‘எடுபட்ட முண்ட…போன வைடி முதல்ல. இனிமேல் அலுமா உலுமானு போனடிச்ச வெளக்குமாத்தால இங்க இருந்தே அடி‌பிரிச்செடுத்துடுவேன். வந்துட்டா வவுத்தெரிச்சல கெளப்பிக்கிட்டு. நாஞ்செத்தா கூட இங்கிட்டு வரலாம்னு நெனச்சுராத.’ நிதானமற்றவளாக கண்டபடி திட்டினாள் ராசாத்தி. மல்லிகாவைத் திட்டிய கோபத்துடன் சென்று ஒரு செம்பு தண்ணீர் எடுத்து கடகடவென தொண்டையில் இறக்கினாள்.

வீட்டின் மேற்கூரையில் இருந்து சூரிய ஒளி வருவதற்காக கண்ணாடி பதித்த இடத்தில் சூரிய ஒளி நடுக்கூடத்தில் விழுந்து கொண்டிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்தவளுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது கோபம் தலைக்கேறி. 

எங்கயோ பொறந்து தொலைய வேண்டிய சனியன் எவ்வவுத்துல வந்து பொறந்துருச்சு. சோத்துக்கு தண்ணிக்கு பெருசா இல்லீனாலும் மானமாவது இருந்துச்சு. அதுக்கும் வெடியப்போட்டு வேட்டு வச்சிட்டா கண்டாரோலி…ஆமா, அது எம்புள்ள இல்ல எம்புள்ள இல்ல அது யாரோ பெத்த புள்ள… நாஞ்சொமக்கல அவள, அந்த கண்டாரோலிய நாஞ்செமக்கல. இப்படி எல்லாத்தையும் உதுத்து ஒதறிட்டு தாஞ்சொகந்தா பெருசுனு போறவ கண்டாரோலியேதான். மனதுக்குள் ஆத்திரம் குறையாமல் திட்டியவளுக்கு தன்னையும் அறியாமல் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

‘தின்னுபுட்டு எவ்வளவு கூதிமோளம் ஏறியிருந்தா வச்ச வண்ணத்துக்கு போன் பண்ணி சொத்து கேப்பா? இங்க என்னமோ நஞ்சையும் புஞ்சையும் கட்டி ஆளறாப்ல.?’

ராசாத்தினு பேரு வச்சிட்டா ராசாத்தி போல வாழ்க்க இருக்கும்னு நெனச்சுக்குறாளுங்க. ‌அழுதழுது பெத்தாலும் நம்மதேம் பெக்கோணும்…நம்ம வேலயக் கூட இழுத்து போட்டு செய்ய எந்த நாதியிருக்கு.? தனக்குள் பேசிக்கொண்டே சமையல் கட்டுக்கு நகர்ந்தாள். 

நின்றவாறு சமைக்கும்படி கட்டிவைத்த மண் அடுப்பு சாணி போட்டு மெழுகப்பட்டிருந்தது. அதன் ஓரங்களில் நெளிக்கோலமும் நடுவில் ஒரு ஸ்டாரும் போட்டு வைத்திருந்தாள். பச்சை நிறத்தில் சாணி வாசனையுடன் இருந்த அடுப்பின் மேல் மண் சட்டியில் வட்டமாக உருட்டி பிடித்து வைத்த கம்மஞ்சோறு உருண்டைகளும், புளிச்சத்தண்ணியும் இருந்தன. தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கடைந்தது கொஞ்சம் இருந்தது. கடையலை சிறிய தட்டிலும், இரண்டு உருண்டைகளை ஒரு வட்டக்குண்டாவிலும் போட்டுக் கொண்டாள். சமையல் கட்டின் பின்புறம் இருந்த பெரிய கல் பலகை மீது அமர்ந்து கொண்டு உருண்டைகளை உடைத்து கரைக்கத் தொடங்கினாள். கல் பலகையில் அமர்ந்தவுடன் அலை அலையாக நினைவுகள் நுரை பொங்கி எழுந்து வந்தன. 

‘ஏண்டி மல்லிகா, நான் கொடிக்காலுக்கு போயிட்டு மத்தியானம் வார வரைக்கும் என்னாடி பண்ணுன? இந்த மாட்டுக்கு கழனி, புண்ணாக்கு ஏதுங்கரைச்சு ஊத்துனியா? ‘ம்மா ம்மா’னு கத்துது. நம்ம வவுறு பசிகண்டா எப்படி பறக்கறம். வாயில்லா சீவெ அதென்ன பண்ணு.’ கொடிக்காலில் இருந்து போட்டுக்கொள்ள கொஞ்சம் வெற்றிலையும், கொடிக்கால் முருங்கைக்காய்க் கட்டுகளை தலையிலும் வைத்துக் கட்டியபடியே மாட்டின் சத்தம் கேட்டு மல்லிகாவை திட்டியபடி வந்தாள் ராசாத்தி.

தங்களுடைய அரைக்காணி நிலத்தில் கொடிக்கால் முருங்கையும், வெற்றிலையும் பயிரிட்டு இருந்தார்கள் ராசாத்தியும் அவள் கணவன் கந்தசாமியும். வீட்டின் பின்புறம் ஜாதிப்பூ தோட்டமும் இருந்தது. கொடிக்கால் முருங்கை முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரையிலான நீளம்தான் இருக்கும்.

இருந்தாலும் சுவை அள்ளும். குட்டையாக குண்டாக இருப்பதால் உள் சதைப்பற்று அதிகமாக இருக்கும். அதை வாரத்தில் இரண்டு நாட்களும், ஜாதிப்பூவை தினமும் சென்று மொத்த வியாபாரக் கடையில் தந்தால் எவ்வளவு விலை வருகிறதோ அதைக்கொடுத்து விடுவார்கள். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்ததால் பெரிய சேமிப்பு இன்றி மல்லிகாவைப் படிக்க வைக்க மட்டுமே முடிந்தது. காலையில் முருங்கைக்காய்களை பறித்து வந்தால்,  மாலையில் ஜாதிப் பூக்களை நான்கு மணிவாக்கில் பறித்துவிட வேண்டும். 

ஜாதிப்பூ வீட்டின் பின்புறம் என்பதால் பறிப்பது மல்லிகாவின் வேலை. மூன்று மணிக்கு டீ குடித்து விட்டு இரண்டு பெண்களை சேர்த்துக் கொண்டு இறங்கினால் நாலரை மணிக்கு எல்லாவற்றையும் பறித்து முடித்து விடுவார்கள். ஐந்து மணிக்குள் எவ்வளவு பூக்கள் என்று உழக்குப்படியில் அளந்தபிறகு தனக்கு என்று எடுத்து வைத்த ஜாதிப் பூக்களை கட்டத்தொடங்கி விடுவாள் மல்லிகா.  ராசாத்தி ரோட்டிற்குச்சென்று இவர்கள் ஊரான மலைப் பட்டியில் இருந்து கரூர் செல்லும் அருண் பஸ்ஸில் பூக்களைக் கொடுத்தால் மொத்த கடையில் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் போது தந்துவிடுவார்கள்.  வாரம் ஒரு முறை கணக்கு பார்த்து பூவுக்கான பணமும் அருண் பஸ்ஸிலேயே வந்து விடும்.

மல்லிகாவுக்கு தினமும் ஜாதிப்பூ வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். அவளே நெருக்கமாகக் கட்டிக்கொள்வாள். வேறு யார் கட்டினாலும் பிடிக்காது. ஜாதிப்பூவின் குணம் மாலை பறித்து இருட்டுவதற்குள் மலர்ந்து விடுவதால் அப்பொழுதே கட்டி வைத்துவிட வேண்டும். காலையில் வைக்கலாம் என்று மறந்துவிட்டால் புளியம்பூ மாதிரி வாடி வதங்கி அவ்வளவு மணமும் காணாமல் போய்விடும். விரைவில் மலர்ந்து மணம் வீசி விரைவில் வாடிவிடும். பந்து போல் தலை நிறைத்து வைப்பது பிடித்தாலும் காலை வேளையில் ஒரு நாளேனும் ஜாதிப்பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது மல்லிகாவிற்கு. அதனால் மல்லிகா தனது தோழிகளிடம் கேட்டு வந்து லேசாக பூச்சரத்திற்கு தண்ணீர் தெளித்து துணிகள் போடும் கொடிக்கயிற்றில் தொங்கவிடுவாள். காலை எழுந்து தினமும் வேகமாக வந்து பார்ப்பாள். வாடாது பழைய மணத்தில் துளி மட்டும் குன்றி.. தொங்குவதை எடுத்து ஆசையோடு வைத்துக்கொள்வாள். 

மல்லிகா சென்றதில் இருந்து அதைப்பார்த்தால் அவள் நினைவு வருகிறதென்று கொடிக்கயிறை அத்து வீசியிருந்தாள் ராசாத்தி. கம்பங்கூழ் குடித்தவாறே கொடிக்கயிறு கட்டிய இடத்தில் கண்கள் போனவுடன்… கலங்கி பார்வையை மறைத்துக்கொண்டது கண்ணீர். கல் பலகையில் மல்லிகா அமர்ந்து கொள்ள இரண்டிரண்டு ஜோடிகளாக எடுத்து வைத்தால் வேகமாகவும், நெருக்கமாகவும் பூக்கள் அறுந்து வீணாகாமல் கட்டும் மகளின் கைகள் தன் தொடையை தட்டி ‘பூ எடுத்து வையுமா, எங்கே வேடிக்கை பாக்கற’ என்பது போலிருந்தது.

2. 

மலைப்பட்டிக்கு பக்கத்து கிராமமான சீவம்பட்டி வரதராசனிடம் மல்லிகாவின் அம்மா ராசாத்தியும் அவள் அப்பா கந்தசாமியும் முகம் வெளிறியபடி அமர்ந்திருந்தார்கள்.

‘இவ்வளவு கோழிகூப்ட வந்துருக்கீங்களே என்னம்மா சோலி’ என்றார் வரதராசன்.

‘ஒண்ணுமில்லீங்கண்ணா’ என்று பேசமுடியாமல் முந்தானையை எடுத்து வாயில் வைத்து பொத்தியபடி குலுங்கி குலுங்கி அழுதாள் ராசாத்தி.

‘அட மச்சான், நீயாவது சொல்லுப்பா?’ என்றார் வரதராசன்.

கந்தசாமி கண்களில் ஒருவித ஆத்திரமும், இப்படி ஆகிவிட்டதே என்று அவமானமும் கலந்து சிவந்து கிடந்தது.

‘சரி, சோலி ஏதோ பெருசா இருக்கு போல அதான் சொல்லமாட்டேங்கறீங்க’ என்றவாறே  இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்தார். 

வரதராசனும், அவர்களும் அமர்ந்திருக்கும் அறையில் நிறைய ஜாதக நோட்டுகளும், மந்திரிக்கும் கயிறுகளும் குவிந்து கிடந்தன. அதனருகே வாராஹி யட்சிணி உருவம் மந்திரங்களால் உருவேற்றப்பட்டு கண்கள் அகலவிரிந்தபடி வெள்ளை சுண்ணாம்புக்கட்டியால் செய்ததுபோல நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அவர் அதைத்தொட்டு வணங்கிவிட்டு அவர்களைப் பார்த்தார்.

ராசாத்தி தன் கைகளில் சுருங்கியபடி இருந்த வெற்றிலைக் கவுளியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து வரதராசனிடம் நீட்டினாள். அதனை வாங்கியவர் கவுளியை கீழே வைத்து விட்டு ஒரு வெற்றிலையை மட்டும் எடுத்தார். யட்சிணி உருவத்தின் முன்பு  ஒரு டப்பா இருந்தது. அதனைத் திறந்து அதில் இருந்த கறுப்பு நிற மையை எடுத்து வெற்றிலையில் தடவினார்.

வலது,  இடது என்று மாறிமாறி வெற்றிலையில் மையைத் தடவிக்கொண்டு இருந்தவரின் புருவங்கள் சற்று நேரத்தில் சுருங்கின. வாய் முணுமுணுத்தபடி இருக்க மீண்டும் மாறிமாறி தடவி ஏதோ ஊர்ஜிதம் செய்தவராக அவர்களைப் பார்த்தார்.

‘அம்மா ராசாத்தி மோசம் போயிட்டிங்களே இப்புடி? ஏங்கண்ணு வந்தவொடனே சொல்லக் கூடாதா. புள்ள  கிளம்பி வெகுநேரம் ஆச்சே சாமி. நடுநிசிக்கே கெளம்புனாப்ல காமிக்குது.’ என்றார்.

‘அய்யோ அண்ணே அதுதாந்தெரியுமே? சிறுக்கி மவ இப்படிப் பண்ணிட்டு எங்க தலைய தொங்க வச்சிட்டு போயிட்டாளே. விடிஞ்சா ஊருக்குள்ள எப்படி நடமாடறதுண்ணே? எங்கே போயிருக்கானு பாக்க முடியுதா? ஆருக்குந் தெரியங்காட்டி காதுங்காது வச்சாப்ல கூட்டியாந்துரலாம். பாருங்கண்ணே’ என்றாள் ராசாத்தி.

மீண்டும் வெற்றிலையில் தடவிப்பார்த்தவர் கைகள் நடுங்கின.

‘அடி வாராஹி இப்படி ஒரு சேதிய சொல்லவிட்டுட்டியே’ என்று மனதுக்குள் முனகியவர் தொடர்ந்தார்.

‘புள்ள இந்த குலத்துக்கே அவமானம் பண்ணிட்டு போயிட்டாளம்மா. அத நானெப்படி எவ்வாயால சொல்லுவே? ஒனக்கு புள்ளையா பொறந்துட்டு எப்படி இப்படி ஒரு ஈனச்செயல செய்ய துணிச்ச வந்துச்சோ கண்ணு’ என்றவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் தடுமாறின.

‘கூட போன ஆளு தெரியுது ஆத்தா. மொதல்ல வண்டில போறாக.  பஸ் ஏறி ரொம்ப நேரம் ஆயிருச்சு. போற வழியில ஏதோ ஆறு ஓடுது கண்ணுங்களா…நம்மூருலருந்து வடக்கு பக்கந்தே போறாப்ல இருக்குது. ரெண்டு பேருதா போறாங்க ஆயா. போறது ஆருனு தெரிஞ்சா நீங்க உசுர உட்ரூவீகளாயா’ என்றார்.

‘அண்ணே அவ ஆரு எவங்கூட போனாலுஞ்செரி, பொட்டாட்டம் போயி இழுத்துட்டு வந்துரலா. கொஞ்ச நாளைக்கு வேணா அவிக அப்பச்சி ஊட்டுல கொண்டு போய் வச்சுக்கலா. எல்லாந் தணிஞ்சவொடனே நம்ம சாதிசெனத்துல ஆரையாச்சும் பாத்து கட்டி வச்சிக்கலாம்ணே. சொல்லுங்கெ ஆருன்னு?’

வரதராசன் கைகள் மேலும் நடுங்கின. பஸ் ஏறி நாலு மணிநேரத்துக்கு மேலானது போல் தெரிந்தது அவருக்கு. 

‘போற தெச சனி மூல பக்கமா காட்டுது ஆத்தா. அநேகமா மெட்ராஸ் டவுனுக்குப் பக்கமாத்தான் இருக்கோணும்.’ ஆள் மட்டும் யாரென்று துல்லியமாக பொட்டிலடித்தாற்போல தெரிந்தது அவருக்கு. 

‘அத எப்படி அத எப்படி’ என்றவர் மீண்டும் யட்சிணி கால்களைப் பற்றி மனதுக்குள் வேண்டினார். தான் நினைப்பதாக இருந்து விடக்கூடாது என்று யட்சிணி பாதங்களில் இருந்து கைகளை எடுத்தார். ஆனால் மையைத் தொடும் போதெல்லாம் அவர் நினைத்தது போலவே நடந்து கொண்டிருந்ததுதான் அவருக்கு மேலும் கலக்கத்தைத் தந்தது.

தாங்கள் வந்த அவசரம் புரியாமல் இவர் என்ன இப்படியே இருக்கிறார் என்று ராசாத்திக்கு கோபம் வர ஆரம்பித்தது.

‘அண்ணே நம்ம வோரியாடற நேரமா இது. மையில கை வெச்சா நின்னு பேசுவா யட்சிணி ஒங்ககிட்டெ, அதனால் தானே வந்தம். சரியா தெரியலீனா சொல்லுங்கெ. மழுப்பி ஒலப்பிகிட்டு ஏங்கெடக்கறீங்கெ. நாங்க கெளம்பி ஆவற சோலியப் பாக்கறம்’ என்றாள் ராசாத்தி.

‘இந்த சுத்துவட்டாரத்துல நாம் போட்ட மையி தப்பிப் போயிருக்காம்மா ராசாத்தி? நாலு தடவையும் அதே ஆளுதெங் காட்டுது. நானும் கண்ணு கோளாறானு திரும்ப திரும்ப தடவி தடவி பாக்குறேன். இனிமேட்டு ஒம்புள்ள ஒங்கிட்ட வரமாட்டா தாயி. போயி தலைய முழுவிட்டு துக்கத்தை ஆத்துங்காயா ரெண்டு பேரும்’ என்றார்.

இந்த முறை கந்தசாமிக்கே எரிச்சல் ஆனது. ‘மச்சா, பெத்த வவுறு துடிக்க துடிக்க பஞ்சாப் பறந்து ஓடியாரம். இப்படி பண்ணா என்ன அர்த்தம். அதெல்லாம் புள்ள நம்மளக் கண்டா மனசு மாறிடும் மச்சா. ரெண்டு அறவுட்டு இழுத்துட்டு வந்துரலா. எந்த சாதிப்பயலா இருந்தாலுஞ்சரி மனச தேத்திக்கறம். ஆளச் சொல்ல முடியுமா முடியாதா? ஒரே பேச்சு’ என்றார்.

இதற்கு மேல் மறைக்க வழியில்லை என்று வரதராசனுக்குப் புரிந்தது. அவர்கள் இருவரையும் உற்றுப்பார்த்தார்.

ஆளுதான தெரியோணு. இந்தா சொல்றேன். எம் மைய சந்தேகப்பட்ட பொறவு ஒடச்சு சொல்லாமெ இருக்க முடியாது.

ஆளு பேரு ‘பாஸ்கர்’.

3.

நடுநிசியில் மெதுவாக சப்தமின்றி எழுந்தாள் மல்லிகா. அம்மாவும் அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தான் செய்வது சரியா, தவறா என்று யோசிக்கும் நிலையைக் கடந்து விட்டிருந்தாள் மல்லிகா. மெதுவாக பின்புறம் சென்றாள். பயத்தில் சிறுநீர் வருவது போலிருந்தது. மெல்ல கொல்லைக் கதவைத் திறந்து ஒரு ஓரமாக சிறுநீர் கழித்தாள். ஊர் எந்தவொரு சப்தமும் இல்லாமல் பேரமைதியாக  இருந்தது. அவள் சிறுநீர் கழிக்கும் சப்தம் கூட அவளுக்கு பூதாகரமாகக் கேட்டது.

முந்தைய நாள் மாலையில் பாஸ்கரை சந்தித்துப் பேசியபடி எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது போலிருந்தது. அந்த இரவின் ஒளியில் ஜாதிப் பூக்கள் மொட்டுகள் விட்டிருந்த அழகைக்கண்டாள். பூச்சிகள், தவளைகள் சப்தம் என்று மாறிமாறி ஒலித்தது. ஜாதிப் பூச்செடிகளின் அருகில் சென்று பத்துச்செடிகள் அளவிற்கு கைகள் கொள்ளும் வரை அணைத்துக் கொண்டாள். அம்மா அப்பாவை விட்டுச்செல்வதை விட அவளுக்கு அந்தச்செடிகளை விட்டு செல்ல மனம் மறுத்தது. திடீரென நினைவு வந்தாற்போல் சாத்திய  கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு மீண்டும் உட்புறம் வந்தாள். ஒரு முழம் ஜாதிப்பூ கொடிக்கயிற்றில் தொங்கியபடி இருந்தது. அதை மெல்ல வருடியவள் மலர்ந்த பூக்களை நுகர்ந்து மூக்கில் அதன் நறுமணத்தை சுவாசித்தாள். ஜாதிப் பூ வாசத்தில் கிறங்கியவுடன் மல்லிகாவிற்கு எச்சில் நாவில் சுரந்து தொண்டைக் குழியில் கரகரப்பாக இறங்கியது. தன் நினைவாக காலையில் இதுவும் சூடிக்கொள்ள ஆளற்றுத் தொங்கும் என்பதே அவளுக்கு பெரிய கவலையாக இருந்தது. பின்னர் மீண்டும் சப்தமெழாதபடி நடந்து வந்து கொல்லைப்புற கதவைத் திறந்து விறுவிறுவென்று நடந்தபடி பார்க்கும் தூரத்தில் தயாராக நின்ற பாஸ்கரின் வண்டியில் ஏறினாள்.

பாஸ்கரோடு ஏறிவந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தன.

அம்மாவிடம் போனில் பேசிய பிறகு மல்லிகாவுக்கு நெஞ்சு பட்பட் என்று அடித்துக்கொண்டது. எப்போதும் அம்மா வேலை செய்யவில்லை என்றால் திட்டுபவள்தான். ஆனால் இந்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள் அம்மாவிடம் இருந்து ஒருபோதும் வந்ததில்லை. தான் செய்த வேலைக்கு யார்தான் திட்டமாட்டார்கள். உயிரோடு விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். எல்லோரையும் சந்திக்க முடியாமல் ஒளிந்து ஒளிந்து இப்படியான ஒரு வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்தவுடன் பட்பட்பட்பட்பட்டென்று இதயம் வேகமாக மறுபடியும் துடிக்க ஆரம்பித்தது.

வெளியே சென்றிருந்த பாஸ்கர் வந்துவிட்டான். இரண்டு பிரியாணி பொட்டலங்களை கையோடு வாங்கி வந்திருந்தான். ‘ஏன் அம்மு, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?’ அவன் கேட்டவுடன்  அம்மா திட்டியதும் சேர்ந்து கொள்ள சூட்கேசில் இருந்த துணிகளை பித்தி போல எடுத்து வீசினாள்.

‘ஏய் என்னாச்சு, ஏன் இப்படி பிஹேவ் பண்ற?’.

‘அம்மா என்ன ரொம்ப அசிங்கமா திட்டிட்டாங்க பாஸ்கர்.’ கதறிக்கதறி அழுதாள்.

‘இது எதிர்பார்த்தது தானே.? இதெல்லாம் நடக்கும்னு நான்தான் ஏற்கனவே சொன்னேன்ல. சும்மாவே லவ் மேரேஜ்னா அலறுவாங்க நம்ம வீடுகள்ல. நம்ம நெலைமை இன்னும் மோசம்.’

‘அப்ப நம்ம செஞ்சது சரி இல்லன்றியா நீயே?’

‘முழுசா அப்படி சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சம் அப்படித்தான்னு வச்சுக்கோயேன்.’ பாஸ்கர் வாயில் இருந்து உதிரி உதிரியாக விழுந்தன வார்த்தைகள்.

‘அப்பறம் ஏண்டா என்ன புடிக்கும்னு சொன்ன…?’ சட்டையைக் கோர்த்துப்பிடித்து உலுக்கினாள்.

‘இப்ப உன்ன பிடிக்கலனு யாரு சொன்னா அம்மு…புடிக்காமலா இவ்வளவு தூரம் உன் கூட வந்திருக்கேன்.’ 

‘நீ முதல்ல அவங்க கிட்ட எதுக்கு பேசின? நம்ம மேல இருக்கற கோபம் செத்தாலும் ஆறாது அவங்களுக்கு. வேற வழியே இல்ல நமக்கு. நம்ம பண்ணியதுக்கு நாம அனுபவிச்சேத்தான் ஆகணும். அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். நல்லா யோசிக்கலாம் இந்த முடிவை எடுக்கறதுக்கு முன்னாடின்னு?

‘அப்ப நாந்தான் உன்னை இந்த முடிவுக்கு தள்னேன்றியா? உனக்கு விருப்பம் இல்லியா?’ அழுது சிவந்த கண்களோடும் இன்னவென்று சொல்ல முடியாத உணர்வுகளோடும் அவனைப் பார்த்துக்கேட்டாள்.

‘இங்கே பாரு அம்மு, திரும்பி திரும்பி இதையே பேசறதுல அர்த்தம் இல்ல. முதலில் சாப்டு. அப்பறம் பேசலாம் எதுனாலும்?’

அவளால் சாப்பிட முடியவில்லை. அவனோடு வந்த ஆறு மாதங்களும் போராட்டமாகவே கரைந்தன. இருவரும் வேலை தேடி அலைந்து ஓய்ந்தார்கள். ஒரு வழியாக இவளுக்கு மட்டும் வேலை கிடைத்திருந்தது. ஆனால் சென்னையின் பிரம்மாண்டங்கள் இவர்களை பயமுறுத்தியது. வீடு, வாடகை மற்ற செலவுகள் என்று ஒருத்தியாக சமாளிக்க முடியவில்லை. அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே போதும் போதும் என்றாகி விட்டது. இந்தச் சூழலில்தான் எப்படி இருந்தாலும் அம்மா மன்னித்து விடுவாள் என்று நம்பி போன் செய்திருந்தாள் மல்லிகா. 

அழுதபடி சாப்பிடாமல் கிடந்த அவளை எழுப்புவதற்காக பாஸ்கர் அவள் கவிழ்ந்து படுத்திருந்த அறைக்குள் வந்தான். அவள் தோளைத் தொட்டுத் திருப்பினான். அவள் திரும்பவேயில்லை. மீண்டும் மீண்டும் இரண்டு முறை எழுப்பினான். அவள் திரும்புவதாக இல்லை. அவளருகே கட்டிலில் அமர்ந்து தலை கோதியபடி

‘அம்மு, நமக்கு இந்த வாழ்க்கைல இப்படித்தான் நடக்கும்னு இருக்கு. ரெண்டு பேரும் வேணும்னு அப்படி செய்யல. என்ன செய்ய முடியும்? மனசுல ஏன் நம்ம ரெண்டு பேருக்கும் இப்படி தோணுச்சுனு விடை கண்டுபிடிக்க நினைக்காத. இனிமேல் நம்ம வாழ்க்கை முழுக்க எப்பவுமே நம்மோட ஊருக்கோ நம்மோட அப்பா அம்மா கிட்டயோ போகமுடியவே முடியாது. அவங்க செத்தா கூட போகவே முடியாது. அந்த நிஜத்துக்கு வா. நான் என் அம்மா, அப்பா கூட பேசல இன்னும். நீயும் பெரிமா, பெரிப்பா நம்மள ஏத்துக்குவாங்க, பேசுவாங்கனு எப்பவுமே நினைக்காத. இனிமேல் பெரிமாகிட்ட போன் பண்ணி பேசாத. அதுக்கு மேல உன் இஷ்டம்.’

00

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌ ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *