நறுக்கிப்போட்ட நகம்போல இருந்த தேய்பிறைநிலவையும், கிடை போட்ட ஆடுகளாயிருந்த நட்சத்திரங்களையும் மேகங்கள் விட்டுவிட்டு மூடியது.

தள்ளாடி தள்ளாடி கேட் அருகே வந்து ஊறுகாய் நிறத்திலிருந்த தன் கண்களால் நின்றிருந்தவர்களை ஒரு முறை முறைத்தவிட்டு “ஏங்..கேட்டைப்போட்டு இந்த ஆட்டு ஆட்டுறிங்க?” என்று தெனாவெட்டாக கேட்டான் வாட்ச்மேன் .

“உங்கள கூப்பிட்டோம் நீங்க வரல அதான் கேட்ட ஆட்டுனோம் “என்று சொல்லிவிட்டு, எதையோ வாய்க்குள்ளே முனங்கினான் கதிர்வேல்.

“என்ன ஏதோ மொனங்குற வாயுக்குள்ளயே”என்றான் கோபமாக வாட்ச்மேன்.

“கேட்டை தொறக்குறதுக்கு உங்கள எத்தன தடவ கூப்பிடறது. நீங்க வரல அதேன் ஆட்டுனோம்.. அதுக்காகத்தான் மொனங்க வேண்டியதாயிருக்கு” என்றான் கோபமாக கதிர்வேல்.

 “ஆமா நீங்க பத்தரை மணிக்கு வாங்க நான் கேட்டை தொறந்து வச்சு உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.”

“ஒங்களுக்குத்தெரியாத சனிக்கிழமை எப்பவுமே இப்படித்தான்னு.. இன்னைக்கு மட்டும் என்ன புதுசா இப்படிச்சொல்றிங்க “என்றான் கதர்வேல்.

“சனிக்கிழமேனா உங்களுக்காக எவ்வளவு நேரமானாலும் கேட்டை தொறந்து வச்சு உட்காந்திருக்கணுமோ… நீங்கென்ன மறுவீட்டுக்கா வந்திருக்கிங்க? இனிமே இந்த லேட்டா வர்ற மயிர் வேலையெல்லாம் வச்சுக்கிறாதிங்க… இன்னைக்குதான் கடைசி” என்று கோபமாக சொல்லிவிட்டு கேட்டைத் திறந்தான் விறட்னு வாட்ச்மேன்.

வாட்ச்மேனைப் பார்த்து “என்ன பேசிக்கிட்டு இருக்கும்போதே மயிறுகியிறுனு பேசிறிங்க மரியாத இல்லாம” என்றான் கோபத்தில சந்திரபோஸ்.

“ஏய் நீ சும்மா இருடா மாப்பிள்ள” என்று அதட்டினான் இராதாகிருஷ்ணன், சந்திரபோஸை .

“நீ சும்மா இரு மாமா. அந்தாளு மயிறுங்குறாரு கேட்டுக்கிட்டு சும்மா இருக்கச் சொல்றயா..? என்றான் சந்திரபோஸ்.

வாட்ச்மேனைப் பார்த்து “நீங்க ஏனுணே மயிறுனு இப்படி தரங்கெட்டு பேசுறிங்க”என்றான் இராதாகிருஷ்ணன்.

இராதாகிருஷ்ணனைப் பார்த்து “நீங்க எதுக்கு கேட்டை ஆட்டுனிங்க..? என்றான் திமிராக வாட்ச்மேன்.

“கேட்டைத் திறக்க ஒங்கள எத்தனை தடவ கூப்டறது. நீங்க வரல அதான் சத்தம் கேட்பதற்காக கேட்டை பிடித்து ஆட்டினோம். மத்தபடி வேணும்னெல்லாம் ஆட்டல” என்றான் இராதாகிருஷ்ணன்.

“நானும் வேணும்னெல்லாம் மயிறுனு வையல. ஏதோ பேச்சுவாக்குல வாய்தவறி வந்துருச்சு” என்றான் போதையில் திமிராக வாட்ச்மேன்.

“ஒனக்கு வாய்தவறி பேச்சுவந்தது மாதிரி. இனி எங்க கைதவறி ஓம்மேல அடிவிழுந்திரும்” என்றான் கோபமாக சந்திரபோஸ்.

“எங்க கைதவறி எம்மேல கைவச்சுப்பாரு“ என்றான் வாட்ச்மேன் கோபத்தில்.

“நீ ஏதாவது இனி சொல்லிப்பாரு.. கைதவறி ஒனக்கு அடி விழுகலேனா.. எம்பேரா மாத்திக்கிறேன்” என்றான் சந்திரபோஸ்.

அவன் அப்படிச் சொன்னதும் வாட்ச்மேனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.

“எங்க நீ ஆம்பளனா கைவச்சுப்பாரு..” என்றான் வேகமாக.

வாட்ச்மேனை அடிக்க துள்ளிக்கொண்டு போனான் சந்திரபோஸ்.

அதற்குள் “ஏய் மாப்ள நீ தேவையில்லாத வேலை பார்க்கிற.. பேசாம வா நாம செட்டுக்குப் (தற்காலிகமாக தங்குவதற்கு தென்னைகிடுகு மற்றும் தகரத்தால் உருவாக்கப்பட்ட இடம்) போவோம்” என்று கையைப் பிடித்து இழுத்து பின்னாடி நின்ற கூட்டத்தைப் பார்த்து “ஏய் நீங்களும் வாங்க செட்டுக்கு வாங்கடா” என்று சொல்லிவிட்டு சந்திரபோஸை இறுக்கிப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான் இராதாகிருஷ்ணன்.

கையை உதறினான் சந்திரபோஷ். மீண்டும் கையைப் பிடித்து “வம்பு பண்ணாம வா மாப்ள” என்றான் இராதாகிருஷ்ணன்.

செட்டுக்கு போகிறவரைக்கும் வாட்ச்மேனை முறைத்துக் கொண்டே போனான் சந்திரபோஸ். அவன் பின்னாடி போன கூட்டம் வாட்ச்மேனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே போனது.

தெனாவெட்டுடன் கூட்டத்தை முறைத்துக்கொண்டு தனது அறைக்குள் போன வாட்ச்மேன் மிச்சம்வைத்திருந்த மதுவை குடிக்க ஆரம்பித்தான்

   ***********************************

எல்லோருக்கும் பின்னால் வந்த மகேஸ்வரனும், ஜெயவேலும் செட்டுக்கு போனபோது , வாங்கிவந்திருந்த குவாட்டரை குடிக்காமல் சந்திரபோஸ், கதிர்வேல் கோபத்தில் ஏதேதோ கத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதைப்பார்த்துவிட்டு “என்ன நடந்துச்சு இப்படி கோபமா சத்தமா பேசிக்கிட்டு இருக்காங்கே ரெண்டுபேரும். மத்தவங்கெ ஏன் எளவு விழுந்த வீடு மாதிரி மூஞ்சிய வச்சிருக்கிங்க” என்றான் ஜெயவேல்.

வேகமாக “நாங்க ஒயின்ஷாப் போயிட்டு செட்டுக்கு வந்தப்ப மெயின்கேட் பூட்டிருஞ்சு மாமா. கேட்டை தொறக்கச் சொல்லி வாட்ச்மேன ஓயாம கூப்பிட்டோம் வரல. அவனுக்கு சத்தம் கேட்பதற்காக ‘கேட்டை சத்தமா ஆட்டுனோம். சத்தம் கேட்டு போதையில வந்த வாட்சுமேன் எங்கள மயிறுகியிறுனு வஞ்சு போட்டயான் மாமா”என்றான் கதிர்வேல்.

“அவன அப்பவே கன்னத்தில் அப்பலயா..?” என்றான் ஜெயவேல் கோபமாக.

“இராதாகிருஷ்ணன் அண்ணந்தே வாட்ச்மேன்கூட சண்டை போடக்கூடாதுன்னு தாஜா பண்ணி கூட்டிட்டி வந்துட்டாரு எங்கள”என்றான் கதிர்வேல்.

இராதாகிருஷ்ணனனை ஒரு முறை முறைத்தான் ஜெயவேல்.

“நம்மளே நம்ம ஊர்ல மணல் தட்டுப்பாடு பிரச்சினையில வேலையில்லாம

கோயம்புத்தூருக்கு பொழைக்க வந்துருக்கோம். இங்க வந்து சண்டை போட்டு நம்ம பொழைப்பு கெட்றக் கூடாதுன்னதான் இவங்கள கூட்டுட்டு வந்தேன்.” என்றான் இராதாகிருஷ்ணன்.

“நீ செஞ்சது தப்பு மாமா. அந்த வாட்ச்மேன அடிச்சிருக்கணும்… அன்னைக்கு என்னடானா நாங்க செங்ககட்டு போட்டுக்கிட்ருக்கோம்.. அப்ப வந்து  செங்கக்கட்டுல ரெண்டுமூனுகல்லு கோணச்சுக்கிட்டு போது,செங்ககட்டுல சரியா சந்து அடைக்கமாட்டிறிங்க.. என்று ஏதெதோ கொற சொல்றான். பக்கத்தில பெரிய சூப்பர்வைசர் இருக்கார். அவன் பாட்டுக்கு நம்ம வேலைய கொற சொல்றான். அப்பவே அவன அரட்டியிருந்தா.. இன்னைககு மயிறுனு பேசியிருக்கமாட்டான் “என்றான் மூஞ்சியை சுண்டிக்கிட்டு ஜெயவேல்.

“அப்ப வாட்ச்மேன்கூட சண்ட போடச் சொல்றயா..?” என்றான் இராதாகிருஷ்ணன்.

“மயிறுனு வஞ்சவன சண்டைபோடாம… பெறகு முத்தம் கொஞ்ச சொல்றயா.?” என்றான் வெளமாக ஜெயவேல்.

“அவன் மயிறுனு வஞ்சாப்ல நாமென்ன கொறஞ்சா போவோம்” என்றான் இராதாகிருஷ்ணன்.

“கொறஞ்சு போகமாட்டோம். அதுக்காக அவன் அப்படி வையலாமா..?” என்றான் கதிர்வேல்.

“எதுக்கு வெட்டிப்பேச்சு. டப்னு சரக்கு அடிங்க -அந்த வாட்ச்மேனைப் போயி ரெண்டு அப்பு அப்பிட்டு வருவோம் “என்றான் ,

எம் சான்ட்டால் (கிரஷர் தூசி) அழற்சியாகிப்போன இடத்தை சொறிந்துகொண்டே ஜெயவேல்.

“ஏய் தேவையில்லாத வேல பார்க்காதிங்கடா. நம்மளே நம்மூர்ல வேலையில்லாமா பொழப்புத் தேடி இங்க வந்துருக்கோம். இப்ப சண்டைபோட்டு நாளைக்கு சட்டிபுட்டிய தூக்கி ஊருக்குப் போக வச்சுராதிங்க.” என்றான் இராதாகிருஷ்ணன்.

“ஓ.. வேலயப் பாரு மாமா” என்றான் சந்திரபோஸ்.

“ஏய் நம்ம பெரிய கொத்தனாருக்காவது பாருங்க. அவரு எவ்வளவு கஷ்டப்பட்டு கடன் வாங்கி கப்ப வாங்கி நம்மள வேலைக்கி கூட்டு வந்துருக்காரு. இந்த வேலையையும் கெடுத்துவிட்டிங்கனா.. அவரு தெருவுலதான் நிக்கணும். பாத்துக்கிங்க.” என்றான் கோபமாக இராதாகிருஷ்ணன்.

பக்கத்திலிருந்த சமையல் மாஸ்டர் குமாரிடம் “நீ சொல்லு சித்தப்பா வாட்ச்மேன்கூட சண்டைக்கு போகாதிங்கடானு” என்று சொன்னான் இராதாகிருஷ்ணன்.

“ஏன்டா தேவையில்லாத வேல பார்க்கிறங்க” என்றார் குமார்.

“ஓ.. சோலியப் பாரு.எல்லாம் எங்களுக்குதா தெரியும்”என்றான் கதிர்வேல்.

“ஏய் சின்னச்சாமி நீ ஓம்மாமனுக்கு போன் பண்ணு இவங்கெ வாட்ச்மேன அடிக்கப்போறாங்கனு. அவரு ரெண்டு சத்தம்போடட்டும் இவங்கெள. ச்சே இன்னைக்கு பார்த்தா அவரு இங்க வேல பாக்காம் பீளமேடு செட்டுக்கு வேலைக்குப் போகணும்” என்றார் எரிச்சலுடன் குமார்.

சின்னச்சாமி அவசரமாக பெரிய கொத்தனாரான தன்னுடைய மாமாவுக்கு போன் பண்ணினான்.

சில அழைப்புகளுக்கு பிறகு போனை எடுத்தார். உறக்கத்திலிருந்ததால் குரல் கரகரத்திருந்தது. “என்னடா இன்னியாரம் போனு” என்றார்.

“வாட்ச்மேனுக்கும் நம்மாளுகளுக்கும் கொஞ்சம் கசப்பாகிப்போச்சு. அதான் வாட்ச்மேன அடிக்கணும்னு ஒரே முடிவா இருக்காங்க. நீங்க கொஞ்சம் சத்தம்போடுங்க இவங்கள”என்றான்.

சின்னச்சாமி கொத்தனாருடன் பேசுவதைப்பார்த்துட்டு கோபமாக முறைத்தான் ஜெயவேல்.

பதிலுக்கு ஜெயவேலை முறைத்துப் பார்த்தான் சின்னச்சாமி. .

 “என்னடா பிரச்சனை..?” என்றார் பெரிய கொத்தனார்

“ஒயின்ஷாப் போய்ட்டு வர்றப்ப கேட்டு பூட்டியிருந்துச்சு. இவங்கெ வாட்ச்மேன கூப்பிட்டாங்க தெறக்கறதுக்கு -அந்த ஆளு ரெம்ப நேரம் வரல. அதனால கேட்டை ஆட்னாங்கே. வாட்ச்மேன் போதையில வந்து கேட்டை ஆட்டனதுக்கு மயிறுகியிறுனு வஞ்சுபோட்டாரு. அதான் அவரு அடிக்கணுங்குறாங்கே”

“யாராரு அடிக்கணுங்குறா”

“ஜெயவேல், சந்திரபோஸ்,கதிர்வேல்,”

“அவங்ககிட்ட போன் கொடு”

போன் கொடுக்க ஜெயவேலை நோக்கி வந்தான் சின்னச்சாமி

தலையில அடித்துக்கொண்டே “இப்ப “என்ன மயித்துக்கு பெரிய கொத்தனாருக்கு போன் பண்ணுன” என்று கோபமாக சின்னச்சாமியிடமிருந்து தயங்கிக்கொண்டே போனை வாங்கி “ம் சொல்லு அண்ணே” என்றான் ஜெயவேல்.

“ஏன் ஜெயவேல் தேவையில்லாத வேல பார்க்குறிங்க..?” என்றார் எரிச்சலோடு பெரிய கொத்தனார்.

“இல்லண்ணே அந்தாளுதான் மயிறுனு வஞ்சுருக்கான்”

“வஞ்சா வஞ்சுட்டு போட்டும் விடுங்க. நீங்க ஏதும் சண்டைக்கு கிண்டைக்குப் போயி பொழப்ப கெடுத்துப்போடாதிங்க. அப்புறம் ஊருக்குதான் போகணும் எல்லாம். ஒயின்ஷாப்புக்குப் போயிட்டு வெள்ளணையா செட்டுக்குப் போனா சண்டை எதுக்கு வருது… நீங்க பொச்ச பொச்ச ஆட்டிக்கிட்டு லேட்டாப் போனா அவன் பூட்டித்தான் வைப்பான். இப்படி பிரச்சனை வரத்தான் செய்யும். பேசாம சாப்பிட்டு படுங்க சண்டைகிண்ட போடாம.. அதுவுமில்லாம அந்த வாட்ச்மேன், எஞ்சினியருக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் -நம்பிக்கையானவன். மொதல்ல நம்மள மாதிரிதான் அந்த வாட்ச்மேன் கொத்தனார் வேல பார்த்திருக்கான் இந்த எஞ்சினியர்கிட்ட .ஒருநாளு வேல செஞ்சுக்கிட்டு இருக்கேல சாரத்திலிருந்து எப்படியோ தவறி விழுந்துட்டானாம். முதுகுல சரியான அடியாம். அதுக்கப்புறம் கனமான வேல எதுவும் செய்யமுடியலபோல. அவன் கொத்தனார் வேல பார்க்கமுடியாதுனு தெரிஞ்சதும்,நமக்கு தெரிஞ்சவனாச்சேனு எரக்கப்பட்டு சட்டுனு வாட்ச்மேன் வேலைக்கு மாத்திட்டாரம் இஞ்சினியர்.

திரும்பவும் சொல்றேன் இஞ்சினியருக்கு அவன் வேண்டப்பட்டவன் அதனால அவனப்போயி கைய்ய, கிய்ய வச்சுடாதிங்க. அதுக்குமீறி வச்சிங்கினா. நம்ம பொழப்புல கை வச்சிருவாரு இஞ்சினியரு. பாத்துக்கிங்க” என்றார் பெரிய கொத்தனார்.

“செரி ண்ணே” என்றான் தலையை சொரிந்துகொண்டே ஜெயவேல்.

“பக்கத்தில யாரிருக்கா..?”

“சந்திரபோஸ் இருக்கயாண்ணே”

“அவன்ட்ட போன கொடு”

“இந்தா” என்று போனைக் கொடுத்தான் சந்திரபோஸிடம் ஜெயவேல்.

“சொல்லுங்க அண்ணே” என்றான் சந்திரபோஸ்

“சோத்தத் தின்னுட்டு பேசாம படுங்க. தேவையில்லாத சோலியெல்லாம் பண்ணிட்டுத் தெரியாதுங்க.சரியா”

‘சரிண்ணே”

“எல்லாத்திட்டயும் சொல்லிரு. நாளைக்கு காலையில வாரேன்.”

“ம்” என்றான் தயக்கத்துடன் சந்திரபோஸ்.

“சின்னச்சாமிட்ட போனக் கொடு”

“ஏய் சின்னச்சாமி போன் இந்த” என்று போனைக் கொடுத்தான் கோபத்தில் சந்திரபோஸ்.

“ம் சொல்லு மாமா” என்றான் சின்னச்சாமி.

“செரிடா.. பாத்துக்கோ” என்றார் பெரிய கொத்தனார்.

“செரி மாமா”

போன் கட்டானது.

சிறிதுநேரம் அமைதி நிலவியது. பிரச்சனை தீர்ந்துபோன சந்தோஷத்ததில் இராதாகிருஷ்ணன், குமார்,சின்னச்சாமி முகத்தில் சந்தோஷம் தென்பட்டது.

வாங்கி வந்திருந்த குவாட்டர் பாட்டிலை இடுப்பிலிருந்து  எடுத்துக்கொண்டே செட்டின் பின்புறமுள்ள சமையல் செய்யும் இடத்திற்கு விறுவிறுவென போனான் ஜெயவேல். அவன் பின்னாடியே, கதிர்வேல், சந்திரபோஸ் போனார்கள்.

கேரி பையிலிருந்து ஊறுகாய், கல்லமுட்டாய், வாழைப்பழம், உப்புக்கடல,

கொக்காமுட்டாயை எடுத்து வைத்துவிட்டு, பிளாஸ்டிக் கப்பை ஜெயவேல் எடுத்தான் .

அவனைப்போலவே கதிர்வேல், சந்திரபோஸ் வாங்கிவந்திருந்த சைடிஸ்சை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர்.

ஜெயவேல் கையில் வைத்திருந்த குவாட்டார் பாட்டிலின் மூடியை இறுக்கமாக பிடித்து திருகினான். ‘நெருக்’ என்ற சத்தத்தில் திறந்தது. எடுத்து வைத்த ஒரு கப்பில் பாதி குவாட்டரை ஊத்தினான். மாருதானி பூசிய நகமாய் பொன்னிறத்தில் மினுமினுன்னு மின்னியது பாதி கப்பு.

பக்கத்திலிருந்த குடத்திலிருந்து தண்ணீர் மோந்து கப்பு நுமுற ஊத்தினான். பொன்னிறம் கொஞ்சம் வெளுத்தது. .சட்டுனு எடுத்து வாயில் வைத்து கவுத்தினான். மின்சாரத்தை கடித்ததை போல நாக்கிலிருந்து தொண்டை வரை சுர்னு எரிந்தது.           

என்னதான் குடித்து பழக்கமிருந்தாலும் ஜெயவேல் குடிப்பதை பார்த்ததும் சந்திரபோஸ்க்கு ஒருமாதிரியாக கூசியது. முகத்தை கோணலாக வைத்தான். தற்செயலாக உடம்பு புல்லரிப்பாகி பட்னு ஒருநொடி நடுக்கம் வந்தது.

வெத்துக்கப்பை பட்டுனு தரையில் வைத்துவிட்டு கல்லமிட்டாயை எடுத்து கடுக்குனு கடித்தான் ஜெயவேல்.

“என்னணே சியர்ஸ்கூட சொல்லாம, நீ வாட்டுக்கு கப்னு சரக்கு அடிச்சிட்ட” என்றான் கதிர்வேல்.

பிறகு மூவரும் சரக்கை அடித்து முடித்தார்கள்

        *************************

ஜெயவேலுக்கு போதை ஏறியதுமே “அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா மயிறுனு வஞ்சுருப்பான்.. ங்ஙோத்தாலக்க அவனை அடிக்காம விடக்கூடாது இன்னைக்கு” என்று வேகமாக சொன்னான்.

“எண்ணே.. வாட்ச்மேன் என்னை தூக்கிப்போட்டு மிதிச்சிருந்தாலும் கவலைப்பட்டிருக்கமாட்டேன்.. இப்படி மதிக்காம மயிறுனு வஞ்சதுதான் நெஞ்சுக்குள்ள முள்ளா குத்துதண்ணே” என்றான் கதிர்வேல்.

“எதுக்கு பேசிக்கிட்டு வா எந்திரி உடனே அவனப்போயி அடிப்போம்” என்று போதையில் சந்திரபோஸ் சொன்னான்.

போதையின் உச்சத்தில் வாட்ச்மேனை அடிக்கணும்னு வெறியில் மூவரும் வாட்ச்மேன் அறையை நோக்கிப்போனார்கள்.

அவர்கள் அப்படிப் போவதை மற்றவர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். அதையெல்லாம் மீறி திமிறி மூவரும் வாட்ச்மேன் அறையை நோக்கிப்போனார்கள். சின்னசாமி மீண்டும் பெரிய கொத்தனாருக்கு போன் பண்ணினான் வேகமாக.

அறை கதவு மூடியிருந்தது. உள்ளே மொபைலில் புதிதாக திரைக்கு வந்திருக்கும் அஜித்தின் வீரம் படத்திலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மூடியிருந்த கதவை மீண்டும் சட்சட்னு போதையில் இழுத்துத் தட்டினான் ஜெயவேல்.

கதவை படாரென்று திறந்த வாட்ச்மேன் அவர்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு என்ன நினைத்தானோ சட்னு “வாங்க தம்பிங்களா” என்றான் வாய் உளறி. சற்றுநேரத்திற்கு முன்பு மயிறுனு வஞ்சவனா.. இப்படிப் பேசுறான் என்று அதிசியமாகயிருந்தது.

போதையில் இருப்பவர்கள் எந்த நிலையிலும் நிலை மாறக்கூடியவர்கள். சிலநேரம் திடீரென்று அன்பை பொழிவார்கள். சிலநேரம் திடீரென்று மனம் நோகும்படி பேசிவிடுவார்கள். இப்போது திடீரென்று வாட்ச்மேன் அவர்களைப்பார்த்து “வாங்க தம்பிகளா”என்று அழைத்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்ப்படுத்தியது.

வாட்ச்மேன் அவர்களை அப்படி அழைத்து வாயக்கூட மூடவில்லை.

அதற்குள் “வாங்க தம்பிங்களா..புளுத்தி தம்பிங்களா.. ஏன்டா அப்ப மயிறுனு பேசிட்டு.. இப்ப வாங்க தம்பிகளானு அணைக்கிறயா…” என்று சொல்லிக்கொண்டே வாட்ச்மேனை அடிப்பதற்கு திடீரென்று கையை ஓங்கினான் ஜெயவேல்.

“என்ன தம்பி கைய ஓங்குறிங்க” என்றான் கோபமாக வாட்ச்மேன்.

    “கையை இல்ல காலயே ஓங்குவோம்” என்று சொல்லி வாட்ச்மேனை எத்துவதற்கு சந்திரபோஸ் காலினை ஓங்குவதற்குள்.

பயந்து சுவரோரமாய் அண்டிக்கிட்டு “தம்பி இப்படிப் பண்ணுனிங்கனா பெரிய சூப்பர்வைசருக்கு போன் பண்ணிருவேன்” என்றான் கோபமாக வாட்ச்மேன்.

“நீ என்ஜினியருக்குக் கூட பண்ணு பயமில்ல” என்று கதிர்வேல் சொன்னான்.

கோபத்தில் வாட்ச்மேன் வேகமாக பெரிய சூப்பர்வைசருக்கு போன் பண்ணினான்.

“நீ யாருக்கும் போன் பண்ணு..ஒன்ன இன்னைக்கு வெட்டாம விடமாட்டோம் .அப்ப மயிருனு வையிரது… இப்ப மட்டும் வாங்க தம்பிகளானு அணைக்கிறது.. பயந்துகிட்டு சூப்பர்வைசருக்கு போன் பண்ணுறது.. இந்த பயம் அப்பவே இருந்திருக்குணும்ல..” என்று தெனாவெட்டாக சொன்னான் ஜெயவேல்.

அந்த இரவில் சில அழைப்புகளுக்குப்பிறகு எதிர்முனையில் போனை எடுத்த பெரிய சூப்பர்வைசரிடம் விஷயத்தை வாட்ச்மேன் சொன்னதும்

“என்னப்பா இன்னியாரத்தில சின்னப்புள்ள மாதிரி சண்ட போட்டுக்கிடக்கிங்க.. சண்டகிண்ட போடாம ஒழுங்காயிருங்க.. நாளைக்கு காலையில வாரேன்..” என்றார் உறக்க ஜாடையில் கோபமாக.

“சார் போதையில வந்து என்னை வெட்டுவேன்னு ,குத்துவேன்னு சொல்றாங்கெ” என்றான் அழுவது மாதிரியான குரலில் வாட்ச்மேன்.

“வாட்ச்மேன் அவங்ககிட்ட போனக்கொடு” என்றார் பெரியசூப்பர்வைசர் கோபத்தில்.

வாட்ச்மேன் போனை லவ்டுஸ்பிக்கர்ல போட்டு ஜெயவேல்கிட்ட கொடுத்ததும், வாங்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.. அதுமாதிரி மற்ற யாரும் போனை வாங்கவில்லை.

“சார் யாரும் போனை வாங்கிப் பேசமாட்றாங்க”

“சரி நாளைக்கு விடியவும் செட்டுக்கு வந்து வச்சுக்கிறேன்” என்றார் கோபமாக.

“ஏன்டா சார்கிட்ட போட்டுக்கொடுக்குற.. அப்படியே தலையை வெட்டிப்போடுவோம்” என்றான் ஜெயவேல்.

“எங்க மேல ஏற்கனவே வெட்டுக்குத்து கேஸ் இருக்கு விருதுநகர் ஸ்டேசன்ல.. நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளடா.. ” என்றான் சந்திரபோஸ்.

“ஏன்டா இவ்வளவு பயம் இருக்குறவவன் வாய்க்கூதிய வச்சுக்கிட்டு சும்மாயிருக்கணும்” என்றான் கதிர்வேல்

அவர்கள் மாறிமாறி வைவதைப் பார்த்து பயந்து மீண்டும் போனில் “சார்.. சார்னு “கத்தினான் வாட்ச்மேன்.

  “இப்ப கிளம்பி வந்த ஓவ்வொருத்தனயும் பிச்சிருவேன்” என்று பெரிய சூப்பர்வைசர் கோபத்தில் சொன்னதும்..

மூவரும் மனசு மாறி அந்த இடத்திலிருந்து வாட்ச்மேனை முறைத்துப் பார்த்துக்கொண்டே கிளம்பிப் போனார்கள்.

      ***************************

மறுநாள் விடிந்தது.அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை-என்றாலும் விடுமுறை நாளில் செட்டில் போடும் மூன்றுவேலை சாப்பாட்டுக்காக.. காலையில் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் அதாவது மூன்று மணிநேரம்,வேலைக்கு வந்தவர்கள் மறுநாள் வேலைக்கு தேவையான பொருள்களை மாடிகளுக்கு ஏற்றி வைக்க வேண்டும். அல்லது ஏதாவது வேற வேலை செய்யவேண்டும்.

   வாட்ச்மேனுடன் சண்டை போட்டதால் பெரிய சூப்பர்வைசருக்கு கோபமாகிப்போனது, இனி அவர் வந்து என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ இன்று -என்ற பயம் எல்லோருக்குள்ளும் இருந்தது. அதனால் இந்தக் கட்டிடத்தில் இனி வேலை தொடருமா என்ற சந்தேகத்தில் அனைவரும் ஏதும் வேலை செய்யாமல் உம்முனு உட்காந்திருந்தார்கள்.

அதிகாலையிலேயே பீளமேடு செட்டிலிருந்து நாலஞ்சு பேருடன் கிளம்பி வந்திருந்த பெரிய கொத்தனார் கோபத்தில் “படிச்சு,படிச்சு சொன்னேனே.. அதெல்லாம் கேட்காமப்போயி வாட்ச்மேன்கூட சண்டை போட்டு நொட்டியிருக்கிங்க” என்றார் சண்டைபோட்ட மூவரையும் பார்த்து.

ஒன்னுமே நடக்காது மாதிரி உம்மன்னு நின்றிருந்தனர் ஜெயவேல், கதிர்வேல், சந்திரபோஸ்.

“ஊர்ல வேலையில்லேனு கோயம்புத்தூருக்கு பெழைக்க வந்தா-அந்த பெழைப்புலேயும் இப்படி மண்ணள்ளி போட்டீங்களாடா.. இப்ப வந்து சூப்பர்வைசர் சட்டிபுட்டியெல்லாம் தூக்கிட்டுப்போங்கடா ஒங்க ஊருக்கு.. ஒங்களுக்கு வேலையில்லடானு சொல்லப்போறாரு பாரு.. இப்பையெல்லாம் நம்ம இல்லாட்டியும் ஹிந்திக்காரங்கள (வடநாட்டுக்காரர்கள்) வச்சு கட்டிடவேலை பார்த்துக்கிருவாங்க இஞ்சினியருங்க.. ஏன்னா ஹிந்திக்காரங்க அத்தனைபேரு நம்ம தமிழ்நாட்டுக்கு பெழைக்க வந்துட்டாங்க.. நம்மெல்லாம் இப்ப ஒரு பொருட்டேயில்ல” என்றார் எரிச்சலில் பெரிய கொத்தனார்

கொத்தனார் சிலநொடி கழித்து இந்த மண்ணுபிரச்சினை வரலேனா தேவையில்லாம நம்ம ஊரவிட்டு இங்க எதுக்கு வேலைக்கு வரப்போறோம்… இந்த மாதிரி பிரச்சனையை ஏன் சந்திக்கப்போறோம் என்று நினைப்பு வந்ததுமே ஜெயலலிதா ஆட்சிமேல்தான் கோபம் வந்தது பெரிய கொத்தனாருக்கு.

ஆத்து மணல கவர்மென்ட், தனியாருக்கு டெண்டர்விடாம தன்னுடைய கட்டுப்பாட்டில வைத்தது மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அளவுதான் ஆத்துல மண்ண அள்ளணும் என்றது -அதுமட்டுமில்லாமல் மணல் விலையை மிக அளவுக்கு அதிகமாக உயர்த்திவிட்டது.

அந்தளவுக்கு மணலுக்கு விலை கொடுத்து வீடு கட்ட பெரும்பாலவர்களுக்கு பொருளாதரம் இல்லை. அந்த சமயத்தில்தான் கிரஷர்களில் கற்களை மெஷினால் அரைத்து செயற்கை மணல் (எம். சாண்ட்) உருவாக்கப்பட்டது. அந்த செயற்கை மணல் மிகமிக குறைந்த விலையில் விற்கப்பட்டது. அந்த செயற்கை மணலை வைத்து வீடு கட்டினால் கட்டிடம் தரமாக இருக்குமா..? என்ற சந்தேகம் பெரும்பாலர்களுக்கு வந்தது. அதனால் ஊருத்திக்கம் பெரும்பாலும் வேலை முடங்கிப்போனது.

என்னதான் பலபேர் எம். சாண்ட் வைத்து வேலைபார்க்க தயங்கினாலும், தப்பித்தவறி ஏதோ சில இடத்தில் அதை வைத்துதான் தயக்கமில்லாமல் வேலை நடந்தது.

கட்டிட வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஜெயலலிதா இப்படி ஆத்து மணலு விலையை உயர்த்திப்போடுச்சே என்ற பெரும் அதிர்ப்தியில் இருந்தார்கள்.

இப்படி ஜெயலலிதா செய்ததிற்கு காரணம் கிரஷர் முதலாளிகளிடமிருந்து தன் ஆட்சி அரசுக்கு பெரும் வருவாயை குறுக்குவழியில் கமிஷனாக பெறுவதற்குதான் என்று பேச்சு ஊருக்குள் ஓடியது

ஆனால் ஜெயலலிதா கட்சிக்காரர்கள் ஆற்றில் அதிகளவு மண்ணள்ளி ஆறு கெட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், இப்படி ஆற்று மணல் விலையை கூட்டியதென்றும், அதற்கு மாற்றாகத்தான் கிரஷர்களிலிருந்து புதிதாக எம். சாண்ட் என்ற செயற்கை மணல் உருவாக்கப்பட்டதென்றும், தன் அரசுக்கு குறுக்குவழி வருவாய்க்காக ஜெயலலிதா இப்படிச் செய்யவில்லையென்றும் சொன்னார்கள்.

அவர்கள் அப்படிச்சொல்வதை ஊரில் இருக்கும் எதிர்கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த இரண்டில் எது உண்மையோ என்று சந்தேகம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.

கோயமுத்தூரில் நாலஞ்சு வருஷத்திற்கு தான் ஒரு இன்னொரு பெரிய கொத்தனாரிடம் கூலிக்காக கொத்தனார் வேலைபார்த்தபோது பழக்கமான எஞ்சினியரிடம் இந்த மாதிரி ஆத்து மணல் பிரச்சனையில்ல எங்க ஊர்ல வேலை டல்லாகிப்போகிச்சு. அங்க வந்து வேலை பார்க்கலாமா என்று கேட்டதற்கு, உடனே வேலைக்கு கிளம்பிவரச்சொன்னார் எஞ்சினியர்.

இதுவரை மற்றவரிடம் கூலிக்காக கொத்தனாராக வேலை பார்த்துவிட்டு -இப்போது பெரிய கொத்தனார் என்ற பெயரில் பத்துபேரை பேரை  அழைத்துச்சென்று என்ஜினியடம் வேலை பார்க்கப்போவதை நினைத்தால் கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்தது.

இதுவரை குடும்பத்துக்காக, அக்காமார்களின் கல்யாணத்துக்காக வாங்கிய கடனோடு சேர்த்து, கோயம்புத்தூருக்கு பத்துபேரை அழைத்துச்செல்வதற்கு, பிறகு அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு மற்றும் இதர செலவுக்கு பெரிய கொத்தனாருக்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டிய நிலைமையிருந்தது.

ஊரிலிருந்து, கோயம்புத்தூர் வரைக்கும் எத்தனைபேரை இருப்புவேலைக்கு (தங்கி வேலை பார்ப்பது) அழைத்துச்செல்கிறமோ அத்தனை பேருக்கும் பெரிய கொத்தனார்தான் பஸ் டிக்கெட்டின் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும். அது மாதிரி வேலைக்குப்போய் குறைந்தது பதினைந்துநாள் கழித்து சொந்த ஊருக்கு வந்தால்தான் டிக்கெட் செலவு கொத்தனாருடையது. அதற்கிடையில் வேலை செய்பவர்கள் ஊருக்கு வந்தால் அவரவருடைய கைக்காசில்தான் பஸ்ஸில் டிக்கெட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கிடையில் இருப்புவேலையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு மூன்றுவேலை சாப்பாடு,ஞாயிற்றுக்கிழமை கறிச்சாப்பாடு, தலைக்கு தேங்காய் எண்ணெய் முதற்கொண்டு  எல்லாமே பெரிய கொத்தனார் பொறுப்புதான். இதற்கிடையில் அப்பைக்கப்ப சாராயமும் வாங்கிக்கொடுக்கவேண்டும். அப்பதான் ஆள் நிலைப்பார்கள்.

இதையெல்லாம் எண்ணிதான் கடன்வாங்கி கப்பைவாங்கி வேலைக்கு வந்தவர்களை கோயம்புத்தூருக்கு அழைத்துச்சென்றார் பெரிய கொத்தனார்.

கோயம்புத்தூர்ல போயி கொத்தனார் வேலையை காண்ட்ரக்ட்தான எடுத்துப் பார்க்கப்போறோம் எப்படியாவது இலாபம் வந்து இந்த கடனகிடன அடைச்சிருவோம் என்ற நம்பிக்கை ஓடியது பெரிய கொத்தனாருக்கு.

அந்த நம்பிக்கையெல்லாம் கோயம்புத்தூர்ல இறங்கி வேலை செய்யும் இடத்திற்குப்போயி வேலையை தொட்டவுடனே கொஞ்சம் மங்கத்தொடங்கியது.

கோயம்புத்தூர்லயும் ஆத்து மண்ணுக்கு பதிலாக இந்த

எம். சாண்ட்தான் வேலைக்கு இருந்தது. ஆத்து மணலையே வச்சு வேலை பார்த்து பழகிப்போன ஆட்களுக்கு, இந்த எம். சாண்ட்டை வைத்து வேலை பார்ப்பது பெரிய சிரமத்தை தந்தது. சுவற்றில் பூசியதும் மணல்போல் இல்லாமல் வேகமாக சுக்காய் காய்ந்துபோனது எம். சாண்ட் -அதனால் என்னவோ ஒரு சதுரம் பூசவே கொத்தனார்களுக்கு பெரும் போராட்டமாய் இருந்தது. சிலருக்கு இந்த எம். சாண்ட் சேராமல் கால் கைகளில் அழற்சி வந்தது.

அழற்சியான இடத்தில் சரக்கு அடிக்கும்போது குவாட்டர் பாட்டிலிருந்து நான்கைந்து துளிகளை சொட்டுசொட்டாக விடுவார்கள். அப்போது சுறுசுறுன்னு ஒருவித எரிச்சல் வரும். அடுத்தநாள் அந்த இடம் கொஞ்சம் பட்டுப்போயிருக்கும். அவர்களை பொருத்தவரை குவாட்டர்தான் மருந்து.

இப்படி எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும், முடிந்தளவு பெரிய கொத்தனாருக்கு காண்ரக்ட் வேலையில் நஷ்டம் வந்திரக்கூடாது என்றுதான் எல்லோரும் வேலை பார்த்தார்கள்.

ஆனாலும் புதிதாக இந்த எம். சாண்ட்டை வைத்து வேலை பார்த்து இலாபம் பார்ப்பது என்பது என்பது மூக்கணாங்கயிறு இல்லாத காளையை இழுத்துப்பிடித்து நிப்பாட்ட முயற்சிப்பது போலதானிருந்தது.

எம். சாண்ட்டை வைத்து வேலை பார்ப்பதால் ஒரு குவாட்டருக்கு பதிலாக இரண்டு குவாட்டர் அடிக்கவேண்டியதாயிருந்தது. உண்மையில் அவ்வளவு அலுப்பை தந்தது அது.

என்னன்னமோ காண்ட்ரக்ட் இலாப கனவோடு ஊரிலிருந்த ஆட்களை வேலைக்கு அழைத்துவந்த கொத்தனாருக்கு பெரும் தடுமாற்றமாய் இருந்தது. இந்த மணல் பிரச்சினையைத் தொடர்ந்து,வடநாட்டிலிருந்து (ஹிந்திக்காரங்க) தமிழகத்திற்கு வந்து குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வருகையால், முன்னமாதிரி மதிப்பில்லாமல் போனது தமிழக வேலை ஆட்களுக்கு.

இந்தமாதிரி பிரச்சனைகளை சமாளித்துதான் வேலைகளை தொடர வேண்டியதாகிருந்தது இப்போதிருக்கும் சூழ்நிலையில்.

கோயம்புத்தூருக்கு வந்து பார்த்தததில் நம்பிக்கை தந்த விஷயம் எம். சாண்ட்டை வைத்துதான் இங்கு ஐந்து, ஆறு மாடி கட்டிடமெல்லாம் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க என்பதுதான்

இந்த நம்பிக்கையில் நம்ம ஊரில் இனி கொஞ்சநாளில் எல்லா இடங்களிலும் இந்த எம். சாண்டை வைத்து வேலை தொடங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது.

அந்த நிலை வரும்வரை இந்த கோயம்புத்தூரில் கட்டிட வேலை பார்த்துதான் ஆகவேண்டும். வேற வழியில்லை, என்ற நிலைமை இருப்பு வேலைக்கு வந்த எல்லோருக்கும் இருந்தது.

இந்த மாதிரி நிலை இருக்கும்போது வாட்ச்மேன்கூட அந்த மூவரும் சண்டைபோட்டது எல்லோருக்கும் எரிச்சலை ஏற்ப்படுத்தியது

இரவு வாட்ச்மேன்கூட சண்டை போட்டு இப்படி கொத்தனார் பொழப்புல கைய வச்சுட்டமே என்ற குற்ற உணர்ச்சி அந்த மூவர் மனதிலும் ஓடத்தான் செய்தது.

அப்போது திடீரென்று பெரிய சூப்பர்வைசர் இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டார். அவர் வந்ததுமே அனைவரும் பயந்து எழுந்து நின்றனர் .

வண்டியை நிப்பாட்டி விட்டு இறங்கியதுமே வேகமாக வாட்ச்மேனிடம் “நைட் யாராரு உன்னிடம் தகராறு பண்ணியது..” என்றார்.

வாட்ச்மேன் ஜெயவேல், கதிர்வேல்,சந்திரபோஸ் ஆகிய மூவரையும் கையைநீட்டி வேகமாக “இவங்கதான் சார்” என்றான்

பெரிய சூப்பர்வைசர் கோபத்தில் பார்க்க ஆரம்பித்ததும் ரொம்பவும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நின்றனர் மூன்றுபேரும்.

கோபமாக “ஓ…இவங்கெதானா அது” என்றார் வாட்ச்மேனைப் பார்த்து சூப்பர்வைசர்.

ஜெயவேலை கையைக்காட்டி “ஆமாங்க சார். அதோ அந்த ஆளுதான் சார் என்னை வெட்டுவேன்னு சொன்னார்” என்றான் வாட்ச்மேன்.

“ஓ.. இவர்தான் வெட்டுவேன்னு சொன்னாரா.. வெட்ற ஆளு சைஸ்ஸப் பாரு” என்றார் கோபத்தில் சூப்பர்வைசர்.

தயங்கிதயங்கி “மொதல்ல வாட்ச்மேன்தான் எங்கள மயிறுனு வஞ்சாரு..அதான்” என்று இழுத்தான் ஜெயவேல்.

வாட்ச்மேனை முறைத்துப் பார்த்தார் சூப்பர்வைசர்

“நான் வையல சார்” என்றான் வாட்ச்மேன்.

“இல்ல சார் மயிறுனு வஞ்சாரு வாட்ச்மேன்” என்றார்கள் மொத்தமாக.

வாட்ச்மேனைப்பார்த்து “ஏய் நீயெதுக்கப்பா மயிறுனு வஞ்ச..”என்றார் பெரிய சூப்பர்வைசர்.

“………….”

“ஏய் ஒன்னத்தான்பா மயிறுனு எதுக்கு நீ வஞ்ச”

வாட்ச்மேன் வாயுக்குள்ளே “இல்ல நான் வையல சார்” என்றான்.

“வையலேனு அவெங்க சொல்றது பொய்யா” என்றார் பெரிய சூப்பர்வைசர்

“சார் எங்கள மயிறுனு வஞ்சாரு” என்றான் வேகமாக இராதாகிருஷ்ணன்.

“ப்ச்னு.. என்னப்பா ஒரே இடத்தில வேல பார்த்திக்கிட்டு.. இப்படி சின்னப்பிள்ளைமாதிரி வஞ்சு சண்ட போட்டுக்கிட்டு.. ச்சீ ஒங்களுக்கெல்லாம் வெட்காம இல்லையாப்பா..” என்றார் பெரிய சூப்பர்வைசர் கோபத்தில்.

பெரிய கொத்தனார் “சார் இனிமேல் இதுமாதிரி இனிமே நடக்காம பாத்துக்கிறேன் சார்” என்றார்.

அதற்கு சூப்பர்வைசர் பதில் எதுவும் சொல்லாமல் முறைத்துப்பார்த்தார்.

சிறிதுநேரம் அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஏதோ ஒருவிதம் பயம் வந்தது.. பெரிய சூப்பர் வைசர் என்ன செய்யப்போறாரோ.. ஏதோ செய்யப்போறாரோ.. என்று

பெரிய சூப்பர்வைசர் மிலிட்டரி ரிட்டையர்டு ஆனவர். அவர் மிலிட்டரியில் இருந்ததால் ஏதாவது கோபம் வந்து பெரிய தண்டனை கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் ஜெயவேல்,கதிர்வேல், சந்திரபோஸ் நினைத்தார்கள். அவர்களைப்போலதான் மற்றவர்களும் நினைத்தார்கள்.

சிறிதுநேரம் அமைதி நிலவியது. சூப்பர்வைசர் எதையோ யோசிப்பது மாதிரி நின்றிருந்தார். அப்போது பெரிய கொத்தனாருக்கு வேலையை விட்டு அனுப்பி விடுவாரோ என்ற பயம் வந்தது.

திடீரென்று “ஏய் வாட்ச்மேன் இங்க வா…  ஏய் நீங்க மூனு பேரும் இங்க வாங்க..” என்றார்

வாட்ச்மேன், ஜெயவேல்,, கதிர்வேல், சந்திரபோஸ் ஆகிய நால்வரும் சூப்பர்வைசர் பக்கத்தில் போனார்கள்.

“வாட்ச்மேன்கிட்ட ஒவ்வொருத்தரும் கையைக்கொடுத்து குலுக்கி ப்ரண்டஸ் ஆகிக்கிங்க.” என்றார் சூப்பர்வைசர்.

சூப்பரவைசர் என்னடா திடீரென்று இப்படி செய்யுறாரே என்று எல்லோருக்கும் ஆச்சரியமாய் இருந்தது.

வாட்ச்மேனிடம் தயங்கி தயங்கி கையைக்கொடுக்க வந்த ஜெயவேலை பார்த்து,

“ம் என்ன தயக்கம்.. சண்டை போடுறப்ப இல்லாத தயக்கம்.. இப்ப மட்டும் என்ன புதுசா வருதோ…” ம் இரண்டுபேரும் சிரிச்சிக்கிட்டே கையைக்கொடுங்க” என்றார் சூப்பர் வைசர்.

வாட்ச்மேனும், ஜெயவேலும் அசடு வழிந்து கூச்சத்துடன் கையைக்கொடுத்து பற்றிக்கொண்டனர். அப்போது சுற்றியிருந்தவர்கள் சத்தம்வராமல் சிரித்தார்கள்.

“கையைக்கொடுத்துக்கிட்டே சிரிங்க” என்றார்

இரண்டுபேரும் சிரித்துக்கொண்டார்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கூச்சத்துடன்.

“இனிமே வாட்ச்மேனும் நீங்களும் ப்ரண்டஸ்..! இனி சண்ட போடக்கூடாது சரியா…? ஒரே இடத்தில வேல பார்த்திக்கிட்டு சண்ட போடுறது தப்பில்லையா…? இனிமே இந்தச் சோலிய விட்டுப்போடணும்.. நல்ல வேல பாருங்க சம்பாரிங்க.. ஜாலியாயிருங்க.. குடும்பத்துக்கு வேல செஞ்சு சம்பளத்த கொடுத்துவிடுங்க.. அதைவிட்டுட்டு சண்டையெல்லாம் போடக்கூடாது” என்றார் பெரிய சூப்பர்வைசர்.

அதற்கு இருவரும் தலையசைத்துக்கொண்டனர்.

அதேபோல்கதிர்வேலையும், சந்திரபோஸையும் வாட்ச்மேனிடம் கையைக் கொடுக்கச்சொல்லி சமாதானமாக்கினார்.

பெரிய சூப்பர்வைசரின் இந்த முடிவு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் பெருந்தன்மையைப் பார்த்து எல்லோரும் மிரண்டுபோனார்கள்.

பெரிய கொத்தனாருக்கு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது.

சிலநொடிகள் கழித்து

“சரி போயி அவங்க அவங்க சோலியப் பாருங்க.” என்று சொல்லிவிட்டு சிறிது நின்று கட்டிடத்தை சுற்றிப்பார்த்துவிட்டு வண்டியை எடுத்துக்கிளம்பிப் போனார் பெரிய சூப்பர்வைசர்.

அவர்போனதும் வாட்ச்மேன் தனது அறைக்கு நடையைக் கட்டினான்.

சூப்பர்வைசர் போனதும் எல்லோரும் முகத்திலும் நிம்மதி வந்து பெலக்க சிரிப்பு வந்தது.

பெரிய சூப்பர் வைசர் நம்ம எதிரியான வாட்ச்மேனை கொஞ்சநேரத்தில் நமக்கு ப்ரண்ட்ஸ் ஆக்கிப்போட்டாரே என்று சொல்லி சொல்லி கைதட்டி மாறிமாறி சிரித்தார்கள் அனைவரும்.

          *********************

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேங்க அக்கவுண்ட்டில் வீட்டுக்கு சம்பளம் அனுப்பிவிட்டதுபோக, மிச்சம் கையில் வைத்திருந்த காசையெல்லாம் சந்தோஷத்தில் சரக்கு வாங்கி சரக்கு வாங்கி மதியத்துக்குள் முடித்துவிட்டார்கள் அனைவரும்.

சாயங்காலம் சரக்கு அடிக்க காசு இல்லாமல் பெரும்பாலும் எல்லோரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த புலம்பல்களுக்கிடையேயும் பெரிய சூப்பர்வைசர் காலையில் செய்ததை நினைத்து நினைத்து நினைத்து பெருமைப்பட்டு சிரித்துக்கொண்டார்கள். இப்படி ஒரு நல்ல மனுஷன் தங்களுக்கு சூப்பர்வைசரா கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.

அப்போதுதான் இராதாகிருஷ்ணன் போதையில் “ஏய் இன்னைக்கு நமக்கு புது ப்ரண்ட்டா ஆகியிருக்கிற வாட்ச்மேன்கிட்ட காசு இருக்கும்டா.. மாசம் பிறந்த ரெண்டுநாள் தான் ஆகுது. அவருக்கு இப்பத்தான்டா சம்பளம் போட்ருப்பாங்க” என்றான் ஜெயவேலைப் பார்த்து நக்கலாக .

சண்டைபோட்ட வாட்ச்மேன்கிட்ட போய் துட்டுக் கேட்கலாமா என்ற ஒருவித கூச்சம் இல்லாமலில்லை ஜெயவேலுக்கு

ஆனாலும் போதையிலிருந்த ஜெயவேல் தைரியமாக வாட்ச்மேன் அறையை நோக்கிப்போனான்.

உடனே வாட்ச்மேன் அறைக்குள் போகத்தயங்கி..

வாசலிலே அங்கிட்டும், இங்கிட்டும் வம்புக்கினே நடந்தான்.

சரக்கு அடித்துக்கொண்டிருந்த வாட்ச்மேன் ஜன்னல்வழியே ஜெயவேல் அங்கிட்டும், இங்கிட்டும் போவதை கவனித்தான்.

அப்போது அறையை விட்டு வெளிவந்து ஜெயவேலைப் பார்த்து போதையில் கொஞ்சமாக சிரித்தான். பதிலுக்கு ஜெயவேல் சிரித்தான்.

“என்ன தம்பி சரக்கு கிரக்கு அடிக்கிறிங்களா” என்று போதையின் உச்சத்தில் வாய் உளறிக் கேட்டான்.

வாட்ச்மேன் அப்படி கேட்டதுதான் மாயம் உடனே இதான்டா வாய்ப்பு என்று யோசித்துக்கொண்டே அறைக்குள்போயி கொடுத்த சரக்கை டப்னு வாங்கி வாயில் ஊத்திவிட்டு கொஞ்சநேரம் கழித்து “எண்ணே காசுகீசு இருக்காண்ணே.. நாளைக்கி சம்பளம் வாங்கி திருப்பிக்கொடுத்துறேன்” என்று தலையை சொறிந்துகொண்டே கேட்டான் ஜெயவேல்.

யோசிக்காம போதையில “ஓங்களுக்கு இல்லாத காசா.. இந்தாங்க” என்று பட்டுனு ஆயிரம் ரூபாயை சட்டைப் பையிலிருந்து எடுத்துக்கொடுத்தான் வாட்ச்மேன்.

“நன்றிண்ணே..” என்று சொல்லிக்கொண்டே வாங்கிக்கொண்டான் ஜெயவேல்.

“எண்ணே ஒங்களப்போயி நேத்து அடிக்கவந்துட்டேன்.. தயவுசெய்து மன்னிச்சிருங்கண்ணே” என்று காலில் விழப்போனான் போதையில் ஜெயவேல்.

காலில் விழுகப்போனவனை இறுக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கட்டும் தம்பி.. இதனால என்னயிருக்கே.. விடுங்க தம்பி” என்றான் வாட்ச்மேன்.

பிறகு இன்னொரு ரவுண்ட் மது உள்ளேபோனது.

அடுத்த கொஞ்சநேரத்தில் வாட்ச்மேன் கொடுத்த காசுக்கு குவாட்டர்கள் வாங்கி வரப்பட்டது.

ஜெயவேல் கூட்டத்துடன் வாட்ச்மேன் ஐக்கியமானார்.

போதையில் ஜெயவேல் -வாட்ச்மேனை ‘அண்ணே..அண்ணே”என்று கட்டித்தழுவினான். பதிலுக்கு வாட்ச்மேன் “தம்பி.. தம்பி..” என்று கட்டித்தழுவினான்.

எப்போதும் எந்த சூழ்நிலைக்குத்தக்கனவும் தன் மொபைலில் பாட்டு பதிந்து அந்தந்த சூழ்நிலைக்குத்தக்கன பாட்டுப்போடும் பழக்கம்கொண்ட மகேஸ்வரன் -அப்போது திடீரென்று தன் மொபைலிலிருந்து ரஜினி,பிரபு நடித்த தர்மத்தின் தலைவன்’ படத்திலிருந்து

‘தென்மதுரை வைகைநதி தினம்பாடும் பாட்டு ‘என்ற பாடலின் மைய வரியான ‘நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை….தன்னைப்போல என்னை என்னும் நீயும் நானும் ஓர்தாய் பிள்ளை… தம்பி உந்தன் உள்ளம்தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை…ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயமில்லை’ என்ற அண்ணன்-தம்பி உறவின் புனிதத்தை சொல்லும் பாடலை தன் போனில் திடீரென்று போட்டுவிட்டான்.

அந்தப் பாட்டை கேட்டதுமே சடாரென்று வாட்ச்மேன் வாயசைத்து பாடி  அந்தப்பாட்டில் வரும் அண்ணன் ரஜினிபோல தன்னை கற்பனை செய்துகொண்டு ஆடினான்.-அதுபோல ஜெயவேல் அந்தப்பாட்டில் வரும் தம்பி பிரபுவாய் தன்னை கற்பனை செய்து ஆடினான். போகப்போக போதையில் உண்மையான அண்ணன் தம்பிபோல் கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்து ஆட ஆரம்பித்தனர் இருவரும்.

அதைப்பார்த்து சுற்றியிருந்தவர்கள் போதையில் கைதட்டி சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்து விசில் அடித்து தாங்களும் ஆட ஆரம்பித்தார்கள். அந்த நொடியில் எந்த ஒரு கவலையுமற்ற குழந்தைகளின் மனதை அவர்கள் அடைந்திருந்தனர்.

00

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *