மாதம் ஒரு மலேசிய புத்தகம் – 2

கவிஞர் பூங்குழலி வீரனின்அகப் பறவை

கவிஞர் அறிமுகம்

பூங்குழலி வீரன், மலேசியாவில் இயங்கிவரும் பல்தரப்பட்ட அரசு சாரா நிறுவனங்களில் மாணவர்களை மையப்படுத்தும் கல்விசார் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் செயல்பாட்டாளர்.
மலேசியா, பேராக் மாநிலத்திலுள்ள செலாமாவில் பிறந்த இவர், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் மலேசிய வானொலி செய்திப் பிரிவின் பகுதிநேர தமிழ்ச்செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர்.

      இதுவரையில் உயிர் வேட்டை (2006), பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் (2013), நிகழ்தலும் நிமித்தமும் (2013) என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

‘அகப் பறவை’ கவிதைத் தொகுப்பிற்கு செல்வதற்கு முன்பாக இன்றைய மலேசியச் சூழலில் எழுதப்படும் கவிதைகளை அல்லது கவிதைகள் எழுத வைக்கின்றோம் என்கிற மிகைவிளம்பர நடவடிக்கைகள் குறித்து பேச வேண்டும்.

அதை தவிர்க்க விரும்புகிறவர்கள் நேராக அகப்பறவைமனதிற்கு நெருக்கமாகஎன்ற உபதலைப்பிற்கு சென்றுவிடலாம். மாறாக சூழலை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள் ஏனெனில் உங்கள் பார்வையும் இதில் எங்களுக்கு மிகவும் முக்கியம். ரொம்பவும் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

மலேசியச்சூழலில் கவிதைக்கென நீண்ட வரலாறு இல்லாமல் இல்லை. பலர் அதுபற்றி எழுதியுள்ளார்கள். ‘மரபுக்கவிதை’ ‘புதுக்கவிதை ‘ போராட்டங்களில் தொடர்ந்து ‘கவிதை’ ‘நவீன கவிதை’ ‘பின்நவீன கவிதை’ ‘கவிதை என்று சொன்னால் மட்டும் போதாதா?’ என்கிற பல்வேறு கோட்பாடு கொள்கைகளுக்குள் சச்சரவுகள் இருந்த வண்ணமே இருக்கின்றன. (இதில் இன்னும் எதிர்க்கவிதைகளைச் சேர்க்கவில்லை)

வார மாத இதழ்களுக்கு அனுப்பி, பிரசுரிக்கப்படும் கவிதைகளில் இருந்தும் இணைய பக்கங்களில்  பிரசுரிக்கப்படும் கவிதைகளில் இருந்தும் தன் சொந்த சமூக ஊடகங்களில் பகிரப்படும் கவிதைகளில் இருந்தும் ஒரு குழுவின் கீழ் இயங்குபவர்கள் எழுதும் கவிதைகளில் இருந்தும் சமீபத்தில் தமிழக கவிஞர்கள் ‘தேர்ந்தெடுத்த கவிதைகள்’ என புகைப்படங்களாக சுற்றும் கவிதைகள் என்பதற்குமான வித்தியாசங்களையும் அது கொண்டிருக்கும் முரண்களையும் நாம் கவனித்தேயாக வேண்டும்.  அதில் நுண்ணரசியல் மட்டுமல்ல சூழ்ச்சியுமே இருப்பதாக பலரையும் கவலைப்பட வைக்கிறது.

அதிலிருந்து ஒன்றை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். மலேசியாவில் இலக்கியத்தை வளர்க்கிறோம் என்பவர்கள் தமிழகத்திலோ அல்லது பெயரில் வசீகரத்தைக் கொடுக்கும் வெள்ளைக்கார வெளிநாட்டில் இருந்தோ ஒரு படைப்பாளியை அழைக்கிறார்கள். உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனையும் இணைக்கும் இணையம் இதற்கு உதவுகிறது.

தனது பெயரை பரவலாக்க, தானே குருபீடத்தை உருவாக்கி அதில் அமர செய்யப்படும் முன்னேற்பாடுகளில் இதனையும் நாம் ஒன்றாக பார்த்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதாவது சிறுகதைகள் எழுதாதவர்கள் உங்களுக்கு சிறுகதை ஆசிரியராகவும் வழிகாட்டியாகும் தெரிவார்கள். குறுங்கதைகள் ஏன் எழுதப்படுகின்றன என்ற அடிப்படை தெரியாமல் உங்களுக்கு குறுங்கதை எழுதும் பட்டறைகள் நடத்துவார்கள். இதற்கு மேலாக கவிதையை எழுதவோ வாசிக்கவோ அதனை புரிந்து கொள்ளவோ உரையாடவோ முடியாதவர்களோ உங்களின் கவிதை உலகுக்கு வழிகாட்டியாக உங்கள் எழுத்துகளை மேலும் மோசமாக்கும் எல்லா நடவடிக்கைகளையும் செய்வார்கள். அடிக்கடி நீங்கள் எழுதவில்லையா என்கிற அதிகார தொனியில் அப்படி அவர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என நீங்களும் கேட்க மாட்டீர்கள்.

தனது பாதுகாப்பு கவசமாக நன்கு அறியப்பட்ட அல்லது பிரபலமான எழுத்தாளர்களின் நட்பையும் சிலர் பயன்படுத்தி கொள்வார்கள்.  வெளிநாட்டில் இருந்து இங்கு மலேசிய படைப்புகளைப் பற்றியோ கவிதைகளைப் பற்றியோ பேசுவதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால்; படைப்பாளர்களே தயவு செய்து உங்கள் தேர்வின் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள். அதெப்படி உங்கள் நாட்டில் நீங்கள் எதற்கு எதிராக இருக்கிறீர்களோ அதையே பிற நாட்டில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

உங்கள் நாட்டில் நீங்கள் மோசம் என்று ஒதுக்கிய படைப்புகளைவிடவும் சுமாரான படைப்புகளை பிற நாடுகளில் நீங்களே சிறந்த கவிதைகளாக தேர்வு செய்கிறீர்கள். சரி நீங்கள் அவற்றைச்  சிறந்ததாக தேர்வு செய்யவில்லைதான் ஆனால் தொடர்ந்து உங்களை வாசிக்கும் உங்கள் நடவடிக்கைகளை கவனிக்கும் உங்களின் உண்மையான வாசகர்கள் இந்த நாட்டிலும் இருக்கிறார்கள்தானே அவர்களை எதன் பொருட்டு நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்கிற விளம்பரம் வெறும் விளம்பரமாகத்தான் இருக்கிறதா. அதற்கான தரம் இருக்க வேண்டாமா.?

அல்லது உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் உங்கள் எழுத்துகளை நேசிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ‘உங்களால் சிறந்த படைப்புகளைக் கவிதைகளை எழுத முடியுமே தவிர் அதனை தேர்ந்தெடுக்க முடியாது.…’ என்பதையா?

குறைந்தபட்சம் நீங்கள் தேர்வு செய்த படைப்புகளை எதற்காத தேர்வு செய்தீர்கள் என்கிற விமர்சனத்தையாவது (ஓ மன்னிக்க மலேசியச் சூழலில் விமர்சனம் என்றாலே தற்கொலைக்கு தூண்டும் ஒன்றாக பார்க்கும் புதுப்பார்வையைச் சிலர் வளர்க்க ஆரம்பித்து தன் கட்சியில் ஆட்களை சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.) செய்யலாம்தானே. உங்கள் பொயரை பயன்படுத்தி நீங்கள் தேர்வு செய்ததாய்ச் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் படைப்புகளுக்கு அதன் விமர்சனமும் வந்தால்தானே  பயன்படுத்திய உங்கள் பெயருக்கு நியாயம் செய்ததாய் அது அமையும்.

அதில்லாத போது; உங்கள் வாசகர்களை நீங்களும்தானே சேர்ந்து ஏமாற்றுகிறீர்கள். 

நண்பர்களே இலக்கியம் சார்ந்து நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் பாராட்டுக்குரியதுதான் மாற்றுக்கருத்து இல்லை; அதே சமயத்தில் நீங்களுமே உங்கள் முயற்சிகளிலும் முன்னெடுப்புகளிலும்  இலக்கியத்தை முன் வைத்து செயல்படுங்கள். இல்லையெனில் வரலாற்றில் உங்கள் பெயர் வேறுமாதிரி பதிவாகிவிடும்.

அகப் பறவைமனதிற்கு நெருக்கமாக

பூங்குழலி வீரனின் கவிதைகளில் ஓர் ஒற்றைக்குரல் இருப்பதாய் நான் உணர்கிறேன். அக்குரல் நம்முள்ளிருந்தும் பேசும் நமக்காகவும் பேசும். பிறர்க்காகவும் நம்மிடம் பேசும். இப்படி பலரின் குரலாக அதிருந்தாலும் முடிவில் ஓர் ஒற்றைக்குரலாய் அது மாறி நிற்கும்.  அஃது அதனை வாசிக்கும் வாசகனின் குரலாகத்தான் இருக்கும். வாசகனின் மனநிலைக்கு ஏற்ற குரலாய் அக்கவிதைகள் தன்னை மாற்றிக்கொள்கின்றன. மறுவாசிப்பையும் எதிர்ப்பார்க்கின்றன.

மலேசிய இலக்கியச் சூழலில் கவிதைகளுக்கான வரலாற்றில் எப்போதும் இருக்கக்கூடிய பெயர்களின் கவிஞர் பூங்குழலி வீரனின் பெயருக்கு தனியிடம் உண்டு.

ஆண் பெண்ணென்ற அடையாளத்தைக் கடந்து; கவிஞராகவே அவர் அவரின் கவிதைகளில் வெளிப்படுகின்றார். குழந்தைகள் பற்றிய கவிதைகளின் நம்மோடு அவரும் குழந்தையென விளையாட தொடங்குகிறார். சமூகத்தின் மீதான கோவமும் தன் சமூகத்தின் இயலாமையையுமே அவர் எழுத தவறுவதில்லை.

அகப் பறவை கவிதைத் தொகுப்பு மொத்தம் 70 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. எந்தக் கவிதைக்கும் தலைப்பில்லை.

கவிதை எண் 68இல் இப்படியொரு கவிதையைக் கொடுத்திருக்கிறார்.

புறாவுக்கு உள்ளது போன்றதான சிறகுகளை

உனக்குத் தந்தது யார்

என்றான் நண்பன்

என் கவிதை என்றேன்

சொற்களில் ஏறிக் குதித்து

வெளியேறிவிட்டான்

சட்டென

இக்கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்கின்றேன். இரு வெவ்வேறு மனநிலை மனிதர்களின் உரையாடலாக தோன்றும் இக்கவிதை யார் அந்த மனிதர்கள் என்பதில்தான் இரகசியத்தை மறைத்துள்ளது. கேள்வி கேட்கும் நண்பர் யார்; அவர் கேள்விக்கு பதில் கொடுப்பது யார்? கேள்வி கேட்ட மனிதர் தனக்கு கிடைத்த பதில் மூலமாக எப்படி சொற்களில் ஏறிக் குதிக்க முடிகிறது. சிறகு முளைத்தவரால் கூட முடியாததை இந்த நண்பர் எப்படி செய்கிறார் அல்லது சாதிக்கிறார் என்பதுதான் நீண்ட உரையாடலுக்கு நம்மை அழைக்கின்றது. சிறகு முளைத்த மனிதரை படைப்பாளியாகவும் (கவிஞர்) கேள்வி கேட்கும் மனிதரை படிப்பவராகவும் (வாசகர்) உருவகபடுத்துவதன் வழி வாசகர் ஒரு படைப்பை எப்படி  அணுகுகிறார் படைப்பின் மீதான வாசகர்களின் சுதந்திரம் என்ன செய்கிறது என நாம் புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஒரு பதிலா என ஏளனமாக சிரித்தால் அங்கேயே நாம் நிற்கும்படி ஆகிறது. பதிலை மேலும் புரிந்து கொண்டால் கவிஞரைக் காட்டிலும் நம்மால் அக்கவிதையில் அதிக தூரம் பயணிக்க முடிகிறது. அந்தச் சுதந்திரம்தான் இக்கவிதைத் தொகுப்பை குறித்து பேசவும் எழுதவும் வைக்கிறது. 

     நாம் ஏன் வாழ்கிறோம். நம் வாழ்க்கை எங்கேதான் போகிறது என்கிற கேள்வியை கேட்காத படைப்பும் இல்லை படைப்பாளிகளும் இல்லை. இந்தக் கேள்வியை ஆதாரமாகக் கொண்ட பல படைப்புகளை நாம் வாசித்திருப்போம். இத்தகைய படைப்புகளை வாசிக்கையில் அதற்கான திருப்பத்தை நாம் அறிந்து கொள்ளும் போது நமக்கு ஏற்படும் மௌனத்தை தனது 70வது கவிதையில் கவிஞர் இப்படி சொல்கிறார்.   

கூடென்பது எதற்கு என்றேன்

உண்டு உயிர்க்க பாதுகாக்க

பிறகு வாழ்வது எங்கே என்றேன்

வேட்டையாடுதலை நிகழ்த்துக்கொண்ட்சிருந்தவன்

திரும்பிப் பார்த்தான்

வேட்டைக்குத் தப்பிய மான்

தன் வீடு திரும்பிக்கொண்டிருந்தது

உண்பதும் உயிர் வாழ்வதும் பாதுகாப்பாக இருப்பதும் வாழ்தலில் சேராதா என்கிற கேள்விதான் நம்மை கைநடுங்க வைக்கிறது. அப்படியெனின் வாழ்வது என்பது என்ன? நாம் வாழ்கிறோமா என்ன? என்கிற கேள்விக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்.  இதனை நாம் யோசிக்கும் நேரத்தில் எந்தெந்த மான்கள் தப்பி தன் வீடு திரும்புமோ தெரியவில்லை.

குழந்தைகளைப் பாடாத கவிஞர்கள் இருக்கிறார்களா. இது குழந்தைகளைப் பாடுவதா இல்லை கவிஞர் தனக்குள் இருக்கும் குழந்தையைத் தேடுவதா. கவிஞரின் 63வது கவிதை இப்படியாக வருகிறது.

குழந்தைக்கு அளவில்லாமல்போன

துணிகளை வேறு குழந்தை

அணிந்து வரும்போதும்

தமது குழந்தையாகவே தெரிகிறது

அவரவர் கண்களுக்கு

இக்கவிதையில் ‘அணிந்து வரும்போது’ என சொல்லாமல் ‘அணிந்து வரும்போதும்’ என சொல்வதில்தான் கவிஞர் வார்த்தை தேர்வில் கவிதையைக் காப்பாற்றிவிடுகிறார். முதல் வார்த்தை நிகழ்காலத்தோடு நின்றுவிடக்கூடியது. ஆனால் இரண்டாவது வார்த்தை முக்காலத்தையும் நம் கண்முன் நிறுத்திவிடுகிறது.

பயணம் என்பது மனதின் பாரத்தை பாதியாக்கி பின்னர் இல்லாமலாக்கும் வழிமுறை கொண்டது. எந்தத் துயரத்தையும்,  பயணத்தின் மூலம் கடந்துவிடலாம் என நினைப்பவர்கள் நிறைய. அதனால்தான் என்னவோ துயரம் தாங்காத மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தையும் பழகிய மனிதர்களையும் விட்டுபிரிய மனமின்றி ஏதோ ஒரு  நம்பிக்கையில் எங்கேயோ போகிறார்கள். விரைவில் திரும்புவோம் என்றா? இல்லை இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்றா? அப்படியான ஒருவனின் பயணத்தை 62வது கவிதையில் இப்படி சொல்கிறார்.

பெரு மரங்கள் சிறு மரங்களாய்

ஒரு புள்ளி என மறைவதும்

மலைகள் குன்றெனக் கரைந்து

பின் மறைவதும்

அழகாய் நிகழ்கின்றன ஒவ்வொரு பயணத்திலும்.

இப்பயணத்தில் மறைந்து போவது மலைகள் மட்டுமல்ல மனிதனின் துயரமும்தானே.

நேற்றைப் போலவே இன்றும் முற்றுப் பெறாத

உரையாடலோடு திரும்பியிருந்தேன்

திரும்பும் வழியெங்கும்

சிதறியிருந்தன சொற்கள்

நாம் பேச நினைத்து பேசாமல் விட்ட வார்த்தைகள் எத்துணை இம்சைகள் கொடுப்பவை. அதிலும் இவர் இன்றைய தினத்தில் மட்டுமல்ல நேற்றும் கூடத்தால் பேச நினைத்து பேசாமல் முற்றுப்புள்ளிகள் இட இயலாத சொற்களால் இம்சைக்கு ஆளாகின்றார்.  ஆனால்; இந்த சங்கடம் இன்று நேற்றல்ல அதற்கு முன்னும் பல முறை நடந்ததாக நமக்கு திக்கென்று இருக்கிறது.

கவிஞர் பூங்குழலியின் கவிதைகளில் பால்ய நினைவுகளுக்கு எப்போதுமே தனியிடமுண்டு. அவரது 14வது கவிதை;

மீண்டும் மீண்டும்

தோன்றி மறையும் கனவுகளுக்குள்

சில மீன் குஞ்சுகளையும்

நீலம் போட்ட வெள்ளைப் பூனைக்குட்டிகளையும்

சிறகு முளைக்காத சிட்டுக்குருவிகளையும்

நீந்தவிட்டும்

ஓடவிட்டும்

பறக்கவிட்டும்

போகிறது என் பால்யம்

பால்யம் மட்டுமல்ல; நினைவுகளை மீளுருவாக்கம் செய்வதிலும் கவிஞர் தனித்தே நிற்கிறார். தான் இழந்துவிட்டவற்றை ஏதோ ஒரு வகையில் கவிஞர் தன் கவிதைகள் மூலம் மீள் செய்கிறார். அது வலிக்கவும் செய்கிறது. கவிஞரின் 8வது கவிதை;

வேர் தின்ற மரங்கள்

தார்ச் சாலைகளாய்

வழுக்கிக்கொண்டு ஓடினாலும்

மர வேர்களில் கால் சிக்கி

காயம்பட்ட நினைவு மட்டும்

வந்துவிட்டுப் போகிறது

ஒரு நொடிப் பொழிதேனும்

காதல் கவிதைகளையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை; தனக்கே உரிய பாணியில் 56வது கவிதையை இப்படியொரு வேண்டுதலாய் வைத்திருக்கிறார்.

சிறு தீண்டல் கொள்ள

பெருமழைக்குத் தப்பிக்க

குளிருக்கு இதமாக வெப்பமூட்ட

கண்ணீர் வழியச் சண்டையிட

சமாதானமாக

விவாதிக்க

மௌனம் காக்க

மீண்டும் மழையொன்றைப் பெய்விக்க

நமக்கிடையே

நீ

நான்

வேறு எதுவும் தேவையில்லை

ஒவ்வொரு கவிஞருக்கும் தனக்கும் கவிதைக்குமான் ஆத்மார்ந்த உலகம் ஒன்றிருக்கும். சிலரால் அதனை எழுதி கடக்க முடிகிறது சிலரால் அதனை எழுதாமலேயே கடக்க முடிகிறது. சிலசமயங்களில் வாசகன் கண்டறிவதற்கே சில கவிதைகளை கவிஞர்கள் எழுதிவிடுகிறார்களோ என யோசிக்க வைக்கும் கவிஞரின் 43வது கவிதை;

நான் என் தவறுகளை உங்களிடம் சொல்ல வேண்டிய

நொடிக்காகக்

காத்திருக்கிறீர்கள் நீங்கள்

அதற்கு அவசியமற்றுக் கடந்து போகிறேன் நான்

என் கவிதைகளிடம்

நான் அடைக்கலம் நாடுவது

உங்களுக்கு அந்நியமாய்த் தோன்றலாம்

உங்களின் சத்தத்தை வாங்கிப் பெருமௌனத்தை

என் கவிதைகள் பரிசளிக்கும்

ஆன்மாவின் பரிசுத்தம் அங்கு நிகழும்

நாம் மனமுடைந்து நிற்கும் சமயம் நம் குரலை தன் காதுகளால் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருப்பது உண்மையில் பாக்கியம். அப்படியான ஒரு பாக்கியத்தை 37வது கவிதைகள் சொல்கிறார் கவிஞர்; ஆனால் இக்கவிதையின் முடிவு இக்கவிதையை இன்னொரு இடத்திற்கும் எடுத்துச் செல்லும் வாய்ப்பையும் கொடுக்கின்றது.

ஏதோ ஒரு கவலையின்

நெருடலில் உன்னை அழைத்திருந்தேன்

தூரத்தில் இருந்தபடியே

மென்காதல் கொண்டு என் இதயம்

வருடினாய்

இப்போது

அடர்கிளைகள் கொண்டதொரு

பெருமரத்தின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்தோம்

நாம்

இத்தொகுப்பில் எனக்கு பிடித்த மேலும் ஒரு கவிதை. ஒவ்வொரு கவிதையையும் வாசித்தப்பின் நானும்கூட பறக்கத் தொடங்குகிறேன். தன் கவிதைகளை இரசிக்கும் வாசகர்களுக்கென ஓர் இனிப்பாய் எழுதியிருக்கும் 34வது கவிதை;

காகித விமானங்கள் எனக்கு எப்போதும்

பரவசம் தருபவை

ஒரு தேர்ந்த பொறியியலாளன் போல்

அளவுகள் கன கச்சிதமாக

செய்து

பின் பரிட்சார்ந்த முறையில் பறக்கவிடப்படும்

அது சிறிது பறந்து

பின் தரை தொடுகிற நொடியில் பறக்கத் தொடங்குவேன்

நான்

பிரிவின் துயரை சங்க இலக்கியத்தில் இருந்து இன்றுவரை நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். அத்துயருக்கு முற்றுப்புள்ளி இன்றுவரை வாய்க்கவில்லை. பிறக்க ஒரு ஊரும் பிழைக்க ஒரு ஊரும் வாய்த்தவர்களின் கதைகளின் சுவாரசியத்தைவிட துயர்தானே நிறைந்திருக்கிறது. அத்துயர் அவர்களுக்கு மட்டும்தானா?.

 பொருள் தேடிப்போகும் மனிதர்களும் அவர்களையே நம்பியிருக்கும் குடும்பமும் எதிர்நோக்கும் அகச்சிக்கல் ஏராளம். அதோடில்லாம் தலைவனை பொருள் தேட அனுப்பிவிட்டு அவனுக்காக காத்திருக்கும் தலைவி தன் பசியையும் தனிமையையும் எதைக்கொண்டு எதிர்கொள்கிறாள் என சொல்லும் கவிதையை 9-வது கவிதையாக எழுதியிருக்கிறார்  கவிஞர்;\

பாலைக் கடந்து

பொருள் தேடிப் போயிருக்கிறான் தலைவன்

பசலை படர்ந்து

துயர் சுமந்து காத்திருக்கிறாள் தலைவி

சொற்கள் தேடி

சொற்களுக்காகச் சொற்களுக்குள்

உழன்றலைகிறான் என் தலைவன்

அவன் கவர்ந்தனுப்பும்

சொற்கள் உண்டு உயிர்த்திருக்கிறேன் நான்

பசி கிளர்த்தும் சொற்கள்

பசி தீர்க்குமா?

தீர்க்கும்

தீராத் தனிமை கொன்று புதைத்து

ஆறாப் பசியாற்றும்

கவிஞர் பூங்குழலி வீரனின் கவிதைகள் குறித்து இன்னமுமே நாம் பேசலாம், ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு புரிதலைக் கொடுக்ககூடிய கவிதைகள் அவை. நான் எழுத வந்த எனது சிறுவயதில் நான் வியந்து பார்த்த; இன்றும் வியந்து பார்க்கும் கவிஞர் பூங்குழலி வீரன்.

கட்டாயம் நீங்கள் அவரின் கவிதைகளை வாசிக்க வேண்டும் நண்பர்களே. அது ஓர் உரையாடலை நிகழ்த்த வேண்டும்.

அதுமட்டுமில்லாது; மலேசிய இளம்தலைமுறை கவிஞர்களாக தங்களை முன்னிருத்த விரும்புகின்றவர்களிடம் ஓர் வேண்டுகோள். எழுதுவதற்கு முன்பாக நீங்கள் வாசிக்கத்தான் வேண்டும் நண்பர்களே. அதுதான் அடிப்படை அதில்லாமல் உங்களால் ஒருபோது எழுத்தில் நிலைக்கவோ கொஞ்ச நேரம் நிற்கவோ கூட முடியாது.

நீங்கள் எழுதியதை எல்லாம் எந்த விமர்சன பார்வையும் உரையாடலும் அற்று; அழகான பதாகையில் பதித்து உங்களின் அழகிய புகைப்படத்தையும் அதில் இணைத்து இது இந்தக் கவிஞர் தேர்ந்தெடுத்த கவிதை அது அந்த கவிஞர் தேர்ந்தெடுத்த கவிதை   என்ற போலி விளம்பரங்கள் ஒருபோதும் உங்களுக்கு   கைகொடுக்காது. ஒருவேளை என் வார்த்தைகள் இப்போது   உங்களைக் காயப்படுத்தலாம். நாளை சீழ் வைக்கும் புண்களைவிட முன்னமே கொடுக்கும் கசப்பு மருந்தை எடுக்கலாம் பாதகமில்லை.

சில சொற்களுக்கிடையில்

சொல்ல முடியாத சொற்கள்

கவிதை (கவிதை எண் 25)

     மீண்டும் அடுத்த ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம்’ பகுதியில் மற்றுமொரு மலேசிய புத்தகத்தைக் குறித்து நாம் பேசலாம்.

000

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

One thought on “மாதம் ஒரு மலேசிய புத்தகம் – 2

  1. இக்கட்டுரையின் தொடக்கம் உண்மையை மறுதலிக்காமல் சொல்லப்பட்டுள்ளது.அதிகார பீடத்தில் இருப்பவர்கள் இலக்கியத்தை ்வளர்ப்பதாக பாவனை செய்கிறார்கள். ஊடக விளம்பர அட்டையை வைத்துக் கொண்டும் இலக்கியம் பேசுவதாக போலித்தனம் செய்கிறவர்களும் உண்டு. பூங்குழலியின் கவிதைகள் மலேசிய இலக்கியத்தின் பெருமைமிகு அடையாளம்.தயாஜி சிறப்பாகவே எழுதியிருக்கீறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *