உத்தமதானபுரம் வேங்கட சுப்பய்யர் சாமிநாதன் 12.02.1855 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சூரியமூலையில் பிறந்தார். தனது பாட்டனாரிடம் அரிச்சுவடி கற்று, இசைப் புலவர் கிருஷ்ணய்யரிடம் சங்கீதமார்க்கங்களறிந்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைக் குருவாகக் கொண்டு தமிழ்ப்பாடம் கேட்டார். உ.வே.சா பிறந்தபோது பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் வேங்கடநாமசர்மன். அது அவருடைய முன்னோரின் பெயர்.
1877-ம் ஆண்டு உ.வே.சா பதிப்புப்பணியில் தன்னை முதன்முதலாக ஈடுபடுத்திக்கொள்கிறார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய சுப்பிரமணிய தேசிக விலாசம் என்கிற மடத்தின் கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த புலவர்கள் அம்மடத்தைச் சிறப்பித்துப் பாடல்கள் பாடியிருந்தனர். அந்தப்பாடல்களை எல்லாம் தொகுத்து ‘சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு’ எனும் பெயரில் நூலாகப் பதிப்பித்து உ.வே.சா. தனது பதிப்புப் பணியை முதன்முதலில் தொடங்கினார். சுப்பிரமணியர் பெயரால் தொடங்கிய பணி சுறுசுறுப்பாகப் போயிற்று என்றுதான் சொல்லவேண்டும். பிறகான நாட்களில் அவர் சங்க இலக்கியங்கள், சீவக சிந்தாமணி, மணிமேகலை என்று தேடித்தேடிப் பதிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு சுப்பிரமணிய தேசிக விலாசமே உந்துதலாய் இருந்தது.
உ.வே.சா.வின் தீவிரமான தமிழ்க்காதலே அவருடைய அனைத்துச் சாதனைகளுக்கும் முதல்படி. அடுத்து அவருடைய வளர்ப்பு. உ.வே.சா.வின் தந்தை வேங்கட சுப்பய்யர் ஊர் ஊராகச் சென்று இராமாயண நாடகக் கீர்த்தனைகளைப் பாடுவதையே தொழிலாகக் கொண்டவர். எனவே தன் பிள்ளையும் இசைப்பயிற்சி மேற்கொள்வது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று கருதினார். உ.வே.சா.வின் பிள்ளைப்பிராயத்து ஆசிரியர்களாக நாராயண ஐய்யர், சாமிநாத ஐய்யர் இருவரும் இருந்தனர். சாமிநாத ஐய்யர் உ.வே.சா. வுக்கு சமஸ்கிருதம் கற்பித்தார். சிறிய தந்தை இசைப்பயிற்சி அளிக்க, தாய்வழிப்பாட்டனார் கிருஷ்ண சாஸ்திரி சிவபக்தியூட்டினார்.
அந்நாளில் இசைக்கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியிலேயே இருந்தன. எனவே உ.வே.சா.வுக்கு தெலுங்கு கற்பிக்கவும், ஆங்கிலத்தின் அவசியம் கருதி ஆங்கிலம் போதிக்கவும் ஏற்பாடு செய்தனர். ஆனால் உ.வே.சா. அந்த இரண்டு மொழிகளையும் கற்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால் அரியலூரில் அவருடைய தந்தை இருந்தபோது சடகோப ஐய்யங்கார் எனும் தமிழ்ப்புலவர் மூலமாக கம்பராமாயணம், பாகவதம் உள்ளிட்ட இலக்கியங்களைக் கற்றுக்கொண்டார். சிறுவயதில் உ.வே.சா.வின் தமிழ் ஈடுபாட்டுக்கு சடகோப அய்யங்கார் எடுத்த தமிழ் வகுப்புகள் காரணமாக இருந்தன. குன்னம் சிதம்பரம் பிள்ளை, கார்குடி கஸ்தூரி அய்யங்கார், செங்கணம் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் ஆகியோரிடமும் உ.வே.சா. பாடம் கற்றார். விருத்தாசல ரெட்டியார் தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புலமையையும், பெருமைகளையும் உ.வே.சா.வுக்கு எடுத்துரைத்தார். அப்போதுமுதல் உ.வே.சா., மீனாட்சி சுந்தரபிள்ளையிடம் பாடம் கேட்கும் கனவு காணத்தொடங்கினார்.
அக்காலகட்டத்தில் விருத்தாசல ரெட்டியார் மட்டும் அல்ல- தமிழார்வம் மிக்க பலரும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புலமையையும், கற்பிக்கின்ற ஆற்றலையும் வியந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவற்றையெல்லாம் கேட்கக்கேட்க உ.வே.சா. வின் ஆர்வம் பலமடங்கு அதிகமாயிற்று. அவரிடம் பாடம் கேட்கின்ற வாய்ப்பு அமையாதா என்று ஏங்கத் தொடங்கினார். மகனின் ஆசை தந்தைக்கும் புரிந்தது. அவர் மனமும் அதை ஆமோதித்தது. தந்தையும் மகனும் புறப்பட்டனர்.
மயிலாடுதுறையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை மடத்தை அடுத்த மேல்பாலிலுள்ள வீட்டில் தங்கியிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையை இருவரும் சந்தித்தனர். குருவின் முதல் தரிசனம், சிஷ்யர்களுக்குள் ஏற்படுத்துகின்ற பரவசம் சொல்லில் அடங்காதது. அதைப்பிறகு அவர்கள் எழுதுவார்கள். அப்போதும் அந்த பரவச கணங்கள் நீடித்தபடியே இருக்கும். அப்படித்தான் பிள்ளையவர்களைச் சந்தித்தபோது உ.வே.சா. வுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கிறது. உ.வே.சா. வின் தந்தை மகனைப் பிள்ளையிடம் அறிமுகம் செய்து ‘இவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். எப்போது இவனைப் பாடம் கேட்க அனுப்பலாம்?’ என்று கேட்டிருக்கிறார். உ.வே.சா. வின் திறனைப் பரிசோதிக்கின்ற விதமாக மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு, சரியான பதில்கள் கிடைத்ததும் திருப்தியடைந்தார். ஆனாலும், ‘என்னிடம் பாடம் கேட்க வருகின்ற சிலர் படிப்பதாக பாவனை காட்டி பாதியில் ஓடிப்போய், என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகின்றர். அரைகுறையாகப் பாடம் கேட்பதால் எவ்விதப் பயனுமில்லை’ என்கிறார். உ.வே.சா.வின் தந்தை மகனுக்கு முழு உத்தரவாதமளித்தார். பிள்ளையும் ஏற்றுக்கொண்டார்.
தொடக்கத்தில் உ.வே.சா.வுக்குப் பயிற்றுவித்தவர் சவேரிநாதன் என்கிற கிறிஸ்தவர். எனவே அவருக்குப் பிள்ளையிடம் நேரடியாகப் பாடம் கேட்கமுடியவில்லையே என்கிற மனக்குறை இருந்துவந்தது. எப்படியாவது பிள்ளையின் கவனத்தை ஈர்த்து, அவரிடமே பாடம் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தவர், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் வீட்டுக் கொல்லையில் சில தாவர இனங்களை நட்டுவைத்துத் தண்ணீர் ஊற்றி, அவை புதிய தளிர்கள் விட்டிருக்கின்றனவா என்று அன்றாடம் காலையில் சென்று கவனிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை அறிந்துகொண்ட உ.வே.சா., பிள்ளையவர்களுக்கு முன்னரே எழுந்து கொல்லைக்குச் சென்று, எந்தெந்தச் செடிகள் புதிய தளிர் விட்டிருக்கிறது என்று பார்த்து வைத்துக் கொள்வாராம். பிறகு பிள்ளை செடிகளைப் பார்வையிட வரும்போது, இந்த இந்தச் செடிகள் எல்லாம் புதிய தளிர் விட்டிருக்கிறதென்று காட்டுவாராம். இதன் மூலம் பிள்ளையின் மனத்தில் இடம்பிடித்த உ.வே.சா., வெகுவிரைவில் அவரிடமே பாடம் கேட்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ‘எனக்கிருந்த தமிழ்ப்பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப்பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம். எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தேன்’ என்று உ.வே.சா. எழுதியதைப் படிக்கும்போது, அவரைப்போல பசியுள்ள ஒரு மாணவனைக்கூட இன்றைக்கு காணமுடியவில்லையே என்கிற வருத்தம் உண்டானது. பிள்ளையவர்களைப் போல பசியறிந்து, எதிர்பார்ப்புக்கும் அதிகமாகக் கற்பிக்கின்ற ஆசிரியரும் இன்றைக்கு எவரும் இல்லை என்கிற நிதர்சனமும் கிடைத்தது.
உ.வே.சா. அவர்களுக்கு ‘வேங்கடராமன்’ என்பது பெற்றோர் சூட்டிய பெயர் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அவர்களுடைய குலதெய்வம் வேங்கடாசலபதி என்பதால் அவருக்கு அந்தப்பெயர். வேங்கடராமன் என்கிற பெயர் உ.வே.சா.வுக்குப் பொருத்தமில்லை என்று பிள்ளையவர்கள் எண்ணியிருந்தாரோ என்னவோ, ஒருமுறை பாடம் கற்பித்தபோது அவரிடம், ‘உனக்கு வேறு பெயர் எதுவும் இருக்கிறதா’ என்று கேட்க, ‘சாமா என்று என்னைச் செல்லமாக அழைப்பார்கள். அது முன்னோர் சாமிநாதன் என்பவருடைய பெயரின் சுருக்கம்’ என்று உ.வே.சா. வும் கூற. ‘இனி உன் பெயர் சாமிநாதன் என்றே இருக்கட்டும்’ என்றார் பிள்ளையவர்கள் ஆசீர்வாதமாக. பிறகு சாமிநாதன் என்னும் பெயரே நிலைத்தது.
மயிலாடுதுறையில் இருந்ததால், ஓய்வு வேளைகளில் அங்கிருந்த கோபாலகிருஷ்ண பாரதியிடம், உ.வே.சா. இசைப்பயிற்சி பெற்றார். இது அவருடைய தந்தையின் விருப்பம். ஆனால் இதையறிந்த பிள்ளை என்ன நினைத்தாரோ தெரியவில்லை ‘இசையில் நீ நாட்டம் கொண்டால் இலக்கியத்தின் பக்கம் கவனம் செல்லாது’ என்று ஒருநாள் உ.வே.சா. விடம் கூறினார். பிள்ளை சொன்ன கருத்தை உ.வே.சா. அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாரா அல்லது குருநாதர் சொல்லைத் தட்டக்கூடாது என நினைத்தாரா, சொல்ல இயலவில்லை. உடனே தன்னுடைய இசைப்பயிற்சியை நிறுத்திக்கொண்டார்.
கும்பகோணத்தில் அக்காலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தியாகராஜ செட்டியாருடன் ஒரு சந்தர்ப்பத்தில் உ.வே.சா. வுக்கு நட்பு ஏற்பட்டது. பிள்ளையவர்களுடன் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில், கும்பகோணத்தில் வைத்து தியாகராஜ செட்டியாரை உ.வே.சா. முதன்முதலில் சந்தித்தார். செட்டியாரின் தோற்றமும் நடையுடை பாவனைகளும் உ.வே.சா. வைக் கவர்ந்திருந்தன. செட்டியாரும் உ.வே.சா.வுடன் நட்பாகப் பழகினார். அவர் பாடம் கேட்ட விவரங்களைக் கேட்டார். அத்துடன் ‘உன்னால் மற்றவர்களுக்குப் பாடம் நடத்த முடியுமா?’ என்றும் கேட்டுவைத்தார். உ.வே.சா. அதற்கு ’என்னால் முடியும்’ என்று தன்னம்பிக்கையுடன் பதில் தந்தார். அப்போதே செட்டியாருக்கு உ.வே.சா. மீது ஒருவித நம்பிக்கை துளிர்த்து விட்டிருந்தது. அது பிறகு அவரை ‘கும்பகோணத்தில் அப்பு சாஸ்திரி தொடங்கவுள்ள புதிய பள்ளிக்கூடத்திற்கு தமிழ்ப் புலவராகப் பணியாற்றச் செல்கிறாயா?’ என்று கேட்க வைத்தது. உ.வே.சா.வுக்கும் அதில் விருப்பம் இருந்திருக்கலாம். ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. ‘’உத்தியோகமா, பிறகு பார்த்துக்கொள்ளலாம். சாமிநாதன் இப்போதைக்கு இங்கேயே இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டார். ஆசான் சொல்லைத் தட்டாத மாணவனாகிய உ.வே.சா., பிள்ளையவர்கள் தன்மீது கொண்ட அன்பினால்தான் தன்னை வேலைக்கு அனுப்புவதில் உடன்படவில்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.
இடைவிடாமல் பாடம் கேட்டுவந்த காலங்களில் சிலபோது அதில் தொய்வு ஏற்பட்டது. காரணம் உ.வே.சா.வின் உடல்நலக்குறைவு. அவருக்கு வெப்பு நோய், அம்மை என்று வந்துகொண்டிருந்தது. அந்த நேரங்களில் அவர் பாடம் கேட்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஊருக்குச் சென்று சிகிட்சை எடுத்துக்கொண்டு திரும்ப வேண்டியதாயிற்று. உடல்நலக்குறைவை எல்லாம் உ.வே.சா. பொருட்படுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும். அவருக்குப் பிள்ளையவர்களின் அருகாமையும் அவரிடம் பாடம் கற்பதுமே பிரதானமான காரியமாக இருந்தது. எந்நிலையிலும் அவர் அதை இழக்கத் தயாராக இல்லை. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் தந்தையின் சொல்படி சில ஊர்களுக்குச் சென்று புராணங்கள் குறித்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் உ.வே.சா. இவருடைய உரையைக் கேட்ட காரை என்னும் ஊர் மக்கள் தொடர்ந்து உ.வே.சா. அங்கேயே தங்கியிருந்து சொற்பொழிவுகள் செய்யவேண்டுமென்று விரும்பிக்கேட்டுள்ளனர். ஆனால் அவர் மனமோ குருநாதரிடத்தில் இருந்தது. எனவே அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டுப் பிள்ளையவர்களைச் சென்று அடைந்திருக்கிறார்.
1876 புத்தாண்டு உ.வே.சா.வுக்குச் சோகமாகப் பிறந்தது. அன்றைக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளை மரணமடைந்தார். உ.வே.சா. தன் உயிரே பிரிந்தது போல ஆனார். சுப்பிரமணிய தேசிகரிடம் சென்று அழுது புலம்பியிருக்கிறார். தேசிகரால் அவருடைய துயரத்தைத் தணிக்க இயலவில்லை. எப்படியாவது அவரை சமாதானப்படுத்த வேண்டுமென்று எண்ணி, “இனி நீ என்னிடத்தில் பாடம் கேட்டுக்கொண்டு இந்த மடத்திலேயே தங்கியிரு” என்றார். பிள்ளையவர்களைப்போலவே தேசிகருக்கும் உ.வே.சா. மீது தனிப்பட்ட அன்பு இருந்தது. தேசிகர் கூறிய வார்த்தைகள் உ.வே.சா. வை சாந்தப்படுத்தியது. அவர் தேசிகரிடம் கம்பராமாயணம், நன்னூல் மற்றும் சித்தாந்த நூல்களைப் பாடம் கேட்டார். தேசிகர் திருவாவடுதுறையில் புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அங்கு உ.வே.சா. வுடன் அவரது பெற்றோர், மனைவி ஆகியோர் வசிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.
உ.வே.சா. வின் வாழ்க்கையின் அடுத்த கட்டம் கும்பகோணத்தில் நிகழ்ந்தது. குமபகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தியாகராச செட்டியார் பணி ஓய்வு பெற்றார். அவர் தனது இடத்துக்குப் பொருத்தமான மற்றொருவரை மனத்தில் ஆலோசித்து திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரைச் சந்தித்தார். ‘’கல்லூரிப் பணிக்கு உ.வே.சா. தகுதியானவர். அவரை அங்கு அனுப்பி வையுங்கள்” என்று கேட்டுக்கொள்ள, தேசிகர் சற்றுத் தயங்கினாலும் இறுதியில் அதற்கு சம்மதித்தார். உ.வே.சா. கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.
![](https://nadukal.in/wp-content/uploads/2025/01/ஜாகீர்-ஓவி.jpg)
கும்பகோணம் கல்லூரி ஆசிரியர்கள் உ.வே.சா.வின் புலமையைச் சோதிக்க எண்ணி அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தனர். உ.வே.சா. அதற்கு சரியான பதிலகளை அளித்தார். “நீங்கள் புதிய பாடல் இயற்றுவீர்களா?” என்று கேட்டனர்.
வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி
சுந்தரநா வலவன்பாலே
ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைச் சியைவுறநீ
இதுகாறும் இனிதின் மேய
ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில்
நின்னிடமெற் களித்தல் நன்றே
வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா
சப்பெயர்கொள் மேன்மை யோனே.
என்று உ.வே.சா. உடனே பாடிக்காட்டினார். இந்தப்பாடலை உ.வே.சா. அங்கு ஏற்கனவே பணியாற்றி விடைபெற்றிருந்தவரும், தன்னை கல்லூரித் தமிழாசிரியர் பணிக்குப் பரிந்துரைத்திருந்தவருமான தியாகராசச் செட்டியாரிடம் கூறுவதுபோல அமைத்துப் பாடினார். அங்கிருந்த ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, கல்லூரி நிர்வாகத்தினருக்கும் உ.வே.சா. வின் திறமை மீது நம்பிக்கை ஏற்பட்டது. உடனே அவர் அங்கு பணி நியமனம் செய்யப்பட்டார். கல்லூரிப் பணியிலமர்ந்த சில மாதங்களில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வர சுவாமி நினைவாக கல்யாணசுந்தரம் என்று பெயர் வைத்தார்.
அந்நாட்களில் சேலம் இராமசாமி முதலியார் கும்பகோணத்துக்கு முன்சீப்பாக இருந்தார். சுப்பிரமணியதேசிகரின் ஆலோசனைப்படி அவரை உ.வே.சா. சந்தித்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கையில் உ.வே.சா. படித்திருக்கின்ற நூல்களைக்குறித்து முதலியார் கேட்டறிந்தார். அவரும் விளக்கமாகத் தான் பாடம் கேட்ட விவரங்களைக் கூறினார். “இதையெல்லாம் படித்து என்ன பயன்?” என்று எடுத்த எடுப்பில் அலட்சியமாகக் கேட்டார். உ.வே.சா. அதிர்ந்து போனார். பிறகு சுதாரித்துக் கொண்டு தான் கற்றறிந்த கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களின் பெயர்களைக் கூறினார். உ.வே.சா. குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் பிற்காலத்து நூல்கள் என்று கூறிய முதலியார் “சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவற்றை படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உ.வே.சா. “எனக்கு அந்த சுவடிகள் எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன்” என்றார். முதலியாருடனான இந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பில் நச்சினார்க்கினியர் உரையுடன் தன்னிடம் கடிதப் பிரதியாக இருந்த சீவகசிந்தாமணியை உ.வே.சா.விடம் கொடுத்தார் முதலியார். முதலில் அதைப்படிக்க உ.வே.சா. வுக்குத் தடுமாற்றமாகத்தான் இருந்தது. நச்சினார்க்கினியர் உரை இருந்ததால் ஒருவாறு வாசிக்க இயன்றது. பிறகு அவர் அதை முதலியாருக்கே பாடம் சொன்னார்.
சீவகசிந்தாமணி ஜைன நூல். அதில் நிறைய ஜைன சமூகம் சார்ந்த சொல்லாடல்கள் இடம் பெற்றிருந்தன. கும்பகோணத்தில் அப்போது ஜைனர்கள் வசித்து வந்தனர். உ.வே.சா. நேரில் சென்று அவர்களைச் சந்தித்து சீவகசிந்தாமணியில் தனக்கிருந்த சந்தேகங்களை எல்லாம் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார். மறுவாசிப்பில் அவருக்கு சிந்தாமணி தெளிவாகப் பாடமாயிற்று. பிறகுதான் அதைப் பதிப்பிக்கவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு உண்டானது. திருத்தம் செய்யப்பட்ட சீவகசிந்தாமணியை எடுத்துக்கொண்டு உ.வே.சா. சென்னைக்கு வந்தார். இன்றைக்குப் போலவே அன்றைக்கும் பதிப்புப் பணிகளுக்கு ஏற்ற இடமாகச் சென்னை இருந்தது. பல தமிழ்ப்புலவர்கள் சென்னையில் தான் முகாமிட்டிருந்தனர். அவர்களை எல்லாம் உ.வே.சா. சந்தித்து தொடர்பேற்படுத்திக் கொண்டார். ராஜாஜியின் உதவியுடம் சீவகசிந்தாமணி அச்சிலேறியது. முதன்முதலில் 500 பிரதிகளுடன் சீவகசிந்தாமணி அறிவுலகத்தினரின் வாசிப்புக்கு வந்தது. ஒரு பழந்தமிழ் நூலைப் பதிப்பித்த மகிழ்ச்சியில் அப்போது உ.வே.சா. திளைத்தார். சிந்தாமணி பதிப்பில், உரையில் இடம்பெற்றிருந்த மேற்கோள்கள், பல நூல்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்ரை இணைத்திருந்தார். உ.வே.சா. பதிப்பித்த சீவகசிந்தாமணியைப் படித்த புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
7-1-1888 அன்று சுப்பிரமணிய தேசிகர் மரணமடைந்தார். பிள்ளையவர்களுப் பிறகு தேசிகர்தான் உ.வே.சா. வுக்குப் பக்க பலமாக இருந்தார். அவருடைய மரணம் குறித்துக் கேள்விப்பட்டவர் பின்னாளில் எழுதும்போது-
‘நின்ற இடத்தில் நின்றேன். ஒன்றும் ஓடவில்லை. புத்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்றுவிட்டது போன்ற உணர்வு உண்டாயிற்று..’ என்று உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். அந்த சோகம் ஆறுவதற்குள் 1888 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு மற்றொரு துயரம் ஏற்பட்டது. மற்றொரு நலம் விரும்பியாக விளங்கியவரும், கல்லூரித் தமிழாசிரியர் பணிக்கு அவரை முன்மொழிந்தவருமான தியாகராச செட்டியார் மரணமடைந்தார். துயரங்கள் தொடர்ந்த போதும் உ.வே.சா.வின் இயக்கம் ஓயவில்லை. கடைச்சங்க நூலாகிய பத்துப்பாட்டு அவருடைய ஆராய்ச்சிக்குள்ளானது. பத்துப்பாட்டு குறித்து தெளிவாக அறிந்துகொள்ளவும், ஏட்டுச்சுவடிகளை சேகரிக்கவும் அவர் பல ஊர்களுக்குப் பயணமாக வேண்டியிருந்தது. பரபரப்பான அந்தச் சூழலில் உ.வே.சா. பதிப்பித்த சீவகசிந்தாமணி குறித்து சர்ச்சை ஒன்று கிளம்பியது. சிந்தாமணியில் பிழைகளிருப்பதாகவும், சைவ மடத்திலிருந்து வந்த ஒருவர் ஜைன நூலைப் பதிப்பிக்கலாமா என்றும் கேள்விகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உ.வே.சா. பதிலளிக்கத் தயாராக இருந்தார். எழுதவும் செய்தார். ஆனால் அதைப் படித்துப்பார்த்த உ.வே.சா.வுடன் பணியாற்றிய சக ஆசிரியராகிய சாது சேஷையர் அந்தத் தாள்களை கிழித்து வீசினார். ‘நாம் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும்போது இப்படியான பொறாமைக் குரல்கள் வெளிப்பட்டே தீரும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் நம் பயணத்தைத் தொடர்வது ஒன்றே நாம் அவர்களுக்குத் தருகின்ற பதிலாக இருக்கவேண்டும்’ என்று சேஷையர் கூறியதை ஏற்றுக்கொண்ட உ.வே.சா. மேற்கொண்டு அந்த எதிர்ப்புகளை மறந்துவிட்டு, பத்துப்பாட்டு நூலைப் பதிப்பிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். பத்துப்பாட்டின் மூலப் பிரதி கிடைக்காவிட்டாலும் நச்சினார்க்கினியரின் உரையைக்கொண்டே மூலத்தைச் சரிசெய்து 1889-ம் ஆம் ஆண்டு அதை வெளியிட்டார்.
அடுத்து உ.வே.சா. ஆராயத்தொடங்கியது தமிழர்கள் காலமெல்லாம் போற்றி வருகின்ற சிலப்பதிகாரம். அடியார்க்கு நல்லார் உரையுடன் கூடிய சிலப்பதிகார ஏடுகளை ஒப்புநோக்கும்போது சில காதைகளுக்கு உரை இல்லாதது தெரிய வந்தது. அங்குமிங்கும் தேடி அரும்பத உரை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன் துணையுடன் பொருள் கொண்டார். மேலும் சில சிலப்பதிகாரத்துக்கான ஏடுகள் இருக்கவேண்டுமென்று அவருக்குத் தோன்றவே, 1891-ம் ஆண்டுக்கான கோடை விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றார். நெல்லை மண்டலம் முழுவதுமிருந்த சைவர்களுடைய வீடுகளாகப் படியேறினார். பெரும் அலைச்சலுக்குப் பிறகு கிழிந்து நைந்துபோன சில ஏடுகள் கிடைத்தன. அவற்றையும் ஏற்கனவே அவர் சேகரித்து வைத்திருந்த ஏடுகளையும் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தார்.
சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த உ.வே.சா. வுக்கு அடுத்து மணிமேகலையையும், சங்க நூலாகிய புறநானூறையும் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. புறநானூறுக்கு முதல் 260 பாடல்களுக்கு மட்டுமே உரை இருந்ததால் அதைப் பதிப்பிக்க சற்று கால தாமதம் ஏற்பட்டது. பலதடவை அதைப் படித்திருந்த காரணத்தால் உ.வே.சா. அந்த சிரமத்தை எளிதாக சமாளித்து 1893 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் வைத்து அச்சேற்றத் தொடங்கினார். அந்த சமயத்தில் இன்னொரு துயர சம்பவம் நிகழ்ந்தது. செப்டம்பர் மாதம் உ.வே.சா.வின் தந்தை மரணமடைந்தார். உ.வே.சா.வின் படிப்படியான வளர்ச்சிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த ஜீவன் அவர். தன் மகன் இன்னும் இன்னும் சாதிப்பான். அதையெல்லாம் காணப்போகிறோம் என்னும் ஆவல் கொண்டிருந்த ஆத்மா உ.வே.சா.வின் பாதிப்பயணத்தை கண்டிருக்கையிலேயே திருப்தியடைந்து விடைபெற்றுக்கொண்டது. ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்ட உ.வே.சா. 1894 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புறநானூறைப் பதிப்பித்து முடித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பல தமிழ் மன்னர்கள், தமிழ் வள்ளல்கள், மாமனிதர்கள், வீரதீர சம்பவங்களையெல்லாம் உள்ளடக்கமாகக் கொண்டிருந்த புறநானூறு உ.வே.சா.வின் குறிப்பிடத்தக்க பதிப்புச்சாதனை.
மணிமேகலையை உ.வே.சா. ஆராயத் தொடங்கியபோது அது பெளத்தம் தொடர்புடையது என்பதால் சற்றுத் திகைப்பும் தயக்கமும் அவருக்கு இருந்தது. சீவகசிந்தாமணியை அவர் கையிலெடுக்கும்போது ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அன்றைக்கு கும்பகோணத்தில் ஜைனர்கள் இருந்தனர். ஆனால் மணிமேகலை பற்றிய அவரது போதாமைகளைக் களைய தமிழ்நாட்டில் எந்த பெளத்தனுமில்லை. மளூர் ரங்காச்சாரியார் என்பவர் பெளத்த நூல்கள் பலவற்றையும் கற்றுணர்ந்த அறிஞர். அவர் சென்னையில் வசித்தார். எனவே பெளத்தம் தொடர்பான பல ஆங்கில நூல்களைத் தேடித்தேடிச் சேகரித்த உ.வே.சா. அவற்றை ரங்காச்சாரியாரிடம் கொடுத்தார். அவர் அந்த நூல்களை எல்லாம் வாசித்து அதன் சாரத்தைச் சொல்லச் சொல்ல உ.வே.சா. குறித்துத் தொகுத்துக்கொண்டார். மட்டுமல்ல வீரசோழியம் என்று ஒரு பெளத்தர் எழுதிய இலக்கண நூல் இருப்பதையறிந்து அந்நூலைத் தேடிக்கண்டு, அதில் பெளத்தம் குறித்து உள்ள செய்திகளையும் சேகரித்துக்கொண்டார். 59 தமிழ் நூல்கள் மற்றும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் சுட்டப்பட்ட மணிமேகலைக்காவியம் 1898 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதிப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் புறப்பொருள் வெண்பாமாலை என்ற ஒன்றையும் உ.வே.சா. பதிப்பித்தார்.
எட்டுத்தொகையில் ஒன்றான ஐங்குறுநூறு, சேரமன்னர் பெருமை கூறும் பதிற்றுப்பத்து அகப்பொருள் அமைதிகொண்ட அகநானூறு, உதயணன் சரித்திரத்தைக் கூறுகின்ற பெருங்கதை ஆகியவற்றையெல்லாம் பதிப்பிக்கின்ற அடுத்த முயற்சியில் இறங்கினார் உ.வே.சா.
இராமநாதபுரம் பாண்டித்துரைத்தேவர் உ.வே.சா. பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை இவறுக்கெல்லாம் பொருளுதவி செய்தவர். அவர் ஒருமுறை மன்னர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது உ.வே.சா. தேவரின் வீட்டில்தான் தங்கியிருந்தார். “உங்களுக்கு ஒரு நல்ல தகவல் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொன்ன பாண்டித்துரைத்தேவரை ஆச்சரியத்துடன் நோக்கிய உ.வே.சா., “ஏதாவது ஒரு புதிய நூலைப் பதிப்பிக்கச் சொல்லுவீர்களாக இருக்கும்” என்றார். அதற்கு தேவர் “ஒரு நூலை அல்ல சாமிநாதர், நீங்கள் பல நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்பதற்காக மன்னர் பாஸ்கர சேதுபதி ஒரு கிராமத்தையே உங்கள் பெயருக்கு எழுதித்தரத் தயாராக இருக்கிறார்” என்றார். உ.வே.சா.வுக்கு அந்தத தகவல் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. காரணம் மன்னரின் சமஸ்தானத்தின் அப்போதைய நிலையை உ.வே.சா. அறிந்துவைத்திருந்தார். சமஸ்தானம் அன்று பெருமளவு கடனில் மூழ்கியிருந்தது. இந்த நேரத்தில் நாம் மன்னரிடத்திலிருந்து ஒரு கிராமத்தையே தானம் பெறுவது- அது பதிப்புப் பணிகளுக்காகவே இருந்தாலும்கூட அறம் ஆகாது என்று யோசித்த உ.வே.சா. அப்போதைக்கு தேவரிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் “நான் மன்னரைச் சந்தித்துப் பேசிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டார். பாண்டித்துரைத்தேவருக்கு உ.வே.சா. வின் மன ஓட்டம் புரிந்துவிட்டிருந்தது. பிறகு மன்னரைச் சந்தித்த உ.வே.சா. ‘’என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் மதிப்புக்கும் நன்றி. ஆனால் சமஸ்தானத்தின் தற்போதைய நிலையில் நான் தாங்கள் அளிக்கின்ற இந்த மிகப்பெரிய கொடையை ஏற்க இயலாதவனாக உள்ளேன். எனக்கு இப்போது ஒரு குறையும் இல்லை. கல்லூரியிலிருந்து சம்பளம் வருகிறது. அதுவே போதும்” என்றார். உ.வே.சா.வை ஆச்சரியமாகப் பார்த்த பாஸ்கர சேதுபதி “தங்கள் விருப்பம்” என்று தாழ்ந்த குரலில் பதில்கூறி அவரை வழியனுப்பி வைத்தார். தமிழுக்காக உழைப்பவருக்கு ஒரு கிராமத்தையே தானமாகக் கொடுக்க ஆயத்தமாக இருந்த மன்னர் பாஸ்கர சேதுபதியை எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், “உங்கள் சமஸ்தானமே பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது. எனவே நீங்கள் எனக்கு அளிக்கின்ற கிராம தானத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது” என்று மன்னரிடமே சொல்லிவிட்டு வந்த உ.வே.சா. வின் பெருந்தன்மையை நினைத்து வியக்காமலிருக்க முடியவில்லை. மற்றொரு சம்பவம், கும்பகோணம் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த ராவ்பகதூர் நாகேஸ்ரீராவ், உ.வே.சா.வின் தமிழ்ப்பணிகளையும் அதற்காக அவர் படுகின்ற சிரமங்களையும் நன்கு உணர்ந்தவர். எனவே பொருளாதார ரீதியில் அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார். ஒருநாள் உ.வே.சா. வுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர், “நீங்கள் அரிய பல பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடிப் பதிப்பித்து வருகிறீர். ஆனால் அதன்மூலம் உங்களுக்கு வருவாய் எதுவும் பெரிதாக இல்லை என்று எனக்குத் தெரியும். தமிழில் தற்போது எழுதப்படுகின்ற பாடநூல்கள் தரமானதாக இல்லை. எனவே நீங்கள் பாடநூல்களை எழுதிக்கொடுத்தால் அவற்றை லாங்மன்ஸ் பதிப்பகம் வெளியிடும். அதற்குரிய சன்மானத்தையும் உங்களுக்கு அளிப்பார்கள். அது உங்கள் சிரமங்களைக் குறைக்கும். நீங்கள் தடங்களில்லாமல் பதிப்புப் பணிகளைச் செய்து வரலாம்” என்றார். உ.வே.சா. அதற்கு இவ்வாறு பதிலளித்தார்; “எனக்குப் பணம் முக்கியமே அல்ல. என் சிந்தனை எல்லாம் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதிலும், ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களை வாசித்து ஆராய்வதிலுமே இருக்கிறது. பணம் வந்தால் மனம் வேறு பாதைகளில் செல்லத் தொடங்கிவிடும். என் குறிக்கோளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உண்டாகும். எனவே என் போக்கில் என்னை விட்டுவிடுங்கள்”. நாகேஸ்ரீராவ் உ.வே.சா.வின் மன உறுதியைக் கண்டு “வலிய பணம் வந்தாலும் அதை மறுத்துவிட்டு தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறாரே” என்று ஆச்சரியம் அடைந்தார்.
தேடி வருகின்ற செல்வத்தைப் புறக்கணிக்கின்ற இயல்புகொண்ட உ.வே.சா. ஏட்டுச்சுவடிகளைச் சேகரிப்பதற்காக எதையும் செய்வார் என்று தெரிந்து கொண்டு ஒருவர், ‘என்னிடம் சுவடிகள் இருக்கிறது. பணம் அனுப்பினால் அவற்றை உங்களுக்கு அனுப்பி வைப்பேன்’ என்று கடிதம் எழுதியுள்ளார். உ.வே.சா. அதை நம்பி பணமனுப்பி வைத்து, சுவடி வராமல் ஏமாந்த கதைகள் எல்லாம் உண்டு.
![](https://nadukal.in/wp-content/uploads/2025/01/ஜாகீ.jpg)
1900- ஆம் ஆண்டு சென்னையில் கூடிய நண்பர்கள் சிலர் ’திராவிட பாஷா சங்கம்’ என்னும் ஒரு அமைப்பை உருவாக்கினர். கல்வித் துறையில் பணியாற்றி வந்த சேஷாத்திரி ஆச்சாரும், ஜே.லாரஸ் என்கிற பாதிரியாரும் அந்த அமைப்பின் செயலாளர் பொறுப்பு வகித்தனர். சேஷாத்திரி ஆச்சார் ஒருநாள் கும்பகோணம் வந்து உ.வே.சா. வை சந்தித்தார். அப்போது ’நீங்கள் சென்னைக்கு வந்துவிட்டால் எங்களுக்கு வசதியாக இருக்கும்’ என்றார். சென்னைக்குச் சென்று விட்டால் பதிப்புப் பணிகளுக்காக குடந்தைக்கும் சென்னைக்குமாக நாம் அலைந்து சிரமப்பட வேண்டியிருக்காது என்று உ.வே.சா. வுக்கும் தெரியும். ஆனால் குடந்தையில் வேலை பார்க்கும் போது எப்படி சென்னைக்குப் போக முடியும் என்று யோசித்து அதை ஆச்சாரிடம் கூறினார். அதற்கு அவர் ’அதைப்பற்றி உங்களுக்கேன் கவலை? சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியிலேயே உங்களை பணி நியமனம் செய்ய நான் ஆயிற்று’ என்றார். அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னையைச் சொந்த ஊராகக் கொண்ட சற்று வயது முதிர்ந்த ஒருவர் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தது உ.வே. சா. வுக்குத் தெரிந்திருந்தது. நாம் அங்கே சென்றால் பாவம் அந்த முதியவரை வேறெங்காவது பணி மாற்றம் செய்வார்கள்; அது அவருக்கு சிரமமாக இருக்கும் என்று சிந்தித்த உ.வே.சா. அந்த காரணத்துக்காகவே சென்னை செல்வதைப் புறக்கணித்தார். 1903- ஆம் ஆண்டு உ.வே.சா., சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றைப் பதிப்பித்து அதைத் தனக்கு கல்லூரிப் பணி பெற்றுத் தந்த தியாகராஜ செட்டியாருக்கு சமர்ப்பணம் செய்தார். அதே ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் ஆசிரியர் சீனிவாசாச்சாரி பணி ஓய்வு பெற அந்த இடத்துக்கு உ.வே.சா நியமிக்கப்பட்டார்.
சுமார் 23 ஆண்டுகள் வசித்த கும்பகோணத்தை விட்டுப் பிரிய உ.வே.சா.வுக்கு வருத்தமாக இருந்தது. அடிக்கடி திருவாடுதுறைக்குச் சென்று, ஆதீனத்தைச் சந்தித்து உரையாடி வருகின்ற வாய்ப்பையும் இதனால் இழக்க நேரிடுமே என்று கவலை கொண்டார். ஆனாலுமே பதிற்றுப்பத்து ஆய்வுனூடாக உ.வே.சா சென்னைக்கு வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவருடைய சிறிய தகப்பனார் வீட்டில் தங்கி கல்லூரிப் பணிக்குச் சென்று திரும்பிய அவர் பிறகு திருவேட்டீஸ்வரன் பேட்டையிலேயே ஒரு வாடகை வீடு பிடித்து அங்கே வசிக்கத் தொடங்கினார்.1904 ஆம் ஆண்டு பதிற்றுப்பத்தை பதிப்பித்து வெளியிட்டார்.
1905- ஆம் ஆண்டு தொடக்கத்தில் உ.வே.சா. வின் தாயார் சரஸ்வதி அம்மாள் காலமானார். அப்போது துக்கம் விசாரிக்க வந்திருந்த சீனிவாச ஐயங்கார், மணிமேகலை கதைச்சுருக்கத்தை எம்.ஏ வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்துள்ள தகவலைக் கூறினார். பொருளாதார ரீதியாக உ.வே.சா.வுக்கு அவ்வப்போது ஏற்பட்ட சிரமங்களை இது போன்ற விஷயங்கள் சமன் செய்தன.
இதற்கிடையில் உ.வே.சா. வின் வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுற்ற ஒரு சிலர் அவருடைய வகுப்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு அவருக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் ஒன்றும் நடந்தது. ஆனால் உ.வே.சா. பொறுமை இழக்காமல் அதைத் தன் மதிநுட்பத்தால் எதிர்கொண்டார். உ.வே.சா.வின் மாணவர் ஒருவர் அவரிடம் ஒரு நாள் துண்டுப் பிரசுரம் ஒன்றைக் காட்டினார். ’நச்சினார்க்கினியர் தவறு செய்தார்; சங்கராச்சாரியார் தவறு செய்தார்; உ.வே.சா.வும் பிழைகளைச் செய்திருக்கிறார்’ என்று அதில் வாசகங்கள் இருந்தன. உ.வே.சா. அதைப் படித்துப் பார்த்து கோபப்படுவதற்கு பதிலாகப் புன்னகை புரிந்தார். ’நச்சினாக்கினியருடன் இணைத்து என்னை குறிப்பிட்டிருக்கிறார்கள் நான் என்ன அவ்வளவு பெரியவனா?’ என்று கேட்கவும், விமர்சித்தவர்களுக்கு முகம் சுண்டிப் போயின.
உ.வே.சா. வுக்கு 1906-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டு என்று சொல்ல வேண்டும். காரணம் அந்த ஆண்டு முதல் தேதி பிறந்ததும், கங்காதர சாஸ்திரி உ.வே.சா.வைச் சந்தித்து, ’உங்களுக்கு மகா மகோ பாத்தியாய பட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது’ என்றார். தொடர்ந்து தமிழ் அறிஞர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நேரிலும் கடிதம் மூலமாகவும் தெரிவித்தனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உவேசாவுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த மகாகவி பாரதி நேரில் வந்து அவரை வாழ்த்திப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை வடமொழிப் புலவர்களுக்கே சென்று கொண்டிருந்த மகா மகோ பாத்தியாய பட்டம் முதன்முதலாக ஒரு தமிழருக்கு கிடைத்ததால் அதற்காக தமிழ் அறிவு உலகமே பெருமை கொண்டது.
உ.வே.சா. முன்னதாக தனது குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழில் மொழிபெயர்த்திருந்த திருவாரூர் தியாகராசப் பெருமானின் 14 லீலைகளை (மொத்தம் 360) பதிப்பித்திருந்தார். 1906- ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம் என்கிற நூலை பாண்டித்துரை தேவரின் ஓரளவுக்கான பொருளுதவியுடன் வெளியிட்டார். பிறகும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய கணியூர்ப் புராணம், மண்ணிப் படிகரைப் புராணம் ஆகிய நூல்களை அடுத்தடுத்து வெளியிட்டார்.
நூல்களை வெளியிடுவதற்கான வசதிகள் இன்றைக்குப் போல் அன்றைக்கில்லை. கடும் சிரமங்களை ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உ.வே.சா. பதிப்புப் பணிகளுக்காகப் படும் பாடுகளைக் கண்டு மனம் வருந்திய திருவாடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர், ”இவ்வளவு கஷ்டப்படுவதற்கு பதிலாக நீங்கள் மொத்தமாக ஒரு அச்சகத்தை நிறுவிக் கொண்டால் சுலபமாக இருக்குமே. நான் ஐயாயிரம் ரூபாய் பணம் தருகிறேன். அதைக் கொண்டு அச்சகம் தொடங்குங்கள்” என்றார். ”இப்போதானால் காகிதம், பைண்ட் செய்வதற்கான சாதனங்கள் வாங்குவது போன்ற சிரமங்கள் தான் உள்ளன. அச்சகம் தொடங்கினால் ஆட்களை வைத்து வேலை வாங்குவது மற்றும் நிர்வாகம் செய்வது என்று பல வித வேலைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அது என் ஆய்வுப் பணிகளுக்கு தடையாக இருக்கும். எனவே உங்கள் கருத்தை மறுதலிப்பதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று உ.வே.சா. பதில் கூறினார்.
பிறர் உதவியுடன் தான் உ.வே.சா. பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். ஆனால் அளவுக்கு அதிகமான ஆசைகள் அவருக்கு இருக்கவில்லை. இருந்திருந்தால் மன்னர் பாஸ்கர சேதுபதி தருவதற்கு தயாராக இருந்த கிராமத்தைப் பெற்றிருக்கலாம். பாடநூல்களை எழுதித் தந்து பணம் சம்பாதித்திருக்கலாம். அம்பலவாண தேசிகர் தந்த ஐயாயிரம் ரூபாயைப் பெற்று, சொந்த அச்சகம் தொடங்கியிருக்கலாம். அவருக்கு எல்லாவற்றிலும் ஒரு திட்டவட்டமான முடிவு. கறார் தன்மைகள் இருந்தது. அவருடைய பதிப்புப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு பின்னணியில் அவருடைய கடின உழைப்பு மட்டுமல்ல பேராசைகளற்ற நல்ல சுபாவமும் இருந்தது.
1912- ஆம் ஆண்டு மெ அரு.நா. இராமநாதன் செட்டியார் சகோதரர்கள் உதவியுடன் திருக்காளத்திப் புராணத்தை உ.வே.சா. வெளியிட்டார். 1915- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் அவருக்கு 60 வயது பூர்த்தியானது. நண்பர்கள் சிலர் அதைக் கொண்டாட விரும்பினார்கள். இதுபோன்ற விமர்சையான நிகழ்வுகளில் அவருக்கு எப்போதுமே ஒரு வித ஒவ்வாமை இருந்ததால் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவுக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. 1917- ஆம் ஆண்டின் மே மாதத்தில் உ.வே.சா.வின் துணைவியார் காலமானார். 1868- ஆம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் மதுராம்பாளுடனான வாழ்க்கை முடிவுற்றது. புரிதலுடன் கூடிய தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். உ.வே.சா.வை அவருடைய போக்குக்கு விட்டிருந்தாரே அந்தப் பெண்மணி. அதைத்தான் சொல்கிறேன். அப்படி சுதந்திரம் கொடுத்ததால் மதுராம்பாளுக்கு எந்தப் பலனும் இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழுக்கு? லட்சியவாதிகளுக்கு மதுராம்பாள் மாதிரி மனைவியர் வாய்க்க வேண்டும். மனைவி இறந்த அடுத்த ஆண்டு உ.வே.சா., பரிமேலழகரின் உரையுடன் கூடிய பரிபாடலை வெளியிட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உ.வே.சா,. கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் விட்டுச்செல்கின்ற தமிழாசிரியர் பொறுப்புக்கு இ.வை. அனந்தராமையரைப் பரிந்துரைத்தார். நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டு அனந்தராமையரைத் தமிழாசிரியராக நியமனம் செய்தது. அதே ஆண்டின் ஏப்ரல் மாதம் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்து டி.எஸ். ராமசாமி அய்யர் என்பவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். உ.வே.சா. மரியாதை நிமித்தம் தாகூரைச் சந்திக்கச் சென்றார். உ.வே.சா.வைக் குறித்தும் அவருடைய பணிகளைக் குறித்தும் தாகூருக்கு அங்கு இருந்தவர்கள் எடுத்துக் கூறி அறிமுகம் செய்தார்கள். உ.வே.சா. பதிப்பித்த நூல்களை எல்லாம் பார்வையிட்ட தாகூர் வியந்து போய், ’இவற்றை எல்லாம் எப்படிப் பதிப்பித்து வெளியிட்டீர்கள்?’ என்று கேட்டார். உ.வே.சா. சொல்லச் சொல்ல தாகூருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அன்று மாலையே உ.வே.சா.வின் வீட்டுக்குச் சென்ற தாகூர் அங்கிருந்த சுவடிகளையும், பிரதிகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டார். அந்த காலகட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் உ.வே.சா.வின் வீட்டுக்கு வந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம் தாகூர் அன்றைக்கு இந்தியா முழுக்கப் பிரபலம். தாகூரே மதிக்கின்ற நபராக உ.வே.சா. இருந்தார் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம்.
உ.வே.சா. பலகாலம் தேடித்தொகுத்திருந்த சுவடிகளில் ஒன்று கொங்குவேள் மாக்கதை என்றழைக்கப்பட்ட பெருங்கதை.அதற்கு முதலும் முடிவுமில்லாதிருந்தது. உ.வே.சா. அதைத் தேடி அலைந்தார். ஆனாலும் அவருக்கு அது முழுவதும் கிடைக்கவில்லை. இருப்பதைக்கொண்டு பதிப்பிக்க எண்ணினார். இதற்கிடையில் பெருங்கதை முழுவதும் தன்னிடம் இருப்பதாக ஒருவர் கூறினார். உ.வே.சா. அதை நம்பினார். அந்த நபருக்கு உ.வே.சா. ஒரு தொகை கொடுத்து தனக்குப் பெருங்கதையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றவர் பெருங்கதையை அனுப்பவில்லை. இருந்தால் தானே அனுப்புவார்? ஏமாற்று வேலை. உ.வே.சா. வின் தேடல் பயணத்தில் இதைப் போன்ற பெருங்கதைகள் பலவும் உண்டு. ஒருவரின் தேவையை அறிந்து கொண்டு அவரை ஏமாற்றும் கலையில் வல்லவர்கள் இன்று போல அன்றைக்கும் இருந்திருக்கின்றனர். வடமொழியில் இயற்றப்பட்ட ’பிரகத் சம்கிதல’ என்றொரு நூல் இருந்தது. வடமொழி அறிந்த சிலரை அழைத்து, அதை வாசிக்க வைத்துப் பொருளுணர்ந்து அந்நூலின் கருத்துக்களைப் பெருங்கதையுடன் இணைத்து எழுதினார் உ.வே.சா. எந்த நூலுக்கும் இல்லாத அளவு சுமார் ஐந்து ஆண்டுகள் பெருங்கதைக்காக உழைத்து 1924-ஆம் ஆண்டு அதை வெளியிட்டார்.
ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் ஒரு தமிழ்க் கல்லூரி மற்றும் வடமொழிக் கல்லூரியைத் தொடங்கியபோது அவற்றுள் தமிழ்க் கல்லூரியின் முதல்வராக உ.வே.சா. நியமனம் பெற்றார். இந்தப் பொறுப்பை உ.வே.சா. ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக செட்டியார் பலரையும் தூது அனுப்பினார். பிறகு அவரே ஒருமுறை நேரில் சென்று சந்தித்து வேண்டுகோள் வைத்தார். இதனால் எல்லாம் உ.வே.சா. சம்மதித்தார் என்று கூற முடியாது. அவருடைய எண்ணம் எல்லாம் சிதம்பரம் சென்றால் அன்றாடம் நடராஜப் பெருமானைத் தரிசிக்கலாம் என்றிருந்தது. 1924- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறிது காலத்திலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஜீரணமாகாமல் வயிற்று வலி அடிக்கடி வந்து நீங்கி உ.வே.சா. கல்லூரி முதல்வர் பொறுப்பைத் துறக்கத் தீர்மானித்து, அத்தகவலை செட்டியாருக்குத் தெரிவித்தார். செட்டியாருக்கு உ.வே.சா.வை இழக்கச் சம்மதம் இல்லை. ஆனாலும் அவருடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, ’அந்தப் பொறுப்புக்குத் தகுந்த வேறு ஒருவரை நீங்களே தேர்ந்து நியமனம் செய்து விட்டுச் செல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். மீனாட்சி கல்லூரியில் தனக்கு அடுத்த இடத்தில் இருந்த பொன்னோதுவார் அவருடைய தேர்வாக இருந்தது. அவரை முதல்வராக நியமிக்க பரிந்துரைத்துவிட்டு உ.வே.சா. சென்னைக்குப் புறப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் உ.வே.சா.வை வரவேற்க காத்திருந்தது; பழந்தமிழ் நூல்கள் குறித்துப் பல்கலையில் 10 நாட்கள் அவர் உரையாற்ற வேண்டுமெனும் கோரிக்கையுடன். உ.வே.சா. அதற்கு ஒப்புக்கொண்டு 1927 நவம்பர் 5 ஆம் தேதி முதல் 5 நாட்களும், டிசம்பர் மாதம் ஆறாம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் பல்கலைச் செனட் மண்டபத்தில் உரையாற்றினார். இந்த சொற்பொழிவுகளுக்கான ரூபாய் 500 அவருக்கு வெகுமதியளிக்கப்பட்டது. அந்தத் தொகையைக் கொண்டு அவர் தன் வீட்டுக்கு மின் இணைப்பு செய்து கொண்டார். அத்தனை காலமும் அவர் மண்ணெண்ணெய் விளக்கொளியில் தான் பதிப்புக்கான பணிகளை செய்து வந்திருக்கிறார் என எண்ணிப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது தானே?
சிதம்பரத்திலிருந்து சென்னை வந்த பிறகு உ.வே.சா. மயிலைத் திரிபந்தாதி, தக்கையாகப் பரணி ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பணிகளுக்கிடையில், அவர் தன் குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். 1930 -ஆம் ஆண்டு இறுதியில் உவேசா தன் வீட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்போது கதவு தடுக்கி கீழே விழுந்துவிட்டார். பலத்த அடிபட்டுக் கால் வீங்கிவிட்டது. அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த டாக்டர் ரங்காச்சாரி நேரில் வந்து உ.வே.சா.வுக்கு சிகிட்சை செய்தார். அவர் உ.வே.சா.வின் உடல் நலம் கருதி சிறிது நாட்களுக்கு அவர் படிப்பதையும் எழுதுவதையும் தவிர்த்து கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிச் சென்றார். அந்த நேரத்தில் எங்கே தன் குருநாதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதி முடிக்காமலேயே இறந்து போவோமோ என்றெல்லாம் உ.வே.சா. அச்சப்பட்டு வருந்தியிருக்கிறார். டாக்டர் எச்சரிக்கையை மீறி சில நேரங்களில் தான் சொல்லச் சொல்ல தனது மாணவர் கி.வா.ஜா. வை எழுதவைத்து அதை நிறைவு செய்தார். 1933 டிசம்பர் மாதம் முதல் பாகமும், 1934 ஜனவரி மாதம் இரண்டாவது பாகமும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திர நூல்கள் வெளியானது.
1937- ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாரதிய சாகித்திய பரிஷத் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். மாநாட்டின் வரவேற்புக் குழுவுக்குத் தலைவராக இருந்து உ.வே.சா. வரவேற்புரையாற்றினார். சம்பிரதாயமான வரவேற்புரையாக அதைச் செய்யாமல் தமிழ் மொழியின், தமிழர்களின் அருமை பெருமைகளை சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசினார். மகாத்மாவை வரவேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதையும் அந்த உரையில் குறிப்பிட்டார். தலைமையுரை ஆற்றிய காந்தி, உ.வே.சா.வை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். ’தமிழின் வடிவமாகவே இருக்கின்ற இவரின் கீழிருந்து தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது அமையுமோ?’ என்று ஏக்கம் தொனிக்க மகாத்மா பேசியது உ.வே.சா.வின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு அரிய நிகழ்வாக அமைந்தது. அந்த உற்சாகத்துடன் உ.வே.சா. சங்க இலக்கியங்களில் மற்றொன்றான குறுந்தொகைக்குப் பதவுரை, பொழிப்புரை, சிறப்புரை, மேற்கோள், ஒப்புமை, பாடபேதங்கள் தந்து விரிவான ஆய்வுரையும் எழுதி முடித்து 1937 ஆகஸ்டில் அதை வெளியிட்டார். மிகுந்த மனநிறைவு தந்த பணியாக உ.வே.சா. அதைக் கருதினார். தொடர்ந்த நாட்களில் காசி மடத்தின் முதல்வரான குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களை விரிவான முகவுரை, அடிக்குறிப்புகளுடன் எழுதி முடித்து 1939- ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் உ.வே.சா வை நேரில் வந்து சந்தித்து, வெள்ளித் தாம்பாளத்தில் ஆயிரம் ரூபாய் வைத்து வழங்கினார்.
உ.வே.சா.வின் சதாபிஷேக விழா நடைபெற்றபோது அவரை சந்தித்த நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் அவர் தனது வாழ்க்கைச் சரித்திரத்தை எழுத வேண்டுமென்றும், அந்நூல் தமிழுக்கு மிக முக்கிய ஆவணமாக இருக்கும் என்றும் வலியுறுத்திக் கூறினர். உ.வே.சா. மனத்திலும் அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். அப்போது ஆனந்த விகடன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய கல்கி ’விகடனில் அதை நீங்கள் தொடராக எழுதினால் நன்றாக இருக்கும்’ என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார். உ.வே.சா. வால் அதை உடனே எழுத இயலாவிட்டாலும் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். 1940- ஜனவரி மாத ஆனந்த விகடன் இதழில் ’என் சரித்திரம்’ தொடரின் முதல் அத்தியாயம் வெளிவந்தது. தொடர்ந்து 122 அத்தியாயங்கள் பிரசுரமாகி உ.வே.சா. வின் எதிர்பாராத மரணத்தின் காரணமாக அது முற்றுப் பெற்றது. 1942 ஜனவரி 12-ஆம் தேதி உ.வே.சா. மீண்டும் ஒருமுறை மாடியில் இருந்து கீழிறங்கி வரும் போது தவறி விழுந்துவிட்டார். முழங்காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவின் காரணமாக அவர் ஓய்வெடுத்து ஆக வேண்டிய சூழல். அந்த இக்கட்டான நிலையிலும் அவர் தன் மாணவருக்குப் பாடம் சொல்வதை நிறுத்தவில்லை.
இரண்டாவது உலகப் போர் தீவிரப்பட்ட காலம் அது. சென்னையிலிருந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். உ.வே.சா.வும் திருக்கழுக்குன்றத்தில் திருவாவடுதுறை மடத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 1942- ஏப்ரல் 11-ஆம் தேதி உ.வே.சா. புறப்பட்டார். அவர் புறப்பட்டபோது திருவாசகத்திலுள்ள ’கணக்கில்லாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்ற வரிகளை உச்சரித்தபடி புறப்பட்டதாகவும், அது தனக்கு ஏதோ ஒருவித சமிக்ஞையாகப் பட்டதாகவும் அவரது மாணவர் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். புத்தகங்களையும் ஏட்டுச்சுவடிகளையும் விட்டுப் பிரிவதை எண்ணி குழந்தையைப் பிரியும் தாய் போல அவர் வருந்தியதாக அவர் மேலும் எழுதுகிறார். உடல் நலக் குறைவுடன் திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்த பிறகும் ஓய்வு எடுப்பதைக் குறித்த எண்ணத்தை விட்டு, கம்பராமாயணத்தையும் தேவாரத்தையும் அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற ஆதங்கத்துடனே உழன்றிருக்கிறார். திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலினால் உ.வே.சா.வின் உடல்நிலை மேலும் மோசமானது. 28- 4- 1942 அன்று அவர் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.
87 ஆண்டுகள் வாழ்ந்த உ.வே.சா. 90-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்றார். அந்நூல்களில் பெரும்பாலானவை அழியக்கூடிய நிலையில் இருந்தவை. உ.வே.சா. மட்டும் அவற்றைக் கைப்பற்றாதிருந்திருந்தால் தமிழுக்குப் பெரும் பொக்கிஷங்கள் கிடைக்காமல் போயிருக்கும். 3000-க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகள் அவருடைய சேகரிப்பில் இருந்தன. சென்னை திருவான்மியூரில் திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய நூல் நிலையத்தில் இன்றைக்கும் அவை பாதுகாப்பக உள்ளன. அழிநிலை நூல் பதித்து அழியாப் புகழ்பெற்ற உ.வே.சா. என்று தான் அவரைக் குறிப்பிட வேண்டும்.
தமிழுக்கு வளம் சேர்க்க புலவர் பெருமக்கள் காவியங்களையும் காப்பியங்களையும் இயற்றினார்கள் என்றால் அவற்றைத் தக்க சமயத்தில் அழியாது காப்பாற்றி மொழியின் புகழ் உலகெங்கும் பரவ காரணமாக இருந்தார் உ.வே.சா. அவருடைய தமிழ்ப்பற்று நாம் நித்தம் எண்ணிப் பெருமைப்படத்தக்கது. ஒரு முறை அவரிடம் ஒரு கல்விமான் சென்று, ’ஆங்கிலம் இவ்வுலக வாழ்வுக்கு அவசியம். வடமொழி அவ்வுலக வாழ்வுக்கு அவசியம்’ என்று கூற, ’என் அன்னைத் தமிழ் இவ்வுலக வாழ்வு – அவ்வுலக வாழ்வு இரண்டுக்கும் இன்றியமையாதது’ என்று பதில் தந்திருக்கிறார். மாணவப் பிராயத்தில் புலவர் எவரைக் கண்டாலும் ’இவரிடம் தமிழ் கற்க முடியுமா?’ என்றே ஏங்குவாராம்.
உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் ஒவ்வொன்றிலும் அந்நூலுக்கான மூலப்பிரதி கிடைத்த இடம் முதற்கொண்டு அது கிடைக்க உதவி செய்தோர், பதிப்பிக்க உதவி செய்தவர்களின் பெயர்கள் நன்றியறிவிப்புடன் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நூல் ஒவ்வொன்றிலும் உ.வே.சா வின் விரிவான முன்னுரை இடம் பெற்றிருக்கும். நூலைப் பற்றிய குறிப்புகளும், நூலுக்கான சிறப்பியல்புகளும் தெளிவாக அவரால் எழுதப்பட்டிருக்கும். அந்தப் பதிப்புக்காக அவருடைய மாணவர்கள் எவரேனும் உதவியிருந்தால் அந்த மாணவரின் பெயரையும் கூட நன்றியுடன் குறிப்பிடுகின்ற வழக்கம் அவரிடமிருந்தது. இந்த நன்றியுணர்வைத் தன்னுடைய குருநாதரிடமிருந்து பெற்றதாக அவரே கூறி இருக்கிறார். தான் பழகிய, நட்பு பாராட்டிய உன்னதமான மனிதர்களைக் குறித்த வரலாறுகளை உ.வே.சா. எழுதியிருக்கிறார். குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தில் அவருடைய வாழ்வையும், பணிகளையும் மட்டும் அவர் எழுதவில்லை. அக்காலகட்டத்துப் புலவர்களின் வாழ்வியல், தமிழ்ப்புலமை எல்லாமே அதில் இருந்தன. சங்கீத வித்வான் மகா வைத்தியநாத அய்யரின் கச்சேரிகளை திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்தபோது அவர் ரசித்துக் கேட்டிருக்கிறார். உ.வே.சா. வுக்கு இயல்பாகவே இசையில் ஆர்வமும் ஞானமும் இருந்தது. சிறுவயதிலிருந்தே அவர் தந்தை ஊட்டிய ஞானம் அது. மகாவைத்தியனாத அய்யருடன் இசை குறித்துக் கலந்துரையாடிய அனுபவங்களை வீணாக்காமல் அவருடைய வரலாற்றுடன் இணைத்து உ.வே.சா. எழுதினார். மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்த பூண்டி அரங்கநாத முதலியார் ஒரு கவிஞரும் கூட. அவர் இயற்றிய ’கச்சிக்கலம்பகம்’ உ.வே.சா.வுக்கு மிக விருப்பமான நூல். அரங்கநாத முதலியார் குறித்தும் உ.வே.சா. ஒரு வரலாறு எழுதினார்.
17 வயதில் முறையாகத் தமிழ் கற்க தொடங்கிய உ.வே.சா., பிறகு தான் கற்ற தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பதிப்புத் துறையில் ஈடுபட்டு மாபெரும் இலக்கியங்களை அகழ்ந்தெடுத்துக் கொடுத்து ஒரு வரலாறாகவே மாறினார்.
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இழப்பின்றித் துலங்கு வாயே
என்று உ.வே.சா.வை வாழ்த்தி பாரதி பாடியது உண்மை -வெறும் புகழ்ச்சியிலை.
(இக்கட்டுரைக்கான தகவல்களை அளித்த நூல் : கி. வா. ஜகந்நாதன் எழுதிய ’தமிழ்த்தாத்தா’)
000
![](https://nadukal.in/wp-content/uploads/2025/01/ஜாகிர்-210x300.jpg)
கீரனூர் ஜாகிர்ராஜா
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இயங்கிவரும் கொங்கு மண்டலம் சார்ந்த முக்கியமான படைப்பாளி. 10 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 7 தொகை நூல்கள் என தமிழுக்குத் தனது வளமான பங்களிப்பை வழங்கியவர். தொடர்ந்து முழுநேர எழுத்தாளராக இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா தஞ்சையில் வசிக்கிறார். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தி இந்து நாளிதழ் வழங்கிய Lit for life விருது, ஆனந்த விகடன் வழங்கிய இரண்டு விருதுகள் உள்ளிட்ட பல சிறப்புகள் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமை யாகத் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர்.