“இந்தக்கடைய தானக்கா சொன்னாங்க”.
“ஆமாம் பரக்கத்து வா உள்ள போய் கேட்கலாம்” என்றாள் பரக்கத்தின் நெருங்கிய தோழியும் பக்கத்து வீட்டுக்காரியமான நிஷா.
“அண்ணே! காலர் வச்ச வெள்ளை கலர் ஜிப்பா இருக்குதாணே?”
“இருக்குமா…பெரியவங்களுக்கா இல்ல சின்னவங்களுக்கா?”
“சின்ன பையனுக்குதாணே எட்டாப்பு முடிச்சு ஒம்பதாப்பு போறான்” என்று சொல்லியவாறு சுற்றும் முற்றும் கடையை நோட்டமிட்டாள் நிஷா. ஒல்லியான தேகத்துடன் இருந்த பையனை சுட்டிக்காட்டி, ‘இந்த புள்ளைய விட உயரம் கொஞ்சம் கம்மியா இருப்பான். மத்தபடி உடம்பு சைஸ் இந்த புள்ள அளவுதான்ணே’ என்றதும் கடைக்காரர் “சரிமா காட்டன்-ல காட்டட்டுமா இல்ல மிக்ஸிங் மெட்டீரியல்ல காட்டடுமா” என்று கேட்ட உடனே “எது காசு கம்மியா இருக்குமோ அதை எடுத்து கொடுங்கண்ணே” என்று முந்திக்கொண்டு சொல்லிவிட்டாள் பரக்கத்.
கொண்டு வந்த ஆயிரம் ரூபாயில் இருநூறு வீதம் நானூறுக்கு இரண்டு ஜிப்பாக்கள் எடுத்துவிட்டு மீதத்தை சுருட்டி மணி பரிசுகள் வைத்துக் கொண்டே நிஷாவிடம் “இவன எப்படியாவது ஒரு ஆளாகிறனும்-க்கா” என்றாள்.
“கவலைப்படாத பரக்கத்து ஆண்டவன் துணையோட நல்லபடியா மவன ஒரு ஆளாக்கிறலாம்” என்றவளிடம், “அதுக்கு இல்லக்கா உங்களுக்கே நல்லா தெரியும் இந்த ஆளுபாட்டுக்கு வாழ்ந்தது போதும்னு வேற ஒருத்தியை புடிச்சுட்டு போயிட்டாரு. எங்க அம்மா அத்தாவும் வயசாகி ஏலாம போய் இருக்காங்க. எந்த வருமானமும் இல்லாமல் ஒருத்தியா என் பிள்ளைக்கும் அம்மா அத்தாவுக்கும் என்னால முடிஞ்ச அளவு சமையல் வேலைல வர்றத வச்சு பார்த்துகிட்டு இருக்கேன். பள்ளிவாசல்ல இருக்குற ஆசாத் பாய் தான் இந்த எடத்த பத்தி சொன்னாரு. ரெண்டு படிப்பும் இருக்காம்கா. பீஸ் கூட எதும் வாங்குறது இல்லையாம். ஆனா என்ன புள்ளைய தூர தொலைவுல விடுற மாதிரி இருக்குக்கா. புள்ளைக்கு ஒரே இடத்துல படிப்பும் ஓதுதலும் இருக்குற இந்த இடம் மட்டும் நல்லபடியா அமைஞ்சிருச்சுன்னா கொஞ்சம் பாரம் இறங்கும்-க்கா” என்று தலையில் போட்டிருந்த நைந்து போன ஊதா கலர் முக்காடின் ஒரு முனையை எடுத்து கண்களில் அழுத்திக் கொண்டாள்.
“ஏன்ளா இப்படியெல்லாம் பேசிக்கிட்டு கண்ண கசிக்கிட்டு இருக்க. விடு பரக்கத்து நாலு பேர் பார்க்க போறாங்க. மொதல்ல கண்ண தொடடி” என்றாள் உரிமையான குரலில் நிஷா.
சொந்த மாமி பையன்தான் என்றாலும் பரக்கத்திற்கும் அக்பர் வசிக்கும் ஊருக்குமான இடைவெளி பேருந்து பயணத்தில் ஒரு இரவு தூரம். பரக்கத் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே வயதுக்கு வந்துவிட்டாள்.
