மேசையின் மேல் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பாலிதீன் பையில், இரு  இணை வண்ண மீன்கள் நீந்த முடியாமல் துடுப்புகளை அசைத்தபடி  நின்றுக்கொண்டிருந்தன. அதனருகில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்த  மீன் தொட்டியின் அடித்தளத்தில், குறிப்பிட்ட அளவு கூழாங்கற்கள்  சரிமட்டத்திற்கு பரப்பப்பட்டிருந்தது.

நான்கு வயதேயான எழிலன் மேசையில் இடதுபுறம் ஒரு பெரிய  கண்ணாடி குடுவையில் வைக்கப்பட்டிருந்த மண்ணை ஒரு கைப்பிடி  அள்ளி மீன் தொட்டிக்குள் போட்டான்.

எழிலனின் அந்த செயல், முன்பு ஒருநாள் புதரின் அடியில் மண் சரிவில்  கிடந்தபோது வல்லியப்பனுடைய மனதில் ஏற்பட்ட அதே பதற்றத்தை,  எதிர் சுவற்றில் மாட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் இருந்த, ‘பறை  இசைக்கும் மக்களின் குலதெய்வமான’ வல்லியக்கன்னுக்கு  ஏற்படுத்தியது.

அடுத்த  கைப்பிடி மண்ணை அள்ளியதும், அவரின் பதற்றம் இன்னும்  அதிகமாகியது. நல்லவேளையாக அதை மீன் தொட்டியினுள்  போடுவதற்கு முன் அடுப்படியிலிருந்து வந்த வல்லியப்பன்  கவனித்துவிட்டான். இப்போது வல்லியக்கனின் பதற்றம் வல்லியப்பனுக்கு  தொற்றிக்கொண்டது. கொண்டு வந்த தண்ணீர்  பாத்திரத்தை அப்படியே  போட்டுவிட்டு “தம்பி… தம்பி…” என ஓடி வந்து எழிலனின் கையைப்  பிடித்து, ஒரு மண் துகள்கள் கூட கீழே விழாமல், கவனமாக கண்ணாடி குடுவைக்குள் போட வைத்தான்.

“ஏன்பா மீன் தொட்டில மண்ண போடலையா” 

“மண்ணு போடக்கூடாது தம்பி”

“அப்ப பீச் ஃபுல்லா மண்ணா இருக்கு”

அவனுடைய  கேள்வி  சிரிப்பை  வரவைத்தது.  “மீன்தொட்டிக்கு  வேற  மண்ணு  போடனும்.  இதப்போட்டா  தண்ணி  கலங்கலாகிடும்.  அப்பறம்  இந்த  மண்ண  எந்த  காரணத்துக்காகவும்  வெளிய  எடுக்காத  சரியா” என்று மேசையில் சிதறிக் கிடந்த மண்ணை ஒன்றுசேர்த்து குடுவைக்குள் போட்டான் வல்லியப்பன்.

ஏன் அந்த மண்ணை எடுக்கக்கூடாது என்று அப்பா சொல்கிறார் எனத் தெரியவில்லை. ஆனாலும் சரியென தலையாட்டினான்.

வல்லியப்பன்  எட்டு  மாதங்களுக்கு  முன்பு  திடீரென்று  ஒருநாள்  தன்  தாயின்  இறப்புச்  செய்தி  கேட்டு,  யாழ்ப்பாணத்தில்  உள்ள  தனது  சொந்த  கிராமமான  புத்தூருக்குச்  சென்றிருந்தான்.  அவன்  வசித்த  பறைத்தெரு  இன்று  மருதனார்  தெருவாக  பெயர்  மாற்றம்  அடைந்திருந்தது.  அங்கு  ஒன்றிரண்டு  குடும்பங்களைத்  தவிர,  மற்ற  எல்லா  குடும்பங்களும்  இறுதி  போரின்  காரணமாக  அகதிகளாகவும்,  ஊரைவிட்டும்  இடம்பெயர்ந்திருந்தார்கள்.  அவன்  இல்லாத  கடந்த  இரண்டு  ஆண்டுகளில்,  புத்தூரை  பூர்விகமாக  கொண்டிருக்காத  சில  குடும்பங்கள்  ஊரில்  குடியேறியிருந்தனர். 

தாய்  செண்பகவள்ளியின்  உடலை  தகனம்  செய்து,  ஈமச்  சடங்குகளை  முடித்து  வீட்டிற்கு  வந்தான்.  தெருவில்  தெரிந்தவர்கள்  என்றிருந்த  நாலைந்து  பேரும்  இரவு  ஆனதும்  சென்றார்கள்.  வல்லியப்பன்  வீட்டில்  எழிலனோடு  தனிமையில்  இருந்தான். 

போர்  முடிந்து  ஒரு  வருடம்  காங்கேசன்  தோட்டத்தில்  உள்ள  போயைத்துறை  அகதிகள்  முகாமில்  இருந்துவிட்டு,  தனது  சொந்த  கிராமத்திற்கு  வந்த  அன்று  இதே  போன்ற  ஓர்  இரவில்,  வல்லியப்பன்னும்  செண்பகவள்ளியும்  வீட்டிற்கு  பின்புறம்  தங்களுக்கு  சொந்தமான  வளவில்,  கிழக்கேப்  பார்த்து  கட்டப்பட்டிருந்த  வல்லியக்கன்  கோயிலில்  வந்து  அமர்ந்திருந்தார்கள்.

நடந்த  அநீதிகளை  தட்டிக்கேட்கவும்,  கதறி  அழவும்  கேட்பார்  அற்றுப்போன  பின்பு,  யாரிடம்  பேசுவது.  என்ன  பேசுவது  என  இருவரும்  நெடுநேரம்  எதுவும்  பேசிக்கொள்ளவில்லை.  மௌனமாக  இருந்தார்கள்.  அந்த  மௌனத்தில்  அமைதி  இல்லை. 

நீண்ட  நேரத்திற்கு  பிறகு  வல்லியப்பன்  பேச  ஆரம்பித்தான்.  “என்  கண்ணு  முன்னால  நடந்த  ஒவ்வொரு  விசயமும்,  இன்னும்  என்  பின்னாடியே  நடந்து  வர்ற  மாதிரியே  இருக்கு.  என்னால  இந்த  மண்ணுல  ஒரு  அடிகூட  எடுத்து  வைக்க  முடியல.  காது  பூரா  ஊர்ந்து  வரும்  பீரங்கியும்,  எறிகணை  வெடிக்கும்  சத்தமும்,  துவக்கு  சத்தமும்தான்  கேட்டுகுது.  நாம  வேற  எதாவது  நாட்டுக்கு  போயிறலாம்”  என்றான். 

உடலைத்  தூக்கிக்கொண்டு  எங்கு  வேண்டுமானாலும்  செல்லலாம்.  மனதை  என்ன  செய்வது  என்ற  கேள்வி  எழுந்ததைப்போல்  அவள்  எதுவும்  பேசவில்லை. 

இடைவெளிவிட்டு  கெஞ்சலாக  “கொஞ்சம்  புரிஞ்சிக்கங்க”  என்றான்.  அதற்கும்  அவள்  ஒரு  வார்த்தைக்  கூட  பேசவில்லை. 

எவ்வளவோ  சொல்லியும்  வர  மறுக்கிறாளே  என்ற  கோபத்தில்,  பொறுமை  இழந்தவனாய்  “என்  பையனுக்காகவாவது  நான்  இந்த  மண்ணவிட்டு  போகதான்  போறேன்.  நம்மட  நெலம  என்  பிள்ளைக்கு  வர  வேணாம்”  என்று  சொல்லி  எழுந்து  வீட்டிற்குச்  சென்றான். 

சொல்லிப்  புலம்புவதற்கும்,  கடைசியில்  நீ  இருக்கிறாய்  என  ஏதோவொரு  நம்பிக்கையை  பற்றிக்கொள்ளவும்தானே  கடவுளர்கள்  என  நினைத்தாள்  போல.  செவ்வக  வடிவில்  நிலைக்குத்தாக  நடப்பட்டிருந்த,  மூலவடிவமான  வெள்ளைச்  சுண்ணாம்புக்  கல்லால்  ஆன  வல்லியக்கனைப்  பார்த்தபடி  செண்பகவள்ளி  அங்கேயே  அமர்ந்திருந்தாள். 

இப்படியான  வாழ்க்கை  வேண்டாம்  என்று  தன்  தாயிடம்  வாக்குவாதம்  செய்த  இதே  வல்லியப்பன்தான்,  ஆரம்பத்தில்  இயக்கத்தோடு  சேர்ந்து  இனத்துக்காக  சண்டை  செய்ய  வேண்டும்  என  நினைத்தான்.  பிறவியிலேயே  ஒரு  கால்  சற்று  சூம்பி  தெத்தி  தெத்தி  நடக்கும்  காரணத்தால்,  அவனால்  இயக்கத்தில்  சேர  முடியாமல்  போனதை  நினைத்து  சில  நேரங்களில்  வருந்தினான். 

நாள்கள்  செல்லச்  செல்ல  ஆயுதம்  ஏந்திய  போர்களில்  சாமானிய  மக்கள்  எப்படியெல்லாம்  பாதிக்கப்படுகிறார்கள்  என்பதை  கண்கூட  பார்த்தவனுக்கு,  போரின்மேல்  உள்ள  பிடிப்பு  கொஞ்சம்  கொஞ்சமாக  தளர்ந்து  போனது.  கடைசியாக  அந்த  வலியை  தானும்  அனுபவிக்க  நேர்ந்தபோது, போர்  என்பதை  அறவே  வெறுத்தான்.  ஆனாலும்  தொண்டையை  நெறிக்கும்  கைகளை  போராடாமல்  எப்படி  விடுவிக்க  முடியும்  என்ற  கேள்வியும்  அவனுள்  எழுந்துக்கொண்டேதான்  இருந்தது. 

அன்றிலிருந்து  சரியாக  ஒரு  மாதத்திற்குள்,  தொன்னூறுகளில்  கனடாவில்  குடியேறிய  தனது  அப்பாவின்  நண்பரான  இரகுபதியின்  உதவியால்,  ஒரு  வயதேயான  எழிலனைத்  தூக்கிக்கொண்டு,  இரண்டாயிரத்து  பத்தாம்  ஆண்டின்  கடைசியில்  கனடாவிற்குச்  சென்றவன்,  இன்றுதான்  வந்திருந்தான். 

இவ்வளவு  வலிகளையும்  இழப்புகளையும்  கொடுத்தும்,  தன்  சொந்த  மண்ணைவிட்டு  ஒருபோதும்  வெளியேற  நினைக்காத  அம்மாவை  இன்று,   இந்த  மண்  தனக்குள்ளே  பொத்தி  பத்திரமாக  வைத்துக்கொண்டது.  ஒருவேளை  அம்மாவுடன்  சேர்ந்து  அவளை  கவனித்துக்கொண்டு  இங்கேயே  இருந்திருந்தால்,  இன்னும்  கொஞ்ச  காலம்  வாழ்ந்து  இருந்திருப்பாளோ.  தன்னையும்  எழிலனையும்  பற்றி  மட்டுமே  சுயநலமாக  யோசித்து  கனடாவிற்கு  சென்றுவிட்டோமே  என்ற  குற்ற  உணர்வு  மேலோங்கியது.  இரவு  அதை  ஊதிப்  பெருக்கியது.

எழிலனை  படுக்க  வைத்துவிட்டு  வீட்டைவிட்டு  வெளியே  வந்தான்.  நிலவு  இருளை  கொஞ்சம்  மட்டுப்படுத்திருந்தது.  கொல்லையில்  உள்ள  கோயிலை  நோக்கி  நடந்தான்.  முன்பு  அங்கு  செழித்துக்  குலுங்கிய  நாவல்  மரம்,  இறுதிப்  போரில்  குண்டடிப்பட்டு  செதில்  செதிலாக  பிய்ந்து.  பாதி  வேர்  அறுந்து  சாய்ந்தபடி  போரின்  எச்சமாக  இன்னும்  உயிரை  பிடித்து  வைத்து  நின்றுக்கொண்டிருந்தது. 

மரத்தடியில்  இருந்த  கோயிலில்  பாதியாக  உடைந்த  இரண்டு  தூண்களும்,  இடிந்துக்  கிடந்த  கருவறைக்குள்  வல்லியக்கன்னும்  மட்டுமே  எஞ்சி  இருந்தன.   

இது  நம்ம  முன்னோர்கள்  வழிப்பட்டு  வந்த  குலதெய்வம்.  நாம  வாழும்  காலத்துலேயே  அதுக்கு  ஒரு  பெரிய  கோயில்  எடுக்க  வேண்டும்  என  நினைத்த  சண்முகம்.  அதற்காக  மருதனார்  தெருவில்  வசித்து  வந்த  பறை  இசைக்கும்  குடும்பங்களில்  இருந்த  பெரியவர்களை  ஒன்றுக்கூட்டி  “சாமிங்கிறது  பொதுவானது.  என்னுடைய  வளவுல  இருக்குறதால,  அத  நான்  மட்டும்  சொந்தமாக்கிக்க  முடியாது.  வளவுல  கொஞ்சத்த  கோயிலுக்கு  எழுதி  வச்சிடுறேன்.  நம்ம  குலதெய்வத்துக்கு  கோயில்  எடுக்கனும்.  உங்களாள  ஏன்டத  செய்யிங்க”  என  எல்லோரிடமும்  கேட்டுப்  பெற்ற  பணம்  மற்றும்  பொருள்  உதவிகளை  வைத்து  கோயிலை  கட்டத்  தொடங்கினார்.  பொருளாதாரத்தில்  உதவ  முடியாதவர்கள்  உடல்  உழைப்பால்  தங்களால்  ஆன  கோயில்  வேலைகளை  செய்தார்கள். 

முதலில்  நாவல்  மரத்தை  ஒட்டி  வல்லியக்கனைச்  சுற்றி  சிறிய  அளவில்  கருவறை  எடுத்தார்கள்.  பாராங்கற்களை  கொண்டு  வந்து  இரு  பக்கத்திற்கு  மூன்று  கற்களை  தூணாக  நிற்க  வைத்து,  ஓடு  வேய்ந்து  பெரிய  கோயிலாக  மாற்றினார்கள்.  சண்முகம்தான்  கோயிலுக்கு  பூசாரியாக  இருந்தார்.   

அப்படி  தனது  அப்பா  சண்முகமும்,  இந்த  ஊரும்  சேர்ந்து  பார்த்துப்  பார்த்து  கட்டிய  கோயிலின்  நிலமையை  காணும்போது,  அவனுக்கு  இன்னும்  வேதனை  கூடியது.  அதற்குமேல்  அங்கு  நிற்க  முடியாமல்,  வீட்டிற்கு  வந்து  எழிலனுடன்  படுத்துக்  கிடந்தான்.  ஆனால்  தூக்கம்  வரவே  இல்லை.   

விடிந்ததும்  குவிந்துக்  கிடந்த  கற்களை  அகற்றி,  கோயிலை  சுத்தம்  செய்தான்.  ஊரில்  உள்ள  தெரிந்தவர்களைச்  சென்றுப்பார்த்து  “குலதெய்வத்தை  அப்படியே  விட்டுடாதிங்க”  என்று  சொல்லிவிட்டு  வந்தான்.  கனடாவிற்கு  திரும்புவதற்கு  இரண்டு  நாட்களுக்கு  முன்பு,  வல்லியக்கனை  புகைப்படம்  எடுத்து  சட்டம்  அடித்து  வைத்துக்கொண்டான்.  கிளம்பும்  அன்று  காலையில்  கோயிலின்  வாசலில்  கிடந்த  மண்ணை,  ஒரு  பையில்  அள்ளி  எடுத்துக்கொண்டு  புறப்பட்டான்.

விமான  நிலையத்திலிருந்து  டொராண்டா  நகரில்  ஸ்கார்பரோ  பகுதியில்  உள்ள  மார்க்ஹம்  சாலையில்  அமைந்துள்ள  அவனுடைய  வீட்டிற்கு  டாக்ஸியில்  வந்தான்.  அவன்  வேலை  செய்யும்  உணவகத்தின்  உரிமையாளர்,  வேலையாட்கள் தங்குவதற்காக  மூன்று  அறைகள்  கொண்ட  இந்த  வீட்டை  எடுத்து  வைத்திருந்தார்.  எழிலன்  இருப்பதால்  அதில்  ஒரு  அறையை  தங்களுக்கென்று  மாதம்  நானூறு  கனடா  டாலர்களுக்கு  தனியாக வாடகைக்கு  வாங்கிக்கொண்டான். 

வந்ததும்  ஓய்வுக்கூட  எடுக்காமல்  எழிலனை  வீட்டில்  இருக்குமாறு  சொல்லிவிட்டு,  அருகில்  உள்ள  லிட்டில்  ப்ளவர்ஸ்  என்ற  பூக்கடைக்குச்  சென்றான்.  அங்கு  மஞ்சள்  சிவப்பு  நிறங்களைக்  கொண்ட  ப்ளாக்  மேப்பிள்  (Acer nigrum)  செடி  ஒன்றை  இருபது  டாலர்கள்  கொடுத்து  வாங்கினான்.  அதன்  இலைகள்  பார்ப்பதற்கு  கிட்டத்தட்ட  ஊரில்  அவனுடைய  வளவில்  உள்ள  வேலியில்  படர்ந்திருந்த  பாகற்காய்  இலையின்  வடிவத்தை  ஒத்திருந்தது. 

வீட்டிற்கு  வந்து  கதவைத்  திறந்தான்.  அவனுடைய  கைகளில்  இருந்த  செடியை  கவனித்த  எழிலன்  “ஐ…  நான்தான்  தொட்டில  வைப்பேன்”  என்று  ஓடி  வந்தான். 

வல்லியப்பன்  “சரி…  சரி…”  என்று  பால்கனிக்கு  சென்றான். 

அங்கு  இதற்கு  முன்  தொட்டிகளில்  நாலைந்து  பூச்செடிகள்  இருந்தன.  மூலையில்  கவிழ்த்து  வைக்கப்பட்டிருந்த  பூந்தொட்டியை  எடுத்து,  ஊரிலிருந்து  கொண்டு  வந்த  மண்ணை  நிரப்பினான்.  அதில்  சிறிதளவு  உரம்  தூவி  எழிலனின்  கையால்  செடியை  நட்டு,  தேவையான  அளவு  தண்ணீர்  ஊற்றினான்.  எழிலன்  பழையபடி  கூடத்தில்  விளையாட  சென்றுவிட்டான்.  வல்லியப்பன்  தொட்டியில்  வைத்த  செடியைப்  பார்த்தபடி  அங்கேயே  அமர்ந்திருந்தான்.

கனடாவிற்கு  வந்த  புதிதில்,  மேப்பிள்  இலை  தேசியக்கொடியில்  இடம்பெற்றிருப்பதை  பார்த்து,  இது  இவர்களின்  நிலத்தில்  விளையும்  ஒரு  வகையான  மரத்தின்  இலை  அவ்வளவுதான்  என்று  நினைத்தான்.  ஆனால்  இந்த  இலை  உலகப்  போரில்  இறந்தவர்களின்  கல்லறையில்  பொறிக்கப்பட்டு,  அவர்களின்  பெருமை,  விசுவாசம்  மற்றும்  தைரியத்தின்  அடையாளமாகப்  பார்க்கப்படுகிறது  என்ற  வரலாற்று  தகவலை  அறிந்த  பின்பு,  போரோடு  மட்டுமே  தொடர்புடைய  அவன்,  உயிரிழந்த  தன்  மனைவிக்காகவும்  மக்களுக்காகவும்  மேப்பிள்  செடி  ஒன்றை  வாங்கி  வளர்க்க  ஆரம்பித்தான்.  போகப்போக  மேப்பிள்  செடிகளை  வளர்ப்பதில்  அவனுக்கு  தனி  விருப்பம்  உண்டானது.

மாலையில்  வல்லியப்பன்னும்  எழிலனும்  அடுத்த  தெருவான லேடி  சாரா  கிரசெண்ட்டில்  அமைந்துள்ள,  எழிலன்  படிக்கும்  தமிழ்  பாடசாலைக்குச்  சென்றார்கள்.  இரகுபதி  சிறுவர்களுக்கு  வகுப்பு  எடுத்துக்கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட  பதினைந்து  சிறுவர்கள்  இருந்தார்கள்.  வல்லியப்பனை  பார்த்ததும்.  “வா…  வா…”  என்றவாறு  எழுந்து  வெளியே  வந்தார். 

அலுவலகத்திலிருந்து  வந்த  அவருடைய  மனைவி  பூங்கோதை  வல்லியப்பனிடம்  நலம்  விசாரித்துவிட்டு,  எழிலனின்  கன்னத்தை  கிள்ளி  முத்தமிட்டவர்  வகுப்பை  கவனிக்க  சென்றுவிட்டார்.  இரகுபதி  கனடாவில்  குடிபெயர்ந்து,  நண்பர்களுடன்  சேர்ந்து  தமிழை  கற்பிக்கும்  சிறிய  சிறப்பு  பாடசாலை  ஒன்றை  நடத்தி  வருகிறார். 

வாடிக்கையாளர்களுக்கு  உணவு  பரிமாறும்  வேலை  செய்யும்    வல்லியப்பனுக்கு  சம்பளம்  குறைவு  என்பதால்,  கனடாவில்  உள்ள  தமிழ்  அமைப்புகளிடம்  பேசி,  எழிலன்  படிப்பதற்கு  உதவி  செய்து  வருவதோடு  தன்னுடைய  சிறப்பு  வகுப்பிலும்  சேர்த்துக்கொண்டார்.  கட்டணமாக  அவர்  எதுவும்  கேட்காதபோதும்  “அவன்  படிப்புக்கு  நீங்க  ஏற்கனவே  உதவி  செஞ்சிக்கிட்டு  வர்றீங்க.  என்  திருப்திகாவது  சிறப்பு  வகுப்புக்கு  பணம்  வாங்கிதான்  ஆகனும்”  என்று  மாதம்  இரநூறு  கனடா  டாலர்களை  கொடுத்து  வருகிறான்.

குனிந்து  எழிலனிடம்  “பொடியா  நம்ம  ஊர்  எப்படி  இருக்கு”  எனக்  கேட்டார். 

அவன்  “அழகா  இருக்கு”  என்றான். 

“அதான்  நம்ம  ஊரு”  என  பெருமையாக  சொல்லி  சிரித்து  அவனுடைய  தலையை  தடவினார்.  எழிலன்  தோழர்களைப்  பார்க்க  வகுப்பிற்கு  ஓடினான். 

அலுவலகத்தையும்  வகுப்பையும்  இணைத்து  கட்டிடம்  டா  வடிவில்  வடிவமைக்கப்பட்டிருந்தது.  மீதம்  இருந்த  இடத்தில்  வகுப்பு  சிறுவர்கள்  விளையாட  வளைந்து  செல்லும்  சறுக்கு  மரமும்,  சிறிய  ஊஞ்சலும்  அமைத்திருந்தார்கள்.  அங்குள்ள  புல்  தரையில்  போடப்பட்டிருந்த  பிளாஸ்டிக்  நாற்காலியில்  இருவரும்  அமர்ந்தார்கள்.  அவனுடைய  தாயின்  இறப்பிற்கு  துக்கம்  விசாரித்தவர்,  ஊர்  நிலவரங்களைக்  கேட்டு  தெரிந்துக்கொண்டார். 

இரகுபதிக்கு  ஊர்தான்  எல்லாமும்.  தொன்னூறுகளின்  இறுதியில்  இருந்து  கனடாவில்  வசித்தாலும்,  கனடாவை  அவரின்  சொந்த  ஊரான  மன்னாராகவே  நினைத்து  வாழ்ந்து  வருகிறார்.  பழகியவர்  பழகாதவர்  என்று   ஊரிலிருந்து  யார்  வந்தாலும்  சரி,  அவர்களை  சந்தித்தால்  போதும்  மணி  கணக்கில்  ஊரைப்  பற்றி  மட்டுமே  பேசிக்கொண்டிருப்பார். 

“ஊர்  மீது  இவ்வளவு  விருப்பமும்  பிடிப்பு  உள்ள  நீங்கள்  ஊருக்குச்  சென்று  செட்டில்  ஆகலாம்தானே”  என்று  யாரேனும்  கேட்டால்,  “அத  ஏன்  கேட்குறீங்க  மன்னார்  அறிவியல்  கலைக்  கல்லூரியில்தான்  போராசிரியராக  இருந்தேன்.  மாணவர்களுக்கு  மூளைச்  சலவை  செய்து  இயக்கத்திற்கு  அனுப்புவதாக  இராணுவ  தலைமைக்கு  யாரோ  பொய்யான  தகவலை  பரப்பிவிட்டார்கள். 

இராணுவத்தினர்  என்னைக்  கொல்ல  ரகசிய  திட்டம்  வகுத்திருப்பதாக  இயக்கத்துடன்  தொடர்பில்  இருந்த  என்  நண்பர்  ஒருவர்  மூலம்  எனக்கு  செய்தி  வந்தது.  முதலில்  நான்  நம்பவில்லை.  ஆனால்  ஒருநாள்  இரவில்  வீட்டிற்கு  நடந்து  சென்றுக்கொண்டிருந்த  நேரம்  மூன்று  நான்கு  பேர்கள்  இருப்பார்கள்.  இராணுவத்திற்கு  எதிராகவா  வேலை  செய்கிறாய்  என்று  கத்தியபடி  துரத்த  ஆரம்பித்தார்கள்.  அவர்களிடம்  இருந்து  ஒருவழியாக  தப்பித்து  பிழைத்து  ஓடி  வந்தேன்.  இதுபோல  இரண்டு  மூன்று  தடவைகள்  தாக்கப்பட்டேன்.  எங்களுக்கு  குழந்தை  வேற  இல்லை.  எனக்கு  எதாவது  நடந்தால்  என்  பொண்டாட்டி  தனியாக  கஷ்டப்படுவாள்.  யோசிச்சிப்  பார்த்தேன்.  இதுக்கு  மேலேயும்  அங்க  வாழ  முடியாது  எனத்  தோன்றியது.  சரியென்று  அவளைக்  கூட்டிக்கொண்டு  இங்கே  கிளம்பி  வந்துவிட்டேன்”  என்று  ரகசியம்  சொல்வதைப்போல்  மெதுவாக  சொல்வார். 

எல்லாவற்றையும்  கேட்டுவிட்டு  எதிரில்  இருப்பவர்  “அதான்  போர்  முடிவுக்கு  வந்துவிட்டதே.  நீங்க  இப்ப  போகலாம்தான”  என்று  விடாமல்  கேட்கும்போது.  “இன்றும்  அரசாங்கமும்  அதிகாரமும்  அவர்களுடையதுதானே”  என்று  முடித்துக்கொள்வார்.

வல்லியப்பன்  ஊரிலிருந்து  மண்  எடுத்து  வந்து,  அதில்  மேப்பிள்  செடி  ஒன்றை  நட்டு  வைத்திருப்பதாக  சொன்னான்.  “நம்ம  ஊர்  மண்ணுல  மேப்பிளா.  நாங்களும்தான்  இருக்கோம்,  எங்களுக்கு  இந்த  யோசனை  வரலயே”  என்று  இரகுபதிக்கு  ஆச்சர்யமும்  ஆதங்கமும்  தாங்கவில்லை.          

“இராஜேந்திரனிடம்  சொன்னியா”  என்றார்.“

“இல்ல.  இனிமேதான்  கடைக்கு  போகனும்” 

“எதுவும்  சொல்லாத.  இரவு  நானும்  வர்றேன்.  அப்புறம்  சஸ்பென்ஸா  காட்டலாம்”

அவனும்  சரியென்று  கொஞ்ச  நேரம்  பேசிவிட்டு  எழிலனை  அழைத்துக்கொண்டு  கிளம்பினான்.

வீட்டிலிருந்து  எழுநூறு  மீட்டர்  தூரத்தில்  சாண்ட்ஹர்ஸ்ட்  ஸர்க்கிள்  சாலையில்  அமைந்துள்ள,  தான்  வேலை  செய்யும்  கோல்டன்  ஸ்பூன்  உணவகத்திற்குச்  சென்றான்.  அளவில்  சிறிய  கடைதான்  என்றாலும்  இலங்கை  தமிழர்களாலும்,  உள்ளூர்  கனேடிய  உணவு  விரும்பிகளாலும்,  வியாபாரம்  ஓரளவிற்கு  நடந்துக்கொண்டிருந்தது.  ஒன்றிரண்டு  பேர்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தார்கள்.  வல்லியப்பன்  எல்லோரிடமும்  நலம்  விசாரித்துவிட்டு  அடுப்படிக்குச்  சென்றான். 

வாடிக்கையாளர்கள்  உணவருந்திவிட்டு  செல்லும்போது,  பரிமாறியவருக்கு  விருப்புதவித்  தொகையாக  கொடுக்க  நினைக்கும்  பணத்தை  செலுத்துவதற்காக  வைக்கப்பட்டுள்ள,  கண்ணாடியிலான  சதுர  வடிவ  பணிக்கொடை  பெட்டியின்  (Gratuity box or  tips box )  ஒரு  பக்கத்தில்  முகத்தை  புதைத்து,  உள்ளே  கிடந்த  நாணயங்களை  எண்ணிக்கொண்டிருந்தான்  எழிலன்.  

இராஜேந்திரன்  இரவு  உணவுகளை  தயாரித்துக்  கொண்டிருந்தான்.  இளம்  வயதிலேயே  இயக்கத்தில்  முக்கிய  பொறுப்பு  வகித்தவன்.  துவக்கை  சுமந்த  கைகளில்  இன்று  பெரிய  கரண்டி  இருந்தது.  இறுதிப்  போரின்  முடிவு  இராணுவத்திற்கு  சாதகமாக  அமைந்த  அந்த  இரவில்,  காட்டில்  ஒரு  பதுங்கு  குழிக்குள்  கிட்டத்தட்ட  இரண்டு  வாரங்கள்  உண்ணாமல்  பட்டினியாக  தலைமறைவாக  கிடந்து,  அதன்  பிறகு  கனடாவிற்கு  அகதியாக  வந்த  போராளி. 

வல்லியப்பனை  பார்த்ததும்  “காலைல  சொல்லிருந்தா  ஏர்போர்ட்டுக்கு  வந்திருப்பேன்ல”  என்றவாறு  கையில்  வைத்திருந்த  கரண்டியை  கீழ  வைத்தான்.  பெரிய  இரும்புச்  சட்டியில்  கோழி  இறைச்சி  துண்டுகள்  பொறிந்துக்கொண்டிருந்தது. 

“அப்பதான்  வேலைக்கு  கிளம்பி  இருப்ப.  அதான்  கூப்பிடல”  என்றான்.  அவன்  வேலையில்  இருப்பதால்  அதிக  நேரம்  அங்கு  நிற்கவில்லை.  “சரி…  நீ  வீட்டுக்கு  வா.  பேசிக்கலாம்”  என்றுச்  சொல்லிவிட்டு  வல்லியப்பன்  கடையிலிருந்து  கிளம்பினான்.

இராஜேந்திரன்  வருவதற்கு  முன்பே,  இரகுபதி  வல்லியப்பனுடைய  அறைக்கு  வந்திருந்தார்.  இருவரும்  இராஜேந்திரனுக்காக  காத்திருந்தார்கள்.  இரவு  பதினோறு  மணி  இருக்கும்  உணவகத்தை  அடைத்துவிட்டு  எல்லோரும்  வந்தார்கள்.  சத்தம்  கேட்டு  இரகுபதி  வெளியே  வந்தார். 

பக்கத்து  அறையின்  வாசலில்  நின்றிருந்த  இளைஞன்  “டிப்ஸ்  பணத்த  எல்லாருக்கும்  சரியா  பிரிச்சி  கொடுக்க  மாட்டேங்குறாங்க.  அவங்களுக்கு  புடிச்ச  ஆளுங்களுக்கு  மட்டும்  கொஞ்சம்  கொடுத்துட்டு,  மீதி  பணத்தையெல்லாம்  ஓனரே  வச்சிக்கிறாரு”  என்று  வருத்தப்பட்டு,  வெளியில்  கேட்காதவாறு  அலைப்பேசியில்  யாரிடமோ  சொல்லிக்கொண்டு  நின்றான். 

இரகுபதி  அவனை  கவனித்தவாறு  இராஜேந்திரனின்  அறைக்குள்  சென்றார்.  அந்த  அறையில்  மொத்தம்  எட்டுப்பேர்கள்  தங்கி  இருப்பதால்,  மேலும்  கீழும்  படுக்கைகள்கொண்ட  நான்கு  அடுக்கு  கட்டில்கள்  போடப்பட்டிருந்தன. 

இராஜேந்திரன்  அங்கு  இல்லை.  எங்கே  என  குள்ளமான  சமையல்  மாஸ்டரிடம்  கேட்டார்.  அவன்  குளிக்க  சென்றிருப்பதாகச்  சொன்னதும்  குளியல்  அறையின்  அருகில்  சென்று  “சீக்கிரம்  வெளிய  வா”  என்று  கதவைத்  தட்டினார்.

அவனுக்கு  யார்  என்று  முதலில்  விளங்கவில்லை.  குரலை  வைத்து  புரிந்துக்கொண்டு  “என்னண்ண  முக்கியமான  விசயமா”  என்றான். 

“ஆமா” 

“இந்தா  வந்துடுறேன்”

“சரி…  சரி…”  என்றவர்  அவனை  கையோடு  அழைத்துக்கொண்டு  செல்ல  வேண்டும்  என்ற  முடிவோடு,  அவனுடைய  படுக்கையில்  சென்று  உட்கார்ந்தார்.  இராஜேந்திரனை  ஆச்சர்யப்படுத்தப்போகிறோம்  என்கிற  மகிழ்ச்சியில்  திளைத்திருந்தார்.  வந்ததும்  தூங்கிவிட்ட  நபரின்  குறட்டை  சத்தம்  சன்னமாக  கேட்டது.  மற்றவர்கள்  அலைப்பேசியை  பார்த்தபடி  படுத்திருந்தார்கள். 

முகத்தை  துடைத்தபடி  வெளியே  வந்தான்.  அவனை  சரியாக  கூட  துடைக்கவிடாமல்,  வல்லியப்பனுடைய  அறையில்  உள்ள  பால்கெனிக்கு  அழைத்து  வந்தார்.  மூன்று  பிளாஸ்டிக்  நாற்காலிகள்  போடப்பட்டிருந்தன. அதில்  ஒன்றில்  வல்லியப்பன்  அமர்ந்திருந்தான்.  எழிலன்  அறையில்  தூங்கினான்.

இராஜேந்திரன்  என்ன  விசயம்  என்பதைப்போல்  உட்கார்ந்திருந்த  வல்லியப்பனை  பார்த்தான்.  அவன்  புன்னகைத்தான்.  இரகுபதி  பூந்தொட்டியை  காட்டினார். 

“என்ன  புதுசா  வாங்குனதா”

“ஆமா”  என்றார். 

“இதுக்குதான்  இவ்வளவு  அலப்பறையா.  நான்  கூட  எதோ  பெரிய  விசயம்போலன்னு,  வேக  வேகமா  குளிச்சிட்டு  வந்தேன்”  என்று  கையில்  வைத்திருந்த  துண்டில்  தலையை  துடைத்தான்.

“பூந்தொட்டிக்குள்ள  பாரு  டா”

எதைப்  பார்க்க  சொல்கிறார்  என்று  நினைத்தவன்,  வேறு  எதுவும்  இருக்கிறதா  என்ற  சந்தேகத்தோடு  நன்றாக  உற்றுப்  பார்த்தான்.  அதில்  மண்ணைத்  தவிற  வேறொன்றும்  இல்லை.

“என்ன  ஒன்னுமில்லையே.  வெறும்  மண்ணுதான்  இருக்கு”  என்றான்.

“ஆமா  டா.  மண்ணுதான்.  ஆனா  நம்ம  ஊரு  மண்ணு.  வல்லியப்பன்  எடுத்துட்டு  வந்துருக்கான்” 

அவர்  சொன்ன  மறுநொடி  அப்படியே  உறைந்து  நின்றான்.  கண்கள்  தானாகவே  கலங்கியது.  மெதுவாக  பூந்தொட்டிக்குள்  இருந்த  மண்ணைத்  தொட்டுப்  பார்த்தான்.  அவனுடைய  உடல்  சிலிர்த்தது.  மயிர்  கற்றைகள்  விரைத்து  நின்றன.  மண்ணை  எடுத்து  விரல்களால்  தேய்த்தான்.  உள்ளங்கையில்  அள்ளி  வைத்து  சிறிது  நேரம்  பார்த்தான்.  மூக்கின்  அருகில்  கொண்டு  சென்று  மோர்ந்தான்.  கண்கள்  தானாக  மூடியது.  அவன்  பதுங்கு  குழிக்குள்  இருந்தபோது  அடித்த  அதே  மண்  வாசனை,  இப்போது  அவனுள்  பரவியது.  வேகமாக  துடித்த  இதயம்,  அந்த  வாசனையை  உடல்  முழுவதும்  கொண்டுச்  சென்றது.

இரகுபதி  இராஜேந்திரனின்  முதுகில்  தட்டிக்கொடுத்தார்.  அவர்  அவனைத்  தொட்டதும்  ததும்பிக்கொண்டிருந்த  அணை  கண்ணைத்  திறந்துவிட்டதைப்போல்,  தட  தடவென  கண்ணீர்  சரிந்தோடியது.  துடைத்துக்கொண்டான். 

நெடுநேர  அமைதிக்குப்  பின்பு,  ஒரு  குழந்தையின்  தலையை  செல்லமாக  வருடிவிடுவதைப்போல்  மேப்பிள்  செடியை  வருடியபடி  “நாமலும்  இப்படிதான.  ஏதோவொரு  மண்ணுல  வேரூன்ற  பார்க்குறோம்”  என்றான். 

அவன்  அப்படி  சொன்னதும்,  அதுவரை  தங்களை  கட்டுப்படுத்திக்கொண்டு  அவனுக்கு  ஆறுதலாக  இருந்த  இரகுபதிக்கும்  வல்லியப்பனுக்கும்,  அடக்கி  வைத்திருந்த  கண்ணீர்  பொழ  பொழவென  கொட்டியது. 

யாருக்கு  யார்  ஆறுதல்  சொல்வதென்று  தெரியவில்லை.  கடைசியில்  இரகுபதிதான்  பேச்சை  மாற்றினார்.  ஆனாலும்  ஊரையும்  மக்களையும்  அழிவையும்  போரையும்  துரோகத்தையும்  அகதிகளா  அலைந்து  திரிந்ததையும்  பற்றி  மட்டுமே,  பேச்சிகள்  மின்னல்  தெறித்ததைப்  போல்  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  கிளை  விரித்தபடி  இருந்தன. 

பூங்கோதை  அலைப்பேசியில்  அழைத்தார்.  “இதோ  அஞ்சு  நிமிசத்துல  கிளம்பிடுவேன்.  பத்து  நிமிசத்துல  கிளம்பிடுவேன்”  என்று  சொல்லியே  கிட்டத்தட்ட  ஒன்னரை  மணி  நேரத்துக்குப்  பிறகு  “படுங்க.  காலை  வேலை  இருக்குல”  என  சொல்லிவிட்டு  இரகுபதி  கிளம்பினார்.

காலையில்  எழிலனை  எழுப்பி  பள்ளிக்கூடத்திற்கு  அனுப்புவதற்கு  முன்பே,  வெயில்  அடிக்கும்  திசையில்  பூந்தொட்டியை  சரியாக  வைப்பது,  வேறு  செடிகளின்  இலைகள்  எதுவும்  பழுத்து  இதில்  விழுந்துக்  கிடந்தால்,  சுத்தம்  செய்வது.  காலையில்  போதுமான  அளவு  தண்ணீர்  ஊற்றுவது  என  தினமும்  வல்லியப்பன்  மேப்பிள்  செடியை  தனி  கவனம்  எடுத்து  பராமரித்து  வந்தான். 

இரகுபதி  வல்லியப்பனை  சந்திக்க  வரும்போதெல்லாம்,  அந்த  தொட்டியை  ஒருகண்  பார்த்துவிட்டுதான்  செல்வார்.  ஒருசில  நாட்களில்  பூந்தொட்டியில்  உள்ள  மண்ணை  பார்ப்பதற்காக  மட்டுமே  வருவார்.  கிட்டத்தட்ட  ஒரு  மாதம்  இருக்கும்.  வல்லியப்பன்  எவ்வளவு  கவனமாகப்  கவனித்துக்கொண்டாலும்,  மேப்பிள்  செடி  அதன்  இயல்பில்  வளராமல்,  நாளுக்கு  நாள்  சுனங்கி  காணப்பட்டது.  ஆனால்  பட்டுப்போகவில்லை. 

வல்லியப்பன்னுக்கு  அதைப்  பார்க்கும்போதெல்லாம்  “நாமலும்  இப்படிதான.  ஏதோவொறு  மண்ணுல  வேரூன்ற  பார்க்குறோம்”  என்று  இராஜேந்திரன்  சொன்னதுதான்  ஞாபகம்  வரும்.  அது  அவனை  மேலும்  மேலும்  கவலையுற  செய்தது. 

இரவில்  பல  நேரம்  வல்லியப்பனும்  இராஜேந்திரனும்  இதைப்  பற்றியே  பேசிக்கொண்டிருந்தனர். 

“சரியா  நட்டுருக்க  மாட்டபோல.  இத  புடுங்கிட்டு  வேற  வச்சிப்  பார்ப்போம்”  என்ற  இரகுபதி,  ஒருநாள்  புது  மேப்பிள்  செடி  ஒன்றை  வாங்கி  வந்து  வைத்தார்.   

அதுவும்  செழிப்பாக  வளராமல்  சுனங்கிப்போனது.  ஒவ்வொரு  தடவையும்  அதைப்  பார்க்கும்போதெல்லாம்  வல்லியப்பனுக்கு  சங்கடமாக  இருக்கும்.  சிலநேரம்  கோபமும்  வரும்.  ஒருநாள்  பொறுக்கமாட்டாமல்  செடியை  புடிங்கிப்போட்டுவிட்டான். 

“சரிவிடு.  நம்ம  ஊரு  மண்ணு  அதுக்கு  செட்  ஆகலப்போல”  என்று  இரகுபதி  ஆறுதல்  சொன்னார்.

பிறகு  அந்த  தொட்டி  மண்ணை  சுத்தம்  செய்து,  ஒரு  கண்ணாடி  குடுவையில்  போட்டு  மேசையின்  மேல்  ஊர்  ஞாபகர்த்தமாக  வைத்துக்கொண்டான்.  அப்படி  பாதுகாத்து  வைத்திருந்த  மண்ணைதான்  சற்று  முன்பு  எழிலன்  அள்ளி  மீன்  தொட்டிக்குள்  போட்டான். 

இரவு  இராஜேந்திரனும்  வல்லியப்பன்னும்  அலைப்பேசியில்  இரகுபதி  எண்ணிற்கு  அழைத்து,  “இரண்டு  நாட்களில்  கனடா  நாள்  வருகிறது.  அதைக்  கொண்டாட  செண்டென்னியல்  பூங்காவிற்கு  போகலாமா”  எனக்  கேட்டார்கள். 

“ஏன்  அவ்வளவு  தூரம்.  மில்லிக்கன்  மில்ஸ்  கம்யூனிட்டி  சென்டர்க்கு  போலாம்.  அதான்  பக்கம்”  என்றார்.  அவர்களும்  சரி  என்றார்கள்.            

கனடா  நாள்  காலையில்  பூங்கோதை  “கோயிலுக்கு  போயி  சாமி  கும்பிட்டுவிட்டு  போகலாம்”  என்றார். 

எல்லோரும்  சரி  என்று  வீட்டில்  இருந்து  ஒரு  கிலோமீட்டர்  தூரம்  உள்ள,  மிடில்  ஃபீல்ட்  சாலையில்  அமைந்துள்ள,  அருள்மிகு  ஶ்ரீ  ஐயப்பன்  கோயிலுக்கு  வந்தார்கள்.  கோயில்  நிர்வாகத்தினர்  இரண்டாயிரமாவது  ஆண்டில்,  சொந்தமாக  இந்த  நிலத்தை  வாங்கி,  அதில்  ஐந்து  அடுக்கு  ராஜகோபுரத்துடன்  கோயிலைக்  கட்டினார்கள்.    இரண்டாயிரத்து  ஒன்பதாம்  ஆண்டு  மகா  கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

விசேச  நாள்  என்பதால்,  கோயிலைச்  சுற்றி  உள்ள  பூங்கா,  வாகனம்  நிறுத்தும்  இடமென  எங்கு  பார்த்தாலும்  பக்தர்கள்  கூட்டம்  நிரம்பி  இருந்தது.  வெளியில்  பூஜை  சாமான்கள்  விற்கும்  கடையும்,  உணவகமும்  தற்காலிகமாக  போடப்பட்டிருந்தன.  அதன்  அருகே  இரண்டு  கால்  பாய்ச்சலில்  குதிரைகள்  கனைத்தபடி  மரச்  சிற்பத்தாலான  சிறிய  தேர்  ஒன்று  நின்றிருந்தது.

பூங்கோதை  அன்னார்ந்து  இராஜகோபுரத்தைப்  பார்த்தார்.  அதன்  முதல்  அடுக்கில்  வலதுபுறம்  பிள்ளையாரும்,  இடதுபுறம்  மகாலட்சுமியும்,  நடுவே  ஐயப்பன்  சிலையும்  வடிவமைத்திருந்தார்கள்.  உச்சியில்  செம்பால்  ஆன  ஒன்பது  கும்பங்களும்,  காலை  வெயில்பட்டு  தகதகவென  கண்களை  கூசியது. 

இரகுபதிக்கு  கடவுள்  நம்பிக்கை  இல்லை  என்பதால்,  மற்றவர்களை  உள்ளே  போகச்  சொல்லிவிட்டு,  கடைகளையும்  மக்களையும்  வேடிக்கை  பார்த்தபடி  வெளியே  நின்றுக்கொண்டார்.  நடுவே  நின்ற  கொடிமரத்தை  அடுத்து  பதினெட்டு  படிகள்  அமைத்து  மேலே  மேடையில்  ஐயப்பன்  வீற்றிருந்தார்.  ஒவ்வொரு  படிகளிலும்  இடதுபக்கம்  அகல்  விளக்கும்,  நடுவில்  ஊதா  கருப்பு  சிகப்பு  வண்ணங்களில்  தோளில்போடும்  துண்டுகளும்,  அதன்மேல்  வெற்றிலையும்,  வாழை  பழமும்,  அதற்கு  அடுத்து  கருப்பு  வேஷ்டியும்,  வலதுபக்கம்  செம்பில்  தேங்காய்  கும்பம்  வைக்கப்பட்டிருந்தன.  சைவத்தையும்  தமிழையும்  ஒன்றாக  இணைத்து  சிறப்பு  பூஜைகளும்  ஆராதனைகளும்  நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஐயப்பன்  சன்னதி  மத்தியில்  இருக்க,  வலதுபுறம்  பிள்ளையாரும்  இடதுப்  பக்கம்  மகாலட்சுமியும்,  அப்படியே  சுற்றி  கண்ணகி  அம்மன்,  வள்ளி  தெய்வானை,  சமேத  சுப்ரமணிய  சுவாமி,  பெரிய  கருப்பர்,  வைத்தியநாத  சுவாமி,  ஶ்ரீ  மஞ்ச  மாதா,  சிவன்,  விஷ்ணு,  நடராஜர்  என  பல  சன்னதிகள்  இருந்தன.  மூலையில்  ஒரு  யானை  சப்பரமும்,  பூ  வேலைபாடுகளுடன்  கூடிய  மற்றொரு  சிறிய மர  சப்பரமும்  இருந்தன.  எல்லா  சாமிகளையும்  தனி  தனியே  கும்பிட்டுவிட்டு,  ஐயப்பனை  பார்த்தவாறு  ஒரு  மூலையில்  வந்து  அமர்ந்தார்  பூங்கோதை.  அவரின்  கண்கள்  கலங்கி  இருந்தன. 

இராஜேந்திரன்  நீண்ட  நேரம்  பெரிய  கருப்பர்  சன்னதியைவிட்டு  நகரவில்லை.  எழிலன்  அங்கிருந்த  மரத்திலான  புலியை  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்தான்.  அவன்  மனது  அதில்  ஏறி  அமர்ந்து  வலம்  வந்துக்கொண்டிருந்தது.  வல்லியப்பன்  பூங்கோதை  அருகே  வந்த  அமர்ந்தான்.  ஆனால்  அவரிடம்  பேச்சிக்கொடுக்கவில்லை. 

“இயக்கம்  என்பது  என்ன  புழு  பூச்சா.  தலையை  துண்டித்துவிட்டாள்  சாவதற்கு.  தலைவர்கள்  கொல்லப்படலாம்  எதிரிகளால்  கொள்கைகளை  என்ன  செய்ய  முடியும்.  சொல்லுங்க”  என்று  சீற்றத்தோடு,  ஒரு  நடுத்தர  வயதுடையவன்  இரகுபதியிடம்  உரையாடிக்கொண்டிருந்தான்.  

சாமி  கும்பிட  போனவர்கள்  வெளியே  வந்தார்கள்.  இரகுபதி  அந்த  இளைஞனிடம்  விடைபெற்றுக்கொண்டு  வந்தார்.  மதியம்  ஆகியிருந்தது.  அங்கேயே  கடையில்  சாப்பிட்டார்கள்.

டாக்ஸியில்  மில்லிக்கன்  மில்ஸ்  கம்யூனிட்டி  சென்டர்  பூங்காவிற்கு  பதினைந்து  நிமிடங்களில்  வந்திறங்கினார்கள். 

பூங்காவின்  முதன்மை  வாயிலில்  பெரிய  பலூனில்  நுழைவாயில்  அமைத்திருந்தார்கள்.  அதில்  வரவேற்பும்,  பூங்காவின்  பெயரும்,  கனடா  டே  2013  என  அச்சிடப்பட்டிருந்தது.

கூட்டம்  நிறைந்திருந்தது.  வரிசையாக  பூங்காவிற்குள்  நுழைந்தார்கள்.  ஆங்காங்கே  இலங்கை  தமிழர்கள்  தென்பட்டார்கள்.  உள்ளே  நுழைவாயிலின்  அருகிலேயே  மூன்று  அவசர  ஊர்திகளையும்,  ஒரு  தீயணைப்பு  வண்டியையும்  அவசர  தேவைகளுக்காக  முன்  ஏற்பாடாக  நிறுத்தி  வைத்திருந்தார்கள். 

பெரியவர்  ஒருவர்  கன்னங்களில்  கனடா  நாட்டின்  கொடியை  வரைந்துக்கொண்டிருந்தார்.  அவருக்கு  அருகில்  வரைவதற்கு  ஒரு  டாலர்  என்ற  தகவல்  பலகை  மாட்டப்பட்டிருந்தது.  சிறுவர்கள்  சிலர்  அவரைச்  சுற்றி  நின்றிருந்தார்கள்.  எழிலனும்  சென்று  வரைந்துக்கொண்டான்.

உயரம்  தாண்டுவது,  வளையத்திற்குள்  தாவுவது,  குறிப்பிட்ட  நேரத்திற்குள்  வாயில்  கவ்விக்கொண்டு  ஒரு  இடத்திலிருந்து  மற்றொரு  இடத்திற்கு  எத்தனை  பந்துகளைக்  கொண்டு  வந்து  வைக்கின்றது  என்பன  போன்ற  நாய்களின்  விளையாட்டு  சாகசங்கள்  நடந்துக்கொண்டிருந்தது.  நாய்  பிரியர்கள்  பலர்  அதில்  தங்களின்  நாய்களை  பங்கெடுக்க  வைத்திருந்தனர்.  சிறப்பாக  செயல்படும்  நாய்களுக்கு  பரிசுகளும்  வழங்கப்பட்டது.  எல்லோரும்  சேர்ந்து  கண்டுக்களித்து  மகிழ்ச்சியில்  ஆரவாரம்  செய்துக்கொண்டிருந்தார்கள்.

பூங்கோதைக்கு  அதிக  நேரம்  நிற்க  முடியவில்லை.  எதிரே  மேடை  அமைத்து  இசை  நிகழ்ச்சி  நடந்துக்கொண்டிருந்தது.  அங்கே  சென்று  போடப்பட்டிருந்த  இருக்கையில்  உட்கார்ந்தார்.

வல்லியப்பனும்  இராஜேந்திரனும்  எழிலனை  அழைத்துக்கொண்டு  சிறுவர்கள்  விளையாடும்  பகுதிகளுக்கு  சென்று  விளையாட  வைத்துவிட்டு  வந்தார்கள்.  அதுவரை  இரகுபதியும்  பூங்கோதையும்  இசை  நிகழ்ச்சியைப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  

அப்போது  பூங்காவைச்  சுற்றி  இசைக்  குழுக்கள்,  கனடா  நாட்டின்  தேசியக்  கீதமான  “ஓ  கனடா”  பாடலை  பாடி,  ட்ரெம்ஸ்  ட்ரெம்பெட்கள்  முழங்க  அணிவகுத்து  வந்தார்கள்.  அவர்கள்  ஒரே  மாதிரியாக  வெள்ளை  நிறத்தில்  உடையும்,  தலையில்  சிகப்பு  வண்ணத்தில்  தொப்பியும்  அணிந்திருந்தனர்.  இசைக்கலைஞர்களின்  அணிவகுப்பால்  பூங்கா  அதிர்ந்தது.  மக்கள்  பூங்காவின்  சாலையின்  இருமருங்கிலும்  நின்று  அணிவகுப்புகளை  ரசித்துக்கொண்டிருந்தார்கள். 

எழிலன்  வல்லியப்பனின்  கையை  உதறிவிட்டு,  அதைப்  பார்க்க  கூட்டத்தை  விலக்கிக்கொண்டு  ஓடினான்.

“தம்பி…  கிட்டபோகாத”  என  ஓடியவனை  தடுத்து,  தனது  பக்கத்தில்  நிறுத்தினார்  செண்பகவள்ளி.  முண்டிக்கொண்டு  அவரின்  பிடியை  தளர்த்தினான்  பத்து  வயதேயான  வல்லியப்பன்.  அவர்  விடவில்லை.  கல்யாணம்,  பாஷ்சாரா,  மாசிடா,  தண்டாங்கி,  நூலிகை,  களவெறி,  வானமெட்டி,  நாட்டிய  கலை  என  எல்லா  அடிமுறைகளுக்குப்  பிறகு  கோவிலின்  இசை  என்ற  அடி  முறையில்  பறைகள்  தெறிக்க,  சுண்டு  குச்சியும்  அடிக்குச்சியும்  பார்ப்பவர்களின்  கண்களுக்கு  அலையலையாய்  வளைவதுபோல  தெரிந்தது. 

மனமும்  உடம்பும்,  அடியும்  ஆட்டமும்  ஒன்றாக  சேர்ந்து  பனிரெண்டு  பேர்கள்  அடவுகட்டி  வேர்த்துவிருவிருத்து  ஆடிக்கொண்டிருந்தார்கள்.  புழுதிப் பறக்கக்கூடாது  என்பதற்காக  ஆடும்  இடத்தில்  முன்பே  தண்ணீர்  தெளித்து  வைத்திருந்தார்கள். 

பார்த்துக்கொண்டிருந்த  அத்தனைபேரின்  மனமும்  அவர்களுடன்  சேர்ந்து  ஆடியது.  ஆடத்தெரியாதவர்கள்  கூட  கை  கால்களில்  தாளம்போட்டுக்கொண்டிருந்தார்கள்.  ஆடாதவரையும்  ஆட்டிவைக்கும்  பறை  என்பதை  அங்கே  கண்கூட  பார்க்க  முடிந்தது.

சண்முகம்  வெள்ளைத்  துணியால்  தனது  வாயை  கட்டியபடி  விளக்கேற்றி  பூசை  செய்துக்கொண்டிருந்தார்.  “வா  பூச  நடக்குது.  சாமி  கும்பிட்டுட்டு  வந்துப்பாரு”  என்று  வல்லியப்பனை  அழைத்து  வந்து  செண்பகவள்ளி  சாமிக்கும்பிட்டார்.  

பக்கத்து  வளவுகளில்  இருந்த  வல்லியக்கனின்  துணைசாமிகளான  முடிமன்னர்  மற்றும்  அம்மன்  கோயில்களில்  இருந்து  கொண்டு  வந்திருந்த  பிரசாத  சாப்பாடுகளும்,  ஊர்  மக்களால்  வல்லியக்கனுக்காக  வைக்கப்பட்ட  பொங்கலும்  பரிமாறப்பட்டது.  பக்தர்கள்  வரிசையாக  நின்று  வாங்கி  சாப்பிட்டார்கள்.

ஐஸ்  வண்டி,  பஞ்சுமிட்டாய்  வண்டியின்  மணிச்சத்தம்,  கூட்ட  நெறிசலில்  உடையும்  பலூன்,  அதை  இதை  வாங்கிக்கேட்டு  அடம்பிடித்து  அழும்  சிறுவர்கள்,  யாரையோ  யாரோ  தேடி  அவரின்  பெயரை  உரக்க  கத்தி  கூப்பிட்டபடி  செல்வது,  சாமிக்காக  நேந்து  கட்டப்பட்டிருந்த  சேவல்களின்  கொக்கறிப்பு  சிறகடிப்பு  என  சத்தம்  எங்கும்  நிறந்திருந்தது.

பூசையெல்லாம்  முடித்து  சற்று  ஆசுவாசம்  அடைய  வேண்டி,  முகமண்டபத்தில்  நின்று  கலை  நிகழ்ச்சியை  வேடிக்கைப்  பார்த்துக்கொண்டிருந்தார்  சண்முகம்.  அவரின்  வயதை  ஒத்த  நபர்  அருகில்  வந்து  “என்னுடைய  பெயர்  இரகுபதி.  சொந்த  ஊர்  மன்னார்.  கல்லூரி  பேராசிரியராக  பணிப்புரிகிறேன்.  அழிக்கப்பட்டு  வரும்  வல்லியக்கனைப்  பற்றி  ஆய்வுகள்  நடத்திக்கொண்டிருக்கிறேன்.  அது  சம்மந்தமாதான்  உங்களை  சந்திக்க  வந்திருக்கிறேன்”  என்று  மூச்சிவிடாமல்  தன்னை  அறிமுகம்  செய்துக்கொண்டார்.  அதன்  பிறகு  சண்முகத்திடம்  தனக்கு  வேண்டிய  கேள்விகளை  கேட்டார்.

“…………………………………………”

“என்  தாத்தா  ஊரோடு  புலம்பெயர்ந்து  புத்தூருக்கு  வரும்போது,  எங்க  குலசாமியான  வல்லியக்கனையும்  கொண்டு  வந்து,  இந்த  நாவ  மரத்தச்  சுத்தி  சிமெண்ட்  கட்டக்கட்டி,  அதுல  வச்சி  கும்பிட  ஆரம்பிச்சாங்க.  அவருக்கு  அடுத்து  எனக்கு  ரொம்ப  நாளா  இந்தக்  கோயில  புதுப்பிக்கனும்னு  தோணிக்கிட்டே  இருந்துச்சி.  அப்புறம்  ஊரு  பெரியவங்ககிட்ட  பேசி  முடிவுப்பண்ணி,  எல்லாரும்  சேர்ந்து  இப்பதான்  இந்தக்  கோயிலக்  கட்டினோம்”

“…………………………………………..” 

“வைகாசில  விசாகப்  பொங்கல்  எடுத்து  திருவிழா  நடக்கும்.  அதுபோல  கும்பபூசைங்கிற  நவராத்திரி  திருவெம்பாவை  திருவிழாவும்  நடக்கும்.  அப்போ  இதுபோல  பஞ்சபுராண  கூத்துக்களும்  நடத்துவோம்”  என  எதிரே  நடந்துக்கொண்டிருந்த  கூத்தைக்  காட்டினார்.

“……………………………………….” 

“என்ன  எல்லாம்  காலத்துக்கு  ஏத்தமாதிரி  மாறிப்போச்சி.  இப்ப  இலங்கையில  பெரும்பான்மையான  வல்லியக்கன்  கோயில்கள பெருமாள்  கிருஷ்ணர்  போன்ற  கோயில்களாக  மாத்திட்டாங்க. 

வல்லியக்கன்  கோயில்களில்  மட்டுமே  தனிச்  சிறப்பா  கருதப்படும்  வாய்  கட்டி  பூசை  செய்யும்  முறையும்,  பறை  அடிக்கிறதும்  நிறுத்திட்டு,  வேத  மந்திரங்கள  ஓதுறது,  மேளம்  கொட்டுறதுன்னு  வழிபாட்டு  முறைகளையும்  முழுசா  மாத்தி,  வல்லியக்கன்கிற  ஒரு  தெய்வம்  இருந்துச்சிங்கிற  விசயத்தையே  மக்களுக்கு  தெரியாம  அழிச்சிட்டாங்க. 

நான்  உசுரோட  இருக்குற  வரைக்கும்  இந்தக்  கோயில  எந்தவொரு  மாற்றத்திற்கும்  உள்ளாக்காம  பழைய  முறைப்படியே  வச்சிருக்கேன்.  எனக்கு  பிறகு  என்ன  ஆகும்னுதான்  தெரியல”ன்னு  ஆதங்கப்பட்டார்.  அவர்  சொல்வதை  எல்லாம்  சிறிய  குறிப்பேட்டில்  குறித்துக்கொண்டார்  இரகுபதி. 

பஞ்சபுராணம்  கூத்து  பக்தியோடும்  ஆங்காங்கே  கேலிப்பேச்சிகளோடும்    களைகட்டியது.  சுற்றி அமர்ந்து எல்லோரும்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  முகச்சாயம்  பூசி  குறுக்கு  கேள்விகள்  கேட்டு  கூடி  இருப்பவர்களுக்கு  சிரிப்பை  வர  வைத்த  கோமாளி  வேடம்  போட்டவர்,  அங்குமிங்கும்  சுற்றிச்  சுற்றி  வந்தார்.  அப்போது  அரைத்  தூக்கத்தோடு  செண்பகவள்ளியின்  மடியில்  அமர்ந்திருந்த  வல்லியப்பனை  பார்த்த  கோமாளி,  அருகில்  சென்று  அவனுடைய  முகத்திற்கு  நேராக  ஓங்கி  கைத்தட்டினார்.

சற்று  பதறி  குனிந்து  நின்ற  வல்லியப்பன்  சட்டென  நிமிர்ந்து  ஓர்  அடி  பின்னே  நகர்ந்தான்.  நல்லவேளையாக  எழிலன்  குதிக்கும்போது  வல்லியப்பனுடைய  முகத்தில்  அடிபடவில்லை.  கனடாநாள்  விழாவின்  ஒருசில  விசயங்கள்  காலால்  கிளறி  இரைத்தேடும்  கோழியைப்போல்,  அவனுடைய  மனதைக்  கிளறி,  ஊர்  திருவிழாவின்  ஞாபகங்களை  வெளியே  எடுத்துக்கொண்டிருந்தது.

எழிலன்  மகிழ்ச்சியில்  தொடர்ந்து  குதித்து  கைதட்டிக்கொண்டிருந்தான்.  அவனுடைய  செயல்  சாகசங்கள்  செய்தபடி  வந்த  குழுவில்  இருந்த  ஜோக்கர்  போல  வேடம்  அணிந்தவரை  ஈர்த்தது.  உடனே  அவர்  தன்  கையில்  வைத்திருந்த  பெரிய  பலூனை  அவனிடம்  கொடுத்து  இரு  கைகளையும்  விரித்து  அவனை  கட்டி  அணைத்தார்.  பலூனில்  ஐ  லவ்  கனடா  என  அச்சடிக்கப்பட்டிருந்தது.

இரவு  ஒன்பது  மணியைத்  தாண்டியது.  “பசிக்கிற  மாதிரி  இருக்கு  சாப்பிட  போலாமா”  என்றான்  வல்லியப்பன்.  சரியென்று  எல்லோரும்  துரித  உணவுக்  கடைக்குச்  சென்றார்கள்.

நெருப்பில்  வாட்டப்பட்டுக்கொண்டிருந்த  மாமிசத்  துண்டுகளிலிருந்தது  கொழுப்புகள்  வழிந்தது.  பூங்கோதைக்கு  தனியாக  பிரட்  ஆம்லெட்டும்,  மற்றவர்களுக்கு  ரொட்டியும்  மாட்டுக்கறியும்  வாங்கினார்கள்.  உணவகத்தின்  இடதுபுறத்தில்  உள்ள  புல்  தரையில்  கொண்டு  வந்த  பாலித்தீன்  விரிப்பை  விரித்து  எல்லோரும்  அமர்ந்தார்கள்.

“நல்ல  பசி”  என்று  இரகுபதியிடம்  சொல்லியபடி  கறியை  ரொட்டியில்  வைத்து  மடித்து  வாயில்  வைக்கும்போது,  சீறிப்பாய்ந்த  வெடி  பெரும்  சத்தத்தில்  வெடித்து  சிதறியது.  வல்லியப்பன்  ரொட்டியை  ஒரு  வாய்  கூட  கடிக்காமல்,  அப்படியே  கீழே  வைத்து  காதுகளைப்  பொத்தி  தலையை  கவிழ்த்தான்.  தொடர்ந்து  கேட்கும்  வெடிச்சத்தம்  வல்லியப்பன்  மனதில்  பழைய  நினைவுகளாக  எதிரொலித்தது.

வல்லியப்பன்  துணிப்  பையுடன்  வேக  வேகமாக  சென்றுக்கொண்டிருந்தான்.  “இவ்வளவு  வேகமா  என்ன  வாங்கிட்டுப்  போற”  என்ற  குரல்  கேட்டு  திரும்பினான்.  பத்தடி  தூரத்தில்  அறுபத்தைந்து  வயதிருக்கும்  தனது  தெருவில்  வசிக்கும்  கண்ணகிப்  பாட்டி  கையில்  முறுங்கை  கீரை  கட்டுடன்  வந்தார். 

“காலைல  எழுந்ததும்,  உங்க  பேத்திக்கு  நல்லா  பசிக்கிதுன்னா.  அதான்  வெல்லனமே  வந்து  மீனு  வாங்கிட்டு  போறேன்”  என்றவன்,  அவர்  அவனுக்கு  அருகில்  வரும்  வரை  நின்றான்.

“ஆமா  பால்  கொடுக்குறாள்ல,  அப்படிதான்  பசிக்கும்.  நாயி  பசி.  பேயி  பசி  எடுக்கும்”

“எங்க  பாலே  சரியா  சுரக்க  மாட்டேங்குது.  அதான்  பால்  சுரா  வாங்குனேன்.  சுரா  மீனுன்னா  அவளும் விரும்பி  சாப்புடுவா”  என  புன்னகைத்தான்.

அவரும்  “ம்…”  என சிரித்து  தலையாட்டியவர்  “புள்ளைக்கு  என்ன  ஒரம்  போட்டுருக்கா”  என்றார்.

“தெரியலையே”  ஏன்  என்பதாய்  அவரைப்  பார்த்தான்.   

“செண்பகம்  வீட்ட  கடந்துப்  போகும்போது  கையில  இருந்த  புள்ள  கத்திக்கிட்டே  இருந்தான்.  என்னடியாச்சின்னு  கேட்டேன்.  ராத்திரி  படுக்கும்போது  உரம்  போட்டுருக்கும்போல  அழுதுகிட்டே  இருக்கான்.  அதான்  தனம்  வீட்டு  வரைக்கும்  கூட்டிட்டுப்  போறேன்னு  சொன்னா” 

அப்போதுதான்  அவனுக்கு  காலையிலிருந்து  குழந்தை  அழுதுக்கொண்டிருந்ததற்கான  காரணம்  புரிந்தது.  “அதுக்கு  ஏன்  அவ்வளவு  தூரம்  போகனும்.  இங்க  யாரும்  எடுக்க  மாட்டாங்களா”

“அவ  நல்லா  ராசிக்காரவ.  ஒடனே  சரியாயிடும்” 

அவரின்  கையிலிருந்த  கீரை  கட்டை  தான்  கொண்டு  வருவதாகச்  சொல்லிக்  கேட்டான்.  “கைய  வெறுமனையா  வீசிக்கிட்டு  வர  ஒரு  மாதிரியா  இருக்கு.  நீ  சீக்கிரம்  போ.  அவ  வேற  பசியோட  இருக்கான்னு  சொன்ன” 

“பரவாயில்ல.  வாங்க  சேர்ந்தே  போலாம்”  என்றான். 

இருவரும்  குறுக்கு  பாதையில்  நடந்தார்கள்.  அவன்  அவனுடைய  வேகத்தை  மட்டுப்படுத்தி  நடந்தான்.  வெயில்  ஏறிக்கொண்டிருந்தது.  கருவேலம்  மரங்கள்  மிகுந்திருக்கும்  பாதையை  கடக்கும்  போது,  தொலைவில்  வித்தியாசமான  சத்தம்  கேட்டது.  ஆனால்  என்ன  சத்தம்  என்று  தெளிவாகக்  கேட்க  முடியவில்லை.  அதை  உற்றுக்  கேட்டுவாறு  நடந்தான்.  அவன்  மனதில்  இனம்புரியாத  பதற்றம்  தொற்றிக்கொண்டது.  வெளியில்  காட்டிக்கொள்ளாமல்  பாட்டியிடம்  “எதும்  சத்தம்  கேட்குதா”  என  கேட்டான். 

எதையும்  சரியாக  கேட்கும்  திறனை  இழந்திருந்ததால்  “இல்லையே”  என்றாள்.

பாட்டி  பொறுமையாக,  ஒவ்வொரு  அடியையும்  பார்த்து  நிதானமாக  எடுத்து  வைத்து  வந்தார்.  ஏனென்றால்  அவர்கள்  நடந்துச்  செல்லும்  கருவேலக்  காட்டுப்  பாதையானது,  முன்பு  இராணுவத்தினருக்கும்  விடுதலைப்புலிகளுக்கும்  இடையே  நடந்த  சண்டைகளில்,  பாதுகாப்பாக  ஒழிந்துக்கொள்ள  பதுங்கு  குழிகள்  வெட்டப்பட்டப்  பகுதி.  இப்போது   பயன்பாட்டில்  இல்லாமல்,  குழிகள்  மண்  சரிவால்  மூடியும்  மூடாமலும்  கிடந்தன.  அதனால்  நிலம்  மண்  குவியல்களும்  மேடு  பள்ளமுமாக  கிடந்தது. 

அவனை  அறியாமல்  அவனுடைய  கால்கள்  சற்று  அகலமான  அடியை  எடுத்து  வைத்தது.  அதுவரை  ஒன்றாக  வந்தவனின்  நடைக்கு  இப்போது  பாட்டியால்  ஈடு  கொடுத்து  நடக்க  முடியவில்லை.  ஆனால்  அவருடைய  அனுபவத்தில்  அவன்  அப்படி  கேட்டதையும்,  நடையில்  வேகம்  கூடியதையும்  வைத்து,  அசம்பாவிதம்  எதும்  நடக்கிறதோ  என்ற  எண்ணம்  தோன்றியது.

தூரம்  குறைய  குறைய  சத்தம்  தெளிவாக  கேட்க  தொடங்கியது.  அது  பீரங்கி  வண்டிகளும்  ஜீப்களும்  மண்  அதிர  கடக்கும்  சத்தம்  என்பதை  காற்றுத்  துல்லியமாக  அவனுடைய  செவிகளுக்கு  கடத்தியது.

“ஊருக்குள்ள  இராணுவத்தினர்  புகுந்துட்டாங்க  பாட்டி.  வேகமா  வாங்க”  என  ஓடிச்  சென்றான்.  சட்டென்று  நின்று  தனக்கு  பின்னால்  சற்றுத்  தள்ளி  வந்துக்கொண்டிருந்த  பாட்டியைப்  பார்த்தான்.  தனியாக  விட்டுப்போக  மனமில்லாமல்  திரும்ப  ஓடி  வந்து,  அவரின்  கையைப்  பிடித்துக்கொண்டு  ஓட்டமும்  நடையுமாக  வீடு  இருக்கும்  திசையை  நோக்கி  நடந்தான்.  பாட்டியின்  கால்கள்  அவரின்  மூப்பை  மறந்து  அவனுக்கு  ஈடுகொடுத்தது.

கிட்டத்தட்ட  வந்துவிட்டார்கள்.  இருபது  மீட்டர்  தூரத்தில்  சாலைக்கு  வேலி  போட்டதைப்போல்  காட்டுச்  செடிகள்  மண்டிக்  கிடக்கும்  மண்மேட்டுப்  புதரை  தாண்டினால்  தெருவின்  பிரதான  சாலை.  அதற்கு  அடுத்து  வீடு.  மண்மேட்டுப்  புதரின்  அடியில்  பதுங்கு  குழி  இருந்ததற்கான  அடையாளமாக  சிறிய  பள்ளம்  மட்டுமே  இருந்தது.  வழக்கமாக  அந்த  மண்மேட்டுப்  புதரை  சுற்றிதான்  வீட்டிற்கு  போவான்.  ஆனால்  இப்போது  அப்படி  செல்ல  முடியாததால்,  பாட்டியை  அந்தப்  பள்ளத்தில்  உட்காரச்  சொன்னான். 

அங்கு  என்ன  நடக்கிறது  என்பதை  மறைந்திருந்து  பார்ப்பதற்காக,  குனிந்து  நாலாபுறமும்  நோட்டம்விட்டு  கவனமாக  மண்மேட்டில்  ஏறினான்.  மெதுவாக  புதர்  செடியை  விலக்கி  பார்த்தான். 

ஒரு  பீரங்கி  வண்டியும்  ஜீப்பும்  நின்றுக்கொண்டிருந்தது.  அதற்கு  அடுத்து  தனது  வீட்டு  வாசலில்,  ஒருவன்  துப்பாக்கி  முனையில்  பொருத்தப்பட்டுள்ள  கத்தியால்  எதையோ  கிளறுகிறான்  என்பதை  அவனுடைய  உடல்மொழி  உணர்த்தியது.  அவனருகில்  நின்ற  மற்ற  இராணுவத்தினர்  ஆறு  பேரும்,  அவனுடைய  செய்கையை  பார்த்து  தங்களுக்குள்  பேசி  சிரிப்பது  கேட்டது.

ஜீப்  குறுக்கே  நின்றிருந்ததால்  அவனால்  அவர்களை  இடுப்புக்கு  மேலே  மட்டுமே  பார்க்க  முடிந்தது.  அதனால்  அவன்  எதை  கிளறுகிறான்.  ஏன்  அவர்கள்  அதைப்  பார்த்து  இப்படி  சிரிக்கிறார்கள்  என்பதை  இவனால்  யூகிக்க  முடியவில்லை.

வல்லியப்பன்னுக்கு  வேர்வை  கொட்டியது.  வீட்டில்  மனைவி  இருந்தாளே  அவளுக்கு  என்ன  ஆனது.  எழிலனை  தூக்கிக்கொண்டு  போன  அம்மா  வந்துவிட்டாரா.  அவங்களுக்கும்  குழந்தைக்கும்  என்ன  ஆனது  என்ற  கேள்விகள்  மனதில்  ஓடியது.

கீழே  நின்ற  பாட்டி  அவனுக்கு  மட்டும்  கேட்கும்படி  “என்னாச்சி”  என்றார்.  திரும்பாமல்  “ஆர்மி  ஆட்கள்”  என்றான். 

பீரங்கி  வண்டி  வயலின்  வழியே  வந்திருக்க  வேண்டும்.  அதன்  சங்கிலி  சக்கரத்தில்  மழை  பெய்ந்து  குழைந்திருந்த  மண்  அப்பியிருந்தன. 

பீரங்கி  வண்டியிலிருந்த  ஒருவன்  கூடி  நின்றவர்களைப்  பார்த்து  “போகலாம்  வாங்க”  என  குரல்  கொடுத்தான். 

அவர்கள்  ஏறியதும்  ஜீப்  இரண்டடி  நகர்ந்தது.  அப்போதுதான்  தெரிந்தது  அவர்கள்  நின்றுக்கொண்டிருந்த  இடத்தில்  மனைவி  இசைவாணி  நிர்வாணமாகக்  கிடந்தாள்.

இராணுவக்காரன்  கிளறிக்கொண்டிருந்தது.  இசைவாணியின்  வயிறு.  காலையில்  இருந்து  பசியாக  இருந்தவளின்  வயிற்றில்,  அவன்  அந்தப்  பசி  எங்கு  ஒழிந்திருக்கிறது  என்று  தேடிப்  பார்த்ததைப்போல,  வயிறு  நாலப்புறமும்  கிழிக்கப்பட்டிருந்தது.

“இசை…  இசை…”  என  அவளின்  பெயரை  உச்சரிக்க  கூட  முடியாமல்  நெஞ்சி  அடைத்தது.  அவனால்  கத்தக்கூட  முடியவில்லை.  எழும்பி  ஓடிச்சென்று  மனைவியை  பார்க்க  எத்தனித்தான்.  கால்கள்  மண்ணை  அழுந்த  மண்  சரிந்து  உருண்டு  புரண்டு  பாட்டி  நின்ற  பள்ளத்தில்  விழுந்தான். 

அந்த  சத்தம்  கேட்டு  ஜீப்  நின்றது.  ஒருவன்  சத்தம்  வந்த  புதரை  நோக்கி  சுட்டான்.  அது  வரை  எங்கிருந்தது  என  தெரியவில்லை.  ஒரு  பூனை  அவன்  சுட்டதும்  பாய்ந்து  ஓடி  மறைந்தது. 

அதைப்  பார்த்த  மற்றொருவன்  கேலியாக  “டேய்…  தோட்டாவை  வீணடிக்காத.  அது  புலி  இல்ல.  பூனை”  என்றான்.  எல்லோரும்  சிரித்தார்கள்.

பீரங்கி  வண்டி  முன்னே  போக  ஜீப்  மெதுவாக  பின்  தொடர்ந்தது.

மண்கள்  ஒட்டியிருந்த  வல்லியப்பனின்  முகத்தில்,  வரப்பில்  ஓடும்  நீர்  போல  கண்ணீர்  வழிந்தது.  அவன்  பாட்டியிடம்  இசைவாணி  கிடந்த  இடத்தை  காட்டிக்  காட்டி  தான்  பார்த்த  காட்சியை  சொல்ல  முற்பட்டான்.  வார்த்தைகள்  திக்கியது.  “என்  பொண்டாட்டி…  என்  பொண்டாட்டி…”  என  முணங்கினான். 

“எதுவும்  பேசாத…  பேசாத…”  என்று  பாட்டி  அவனுடைய  வாயைப்  பொத்தினார்.  எழ  முயற்சித்தான். 

“போகாத  ஒன்னையும்  எதாவது  பண்ணிட்டா,  ஒன்  புள்ள  என்ன  செய்யும்.  அமைதியா  இரு”  என  அவனை  எழ  விடாமல்  உட்கார  வைத்தார்.  அவன்  முண்டி  திமிரினான்.  “ஒன்  புள்ளைய  நெனச்சிக்கோ.  அமைதியா  இரு.  அமைதியா  இரு”  என  பாட்டி  அவன்  கன்னத்தில்  தட்டினார்.

“என்  புள்ளைக்கு  என்னாச்சோ.  என்  புள்ளைக்கு  என்னாச்சோ…  என்  புள்ள…    இசை…  இசை…  அம்மா…”  என  திரும்ப  திரும்ப  உதடுகள்  உச்சரித்துக்கொண்டே  இருந்தது.  நெஞ்சு  மேலும்  கீழும்  ஏறி  இறங்கி  மூச்சு  வாங்கியது. 

அங்கும்  இங்கும்  சுற்றி  பார்த்த  பாட்டி  தீர்க்கமான  குரலில்  “இங்கேயே  இரு.  வந்துடாத.  புரியுதா”  என  அவனிடம்  சொல்லிவிட்டு,  மேட்டைச்  சுற்றி  வந்து  சாலையில்  ஏறும்  பகுதிக்கு  வந்தார்.  அங்கு  நின்ற  அடர்ந்த  செடியின்  வழியே  பார்த்தார். 

ஜீப்  அங்கிருந்து  சற்றுத்  தொலைவில்  இருந்த  மற்றொரு  வீட்டின்  முன்  நின்றிருந்தது.  அந்த  வீட்டில்  இருந்த  இரண்டு  பேரை  சாலையில்  போட்டு  அடித்துக்கொண்டிருந்தார்கள். 

பாட்டி  ஒரு  கையில்  நெஞ்சைப்  பிடித்துக்கொண்டு  மறு  கையில்  வாயைப்  பொத்திக்கொண்டார்.  அவராலும்  மேற்கொண்டு  அந்த  காட்சியை  பார்க்க  முடியவில்லை.  திரும்பி  அவனிருக்கும்  இடத்திற்கு    வந்தார்.  அவன்  முட்டிப்போட்டு  காலில்  விழுவதைப்போல்  தலையை  மண்ணில்  புதைத்தபடி  அழுக்கொண்டிருந்தான்.

அவனுக்கு  இப்பவே  இசைவாணியை  பார்க்க  வேண்டும்  எனத்  தோன்றியது.  பாட்டியிடம்  கெஞ்சினான்.  அவர்  விடவில்லை.  “சொன்னா  கேளு.  அவங்க  போயிகிட்டும்.  அமைதியா  இரு”  என  சொல்லிக்கொண்டிருக்கும்போது  துப்பாக்கி  வெடிக்கும்  சத்தம்  கேட்டது. 

சத்தம்  கேட்டு  எழிலன்  ஒரு  கணம்  பயத்தில்  திடுக்கிட்டான்.  உயரே  பறந்து  வெடித்த  வெடி  வண்ண  வண்ணமாக  சிதறியது. 

அதைப்  பார்க்க  வேண்டி  ஓடிய  எழிலன்  நடைப்பாதையில்  தடுக்கி  கீழே  விழுந்து  அழுதான்.  நினைவுகளோடு  மூழ்கியிருந்த  வல்லியப்பன்  எழுவதற்குள்,  இராஜேந்திரன்  வேகமாகச்  சென்று  எழிலனை  தூக்கினான்.  அரைக்கால்சட்டை  அணிந்திருந்ததால்,  முட்டி  பலமாக  தேய்ந்து  இரத்தம்  வந்தது.  பூங்கோதை  ஆறுதல்  சொல்லிவாறு  எழிலனை  மடியில்  உட்கார  வைத்து,  திசு  பேப்பரை  எடுத்து  மெதுவாக  இரத்தத்தை  துடைத்துவிட்டார்.  வல்லியப்பன்  அடிப்பட்ட  இடத்தை  வாயால்  ஊதிவிட்டான். 

அப்போது  நினைவுகள்  யாவும்  காயங்களாக  தழும்பேறுகிறது.  இந்த  வருட  கனடா  நாள்  எழிலனின்  காயத்தில்  உறைந்துவிடும்  என  வல்லியப்பன்  மனதில்  நினைத்துக்கொண்டான்.        

000

என்னுடைய பெயர் ரிஸ்வான் ராஜா. சொந்த ஊர் முத்துப்பேட்டை.  துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறேன். வாசகன்.

2023 ல் நடுகல் இணைய இதழில் என்னுடைய *தீர்மானம்* சிறுகதை வெளியாகி இருந்தது. அதே வருடம் நவம்பரில் 11 கதைகள் அடங்கிய *தீர்மானம் சிறுகதைத் தொகுப்பும்* வெளியானது.

*மேப்பிள்* சிறுகதை என்னுடைய 12 வது கதை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *