“ஆடு மாடு கணக்கா நாய்க பெருத்துப் போச்சி… ஆளுக மேல விழுந்து அமுக்கிரும் போல… ச்சேடு.. போறேன…” என்று சாலையோரம் புழுதி பறக்கச் சண்டை போட்ட நாய்கள் மீது கல்லெடுத்து எறிந்து விரட்டினார் ஆறுமுகம்.
சாலையில் சிதறி ஓடிவந்த நாய்கள் குறுக்கே விழுந்து விடுமோ என்று இரு சக்கர வாகனத்தை வேகத்தடையில் மெதுவாக ஏற்றி இறக்கி சாலையை விட்டு ஓரமாக நிறுத்தி “க்கீ…க்கீ க்க்கீ”… என்று சத்தம் எழுப்பினாள் லட்சுமி.
“யாரு அது ஓயாம சத்தம் கொடுக்கிது…” என்று வேகமாய் வீட்டுக்குள் இருந்து முற்றத்துக்கு வந்து கிழக்கே ரோட்டைப் பார்த்தாள் கற்பகம்.
“யக்கோவ்… நம்ம பப்பிம்மா குட்டி போட்டு இருபது நாளாச்சி.. உன் வீடு ஊர விட்டு தள்ளி இருக்கு…ஒரு குட்டி தாரேன் வாங்கி வளத்துவிடு..வீட்டு காவலுக்கு…” என்று வீட்டுக்கு போகும் அவசரத்தில் சொன்னாள் லட்சுமி.
‘சரிம்மா..நாளைக்கு வாங்கிக்கிறேன்..’. மனசுக்கு விருப்பமில்லாமல் சொன்னாள் கற்பகம். பக்கத்தில் இருந்த ஐந்து வயது மகன் ராஜா நான் வந்து “வாங்கிக்கிறேன்ம்மா..” என்றான். கற்பகம் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நாய்களை விரட்டிவிட்டு ”நாய்களா வளக்காங்க.. இப்பதான் பருத்திச்செடி முளைச்சி வருது. அதுக்குள்ளே..கூட்டமா வந்து சண்டைபோட்டு செடிகளை மிதிச்சி நசுக்கிருச்சிக…” என்று ஆவேசத்தில் புலம்பி கொண்டே இவர்களை கடந்து போன ஆறுமுகத்தை கவனித்தாள் கற்பகம்.
ஆறுமுகத்தின் தோட்டம், கற்பகம் வீட்டிற்கு முன்பு இருபது மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. முற்றத்தில் நின்றால் போதும், அவர் தோட்டத்தில் யார் யார் நிற்கிறார்கள், வேலை செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஆறுமுகம் பார்க்க ரொம்ப ஒல்லியாக ஆளு. இரண்டு கையையும் பின்னால் கட்டிக்கொண்டு வேகமாக நடந்து போவார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், எதிரே யாராவது வந்தால் பேசாமல் போகமாட்டார். அழுக்கடைந்த வேஷ்டியை மடித்துகட்டி, எப்போதும் ஒரு பழுப்பு நிற முழுக்கைச்சட்டையை அரைக்கையளவுக்கு சுருட்டி பட்டையாய் மடக்கிவிட்டு,தோளி்ல் ஒரு துண்டைப் போட்டிருப்பார். அவரது கையில் எப்போதும் ஒரு மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருப்பார். எப்போதாவது நாய்களைத் தோட்டத்துபக்கம் பார்த்துவிட்டால் போதும். “வசமா மாட்டிச்சி..ரெண்டு வப்பு வச்சிட்டேன்…” என்று கையில் வைத்திருக்கும் மூங்கில் கம்பை பற்றி பெருமையாகச் சொல்லி சிரித்துக் கொள்வார்.
அன்று இரவு ராஜாவுக்கு உறக்கம் வரவில்லை. எப்படா விடியும் லட்சுமி..ம்மா… வீட்டுக்குப் போய் நாய்க்குட்டியை வாங்கிட்டு வரலாம். அதுக்கு என்ன பேரு வைக்கலாம். எப்படி வளர்க்கலாம்.. என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். இதை கவனித்த கற்பகம்
“என்னல உருண்டுகிட்டு வார்ற”
“மணி எத்தனமா”
“பத்து மணி இருக்கும் ஏன்”
“ச்சும்மாதான் கேட்டேன்”
“பேசாம படு”
அதட்டிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள் கற்பகம். அவனும் நாய்க்குட்டியை பற்றிய யோசனையிலேயே தூங்கிவிட்டான் ராஜா.
அதிகாலை பால்காரர் வண்டி சத்தம் விடிந்துவிட்ட நேரத்தைச் காதருகே வந்து சொன்தைப் போல் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது.
ஊருக்கு வடக்கே இருக்கும் கரிசல் காடுகளுக்கு களை எடுக்க ஆணும் பெண்ணுமாக கையில் தூக்கிச்சட்டியோடு நடந்து போனார்கள்.
“இங்கனேயே இருந்தா பிஞ்சையிலே களை நாறிப்போகும்…வெயிலு வரமுன்னே போய் வெட்டுனாதான் வேலை ஓடும்…”என்று கோவத்தில் புலம்பிக்கொண்டே தயாரானாள் கற்பகம்.
ராஜாவையும், அவனுடைய மூன்று வயது தங்கை கனிமொழியையும் பக்கத்து வீட்டு மலரிடம் கொண்டு போய் விட்டாள். மலர் கற்பகத்தின் கடைசி தங்கை.
வட மேற்கில் மஞ்சனத்தியும், புல்லும் வளர்ந்து கைப்பிடி சுவரெதுவும் கட்டப்படாத தன் தரை மட்டத்தில் இருக்கும் பம்பு செட் கிணற்றைப் பார்த்து “செடி செத்தல், கெணத்துக்கார எங்கயும் போவக்கூடாது” என்று எச்சரித்தாள். அதற்கு காரணம் இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கோடையில் கிணற்றைச் சுற்றி பச்சை இருந்ததால் ஆடுகளை மேய விட்டிருந்தார்கள் சிறுவர்கள். குவிக்கப்பட்ட சரல்களில் ஏறி மேய்ந்த ஒரு ஆடு சறுக்கி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. விளையாட்டு சிறுவர்கள் கவனிக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது கவனித்த சிறுவன், ஒரு ஆட்டைக் காணவில்லை என்று அழுதுகொண்டே தேடினான். ஒருவழியாக மே..மே.. என்று சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வந்து கிணற்றடியைப் எட்டிப் பார்த்த சிறுவர்கள் பெரியவர்களை அழைத்து வந்தார்கள். மிகவும் சிரமபட்டு அந்த ஆட்டை வெளியே தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதிலிருந்து யாரையும் அந்த பக்கம் போக அனுமதிக்கமாட்டார்கள்.
“டிபன் பாக்ஸ்ல சோறு குழம்பு வச்சிருக்கேன். சாப்பிட்டுக்கோங்க… நீயும் பாப்பாவும் விளையாடிட்டு இருங்க.. இவுகள பாத்துக்கோடா…” என்றாள் கற்பகம்.
துணிகளை கொடியில் காயப்போட்டு கொண்டிருந்தவாறே “ஆஞ் சரிக்கா” என்றாள் மலர்.
களைவெட்டியோடு வட்டக் கிணற்றுப் புஞ்சைக்கு மேற்கே நோக்கி போனாள் கற்பகம்
விளையாடிக் கொண்டிருந்த ராஜா கொஞ்ச தூரம் பார்வையிலிருந்து அவன் அம்மா மறைந்ததும் வழக்கம் போல ஊருக்குள் காய்கறி சாமான்கள் வாங்க போகும் கூடை பையை எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து தெற்காம ரோட்டில் நடந்து போனான் .அவனைப் பார்த்து கடைக்கார காளியம்மாள்
“ஏலே! ராஜா எங்கடா போற..காய்கறி இப்பதான் மாமா வாங்கிட்டு வந்திருக்காரு…
வாங்கலையா…”
“இல்ல அத்தை…எங்க லட்சுமிம்மா வீட்டுக்குப் போறேன்…”
“அவுக வீட்டு பக்கமா…? நாயி குட்டி போட்டுருக்கு பாத்துப் போ…கடிச்சிராம..”
“சரி அத்தை..” என்று நடுத்தெருவிலிருந்து கிழக்காமத் திரும்பி பூசாரி தாத்தா வீட்டை அடுத்ததாக இருக்கும் லட்சுமி வீட்டைச் சென்றடைந்தான்.
காம்பவுண்ட் வாசல் கேட் பூட்டியிருந்தது. இரும்பு கதவை கையால் தட்டிக் கொண்டே “லட்சுமிம்மா…லட்சுமிம்மோவ்… ராஜா வந்திருக்கேன் கேட்டை தெறங்க…” என்று சத்தம் போட்டு கூப்பிட்டான்
“வெளிய யாரு கூப்பிடுதா…” என்று வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த தேவி வெளியே வந்து பார்த்துவிட்டு “ராஜாண்ணே வந்திருக்கிறான் ம்மா”.. என்று வீட்டிக்குள் ஓடிப் போய் சொன்னாள். சமையலறையிலிருந்து பல்லுதெரிய சிரித்தபடியே வேகமாக கையில் கரண்டியோடு வந்து இரும்புக்கேட்டைத் திறந்துகொண்டே லட்சுமி
“என்னடா ராஜாக்குட்டி..கூடைப் பையோடு வந்திருக்க…என்ன கொண்டு வந்திருக்க” என்றாள்
“ஒன்னுல்லைம்மா…சும்மாதான் வந்தேன்…எனக்கு ஒரு நாய்க்குட்டி குடுமா..எங்க வூட்ல வளக்கப்போறேன்..’ என்று தாழ்ந்த குரலில் ஆர்வத்தோடு கேட்டான்
“இங்கன உக்காந்திரு வாரேன்” என்று சொல்லிட்டு வீட்டுக் காம்பவுண்ட் ஓரம் கோழிமடத்துக்குள் செவப்பியோடு நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்றாக படுத்து விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு நாய்க்குட்டியை தூக்கி வந்தாள் லட்சுமி.
பிஸ்கட் கலரில் முடி பொசு பொசுவென மெத்தை மாதிரி இருந்தது. திறந்து திறந்து மூடிய கண்களால் இந்த உலகத்தை பார்ததுக்கொண்டிருந்த நாய்க்குட்டியின்
இரண்டு காதுகளிலும் “செவலை…செவலை…செவலை…” என்று மூன்று முறை பெயரைச் சொல்லி “இந்தா பிடிடா…நல்லா பொத்து பொத்துனு அழகா இருக்கு..” என்று ராஜாவிடம் கொடுத்தாள்.
இரு கைகளையும் நீட்டி நெஞ்சோடு அனணத்து வாங்கிக் கொண்டான். தூக்கி மடியிலே கொஞ்ச நேரம் வைத்திருந்தான். செவலையின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அது சத்தம் போட்டபடியே இருந்தது. அவன் முகத்தில் மகிழ்ச்சி அப்பியிருந்தது. அவன் கொண்டு வந்த கூடைப்பையில் பழைய சேலைத்துணியை மடித்து சுற்றி மெத்தை போல வைத்து செவலையின் முகம் மட்டும் தெரியும்படி வைத்தாள்.
“சரிடா அப்ப நீ கொண்டு போய் பத்ரமா பாத்துக்கோ…” என்று அறிவுரை கூறி ராஜாவை அனுப்பி வைத்தாள் லட்சுமி.
°°
சாயந்தரம் நான்கு மணி இருக்கும் புஞ்சையிலிருந்து வந்த கற்பகம், கை கால் முகத்தை கழுவிவிட்டு,துண்டால் முகத்தை துடைத்துகொண்டே வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்தாள். கனிமொழி ஓடி போய் மடியில் உட்கார்ந்து கொண்டு “அம்மா ராஜாண்ணே… நாய்க்குட்டி வாங்கிட்டு வந்திருக்காம்மா…“ லட்சுமிம்மா வீட்லருந்து…”செவலை” னு பேரு…என்று சொன்னாள். “ஏன் வாங்கிட்டு வந்தான். எங்கிட்ட கேட்காம வைக்காம…” என்று வைதுவிட்டு எழுந்து வீட்டுக்குள் போனாள்.
வீட்டு காம்பவுண்ட்டுக்குள் ஒரு அட்டை பெட்டிக்குள்ளிருந்து வெளியே தலையை எட்டிப்பார்த்து செவலை சத்தம் போட்டபடியே இருந்தது. அதன் குரல் கேட்டு அவளின் குழந்தை மனசு இளக ஆரம்பித்தது. கனிமொழியும் ஏன் சத்தம் போட்டுக்கிட்டே இருக்க..பசிக்குதாடா செவலை…இருடா…” என்று ஒரு பிஸ்கட்டை கொண்டு வந்து பிய்த்து அதன் வாயில் வைத்து “தின்னுடா… தின்னுடா…” என்று அழுத்தினாள். அதைப் பார்த்த அவள் அம்மா “இங்கரு பிஸ்கட்டலாம் திங்காது…அதுக்கு பால் வாங்கி காய்ச்சி ஆற வச்சிதான் கொடுக்கனும்…” என்றாள் கற்பகம்.
“ச்சரிம்மா” என்று செவலையை பார்த்துக்கொண்டே அருகில் அமர்ந்திருந்தாள் கனிமொழி.
••••
தினமும் வரும் பால்காரரிடம் ஒரு லிட்டர் பால் வாங்கி காய்ச்சி புட்டிபால் போட்டு வளர்த்தார்கள். கொஞ்சநாள் கழித்து சோற்றில் கட்டித்தயிரை ஊற்றி பிசைந்து கொடுத்தார்கள். அதுவும் நன்றாக வளர்ந்தது.
ராஜா பள்ளிக்கூடம் செல்லும் போதெல்லாம் பின்னாலே ஓடிச்செல்லும். “வீட்டுக்குப் போ..” என்று அதட்டுகொண்டே நிற்பான். அதுவும் சற்று இடைவெளியில் நின்று கொண்டே அவன் முகத்தைப் பார்க்கும்.”சாய்ந்திரம் வந்திருவேன் “செவலை… பை.. பை…”என்று விடையளித்துவிட்டு பள்ளி வாகனத்தில் ஏறி செல்வான். அது திரும்ப வீட்டுக்கே வந்துவிடும்.
ராஜா பள்ளிக்கூடத்திலிருந்து வரும்வரை கனிமொழி செவலையோடு விளையாடுவாள். ’எங்க போறடா செவலை….அங்க தண்ணி பாய்ஞ்சி கெடக்கு கால்ல சகதியாரும்… இங்கே வாடா…” என்று ஓடி போய் தூக்கிக் கொண்டு வருவாள். அதற்கு பழைய பாசிமணி எடுத்து வந்து கழுத்தில் போட்டு அழகு பார்ப்பாள். சில நேரம் குளிப்பாட்டி விடுவாள்.
“அதுக்கு அழுகத் தெரிஞ்சா அழுதுரும்.. கையும் காலும் வச்சிக்கிட்டு ச்சும்மா இருக்கமாட்டா…” என்று அவள் அம்மா கற்பகம் திட்டுவாள். “நான் என்ன செஞ்சன்… ஒன்னுஞ் செய்யல…” என்று சொல்லிவிட்டு அமைதியாக செவலையை விட்டு தள்ளி உக்கார்ந்து கொள்வாள்.
நான்கைந்து மாசம் கழித்து ஆச்சரியத்தோடு பார்த்த லட்சுமி .
“நம்ம செவலைதானேக்கா…நல்லா வளர்ந்திருச்சே..” இனிமே அது பாட்டுக்கு அலையட்டும்…. நல்லா கஞ்சிய ஊத்துஙக… கவனமாக பார்த்துங்கம்மா” என்றாள் அவள் கையில் வைத்திருந்த பாக்கெட்டைப் பிரித்து நான்கு பிஸ்கட்டை எடுத்து போட்டாள். படுத்துக்கிடந்த செவலை எழுந்து ஓடி போய் ஒவ்வொன்றாக நாக்கை சுழற்றி வாயால் கவ்வி எடுத்து “கருக்..கருக்..” என்று தின்றது.
ஊருக்குள் நாய்களின் சத்தம் கேட்டு ஓடிய செவலையைபார்த்து கற்பகத்தின் முகத்தில் படர்ந்த மகிழ்ச்சியோடு .’ரோட்ல யாரு போனாலும் இங்கிருந்தே குரைச்சிட்டே இருக்கும். ஒருநாள் ஊருக்குள்ள கடைக்கு போனேன். காளியம்மன் கோயில்கிட்ட படுத்துக்கிடந்த நாயி என்னைப் பார்த்து குரைச்சிட்டு கடிக்க ஓடி வந்தது.. நம்ம செவலை பாய்ஞ்சி ஓடி அதை எதுத்து நின்னு குரைச்சி சண்டை போட்டு விரட்டிருச்சி.. அதுல இருந்து நான் எங்க போனாலும் கூடவே வரும்’ என்றாள்.
அதற்கு லட்சுமி, ‘எங்க வீட்லயும்தான் செவப்பி இருக்கு. அது கேட்டை விட்டு எங்கயும் போகாது வாசல் பக்கத்துலதான் படுத்துகிடக்கும் நான் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரத்தட்டியும்’ என்றாள்,
பதிலுக்கு கற்பகம், ‘அப்படிதான் ஒருநாள் மேலபுஞ்சைக்கு பருத்தி எடுக்க போயிருந்தேன். பக்கத்து புஞ்சையில் எப்போதும் ஆளுக இருப்பாக.. அன்னைக்கு பார்த்து யாருமே இல்லை. மதியம் ஒரு மணி இருக்கும். பக்கத்து புஞ்சை வாகைமரத்தை ஒரு உலுக்கு உலுக்கி சருகுகளை எல்லாம் ஆளு உயரத்துக்குக் மேல சுழடிக்கிட்டு என்னைப் பார்த்து வந்துச்சி. பயம்னா பயமில்லை. ஒரு நிமிசம் கண்ணை மூடிக்கிட்டு கருப்பையா.. நீதான் காப்பாத்தனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு கண்ணைத் திறந்து பார்க்கிறேன். எங்கிருந்துதான் வந்துச்சு.. எப்ப வந்துச்சினு தெரியலம்மா நம்ம செவலை என் பக்கத்துல வந்து நின்னுச்சி. என் பக்கமா வந்த சூறாவளி அப்படியே விலகி தூரமா போயிருச்சி.. அப்ப எனக்கு “நம்ம கருப்பையாவே காவலுக்கு வந்து என் கூட நின்ன மாதிரி நம்ம செவலை இருந்துச்சி. அதுலயிருந்து செவல மேல பாசம் அதிகமாயிருச்சி’ என்று நெகிழ்வுடன் சொன்னாள்
‘நல்லதும்மா.. சந்தோசம்…இன்னைக்கு கயத்தாறுல ஒரு மீட்டிங் இருக்கு. போயிட்டு வாரேன்ம்மா…’ என்று இருசக்கர வாகனத்தில் கிளம்பினாள் லட்சுமி.
°°°°°
ஒருநாள் கூடை நிறைய ஆட்டுச்சாணத்தை சுமந்து கொண்டு வந்தார் கற்பகம் அப்பா சாமி. தோட்டத்தில் இருக்கும் குப்பையில “பொத்’ என்று சாணிக்கூடையைப் போட்டார். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து ரெண்டு உதறு உதறி கழுத்தில் போட்டுக்கொண்டார். கற்பகம் வீட்டு முற்றத்தில் நின்று தனது வலது காலில் கூடையை வெளிப்பக்கமாக லேசாக சாய்த்து நிறுத்தி வலது கையால் பிடித்தபடி “ஏலேய் கனிமொழி…உங்க அம்மாவ எங்கடா” என்று பேச்சுக் கொடுத்தார் சாமி.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தவள் எழுந்து சின்னதாய் ஓடிப் போய் “யம்மா.. தாத்தா கூப்பிடடுதாரு” என்றாள் கனிமொழி.
சமையறைக்குள் இருந்து வெளியே வாசலுக்கு வந்து நின்று கொண்டே “என்னப்பா…கூப்பிட்டீகளா?” என்றாள் கற்பகம்
அவரின் பார்வை நாலா பக்கமும் தோட்டத்தைச் சுற்றி பார்த்து கற்பகத்தை நோக்கி, ’நம்ம செவலைய எங்கடா…?” என்றார்.
“அது ஊருக்குள்ள நாய்களோட காளியம்மன் கோயில்கார அலையும்.. என்னாச்சிப்பா…” என்று கற்பகம் பதற்றத்தோடு கேட்டாள்.
”பெருமாள் வூட்டு நாயி தங்கமாரி பாட்டி கூரை வீட்ல ஒரு பானை நெறைய கம்மஞ்கஞ்சி காய்ச்சி வச்சிருந்தாளாம். மஞ்சனத்தி தட்டிய தள்ளிவுட்டுட்டு அம்புட்டு கஞ்சியவும் தின்னுட்டு போயிருச்சாம். வசவுனா வசவு நாறிப் போச்சாம் ஊரே வேடிக்கை பார்த்திருக்குடா” என்று சொன்னார் அப்பா.
அவர் சொல்வதை பீதியுடன் கேட்டுக்கொணடிருந்தாள் கற்பகம்.
“நல்ல வெடக் கோழி பத்து இருக்கும் நின்னுச்சி… வலுசா பிடிச்சி தின்னுருச்சினு…
‘தெனமும் ஊருக்குள்ள யாரு கோழியவாது பிடிச்சி தின்னுருதாம்…
எத்தன தடவதான் “அவுக வீட்ல போயி வைதுட்டு வாரண்ணே” என்று மாடத்தி ஆவலாதி சொல்லுதாடா” என்றார் அப்பா.
இப்போது செவலை எங்கே அலைகிறதோ என்று எண்ணிக்கொண்டே “.நான் இங்க தோட்டத்துல இருக்கிறதால எனக்கெதுவும் தெரிலப்பா” என்றாள்.
”கடைக்கார மச்சான் வேற அவுரு தோட்டத்துல நாலு நாய்க சண்டை போட்டு பாத்திக்குள்ள ஓடி பருத்திச் செடிகள ஒடிச்சிருச்சாம்… ஊருக்குள்ள ஒரே சண்டையா போடுதாகடா..” என்று நாய்கள் செய்யும் அலப்பறையை அடுக்கடுக்காக சொன்னார்.
“அதானப்பா!.. இந்த நாய்க ரொம்ப அழிம்பு பண்ணுது.. பெறகு வையாம என்ன செய்வாக..” என்று மனசுக்குள் செவலையையும் நினைத்தாள் கற்பகம்.
”நம்ம செவலையும் ஊருக்குள்ள இருக்கிற நாய்களோடதான் அலையுதுடா. யாரு நாயாவது தப்பு செஞ்சாலும் அவுக நாயிதான் கோழிய பிடிச்சிட்டு போச்சி, கஞ்சிய தின்னுருச்சிருனு ஆவலாதி சொல்லுவாக” என்றார்.
வீட்டைச் சுத்தி தோட்டம் காடு மகசூல் இருக்கிறதால் இங்கே ஆடு கோழி நாய் எல்லாம் வளர்க்க முடியாது என்றும்.. அப்டியே வளர்த்தாலும் கண்ணும் கருத்துமா பார்க்க வேண்டும் என்றும் சொன்னார். ராஜாவும் கனிமொழியும் தாத்தா சொன்னதை எல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள். செவலையினால் பிரச்சனை வந்துவிடுமோ ஏன்று மனதிற்குள் அச்சப்பட்டாள் கற்பகம். துண்டை தலையில் சுற்றி சும்மாடு போல கட்டி வெறும் கூடை கீழே விழுகாதவாறு உட்கார வைத்துப் பிடிக்காமலே கைகளை வீசி நடந்து ஊருக்குள் நடந்து போனார் சாமி.
°°°°°°
இனிமேல் செவலைய சங்கிலி போட்டு வீட்டுக்கு முன்னாடி இருக்கிற நார்த்தங்காய் மரத்தில் கட்டிப்போட்டுதான் வளர்க்க வேண்டும் என்று பேசி ஒரு மனதாக முடிவுக்கு வந்தார்கள் கற்பகம்,ராஜா.கனிமொழி.
அன்று மதியம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே முற்றத்தில் நாக்கைத் தொங்கப் போட்டபடியே எச்சில் வடிய வீட்டைப் பார்த்து நின்றது. அவ்வளவு பெரிய வீடும் சிறிய நாயை பார்த்தபடி அமைதியாக இருந்தது.
கனிமொழி வாராண்டாவில் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தவள். யதேச்சையாக பார்த்துவிட்டாள். செவலை வாலை மெதுவாக ஆட்டியது. எதையோ வீசினால் பிடிப்பதைப்போல தலையை அசைத்தபடி தரையை முன்னங்காலால் பிராண்டியபடி நின்று பார்த்தது. உடலோடு சேர்த்து வாலை வேகமாக ஆட்டியது.
“யம்மா கொஞ்சம் வெளிய வந்து பாரேன்” என்றாள் கனிமொழி.
“வந்திருச்சா அப்டியே நைசா போய் பிடிடா.. சங்கிலிய எடுத்துட்டு வாரேன் மரத்தில கட்டிப்போட்ருவம்” என்று வாசல்வரை வந்து செவலையைப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள் கற்பகம்.
“சீக்கிரம் எடுத்துட்டு வா..” என்று செவலையின் கழுத்தை இரண்டு கைகளாலும் சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டாள் கனிமொழி.
“செத்த பொறு… இந்தா வந்துட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே சங்கிலியோடு வீட்டுக்குள்ளிருந்து வேகமாக வந்தாள் கற்பகம்.
“சங்கிலியை நல்லா கட்டு கழுத்தை இறுக்கிறாதே தாயே” என்று சத்தம் போட்டாள் கனிமொழி.
குற்றவாளியைப்போல செவலையைக் கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள்
“நம்ம பழைய வடச்சட்டியில சோறு போட்ருவம்… அது பாட்டுக்குத் தின்னுட்டு குரைச்சிட்டு கெடக்கட்டும்… இங்கனயே காவலுக்கு..” என்று தாயும் மகளுமாய் சேர்ந்து நார்த்தங்காய் மரத்தடியில் கட்டிப்போட்டார்கள்.
சூரியன் மேற்கே மறையும் நேரம். தோட்டத்தில் பசுமாட்டிற்காக அகத்திக்குழையை ஒடித்து கட்டி கொண்டு வருவதற்காக வலது கையில் சுருடடி வைத்த ஒரு கொச்சை கயிறோடு வீட்டு முற்றத்தில் நடந்து கொண்டே பார்த்தார் சாமி.
“நல்லதா போச்சிடா… அலப்பறை இல்ல… அவுத்துவுடாமா பத்திரமா பாத்துக்கோங்கடா” என்றார்.
’சரிங்க தாத்தா’ என்றாள் கனிமொழி
பணிந்த குரலில் “அவுத்துவிடமாட்டோம்ப்பா..” என்றாள் கற்பகம்.
தினமும் வேளை வேளைக்கு பழைய வடச்சட்டி நிறைய சோறும் குழம்பும் போட்டார்கள். அது தின்றது போக ஈ மொய்த்துக்கிடக்கும். கிழக்கே ரோட்டில் வடக்காம தெற்காம வருகிற போகிறவர்களின் வண்டி சத்தத்தைக் கேட்டு கொஞ்ச நேரம் குரைக்கும். சில நேரம் சங்கிலியை கடிக்கும். தன்னாலே குரைக்கும்.. சில நேரம் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து காய்ந்திருக்கும். அதன் முகத்தைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்.
சனி ஞாயிறு பள்ளிக்கூடம் விடுமுறை நாட்களில் ராஜாவும் அவன் தங்கச்சி கனிமொழியும் செவலை கட்டியிருக்கும் நார்த்தங்காய் மரத்துக்கு பக்கத்தில் இருக்கிற புங்கமரத்துல சேலையில தொட்டில் கட்டி அதுக்குள்ளே உட்கார்ந்து ஊஞ்சல் ஆடி விளையாடுவார்கள். அப்போது செவலை மரத்தை சுத்தி சுத்தி வட்டமடிக்கும். மரத்தில் சங்கிலி சுற்றிக்கொள்ளும். பிறகு சங்கிலியை அவிழ்த்து மறுபடியும் கட்டி போடுவான் ராஜா.
இரவு நேரங்களில் ஊருக்குள் எதாவது ஒரு நாயின் குரைப்புச் சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து நின்று வாயிலிருந்து எச்சில் தெறிக்க கிழக்கே ரோட்டைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருக்கும். கற்பகம் சோறு கொண்டு வருவதைப் பார்த்தவுடன் எழுந்து சங்கிலியை இழுத்துக்கொண்டு வாலை ஆட்டும். பாத்திரத்தில் சோறு போட்டவுடனே பசியில் சோறை திங்கும்.
ஞாயிறுக்கிழமை தோறும் கறிக்கோழிக் கடையிலிருந்து கோழிக்கால்களை வாங்கிக்கொண்டுவந்து செவலைக்கு் போடுவான் ராஜா. அது கடுக்கு கடுக்கு என்று கடித்துச் சாப்பிடும். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு எஞ்சிய எலும்புத்துணுக்களோடு சோறு போடுவார்கள். அன்று முழுக்க செவலைக்கு அசைவம்தான். அப்படியே மூன்று மாதமாக ஒரே இடத்தில் கட்டிக் கிடந்தது.
°°°°°°
அன்று தை பொங்கல். எல்லோரும் ஆடு மாடுகளை பத்திக்கொண்டு போய் கண்மாயில் நன்றாக குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் வைத்து பொங்கல் செய்து அதுகளுக்கும் தின்னக் கொடுத்தார்கள்.
நார்த்தங்காய் மரத்தடியில் கட்டிக்கிடக்கும் செவலையைப் பார்த்தவாறே ராஜாவை அழைத்தாள். ”நம்ம செவலைய அவுத்துவிட்டு குளிப்பாட்டி விட்டா நல்லதுடா” என்றாள் கற்பகம். அவனும் அதேயே விரும்பினான்.
இரண்டு மூன்று வாளி தண்ணீர் பிடித்து செவலையின் மேல ஊற்றி நல்லா தேய்ச்சி குளி்ப்பாட்டிவிட்டார்கள். ஒரே இடத்தில் கட்டிகிடந்ததால் உடம்பெங்கும் கரிசல் மண் ஒட்டி கருமையாக இருந்தது. குளுக்கோஸ் ஷாம்பூவை ஏடுத்து வந்தான் ராஜா. கையில் ஊற்றி நன்றாக தேய்த்து நுரை பொங்க தேய்த்து அலசினான். பார்க்க இப்போது அதன் இயல்பான சந்தன நிறத்தில் இருந்தது. தலையையும் உடலையும் குலுக்கிக்கொண்டே தண்ணீர் சிதறியடிக்க ஓடியது.
கிணற்றோரம் தென்னமரத்திலிருந்து அணில்கள் ஒன்றுக்கொன்று விரட்டிக்கொண்டு தாவி விளையாடுவதைப் பார்த்தது. ஒரே இடத்தில் கட்டி கிடந்ததால் பைத்தியம் பிடிச்சது போல இருந்த செவலைக்கு இப்போது சுதந்திரம் கிடைத்தது மாதிரி இருந்தது. செவலையைப் பார்த்து செடிகளின் நிழலில் இளைப்பாறிய கோழிகள் கலைந்து ஓடின.
ரோட்டோரம் புதர்போல் அடர்ந்து வளர்ந்து நிற்கும் மூங்கில் மரத்தடியைச் சுற்றிவிட்டு பக்கத்து பருத்தி தோட்டத்திற்குள் நுழைந்தது.
எதையோ வாயில் கவ்வியபடி தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தின்னத் தொடங்கியது. வீட்டின் முற்றத்திலிருந்து வடக்கே இருக்கும் அந்த பருத்தி தோட்டத்திற்குள் எதையோ பிடித்து தின்கிறது என்று நினைத்துக்கொண்டாள் கற்பகம்.
பெரிய பெரிய பாறைக் கற்களும் செஞ்சரல்களும் சிறிய மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் கிணற்றோரம் நிற்பதைப் பார்த்த கனிமொழி “யம்மோ நம்ம செவலை அணிலை பிடிச்சித் திங்குமா “கடக்கு மொடக்குனு” எலும்பைக் கடிச்சி’ என்றாள் கனிமொழி கொஞ்ச நேரம் கழித்து.
“இவ்ளோ நாளா கட்டியே போட்டுருந்தோம்லா அதான் அணிலைப் பிடிச்சி திங்கு…திங்கட்டும்” என்று சொல்லிவிட்டு வீட்டு வேலைகளைப் பார்த்தாள் கற்பகம்.
பொழுதடைந்து இருட்டிவிட்டது. முற்றத்தில் உக்கார்ந்து இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருப்போது திடீரென “செவலை எங்கிட்டுப் போச்சு
இன்னும் வீட்டுக்கு வரலையேம்மா..’ என்றாள் கனிமொழி.
‘அது மறுபடியும் ஊருக்குள்ள நாய்களோட சேந்து சுத்தப்போயிருக்கும். எங்க போகும் பெறகு வீட்டுக்கு தானா வரும்டா கனிமொழி..” என்றாள் கற்பகம்.
”இவ்ள நாளா கட்டிப் போட்டிருந்தோம்லா அதான் வீட்டுக்குப் போனா கட்டிப் போட்டுருவாகனு வரல’ என்றான் ராஜா.
இப்ப வருமா பெறகு வருமா… என்று மூன்று பேரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். செவலை வரவில்லை.
குளிர்ந்த பனிக்காற்று வீசும் இரவில் பக்கத்து ஊர் ஆவூடையம்மாள்புரம் காளியம்மன் கோவிலிருந்து “இப்பொழுது நேரம் ஒன்பது மணி” என்று ஒலித்தது. அதை கேட்ட கற்பகம்,”ஏலேய் கனிமொழி எந்திரிடா…பாயை சுருட்டி எடுத்துட்டு வாடா ராஜா…குளுருது தடுமம் பிடிச்சிக்கிடும் வீட்டுக்குள்ள போவம்..” என்று கற்பகம் இருவரையும் அழைத்துக் கொண்டு போனாள்.
மறுநாள் காலையில் “செவலை ஊருக்குள்ளேதான் அலையும்… நாம போயி பிடிச்சிட்டு வருவோம்…” என்று இருவரும் கிளம்பினார்கள். ஊருக்குள்ளே போய் காளியம்மன் கோவில் பக்கம் தண்ணீர் டேங்க் பக்கம், தெற்கே பாம்பாளம்மன் கோவில் எல்லாம் தேடிப் பார்த்தார்கள். செவலை கண்ணில் தென்படவே இல்லை. “எங்கே போச்சோ. என்ன ஆச்சோ..”என மனக்குள் புழுங்கினாள் கற்பகம். இருவரும் பேசிக்கொண்டே தெருவில் நடந்தார்கள்.
“என்னத்த தாயும் மகளும்மா தேடுதீக” என்று கேட்டாள் நடுவூட்டு பாட்டி.
“எங்க செவலையத்தான் தேடுதோம் பாட்டி, காணோம்”
“அது எங்க போகும் தன்னால வூட்டுக்கு வரும் நீங்க போயி கஞ்சி தண்ணி குடிங்க தேரமாகுது லா” என்றாள்.
“ஆமா பாட்டி வீட்டுக்குப் போறோம்..” என்று வீட்டிற்கு போகும் வழிநெடுக ரோட்டின் இருபுறமும் செவலை யார் தோட்டத்திற்குள்ளேயாவது நிற்கிறதா என்று பார்த்தபடியே இருவரும் வீட்டிற்கு நடந்து போனார்கள். மெதுவாக கம்பை ஊன்றிக்
கொண்டு எட்டு வைத்து நடக்கும் மூதாட்டியைப் போல்.
°°°°°°°°
பத்துமணி இருக்கும் வெயில் அடித்தது. இடது தோளில் ஒரு மம்பட்டியையும் வலது கையில் பசு மாட்டையும் இழுத்துக் கொண்டு வந்தார் கற்பகம் அப்பா
தென்னை மரத்தைச் சுற்றி வளர்ந்து இருந்த புற்களில் பனித்துளிகளின் ஈரம் காய்ந்திருந்தது. மேய்ச்சலுக்காக நீண்ட கயிற்றினால் பசு மாட்டை தென்னமரத்தில் கட்டி விட்டு” ஏலேய் சின்னக்குட்டி” என்றார். முற்றத்தில் சாப்பாட்டு தட்டுகளையும், பாத்திரங்ளையும் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்த கற்பகம் “என்னப்பா’ என்றாள்.
‘இப்பதான் பூவும் பிஞ்சியும் கட்டுது பருத்திக்கு தண்ணி பாய்ச்சனும்டா’ என்று சொல்லிக்கொண்டே கிணற்றிலிருந்து சற்று தூரம் இருக்கும் மின்கம்பத்தோடு பொருத்தப்பட்டிருக்கும் மீட்டர் பெட்டியில் மூன்று பல்புகளை எரிவதை உறுதி செய்தார். பச்சை பட்டனை அழுத்தினார். தண்ணீர் சிறு குட்டையில் விழுந்து மேற்காம வாய்க்கால் வழியாக ஒரு நதியைப் போல ஓடியது. கற்பகம் இரண்டு குடம் தண்ணீர் பிடித்தாள்.
“சரிலே மோட்டரு ஓடுறத பாத்துக்கோ. கரண்ட் போயிச்சிருனா மறுபடியும் வந்தவுடனே போட்டு வுடுடா” என்றார்
’சரிப்பா’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
பனிரெண்டு மணி இருக்கும். வேகமாக சுழன்ற மின்விசிறியின் வேகம் குறைந்து மெல்ல சுழன்று நின்றுவிட்டது.
“கரண்ட் போயிருச்சி” என்று நினைத்தவள் வீட்டுக்கு வெளியே வந்தாள். பம்பு செட் நின்றுவிட்டதைப் பார்த்தாள். “சரி கிணத்துல தண்ணி எவ்வளவு கெடக்கு பார்ப்போம்…” என்று செருப்பு காலோடு நடந்தாள்.
நெருஞ்சில் முள்ளும் அடர்ந்த புற்களும் இடுப்பு உயரத்துக்கு துத்திச் செடிகளும். சிறிய வேப்பமரமும் வளர்ந்திருந்தது.
மெதுவாக கிணற்றை எட்டிப் பார்த்தாள். காலடி ஓசை கேட்டு பட பட வென புறாக்கள் கூட்டமாக கிணற்றுக்குள் இருந்து பறந்து வெளியேறின. தண்ணீர் மட்டம் குறைந்து நான்கு பக்கமும் உள்ளே கூர்மையான கரும்பாறை சுவர்கள் தெரிந்தது. கை பட்டாலே பொலு பொலுனு உதிரும் செஞ்சரல் பாறைகளும் . பாறைக்கு மேலே நான்கு பக்கமும் வெள்ளைநிற சதுர கற்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. வட கிழக்கு மூலையிலிருந்து ஏற இறங்க கிணற்றின் உள்புறச்சுவரிலிருந்து வெளியே நீட்டியபடி ஒரு சாண் அளவுக்கு படிக்கட்டுகளும், சுவரின் விரிசல்களில் மஞ்சனத்தி மரங்கள் வளர்ந்து தரைமட்டத்திற்கு வெளியே தெரியும்படி வளர்ந்திருந்தன. சிதைந்து போன பாம்பு சட்டைகள் பாறைகளின் பொந்துகளில் இருந்தது. பாறை தொடங்கும் இடத்திலிருந்து ஒழுங்கற்ற படிக்கட்டுகளும் ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் இடையே உயரம் கூடுதலாகவும் இருந்தது. அவளுக்கு பார்க்க கிணற்றுக்குள் ஒரு காடே இருப்பது போல அச்சமாக இருந்தது.
கிணற்றுத் தண்ணீரில் மேகங்கள் பனிக்கட்டிகளைக் கொட்டியதையைப் போல தெரிந்தது. தெற்கு பக்க சுவரோரம் மிதக்கும் பழுத்த இலைகள் சருகுகளோடு இரண்டு நாளாக காணாமல் போன செவலை செத்து மிதந்து கிடப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. சத்தம் போட்டுக்கொண்டு அலறிக்கொண்டு ஓடினாள். மேற்கேயிருந்து வாய்க்கால் வழியாக மண்வெட்டியோடு கிணறறைப் பார்த்து வந்து கொண்டிருந்தார் சாமி.
வலது கையால் சைகை காட்டி “யப்போவ் சீக்கிரம் வாங்க.. நம்ம செவலை கெணத்துக்குள்ள செத்துகிடக்குப்பா…!” என்று கத்தி அழைத்தாள் கற்பகம்.
என்னமோ ஏதோ என்று தண்ணீரும் சேறும் தெறிக்க வாய்க்கால் நடுவே ஓடிவந்தார். மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு. காலில் குத்திய நெருஞ்சமுள்ளைப் புடுங்காமல் புல்லில் காலை தேய்த்தபடி வந்து கிணற்றை எட்டிப்பார்த்தார்.
“எப்பவுமே நம்ம கெணத்துல நெறைய தண்ணி கெடக்கும்னு நெனச்சிட்டு அப்படியே வந்ததும் மோட்டர போட்டுவிட்டுட்டேன். நான் பாக்கலடா” என்றார்.
“இத எப்படி கெணத்துக்குள்ள இருந்து வெளிய தூக்க…”என்று யோசித்தார்.
”மாடத்தி வீட்ல பாரக்கயிறு இருக்கும் நான் கேட்டேனு சொல்லி வாங்கிட்டு வாடா” என்று கற்பகத்திடம் சொன்னார். ஊருக்குள்ளே போய் வாங்கிக்கொண்டு வேகமா வந்தாள்.
“பாலகிட்ணன கூப்புட்டு வாடா…களத்துல வேலை செஞ்சிட்டுருக்கான்…” என்று அந்த திசையைப் பார்த்து கையை நீட்டி சொன்னார்.
வீட்டுக்கு பின்னாடி இருக்கிற களத்துக்கு போய் “சின்னையா அப்பா கூப்புடுதாரு” என்றதும் கையிலிருந்த விளக்கமாரை போட்டுவிட்டு ஒரு பீடியை பற்ற வைத்தார். வேகமாக ரெண்டு பேரும் கிணற்றுப் பக்கம் வந்தார்கள்.
கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு ”நம்மள எதுக்கு கூப்புட்டாக..” என்பதை புரிந்து கொண்டு, “இந்த கெணத்துல எப்டி எறங்கி நாயைத் தூக்க…’ என்று அவங்க அண்ணன் சாமிகிட்ட தயக்கத்தோடு வாய்க்குள்ளேயே அவர்கள் காது கேட்கும்படியாகச் சொன்னார்.
கற்பகம் “நான் கெணத்துக்குள்ள எறங்கி கட்டிவுடுதேம்ப்பா” என்றாள். அழுகை வருவது போல இருந்துச்சி வைராக்கியத்தோடு மனதை திடப்படுத்திக்கொண்டு மெதுவாக இறங்கினாள்.
“பார்த்து எறங்குடா” என்றார் கற்பகம் அப்பா.
“சரிங்கப்பா” என்று பதற்றமில்லாமல் ஒவ்வொரு படியிலும் காலை வைத்து மிகவும் கவனமாக மெதுவாக இறங்கினாள். சுவற்றை வலது கையால் பிடித்துக்கொண்டே இடது கையை படியில் ஊன்றிக் குத்த வைத்து குத்த வைத்து இறங்கினாள். அப்போது அவளுக்கு பயம் காணாமல் போயிருந்தது. தண்ணீர் மட்டத்திற்கு கீழ் முதல்படியில் மெதுவாக கால்களை ஊன்றி நின்றாள்
“கயிறை இறக்குங்கப்பா..“ என்று சொல்லிவிட்டு வாயை இறுக்க மூடிக்கொண்டு நீந்திப் போய் கயிறு முனையை முன்னங்கால் அடிவயிற்றோடு இழுத்து கழுத்துக்கு கீழ முதுகோடு சேர்த்து ஒரு முடிச்சி போட்டு மீதியிருந்த முனைய மேல இருந்து இழுத்து பிடித்திருக்கிற கயிறோடு இறுக்கி கட்டினாள்.
“போதும்டா…நீ மெதுவா பாத்து மேல வாடா..”
நான் வெளியே இழுத்துருதேன்… என்று கயிறைப் பிடித்து மேலாக்க இழுத்தார் கற்பகம் அப்பா. விரைத்துப் போயிருந்த ராமுவின் பின்னங்கால்களிலிருந்தும் உடம்பிலிருந்தும் தண்ணீர் சொட்டு சொட்டா கெணத்துக்குள்ள விழுந்தது.
ஒரு வழியாக கற்பகம் கை காலில் சின்னச் சின்ன சிராய்ப்புகளோடு கிணற்றுக்கு வெளியே வந்தாள். ஈரமாய் இருந்த ஆடையை பிடித்து கைகளால் பிழிந்தாள். சரல்மண் ஒட்டியிருந்ததை வலது கையாலும் இடது கையாலும் தட்டிவிட்டாள்.
செவலையின் முன்னங்கால்களை அப்பாவும் பின்னங்கால்களை அவளுடைய சின்னையாவும் பிடித்து தூக்கிக் கொண்டுபோய் வீட்டுக்கு மேற்கே சப்போட்டா மரத்து நிழலில் இறக்கி படுக்க வைத்தார்கள். நார்த்தங்காய் மரத்துக்கடியில புதைச்சிருவோம் என்று அது கால்களால் பறித்து வைத்திருந்த அதே குழியில் அதை புதைப்பதற்காக குழியைத் தோண்ட ஆரம்பித்தார்கள்
செவலை படுத்துறங்குவதை போல இருந்தது. கோபத்தில் பற்களை கடித்தபடி வாய் திறந்திருந்தது. நிலைகுத்திய கண்கள் வெளிறிப் போய் எதையோ பார்த்து அழுவதைப் போல இருந்தது. ஈக்கள் அதன் கண்ணீரை துடைப்பது போல மொய்த்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கற்பகம் கண்களில் கண்ணீர் திரண்டு வழிய வழிய துடைத்துக் கொண்டே சணல் சாக்கைப் எடுத்துட்டு வந்து போட்டு மூடி வைத்தாள். அவங்க அம்மாவைப் பார்த்துக்கொண்டே சுருங்கிய முகத்தோடு எதுவும் பேசாமல் ராஜாவும் கனிமொழியும் நின்றுகொண்டிருந்தார்கள். மலர் அவர்களுக்கு உதவியாக கூடவே இருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் குழியைத் தோண்டி முடித்தார்கள். செவலையை சணல் சாக்கோடு போட்டு மூடி தோண்டிய மண்ணை வெட்டி இழுத்து மூடினார் கற்பகத்தின் அப்பா. ரோட்டோரம் இருந்த இலந்தை செடியை வெட்டி வந்தார் அவங்க சின்னையா. குழியை மூடி தரைக்கு மேலே இலந்த முள் செடி விரித்துவைத்து மேலும் மண்ணைப் போட்டு மேடேற்றினார். அதற்கு மேல் மீதமிருந்த இலந்தை முள் செடிகளை வைத்து இரண்டு பெரிய பெரிய கல்லையும் வைத்துவிட்டு “எல்லாரும போயி குளிங்கடா… “ என்றார் கற்பகம் அப்பா.
இதை எல்லாம் கவனித்துத் கொண்டிருந்த பக்கத்துத் தோட்டக்காரன் ஆறுமுகம் ரோட்டில் எதுவும் தெரியாதது போல் தலையை குனிந்தவாறே வேகமாக ஊருக்குள் அவர் வீட்டுக்கு நடந்து போனார்.
°°°°°°
பொழுது இருட்டி இருள் கவிழும் நேரம்.
“ஏடா மலர்” நாலுநாளுக்கு முன்னாடி. பருத்திச்செடிக்கு எதையோ உரம் வெதைச்சது கணக்கா வெதச்சான்டா பக்கத்துத் தோட்டக்காரன்…” என்றாள் கற்பகம்.
“அதானக்கா” என்றாள் ஆவலோடு மலர்.
”உரத்தை வெதச்சா பருத்திக்கு தண்ணி பாய்ச்சனுமே இவன் தண்ணி பாய்ச்சலயே னு அப்பயே ஒரு சந்தேகம் வந்ததுடா”. என்றாள் கற்பகம்.
“அதானக்கா, அவன் மோட்டாரே போடலயே’’ என்றாள் மலர்.
“ரோட்ல போற வாரவூக எல்லாம் இவன் பிஞ்சைகிட்ட வந்ததும் எதோ வாசம் வீசுதுனாங்க… அன்னைக்குதான்டா செவலை அவன் பருத்திக்குள்ள அணிலை பிடிச்சி தின்னுச்சி…நான் பார்த்தேன்” என்றாள் கற்பகம்
”இப்பதான தெரியுது பருத்திக்காயப்பூராம் வல்லுசா அணிலுக கொறிச்சி போடுதுனு அரிசியில எலிமருந்த கலந்து வெதச்சிருக்கான். அத தின்னுட்டு அணில்கள் செத்து கெடந்துருக்கு. அந்த செத்த அணிலை செவலை தின்னுருக்கு… கெணத்துச் சரல்கிட்டயும் செத்துகிடந்த அணிலை தின்னுட்டு எப்படியோ மயங்கி கெணத்துக்குள்ள விழுந்து செத்துருக்கு…” என்றாள் கற்பகம்.
“கெடுதலக்காரப்பயக்கா.. அதுக்கு எலி மருந்த போயா வைப்பான்.. பாவம் ஏகப்பட்ட அணிலுகளும் செத்துருச்சி.. அவன் வச்சிட்டு என்னத்த அள்ளி கட்டப்போறான்” என்று ஆத்திரபட்டு வைதாள் மலர்.
“போனது போயிருச்சி கவலைப்படாதக்கா.. லட்சுமி அக்காக்கு தெரிஞ்சா ரொம்ப சங்கடபடுவா… சொல்ல வேண்டாம்… அவளா தெரிஞ்சி கேட்டா சொல்லுக்கா… இல்லைனா வேண்டாம்…” என்றாள் மலர்.
‘சரிடா”
“இரு, காலையில பார்ப்போம்” என்றாள் கற்பகம்
“ஆஞ் சரிக்கா’ என்றாள் மலர்.
“வீட்டுக்கு போவும்மா” என்று ஓயாமல் கையைப்பிடித்து இழுத்தாள் கனிமொழி
“சரிடா பாப்பா”
“இவ வேற இளிஞ்சிட்டு இருக்கா! வீட்டுக்குப் போறோம்” என்றாள் கற்பகம்
°°°°°°°
அன்று இரவு பத்து மணி இருக்கும். உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் ராஜா. திரும்பி படுத்திருந்த கற்பகம் செவலையின் நினைவாக இருந்தாள்.
“எதோ ஒன்னு நம்மள விட்டு போச்சே… எதோ ஒன்ன நாம இழந்திட்டோமே… செவலை அவுத்துவுட்டது தப்பா போச்சே…” என்று அவளுக்குள்ளே அவளை வதைத்தது மனசாட்சி.
“அவுத்துவிடாம பாத்துக்கோங்க ‘என்று அவளது அப்பா சொன்னதை எண்ணி வருந்தினாள். வீடே செவலையின் குரைப்புச்சத்தம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதை உணர்ந்தாள். அந்த இரவு சூன்யமாக இருந்தது.
சாயந்திரம் செவலையைப் புதைத்த நார்த்தாங்காய் மரத்தடியைப் பார்த்து கனிமொழி “யம்மா… நம்ம செவலை சாகலம்மா.. மண்ணுக்குள்ள தூங்கிட்டுதான் இருக்கும்மா…” என்று கை நீட்டிச் சொன்னதை நினைத்தாள். பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகளை அணைத்துக்கொண்டாள்
அப்போது ஊருக்குள் ஏதோ ஒரு நாயின் குரைப்புச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. கண்களில் அவளையறியாமலே கண்ணீர் கசிந்தது. அவளுக்கு கத்தி அழுகனும் போல் இருந்தது.
000
பட்டியூர் செந்தில்குமார்
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் பட்டியூர் கிராமத்தைச் சார்ந்தவர் பட்டியூர் செந்தில்குமார். தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
இவரின் முதல் ஹைக்கூத் தொகுப்பு “பறக்க ஆயத்தமாகும் குருவி” இடையன் – இடைச்சி நூலகம் வெளியீடாக 2021 ஆம் ஆண்டு வந்துள்ளது. இது என் முதல் சிறுகதை.