கேள்விப்பட்ட பரக்கத்தின் மாமி வழக்கம் போல் தனது கணவனிடம் “ஊரில் இருக்கும் அண்ணன் மவளுக்குத்தான் எம் மவன கல்யாணம் செஞ்சு கொடுப்பேன். சரிங்களா?” என்றதும் அவளது கணவர் “ஏன்ளா இப்படியே சொல்லிக்கிட்டு திரியுற. உனக்கு எத்தன தடவ சொன்னாலும் மண்டைக்கு ஏறாதா? அக்பர்கும் அந்தப் புள்ளைக்கும் பண்ணென்டு வயசு வித்தியாசம். அவன் வயசுக்கு ஏத்தமாதிரி இங்கேயே ஏதாவது ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடுச்சுடலாம்” என்றவரிடம் “நீங்க சும்மா இருங்க! உங்களாட்டமே எம்மவனும் நாதியத்து இருக்கணுமா? சொத்து சொகம் இல்லாம இருக்கணுமா? எனக்கு தெரியும் எம்மவனுக்கு எப்படிப்பட்ட பொண்ண கூட்டியாரனும்னு. நீங்க போய் ஊருக்கு போறதுக்கு ரயில்ல டிக்கெட்ட போடுங்க” என்றாள் காட்டமாக.
நினைத்ததை எப்படியும் நடத்திக் காட்ட வேண்டும் என்று பெரிதாக சிரமம் எடுக்காமலும் அலட்டிக் கொள்ளாமலும் மிக எளிமையாக அனைவரையும் சம்மதிக்க வைத்து செலவு மிச்சம் என்ற வகையிலே நிச்சயத்தை தனது ஊரிலேயே வைத்துக் கொண்டாள் அக்பரின் அம்மா. மொத்தமே பத்துபேர் சகிதம். “அண்ணே! எம் மருமகளுக்கு நீ போடுறது போடு. இதுதான், அதுதான்னு எதையும் நான் கேட்க மாட்டேன்” என்று சொன்னவுடனேயே பரக்கத்தின் தந்தைக்கு பகிர் என இருந்தது. தங்கையைப் பற்றி நன்றாகத் தெரிந்த அவருக்கு, மருமகன் தங்கையை போன்றில்லையே என்று மனதில் நினைத்துக் கொண்டு தங்கை சொன்ன எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். இருந்தாலும் எதற்காக இப்படி அடி போடுகிறாள் என்ற கலக்கமும் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
“உன்னோட வீட்டுக்கு பின்னாடி இருக்கிற அந்த எடத்த மட்டும் என் மவன் பேருக்கு கிரயம் பண்ணிக் கொடுத்துருண்ணே. நாளைக்கு பொண்டு புள்ளைகளுக்கு புடிமானமாக இருக்கும்ல” என்று சொன்னதும் தனது மனைவியின் முகத்தை கலங்கிய மனதுடன் பார்த்தார் பரக்கத்தின் தந்தை.
“இல்லம்மா உனக்கு நல்லா தெரியும்… அந்த எடம் என்னோட பேர்ல இல்ல. மச்சியோட இடம் தான். அத அவங்க அத்தா அவளுக்குனு கொடுத்தது” என்று பேசும் பொழுதே “நீ சும்மா இருண்ணே! மச்சியே அவக இடத்த நம்ம புள்ளைக்குக் கொடுத்தாலும் நீ கொடுக்க விட மாட்ட போல” என்ற ஒரே வார்த்தையில் தனது அண்ணியையும் மடக்கி விட்டாள் அக்பரின் அம்மா.
ஓடும் தண்ணீரில் இரை மேல் குறியாய் இருக்கும் நாரையைப் போல் திருமண வேலைகளில் காட்டிய மும்மரத்தை விட அந்த இடத்தை எழுதி வாங்குவதில் குறியாய் இருந்து அதில் வெற்றியும் பெற்றாள் அக்பரின் தாய். நிச்சயம் வைத்த நாற்பதாம் நாளிலேயே திருமணமும் நடந்தது. ஆனால் திருமணமான நான்காம் வாரத்திலிருந்து அக்பரின் அம்மா விளையாடிய சகுனி ஆட்டத்தில் பரக்கத் தனித் தீவாகிக் கொண்டே போனாள். ஒரு கட்டத்தில் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக்கள் பொறுக்க முடியாமல் “எதற்கு என்னை எப்ப பார்த்தாலும் கருவாச்சி… கருவாச்சின்னு… சொல்லிக்கிட்டே இருக்கீங்க மாமி. கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை பார்க்கவில்லையா? பார்க்கத்தானே செஞ்சீங்க… அப்ப எல்லாம் நான் கருப்பா இருக்கேனு உங்களுக்குத் தெரியலையா?” என்று கேட்டது தான் தாமதம்.
“ஏண்டி ஈனச்சிறுக்கி… என்னையவே எதிர்த்து பேசுறியாடி கருவாச்சி! என் புள்ள கலருக்கு கால் தூசி பெறுவியாடி நீயெல்லாம்! ஏதோ அந்த ஊர் தண்ணிக்கு நீ கருத்து போயிருக்க இங்க வந்தா கொஞ்சமாவது கலராய்ருவேன்னு நினைச்சு தாண்டி உன்னைய எம்மவனுக்கு கல்யாணம் பண்ணி கூட்டியாந்தேன்! இப்படி என்னையும் எம்புள்ளையையும் மேக்கப் போட்டு மினிக்கி ஏமாத்தி என் வூட்டுக்குள்ளேயே வந்துட்டு என்னையவே எதித்து பேசுறியாடி” என்று எண்ணெயில்லாமல் பொறிந்து தள்ளினாள் அக்பரின் அம்மா. நிறத்தை வைத்து விளையாடிய சதுரங்கத்தில் அக்பரும் சிக்கிக் கொள்ள, வெள்ளை நிற பெண்ணுடன் அடுத்த மணக் கோலத்திற்கு தயாரானான் பரக்கத்தின் வயிற்றில் இருக்கும் தன் சிசுவையும் மறந்து!
மகளின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு வாய்மையும், தெளிவின்மையும் இல்லாத பரக்கத்தின் தந்தை மனைவியின் இடமும், ஒரே மகளின் வாழ்க்கையும் கண்மூடித் திறப்பதற்குள் காணாமல் போனதை என்னி மருத்துவமனையின் சகவாசத்திற்குள் வந்துவிட்டார்.
“சோப்பு, சீப்பு, கண்ணாடி எல்லாம் வாங்குனது சரிதாண்டி, புள்ளைக்கு டிரஸ் வச்சு கொடுக்க பெட்டி ஏதாச்சும் இருக்குதாடி பரக்கத்து”
“பழைய டிரங் பெட்டி ஒன்னு இருக்குக்கா. ஆனா அத எப்படி கொடுத்துவிட முடியும்…” என்றவுடன்..
“சரி விடு, பேக் ஏதாவது வாங்கிக்கலாம்….”
“இல்லக்கா….” என்று இழுத்தவளிடம் ..
“பேசாமல் வா…”
“எவ்ளோக்கா வரும்….” என்று மீண்டும் கேட்க,
“கடைக்குப் போய் பார்த்துக்கலாம். ஆனா பேக் என்னோட பொறுப்பில் எடுத்துக்கிறேன்டி”
“எதுக்குக்கா உங்களுக்கு சிரமம்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம புள்ள நல்லபடியா ஓதுனா… அந்த நன்மை எனக்கும் கிடைக்கக் கூடாதுன்னு நீ நினைக்கிறியா” என்று சொல்லி அமைதிப்படுத்தி விட்டாள் நிஷா.
“அக்கா… எல்லாம் வாங்கியாச்சு. அவங்க கொடுத்த லிஸ்ட்ல இன்னும் பாய் மட்டும் தான் வாங்கணும். ஆனா, எனக்கு ஒரு யோசன….. பாய் மட்டும் மெட்ராஸ்க்கு போய் ஹாஸ்டல் பக்கத்தில் எங்கயாவது வாங்கிக்கலாமா. இங்கிருந்து அதை வேற சொமந்துகிட்டு போகணுமேக்கா”
“ஏன் பரக்கத்து… காசு இல்லைங்கிறதுனால இப்படி சொல்லுறியா?”
“அப்படிலாம் இல்லக்கா….”
“சரி விடு… ஆண்டவன் ஏதாவது வழி பண்ணுவான்” என்று வீடு வந்து சேர்ந்தார்கள்.
“பரக்கத்து… நானும் நாளைக்கு நைட்டு உன் கூட வரேன்டி….சரியா… டிக்கெட் உங்க அண்ணனே போட்டு தரேன்னு சொல்லிட்டாரு. நீ எதுக்கும் கவலப்படாம நல்லபடியா தூங்கு” என்று தன் வீட்டின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
விடுதி வாழ்கைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக தனது மகனுக்கும், அம்மா அத்தாவிற்கும் காட்டிவிட்டு அலைந்து திரிந்த அசதியில் பாயை விரித்து படுத்தாள் பரக்கத்.
உறக்கமில்லை. கணவன் இல்லாத இந்த பண்ணிரெண்டு வருடங்கள் மகனின் முகத்தைப் பார்ப்பது மட்டுமே பேரானந்தம். ஒரு வேளை மகனும் இல்லை என்றிருந்தால், என்றோ அவள் வாழ்வு மண்ணைத்தாண்டியிருக்கும். எவ்வளவு மன சஞ்சலங்களுக்கு இடையிலும் மகனது சிரிப்பும், கபடமற்ற அக்கறையும், அம்மா என்று அழைத்து பேசும் பேச்சும் அருமருந்தாக இருந்தன.
ஆனால் இத்தனை வருடம் தன்னைக் காத்துக் கொண்டிருந்த அந்த அருமருந்து தன் கையை விட்டுத் தூரமாகவும், ஏதோ தொலைதூரத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டு என்றாவது ஒருநாள் மட்டுமே பார்க்கக் கூடிய அந்த கொடுமையான நாட்களும் பரக்கத்தின் கண்களில் உறக்கத்தை கெடுத்தன. அம்மா, நன்னா, நன்னி என்ற அவனது உலகமும் மகன், பேரன் என்ற தங்களது உலகமும் வெவ்வேறாகப் பிரிந்து போகக்கூடிய புள்ளியை நினைத்து கண்ணின் ஓரங்களில் பொங்கிய கண்ணீர் ஒருக்களித்து படுத்திருந்த அவளின் மறு கண்ணையும் தாண்டி வழிந்து கொண்டிருந்தது.
தன் மீது காலைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்த தனது மகனின் நெற்றியில் முத்தமிட்டு தலையை கோதிய பொழுது தன்னையும் மீறி வெடித்து அழுதுவிட்டாள் பரக்கத். நள்ளிரவில் அழுவது அவளுக்கு புதிதல்ல என்றாலும் இன்று அழுததற்கான காரணம் முழுக்க முழுக்க புதியது தான்.
எழுந்து அமர்ந்தாள். அருகில் இருந்து சொம்பிலிருந்த நீரை குடித்துக் கொண்டே… வேறு வழியில்லாமல் உணவும் படிப்பும் இலவசமாக கிடைக்கக்கூடிய இடத்தில் தன்னுடைய மகன் இருப்பதுதான் இப்பொழுது இருக்க கூடிய பொருளாதார சூழ்நிலையில் சிறந்த வழி என்றும் இதன் மூலமாகவாவது தனது மகன் கொஞ்ச காலத்திற்கு நல்ல சாப்பாடு சாப்பிடுவான் என்று முன்னர் எடுத்த முடிவினையே மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.
”நன்னா, நன்னிக்கு சலாம் சொல்லிவிட்டு வாப்பா” என்று தனது மகனை அழைத்துக் கொண்டு நிஷாவுடன் பேருந்து நிலையத்துக்கு சென்றாள். பேருந்து சென்று கொண்டே இருக்கும் பொழுதே
“பரக்கத்து….இந்தா இத வச்சுக்கோ…”
”என்னக்கா இது…”
“உங்க அண்ணன் கொடுக்க சொன்னாருளா”
“ஏன்கா… அதான் நேத்து பேக் வாங்கி கொடுத்து இருக்கீங்க, இப்ப பஸ் டிக்கெட் வேற எடுத்துருக்க்கீங்க” என்றவளிடம்
“அவர்தான் கொடுக்கச் சொன்னாரு நான் எதுவும் சொல்லல இந்தா வச்சிக்கோ ன்னு” சொல்லி உள்ளங்கைக்குள் பணத்தை அழுத்தினாள் நிஷா.
என்னதான் நிஷா பேச்சுக் கொடுத்தாலும் பேருந்தில் ஏறியதிலிருந்து நினைப்பு முழுக்க மகனை பிரிவதைப் பற்றியே இருந்தது. ஒருபுறம் அவனது மகன் நன்றாக தூங்க மறுபுறம் நிஷாவும் உறங்க ஆரம்பித்தாள். ஆனால் பரக்கத்திற்கு மட்டும் அன்றைய இரவு பயணம் உறக்கமின்றி கலக்கத்துடனே அமைந்தது.
“லிஸ்டில் சொன்ன எல்லாத்தையும் கொண்டு வந்து இருக்கீங்களா?”
“இல்ல சார்… பாய் மட்டும் வாங்கணும்.”
“ஏம்மா அதான் லிஸ்ட் அனுப்பி இருந்தோம்ல. பின்ன ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க” என்று காட்டமாக சொன்னார் ஹாஸ்டல் வார்டன்.
“புள்ளைய கூட்டிட்டு போயி வாங்கி கொடுத்துடறேன் சார்” என்றாள் பரக்கத்
“சரி.. சரி… பக்கத்திலேயே பாய் கடை இருக்கு சீக்கிரமா வாங்கி கொடுத்து பிள்ளையை விட்டுட்டு போங்க. இப்ப இந்த ஃபார்ம்ல மட்டும் சைன் போட்டுருங்க” என்று சொன்ன வார்டனிடம் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு பாய் வாங்க சென்றார்கள்.
சீக்கிரம் கொண்டு வந்து விடச் சொன்னதால் பாயை வாங்கிக் கொண்டு மூவரும் காலை உணவு ஏதும் உண்ணாமல் ஹாஸ்டலை நோக்கி நடந்தார்கள்.
“அத்தா…அழகு… கவனமாக இருந்துக்கோப்பா. டெய்லி போன் பண்ணு அம்மாவுக்கு. நானும் போன் பண்ணி பேசுறேன் கண்ணு.. சரியா ராசா..”
“சரிமா நான் பண்றேன். நீயும் கவலைப்படாதம்மா” என்ற வார்த்தையில் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள்.
விடுதியின் வாசலில் வந்து அங்கிருந்த செக்யூரிட்டியிடம்
“அத்தா…ஒத்த மவன்-த்தா இதுவரைக்கும் தனியா எங்கையும் விட்டதில்லத்தா. கொஞ்சம் பார்த்துக்கோங்க”
“அதெல்லாம் நீங்க ஏம்மா கவலப்படுறீங்க. நல்லபடியா போய்ட்டு வாங்க. இங்க இருக்கிற பசங்களோட பழகும் போது அவனே நல்லபடியா செட் ஆயிடுவான். போயிட்டு வாமா நல்லபடியா” என்றதும், நிஷாவிடம்
“அக்கா…. எம் மவனயும் எண்ணயும் நிக்க வச்சு உன் போன்ல ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்கா” என்று போட்டோ எடுத்துக் கொண்டாள்.
மகனின் தலையில் கை வைத்து நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு…. ’சரி தங்கம் நீ பார்த்து போயிட்டு வா’ என்று அனுப்பி வைத்து, மகன் செல்லும் திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தவள் மகன் விடுதிக்குள் நுழைந்ததும் பின்புறமாக இருந்த தூணில் சாய்த்து அப்படியே உட்கார்ந்து முக்காடால் முகத்தை மூடி அழுது தவித்தாள்.
“நல்லா அழுதுகோடி…. இதான் நீ அழுகிற கடைசி அழுகையா இருக்கணும். இந்த அழுகையோட உன்னோட எல்லா கஷ்டங்களும் தீரனும். அந்த ஆண்டவன் உன் வாழ்க்கையில இதுக்கப்புறம் நல்ல வெளிச்சத்தை ஏற்படுத்தணும்…. இதோ பாரு பரக்கத்து….சும்மா கவலைப்பட்டு அழுகிறதுனால இப்ப என்ன ஆகப்போகுது? நீ நினைச்ச மாதிரி உன் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க. ஆண்டவன் கிட்ட துஆ செஞ்சுட்டு கிளம்புடி”. நிஷா சொன்ன வார்த்தைகள் பரக்கத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாகவ அமைந்தன. தன் மகனுடைய எதிர்காலத்தின் சிறந்த பக்கங்கள் இன்று முதல் ஆரம்பமாகின்றன என்பதனை உறுதியாக நம்பியவளாக அங்கிருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டாள்.
000
பார்த்திபனூர் ஷா.காதர் கனி
பெயர் ஷா.காதர் கனி. சொந்த ஊர் இராமநாதபுர மாவட்டம் பார்த்திபனூர். படிப்பு M.Sc.,M.Ed., தற்பொழுது சென்னை அடையாறில் இயங்கி வரும் அரபிக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்