அன்றாடங்களில் தான் மனிதனுடைய வாழ்வு இயங்கிக் கொண்டிருக்கிறது. சரி, அன்றாடம் என்பது எது? சற்று நுட்பமான வார்த்தையாக தோன்றுகிறது. ஒரு மனிதன் தனக்கென எல்லாவற்றையும் நிச்சயம் செய்துகொண்டு வாழ முடியாது விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சமூகத்தின் ஏற்புகளுக்கும் மறுப்புகளுக்கும் இடையே அன்றைய நாளில் அன்றைய பொழுதுகளில் அந்த நொடியில் சூழலில் ஏற்படுகிற நன்மை தீமை, இன்பம் துன்பம் என தவிர்க்க முடியாதவற்றோடு சலித்துக் கொண்டு வாழ்கிற வாழ்வு என தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வும் சுவாரசியமானதாகவே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அது கதையாடலாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாறி மாறி வேறுவேறு பரிமாணங்கள் கொண்டதாக இருக்கிறது.
கண்மணிராசா-வின ‘கூத்து‘ என்கிற பத்து சிறுகதைகள் கொண்ட நூல் தமிழ்வெளி வெளியீடாக வந்திருக்கிறது. இது இவருடைய முதல் சிறுகதை தொகுப்பு.
கரிசல் நிலத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்திற்கு படைப்புகளை வழங்கியிருக்கின்றனர். கண்மணிராசாவின் எழுத்துகளை கரிசல் நில எழுத்து என வகைப்படுத்த வேண்டுமா என கேள்வி எழுகிறது. கதை என்பதே ஏதோவொரு நிலப்பரப்பில் வாழ்கிற மக்களின் கதை தானே? அதற்கு வகைப்பாடுகள் தேவையா? ஆய்வுப் புல வட்டாரத்திற்கு அவை தேவைப்படலாம். தினமும் தான் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய கதையை தனக்கு உரிய வட்டார மொழியில் அவர்களது வாழ்க்கையை எழுத்தில் உயிரோட்டமாக நடமாட வைக்கின்றனர்.
இத்தொகுப்பில் முதல் கதையாக ‘பெத்தம்மா வீடு’ இடம்பெறுகிறது. பல தலைமுறைகளுக்கு முன்பு சாதிய கட்டுகளை மீறி மாற்று சாதி இளைஞனை விரும்பியதற்காக ‘குல கௌரவம்’ பாதுகாக்கப்படுதல் என்பதன் பேரில் பெத்தம்மா என்ற பெண்ணை குழிக்குள் தள்ளி எரித்துக் கொலை செய்துவிடுகின்றனர். பின்னர் அந்த பெண் பழிவாங்கல், அல்லது ஏதேனும் நோய்களை பரப்புவாள் என்ற பயத்தின் காரணமாக ‘குல தெய்வமாக’ வழிபடு கடவுளாக மாற்றப்பட்ட கதைகள் தமிழ் நிலத்தில் பல இடங்களில் இதுபோன்று எல்லா வட்டார வழக்குகளிலும் நாட்டார் கதைகள், பாடல்கள், விடுகதைகளில் பதிவாகியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு கதையை தன்னுடைய நிலப்பகுதியில் இருந்து சிறுகதை வடிவத்திற்குள் கண்மணிராசா கொண்டுவந்திருக்கிறார்.
இரண்டாவது கதையாக ‘லாட சன்னியாசியின் டைரி’. இக்கதையின் வடிவம் ஒரு டைரியில் இருந்து உருவாகிறது. கண்மாய் அருகே அமர்ந்து பழைய டைரி ஒன்றை ஒரு கதாபாத்திரம் வாசிக்கிறது. அந்த டைரியில் எழுதப்பட்டவை இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது. பள்ளிப் பருவத்தில் தான் படிக்க விரும்பிய சயின்ஸ் குரூப் வகுப்பில் சேர்வதற்கு நூற்றி ஐம்பது ரூபாய் இல்லாததால் தான் விரும்பாத ஆர்ட்ஸ் குரூப்பில் தன்னை அப்பா சேர்த்ததை எண்ணி ஒரு கதாபாத்திரம் ஒரு டைரியில் பதிவு செய்கிறது.
மேலும் அந்த டைரியை படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. அந்த டைரியை எழுதியவர் ஒரு இலக்கிய பத்திரிகையை விற்று அதிலிருந்து தனக்கான வருமானத்தை எதிர்பார்த்து வாழ்ந்திருக்கிறார். இலக்கியமும், அதன் மீதான பற்றும் ஒருவனை வறுமையில் வாட்டியதை கதை பதிவுசெய்து நகர்கிறது. இந்த டைரியை படிப்பவர் லாட சன்னியாசி யார் என விசாரிக்கிறான். ஆனால் டைரியில் லாட சன்னியாசியின் வறுமையான வாழ்க்கை வரலாறு மட்டுமே ஒரு சித்திரம் போல காட்சி தெரிகிறது. ஆனால் லாட சன்னியாசி யார் என விடை கிடைக்காமலே இருக்கிறது. சில கதாபாத்திரங்களின் இறுதி முடிவு என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் சுவாரசியம் போலும்?.
இத்தொகுப்பில் ‘அசல்’ என ஒரு கதை எழுதப்பட்டுள்ளது. மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் செய்து ஒவ்வொரு ஊராகவும், தெருவாகவும் பொருட்களை தவணை முறைக்கு விற்பனை செய்யும் இருளப்பனின் கதையைப் பதிவுசெய்கிறது. தொண்ணூறுகளின் இறுதி வரையிலும் தவணை முறையில் பொருட்களை வியாபாரம் செய்கிறவர்களை பார்த்திருக்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என தெரிந்தே வியாபாரத்தில் “ரிஸ்க்” எடுப்பார்கள். பொருளை தவணை முறைக்கு விற்றபின்னர் அதை வசூலிப்பதற்குள் அவர்களுக்கு பெரும்பாடாகவே இருக்கும். அந்நிலையில் சந்தைக்கு ஏற்ப வியாரத்தை மாற்றிக் கொண்டு வாழ்வை சமாளிப்பதற்கு துணிவு வேண்டும்.
இதற்கிடையே மாறிவரும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் சந்தைப் போட்டியில் சில்லரை வியாபாரிகள் அழித்தொழிக்கபடும் நிலை இன்று இந்திய பொருளாதாரத்தை சில நிறுவனங்கள் ஏகபோகமாக்கி கைப்பற்றி இருப்பதையும் நாம் பார்க்கிறோம். சில்லரை வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் மனிதர்களின் வாழ்க்கை வியாபாரம் நலிந்து வறுமைநிலைக்கு செல்லுதல், இறுதியில் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தப்படுதல் என இக்கதை பெருநிறுவனங்களின் சர்வாதிகாரத்தையும், சிறு தொழில்களை எல்லாம் அழித்தொழிப்பு செய்வதையும் மையப்படுத்தி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
இளம் வயதில் கூத்து நடத்தும் குழுவோடு இணைந்து தன்னை ஒரு கூத்துக்காரனாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு பிறகு அது நிறைவேறாமல் போன சிவகாமிநாதன் பற்றி சுவாரசியமாக கதைசொல்லும் முறையும், அவனது குடும்பம் சிதைந்து போவதையும் சொல்கிறது ‘கூத்து’ எனும் கதை.
‘தங்கா” என்கிற கதை அளவில் சிறியது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஒரு தீ விபத்தில் இறந்துபோக அதற்கு காரணம் அந்த பெண்ணின் ராசிதான் என்று எல்லோராலும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறாள் தங்கா. சித்திரை எப்ப வரும் என்று கேட்க அவள் அழுகிறாள். ஏனெனில் சித்திரை மாதம் தான் அவளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் தங்கா அவ்வூரை விட்டகன்று புத்தி சுவாதீனம் தவறிய நிலையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பூக்கடை வைத்திருக்கும் கிழவியால் பராமரிக்கப்படுவதையும், அவளுடைய துயர வாழ்வும் இக்கதையில் எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு கதை கிராமத்தில் சாமியாடியாக ஊரில் பெரிய குடும்பத்தை நம்பி தனது வாழ்க்கைச் சங்கிலி நடத்திக் கொண்டிருக்கிறார். தனது முதுமை காரணமாகவும், தனது மகன் இந்த தொழிலில் ஆர்வம் காட்டாமல் தான் விரும்பிய பெண்ணுடன் நகரத்திற்கு வேலைதேடி சென்றதற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. நவீன உலகில் ஆன்மீகத்தின் வடிவம் எவ்வாறு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல மாறியுள்ளதைப் பற்றியும், ஒரு சாமியார் அம்மாவாசை, பௌர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் நடனமாடி அனைவரையும் தனது பக்தர்களாக மாற்றிக் கொள்வதும் அதற்கு சமூகத்தில் எந்த மக்கள் வலைவீசப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஒருவித நவீன ஆன்மீக போதையின் தாக்கம் பற்றியும் “வலிய கிழவன்” என்ற சிறுகதையில் எழுதப்பட்டுள்ளது.
இன்றைய ஆன்மீகம் என்ன வடிவமாக மாறியிருக்கிறது என்பதையும், இறுதியில் சாமியாடியான சங்கிலி தனது சாமியாடி தொழிலை விட்டுவிட்டு நவீன ஆன்மீக மையமாக மாறிய இடத்தின் காவலாளியாக சேர்வதுடன் கதை முடிகிறது. ஆன்மீகம் நாகரீகம் என்ற போர்வையில் மேல்தட்டு மக்களிடம் என்ன பார்வையோடு சென்றடைந்திருப்பதையும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதைப் பற்றி இக்கதையின் நகர்வு அமைந்திருக்கிறது.
திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த சுப்பம்மா பின்னாளில் தனக்கு பிடித்தவனோடு வேறொரு ஊருக்குச் சென்றுவிடுகிறாள். தன்னுடைய நண்பனின் அக்காவுடன் சிறுவயதில் ஒவ்வொரு நாளும் பழகிய நாட்களையும், சுப்பம்மா சொல்கிற கதைகளையும், வாழ்வின் எல்லா தருணங்களையும் பழமொழிகளுடன் கழிக்கும் சுப்பம்மாவை அவனுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஊரைவிட்டு சென்ற சுப்பம்மாவை ஏதோவொரு தருணத்தில் அடையாளம் கண்டு கொள்வதன் வழி தன்னுடைய சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்த்துக் கொள்வதாக ‘லெட்டு சுப்பம்மா’ கதை அமைந்திருக்கிறது.
“தங்கமகள்”, “லட்சுமி இல்லம்” இவை இரண்டு சிறுகதைகளுமே உறவுகள் மீதான அன்பும், அண்டை வீட்டார் மீதுள்ள நேசம், தனி மனிதனுக்கு இருக்கக் கூடிய சொந்தவீடு எனும் கனவு ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டவை. வீட்டில் ஒரு பொட்டு தங்கம் இருக்க வேண்டும். அதுதான் ஜஸ்வரியம் என வறிய நிலையில் உள்ள குடும்ப பெண்களின் கனவுகளில் ஒன்றாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறது. ‘லட்சுமி இல்லம்’ வாடகை வீட்டிற்கு பெயர் சூட்டி அதை தன்னுடைய வாழ்நாள் கனவு வீடாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து அது நிறைவேறாமல் போவதையும், பின்னர் இடித்துத் தள்ளப்பட்ட அவ்வீட்டிற்கு அங்கு வாழ்ந்த கதைமாந்தர் அந்த வீட்டிற்கும் அவர்களுக்கும் இருந்த நினைவுகளை கடிதம் எழுதி தனது ஆற்றாமையை வெளிப்படுதிக் கொள்வதாக அமைந்திருக்கிறது.
‘மார்கழித் திங்கள்‘ சிறுகதை ஆலைத் தொழிலாளியின் நொடித்துப் போன குடும்பத்தின் சிறுமி கோவில் வாசலில் துளசிமாலை வியாபாரம் செய்வதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இச்சிறுகதையில் நாச்சியார் எனும் பள்ளிச் சிறுமியின் கதை ஆண்டாளின் கதையோடு சில மாற்றங்களோடு உருவகப்படுத்த முயன்றுள்ளது எனலாம்.
இத்தொகுப்பில் பெத்தம்மா, அசல் கதையில் வருகிற இருளப்பன் அவன் மனைவி ரெபேக்காள், லெட்டு சுப்பம்மா, நாச்சியா, போன்ற கதை மாந்தர்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து போகிறவர்களாக இருக்கிறார்கள். கரிசல் மண் வாசனை வீசினாலும் கதை என்பது எல்லா வித வாசனை கொண்ட மண்ணோடும் ஊடுபாவாக கதையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்பதைப் போல இத்தொகுப்பில் உள்ள கதைகளும் மாந்தர்களும் ஒரு கதைவெளியில் தோன்றி மற்றொரு கதைவெளியில் வேறொரு கதாபாத்திரங்களாக உலவுகின்றனர்.
000
இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.