நுண்கதைகள் – காதலும் சார்ந்தவைகளும்

01.

இந்த உலகில் காதல் எப்போது தீருமென்கிறாய்; நாம் உண்மைகளை நேசிக்கத் துவங்கும்போது என்கிறேன். அருந்திக் கொண்டிருக்கும் பழரசத்தை ஓரம் வைத்தவாறு புரியவில்லை என்கிறாய். அதனாலொன்றும் பாதகமில்லை என்கிறேன். முறைக்கிறாய். எஞ்சிய ரசத்தை எடுத்து அருந்தியபடி அமிர்தம் என்கிறேன். பூரிக்கிறாய்.

நடுத்தெருவில் விழுந்துப் புரண்டுச் சிரித்துக் கொண்டுள்ளது – காதல்.

0

02.

‘மனைவி குழந்தையைவிட மற்றவையெல்லாம்  முக்கியமாகப் போயிற்றா?’ என்கிறாய்; ‘கணவனைவிட மற்றவையெல்லாம் முக்கியமாகிப் போகும்போது யார்தான் என்ன செய்ய இயலும்?‘ என்கிறேன். மிகுந்த இளக்காரத் தொனியில் ‘நீதான் பெரிய ஞானியாயிற்றே – அனுசரித்துப் போ’ என்கிறாய்; ’நான் ஞானியல்ல. சூன்யம். ஆகையால்தான் அமைதியாய் போகிறேன்’ என்கிறேன்.

இதை வாசித்தவுடன் ‘என்னப்பா ஏதும் பிரச்சனையா? என நண்பர் வினவுகிறார். நேரில் சொல்கிறேன் என்றபடி அழகி நண்பரது அழைப்பைத் துண்டிக்கிறாள்.

நறுமுகையே பாடலை முணுமுணுத்தபடி கழுத்தில் துண்டுடன் நடனமாடிக் கொண்டுள்ளது – காதல்.

0

03.

காதல் –

ஓர் ஒற்றையடிப் பாதை

அதில்

ஒருவர் மட்டுமே நடக்கலாம்

அல்லது

ஒருவர் பின் ஒருவர்

தனித்தனியே நடக்கலாம்

மற்றபடி

இருவரும் ஒன்றாக நடப்பதென்றால்

அதன் பெயர்

அது அல்ல.

தன் உச்சி மண்டையில் உள்ள மயிர்களைக் கொத்தாகப் பிய்த்தெரிந்தபடி உள்ளது – காதல்.

0

04.

நீ செய்தது சரியா? என்கிறேன். அதிலென்ன தவறு? என்கிறாய். தவறில்லை என்றால் ஏன் இதுவரை என்னிடம் பேசவில்லை என்கிறேன். நீதான் என்னுடன் பேசவில்லை என்கிறாய். ஓ! என்று ஆச்சர்யம் அடைகிறேன். பிறகு, அன்றைய நிகழ்வை

மனதுள் ஓட்டிப் பார்க்கிறேன். உனக்காக மட்டுமே காத்திருக்கும் அன்பின் மீது நீ வீசி எறிந்த உதாசீனம் மலமென காய்ந்துக் கிடக்கிறது. உறக்கத்தைத் தொலைத்து

வெகு நேரம் தனித்திருக்கிறேன். எல்லாம் முடிந்து விடிகிறது.

கீரை விற்கும் தள்ளு வண்டிக் கிழவனின் தொண்டையில் ஒய்யாரமாய்  அமர்ந்து கூவிக் கொண்டுள்ளது – காதல்.

0

05.

இப்போதெல்லாம் ‘நீ உண்மையைப் பேசுகிறாய்’ என்கிறேன்; ஆமோதித்தவாறு ‘காதல் கண்களை மறைக்கவில்லை’ என்கிறாய். ‘இருந்தால்தானே மறைப்பதற்கு‘ என்கிறேன்; ‘ஒரு காலத்தில் இருந்ததால்தான் சொல்கிறேன்’ என்கிறாய்.

‘காதலைவிட கத்தரிக்காய் சிறந்தது – தொக்கிற்கு உதவும்’ என்கிறேன். ‘உண்மைதான் – நானும் கண்டுக்கொண்டேன்’ என்கிறாய். ஆகா! என்றவாறு உற்றுப் பார்க்கிறேன்; ‘அட மயிரே’ என்றவாறு எதிர்கொள்கிறாய்.

ஒரு சிட்டுக் குருவியின் இறக்கைகளுடன்

அந்தரத்தில் பறந்தபடியுள்ளது – காதல்.

0

06.

‘என் காதல் பரிசுத்தமானது. அதை ஒருபோதும் கேலி செய்யாதே’ என்கிறாய்.

வெற்றாய் அமர்ந்திருந்த நான் ‘முருகனின் மீது ஆணையாக’ எனத் துவங்கும்போதே ‘ச்சீஈ. வாயை மூடு. மீண்டும் புளுகாதே’ என்கிறாய். உன் பதட்டம் கண்டு செய்வதறியாது அமைதியாகிறேன்.

கதவோரம் கால்நீட்டி அமர்ந்தபடி சிரங்கால் பீடித்த தன் மேனியை வறட் வறட் என்று சப்தமெழ சொரிந்துகொண்டபடி உள்ளது அந்தப் பரிசுத்தக் – காதல்.

0

07.

காதல் குரங்கைப் போன்றது என்கிறேன். ஏன் என்கிறாய். அது தாவிக்கொண்டே இருக்கும் என்கிறேன். உனக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம் எனக்கல்ல என்கிறாய். உண்மையை எண்ணிப்பார்த்து நகைக்கிறேன். ‘பீடை புத்தி’ என்கிறாய். மீண்டும் நகைக்கிறேன்.

கொடுக்காப்புளி விதையின் மேற்தோலை மிகக்  கவனமாக உரித்தபடியுள்ளது – காதல்.

0

08.

இந்த உலகின் மாபெரும் பொய் எது என்கிறாய். அன்பு என்கிறேன். முறித்துக்கொள்கிறாய். நிரூபணமாகிறது.

கல்லூரி மாணாக்கரின் கையிலிருக்கும் கஞ்சாப் பொட்டலத்தில் ஒரு பங்கு கேட்டவாறு ஓரமாய் குனிந்தபடி நின்று கொண்டுள்ளது – காதல்.

0

09.

முன்னர் கேட்கையில் கருவாட்டுக் குழம்பெல்லாம் வீட்டில் வைப்பதில்லை என்றாயே என்கிறாய். எப்போது என்கிறேன்.

ஏழாண்டுகள் இருக்கும் என்கிறாய். நினைவில்லை என்கிறேன். உண்மைக்காதல் எதையும் மறக்காது என்கிறாய்.

மச்சான் யோவ் எனக்கு மட்டும் சுண்டல் குழம்பு எடுத்து வரவே இல்லை என்கிறாய். எப்போது என்கிறேன். நான்காண்டுகள் இருக்கும் என்கிறாய். நினைவில்லை என்கிறேன். உண்மைக்காதல் எதையும் மறக்காது என்கிறாய்.

இந்தப் பாழாய்ப்போன உண்மைக்காதல் கருவாட்டுக் குழம்பிலும்  சுண்டல் குழம்பிலுமா ஒளிந்திருக்க வேண்டும் என்று சொரிந்துக்கொள்கிறேன்.

காக்கையென தலையில் பேண்டுவிட்டு பறந்து மறைகிறது  உண்மை – காதல்.

0

10.

நமக்கான எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டு உனக்காக காத்திருக்கிறேன்.

நமக்கான எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டு எனக்காக காத்திருக்கிறாய்.

காலமும் காதலும் கனிந்த பப்பாளியைப்போல் அந்தரத்தில் தொடுத்துக்கொண்டுள்ளன.

உதிரும் இலையென காற்றில் வட்டமிட்டவாறு உதிர்ந்துக் கொண்டுள்ளது – காதல்

0

11.

நாம் இருவரும் பயணித்த அந்த இரவு நினைவில் உள்ளதா? என்கிறேன். ம்ம்ம் என்கிறாய். உன் உடல் கணம் பூரித்து அடங்கி கண்கள் நீர்க்கோர்க்கின்றன. கிளம்புகிறேன் என்கிறாய். ஏன்? என்னவாயிற்று? என்று அடங்கிய தொனியில் சீண்டுகிறேன். இடது ஆட்காட்டி விரலின் புறத்தில் இமையோரம் சுண்டியவாறு நகர்கிறாய்.

ஒரு குழந்தையென  தன் மோதிர விரலை வாயில் வைத்துச் சப்பிக்கொண்டுள்ளது – காதல்.

0

12.

அந்தப் ‘பப்பாளி பழம் விழுந்துவிட்டதா’ என்கிறாய். ‘புரியவில்லை’ என்கிறேன். ‘காலமும் காதலும் மர உச்சியில் தொடுத்துக் கொண்டுள்ளதாக எழுதியிருந்தாயே’ மறந்துவிட்டதா! என்கிறாய். ஓ… அதுவா… என்றவாறு ‘ஒருவேளை உதிர்ந்திருந்தால் உன்னோடு பேச முடிந்திருக்காதே’ என்கிறேன். ‘ஏன்’ என்கிறாய். ‘மென்னகையோடு காலம் என்பது உயிரை அல்லவாக் குறிக்கும்’ என்கிறேன். ‘அய்யையோ’ என்று அலறுகிறாய்..

‘உன் கவிதையும் மயிரும் என்றவாறு கொக்கானி காட்டியபடியுள்ளது’ – காதல்.

0

13.

‘விளையாட்டாகவே கேட்டேன். மன்னித்துவிடு’ என்கிறாய். ‘ஆமாம் ஆமாம் என் மரணம் உனக்கு விளையாட்டுதானே’ என்கிறேன். ‘எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாய்’ என சினக்கிறாய். ‘யார் நானா’ என்கிறேன். ‘அமைதி காக்கின்றாய்’. ‘சரிசரி மன்னித்துவிட்டேன்’ என  பகடியாய் சொல்கிறேன். ‘இரைச்சல் ஏதுமின்றி கண்ணீரால் மட்டும் அழத் துவங்குகிறாய்’.

‘அட’ என்றவாறு  தேற்றத் துவங்குகிறேன்.

தன்  உள்ளாடையை தளர்த்திவிட்டு  பின்பக்கத்தைக் காட்டி நகைத்துக் கொண்டுள்ளது – காதல்.

0

14

இரண்டு நிமிடம் பொறு. வந்துவிடுகிறேன் என்கிறாய். காத்திருக்கிறேன்.

அருகே இருந்த தள்ளு வண்டிக்கடையில்  நூறு நபர்கள் உணவருந்தி சென்றுவிட்டனர். அங்கே சுற்றித் திரிந்த தெருநாய் வாலை ஆட்டத்துவங்கி நண்பராகிவிட்டது. டிராபிக் போலீஸ்கூட இரண்டாம் முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு எதுவும் கேட்டுக்கொள்ளாமல் கடந்துவிட்டார். நிலா இன்னும் சற்று மேற்கே நகர்ந்து தன் உடலை நீட்டிக்கொண்டது. காத்திருக்கிறேன்.

உனக்கான இரண்டு நிமிடமும் எனக்கான இரண்டு நிமிடமும் எப்போது ஒன்றாகும் எனத் தெரிந்துகொள்வதற்காக நடுத்தெருவில் அல்லாது சற்று ஓரமாகவே காத்திருக்கிறேன்.

தன் கடைவாயில் குச்சி மிட்டாயைச் சொருகி சப்புக்கொட்டிக் கொண்டுள்ளது – காதல்.

0

15.

‘முன்புபோல் எதுவும் இல்லையல்லவா? எல்லாமும் மாறிவிட்டதுதானே’ என்கிறேன். ‘உனக்கு அப்படி தெரிகிறதா’ என்கிறாய். ‘ஆம்’ என்கிறேன். என்னிடம் மட்டுமே வெளிப்படும் உனக்கே உரித்தான அந்த வெடிச் சிரிப்புடன் ‘எதுவும் மாறியிருக்காது; மாறிவிட்டதைப்போல் நடித்திருக்கும்’ என்கிறாய். ‘ஓகோ’ என்றவாறு ‘நடித்தல் நல்லது’ என்கிறேன். ‘மிகமிக நல்லது’ என்கிறாய்.

தன் கன்னத்தில் கையூன்றி ‘இவனுங்க தொல்லை மயிறு தாங்க முடியலைடா’ என்றவாறு பொருமிக் கொண்டுள்ளது – காதல்.

0

16.

‘யாரோடு பேசுவதை தினமும் எழுதுகிறாய்’ என ஐயமின்றி வினவுகிறாய். ‘இதழ் பிரியாமல் நகைக்கிறேன்’. ‘மழுப்பல் வேண்டாம். உண்மையைச் சொல்’ என்கிறாய். சிறிது நேர அமைதியின் பின் ‘என்னோடுதான்’ என்கிறேன். கண்களோடு நெற்றியையும் சுருக்கி ‘உண்மையை மட்டும் சொன்னால் போதும்’ என்கிறாய். உனது அதே பாவனையைப் பின்பற்றி முன்னர் நான் சொன்ன அதே பதிலைச் சொல்கிறேன். ‘நாசமாகப் போ’ என்றவாறு பாத்திரங்களை எறிந்து உருட்டத்துவங்குகிறாய். உன் வாக்கு உன் மூலமாகவே நிறைவேறுவதை வேடிக்கைப் பார்க்கிறேன்.

தனது வலது கையின் கம்முக்கூட்டை இடது கையால் சொரிந்தபடியுள்ளது – காதல்.

0

17.

‘துயர் – பிரிவு – பசலை – இடைவெளி – ஈகோ’ என்கிறேன். ‘வாயில நல்லா வருது’ என்கிறாய்.

இலக்கியமும் வாதியும் நாதியற்றுத் தெருவில் நிற்கின்றனர்.

தன் தாடி மயிர்களைக் குவித்து செம்பருத்தி மலர்ச் சூடி மகிழ்தபடியுள்ளது – காதல்.

0

18.

பேரமைதியின் மத்தியில் முணுமுணுப்பு கேட்கிறது.

‘தொலைத்த இடத்தில்தானே தேட வேண்டும்’ என்கிறேன். எனில் ‘நீ ஏன் தேடவில்லை’ என்கிறாய். ‘தொலைத்தது நானல்ல’ என்கிறேன். ‘கடவுளே’ என்கிறாய். ‘உனது உத்தம நியாயங்களுக்கு உன் கடவுள்கள் எப்படி பொறுப்பாவர்’ என்கிறேன். ‘நகம் கடிக்கிறாய்’.

கலைத்துப்போட்டச் சீட்டுக்களில் ஜோக்கர் யாரிடம் உள்ளது என்னும் அலைக்கழிப்பில் அடுக்கிக் கொண்டுள்ளது – காதல்.

0

19.

நீ பைத்தியமேதான் என்றவாறு அதெப்படி எல்லோரையும் / எல்லாவற்றையும் ஒரேபோல அன்பு செய்ய இயலும் என கேட்கிறாய். ஏன்? இயலாதா? என்றவாறு எல்லாவற்றையும் எண்ணிப்பார்க்கிறேன்.

மரத்திலிருந்து பட்டுப்போய் உதிர்ந்த கிளை நேர்கீழே அமர்ந்திருந்த என்மீது ஏன் விழவில்லை எனத் தோன்றுகிறது.

அவரவர் கருத்தில் அவரவர் வலுப்படுகிறோம்.

குரங்கின் உடல் மீது ஊர்ந்திடும் பேன்களை பிடித்து வாயில் போட்டு மென்றபடியுள்ளது – காதல்.

0

20.

எப்போது வருவாய் என்கிறாய். எங்கே என்கிறேன். தலையில் அடித்துக்கொண்டு ‘இப்படியேப் போனால் ஒருநாள் என்னையும் மறக்கத்தான் போகிறாய்’ என்கிறாய். அந்த அற்புதம் நிகழக் காத்திருக்கிறேன் என்கிறேன். கொன்றுவிடுவேன் என்கிறாய்.

அற்புதம் நிகழ்கிறது.

செத்துக்கிடக்கும் காக்கையின் மீது லாரியின் சக்கரம் ஏறுவதை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்துள்ளது – காதல்.

0

21.

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நாணப்படுகிறேன். மேலும் இரசிக்கிறாய் எனக்குள் உடையும் நான் மேலும் நாணுகிறேன். அருகே வந்து கைகுலுக்கி வாழ்த்துகிறாய். உடலின் மயிர்கள் குத்திட்டு நிற்கின்றன.

மல்லிகை பூ காட்டின் ஓரத்தில் காலியாய்க் கிடக்கும் மருந்துக் குப்பியைத் தேடி எடுத்து

உள்ளும் புறமும் ஆராய்ந்துக் கொண்டுள்ளது – காதல்.

0

22.

பழமொழி ஒன்றைச் சொல்கிறாய். அது ஏன் அப்படி என்கிறேன். வழமைபோல் அனுபவி ஆராயாதே என்னும் உலக  தத்துவத்தை உதிர்க்கிறாய். ஏன் அப்படி என்கிறேன். ‘ஆத்தி’ என்றவாறு அலறியடித்து ஓடுகிறாய்.

காற்றடைத்த பலூன்மீது கடப்பாறையை நகர்த்தி விளையாடியபடியுள்ளது – காதல்.

0

23.

‘சோற்றில் உப்பில்லை’ என்கிறாய்.

‘இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது’ என்கிறேன்.

‘நிறையப் போட்டுக்கோ’ என்றபடி திறந்து வைக்கிறேன்.

‘நக்க மாட்டாதவனுக்கு நானூறு நாக்கு’ என்கிறேன்.

தன் முதுகில் ஏறும் பூனைக்குட்டியின் சுமையில் இலயித்தபடி குப்புறப் படுத்துள்ளது – காதல்.

0

24.

உனக்கு பிடித்த மலர் என்ன என்கிறேன்.

பட்டியலிட்டப் பின் எதற்காக கேட்கிறாய் என வினவுகிறாய். மாலை வாங்கத்தான் என்கிறேன். புரியவில்லை என்கிறாய். உன் மரணத்தின்போது மாலை வாங்க வேண்டுமல்லவா அதற்காகத்தான் என்கிறேன். பாவி என்றவாறு நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறாய்.

மதுபானக் கடையோரக் குப்பைக்குழியில் நெளிந்துக் கிடக்கும் நெகிழிக்கோப்பையில் மீந்துள்ள மதுவை வாய்வைத்து உறிஞ்சிக் கொண்டுள்ளது – காதல்.

0

25.

மழையில் நனைந்து சொட்டும் நீரோடு வருகிறாய். பாதச்சுவடு தரையில் பதிகிறது. அடடா என்கிறேன். என்ன என்கிறாய். தரை நனைந்துவிட்டது என்கிறேன். இருக்கும் இருக்கும் என்றவாறு களைகிறாய்.

தன் கண்களை நன்றாகத் திறந்துவைத்தபடி

வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டுள்ளது – காதல்.

0

26.

‘உன்னோடு பேசினால் பலகீனம் ஆகிறது’ என்கிறாய். எனில் ‘பேசாதே’ என்கிறேன்.

உண்மையில் அது முதல் நீ பேசுவதில்லை. உனக்கு உன்மீது இருக்கும் அக்கறையை எண்ணி வியந்தவாறு அமைதியாகிறேன்.

ஒற்றை விரலை மட்டும் தரையில் ஊன்றி தண்டால் எடுத்துக் கொண்டுள்ளது – காதல்.

0

27.

‘படத்திற்கு போகலாமா’ என்கிறாய். பெயர் கேட்கிறேன். சொல்கிறாய். ஒன்றுமில்லாத அந்தப் படத்திற்கு போவதற்கு உனக்காக ஒப்புக்கொள்கிறேன். இடையில் சற்றே நீ தூங்கி வழிந்து கைப்பேசியைத் தவறவிடுகிறாய். பிறகு எதுவுமே நடக்ககாததுபோல மீண்டும் தொடர்கிறாய்.

கடைசி சீட்டின் இருண்ட மூலையில் அமர்ந்தபடி விசிலடித்துக் கொண்டுள்ளது – காதல்.

0

28.

உறக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவனை நள்ளிரவில் எழுப்புகிறாய். கனவென எண்ணி மீளச் சாய்கையில் நிச்சயமாக இப்போது ஓர்  உலா போயே ஆக வேண்டும் என்கிறாய். மறுக்கிறேன். நச்சரிக்கிறாய்.

கிளம்பிச் செல்கிறோம். ‘தூங்காத இரவு எல்லாவற்றையும் அரைகுறையாய் காட்டுகிறது’ என்கிறாய். ம்ம்ம் என்றவாறு வண்டியை முடுக்குகிறேன். கொண்டாடியபடி பின் கழுத்தில் முத்தமிடுகிறாய். விழித்துக்கொள்கிறேன்.

தெருநாய் ஒன்றின் முதுகிலமர்ந்து குதூகலமாக சவாரி செய்தபடியுள்ளது – காதல்.

0

29.

கதை கேட்கிறாய். சொல்கிறேன். கதைபோல் இல்லையே என்கிறாய். தெரியவில்லையே என்கிறேன். அதெப்படி தெரியாமல் போகும் என்கிறாய். ஆகா! புரிந்துவிட்டது புரிந்துவிட்டது என்றவாறு வார்த்தைகளைத் தேர்ந்து எச்சரிக்கையுடன் பேசுகிறேன். கண்டறிந்துவிட்டாய்.

மிக நிதானமாக தன் செருப்பில் ஒட்டியுள்ள சாணத்தை சாலையோரக் கற்கள்மீது தேய்த்துக் கொண்டுள்ளது – காதல்.

30.

‘மௌனம் சம்மதத்தின் அறிகுறியா’ என்கிறாய். ‘அது கேள்வியைப் பொருத்தது’ என்கிறேன். ‘எனக்கு நேரடியான பதில் தேவை’ என்கிறாய். ‘எல்லாவற்றிற்கும் நேரடியாவே பதில் சொல்ல இயலுமா’ என்கிறேன். முறைக்கிறாய். நான் பார்த்துக்கொண்டிருக்கும் பணியைத் தொடர்கிறேன். தலையில் கொட்டிவிட்டு நகர்கிறாய்.

காம்புகள் ஆயப்பட்ட நல்ல கரும்பச்சை மிளகாயினை ஒரு கை அள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டுள்ளது – காதல்.

0

000

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்றும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *