“பிள்ளையார் கோயில்ல மூணாவது மணி அடிச்சிருச்சுடி எந்திரி” என பிரம்பாத்தாள் வாசல் தெளித்தபடி கத்த, நெவ்வாயி போர்வையை விலக்கி முறுக்கெடுத்தாள். “சீக்கிரம் போடி பொங்கச்சோறு தீர்ந்திர போகுது” என சொல்ல விழுந்தடிச்சி நெவ்வாயி வாசலில் இறங்கி ஓடினாள். “அடியே கொடுவாவ கழுவிட்டு போடி.”  காதில் வாங்கிக்கொள்ளாமல் கோயிலை நோக்கி ஓட்டமெடுத்தாள்.

                           சென்ற வருடமும் விளைச்சல் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது ஊர். கண்மாய் பாசனம். கண்மாய்களில் அனைத்து மடைகளில் இருந்தும் தண்ணீர் வருவது நின்றிருந்தது. முதல் மடையில் மட்டும் சிறிதளவு நீர் வந்து கொண்டிருந்தது. ஓரிரு நாளில் நின்று விடும் நீருக்காக, முதல் மடை நிலத்தாருகளுக்கிடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் இன்னும் ஓர் பாய்ச்சல் தேவையிருந்தது. பிரம்பாத்தாளின் நிலத்தின் வாமடை காய்ந்து வாரமாயிருந்தது. “இன்னும் கட்டக்கடைசியா ஒரே ஒருவாட்டி மூத்தரம் பெய்யற மாதிரி பேஞ்சா கூட போதும், கருத காப்பதிப்பிடலாம்” என ஊரார் பேசிக்கொண்டனர். ஒரு வேளை உணவுக்கு பழக்கப்பட்டிருந்தார்கள். ஊரில் இருக்கப்பட்டவர்கள்னு ஒரு நாலஞ்சு குடும்பம் தேறும், மூன்று வேளை உலை வைப்பவர்கள்.

     நெவ்வாயி வீட்டில் ஒரு வேளை உலை தான். பொழுது சாய்ந்து உலை வைத்தால், இரவு சாப்பிட்டு மீதம் இருந்தால் அடுத்த நாள் காலை வேளைக்கு வைத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் கூழும் பழையசோறும் தான். அதுதான் உடம்புக்கு நல்லது என சொல்லி வைத்திருக்கிறாள் தாய் பிரம்பாத்தாள். மார்கழி பிறந்ததில் இருந்து பிள்ளையார் கோயிலில் போடும் பொங்கச்சோறு தான் நெவ்வாயிக்கு காலை உணவு.  தை மாத அறுவடையில் வந்தவை எல்லாம் அடுத்த தை அறுவடை வருவதற்குள் தீர்ந்து விடுகிறது, மக்கள் மார்கழியில் பஞ்சத்தில் இருப்பார்கள் என அறிந்து, பிள்ளையார் கோயிலில் மார்கழியில் சோறு போடுவதை வழக்கமாக முன்னோர்கள் வைத்திருப்பார்கள் என பிரம்பாத்தாள் எண்ணிக்கொள்வாள். ஒரு நாள் விடாமல் பிரம்பாத்தாள் நெவ்வாயியை எழுப்பி விடுவாள். முட்டி மோதி எப்படியாவது பிள்ளையார் கோயில் பொங்கச்சோறை வாங்கிவிடுவாள். மார்கழி மாத குளிரில், விடியற்காலையில், உள்ளங்கையில் சுடச்சுட கொடுக்கும் பொங்கலை மிகவும் ரசித்துண்பாள் நெவ்வாயி. சில சமயம் தன் தாய்க்கும் வாங்கி வருவாள். அரையாண்டு விடுமுறையில பிள்ளைகள் அனைத்தும் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் பசியற்று திரிந்தனர். இருந்தும், பொழுது சாய்ந்து விளையாடி தீர்ந்து வீட்டிற்கு வந்ததும் நெவ்வாயினால் பசியை அடக்க முடியாது. வீட்டிற்குள் நுழையும் போதே “அம்மா பசிக்குது…!” என்று தான் ஓடிவருவாள். காலையில் சாப்பிட்ட உள்ளங்கை அளவு பிள்ளையார் கோயில் பொங்கச்சோறு ஓடி ஆடி விளையாடும் இந்த பிஞ்சுக்கு ஒரு நாள் முழுவதும் எப்படி பத்தும் என்பதை நன்கறிவாள் தாய் பிரம்பாத்தாள். இருந்தும் களை எடுக்க போனால் பொழுது சாஞ்சு தான் வீட்டுக்கு வர முடியும். அக்கம்பக்கத்துல அரைக்காப்புடி அரிசி கடன் வாங்கி உலை வைக்க நேரம் ஆகிவிடும். பசி பொறுக்கமாட்டாள் நெவ்வாயி. பெரும்பாலும் பட்டமிளகா துவையலும் வெறும் சோறும் தான். சில சமயம் வாய்க்காவரப்பில் வேலைக்கு போய்விட்டு வரும் வழியில் பிரண்டை தண்டு ஒடித்து வருவாள் பிரம்பாத்தாள். பிரண்டை தண்டு துவையலோ, புளி போட்டு பிரண்டை சொதியோ வைத்தால், நெவ்வாயி நாலஞ்சு கை அதிகம் சாப்பிடுவாள். ‘இன்னும் மூணு நாலு வருஷத்துல குத்தவைக்கப்போறவளுக்கு சத்தில்லா உணவா போடுறோமே’ என்ற கவலை தாய்க்கு எபபோதும் உண்டு. இந்த வருஷமாச்சும் நல்ல விளைச்சல் வரட்டும், சத்துள்ள ஆகாரமா பொங்கி போட்டிரலாம்னு ஒவ்வொரு வருசமும் நினைத்துக்கொள்வாள்.

பொதியன் கண்மாயின் கடை மடைக்காட்டின் கடைசி வயல் பிரம்பாத்தாளுடையது. சுமார் அரை ஏக்கர் இருக்கும். இறந்து போன கணவனின் பூர்விக சொத்து.  எல்லா வருடம் போலயும் இந்த வருடமும் நம்பிக்கையோடு நட்டு வச்சிருக்காள். பொதியன் கண்மாய் பாசன வயல். பொதியன் கண்மாய் கலுங்கு தள்ளி பத்து வருசமாச்சு. நல்ல மழை பெஞ்சு, பெரிய கண்மாய் நெறஞ்சு, அதிலிருந்து வெளிமான் கண்மாய்க்கு நீர் வந்து, நடு மடை வழியே செரங்கென் கண்மாய் நெறஞ்சு கலுங்கு தள்ளி, காத்தடிச்சான் ஓடை வழியா பொதியன் கண்மாயை நிறைக்க வேண்டும். அதிலும் பொதியன் கண்மாய் முழுதாக நிறைந்தால் தான், பிரம்பாத்தாள் நிலத்திற்கு கடை மடையில் தண்ணி வரும். வருசம் முழுவதும் பெரு மழை பெய்தால் ஒழிய சாத்தியமில்லை. கணவனின் மூதாதையர் முட்டாளாகத்தான் இருந்திருக்க கூடும் இப்படி ஒரு சொத்தை பெற்றதற்கு என எண்ணிக்கொள்வாள்.

                          தை பிறக்க இன்னும் பத்து நாள் தான் இருக்கு. அதற்குள் மழை பெய்ய வேண்டும். ஊர்பெருசுகள் மந்தையில் கூடினர். “சூரியேன் மந்தக்கருப்பேன் உச்சந்தலயில விழுற வரைக்கும் பேப்பனி பெஞ்சா, மழை எங்கிட்டுருந்து வர்றது. பேசாம மழைச்சோறு வாங்கிற வேண்டியதுதான்பா” என்றது ஊர்பெருசு. அதுவரை மந்தைக்கு முன் ‘காலாட்டு மணி கையாட்டு மணி’ ஆடிக்கொண்டிருந்த நெவ்வாயி ‘மழைச்சோறு’ என்று பெருசு கூறியதை கேட்டவுடன் ஆட்டத்தை பாதியிலேயே விட்டுவிட்டு சிட்டாய் பறந்து வந்தாள். “பாதிலயே விட்டு போனா அம்பது குத்து அடவுடி” என்று தோழி காளீஸ்வரி கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள். கூட்டத்திற்குள் நுழைந்த நெவ்வாயி ஆர்வமாக பெருசுகள் பேசுவதை கவனித்தாள். “சரிப்பா! நல்ல நாளா பாத்து மழைச்சோறு வாங்கிற வேண்டியது தான், இல்லன்னா கருத காப்பாத்த முடியாது போல”.  நோட்டக்காரர் நாராயணனை கையோடு ஒரு சிறுவன் கூட்டி வந்திருந்தான். பஞ்சாங்கத்தை பார்த்த நோட்டக்காரர், “நாளைக்கே வாங்கலாம் நாள் நல்லா இருக்கு” என்றார். நெவ்வாயிக்கு ஒரே சந்தோசம். “மழைச்சோறு மழைச்சோறு” என சிறுவர்கள் துள்ளி ஆர்ப்பரித்தனர்.

                          மழை பெய்ய வேண்டி ஒரு பெரிய கோயில்_பாத்திரத்தில் சிறுவர்கள் வீடு வீடாக சென்று சோறு வாங்கி ஒன்றாக கலக்கி, பிரசாதம் போல பகுந்துண்டு, கையை கழுவாமல், வானை நோக்கி தண்ணீர் வேண்டி கதறி அழுவார்கள். இவ்வாறு மூன்று இரவு வாங்கி சாப்பிட்டு, மந்தைக்கருப்பனிடம் முறையிட்டு, மூன்றாவது நாள் மந்தையில் விளக்கேற்றி வைப்பார்கள். விளக்கு அணையாமல் நாள் முழுவதும் எரிய வேண்டும். அப்படி அணையாமல் எரிந்தால், இவர்களது வேண்டுதலை கடவுள் ஏற்று கண்டிப்பாக மழை கொடுப்பார் என்பது நம்பிக்கை. அப்படி வரவில்லையெனில் மீண்டும் மூன்று நாள் மழைச்சோறு தொடர வேண்டும். பல சமயம் மழை வரவும் செய்திருக்கிறது. மழைச்சோறு வாங்கபோவதை அறிந்து, பிரம்பாத்தாள் நம்பிக்கை கொண்டாள்.

                    பண்டாரம் சுந்தரம் கோயில்_பாத்திரத்தை வெளியே எடுத்து விலக்கி தயாராக வைத்திருந்தார். ரெண்டரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம் கொண்ட வெண்கல பாத்திரம். இளவட்டங்களால் கூட ஒரு நிமிடத்திற்கு மேல் தூக்கிவைத்திருக்கமுடியாது. மூச்சு முட்டும். ஊரோரம் இருக்கும் ஆழாவூரணி கரையில் கருப்பு கோயிலில், பொழுது சாய, பண்டாரம் சுந்தரம் மணி அடித்து பூசை செய்து மழைச்சோறு பாத்திரத்தை கொடுக்க, சிறுவர்கள் ஆரவாரத்தோடு தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஊருக்குள் கூச்சலிட்டு சென்றனர். நான்கைந்து பேர்கள் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தனர். தோள் கடுக்கும் போது மற்றவர்கள் மாற்றிக் கொண்டனர்.

            “மழை பெய் ராசா

             மழை பெய்யி..!

             ஆட்டுக்கும் மாட்டுக்கும் தண்ணில்ல

             அழுகுற குழந்தைக்கு பாலில்ல

             அம்மா கொஞ்சம் ச்சோறு போடுங்க …!

என இருபது முப்பது சிறுவர்கள் ஒரு சேர ஒப்பாரி போல பாடி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று மழை சோறு சேகரித்தனர். நெவ்வாயியும் அவர்களோடு முதல் ஆளாய் கத்திக்கொண்டே சென்றாள். அவரவர் வீடு வரும் போது சிறுவர்கள் முன் கூட்டியே சென்று தாய்மார்களை ஆயத்தபடுத்தி வைத்தனர். தாய்மார்கள் தங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சங்கடமில்லாமல் ஓர் கிண்ணத்தில் எடுத்து வந்து மழைச்சோறு பானையில் போட்டனர். சிறுவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு வீட்டிலும் என்ன போடுகிறார்கள் என பார்த்தனர். நல்ல உணவு விழும் போதெல்லாம் நெவ்வாயிக்கு நாவில் எச்சில் ஊறியது. பெரும்பாலானோர் வீட்டில் வெறும் சோறு தான். சிலர் கழனிப்புளிச்சாறும், சிலர் ரசஞ்சோறும் போட்டனர். இருக்கப்பட்டவர்கள் என சிலர் தான் பருப்பு சாம்பாரும், ஏதாவது ஒரு வெஞ்சனமும் போட்டனர். நல்ல உணவு கொடுக்கும் வீட்டின் சிறுவர்கள் பெருமையாக பார்க்கப்பட்டார்கள். காளீஸ்வரி வீட்டு தெருவுக்கு வர, முன் கூட்டியே காளீஸ்வரி தன் வீட்டுக்கு ஓடினாள்.

             “மழை பெய் ராசா

              மழை பெய்யி.

              ஆட்டுக்கும் மாட்டுக்கும் தண்ணில்ல

              அழுகுற குழந்தைக்கு பாலில்ல

              அம்மா கொஞ்சம் ச்சோறு போடுங்க …!

என பாடிக்கொண்டே காளீஸ்வரி வீட்டு வாசலில் வந்து நின்றனர். மழை பாத்திரத்தை நெவ்வாயி மற்றும் நான்கு பிள்ளைகள் சேர்ந்து தூக்கி வைத்திருந்தனர். பாத்திரத்தை தூக்கி கொண்டிருப்பதில் நெவ்வாயிக்கு முகமெல்லாம் சிரிப்பு. காளீஸ்வரி பெருமை பொங்க கையில் ஒரு கிண்ணித்தில் சோறுடன் நின்று கொண்டிருந்தாள். ‘அம்மா கொஞ்சம் ச்சோறு போடுங்க …!”

என நக்கலாக காளீஸ்வரியை பார்த்து நெவ்வாயி கத்தினாள். காளீஸ்வரி சிரித்துக்கொண்டே பாத்திரத்தில் சோற்றை கொட்டிவிட்டு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள்.

“என்ன சோறுள?” என நெவ்வாயி கேட்டாள்.

‘கருவாடு’ என சொல்ல, நெவ்வாயிக்கு எச்சில் ஊறியது.

               நெவ்வாயியின் வீடு வர, எப்போதும் போல, சொல்லிவைத்திருந்தது போல், சிறுவர் கூட்டம் அங்கு சோறு வாங்காமல் கடந்து சென்றனர். நெவ்வாயி வீடு, நாயனக்கார நம்பி அண்ணே, கிறுக்கச்சி சிரங்கம்மா வீடு என இன்னும் சில வீட்டில் எப்போதும் வாங்க மாட்டார்கள். எப்போதும் நெவ்வாயிக்கு கேள்வி எழும். “ஏன் நம்ம வீட்டுல மட்டும் வாங்க மாட்றாங்க? ஏன் நம்ம வயல் மட்டும் பொதியன் கண்மா கடை மடையின் கடைசி வயலா இருக்கு?” என இன்னும் விடை தெரியாத பல கேள்வி அவ்வப்போது அவளுக்கு எழுவது உண்டு.  அதைப்பற்றியெல்லாம் அவள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அம்மாவிடம் கேட்கலாம் என நினைத்திருப்பாள் ஆனால் மறந்து விடுவாள்.  அப்படியே தனது வீட்டில் வாங்கினாலும், அம்மா கூழோ பழையசோறோ தான் போடுவாள். அது நமக்கு அவமானமா தான் இருக்கும், அதற்கு வாங்காமலிருப்பதே நல்லது தான் என நினைத்துக்கொண்டாள்.

                            மழைச்சோறு பாத்திரம் நிறைந்ததும் ஊரணி கருப்பசாமி கோயிலுக்கு சென்று இறக்கி வைத்தனர். பங்கு வைக்க பரிவூரணம் ஆயா வர வேண்டும். கைத்தடியை ஊண்டிக்கொண்டே ஊரணிக்கரையில் தட்டுத்தடுமாறி வந்தாள் பரிவூரணம் ஆயா. பரம்பரை பரம்பரையாக பங்கு வைப்பதில் பரிவூரணம் ஆயா குடும்பம் பேர் போனவர்கள். கருப்பனை கும்பிட்டு விட்டு பாத்திரத்திற்க்குள் கையை விட்டு மொத்த ஊர் சோத்தையும் ஒத்தைக்கையால் கலந்தாள். கலக்கும் போதே சொல்லி விடுவாள், இன்று எத்தனை வீட்டில் பழைய சோறு, எத்தனை வீட்டில் சுடு சோறு என்று. ஆனால் எப்போதும் வார்த்தை மாறாமல் “ஏ பளுக்கு படைகளா, கருப்பேன் இன்னைக்கு நல்லா கொண்டு வந்திருக்கேன், நல்லா ருசியா இருக்க மாரித்தேன் தெரிது.. ஸ்ஸ்.. அடடடா…!” என்று எச்சிலை விழுங்கி, சிறுவர்களின் ஆசையை தூண்டுவாள்.

உயரம் வாரியாக சிறுவர்கள் வரிசை படுத்தப்பட்டு ஆர்வமாக நின்று கொண்டிருந்தனர். உயரம் கம்மியாக இருப்பதால் முதல் வரிசையிலேயே நெவ்வாயிக்கு இடம் கிடைத்தது. ஆயா சோற்றை கலக்க கலக்க, ரசம் சாம்பார் கருவாடு என கலந்து வாசனை தூக்கியது. பின் விரிசையில் நின்ற காளீஸ்வரியிடம் ‘உங்க வீட்டுல கருவாட்டு துண்டு போட்டாங்களா?” என ஆர்வம் பொங்க  கேட்டாள்.

‘ ஆமாம்’ என தலையாட்டினாள் காளீஸ்வரி.

   “எத்தனை ?”

   “மூணு துண்டு “

எச்சில் ஊற, அதில் ஒரு துண்டாவது நமக்கு வந்திரக் கூடாதா என ஆசையுடன் நின்று கொண்டிருந்தாள் நெவ்வாயி. ஆயா ஒவ்வொருவருக்கும் வஞ்சமின்றி கை நிறைய அள்ளிக்கொடுத்தாள். நெவ்வாயியின் இரு கைகளிலும் வழிய வழிய சோற்றை நிரப்பினால் ஆயா. ஒரு பருக்கை கூட கையிலிருந்து விழாமல் கவனமாக இருந்தாள். கருப்பனின் மணி தொங்க வைக்கப்பட்டிருக்கும் கல்தூணில் சாய்ந்தபடி பொறுமையாக ரசித்து சாப்பிட்டாள். கத்திரிக்காய் ஒன்றும், சில தட்டப்பயறும், சில மொச்சக்கொட்டையும் நெவ்வாயியின் பங்கில் வந்தது. சீக்கிரம் தீர்ந்துவிடாமல் இருக்க, குருவி போல கொஞ்சம் கொஞ்சமாக உண்டாள். மற்றவர்களுக்கு முன் தனது பங்கு தீர்ந்துவிட கூடாது, என மற்றவர்களின் வேகத்திற்கு ஏற்ப தனது வேகத்தை குறைத்துக் கொண்டாள். சுவை மிகுதியால், மூக்கில் இருந்து நீர் வடிந்தது. கடைசியாக பிரசிடெண்ட் வீட்டு கல்யாணத்தில் சாப்பிடும் போது நெவ்வாயிக்கு மூக்கில் இருந்து நீர் வந்தது.

“எல்லாரும் சாப்பிடீங்களா?

கருப்பன கும்பிட்டு எல்லாரும் தண்ணி கேளுங்க” என ஆயா கூறினாள்.

சாப்பிட்ட கையோடு அனைவரும் விண்ணை பார்த்து ,

                 “கை கழுவ தண்ணி இல்ல …!

                  கை கழுவ தண்ணி இல்ல …!”

என கத்திக்கொண்டே ஊரணியில் இருக்கும் கருப்பு கோயிலில் இருந்து மந்தையை கடந்து ஊருக்குள் வலம் வந்தனர். சிலர் கை கழுவ தண்ணி இல்லை என அழுவது போல் நடித்து, கதறி பாவனை செய்தனர். அவர்கள் போடும் கூக்குரல் பக்கத்து ஊருக்கெல்லாம் கேட்டது. நெவ்வாயியும் கூட்டத்தோடு கூட்டமாக தன் பங்குக்கு முறையிட்டாள்.

“கை கழுவ தண்ணி இல்ல …!

                கை கழுவ தண்ணி இல்ல …!”

             இப்படியாக மூன்று நாள் மழைச்சோறு வாங்கி உண்டு, கோரிக்கை வைத்து முடிந்தது. இந்த மூன்று நாளும் சாதி பாகுபாடின்றி, பணக்காரன் ஏழை, நிலக்கிழார் கூலி என அனைத்து வீட்டு பிள்ளைகளும் ஒரே உணவை உண்டு மகிழ்ந்தனர். அனைவருக்கும் மழைச்சோறு பிடித்திருந்தது. நெவ்வாயி தினம் தினம் சாப்பிட்டுவிட்டு தாயிடம் தனது பங்கில் என்னவெல்லாம் வந்தது எப்படி ருசியாக இருந்தது என சொல்லி மகிழ்வாள். மூன்றாவது நாள் விளக்கு ஏற்றப்பட்டது. அது ஒரு கல் விளக்கு, ஒரு படி எண்ணெய்யை சாதாரணமாக கொள்ளும். விளக்கு ஒரு நாள் முழுவதும் அணையாமல் இருக்க வேண்டும். பெரும் காற்று அடித்தாலும் அணையாத அளவிற்கு கடுமையான திரியை திரித்து போட்டு மந்தைக்கு நடுவே ஏற்றி வைத்தாள் பரிவூரணம் ஆயா.   பரிவூரணம் ஆயா போட்டு விளக்கு அணைந்ததாக யாரும் பார்த்தது இல்லை. “கெழவி போட்டுச்சுன்னா, எந்த ச்சூரனா இருந்தாலும் ச்சூறாவளியா இருந்தாலும் அமத்த முடியாதுல”  என பெருமை பேசினர். இருந்தாலும் சிறுவர்களிடம், “வெளக்க அமந்திராம பாத்துக்கங்க பளுக்கு படைகளா.. அமந்துச்சுனா மழை வராது பாத்துக்கங்க” என பயமுறுத்துவது போல் கட்டளையிட்டு சென்றாள் பரிவூரணம் ஆயா.

  அன்று இரவு அதை காரணம் காட்டி சிறுவர்கள் அனைவரும் மந்தையிலேயே உறங்கினார்கள். என்றோ ஒரு நாள் இது போன்று அனைவரும் ஒரே இடத்தில் உறங்குவது நெவ்வாய்க்கு பிடித்திருந்தது. மறுநாள் விடிந்தும் சிறுவர்கள் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. பிள்ளையார் கோயில் பொங்கச்சோறை வாங்கி சாப்பிட்டுவிட்டு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் மந்தையை சுற்றியே நாள் முழுதும் விளையாடினர். விளக்கு அசராமல் எரிந்தது. இன்று பொழுது சாயும் வரை எரிந்தால் போதும் மழை வந்து விடும். அதற்கு ஏற்றார் போலவே எண்ணெய்யை நிறைத்து ஏற்றி வைத்திருந்தாள் பரிவூரணம் ஆயா.

ஊரே விளக்கு அணையாமல் இருந்து, மழை வந்துவிடாதா, காய்ந்து போக காத்திருக்கும் கதிர்களை காப்பாற்றி விடாதா என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, நெவ்வாய்க்கு மட்டும், கிழவி போட்ட விளக்கு அணைந்து விடாதா, மழை வராமல் இன்னும் ஒரு மூன்று நாள் மழைச்சோறு கிடைக்காதா என்றிருந்தது.

                  திடீரென மாலையில் வானம் கருத்தது. விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருட்டிக்கொண்டு வந்ததை பார்த்து ஆட்டத்தை நிறுத்தி மந்தைத் திடலில் இருந்து ஊரணி கரைக்கு ஓடினர். மேகம் தெற்கு பக்கமிருந்து வேகமாக நகர்ந்து வந்தது. இடி இடித்தது. ஊர் மக்கள் அனைவரும் சந்தோசத்தில் வெளியே வந்து வானை பார்த்தனர். ஊரணி கரை கருப்பன் கோயில் அருகே மக்கள் அனைவரும் மழையை வரவேற்க ஒன்று கூடினர். “தெக்கருந்து வர்ற கருமேகம் கண்டிப்பா மழய கொட்டாம போகாது” என்று ஆரூரம் சொல்லியது பெருசு. பரிவூரணம் ஆயா ஊரணி கருப்பனிடம் பூசை செய்து வேண்டிக்கொண்டிருந்தாள். மொத்த ஊரும் கருப்பனின் காலடியில் மழைக்காக காத்து கிடந்தனர். இடியும் மின்னலுமாக காற்று குளிர்ந்தது.

“எங்கயோ பொத்துக்கிட்டு ஊத்துதுயா மழ” என்றான் ஒருவன்.

“மழச்சோறு வாங்குனா மழ வராம என்னா பண்ணுமா?” என்று வியாக்கானம் பேசினான் பண்டாரம் சுந்தரம்.

“வரப்ப வெட்டி வைக்கணும்டா, போயி மம்பட்டிய எடுத்துட்டு வா” என தன் பேரனுக்கு கட்டளையிட்டார் நோட்டக்காரர் நாராயணன்.

தெற்கே இருந்து வந்த மேகம் நன்கு நிலை கொண்டு எந்த நேரத்திலும் பொத்து கொண்டு பெய்யும் என்பது போல இருந்தது.

எல்லாரும் வானத்தையே நோக்கி மழைக்காக காத்துக்கொண்டிருக்க, எங்கிருந்தோ திடீரென ஒரு சூறாவளி கிளம்பி வந்தது. “ஆத்தாடி பேக்காத்தாவுல இருக்கு, கரு மேகத்தை கலச்சிருமே… ஏய் கருப்பா..!”  என கவலையுற்றாள் பரிவூரணம் ஆயா. மொத்த புழுதியையும் தூக்கி வாரி வந்து மக்கள் மீது வீசியது சூறாவளி. “இது இப்ப அடங்காது போல ‘என புலம்பியது பெருசு. கருப்பனோட மணி காற்றில் நிலைகுலைந்து ஆடி பேரொலியை எழுப்பி சிறுவர்களை பயமுறுத்தியது.

“ஏப்பா அந்த மணிக்கு பக்கத்துல நிக்காதிங்கப்பா” என மணி தொங்கிக்கொண்டிருந்த கல்தூணை சுற்றி நின்று கொண்டிருந்த இளவட்டங்களை எச்சரித்தார் ஒருவர். சற்று சோர்ந்தால் காற்று அடித்து ஊரணிக்குள் வீசிவிடும் போல இருந்தது. மக்கள் காலை அழுத்தி ஊண்டி, கையில் கிடைப்பதை இருக்கிப் பிடித்துக்கொண்டு நின்றனர். சற்று நேரத்தில் சூறாவளி ஊரை கடந்து சென்றது. மழை பெய்ய காத்திருந்த கருமேகத்தையும் கலைத்துவிட்டு சென்றது. “ஏய் கருப்பா.! எங்க மேல கருணையில்லையா…? ஒரு வேள கஞ்சிக்காக தானே கேக்குறோம்” என கண் கலங்கினாள் பரிவூரணம் ஆயா. திடீரென விளக்கு ஞாபகம் வர, “டேய்.! வெளக்கு அணயாம இருக்கான்னு பாருங்கடா” என கத்தினாள்.

      சிறுவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஊரணியில் இருந்து மந்தைக்கு ஓடினர். விளக்கு அணைந்திருந்தது.

                       விளக்கு அணைந்ததால் தான், வந்த மழை பெய்யாம போயிருச்சு என்றனர் ஊர் மக்கள். இனி மறுபடியும் மூன்று நாள் மழைச்சோறு வாங்கி, மூன்றாவது நாள் விளக்கு ஏற்றி சாமி கும்பிட வேண்டும் என முடிவு எடுத்தனர்.

     மீண்டும் சிறுவர்கள் பகுமானமாக மழைச்சோறு வாங்கினர். பரிவூரணம் ஆயா பங்கிட்டு கொடுத்தாள். நெவ்வாயி இடது கையை மட்டும் நீட்டினாள்.

“கிறுக்கு மவளே.! நொட்டாங்கய்ய மட்டும் நீட்டுற, சோத்தங்கையையும் சேர்த்து நீட்டுறீ” என்றாள்.

“இல்ல இதுல மட்டும் குடு ஆயா” என்றாள் நெவ்வாயி.

நிலவொளியில் ஊரணிக்கருப்பு மணித்தூணில் சாய்ந்து கொண்டு , மழைச்சோறை இடது கையில் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் நெவ்வாயி. அவளது வலது உள்ளங்கை நெருப்பில் பொசுங்கியிருந்தது.

“கை கழுவ தண்ணி இல்ல….!

                 கை கழுவ தண்ணி இல்ல …!””

சிறுவர்கள் கத்திக்கொண்டே ஓடினர்.

நெவ்வாயியும் அவர்களோடு கலந்து கொண்டாள். 

000

சேவு.க.ராம்குமார்

மதுரை மேலூரில் பிறந்தவர். கோவையில் பட்டப்படிப்பை முடித்தவர். சென்னையில் பின்பாக அனிமேஷன் டிப்ளமோ படிப்பை முடித்து, அனிமேஷன் – விஷுவல் எஃபக்ட்ஸ் துறையில் பணிபுரிந்தார். தற்போது திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *