவன் அவர்களுக்கு ஏதோ போட்டி வைக்கிறானாம். அந்த போட்டியில் வென்றவர்களுக்கு தன் கைவசம் உள்ள மகுடத்தை கொடுத்தனுப்புவான். யார் அந்த மகுடத்தை கொண்டு வருகிறார்களோ – அவனை அந்தக் கிழவனே தேர்ந்தெடுத்து அனுப்பியதாகக் கருதி அவனை மன்னனாக்கி விடுவார்கள் இதுவரை இங்கே மன்னனை தேர்ந்தெடுப்பது இவ்வாறுதான்’ என்று நிறுத்தினான் வழிப்போக்கன்.

அப்படியானால் இந்த முறை அந்த வழியில் ஏன் மன்னனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கிழவனைச் சந்திக்கச் சென்றவர்கள் யாருமே போட்டியில் வெற்றி பெறவில்லையா?’ என்று கேட்டான் ராஜசேகரன்.

வழிப்போக்கன் அவனை நோக்கி ‘தம்பி இந்த முறையும் பல பேர் அந்த கிழவனைச் சந்திக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தீவை  அடையும்போது  சுறாக்கடல் மந்திரவாதி ஒருவன் தோன்றி தீவுக்குச் செல்பவர்களை வழியலேயே பிடித்து கொண்டு போய் விடுகிறான்.’ என்ற போது ராஜசேகரன் திடுக்கிட்டான். ’என்ன சுறாக் கடல் மந்திரவாதியா’ என்று திகைப்புடன் கேட்டான்.

‘ஆமாம் அந்தத்தீவுக்கு செல்லும் பாதையில் சுறா மீன்கள் நிறைந்த பகுதி ஒன்று இருக்கிறது. வழக்கமாக அந்தப்பகுதியை சுறாக்கடல் என்று குறிப்பிடுவார்கள். இப்போது அந்தப்பகுதியில் திடீரென்று ஒரு ராட்சத மீன் தோன்றுகிறது. அதன் முதுகில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான். அவன் உருண்டையான தலையுடனும், உருட்டுக்கட்டை போன்ற உடலுடனும் தோன்றுகிறான். நீண்ட அங்கி அணிந்திருக்கிறான். குதிரையில் சவாரி செய்பவன் போல அந்த ராட்சத சுறாமீனின் முதுகில் சவாரி செய்த வண்ணம் தோன்றுகிறான்.

இந்த நாட்டுக்கு மன்னனாகும் ஆசையுடன் தீவுக்கு படகில் செல்லும் மனிதர்களைக் கண்டால், அந்த ராட்சஷ சுறாமீன் திடீரென்று கடலுக்குள் இருந்து நூறுஅடி உயரத்திற்கு ஆகாயத்தில் தாவும். அப்போது அதன் முதுகில் அமர்ந்திருக்கும் அந்த மந்திரவாதியைக் காணலாம்.

அப்படி அசுரத்தனமாக பாயும் சுறாமீன் அடுத்த கணமே மனிதர்கள் செல்லும் படகை தன் பயங்கர வாளால் தாக்கி சுக்கு நூறாக நொறுக்கும். படகில் இருந்து கடலில் விழும் மனிதர்களை நோக்கி. சுறாமீன் முதுகில் அமர்ந்திருக்கும் மந்திரவாதி வலது கை ஆட்காட்டி விரலை அசைப்பான். மறுகணம் –

அந்த மனிதர்கள் சுறாமீன்களாக மாறி விடுவார்கள். அப்படி மாறிய சுறாமீன்களை ராட்சத சுறாமீன் விழுங்கி மீண்டும் கடலுக்குள் சென்று விடும். அப்படி விழுங்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்.. உயிரோடு இருக்கிறார்களா? என்று யாருக்குமே தெரியவில்லை.

இதில் ஒரு விசேடம் என்னவென்றால், தீவுக்கு அந்த மாயக்கிழவனை பார்க்கச் செல்லும் மனிதர்களை மட்டுமே மந்திரவாதி இவ்வாறு கடத்திச் செல்கிறான். தீவுக்கு செல்லாமல் வியாபார நோக்கத்தோடோ அல்லது மீன் பிடிக்கும் நோக்கத்தோடோ கடலில் பயணம் செல்பவர்களை மந்திரவாதி விட்டு விடுகிறான்.

இதனால் தான் அந்த சுறாக்கடல் மந்திரவாதியைப் பற்றி நாங்கள் அறிய முடிந்தது. அவன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்று யாருக்குமே புரியவில்லை” என்று நிறுத்தினான் வழிப்போக்கன்.

அவன் கூறியதைக் கேட்டு ராஜசேகரன் உடல் சிலிர்த்தது. கலவரமும் மனதில் தோன்றி மறைந்தது. அந்த சுறாக்கடல் மந்திரவாதியின் மர்மத்தை கண்டு பிடிக்கலாமா என்ற ஆர்வமும் உள்ளத்தில் குப்பென்று எழுந்தது.

இப்போது அவன் வழிப்போக்கனை நோக்கி ‘ஐயா! தீவில் உள்ள மாயக்கிழவனை சந்திக்கச் செல்லும் மனிதர்களை மந்திரவாதி கட ததிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக உங்கள் நாட்டுக்கு மன்னனே இல்லாமல் போய் விடுவதா? வேறு வழியில் மன்னனாக யாரையாவது தேர்ந்தெடுத்து வைப்பது தானே!’ என்று கேட்டான்.

’அப்படியும் நாங்கள் முயற்சித்துப் பார்த்தோமே! சில நாட்களுக்கு முன் அரண்மனையில் பொது மக்கள் கூடி ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின் முடிவில் யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து மன்னனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி

யானை ஒரு வாலிபனின் கழுத்தில் மாலையை போட்டு தூக்கி வந்தது. அவனை மன்னனாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டும் விழாவில் அவன் தலையில் மகுடம் சூட்டியபோது – அந்த மகுடம் திடீரென்று தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது.

புதிய மன்னனும் மற்றவர்களும் பதறிப் போனார்கள். ’எனக்கு மகுடமும் வேண்டாம் மன்னன் தகுதியும் வேண்டாம்’ என்று அலறியடித்து ஓடி விட்டான் புதிய மன்னன். அன்றிலிருந்து யாரையும் மன்னனாக்க யாரும் முயலவுமில்லை. யாரும் முன் வரவுமில்லை இவ்வாறு வழிப் போக்கன் கூறி நிறுத்தியதும்-

அந்த நாட்டின் அதிசயக் கதையை கேட்டு அசந்து போனான் ராஜசேகரன்.

‘சரி ஐயா! நான் வேறு எங்காவது வேலை தேடிக் கொள்கிறென் என்று கூறி விடை பெற்று சென்று விட்டான் அவன். வழிப்போக்கனும் சென்று விட்டான்.

ஆனாலும் சுறாக் கடல் மந்திரவாதியைப்பற்றி தெரிந்து, முடிந்தால் அவனை அழித்து, அந்த நாட்டுக்கு ஒரு மன்னனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வெறி அவன் மனதுக்குள் பூகம்பமாக வெடித்துக் கிளம்பியது.

இந்த எண்ணம் வந்ததும் குதிரை மீது ஏறிய அவன் கடற்கரையை அடைந்தான். குதிரையை விட்டு இறங்கியதும் கடற்கரையின் எதிரே இருந்த ஒரு பாறை மீது அமர்ந்தான்.

அந்த பாறை மீது சிறு சிறு கற்கள் கிடந்தன. சிந்தனையுடன் அமர்ந்திருந்த அவன் அந்த கற்களை எடுத்து, ஒவ்வொன்றாக கடலலையை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்.

அவன் அவ்வாறு கற்களை ஒவ்வொன்றாக சுய சிந்தனையின்றி எறிந்து கொண்டிருந்த போதிலும் அவன் சிந்தனையெல்லாம் எப்படி சுறாக் கடல் மந்திரவாதியைக் கொல்வது? எப்படி எங்கே அவனைக் கண்டு பிடிப்பது? என்பதைப் பற்றியே இருந்தது.

அப்போது திடீரென்று அவன் எதிரில் இருந்து குரல்- ‘’இளைஞனே! உனக்கு நன்றி” என்று கேட்டது.

கல்லெறிவதை நிறுத்திவிட்டு திடுக்கிட்டு எதிரில் பார்த்தான் ராஜசேகரன். எதிரே – கடற்கரையில் ஒரு மீன்கொத்தி நின்று கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு சிறிய சுறாமீன் மரணத்துடன் போராடித் துடித்துக் கொண்டிருந்தது. அதன் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

ராஜசேகரன் புதிராக அந்த மீன்கொத்தியையும் சுறா மீனையும் பார்த்தான். மீன் கொத்தி கழுத்தை சரிவாக்கி அவனைப் பார்த்து, ’இளைஞனே! இந்த கடலிலேயே இந்த சுறாமீன் அதிசயமான மீன் ஆகும். என் போன்ற மீன் கொத்தி இனங்கள் இங்கே மீன் கொத்துவதற்கு வந்தால் எங்கள் அலகைப் பிடித்து இழுத்து நீருக்குள் கொண்டு போய் கடித்து சாப்பிட்டு விடும். அப்படியே மீறி அதன் பிடியில் இருந்து தப்பி நாங்கள் பறக்க முயன்றால் அதுவும் நீரைவிட்டு துள்ளி மேலே பறந்து எங்களை விரட்டி விரட்டி பறந்து பிடித்து மீண்டும் கடலுக்குள் கொண்டு போய் சாப்பிட்டு விடும். இவ்விதமான ஆபத்து இந்த கடற்கரையில் இருந்த போதிலும் எங்கள் உணவுக்கு வேறு வழியில்லாததால் இங்கேயே உணவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இங்கே உணவுக்காக வந்து மீன்களை எதிர்பார்த்து காத்து இருந்தபோது, இந்த அதிசய சுறாமீன் என் அலகைப் பிடித்து இழுத்து கடலுக்குள் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருந்தது.

நல்ல வேளை அந்த நேரத்தில் நீங்கள் குறி தவறாமல் அதன் தலையில் கல்லெறிந்து விட்டீர்கள். அந்த உடனேயே அது என்னை விட்டு விட்டு. இப்போது மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. என் உயிரையும் என் இனத்திற்கு இருந்த ஒரே ஆபத்தையும் அழித்த உனக்கு நன்றி!’ என்றது அந்த மீன் கொத்தி.

ராஜசேகரன் வியப்புடன் அது கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். உணர்வில்லாமல் வீகிய கல் ஒரு மீன் கொத்திக்கு உதவி செய்து விட்டதை எண்ணி மனம் மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அந்த வியப்புடன் மீன் கொத்தியை நோக்கிய அவன், ’மீன் கொத்தியே! ஒரு சாதாரண உதவிக்கு நன்றி உபசாரமெல்லாம் எனக்கு தேவையில்லை. அது சரி! இந்தக்கடலின் உள்ள இந்த ஒரு மீனுக்கு மட்டும் இந்த அபார சக்தி எப்படி வந்தது” என்று கேட்டான்.

மீன்கொத்தி அவனைப்பார்த்து ”இளைஞனே! இந்த சிறிய சுறா மீனுக்கு உள்ள சக்தி இதற்கு இதன் பிறவியிலேயே வந்து விட்டது. அதற்குக் காரணம் இதன் தாய்மீன் ஒரு மந்திரவாதிக்கு வாகனமாக இருப்பதுதான் காரணம். இதன் காரணமாக இதன் தாய் மீனுக்கு இதைவிட மிகப் பெரிய சக்தி உண்டு. சுறாக்கடலில் அட்டகாசம் செய்து வரும் அதனைக் கொல்ல சாமானியமாக முடியாது’ என்றது.

இதைக் கேட்டதும் துடிப்புடன் எழுந்து நின்ற ராஜசேகரன் “மீன் கொத்தியே! நீ கூறுவதைப் பார்த்தால் சுறாக் கடல் மந்திரவாதி ஏறி சவாரி செய்கிறானே! அந்த ராட்சத சுறாமீனின் குட்டியா இது?” என்று கேட்டான்.

’ஆமாம்!’ ஆமாம்’ என்று மீன் கொத்தி தலையாட்டியது

உடனே பரபரப்புடன் அதனை நோக்கியவன், ’மீன் கொத்தியே! அந்த சுறாக்கடல் மந்திரவாதியையும் அந்த ராட்சத சுறாமீனையும் கொல்ல வழியே கிடையாதா!’

”வழி இல்லாமல் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்களால் முடியாது என்று தான் கூறினேன். நீ எனக்கு உதவி செய்ததால், உனக்கு மட்டும் சுறாக்கடல் மந்திரவாதியை அழிக்கும் ரசசியத்தைக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த இந்த ரக்சியத்தை அவசியமில்லாமலோ – அல்லது யாரும் கேட்காமலோ நான் யாரிடமும் சொன்னால் என் மண்டை வெடித்து விடும் என்று சுறாக்கடல் மந்திரவாதியே – எச்சரித்து இருக்கிறான். ஆனாலும் உதவி செய்த உனக்கு இதைக் சொல்வதாலும் நீயே கேட்டதால் உனக்கு அந்த ரகசியத்தை தெரிவிப்பதாலும் எனக்கு ஆபத்தில்லை. ஆகவே வந்து என் பக்கமாக குனிந்து காதைக்காட்டு! கூறுகிறேன்.” என்றது மீன் கொத்தி.

உடனே ராஜசேகரன் மகிழ்ச்சியுடன் மீன் கொத்தியில் அருகே குனிந்தான். மீன் கொத்தி தன் நீளமான அலகை ராஜசேகரனின் காதுக்குள் வைத்து எதையோ கிசுகிசு வென்று கூறியது.

அதைக் கேட்டு முடிந்ததும் உற்சாகமாகத் துள்ளினான் ராஜசேகரன். ‘மீன் கொத்தியே உனக்கு மிக நன்றி’ என்றான்.

அதை அன்போடு தடவிக் கொடுத்தான். அது குஷியாக தலையையும் வாலையும் ஆட்டியபடி பறந்து போய் விட்டது. மறுகணம் ராஜசேகரன் தரையில் கிடந்த சுறாமீனைப் பார்த்தான். துடிப்பு அடங்கி இறந்து கிடந்தது.

சட்டென்று தன் இடையில் உள்ள குத்துவாளை எடுத்து அந்த மீனின் விலாப்பக்கத்தில் உள்ள இரண்டு சிறகுகளை வெட்டி எடுத்தான். பின்பு அந்த மீனை தன் மடியிலுள்ள கச்சையில் இறுகக் கட்டிக் கொண்டான்.

பின்பு வெட்டிய சிறகுகளில் ஒன்றை தனது வலது கை புஜத்திலும் மற்றொன்றை இடது கை புஜத்திலும் பட்டு நூலால் கட்டிக் கொண்டான். மறுகணம் –

அவன் தரையில் இருந்து மேலே எழும்பி பறக்க ஆரம்பித்தான். அவனுக்கு அச்சரியமாக இருந்தது. ஆனாலும் அப்படிக்கட்டினால் பறக்கலாம் என்று மீன் கொத்தி தான் சொல்லிக் கொடுத்தது.

பறந்து கொண்டிருந்த ராஜசேகரன் தீவை நோக்கி பறந்தான். வெகுதூரம் பறந்ததும், கீழே பார்த்தான். ஏராளமான சுறாமீன்கள் கடலுக்குள் நீந்தி துள்ளிக் குதிப்பது தெரிந்தது. அதுதான் சுறாக்கடல் என்பது அவனுக்கு தெரிந்து விட்டது.

அவன் அப்படி சுற்றிக் கொண்டிருந்த போதே கடல நீர் மலை போல் உயர்ந்து எழுந்து கொந்தளித்தது. ’ஓ’வென்ற பேரிரைச்சலும் கேட்டது.

உடனே எச்சரிக்கை அடைந்து விட்ட ராஜ சேகரன் பறந்தவாறே தன் இடையில் இருந்த குத்துவாளை வலக்கையில் அழுத்தமாக பற்றிக் கொண்டான். கவனத்துடன் கீழே நோக்கினான்.

கொந்தளித்த நீருக்கு நடுவில் இருந்து பெரிய பாறை போல் ஒன்று வெளிவருவது தெரிந்தது. ஒரே கணத்தில் அது பாறை அல்ல என்பது அவனுக்கு புரிந்து விட்டது.

சுருட்டின வெள்ளைப் பாறை போல உயர்ந்து வந்த அது ராட்சத சுறாமீன் தான். கடல் நீரை விட்டு உயரப் பறந்து வந்தது. அதன் முதுகில் வாட்ட சாட்டமான மனிதன் அமர்ந்திருந்தான். அவனது தாடியும் நீண்ட அங்கியும் உருட்டுத் தலையும் அவன்தான் சுறாக்கடல் மந்திரவாதி என்பதை சரியாக உணர்த்தியது.

சுறாமீன் மீது சவாரி செய்து வந்த அவன் பறந்து கொண்டிருந்த ராஜசேகரனைப் பார்த்தான். பின்பு சுறா மீனின் முதுகைத் தட்டி, ‘அந்த பறக்கும் மனிதனை அடித்து கடலில் தள்ளு’ என்று கத்தினான்.

அப்போது ராஜசேகரனுக்கு மீன் கொத்தி கூறியது நினைவுக்கு வந்தது. ‘சுறாக்கடல் மந்திரவாதியின் மந்திர சக்தி, தரையிலோ அல்லது கடல் நீரிலோ இருக்கும் மனிதர் மீது தான் பலிக்கும். பறக்கும் மனிதனிடம் அவன் சக்தி பலிக்காது’ என்றது மீன்கொத்தி.

ஆகவே கடலில் விழுந்து விடாதவாறு எச்சரிக்கை அடைந்த ராஜசேகரன் ராட்சத சுறாமீனின் தாக்குதலை எதிர்நோக்கினான். அதே நேரத்தில்-

ஆகாயத்தில் சுழன்று வந்து அவனை விழுங்க வந்தது. ராஜசேகரன் ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து தப்பிக் கொண்டிருந்தான். அப்படித் தப்பித்துக் கொண்டிருக்கும் போது – தந்திரமாக மீனின் முதுகுப்புறம் சென்று. மந்திரவாதியின் முகத்தில் ஓங்கி உதைத்தான்,

ஒரு உதை சரியாக அவன் தாடையில் விழுந்தது. மந்திரவாதி அலறினான். மீனின் முதுகில் ஓங்கி குத்தினான். ராட்சத சுறாமீனும் ஆக்ரோஷமாக சுழன்று வாலால் அடித்து வீழ்த்த முயற்சித்தது.

ஆனால் ராஜசேகரன் மிக எச்சரிக்கையாக சுழன்று சுழன்று பறந்து கொண்டிருந்ததால் ராட்சத சுறாமீனால் எதுவும் செய்ய இயலவில்லை,

ராஜசேகரனின் திறமையை எண்ணி மந்திரவாதி அலறினான். இதற்குள் சுழன்று வந்த ராஜ சேகரன்-ஆக்ரோஷமாக கால்களை விரித்து மந்திரவாதியின் முதுகிலும் முகத்திலும் பலமாகத் தாக்கினான்.

மந்திரவாதி மீனின் முதுகில் இருந்தபடி தடுமாறினான். கீழே விழுந்து விடாமல் இருக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டான். ஆனாலும் அவனை மீனின் முதுகில் இருந்து விழத்தாட்டியே ஆக வேண்டும் என்ற வெறியுடன் மூர்க்கமாக கால்களை வீசி உதைத்தான் ராஜசேகரன்.

சுறாக் கடல் மந்திரவாதி மீன் முதுகில் இருக்கும் வரை அவனை ஒன்றும் செய்ய முடியாது. அதிலிருந்து கீழே அவன் கடலுக்குள் விழுவதற்குள் ஆகாயத்திலேயே அவனைக் கொன்றால்தான் அவன் உயிர் போகும்’ என்று மீன் கொத்தி கூறியிருந்தது.

அதற்காகவே இப்படி ஆக்ரோஷமாகத் தாக்கினான் ராஜசேகரன். உடல் பலத்தையெல்லாம் ஒன்று சேர்து இரண்டு கால்களாலும் மந்திரவாதியின் முகத்தில் உதைத்தான். மறுகணம்-

மந்திரவாதி மீனின் முதுகில் இருந்து தடுமாறி கீழே சாய்ந்தான். இந்த சந்தர்ப்பத்தை உணர்ந்து கொண்ட ராஜசேகரன் கடலை நோக்கி விழுந்து கொண்டிருந்த மந்திரவாதியின் நீண்ட அங்கியைப் பிடித்து ஆகாயத்திலேயே நிறுத்தி, வலக்கையில் உள்ள குத்துவாளால் ஓங்கி அவன் நெஞ்சில் குத்தினான். மறுகணம் –

ரத்தம் சொட்டச் சொட்ட அலறித் துடித்தபடி கடலுக்குள் வீழ்ந்தான மந்திரவாதி. அவன் துடித்து சாவதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ராஜசேகரனை வேகமாக நெருங்கி விட்டது ராட்சத சுறாமீன்.

சட்டென்று அதன் தாக்குதலில் இருந்து விலகிக் கொண்ட ராஜசேகரன், வேகமாக தன் மடியில் இருந்த மீனை எடுத்தான்.

ராட்சத சுறாமீன் வேகமாக அவனை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. சட்டென்று அதன் வாய்க்குள் கையில் இருந்த குட்டி மீனை விசிறி எறிந்தான். ராட்சத சுறாமீன் அதை விழுங்கிய மறுகணம்-

தானாகவே அது சுற்றி சுழன்று, கடலுக்குள் விழுந்து செத்தது.

தான் பெற்ற குட்டி மீனை சாப்பிட்டால் ராட்சத சுறா மீன் இறந்து விடும் என்று மீன் கொத்தி கூறியது சரியாகி விட்டதை எண்ணி வியந்த ராஜசேகரன் தீவுக்குச் செல்வதற்காக புறப்பட்டான். அப்போது-

‘அதிசய இளைஞனே! நில்’ என்ற குரல் கடலில் இருந்து கேட்டது. ராஜசேகரன் அதிர்ச்சியுடன் கீழே நோக்கினான்.

கீழே-

அவனை நோக்கி ஒரு முதியவர் பறந்து வந்து கொண்டிருந்தார். கீழே விழுந்த மந்திரவாதியின் உடலைக் காணோம்.

மேலே பறந்து வந்த அந்த கிழவர் ராஜசேகரனை நெருங்கி “இளைஞனே! தீவில் இருந்து கொண்டு போட்டி வைத்து சொப்பனபுரத்திற்கு மன்னனைத் தேர்ந்தெடுக்கும் மாயக் கிழவன் தான் நான். நான் தான் சுறாக்கடல் மந்திரவாதியாக உருமாறி, எனது கடைசி போட்டியை வைத்தேன். அதில் நீ வென்று விட்டாய். ஆகவே நீ தீவுக்கு செல்ல வேண்டியதில்லை. இதோ மகுடம் கொண்டு போய் சொப்பனபுரத்திற்கு மன்னனாக நீடுழி வாழக்கடவாய். இனிமேல் இந்த மாதிரி போட்டியே கிடையாது’ என்று நிறுத்தினார்.

ராஜசேகரன் பிரமிப்புடன் பார்த்தபடியே அந்த மகுடத்தை வாங்கினான். அப்படியே அந்த கிழவரை நோக்கி ‘ஐயா! இனி ஏன் போட்டி கிடையாது? தாங்கள் யார்?’ என்று கேட்டான்.

‘தம்பி! முப்பது வருடங்களுக்கு முன் நான்தான் சொப்பனபுரத்தை ஆண்டு வந்தேன். அப்போது வாரிசுகள் மன்னனாகும் முறைதான் அங்கே இருந்து வந்தது. ஆனால் எனக்குப் பின் மன்னராக வாரிசு கிடையாது. காரணம் எனக்குப் பிள்ளை இல்லை.

ஒருநாள் என் படைத்தளபதி என்னை கொன்று விட்டான். இறந்து ஆவியாக அலைந்த நான் அவனை பழி தீர்க்க நினைத்தேன். ஒரு மந்திரவாதியை சந்தித்து அதற்கு வழி கேட்டேன்.

அவர், இறந்து போன ஒரு கிழவர் உடலை கொடுத்து, ‘மன்னா! இந்த உடலுக்குள் உன் உண்மையான ஆயுள் வரை இருப்பாய்’ என்று கூறி சில மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

அதைக் கற்றுக் கொண்ட நான் படைத்தளபதியை மந்திரத்தால் அழித்தேன். பின்பு அவன் சூட்டியிருந்த மகுடத்தை மக்கள் பார்க்கும் போதே தூக்கிக் கொண்டு பறந்து தீவுக்கு வந்தேன்.

துரத்தி தீவுக்கு வந்த சிலரிடம் போட்டி வைத்து அவர்களில் ஒருவனை மன்னனாக்கி மகுடத்தை கொடுத்தனுப்பினேன்.

அன்றிலிருந்து சொப்பனபுர மக்கள் ஒரு மன்னன் இறந்ததும் என்னிடம் தான் வீரர்களை அனுப்பி வைப்பார்கள். என்னுடைய ஆயுள் காலம் இன்னும் ஒரு மாதம் தான் இனி இருக்கும். அதற்குள் ஒரு பயங்கர போட்டியை வைத்து சிறந்த மன்னனைத் தேர்ந்தெடுக்கவே கடைசியாக சுறாக்கடல் மந்திரவாதியாக உருவெடுத்தேன்.

இனி போட்டி இருக்காது. நீயே மன்னனாக உனக்குப்பின் விருப்பம் போல் மன்னன் அமைய சட்டம் அமைத்துக் கொள்’ என்றவர்-

கீழே பார்த்து சில மந்திரங்களை உச்சரித்தார். உடனே நூற்றுக்கணக்காக மீன்கள் துள்ளி எழுந்து மனிதர்களாக மாறினர். அவர்கள் சட்டென்று இறந்து கிடந்த ராட்சத சுறா மீன் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டனர். சட்டென்று ராட்சத சுறாமீன் உயிர் பெற்று கடலில் நீந்த ஆரம்பித்தது.

கிழவர் ராஜசேகரனை நோக்கி, ‘தம்பி’ மன்னனாக விரும்பி வந்து, என்னால் சுறா மீன்கள் ஆக்கப்பட்ட சொப்பனபுர மக்கள்தான் இவர்கள். இப்போது இவர்களையும் அங்கே அழைத்துப் போய் விடு’ என்றார். உடனே அவர் மறைந்து போனார்.

ராஜசேகரன் வியப்புடன் கையில் பிடித்திருத்த மகுடத்துடன் சுறாமீன் முதுகில் அமர்ந்தான். கை புஜங்களில் கட்டியிருந்த சுறாமீன் சிறகுகளை அவிழ்த்து கடலுக்குள் எறிந்தான்.

ராட்சத சுறாமீன் சொப்பனபுரம் நோக்கி சென்றது.

அன்றிலிருந்து ஏழாம் நாள் ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும் விஜயம் செய்ய ராஜசேகரன் சொப்பனபுர மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனுக்கு முடி சூட்டி வாழ்த்தியது, அவனது தம்பியும், மித்ராபுரி மன்னனுமான ரத்ன சேகரன் தான்.

ஒரே உருவில் இருக்கும் இருவரைப் பார்த்து மக்கள் வியந்து போயினர்.

,

– சுபம்-

வசந்தி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, ஜூன் 1980, விலை 35 காசு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *